January 6, 2012

உக்கார்ந்து யோசிச்சது (06-01-12)

இரண்டு நாட்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெரியவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

“வணக்கம் தம்பி..”

“வணக்கம் சார்.. சொல்லுங்க..”

“தம்பி.. எம்பொண்ணு இந்த வருசத்தோட +2 முடிக்கப்போகுது. என்ஜினியரிங் படிக்கணும்னு சொல்றா. அதைக் கொண்டு போய் ********* காலேஜுல சேர்க்கலாம்னு இருக்கேன். அதான் காலேஜு எப்படி இருக்கும்னு உங்களக் கேக்கலாம்னு..”

“நல்ல காலேஜ்தாங்க.. படிச்சு முடிக்கும்போது வேலை எல்லாம் வாங்கிக் கொடுத்துருவாங்க.. ஆனா பிள்ளைங்கள அவங்க ஒரு இயந்திரம் மாதிரித்தான் நடத்துவாங்க. ரொம்பப் படுத்துவாங்க. அத்தோட எக்கச்சக்க கண்டிப்புகள் வேற.. அவங்க சேர்மேன் பப்ளிக் மீட்டிங்கலயே நான் என் கல்லூரிய ஜெயில் மாதிரித்தான் நடத்துவேன்னு சொல்லுறவரு.. அதை மட்டும் யோசிச்சுக்கங்க..”

“ஆகா.. அப்படியா.. அங்கதான் தம்பி நம்ம பிள்ளைய சேர்க்கணும்..”

எனக்கு பக்கென்றது. “என்னங்க சொல்றீங்க..”

“அட ஆமாப்பா.. அப்புறம் பொம்பளப் பிள்ளைய எப்படி கட்டுப்பெட்டியா வளர்க்குறது.. நாம பாட்டுக்கு ஃப்ரீயா வுடப்போய் அதுக நம்ம தலைல மண்ண அள்ளிப் போட்டுட்டா.. விடுங்க.. வேலை வாங்கித் தர்றாங்கல.. போதும்.. சந்தோசமா அங்கேயே கொண்டு போய் சேர்த்துடுறேன்..”

பிள்ளைகளின் உணர்வுகள் பற்றியோ அவர்கள் நல்ல மனிதர்களாக வருவது எல்லாமோ அவசியமில்லை கட்டுப்பாடாக இருந்து வேலை கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் பெற்றோர்கள் இருக்கும்வரை நமது கல்விமுறையோ கல்லூரிகளோ மாறுவதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது என்றே தோன்றுகிறது.

***************

இதுவும் மதுரையில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பற்றியதுதான். டிப்ளமோவில் 95% வாங்கிய மாணவி அவர். அரசு உதவி பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியில் அவருக்கு சீட் கிடைத்து இருக்கிறது. அந்த நேரத்தில் இந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தங்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளும்படியாகவும் நன்றாகப் படிக்கிறபடியால் கல்லூரிக் கட்டணம் எதுவும் தர வேண்டியதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல மனது என்று நம்பி அந்தப் பெண்ணும் அங்கேயே சேர்ந்து இருக்கிறார். ஒரு செமஸ்டர் முடிந்து பரிட்சை தொடங்கும் நேரம். ஹால் டிக்கட் வாங்கப் போன பெண்ணிடம் பெரிய தொகை ஒன்றைச் சொல்லி அதைக் கட்டினால்தான் பரிட்சை எழுத முடியும் என நிர்வாகம் சொல்ல அந்தப் பெண் திகைத்துப் போயிருக்கிறார். ஏழ்மையில் வாடும் தன்னால் அந்தப் பணத்தைக் கட்ட முடியாது எனச் சொல்லி கல்லூரியில் இருந்தே விலகி விட்டார். அவருடைய மதிப்பெண்ணைக் கொண்டு மீண்டும் எங்காவது நல்ல கல்லூரியில் சேர முடியும்தான். ஆனால் வீணாய்ப் போன இந்த ஒரு வருடம்? மனிதர்களின் பணத்தாசைக்கு அளவே கிடையாதா என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்.

***************

இந்தப் புது வருடம் எனக்கு நல்ல படியாகவே பிறந்து இருக்கிறது. வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையும் தேர்வாகி இருக்கிறது. போன வருட இறுதியில், அச்சில் முதன்முதலாக என் எழுத்தை நான் பார்த்தது, மாதவ் அண்ணனின் “கிளிஞ்சல்கள் பறக்கின்றன” மற்றும் ”பெருவெளிச் சலனங்கள்” தொகுப்புகளின் வாயிலாகத்தான். இப்போது, மீண்டும் ஒரு முறை, வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில், என் கதையைத் தெரிவு செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பதிவர்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வம்சி பதிப்பகத்துக்கும் மாதவ் அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் பெரிதும் மதிக்கும் என் சக பதிவர்களான ராகவன், கிரிதரன், போகன், ஸ்ரீதர், பாலாசி, ஹேமா, லதாமகன் (மத்தவங்க பேர் சொல்லலைன்னு கோபிச்சுக்காதீங்கப்பா) மற்றும் நான் வலையுலகில் எழுதக் காரணமான அதிஷா ஆகியோரோடு இணைந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி. யதார்த்தம் என்பதைத் தாண்டி வேறெதையும் பெரிதாகப் பேசாத எனது கதை நடுவர்களுக்குப் பிடித்ததில் எனக்கே சற்று ஆச்சரியம்தான். தேர்ந்தெடுத்த தமிழ்நதி, பிரபஞ்சன் மற்றும் நாஞ்சில் நாடன் ஆகியோருக்கும் என் நன்றிகள். வெற்றி பெற்ற நண்பர்கள், போட்டியில் பங்கு கொண்ட மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

***************

மதுரேய்…

மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள். மதுரையின் சித்திரவீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், ‘பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக்குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், ‘அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!

- ஆனந்த விகடன், 11.01.12, வரவேற்பறை பகுதி


நண்பர் மதுரை வாசகனின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் இந்த வாரம் விகடனில் வெளியாகி இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..:-))

****************

போன வாரம் கல்லூரி வேலையாக திருவண்ணாமலை போயிருந்தபோது வம்சி பதிப்பகத்துக்கும் ஒரு விசிட் போயிருந்தேன். அவர்களின் புத்தகக் கிடங்கின் உள்ளே போய்த் துலாவியதில் எளிதில் கிடைக்காத நிறைய நல்ல புத்தகங்கள் கிடைத்தன. எம்.ஜி.சுரேஷ் மற்றும் தமிழவனின் நாவல்கள், பிரேம்-ரமேஷின் கவிதைத் தொகுப்புகள், எஸ்.ஷங்கரநாராயணனின் சிறுகதைத் தொகுப்புகள். ஜி கே எழுதிய மர்ம நாவல் என்கிற தமிழவனின் நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். அரசர் காலத்தில் நடக்கும் கதையின் வழியே ஈழம் சார்ந்த சமகாலப் பிரச்சினைகளையும் மதம் மனிதனின் மேல் செலுத்தும் வன்முறையையும் மனிதமனம் கொள்ளும் விகாரங்களையும் விரிவாகப் பேசும் நாவல். சுவாரசியத்துக்கும் குறைவில்லை. முடிந்தால் தமிழவனுடைய மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் அவருடைய புத்தகங்களை வைத்திருந்தால் கொடுத்து உதவுங்கள் மக்களே...

***************

சமீபமாக வாசித்ததில் பிடித்தது..

இன்னும் தாதி கழுவாத

இன்னும்
தாதி கழுவாத
இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் -
பழைய சட்டை என்று ஏதும் இல்லை
பழைய வீடு என்றும் ஏதும் இல்லை
மெல்லத் திறக்கும் கண்களால்
எந்த உலகை
புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி, அதை
எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி

- தேவதச்சன் (கடைசி டினோசர் தொகுப்பிலிருந்து)

**************

கொலவெறியோடு அநிருத் காணாமல் போய்விடுவார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் தவறென்று நிரூபித்து இருக்கிறது மூன்று. போ நீ போ, சொல்லு நீ ஐ லவ் யூ, கண்ணழகானு எல்லாப் பாடல்களிலும் மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். குறிப்பாக "A Life Full of Love" என்கிற தீம் ம்யூசிக் சான்சே இல்லை. மனிதர் தொடர்ச்சியாக நல்ல பாடல்களைத் தர வாழ்த்துகள். என்னுடைய லிஸ்டில் இந்த வார டாப் ஐந்து பாடல்கள்..

நண்பன் - என் ஃபிரண்டப் போல யாரு
மூணு - போ நீ போ
வேட்டை - தையத் தக்கா
மயக்கம் என்ன - பிறை தேடும்
STR - Love Anthem

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு மொக்கை..

வாழ்க்கையின் மிக முக்கியமான ஏழு படிநிலைகள் என்னன்னா

-> படிப்பு
-> விளையாட்டு
-> பொழுதுபோக்கு
-> காதல்
->
->
-> பாஸு.. அம்புட்டுத்தான்.. மீதி எங்கன்னு தேடுறீங்களா.. அதான் காதல் வந்தா மத்தது எல்லாம் நாசமாப் போயிருமே? அப்புறம் எப்படி..

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))

17 comments:

மேவி... said...

நண்பன் படத்துல அந்த பாட்டு பிடிச்சு இருக்கா ???? த்ரீ இடியட்ஸ் படத்துல அதே சிடிவேஷன் ல வர பாட்டை கேட்டு பாருங்க. அப்பருமும் கூட இந்த பாட்டு உங்களுக்கு பிடிச்சு இருக்குன்னா சந்தோசம்

மேவி... said...

அந்த "காலேஜ்" சைவ / அசைவ சாப்பாடு நல்ல இருக்கும் ஜி. ஆமா நீங்க ஜே பாபாபியாரை தானே சொல்லுறீங்க ?

=
"மனிதர்களின் பணத்தாசைக்கு அளவே கிடையாதா என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்."

ம்ம்..ஜி நான் படிக்குற காலத்துல, காலேஜ் டாய்லேட் ல ஒரு டுப் லைட்டை யாரோ ஒடைச்சுட்டாங்கன்னு, எல்லாரும் நூறு ரூபா கட்டின தான் ஹால் டிக்கெட் கிடைக்கும்ன்னு சொன்னாங்க.
=
"(மத்தவங்க பேர் சொல்லலைன்னு "கோபி"ச்சுக்காதீங்கப்பா)"

ஏணி அரசியல் இன் திஸ் ? கோபி அண்ணன் மட்டும் தான் கோச்சிப்பாரா ?
=
மதுரை வாசகருக்கு வாழ்த்துக்கள்
=

வம்சி ல எடுத்ததை மருவாதையா கொஞ்சம் இங்கன்ன தரீங்க ..சொல்லிபுட்டேன்
=


உண்மையை சொல்லணும்ன்ன அவசரத்துல கிண்டின உப்மா மாதிரி இருக்கு இந்த பதிவு

ஷர்புதீன் said...

//உண்மையை சொல்லணும்ன்ன அவசரத்துல கிண்டின உப்மா மாதிரி இருக்கு இந்த பதிவு//

இதனை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்

தலைவர்
கார்த்திகை பாண்டியன் ரசிகர் மன்ற தலைவர்

மேவி... said...

@ஷர்புதீன் : ஆமா, உங்க பிரொபைல் போட்டோல இருக்குறது எந்த படத்தோட போஸ்டர் ? "அம்முகீன்னு வந்த ஆப்ப கடை கவுனா ?"

ஷர்புதீன் said...

//"அம்முகீன்னு வந்த ஆப்ப கடை கவுனா ?"//


ஹ ஹ ஹ ஹா ,

சமுத்ரா said...

good

ராகவன் said...

அன்பு காபாவிற்கு,

ராகவன். வாழ்த்துக்களை பிடியுங்கள் முதலில். எப்படி இருக்கீங்க? சந்தோஷம் உங்களின் பிடித்த பதிவர்கள் பட்டியலில் என் பெயரும் இருப்பது. வலசையின் இரண்டாம் இதழ் வந்துவிட்டதா?

சித்திரவீதிக்காரனும் ரொம்ப அழகா எழுதறார்... மதுரைக்காரய்ங்களுக்குன்னு ஒரு அழகு வந்துடுது எழுத்து நடையில... எங்க போனாலும், மதுரை தூக்கிக்கொண்டு சுமப்பது அத்தனை சுகமாகவும், சுவாரசியமாயும் இருக்கிறது...

நேசனுக்கு அன்பைச் சொல்லுங்கள்!

அன்புடன்
ராகவன்

அக்கப்போரு said...

சார் அந்தக் கல்லூரி ( பெண்ணை ஏமாற்றிய) பற்றித் தகவல் வேணும் சார். ப்ளீஸ் தனிமடல் அனுப்புறீங்களா?

sakthi said...

ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு ..
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ....

KARTHIK said...

// எம்.ஜி.சுரேஷ் மற்றும் தமிழவனின் நாவல்கள், பிரேம்-ரமேஷின் //

எப்பா சாமி :-))

கார்த்திகைப் பாண்டியன் said...

@மேவி & ஷர்புதீன்
இன்னைக்கு போணி நம்ம கடையிலயா..:-))

சமுத்ரா.. நன்றிங்க

ராகவன்..
அண்ணே.. என்ன இப்படி சொல்லிட்டீங்க.. சிறுகதைகளைப் பொறுத்தவரை இந்த மாதிரி நாமும் எழுதமாட்டாமோன்னு என்னை ஏங்க வைக்குற ஆள் நீங்க..
வலசை இரண்டாவது இதழ் தயாராகிக்கிட்டு இருக்கு.. ஜனவரி மூன்றாம் வாரத்துக்குள் எதிர்பார்க்கலாம்.. நேசன்கிட்டயும் சொல்றேன்..

மதுரைக்காரய்ங்க..:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

அக்கப்போரு..
கொஞ்சம் ரிஸ்குங்க.. பார்ப்போம்..

சக்தி..
ஆகா.. நான் ஏதோ போன பதிவு நல்லா எழுதிட்டதா தப்பா நம்பிட்டேன் போலயே..:-))

கார்த்தி.. ஓட்டாதீங்க சாமி.. எல்லாம் வாசிப்பின் ஆரம்பநிலைதான..

சித்திரவீதிக்காரன் said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே. மேலும், ராகவன் அவர்களும் வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

சந்திர சேகரன் said...

Engineering padipu viyabaram agivita intha kalathil entha kuthirayil panam katinal enaku labam varum endru yosikum periyavarin karuthil thavaru ethuvum thondra vilai

சந்திர சேகரன் said...

Engineering padipu viyabaram agivita intha kalathil entha kuthirayil panam katinal enaku labam varum endru yosikum periyavarin karuthil thavaru ethuvum thondra vilai

வினோத் கெளதம் said...

முதல் செய்தி முற்றிலும் உண்மை..ஜெயில் மாதிரி செயல்ப்படுகின்ற கல்லூரிகளை தான் பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பிகின்றனர்.

ரா.கிரிதரன் said...

பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன். பிடித்த பதிவர்கள் லிஸ்டில் என்னையக் கூட வைத்திருப்பதுக்கு எக்ஸ்ட்ரா நன்றி ! ;))