January 4, 2012

உதிரிப்பூக்கள் - 1

ரொம்ப நாளாகவே இப்படி ஒரு தொடர் எழுத வேண்டுமென்று ஆசை. சமீபமாக விகடனில் வெளியான மூங்கில் மூச்சு வாசித்த பின்பாக அந்த ஆசை இன்னும் அதிகமாகி விட, இதோ, ஆரம்பித்து விட்டேன். என்னால் மறக்க முடியாத மனிதர்கள், நான் நேசித்தவர்கள், என்னைச் செலுத்துபவர்கள், அளவிட முடியாத அன்பு, சந்தித்த துரோகங்கள் என என் எல்லா அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது. என் வாழ்வை திரும்பிப் பார்க்கும் இந்தப் பயணத்தில் என்னோடு நீங்களும்...

***************

சில நாட்களுக்கு முன்பாக மீனாட்சி கோயில் வெளி வீதிகளில் அந்த மனிதரைப் பார்த்தேன். கசங்கிய வேட்டியும் கிழிந்த சட்டையுமாக வெளிறிய முகத்துடன் வருவோர் போவோரிடம் எல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்த முகமாகத் தெரிந்த அவரை அடையாளம் புரிந்தவுடன் அதிர்ந்து போனேன். அது ஜக்கையா பெரியப்பா. சின்ன வயதில் நான் குடியிருந்த காம்பவுண்டு வீட்டின் ஓனர்.

பெரியப்பா மிலிட்டரியில் இருந்தவர். திரும்பி வந்தபின்பு எந்நேரமும் தண்ணி என்பதால் எப்போதும் அவர் கண்கள் சிவந்தே இருக்கும். அவரைக் கண்டாலே காம்பவுண்டில் இருக்கும் சிறுபிள்ளைகள் எல்லாம் தெரித்து ஓடுவோம். ஆனால் விடாமல் துரத்தி வந்து தூக்கிக் கொண்டு போய் எல்லோருக்கும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். குறிப்பாக என்மீது கொஞ்சம் ஜாஸ்தியாகவே அன்பு. என் அம்மாவை மதினி என்றுதான் கூப்பிடுவார். கஷ்டகாலங்களில் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருந்த மனிதர். வீடு மாறியபின்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு தொடர்பு இல்லாமல் போயிருந்தது.

நான் அவரருகே சென்றேன். திரும்பி என்னை வினோதமாகப் பார்த்தவர் யாரென்று தெரியாமல் என்னிடமும் ஆரம்பித்தார்.

“ஊருக்கு வந்த இடத்துல பணத்தைத் தொலைச்சுட்டேன். பசிக்குது.. கொஞ்சம் காசு குடுத்தீங்கன்னா..”

எனக்கு வலித்தது. பேர் சொல்ல மூன்று பிள்ளைகள், வருமானத்துக்குப் பத்து வீடு என நிம்மதியாக இருந்த மனிதர் எப்படி இப்படி ஆனார்?

“பெரியப்பா.. என்னை அடையாளம் தெரியலையா.. நான் கார்த்தி பெரியப்பா.. உங்க வீட்டுல குடியிருந்தோமே.. ஞாபகம் இருக்கா.. அன்னபூரணத்தம்மா பேரன்..”

ஒரு நிமிடம் அவர் கண்கள் ஒளிர்ந்து அடங்கின. சட்டெனப் பதட்டமாகிப் போனார். முகம் இருண்டு போனது.

“நீங்க வேற யாருன்னோ நினைச்சுக்கிட்டு என்கிட்டப் பேசுறீங்க தம்பி.. எனக்கு உங்களைத் தெரியாது..”

அவசர அவசரமாக சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிப்போனார். போகும்போது அவர் திரும்பி திரும்பிப் பார்த்ததும் அந்தக் கண்களில் இருந்த வலியையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

காலத்துக்கு எந்தக் கருணையும் கிடையாது. அது காட்டாறு போல தன் கண்ணில் படும் எல்லாவற்றையும் அடித்துப் போகிறது. தக்கை போல மனிதர்கள் அதில் மிதந்தபடி போகிறார்கள். வெகு சிலரால் மட்டுமே கரையேற முடிகிறது. மற்றவர்கள் எல்லாம் தாங்கள் இருந்த சுவடின்றி காற்றோடு கரைந்து போகிறார்கள். நல்லவர், கெட்டவர், பிரபலம், யாருக்குமே தெரியாதவர்.. எந்தப் பாகுபாடும் இல்லாமல் காலமெனும் சூறாவளி கலைத்து வீசிய மனிதர்கள்தான் எத்தனை எத்தனை?

வாழ்ந்து கெட்ட மனிதர்களின் கதை கொடுமையானது. சோகமும் விரக்தியும் நிரந்தரமாக அவர்களின் கண்களில் தேங்கி விடுகின்றன. விடாமல் துரத்தும் அறிந்தவர்களின் பார்வையிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள அவர்கள் படும்பாடு வார்த்தைகளில் சொல்லி மாளாது. சொல்லப்போனால் சாவை விடக் கொடுமையான தருணங்கள் அவை.

வாழ்ந்து கெட்ட மனிதர்கள் என்றால் பொருளாதார ரீதியாகத்தான் என்றல்ல. சேது படத்தில் எங்கே செல்லும் இந்தப்பாதை பாடலுக்கு முன்பாக பாலா ஒரு ஷாட் வைத்திருப்பார். ஒரு நொடிக்கும் குறைவாக விக்ரமின் சிரிக்கும் அழகான முகத்தைக் காட்டிவிட்டு காட்சி பாண்டிமடத்துக்கு மாறும். அங்கே மனநோய் பாதிக்கப்பட்ட விக்ரமின் உருவத்தைக் காட்டும்போது நமக்கு நெஞ்சை உலுக்கும்.

நாம் நன்கு பார்த்துப் பழகிய மனிதர்கள் நம் கண்முன்னே நாசமாய்ப் போவது பெருங்கொடுமை. என் வீட்டிலேயே அப்படி ஒரு மனிதர் இருந்தார் - என் தாத்தா.

ராஜ்மகால் கண்ணுச்சாமி எனச் சொன்னால்தான் அவரை எல்லாருக்குமே தெரியும். 1965 இல் மதுரையில் ராஜ்மகால் ஆரம்பிக்கும்போது அங்கே இருந்தது ரெண்டே பேர். ஓனரும் என் தாத்தாவும். சிவகங்கையில் இருந்த சொத்துகளை எல்லாம் உறவினர்கள் அபகரித்துக் கொள்ள அம்மாச்சியோடும் ஐந்து பிள்ளைகளோடும் தாத்தா மதுரைக்கு வேலைக்கு வந்தபோது அவருடைய சம்பளம் வெறும் முப்பத்தைந்து ரூபாய். தனது கடின உழைப்பால் நல்ல இடத்துக்கு வந்தவர்.

நான் பிறந்தபோது வீட்டில் சில பிரச்சினைகளால் அம்மாவும் அப்பாவும் பிரிந்து இருந்த நேரம். எனவே சிறுவயதில் என் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். அப்பாக்கள் இல்லாத வீட்டில் பையன்களுக்கு தாத்தாதானே எல்லாம்? இப்போதும் அம்மா என்னை தனது இன்னொரு அப்பா என்றே சொல்லுவார். என்னுடைய நடையில் ஆரம்பித்து பேச்சு வரை நிறைய இடங்களில் தாத்தாவின் சாயல்தான். நான் என்றால் அவருக்கு அத்தனை பிரியம்.

நாலைந்து வயது இருக்கும்போது உடம்புக்கு முடியாமல் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்கள். குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்கிறது. என்னைப் பார்க்கவ்ரும் தாத்தா எப்போதும் கால்மாட்டுப் பக்கம் வராமல் தலைமாட்டுப் பக்கம்தான் வருவாராம். என் பார்வையில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். தூக்கச் சொல்லி காட்டுக்கத்தாய் கத்துவேனாம். வேறு யாரையும் மதிக்கக் கூட செய்யாதவன் தாத்தா வந்தால் மட்டும் அப்படி ஒரு அடம் என அம்மா பெருமையாக சொல்லிச் சொல்லி ஆத்துப் போவார்.

என்னைப் பொறுத்தவரைக்கும் தாத்தா என்றால் கம்பீரம். அவர் வேலைக்குக் கிளம்பும் அழகையே நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம். எப்போதும் அணிவது வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைதான். குளித்து விட்டு கதர் வேட்டியை கட்டிக்கொண்டு வருவார். அவர் முன்னாடி கண்ணாடியும் குட்டிக் குட்டி டப்பாக்களில் விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை இருக்கும். முதலில் விபூதியை எடுத்து நெற்றி முழுக்கப் பூசிக் கொள்வார். பிறகு சின்னதொரு கம்பியின் மூலம் குழைத்த சந்தனத்தைக் கொண்டு நெற்றியில் மேலும் கீழுமாய் இரண்டு வரிகள். கடைசியாக குங்குமம் இந்த இரண்டு வரிகளுக்கும் மத்தியில். பின்பு சட்டையை அணிந்து கொள்வார். அந்தக் கதர்ச் சட்டையில் அணியும் பித்தான்கள் தனியாகக் கோர்க்கப்பட்டு ஒரு தனி மோஸ்தரில் இருக்கும். அதைத் தினமும் நான்தான் அவருக்குக் கொண்டு போய்த் தருவேன். உடைகளை அணிந்து தயாரானபின் என்னைக் கொண்டு வந்து பள்ளிக்கு ரிக்ஷாவில் ஏற்றிவிட்டபின்பு தான் அவர் வேலைக்குக் கிளம்புவார்.

நான் வேலைக்குப் போனபின்பு வாங்கிய முதல் சம்பளத்தில் அவருக்கு ஒரு கடிகாரம் வாங்கிக் கொடுத்தேன். என் பேரன் வாங்கித் தந்தது என்று கடையில் இருக்கும் எல்லாரிடமும் அவர் கூட்டிக் கொண்டு போய் பெருமையாகச் சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது.

தாத்தாவுக்கு தியாகராஜா பாகவதர் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக டிவியே பார்க்காதவர் பாகவதர் படம் அல்லது பாட்டு என்றால் மட்டும் ஓடோடி வந்து விடுவார். தங்கத்தட்டில் சாப்பிட்ட மனுஷன்.. கடைசி காலத்துல கண்ணு போய் சமயபுரம் கோவில்ல உக்கார்ந்து இருதப்போ எவனோ ஒரு ரூவா பிச்சை போட்டுட்டுப் போனானாம். ரொம்பப் பாவமா.. சொல்லும்போதே தாத்தாவின் கண்கள் ஈரமாகி விடும். கிட்டத்தட்ட அதே மாதிரியான சூழலுக்கு காலம் தன்னையும் தள்ளி விடும் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

எல்லா விதத்திலும் எனக்கு ஆதரவாகவும் ஆதர்ஷமாகவும் இருந்த தாத்தா மொத்தமாக மாறும் காலமும் வந்தது. எனது மாமாவின் கல்யாணத்தில் தாத்தா எடுத்த சில முடிவுகள் தவறாக மாறிப்போயின. இப்படி ஒரு கணவன் மனைவியா என்றிருந்த என் தாத்தாவும் அம்மாச்சியும் பிரிந்தார்கள். தாத்தா ஒரு மகன் வீட்டிலும் அம்மாச்சி எங்கள் வீட்டிலும் இருப்பது என முடிவானது. அது அவருக்கு முதல் அடி.

முதுமை காரணமாக கண்பார்வை மங்கலாகிக் கொண்டு வரவே வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கட்டும் என மாமா சொன்னது தாத்தாவுக்கு விழுந்த இரண்டாவது அடி. இத்தனை நாட்கள் தன்னைச் செலுத்திக் கொண்டிருந்த வேலைக்குத் தன்னால் போகமுடியாது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டாமல் அவர் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் பிறழத் தொடங்கியது.

அமைதியாக வீட்டுக்குள் உட்கார்ந்து இருப்பார். திடீரென அழுவார். அனைவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்ய பார்ப்பதாக புலம்புவார். வீட்டுக்குள் யாரெனத் தெரியாத மனிதர்கள் வந்து போவதாக அவர் பேச ஆரம்பித்த நாட்களில் மாமாவின் வீட்டுக்குள் புயல் வீசத் துவங்கியது. இதற்கு மேலும் அவரை வீட்டில் வைத்துக் கொள்ள முடியாது என பெரிய மாமா ஒரு முதியோர் காப்பகத்தில் கொண்டு போய் விட்டு விட்டார். விஷயம் தெரிந்து நானும் அம்மாவும் அங்கே போனபோது பார்த்த பயங்கரமான காட்சி என் வாழ்க்கைக்கும் என்னைத் துரத்திக் கொண்டிருக்கும். சுவரின் மூலையில் ஒரு கட்டிலில் வீசி எறியப்பட்ட மூட்டை போலத் தாத்தா படுத்துக் கொண்டிருந்தார். எனது மனதில் ஒருகணம் கம்பீரமாக நடந்து போகும் தாத்தா வந்து போனார். உடைந்தழுது அவரைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். பின்பு அவர் இறக்கும்வரை எனது தங்கையின் வீட்டில்தான் இருந்தார்.

ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசுறீங்க என்று நாம் கோபமாகக் கத்தினால் கூட அது உறைக்காமல் சிரித்தபடி அமர்ந்திருக்கும் தாத்தாவின் சித்திரம் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது. அவர்தான் இவரா என நம்ப முடியாதபடிக்கு எல்லாவற்றையும் திருப்பிப் போடுகிறது. அப்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது இதுதான். நமக்கும் இந்த நிலை வந்து மற்றவர் நம்மீது பரிதாபம் கொள்ளும் முன்பாக செத்துப் போய் விட வேண்டும். எப்போதும் இதுதான் என்று மோசமான நிலையில் இருப்பது வேறு. ஆனால் எல்லாவிதத்திலும் நல்லபடியாக இருந்துவிட்டு பின்பு நாசமாகும் கொடுமை வாழ்வில் யாருக்கும் வரவே கூடாது.

கோடைக்கானலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம். அங்கே கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் இருப்பார். யார் என்ன வேலை சொன்னாலும் முகம் சுழிக்காமல் செய்வார். செய்த வேலைக்கு நன்றி சொன்னாலும் சின்னதொரு புன்னகையோடு கடந்து போவார். ரொம்ப நல்ல மாதிரியான மனிதர்.

ஒரு சனிக்கிழமை இரவு நண்பர்கள் எல்லோரும் சுதியேற்றிக் கொண்டிருக்க நான் வழக்கம்போல அவர்களோடு சேர்ந்து சைடு டிஷைக் காலி செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் அந்தப்பக்கமாக வர அவரையும் ஜமாவில் சேர்த்துக் கொண்டது நண்பர் குழு.

சிறிது நேரத்துக்குப் பின்பு நண்பர்கள் அனைவரும் வற்புறுத்த மனிதர் பாடத் தொடங்கினார். எல்லாம் ஐம்பது அறுபதுகளின் பாடல்கள். அருமையான குரல்வளமும் அற்புதமானத் தமிழ் உச்சரிப்பும். என்னால் நம்ப முடியவில்லை. நடு இரவு வரை தொடர்ந்த கச்சேரிக்குப் பின்பு நண்பர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ரொம்ப நாளைக்குப் பிறகு அன்று சந்தோசமாக உணர்ந்ததாக சொல்லிப்போனார்.

அவர் போனபின்பு என்னதான்னாலும் பரம்பரை மிச்சம் இருக்கும்ல என்றார் நண்பரொருவர். அப்படியா, யாருங்க அவரு என்று ஆர்வமாகக் கேட்டேன்.

உடுமலை நாராயண கவியோட பேரன்.

28 comments:

Unknown said...

மிக அதிர்வான கட்டுரை, நானும் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் ஒரு எச்சம் என்பதால் மிகுதியாக வலிக்கிறது..

கடைசி வரியில் ஒரு மாகவியின் வாரிசின் நிலமை நினைத்து என்னால் சத்தமாக அழத்தான் முடியும்...

CS. Mohan Kumar said...

நல்ல ஆரம்பம் ! தொடருங்கள் !

சசிகலா said...

படிக்கும் அனைவரின் நெஞ்சினிலும் தன் தாத்த பாட்டி அப்பா என அவர்கள் கூறிய அனுபவ பாடங்கள் கண் முன் வந்து போகின்றன
பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

happy new year nanpaa...

Balakumar Vijayaraman said...

உண்மைக்கு நெருக்கமான எழுத்துகளுக்கு அடர்த்தி அதிகம். நல்லா வந்திருக்கு கார்த்தி.

முதல் பகுதியிலேயே மூன்று மனிதர்களா! அப்போ இன்னும் நிறைய பேர் வரிசையில் இருக்காங்க போல, கலக்குங்க :)


வாழ்த்துகள், சிறப்பாக தொடருங்கள்.

susila Govindaraj said...

Excellent post.. Make an option to share it on facebook..

சேக்காளி said...

கடைசி வரை ஆர்வத்துடனேயே படித்து முடித்தேன்.மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் இந்த கணிணி மய காலத்திலும் மனம் சலிப்படையாமல் இது போன்ற கட்டுரை, மற்றும் கதைகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுகிறது என நினைக்கிறேன்

கும்மாச்சி said...

அந்தந்த பாத்திரங்களை கண்முன் நிறுத்தும் அபாரமான நடை. தாத்தா பற்றிய விவரங்களை படித்தவுடன் மிகவும் கலங்கினேன். வாழ்க்கை சுழற்சியில் என்ன என்னவெல்லாம் மாறுகின்றன என்பது மாறாத உண்மை.

தொடருங்கள்.

varadharaj ellappan said...

Really super sir.... there is no words to express my thoughts after reading this...

முரளிகண்ணன் said...

மனம் கனமாகி விட்டது.

ஜோதிஜி said...

திரைப்படங்களைப் பற்றி விடலை மாதிரி நீங்க கும்மாளமாக எழுதும் போது பல முறை ஆச்சரியப்பட்டுருக்கேன். ஆனால் உங்களின் உண்மையான திறமை இன்னும் அப்படியே இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

vasu balaji said...

நிறுத்தாம எழுதுங்க கார்த்தி. அபாரமான தொடக்கம்.

அத்திரி said...

thodarattum

tamil thasan said...

நமக்கு தெரிந்த,நம்மோடு பழகிய உள்ளங்கள் கஷ்டத்தில வாடும் போது அந்த நேரத்தில நம்மால உதவ முடியலையே என்ற வலி உண்மைலேயே ரொம்ப.கொடுமையானது.அழுதுவிட்டேன்...உங்களது இந்த தொடக்கம் அருமை...

Sap abap said...

doing a great job machaan........

மேவி... said...

மனசை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது..... வலியை உணர்ந்த வார்த்தைகள்.

தருமி said...

//மற்றவர் நம்மீது பரிதாபம் கொள்ளும் முன்பாக செத்துப் போய் விட வேண்டும்.//

ஆசைதான் ... எப்படியோ?

தருமி said...

நல்ல கட்டுரைத் தொடரின் அழகான ஆரம்பம். வளரட்டும் ...

மதுரை சரவணன் said...

நல்லா வந்திருக்கு.. அடர்த்தியான பதிவு…!வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

தொடருங்கள்!

Kamil said...

கனமான பதிவு.. மிக அருமை!

thamizhparavai said...

காபா நல்ல பகிர்வு...தொடருங்கள்...
நறுக்குத் தெறித்தாற்போல் இருக்கிறது

Romeoboy said...

காபா கண்கள் கலங்கிடுச்சு.. இந்த பதிவை படிச்ச உடனே என்னோட அம்மிச்சி நியாபகம் தான் வந்துச்சு. நல்ல தொடக்கம் தொடர்ந்து எழுதவும்.

ஆரூரன் விசுவநாதன் said...

கடைசி வரி.....மிகுந்த வலியைக் கொடுத்துவிட்டது கா.பா.

தொடர்ந்து எழுதுங்க....வாழ்த்துக்கள்

சித்திரவீதிக்காரன் said...

நெஞ்சை கணக்கச் செய்யும் பதிவு. காலம் எல்லாவற்றையும் மாற்றும் ஒரு வல்லமை கொண்டது. அந்த நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நல்ல பதிவு. நன்றி.

Santhosh said...

நல்லா வந்து இருக்கு வாழ்த்துக்கள்.

சம்பத் said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி...நமக்கு எப்போதும் வாழ்ந்து கெட்டவங்கள பார்த்தாலே ஒரு சோகம் இருக்கும். ஆரண்ய காண்டம் ஜமீன்தார் கேரக்டர் போல..

manjoorraja said...

நல்லதொரு பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.