கிரிக்கெட் ஆட்டத்தில் முதல்தர பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொதப்பி எடுக்க டெயில் எண்டர்கள் அடி பின்னி எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த வருடம் வெளியான பெருந்தலைகளின் படங்கள் எல்லாம் மக்களை கொத்தி எடுக்க எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சிக்சர் அடித்திருக்கிறது மௌனகுரு. இந்த வருட ஆரம்பத்தில் யுத்தம் செய் அடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் என்கிற ஒரு திரில்லர் ஃபார்மட்டில் வந்து மிரட்டியது என்றால் வருட இறுதியில் அதை எல்லாம் ரொம்பச் சாதாரணமாகத் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறது இந்தப்படம். அரசாங்கமும் அதிகாரமும் சேர்ந்தால் ஒரு மனிதனை எந்த அளவுக்குப் போட்டுத் தள்ள முடியும் என்பதைப் பேசுகிற கதைதான். ஆனால் திரைக்கதையும் சொன்ன விதமும் கிளாஸ்.
ஒரு பக்கம் எந்த வம்புக்கும் போகாத வந்த வம்பை விடாத இளைஞன் கருணா. கல்லூரிப் படிப்புக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் மச்சினியோடு காதல். அதே நேரம் விடுதியில் கூடப்படிக்கும் இன்னொரு மாணவனோடும் அவனுக்கு முட்டிக் கொள்கிறது. இன்னொரு பக்கம் ஒரு சாலை விபத்தில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நான்கு போலிஸ்காரர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது சம்பந்தமான வீடியோ ஆதாரம் பற்றிய பிரச்சினை ஒன்றில் கருணா எதிர்பாராமல் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.
பெரிய அளவில் நடிக்கத் தேவையில்லாத கதை என்பது இந்தப்படத்தில் அருள்நிதிக்கு நிறைய கைகொடுத்திருக்கிறது. அமைதியாக வந்து போவதும் போதை நிலையில் வெறித்துப் பார்ப்பதும் என்று படம் நெடுக ஒரே மாதிரியாக சுற்றுகிறார். ரவுடியை ஒரே அடியில் வீழ்த்துவது, போலிஸை அடித்து விட்டு ஸ்டேசனுக்குப் போவது, நடுரோட்டில் தனி ஆளாய் நின்று மனு தருவது, பேச முடியாத குழந்தைகளுடன் சைகையில் உரையாடுவது என ஹீரோயிசம் தெரியாத ஆனால் ஹீரோயிசம் சார்ந்த காட்சிகள் எல்லாமே நிறைவு. கடைசி காட்சியில் தான் என்ன தப்பு செய்தோம் என அலறும்போதுதான் வசனங்கள் அவருக்கு ஒட்டவே இல்லை. காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் இயல்பாக இருப்பது போலத் தோன்றியது. குறிப்பாக காபி நன்றாக இருந்தது என்று அண்ணி பார்க்காதபோது இனியாவிடம் சொல்லும் சீன், அப்புறம் அம்மாவுக்குத் தெரியாது என்று நினைத்து இனியா அருள்நிதியின் தலையைக் கோதி விட்டு செல்லும் காட்சி. நாயகிக்கு பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் மாடர்ன் உடையிலும் இனியா அழகு என்பதைப் பதிவு செய்ய வேண்டியது நம் முக்கியக் கடமையாகிறது.
ஓரம்போவின் சன் ஆஃப் கன் இந்தப்படத்தின் மெயின் வில்லன் ஜான் விஜய். அடக்கி வாசித்து அதகளம் செய்திருக்கிறார். செல்வம், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி என்று கூட வரும் போலிஸ்காரர்களும் பெர்ஃபெக்ட். மனநோய் விடுதியில் இருந்து நாயகனின் நண்பனாகும் பாத்திரத்தில் மணல்மகுடி முருகதாஸ் நாடக நிலத்தின் நடிப்பை வெள்ளித்திரைக்குக் கடத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் பயன்படுத்தி இராத பாத்திரத்தில் உமா ரியாஸ். கர்ப்பிணியாக இருக்கும் போலிசாக வரும் அவர் பார்வையில் கதை நகர்வது அருமையான உத்தி.
சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தி இருக்கும் இயக்குனரின் உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான் இந்தப்படம். மதுரை என்றவுடன் தெப்பக்குளத்தை காண்பிக்காமல் கீழக்குயில்குடி அழகர் கோயில் என்று போயிருப்பது, அட்டகாசமான அந்த இடைவேளைக்காட்சி, யார் திருடியது என்று எல்லாரையும் யோசிக்க வைத்து நினைக்காத இடத்தில் கொண்டு போய் அந்த முடிச்சினை அவிழ்ப்பது, நாயகன் அசாத்திய பலசாலி என்றெல்லாம் அடித்து விடாமல் தன்னால் இயன்ற வழியில் எதிரிகளைத் தாக்கிவிட்டு இயல்பாய் தன் முடிவினைத் தீர்மானிப்பது என படம் முழுக்க இயக்குனர் சாந்தகுமார் தன்னை நிரூபித்திருக்கிறார். ஒரு திரில்லர் படத்துக்கு ஒரு பாட்டுப் போதும் என்கிற அவர் தைரியத்தையும் பாராட்டலாம். ஆனால் அதில் தமனின் அனாமிகா பாட்டு அடியாகிப் போனதில் எனக்கு வருத்தமே.
சின்ன சின்ன ப்ளூப்பர்கள் , தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் பெண்ணின் கால்கள் உயரமாய் மிதப்பது, டாக்டருக்குப் படிக்கும் நாயகி எந்த நொட்டையும் சொல்லாமல் நாயகனை மனநோயாளி என நம்புவது, சற்றே தொய்வடையும் இரண்டாம் பாதி - இவற்றை எல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டு யோசித்தால்தான் கண்டேபிடிக்க முடிகிறது. Edge of the seat thriller என்கிற வகையில் படம் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டன என்று சொல்லும் மக்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். அமைதியாக அசத்தி இருக்கும் சாந்தகுமார் தனது அடுத்தப்படத்தை தலைக்கோ தளபதிக்கோ செய்யாமல் இருந்தால் சந்தோசம்.
3 comments:
இனியாவுக்காக பார்க்கிறேன். பிறகு நல்ல படம் ரொம்ப நாள் ஆகிடுசுல அதுக்கவும்
நம்ம மதுரை கீழ்குயில்குடி, அழகர்கோயில் எல்லாம் படத்தில் வருகிறதா! ரொம்ப மகிழ்ச்சி. நானும் வாகை சூடவா'விற்கு பிறகு இனியா ரசிகனாகிவிட்டேன். இனியாவுக்காக நானும் பார்க்கணும். இல்லைன்னா இனியா வரும் காட்சிகள் மற்றும் மதுரைக்காட்சிகள் மட்டும் பார்க்கணும். படத்தை குறித்த தங்கள் பதிவு அருமை.
முந்தினம் தான் படத்தை பார்த்தேன்.பார்க்கும்முன் இந்த படமெல்லாம் ரொம்பா எதிர்பார்ப்பு இல்லாமல் தான் பார்த்தேன் .அருள் நிதி என்ன பெரிய ஆளு இவன் படத்தை பார்க்கனுமானு ஒரு எண்ண ஓட்டம்..ஆனால் படம் பார்த்தவுடன் இதுவரை மற்ற படத்தில் இல்லாத சஸ்பன்ஸ் ரொம்ம்ப நல்ல இருந்துசு,அருள்நிதி இதில் பல படிகள் நடிப்பில் முன்னேற்றம் கானபடுகிறது.
கதையை முழுவது சொல்லி படத்தின் சஸ்பன்ஸ்சை குறைப்பதாக எனக்கு தோன்டுகிறது.மறுபரிசீலனை செய்யவும்.நன்றி !
malaithural.blogspot.com
Post a Comment