February 15, 2012

உதிரிப்பூக்கள் - 6

விளக்குத்தூணிலிருந்து திருமலை மன்னர் மகாலுக்குப் போகும் வழியில் ஒரு பழமையான வீடு இருக்கிறது. பிரம்மாண்டமான தூண்களுடன் செட்டிநாடு பாணியில் கட்டப்பட்ட வீடு. கட்டி முடித்து எப்படியும் நூறு நூற்றைம்பது வருடங்கள் இருக்கும். வீட்டைச் சுற்றி புதுப்புது கடைகள் வந்து விட்டபோதும் அந்த வீடு மட்டும் அங்கே தனித்துத் தெரியும். குறிப்பாக இரவு நேரங்களின் சோடியம் மஞ்சள் வெளிச்சத்தில் வீடு இன்னும் அழகாக இருக்கும். அதைக் கடந்து போகும் போதெல்லாம் மறக்காமல் வீட்டின் உள்ளே முற்றத்தைப் பார்த்தபடியே போவேன்.

அதற்குக் காரணம் அங்கே இருக்கும் ஒரு கிரேக்கத் தேவதையின் சிலை. வெகு நாட்களாக அந்தச் சிலையை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குப் போனேன். என் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வயதான பெண்மணி ஒருவர் வந்தார். கண்களில் குழப்பத்தோடு என்ன என்பதாகப் பார்த்தார்.

"வணக்கம்மா.. நான் இங்க பஜார்லதான் இருக்கேன். கொஞ்ச நாளாவே உங்க வீட்டைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். பழைய காலத்து வீடு. ஆனா உள்ள இருக்க அலங்காரம் எல்லாம் இந்தக் காலத்துது. ஒரு வித்தியாசமான கலவையா அழகா இருக்கும்மா. அதோட அந்தத் தேவதை சிலை.. அதைக் கிட்டத்துல பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்குங்க.."

நான் பேசப் பேச அந்த அம்மாவின் கண்களில் குழப்பம் நீங்கி ஒரு தெளிவும் சின்னதொரு பெருமிதமும் வந்தது.

"உள்ள வாங்க தம்பி.. வந்து பாருங்க.. எம்மவன் சிவில் எஞ்சினியரு.. இந்த பொம்மை.. அலங்கார வெளக்குங்க.. அவனோட வேலைதான் இதெல்லாம்.. இப்போ துபாய்ல இருக்கான்.."

நான் அருகில் சென்று அந்த சிலையைப் பார்த்தேன். பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்த சிலை. கையில் இசைக்கருவி ஒன்றை ஏந்தி யாருக்காகவோ காத்து நிற்கும் தேவதை. நிஜமாகவே தேவதைதான். நெளிநெளியான தோள் தொடும் கூந்தலும் முகத்தில் இருந்த சந்தோசமும் என அதைச் செய்த மனிதர் வெகு ரசனையாக உருவாக்கி இருந்தார். வெகு நேரம் கழித்து அந்த அம்மாவிடம் நன்றி சொல்லி விடைபெற்றேன். பழமையும் புதுமையும் ஒன்றாகச் சேர்ந்து வேறொரு நிறத்தைத் தரும் அந்த வீட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

தே மாதிரியான பழமை புதுமை என இரண்டும் கலந்த தன்மையுடைய ஒரு நகரமாகத்தான் மதுரையும் இருக்கிறது.

மதுரையை நகரம் எனச் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது ஒரு வளர்ந்த கிராமம். அவ்வளவே. பெரியளவில் தொழிற்சாலைகளோ தொழில்நுட்ப வசதிகளோ இல்லாத ஊர். பெரும்பாலான மக்களுக்கு வியாபாரம்தான். ஆனால் வரும் மக்கள் அனைவருக்கும் ஏதோவொரு பிழைப்பு கண்டிப்பாகக் கிடைக்கும். இன்றைக்கும் படிப்பு முடித்து வேலைக்காக வெளியே எங்காவது போகவேண்டிய சூழல். ஆனால் எங்கு போனாலும் மதுரையைத் தங்கள் மனதில் நினைவிலும் சுமந்து திரியும் மக்கள்.

ஊரைப் பொறுத்தவரை இரண்டாகப் பிரிக்கலாம். ஆற்றுக்கு அந்தப்பக்கம் பாதி. மீதி, ஆற்றுக்கு இந்தப்பக்கம், மீனாட்சி கோவிலைச் சுற்றி இருக்கும் பகுதி. சந்தையில் இருந்துதான் ஊரின் மற்ற பகுதிகளுக்கான போக்குவரத்து நடக்கும். ஊரெல்லாம் தூங்க ஆரம்பிக்கும் நடுராத்திரியில் யானைக்கல் பகுதி முழித்துக் கொள்ள மதுரையின் தினம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் என லோடு வந்து இறங்க இறங்க வியாபாரிகளின் கூட்டம் பெருகியபடி இருக்கும். ரெண்டு மணிக்குப் போனால் கூட மக்கள் சூடாக வடையும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். காலைல நாலு மணின்னாலும் சரி ராத்திரி பன்னெண்டு மணின்னாலும் சரி வட தின்னுக்கிட்டுத் திரியுறது உங்க ஊர்க்காரவுங்க தாண்டா என நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்வதுண்டு.

சொந்த ஊரைப் பற்றிப் பேசும்போது யாராக இருந்தாலும் ஒரு இன்ச் கூடுதலாக வளர்வது இயல்புதான். ஆனால் மதுரைக்கார மக்களுக்கு அது கொஞ்சம் ஜாஸ்தி. மதுரையைச் சுற்றின கழுதை வேறெங்கும் சுற்றாது என்று தங்களைக் கழுதை என்று சொல்லிக் கொண்டாலும் கூட ஊரை விட்டுக் கொடுக்காதவர்கள். சினிமாக்களில் சொல்வது போல எந்நேரமும் சண்டைக்கு அலையும் மனிதர்கள் இங்கே கிடையாது. வெள்ளந்தியான ஆட்கள். ஆனால் வம்பென்று வந்தால் ஒருகை பார்த்து விடக்கூடியவர்கள்.

மதுரை மக்களுக்கு எனப் பிரத்தியேக குணங்கள் சில உண்டு. பொதுவாக ரோட்டுக்கு நடுவில்தான் நடந்து போவார்கள். வாகனங்களில் யார் வந்தாலும் ஒதுங்க மாட்டார்கள். ஆனாலும் பின்னால் வண்டியில் வருபவர்கள் கண்டிப்பாக பெல் அடிக்க வேண்டும். அது எதற்கென்றால், நடுவில் நடுப்பவர்கள் திடீரென்று ஓரமாக ஒதுங்கப் போய், சுற்றிக் கொண்டு போகும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நேர்ந்து விடக் கூடாதில்லையா? அதே மாதிரிதான் மதுரை மக்களின் மொழியும். அவய்ங்க இவய்ங்க அங்கிட்டு இங்கிட்டு கிட்டத்துல என்பதான பல வார்த்தைகளை வைத்தே மதுரைக்காரர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

வண்டி ஓட்ட வேண்டுமென்றால் என்ஜினை ஸ்டார்ட் செய்வது ஆரம்பம் என்பது போல பேச்சை ஆரம்பிக்க வேண்டுமென்றால் ..க்காலி, ..த்தாளி என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் எனத் தீவிரமாக நம்பக்கூடிய நிறைய மக்கள் இங்கே உண்டு. அதே மாதிரியான இன்னொரு விஷயம் போஸ்டர் கலாச்சாரம். காதுகுத்து மொட்டை சாவு கல்யாணம் கருமாதி எனப் பாகுபாடு இல்லாமல் எல்லா விசயத்துக்கும் சகட்டுமேனிக்கு போஸ்டர்கள் தூள் கிளப்பும். ஆனால் பலமுறை அந்தப் போஸ்டர்களுக்கு எனத் தனியாக ஒரு ப்ரூப் ரீடர் இல்லையே என்று பார்ப்பவர்கள் மனம் கலங்க நேருவதும் உண்டு. அம்மாதான் ஆலனும் தமிள்நாடு நாலா வாலனும் என்கிற ரீதியிலான போஸ்டர்களைப் பார்க்கும்போது தமிழ்ச்சங்கம் வைத்த மதுரை பற்றித் தெரிந்த மக்களுக்கு ரத்தக்கண்ணீர் கூட வந்திடும் வாய்ப்புண்டு.

துரையின் மிக முக்கியமான விஷயம் - கோவில்கள். மீனாட்சி கோவில் பற்றியோ அழகர் திருவிழா பற்றியோ நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் முக்குக்கு முக்கு குடி கொண்டிருக்கும் முப்பிடத்தி அம்மன் மற்றும் குலம் காத்த அய்யனார் பற்றியும் நாம் கண்டிப்பாகப் பேச வேண்டியிருக்கிறது. போன வாரம் கூட எனது கல்லூரியில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிய வேப்ப மரம் கொண்ட காளியாத்தா கோவில் ஒன்று உருவாகி இருக்கிறது. நாலுக்கு நாலு என்கிற ரீதியில் சின்னஞ்சிறு குடிசைகளில் திருப்தி அடையும் இவர்களின் கோவில்கள் எல்லாமே பெரும்பாலும் சாலைகளின் போக்குவரத்தைக் காலி செய்வதாகவே இருக்கும். அதிலும் ஆடி மாதம் வந்துவிட்டால் இந்த சாமிகளின் கொண்டாட்டம் தாங்க முடியாது.

பெரிய பந்தல் போட்டு சாலையை அடைத்து விளக்கு பூஜை முளைப்பாரி அன்னதானம் எனத் தூள் கிளப்பும் கோவில் திருவிழாக்களில் கட்டாயமாக நடன நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெறும். அது என்ன மாயமோ மந்திரமோ.. பெரும்பாலான நடனக் குழுக்களின் பெயர் அபிநயா என்பதாகவே இருக்கும். சன் டிவி புகழ், ராஜ் டிவி புகழ் என்று ஆரம்பித்து வெறும் அபிநயா, குயில் அபிநயா, டிஸ்கோ அபிநயா என்று எங்கும் அபிநயாவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும்.

ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அறிவிப்பு செய்பவர் பேசுவது மாதிரியான தமிழை நீங்கள் வேறெங்கும் கேட்க முடியாது. அடுத்ததாதாதாதாக வர்ர்ரர்ர்ர்ர்ர இருக்கும் பாஆஆஆஆடல் எங்க்ள் நடனக்குழ்வின் சூஊப்பர் ஸ்தாஆஆர் ரஜினிகாந்தின் பாபா படப்பாடல். விளக்குகள் எல்லாம் அணைத்து விடுவார்கள். தாடி வைத்து தலைப்பா கட்டின ரஜினி கெத்தாக மேடைக்கு நடுவே வந்து முத்திரை காண்பித்தபடி நிற்பார். அவரைச் சுற்றி சீமெண்ணெய் ஊற்றி தீயைப் பொருத்தி விடுவார்கள். இனி பாபா எனப் பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும். ஒருமுறை இதுமாதிரிச் செய்யப்போய் ரஜினியின் காலில் தீப்பிடித்துக் கொள்ள அவர் பரதநாட்டியம் ஆடியது கண்கொள்ளா காட்சி. ட்யூப்ளிகட் கமல்களும் விஜய்களும் அஜித்களும் எனத் திருவிழா களை கட்டும். எந்த நாள் எந்தக் கோயிலில் திருவிழா நடனம் எனப் பட்டியல் போட்டுக் கொண்டு போய் பார்த்த காலமும் உண்டு.

டிப்புக்காக காருண்யாவில் சேர்ந்த முதல் வருடம். அப்பாவின் ஓசி பாஸ் உதவியோடு வாராவாரம் ஊருக்கு வந்து விடுவேன். அதுமாதிரி கல்லூரிக்குத் திரும்பிப் போக வேண்டிய ஒரு ஞாயிறு. ராத்திரி பதினோரு மணிக்கு ரயில். காத்தோட்டமாக இருக்கட்டுமே எனக் கைலியோடு ஏறிப் படுத்து விட்டேன். காலை நாலு மணிக்கு ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது கல்லூரிப் பேருந்து தயாராக நிற்க தூக்கக் கலக்கத்தில் அப்படியே ஏறி விட்டேன். பிறகுதான் அது சீனியர் மாணவர்களோடு சேர்ந்து பயணிக்கும் வண்டி என்பது தெரிந்தது. சத்தமில்லாமல் ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்து கொண்டேன். யாரும் கவனிக்க வில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தவன் கல்லூரியை அடைந்து ஒவ்வொருவராக இறங்கிப் போனபின்பு மெதுவாக இறங்கினேன். யாரும் பார்க்கும் முன்பாக ஹாஸ்டலுக்குள் ஓடிவிட வேண்டும் என்று விரைந்தவனை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது. இரண்டாம் வருட மாணவர் கூட்டம் ஒன்று நின்று கொண்டிருந்தது .

"ஏன்டா.. நீ படிச்ச்சவந்தானே.. இப்படி காலேஜுக்கு கைலில வரலாமா.."

அமைதியாகத் தலைகுனிந்து நின்றேன்.

"எந்த ஊருடா நீயி.." ஒரு அண்ணன் கேட்டார்.

"மதுரைண்ணே"

சொல்லி முடிக்கவில்லை. பளாரென்று ஒரு அறை விழுந்தது.

"ஏண்டா நம்ம ஊர இப்படி அசிங்கப்படுத்துற.."

எரிச்சலாக வந்தது. அவர்களிடம் என்ன சொல்ல முடியும். நம்மீதும் தப்பு இருக்கிறது என அமைதியாக வந்துவிட்டேன். வெளியூருக்குப் போய் மதுரைக்காரன் என்று சொல்லி நான் முதல்முதலாக வாங்கிக் கட்டிக்கொண்டது அப்போதுதான்.

துவும் காருண்யாவில் நடந்ததுதான். மூன்றாம் வருடப்படிப்பின் ஏதோ ஒரு செய்முறைத் தேர்வு. வந்திருந்த எக்ஸ்டர்னல் ரொம்ப ஜாலியான மனிதராக இருந்தார். வைவாவுக்கான என் முறை.

"தம்பி எந்த ஊரு.."

"மதுரை சார்.."

"அடடே.. மதுரைன்ன ஒடனே உனக்கு என்னய்யா ஞாபகம் வரும்.."

"சார்.. மதுரை மல்லி சார்.."

"அடப்பாவி.. மீனாட்சி கோவில் இருக்கு, மகால் இருக்கு.. அதெல்லாம் தோணாதா?"

"இல்ல சார்.. டக்குன்னு கேட்டீங்களா.. இப்போ திருநெல்வேலின்னா அல்வா, திண்டுக்கல்னா பூட்டு , அதுமாதிரி மதுரைன்னா மல்லின்னு சொல்லிட்டேன் சார்.."

"ஆகா.. பொழச்சுக்குவடா.. இதுவரைக்கும் எத்தனை பேருக்கு மல்லி வாங்கிக் கொடுத்திருப்ப.."

"இதுவரைக்கும் இல்ல சார்.."

"அடப்பாவி.. சுத்தம்.. அப்போ இனிமே வாங்கித் தருவியா.. சூப்பர் சூப்பர்.."

என் வாழ்நாளில் நூற்றுக்கு நூறு வாங்கிய ஒரு செய்முறைத் தேர்வு அதுதான்.

பொதுவாக விஷாலின் படங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஆனால் திமிரு மட்டும் அதில் விதிவிலக்கு. குறிப்பாக இடைவேளைக் காட்சி. நாயகனிடம் அடிவாங்கிய வில்லனின் ஆள் கத்தியபடியே ஓடுவார்.

"இருடி.. எங்க ஊருக்காரன்களக் கூப்பிட்டு வந்து உன்ன பேசிக்கிறேன்.."

இப்போது விஷாலைக் லோ ஆங்கிளில் காட்டுவார்கள். வெறியோடு கத்துவார். பின்னணியில் கொஞ்சம் கொஞ்சமாக மதுரை மீனாட்சி கோயில் தோன்ற ஆரம்பிக்கும். எப்போது அந்தக் காட்சியைப் பார்த்தாலும் புல்லரிக்கும்.

"டேய்.. நானும் மதுரைக்காரந்தாண்டா.."

17 comments:

இராஜராஜேஸ்வரி said...

ரசனையான பகிர்வுகள்...பாராட்டுக்கள்..

Balakumar Vijayaraman said...

சூப்பர். அச்சு அசல் மதுரையை கொண்டுவந்து வீட்டீர்கள்.

படிக்கும் போதே புல்லரித்தது...

"டேய்.. நானும் மதுரைக்காரந்தாண்டா... :) "

சமுத்ரா said...

ரசனையான பகிர்வுகள்...பாராட்டுக்கள்..

vasu balaji said...

கலக்கல்:)

CS. Mohan Kumar said...

நைஸ். சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க

இந்த பதிவில் மதுரையின் குறைகளை தான் நிறைய லிஸ்ட் பண்ணிருக்க மாதிரி இருக்கு

rajasundararajan said...

நகைச்சுவை எழுத்து மிக இயல்பாக வந்திருக்கிறது. வேட்டியை அடித்தொடை தெரிய மடித்துக்கட்டுவது கூட மதுரை வழக்கம்தானே? நினைவில் பதிந்துள்ள ஒன்றை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்கிறேன்.

கைலி கட்டுனதுக்கு அறை விழுந்ததா? (இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும்) கைலியில் வாசற்படி தாண்டுவது மதுரை ராமநாதபுர இயல்பு என்றல்லவா எண்ணியிருந்தேன்!

அத்திரி said...

ஒரு எலக்கியவாதி மனசுக்குள்ள இம்புட்டு ...................................................

Sridhar said...

பின்னிட்டிங்க தலைவரே... மதுரை மதுரை தான்....

சித்திரவீதிக்காரன் said...

மதுரையைக் குறித்த தங்கள் பதிவு அபாரம். உலகிலேயே மதுரைக்கு இணையான ஊர் எதுவுங்கிடையாது. நான் மதுரையைச் சுத்துற கழுதைதான். தங்கள் பதிவை வாசித்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. காவல்கோட்டம்தான் நம் காதல்கோட்டம். நன்றி.

சரவணகுமரன் said...

சூப்பர்... :-)

//"டேய்.. நானும் மதுரைக்காரந்தாண்டா... ”//

நாங்க என்ன மலேசியாகாரனா?ன்னுனததுக்கு அப்புறமுமா? :-)

சரவணகுமரன் said...

ஒரு டிவி நிகழ்ச்சியில் சில இளைஞர்களிடம் ஒரு பெண் காம்பியர், பாடல் போடுவதற்கு முன்பு கேட்கப்படும் கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார்.


ஒருவரிடம் எந்த ஊர் என்று விசாரிக்க, அவர் மதுரை என்று சொல்லை, காம்பியர் அவரை சுற்றி பார்த்து கேட்டது.

“எங்க மஞ்ச பை?”

இதை பார்த்துக்கொண்டிருந்த என் மதுரை நண்பன், ‘ஏய்ய்ய்ய்.....’ என்று கோபத்தில் கத்திக்கொண்டு, கெட்ட வார்த்தைகளில் வைய தொடங்கினான்.

மேவி... said...

சோழ நாட்டு குடிமகனாக இருந்தாலும், பாண்டிய நாட்டை பற்றிய இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது

Unknown said...

செமையா எழுதியிருக்கீங்க பாஸ்..

Unknown said...

//கைலி கட்டுனதுக்கு அறை விழுந்ததா? (இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும்) கைலியில் வாசற்படி தாண்டுவது மதுரை ராமநாதபுர இயல்பு என்றல்லவா எண்ணியிருந்தேன்!//

இயல்பு தான் ராஜசுந்தரராஜன் சார். அதே இயல்பே பிற பகுதியினரால் கேலி செய்யப் படுகிறதே??

கா.பா படித்த காருண்யா கோவையில் இருக்கிறது. ஒரு மதுரைக்காரனை மற்ற பகுதிக்காரர்கள் கேவலப் படுத்திவிடக் கூடாது என்ற கோபத்தில் அவர் சீனியர் அடித்திருக்கலாம்.

நாடோடி இலக்கியன் said...

ரசனையான நினைவுகள்,
சுவாரஸ்யமான நடையில்..

நல்லாயிருக்கு கா.பா.

Vijaya Kumar said...

Good posting
மதுரை உணவு மற்றும் ஹோட்டல் பற்றி கொஞ்சம் எழுதுங்க ப்ளீஸ் ..........

Raju said...

தரம்!