February 26, 2012

விக்கிரமங்கலம் - பசுமை நடை


மதுரையைச் சுற்றி இருக்கும் சமணப் படுகைகளுக்குப் போய் வரும் பசுமை நடை நிகழ்வுக்காக நண்பர்களோடு விக்கிரமங்கலம் போயிருந்தேன். ஞாயிறு அன்று முகூர்த்த தினமாக இருந்தபோதும் காலை ஏழு மணி போல நூற்றுக்கும் குறையாத நண்பர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக வாசலில் குழுமி இருந்தார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த சாந்தலிங்கம் அய்யா உடன்வர அங்கிருந்து கிளம்பி செக்கானூரணி, கொங்கர் புளியங்குளம் வழியாக விக்கிரமங்கலம் நோக்கி பயணித்தோம்.

ஊருக்குள் நுழைவதற்கு சற்று முன்பாகவே வந்து விடுகிறது சமணர் மலை. மலையின் பெரும்பாலான பகுதியை கிரனைட்காரர்கள் வெடி வைத்துத் தகர்த்திருக்கிறார்கள் என்பதால் ஆங்காங்கே பாறைகள் பெயர்ந்து மூளியாக இருக்கிறது. சற்றே உள்வாங்கும் காட்டுப் பகுதிக்குள் நடந்து போனால் சமணர் குகைகளைப் பார்க்க முடிகிறது. தரையிலிருந்து இருபதடி உயரத்தில் மலையில் இயற்கையாகவே அமைந்த இரண்டு குகைகள். அதைப் பார்த்துவிட்டு எதிர்த் திசையில் நடந்தால் நாம் வந்து சேரும் இடம் முதலைக்குளம் மலை. மிகுந்த சிரமங்களோடு மலையேறி வந்தால் இங்கும் அதிக எண்ணிக்கையிலான சமணப்படுகைகள் காணக்கிடைக்கின்றன.குகைகளின் வாசலில் அமர்ந்து சாந்தலிங்கம் அய்யா இந்த வரலாற்று சிறப்பு மிக்க தலத்தின் முக்கியத்துவங்கள் குறித்துப் பேசினார்.

நாம் முதலில் போன இடத்தின் பெயர் ராக்காச்சிப் புடவு. இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன. ஒரு குகையின் வாசலில்வேற்றாம்பூர் திருமனை செய்தவர்என்கிற பிராம்மி எழுத்துகளைக் காண முடியும். இங்கே வேற்றாம்பூர் எனும் ஊர் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரையைச் சுற்றி வேற்றாம்பூர் என எந்த ஊரும் இல்லை. ஆகவே இது சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்துக்கு அருகினில் இருக்கும் வேற்றாம்பூர் எனக் கொள்ளலாம். திருமனை அல்லது எண்மனை என்பது அறிவார்ந்த மக்கள் நிரம்பிய சபை எனப் பொருள்படும். ஆக, வேற்றாம்பூர் என்கிற கிராமத்தில் வாழ்ந்த உயர்ந்த மக்கள் செய்து கொடுத்த கற்படுக்கை என அர்த்தமாகிறது.இரண்டாவதாக நாம் இப்போது நின்றிருப்பது முதலைக்குளம் மலை. இந்தப் பகுதியை பொதுமக்கள் பஞ்சபாண்டவர் குகை என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சமணப்படுகைகள் இருக்கிறதோ அந்த இடங்கள் எல்லாமே பொதுவாக பஞ்சபாண்டவர் குகை எனச் சொல்லப்படுவதன் பின்னாலிருக்கும் உளவியல் மிக முக்கியமானது. இந்தப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து கல்வெட்டுகள் வரை கிடைக்கின்றன. அவற்றில் எல்லாம் குவிரன் எனும் வார்த்தை பொதுவாக காணக்கிடைக்கிறது. இது குபேரன் எனும் வடமொழிச் சொல்லின் மருவாக இருக்கக்கூடும். அதே போல ஒரு குகையின் வாயிலில்எண்வூர் செழிவின் ஆதன்எனும் வாசகம் இருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் எண்வூர் எதுவெனத் தெரியவில்லை. செழிவின் என்பது செழியன் என்பதாகவும் ஆதன் என்பது செய்தவனின் பெயராகவும் இருக்கலாம். இன்னொரு படுகையின் மீது அந்தை பிகன் மகன் ஆதன் என்று பொறிக்கப்பட்டுள்ளது. பிகன் என்கிற தந்தையின் மகனான ஆதன் என்று இதற்குப் பொருள்.

வரலாற்று ரீதியாக இந்தக் குகைகள் மிக முக்கியமானவை. கீழக்குயில்குடி, யானைமலை போன்ற பகுதிகளில் இருக்கும் குகைகள் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டப்பட்டவை. ஆனால் இந்தப் படுகைகளோ 2300 வருடங்களுக்கு முந்தைவை. கி.மு காலத்தைச் சேர்ந்தவை. இங்கு வாழ்ந்த சமணர்கள் மீண்டும் இங்கே திரும்பி வந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. இன்னொரு முக்கியமான தகவல், இந்தக் குகைகள் பண்டைய காலத்தில் நடைபெற்ற வணிகத்துக்கு முக்கிய சாட்சியாக இருக்கின்றன என்பதாகும்.


புத்தம் பெருவணிகர்கள் மற்றும் கடல் சார்ந்த வணிகத்தைப் பெரிதும் ஆதரித்தது. எனவேதான் காஞ்சி போன்ற இடங்களில் புத்தவிகாரைகள் தோன்றின. ஆனால் சமணர்களை உள்ளூர் வணிகர்கள் ஆதரித்தனர். கேரளத்துக்கும் (சேர நாடு) மதுரைக்கும் (பாண்டிய நாடு) இருந்த வணிகத் தொடர்பை இந்த சமணக் குகைகளின் புவியியல் அமைப்பு தெளிவாகச் சொல்லும். இடுக்கி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அகஸ்டஸ் சீசரின் முகம் பொறித்த காசுகள் போலவே கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையத்திலும் கிடைத்து இருக்கின்றன. அதே வழியில் தொடர்ந்து வந்தால் சின்னமனூர், வீரபாண்டி ஆகிய ஊர்களில் சமண கோயில்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். இதன் தொடர்ச்சியாகவே விக்கிரமங்கலம், கொங்கர் புளியங்குளம் என்று சமணர்கள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். ஆக இந்த சமணக்குகைகள் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்கள்.

பிறகு சமணம் குறித்த நண்பர்களின் கேள்விகளுக்கு அய்யா பதில் சொன்னார். அதில் கழுவேற்றம் பற்றி அவர் சொன்னது மிக முக்கியமான தகவல். எட்டாம் நூற்றாண்டு போல எண்ணாயிரம் சமணர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு கல்வெட்டிலோ, இலக்கியத்திலோ எந்த ஆதாரமும் இல்லை. நான்கு நூற்றாண்டுகள் கழித்துத்தான் பெரியபுராணத்தில் இது பதிவு செய்யப்படுகிறது. மேலும் தக்கையாகப்பரணி எனும் ஒரு நூலில் மட்டுமே இது குறித்தான விவரங்கள் காணக்கிடைக்கின்றன. மேலும் சில நூற்றாண்டுகள் கழித்து ஆவுடையார் கோயில் போன்ற சில இடங்களில் இது குறித்தான ஓவியங்கள் வனையப்பட்டன. சமணர்கள் சைவத்தின் வருகையால் பாதிக்கப்பட்டது உண்மை ஆனால் கழுவேற்றம் நடந்தது என்பதை நம்மால் தீர்க்கமாகச் சொல்ல முடியாது.

தனிப்பட்ட முறையில் ஆசிவகம் பற்றியும் களப்பிரர் பற்றியும் சாந்தலிங்கம் அய்யாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். வெகு சுவாரசியமானத் தகவல்களைச் சொன்னார். விடைபெறும்போது மதுரையின் பாண்டி சாமி குறித்து அவர் சொன்னதுதான் அட்டகாசம். தமிழின் காவல் தெய்வங்களில் பாண்டி முனி என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஒன்று அது புத்தசாமி அல்லது சமணர்களின் அருகன். அவருக்குத்தான் மீசையை ஒட்டி பாண்டியாக்கி விட்டர்கள் என்றார். ஒருகணம் நெஞ்சடைத்ததற்கு எனது பெயரும் கூடக் காரணமாக இருக்கலாம். (பாண்டி சாமிக்கு வேண்டிக் கொண்டு பிறந்ததாலே தான் நான் பாண்டியன் ஆனேன்..)

பசுமை நடை முடிந்து மலையில் இருந்து இறங்கிய பின்பு நண்பர்கள் அனைவருக்கும் அருமையான காலை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு கட்டு கட்டி விட்டுக் கிளம்பினோம்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் தொடர்ச்சியான தங்களின் முயற்சிகளின் மூலம் இந்த பசுமை நடை நிகழ்வினை அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கும் நண்பர் .முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

8 comments:

மதுரை சரவணன் said...

பாண்டிக்கான அர்த்தம் விளக்கியமைக்கு நன்றி பாண்டியரே… !நேரில் வந்த உணர்வு தந்தது உங்கள் பதிவு நன்றி!

சித்திரவீதிக்காரன் said...

அற்புதமான பதிவு. குகைத்தளங்களில் எழுதியிருந்த வரிகளை உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன். தங்கள் பதிவிலேயே பார்த்துக்குறித்துக் கொண்டேன். நன்றி. பாண்டிகோயிலில் வைத்து என் தொழில்நுட்பக்கல்லூரி சான்றிதழ்களை வைத்து வணங்கி வாங்கி வந்தேன். பாண்டி போல மதுரையிலேயே தங்கிவிட்டேன். பாண்டி சமணராகவோ, பௌத்தராகவோ இருந்தாலும் மக்கள் அவரை காவல்தெய்வமாக பார்ப்பதால் அவர் காவல்தெய்வம்தான். பகிர்விற்கு நன்றி.
அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.

My Blog said...

Thanks, Goo dto know about this info. I Would like to know more about this... Y these are all breaken by people? Government wont take responsibility?

ராகவன் said...

அன்பு காபா,

பொற்றாமரைக்குளத்தருகே இருக்கும் சில சுவரோவியங்களில், சமனர்கள் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதாக படித்திருக்கிறேன்... ஆனால் நானும் பார்த்ததில்லை...

பாண்டி பற்றிய கூற்றும் எந்தளவு சரியென்று தெரியவில்லை... நிறைய காவல் தெய்வங்கள் நானூறு ஐந்நூறு வருடங்களில் உருவான விஷயம் தான்... சமணர்களின் அருகனாய் இருப்பதற்கான சாத்தியம் ரொம்பவும் குறைவு... சமண, பௌத்தர்களின் விடுபட்ட சிலைகளை இது போல கிராமதெய்வங்களாய் மாற்றியிருக்கலாம்... ஆனால் கிராம தெய்வங்கள் என்ற கருத்துருவாக்கம்... முற்றிலும் மாறுபட்டதே என்று எனக்குத் தெரிந்தவரை, நான் படித்து அறிந்தவரை சொல்கிறேன்... ஒற்றை பனையும், வேம்பும் தெய்வங்களாய் மாற்றிவிடக்கூடியவர்கள்... சிலைகள் கிடைத்தால் விடுவார்களா என்ன?

அன்புடன்
ராகவன்

ajay said...

பதிவு மிகவும் நன்றாக உள்ளது. நானும் மதுரையை சேர்ந்தவன் தான் கூடிய விரைவில் இவ்விடங்களை சென்று பார்க்க வேண்டும்.

Rathnavel Natarajan said...

அருமையான, பயனுள்ள பதிவு.
உங்களது முயற்சி பாராட்டத் தக்கது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் கா.பா - அரிய தகவல்கள் - சாந்தலிங்கம் அய்யா கூறியவற்றையும் கண்களில் கண்ட காட்சிகளையும் - நினைவில் நிறுத்திப் பதிவாக இட்டமை நன்று. பலப் பல தகவல்கள். பாணியனின் பெயர்க் காரணம் சரி - கார்த்திகை பிறந்த நட்சத்திரமா ? படித்தேன் - மகிழ்ந்தேன் - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

பசுமை நடையில் பங்கு கொள்ள விருப்பம்...pls தொடர்பு விபரங்கள் தெரியப்படுத்தவும் (prabhu.lakshman@gmail.com) நன்றி