February 2, 2012

துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்

சில மாதங்களுக்கு முன்பாக நண்பர் அய்யனார் விஸ்வநாத் நண்டு திரைப்படம் பற்றி எழுதி இருந்ததை வாசிக்க நேர்ந்தது. தமிழ்த்திரையுலகில் நோய்மையை அதன் இயல்புகளோடு நேர்மையாகப் பதிவு செய்த படம் என்பதாகச் சொல்லியிருந்தார் என்பதால் யூட்யூபில் அந்தப்படத்தைத் தேடிப் பார்த்தேன். சிவசங்கரியின் கதையை மகேந்திரன் நேர்த்தியாக இயக்கி இருந்தார். அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வரும் வடக்கத்தி இளைஞன். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவன். கூட வேலை பார்க்கும் அஸ்வினியை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். இருவருக்கும் குழந்தை ஒன்று பிறக்க சந்தோசமாக வாழ்கிறார்கள். பின்பாக அவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. நோயின் தீவிரம் அதிகரித்து மரணத்தைச் சந்திக்கிறான். இவ்வளவுதான் கதை. சகலாகலா வல்லவன்களும் முரட்டுக்காளைகளும் தூள் பறத்திக் கொண்டிருந்த வேளையில் அறிமுகமே இல்லாத நடிகர் ஒருவரை நாயகனாக்கி வெகு இயல்பான கதையை எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் படமாக்கி இருந்தார் மகேந்திரன். நோய் என்றவுடன் வாயிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழும் மனைவி, ரத்தம் கக்கும் நாயகன் என்றெல்லாம் மெலோடிராமா இல்லாமல் வாழ்க்கையின் நிதர்சனங்களை இயக்குனர் பதிவு செய்திருந்த விதம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அந்தப்படம் பார்த்த சில நாட்களுக்குப் பின்பு ஜோஷ் வண்டேலூவின் ”அபாயம்” என்கிற நாவல் வாசிக்கக் கிடைத்தது(க்ரியா வெளியீடு). கதிரியக்க உலையில் வேலை பார்க்கும் மூவர் அபாயகரமான கதிர்வீச்சில் மாட்டிக் கொள்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நோய்மை அவர்கள் உடலை சிதைக்கத் துவங்குகிறது. மருத்துவர்கள் அவர்களைத் தனியறையில் வைத்து கவனித்துக் கொள்கிறார்கள். அதிகமாய்க் கதிர்வீச்சுக்கு ஆளான முதல் மனிதன் மற்ற இரு நண்பர்களின் கண் முன்னாலேயே மரித்துப் போகிறான். எப்படியாயினும் தாங்கள் பிழைத்துக் கொள்வோம் எனும் அவர்கள் நம்பிக்கை மெதுவாகக் கரைய ஆரம்பிக்கிறது. மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறார்கள். வெவ்வேறு திசைகளில் இருவரும் பயணிக்கிறார்கள். இருந்தும் விடாமல் துரத்தும் மிருகமென வரும் மரணத்தின் கரங்களில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். நோயின் பொருட்டு மரணம் நிச்சயிக்கப்பட்ட மனிதர்களின் அக நெருக்கடிகளை வெகு அழகாகப் படம் பிடித்துக் கட்டிய நாவல். வெறும் நூறே பக்கங்களில் மனித வாழ்வின் சாரத்தையும் நோய்மை மனிதனுக்குள் உண்டாக்கும் உளவியல் மாற்றங்களையும் துல்லியமாகப் பதிவு செய்திருப்பார் ஆசிரியர்.

இதன் தொடர்ச்சியாகவே எஸ்.ராமகிருஷ்ணனின் “துயில்” நாவலை என்னால் அணுக முடிகிறது.


இரு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் மூலமாக விரிகிறது துயில். 1982 - தெக்கோடு எனும் கிராமத்தில் இருக்கும் தேவாலயத்தில் திருவிழா தொடங்க இருக்கிறது. அங்கு போனால் உடம்பில் இருக்கும் நோய்கள் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்தத் திருவிழாவில் கடல்கன்னி ஷோ நடத்திப் பிழைக்க வரும் அழகர், சின்ன ராணி மற்றும் செல்வி எனும் குடும்பத்தின் கதை ஒரு பக்கம். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாக - 1873 - தெக்கோட்டுக்கு மருத்துவ சேவை சேய்ய வரும் ஏலன் பவர் என்கிற ஆங்கில யுவதியின் அனுபவம் மற்றும் அவளுக்கு நடக்கும் சம்பவங்கள் என இன்னொரு பக்கம். நடுநடுவே எட்டூர் மண்டபம் எனும் இடமும் அங்கு வரும் ரோகிகளின் கதையும் நமக்குச் சொல்லப்படுகின்றன.

“நோய்மை எல்லா மனிதர்களையும் அவர்களது வயதைக் கரைத்து விடுகிறது. அவனுக்குள் இருந்து ஒரு சிறுவனோ, சிறுமியோ வெளிப்பட்டு விடுகிறாள் அந்த பால்ய உருவம் பிடிவாதமானது. வலி தாங்க முடியாமல் புலம்பக்கூடியது. உலகைக் கண்டு பயப்படக்கூடியது” (பக்.160) - துயிலின் ஆதாரம் இதுதான். இதை நான் என் வாழ்வில் எப்போதும் உண்ர்ந்திருக்கிறேன். உடல் நன்றாக இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் மனது சின்னதொரு பிணி வந்தாலும் அத்தனையும் அடங்கிப் போய் என்ன செய்வதனெத் தெரியாமல் படுக்கையில் வீழ்ந்து கிடப்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். இது அனைவருக்கும் பொதுவானது. நோயின் புறக்காரணிகள் தவிர்த்து உடலை நாம் எத்தனை மதிக்கிறோம் என்கிற கேள்வியை துயில் முன்வைக்கிறது. அகம் சார்ந்த பிரச்சினைகள், உணவு மற்றும் உறக்கம் என நோய்மைக்கான காரணங்களைக் கண்டடைய முயலுகிறது இந்த நாவல்.

இந்த நாவலை ஒரு விருட்சம் எனத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் எஸ்ரா. அதன் வெவ்வேறு கிளைகளாக பலப்பல மனிதர்கள் நாவலுக்கு உள்ளிருந்து கிளம்பி வந்தபடியே இருக்கிறார்கள். அழகரின் பால்யத்தில் ஆரம்பிக்கும் கதை அவனது தகப்பனின் கள்ள உறவுகளைப் பேசி பின்பு அவன் பாரியோடு சேர்ந்து ஹோட்டலொன்றில் திருடி மாட்டுவதில் வந்து முடிகிறது. அங்கிருந்து அழகரின் கதை ஜிக்கி மற்றும் டோலியின் கதையாக மாற்றம் கொள்கிறது. அவர்களின் சின்ன வயதுப் போராட்டங்கள், டோலியின் மீதான ஜிக்கியின் அன்பு, தவறான மனிதனிடம் கொண்ட நம்பிக்கை மற்றும் அன்பால் பஸ் ஸ்டாண்டுகளில் நோய் கண்டவளாகத் திரிய நேரிடும் டோலியின் துன்பம் ஆகிய எல்லாமும் நமக்குச் சொல்லப்படுகின்றன. சின்னராணியின் கதை வேறு மாதிரி. அவள் தன் இளவயது முதலே கனவுகள் பல காண்பவளாக இருக்கிறாள். அழகருடனான திருமணத்திற்குப் பின்பு தன் வாழ்க்கை வேறொன்றாக மாறிவிடும் எனத் தீவிரமாக நம்புகிறாள். ஆனால் அவை அனைத்தும் பொய்க்கின்றன. தன்னால்தான் கணவனின் பிழைப்பு எனும் கட்டாயத்தை ஏற்றுக் கொள்கிறாள். கடல்கன்னியைப் பார்க்க வந்து கண்டதையும் பேசிப் போகும் மனிதர்களை சகித்துக் கொள்ளவும் வேண்டி இருக்கிறது. தன்னையே நம்பி இருக்கும் சவலைப் பிள்ளைக்காக அத்தனை துன்பங்களையும் தாங்குபவளாக இருக்கும் சின்ன ராணியின் கதையோடு பெரும்பாலான தமிழகக் கிராமத்துப் பெண்களை நம்மால் எளிதாகப் பொருத்திப் பார்க்க இயலுகிறது.

தனது ஞானத்தந்தையாக மதிக்கும் லகோம்பேக்கு ஏலன் பவர் எழுதும் கடிதங்களின் வாயிலாக அவள் கதை விரிகிறது. தென்தமிழகத்தின் மக்கள் அவளுக்குப் பெரிதும் ஆச்சரியமாய் இருக்கிறார்கள். எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத, படிப்பறிவு ஏதுமற்ற மக்களுக்கு நடுவே தன்னை நிரூபிக்க அவள் பெரிதும் கஷ்டப்படுகிறாள். கூடவே மதமும் மக்கள் மீதான மதத்தின் கோட்பாடுகளும் அவளுக்குள் நிறையக் கேள்விகளை எழுப்புகின்றன. மதம் அல்லது சேவை என வரும்போது சேவையையே அவள் தேர்ந்தெடுக்க விழைகிறாள். சிறிது சிறிதாக அந்த மக்கள் அவளை ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கல்வியின் மூலமே அவர்களை முழுதாய் மீட்டெடுக்க முடியும் என நம்புபவள் அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது முகம் தெரியா மனிதர்களால் கொலை செய்யப்படுகிறாள். அடையாளங்கள் ஏதுமின்றி அத்தோடு ஏலன் பவரின் வாழ்க்கை காற்றோடு கரைந்து போகிறது.

பெரும்பாலும் பெண்களின் கதையாக விரியும் துயிலின் மிக முக்கியமான பெண்பாத்திரமாக நான் பார்ப்பது நங்காவை. சின்னராணியின் கிராமத்தைச் சேர்ந்தவள். அவலட்சணமான தோற்றம் காரணமாக எல்லா ஆண்களாலும் புறக்கணிக்கப்படுபவள். வெளித்தோற்றத்தின் காரணமாய் எல்லாராலும் நிராகரிக்கப்பட்டாலும் உள்மனதில் எல்லாப் பெண்களையும் போல மனதில் திருமண ஆசை கொண்டலையும் நங்கா கொஞ்சம் கொஞ்சமாய் மனப்பிறழ்வு கொண்டவளாய் மாறி இறுதியில் ஊரெல்லையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். வெளுத்த தோலையும் அழகையும் சம்பந்தம் செய்து பேசிவரும் இன்றைய சூழலில் நங்காக்கள் வேறு என்னதான் செய்து கொள்ள முடியும்? மொத்த நாவலிலும் என்னை அதிர வைத்து உலுக்கி எடுத்தவளாக நங்காவே இருக்கிறாள்.

எண்ணற்ற கதைகள். நோய்மை பற்றிய அகம் மற்றும் புறம் சார்ந்த உரையாடல்கள். தடையில்லாமல் வாசிக்கத் தூண்டும் மொழி. இத்தனை இருந்தும் இது மாதிரியான நீண்ட நாவல்களை வாசிக்கும்போது கிட்டும் உணர்வூக்கமும் வாசிப்பின்பமும் துயிலில் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் வருத்ததோடு சொல்ல வேண்டும்.

அதன் முதல் காரணம் எட்டூர் மண்டபமும் கொண்டலு அக்காவும். எஸ்ராவின் அ-புனைவுகளான தேசாந்திரி, துணையெழுத்து, கதாவிலாசம் ஆகிய புத்தகங்களில் உலவி வந்த மனிதர்களைப் பிரதியெடுத்து அவர்களை பிணி கொண்டவர்களாய் மாற்றி எட்டூர் மண்டபத்தில் அலைய விட்டதால் வந்த வினை இது. ஏற்கனவே பார்த்துப் பழகிய மனிதர்கள் - அவர்களுக்கான வலுவற்ற பின்னணிக் கதைகள் என எட்டூர் மண்டபம் வெகுவாக துயிலின் வாசிப்பைத் தடை செய்கிறது. ஒருவனுக்கு கையெல்லாம் வியர்த்து வழிவதன் காரணம் அவன் வாங்கிய கையூட்டு எனும் ரீதியலான கதைகள் வெகுவாக சோர்வைத் தருகின்றன. அதிலும் கொண்டலு அக்கா ஒவ்வொரு நோயாளியையும் தம்பீ தம்பீ என அழைப்பதும் பணிவிடைகள் புரிவதும் ஏதோ மூன்றாந்தர நாடகம் பார்ப்பதான உணர்வையே தருகிறது. கனவில் கண்ட குழந்தைக்காக செருப்புகள் திருடத் தொடங்கும் ஒருவனின் கதை மட்டுமே இந்தப் பகுதியின் ஒரே ஆறுதல்.

துயிலின் பெரும்பாலான பகுதிகளுக்கான அடிப்படை கிறித்துவ மத நம்பிக்கைகளில் இருந்து எடுத்தாளப்பட்டு இருப்பதாகவே நம்புகிறேன். பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேவதூதனால் கலக்கப்படும் பெதஸ்தா குளத்தில் நீராடினால் பிணிகள் நீங்கும் என்பதே இங்கே தெக்கோடு மாதாகோவிலாக மாறி இருக்கிறது. அதே போல கொண்டலு அக்காவை என்னால் மதர் தெரசாவின் பாதிப்பில் உண்டான பாத்திரமாகவே நம்ப முடிகிறது. ஏலன் பவரின் வாயிலாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கிறித்துவம் தென்தமிழகத்தில் என்னவாக இருக்கிறது என்பதையும் பேசுகிறார் எஸ்ரா. ஆனால் அதன் மூலமாய் அவர் முன்வைக்கும் அரசியல் என்னவாக இருக்கிறது? இந்து மதப் பூசாரிகள் பெண்களைப் பேய் பிடித்தாட்டுகிறது என சவுக்கினால் அடித்தால் அதனைக் காலம் காலமாக தெரியாமல் செய்து வரும் அறியாமை என்பதாகச் சொல்கிறார் எஸ்ரா. ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி குறை சொல்லும் ஏலன் பவரிடம் நாம் கூட அதை எல்லாம் தெரிந்து தானே செய்து கொண்டிருக்கிறோம் என தெக்கோடு பாதிரியார் சொல்வது வேண்டுமென்றே கிறித்துவ மதம் மனிதர்களை தங்கள் பக்கம் திசை திருப்பிடச் செய்யும் சூழ்ச்சியாக நாவலில் சொல்லப்படுவது தவறான பார்வையாகவே எனக்குப் படுகிறது.

போக, நாவலில் வரும் எல்லோரும், கொண்டலு அக்கா தொடங்கி பிணி கொண்ட ரோகி வரை, ஏலன் பவர் தொடங்கி படிப்பற்றிவற்ற கிராம மக்கள் வரை.. எல்லோருமே பக்கம் பக்கமாய் நோய்மை குறித்துப் பேசுகிறார்கள். அல்லது, அவர்கள் அனைவரின் மூலமாகவும், எஸ்ரா பேசிக் கொண்டே இருக்கிறார். இது வாசிப்பவருக்கு பெரும் மனச்சோர்வையும் அயர்ச்சியையும் தருவதாகவே இருக்கிறது. பிறகு, தெக்கோடு திருவிழாவை எஸ்ரா விவரிக்கும் சூழலை வாசிக்கும் யாருக்கும், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது. கடைசியாக, நாவலில் எல்லாவற்றையும் தாண்டி என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாத விசயம் - அதன் இறுதிப்பகுதி. கணவன் பிரிந்து போய்விட்ட சூழலில் சின்னராணியை தம்பான் பலாத்காரம் செய்வதும் அதன் விளைவாக அவள் அவனைக் கொன்று போடுவதும்.. ஏதோ 80களில் வெளியான பண்ணையார் கொடுமை செய்யும் படங்களே என் நினைவில் வந்து போயின.

நெடுங்குருதி, உறுபசி, யாமம் என்பதான அருமையான எஸ்ராவின் படைப்புகளுக்கு முன்பாக துயில் ஒன்றுமே கிடையாது. அற்புதமான களமும் மனதுக்கு நெருக்கமான மனிதர்களும் வாசிப்பைத் தடை செய்யாத மொழியும் கையிலிருந்தபோதும் துயிலைப் பொறுத்தவரை எஸ்ராவின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக வரத் தவறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போதும் என் மனதுக்கு நெருக்கமாக நானுணரும் எஸ்ராவாக அவர் அடுத்த நாவல் இருக்கும் எனும் நம்பிக்கையோடு எப்போதும்போல நான்.

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

பொன்.பாரதிராஜா said...

greatttttttttttttttttttt

சித்திரவீதிக்காரன் said...

துயில் நாவல் சென்ற ஆண்டு புத்தாண்டு அன்று வெளியானது. விழாவிற்கு சென்று வந்த சகோதரர் பொங்கலன்று அந்தப் புத்தகத்தைத்தர நாலு நாளில் வாசித்து ஜனவரி 20லேயே ஒரு பதிவு எழுதிவிட்டேன். எனக்கென்னமோ துயில் இன்னும் நல்ல நாவலாகத்தான் தோன்றுகிறது. கொண்டலு அக்கா வரும் எட்டூர் மண்டபம் பகுதியை உளவியல் பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். மேலும், 'துயில்' மருத்துவர்கள் வாசிக்க வேண்டிய நாவல். துயில் வாசித்த பிறகுதான் எஸ்.ராமகிருஷ்ணனின் அனைத்து நாவல்களையும் சென்ற ஆண்டு வாசித்து முடித்தேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தங்கள் பகிர்வு அருமை. ஆனாலும், துயில் என் பலநாள் துயில் கலைத்தது உண்மை. பகிர்விற்கு நன்றி.

http://maduraivaasagan.wordpress.com/2011/01/20/%e0%ae%a4%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/

ஆதவா said...

உங்கள் பதிவில் உற்சாகமின்மை காணப்படுகிறது. நெடுங்குறுதிக்கு கொடுத்த விமர்சனத்தோடு இதனை ஒப்பிட்டால்...

எனினும் மனம் கவர்ந்தவரேயாயினும் நேர்மையான உள்ளந்திறந்த விமர்சனம் தந்தமைக்கு பாராட்டுகள்!!!

உங்களிடமிருந்து காவல்கோட்டம் விமர்சனம் எதிர்பார்க்கிறேன்