January 31, 2009

வெண்ணிலா கபடி குழு!!!




ஏழு நண்பர்கள். அவர்களை இணைக்கும் பாலமாய் கபடி விளையாட்டு. துரோகம் - வெற்றி. ஒரு காதல். ஒரு சோகம். இதுதான் வெண்ணிலா கபடி குழு. லகான், சக் தே இந்தியா, சென்னை 6000028 வரிசையில், விளையாட்டை மையமாக கொண்டு வந்திருக்கும் இன்னொரு படம். பிரம்மாண்டம் என்னும் பெயரில் கோடிகளை கொட்டவில்லை. கையை காலை தூக்கினால் விஷ் விஷ் என்று சத்தம் வரும் கதாநாயகனும் இல்லை. டாய் என்று தொண்டை கிழிய சவால் விடும் வில்லன்கள் இல்லை. இவை எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல படம் தர முடியும் என்பதை இந்த படம் நிரூபிக்கறது. சாதாரண கதையை எடுத்து கொண்டு தெளிவான திரைக்கதையின் மூலம் படத்தை பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.


சிறு வயதிலே தந்தை இறந்து போக பண்ணையத்துக்கு வேலைக்கு போகிறான் மாரிமுத்து. அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஒரே பொழுதுபோக்கு - கபடி. அவர்களுடைய அணியின் பெயர்தான் வெண்ணிலா கபடி குழு. எங்கு போனாலும் தோல்வி ஒன்றை மட்டுமே காணும் வழக்கம் கொண்டவர்கள். திருவிழாவுக்கு ஊருக்கு வரும் பெயர் தெரியாத மதுரை பெண்ணின் மீது காதல் கொள்கிறான் மாரிமுத்து. அவள் அடுத்த திருவிழாவிற்கு வருவதாக சொல்லிப் போகிறாள்.சொந்த ஊரில் நடக்கும் போட்டியிலும் பிரச்சினை ஆகி விடுகிறது. ஊரார் அனைவரும் நண்பர்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் எனத் திட்டுகிறார்கள். கடைசி முயற்சியாக மதுரையில் நடக்கும் மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார்கள். வேறொரு அணி விலகியதால் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுடைய திறமையை உணர்த்தி போராட வைக்கிறார் கபடி கோச்சாக இருக்கும் கிஷோர்குமார். கடைசியில், "உயிரைக் கொடுத்து" ஜெயிக்கிறார்கள். மாரியின் பெயர் தெரியா காதல் என்ன ஆனது.. பெரும் அதிர்ச்சியோடு மனதை கனக்க செய்யும் கிளைமாக்ஸ் உடன் படம் முடிகிறது.


கிட்டத்தட்ட படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள் தான். மாரியாக வரும் விஷ்ணு நாம் அன்றாடும் பார்க்கும் முகங்களில் ஒன்றைப் போல்தான் இருக்கிறார். நண்பர்களாக வரும் அனைவருமே இயல்பாக நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக, பாண்டியாக வரும் நபரும் அப்புக்குட்டியும் பிஸ்து கிளப்பி உள்ளார்கள். சரண்யா மோகன் பாவாடை தாவணியில் பார்க்க அழகாக இருக்கிறார். முதல் பாதியோடு காணாமல் போகிறார். கோச்சாக வரும் கிஷோரின் நடிப்பு அருமை. அவருடைய உருவமும் திருநெல்வேலி பாஷையும் கச்சிதமாக பொருந்துகின்றன. இரண்டாவது பாதியில் மாரியை விரும்பும் பெண்ணாக வருவது யாரென்று தெரியவில்லை. விளக்கி வைத்த குத்து விளக்கு போல அழகாக இருக்கிறார். சின்ன சின்ன பாத்திரங்களுக்கு கூட சரியான ஆட்களை பயன்படுத்தி உள்ளனர்.


இயக்குனர் படத்தை ரசித்து எடுத்திருக்கிறார். படத்தில் சொல்லும்படியான காட்சிகள் நிறைய உள்ளன.

++ சரண்யா அறிமுகம் ஆகும்போது சைக்கிளுக்கும் பஸ்ஸுக்கும் நடக்கும் போட்டி..

++ கண்கள் கட்டிய நிலையில் சரண்யாவின் கால் கொலுசொலி கேட்டு உரியடிப்பது..

++ சரண்யா பிரிந்து போகும் இடைவேளை...

++ முதல் போட்டியின் இடைவேளையில் கிஷோர் நண்பர்களிடம் இருந்து பணத்தை வாங்கி கொண்டு ஜெயித்தால் தான் ஊருக்கு போக முடியும் என சொல்லும் காட்சி..

++ கபடி போட்டிகளை படம் ஆக்கியிருக்கும் விதம்..

படத்தில் குறைகள் இல்லாமலும் இல்லை.

++ முதல் பார்வையிலேயே யாரெனத் தெரியாமலே காதல் வருவது..

++ வலிந்து திணிக்கப் பட்டிருக்கும் திருவிழா பாடல்..

++ அவ்வப்போது எட்டிப்பார்க்கும் இரட்டை அர்த்த வசனங்கள்..

++ கிஷோர் நண்பர்களிடம் பேசும் காட்சி அப்படியே சக் தே இந்தியா படத்தில் இருந்து உருவப்பட்டு இருப்பது..

++ நீள நீளமான காட்சிகளால் மெதுவாக நகரும் முதல் பாதி..

செல்வகணேஷ் தமிழ் இசையுலகத்திற்கு நல்ல வரவு. "லேசா" பாடல் இன்னும் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது. பின்னணி இசையில் தூள் கிளப்பி உள்ளார். லக்ஷ்மணின் ஒளிப்பதிவும் நன்றாகவே உள்ளது. படத்தின் இன்னொரு பலம் பாஸ்கர் சக்தியின் வசனங்கள். படத்தின் இயல்பான ஓட்டத்திற்கு வசனம் பெரிதும் உதவியுள்ளது. இயக்குனர் சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். தன்னை இந்த படத்தின் மூலமாக திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். சுப்ரமணியபுரம், பூ வரிசையில் கண்டிப்பாக இந்த படமும் இடம்பெறும்.

வெண்ணிலா கபடி குழு - உள்ளம் கொள்ளை போகுதே!!!



January 30, 2009

முத்துக்குமார் - நினைவஞ்சலி!!

தமிழக மக்களின் நெஞ்சத்தில் இருந்த அன்பெல்லாம் வற்றி விட்டதா? பக்கத்து நாட்டிலே உயிர் விடும் நம் இனமக்களின் குரல் கேட்டும் செவிடர்களாய் போனோமா.. இவ்வாறெல்லாம் எண்ணி இருந்த வேலையில் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.. உலகத்தின் எந்த சக்தியானாலும் அசைத்து பார்க்க கூடிய தன்மை கொண்டவர்கள் மாணவர் மட்டுமே.. ஈழத் தமிழர்களை காக்க வேண்டி முதலில் மாணவர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தனர். அடுத்ததாக.. தன் இன்னுயிர் நீத்து இப்போதாவது இம்மக்களுக்கு ஒரு நல்வழி சொல்லுங்கள் என்று தீயிலே கருகி இருக்கிறான் என் தோழன் ஒருவன்.. என்னுடைய கவலை எல்லாம், இந்த தியாகங்கள் எல்லாம் வீணாகிவிடக் கூடாதே என்பதுதான். பாதுகாப்பான பகுதிகளுக்கு வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறே எம் இனமக்கள் மீது குண்டு வீசும் கொடுமைகளை நிறுத்துங்கள் பாவிகளே.. நண்பனே முத்துக்குமார்.. நீ யாரென எனக்கு தெரியாது.. ஆனாலும், தமிழின வரலாற்றில் உன் பெயர் என்றும் இருக்கும்.. உன் ஆத்மா சாந்தி அடையட்டும்..
தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.
உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.
எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?
ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-௯௯
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

January 27, 2009

கிராமத்துக் கதைகள்!!!

ஊர்ல இருந்த அம்புட்டு சனமும் கோயிலுக்கு தெக்கால இருந்த அரச மரத்தடியுல தான் கூடி இருந்தாக.. அன்னைக்கு பஞ்சாயத்து. பிராது கொடுத்தது முத்துச்சாமி. முத ஆளா வந்துட்டாரு. ஒறவு சனம் அத்தனியையும் கூட்டிகிட்டு வந்திருந்தாரு. வெட்டு குத்துன்னு ஆனா ஆளு தேவப்படும்ல..அவரு பிராது கொடுத்தது முனியாண்டி மேல. அவுக ஆளுங்க எல்லாரும் வந்துட்டா பஞ்சாயத்து தொடங்கிரும்.

முத்துச்சாமியும் முனியாண்டியும் ஒரு வகைல பங்காளிகதேன்.. ஊர்லையே பெருந்தனக்காரவுக ரெண்டு பேரும். ஒண்ணு மண்ணா இருந்த அவுகள பார்த்து யாரு கண்ணு பட்டுச்சோ.. இன்னைக்கு வெட்டிட்டு சாகுற அளவுக்கு பகையாகிப் போச்சு.. எல்லா வழக்கம் போல திருவிழாவுலதேன் ஆரம்பிச்சது.. வருஷா வருஷம் ஊருக்கொடை முனியாண்டி வீட்டுக்குதே போகும். சுத்தி இருந்த ஆளுக ஏத்தி விட்டதுல முத்துச்சாமி போட்டிக்கு வந்துட்டாரு. உனக்குத்தா ஊர் மரியாதையா.. எனக்கு இல்லையானு சண்ட கிளம்பிருச்சு.. அப்போ நடந்த கலவரத்துல முனியாண்டியோட மச்சான் செத்துப்போனான்.. அன்னைக்கு தொடங்குன வன்மந்தே.. இன்னைக்கு வரைக்கும் முடிஞ்ச பாடில்ல..

முனியாண்டி வந்துட்டாரு.. ஆளு, அம்பு எல்லாத்தோடையும்.. பஞ்சாயத்து தொடங்குச்சு... நாட்டாமை அண்ணாமலை தான் தொடங்குனாரு..

"அதுதா எல்லாரும் வந்தாச்சே.. சொல்லுப்பா.. முத்துச்சாமி.. என்ன பிரச்சினை.."

"ஐயா.. என் மக ராசாத்திய போன வாரம் பக்கத்து ஊர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்திட்டு போனது ஊருக்கே தெரியும்.. எப்படியோ எம்மக கரையேற போறான்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன்.. ஆனா இப்போ.. கல்யாணம் வேணாம்னு தகவல் வந்து இருக்கு.. என்னன்னு விசாரிச்சா.. யாரோ நம்ம ஊருக்காரவுக எம்மவளப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவுங்க மனச கலச்சி இருக்காங்க.. இந்த ஊர்ல எனக்கு ஆகாதவரு யாருண்டு உங்களுக்கே தெரியும்.. இது நியாயமா.. என்னென்னு கேளுங்கையா.. "

நாட்டாமை முனியாண்டி பக்கம் திரும்பினாரு.. "நீ என்னப்பா சொல்ற.."

"இது சரி இல்லீங்க.. எங்கோ யாரோ பிரச்சினை பண்ணினாலும் நான்தேன்னு சொன்னா என்னய்யா அர்த்தம்.. அவம்பொண்ணு முறைமாமன் கூட தெரு தெருவா சுத்திட்டு திரிஞ்சா.. இது எல்லாப் பயலுக்கும் தெரியும்.. அதப்பத்தி வேற எவனோ போய் மாப்பிள வீட்டுல வத்தி வச்சுட்டான்.. அவங்க தெளிவு.. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாங்க.. இதுக்கு நாந்தான் கிடைச்சேனா.." முனியாண்டி கிட்ட இருந்து பதில் திமிரா வந்துச்சி..

ராசாத்தி பொரந்தபோதே அவ மாமன் ராசுவுக்குதான் தர்றதுன்னு முடிவாகி போச்சு. வளந்த பொறவு ரெண்டு பேரும் ஒண்ணா சுத்துனப்ப யாரும் தப்பா எடுத்துக்கல.. எல்லா நல்லா இருந்த நேரத்துல திடீர்னு ஒருநா ராசு படுக்கைல விழுந்துட்டா.. டாக்டர் வந்து பாத்துட்டு வாய்ல வராத எதோ ஒரு நோய் பேர சொன்னாரு.. எண்ணி பதினஞ்சு நாள்ல புண்ணியவா போய் சேந்துட்டான்.. யாராலையும் ராசாத்திய தேத்த முடியல.. ரொம்ப நாள் கழிச்சு.. இப்போதான் அத இத சொல்லி.. எனெக்கு பின்னால உன்ன யாரு புள்ள பார்ப்பான்னு அழுது புடிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குனாரு முத்துச்சாமி.. எல்லாம் கூடி வர நேரத்துல.. இந்த பிரச்சினை.. கல்யாணமும் நின்னு போச்சி..

பேச்சு வளந்துகிட்டே போச்சு. கடைசிவர முனியாண்டி ஒத்துக்கவே இல்ல.. முத்துச்சாமி ஒடஞ்சு போய்ட்டா மனுஷன்.. அழுகுற மாதிரி ஆகிட்டாரு.. கடைசியா கத்துனாரு.."டேய்.. நீயும் ஒரு மகள வீட்டுல வச்சிருக்க.. ஞாபகம் வச்சுக்கோ.. "

முனியாண்டி திருப்பி சொன்னாரு.."எம்மவள பார்த்துக்க எனக்கு தெரியும்.. பிள்ளைய ஒழுங்கா வளக்க துப்பில்ல.. பேச வந்துட்டா.. போயா.."

எந்த முடிவும் எடுக்க முடியல.. முனியாண்டிதா கல்யாணத்த நிப்பாடுனதுன்னு யாரும் அடிச்சு சொல்ல முடியல.. எல்லாம் பிரிஞ்சி போய்ட்டாக.. முத்துச்சாமி அழுதுகிட்டே வீட்டுக்கு போனாரு..

மறுநா காலைல எந்திரிச்சி பார்த்தா... முனியாண்டி மக செல்விய வீட்டுல காணல.. எங்க தேடி பார்த்தும் அகப்படல.. முத்துச்சாமி ஆளுகதேன் ஏதோ பண்ணிட்டாகன்னு முனியாண்டி முடிவு கட்டிட்டாரு.. பெரிய சண்ட வெடிச்சது.. ரெண்டு பக்கமும் பயங்கர சாவு.. ஊரே மயானக் காடாகி போச்சு.. கடைசி வர செல்வி கிடைக்கவே இல்ல..

அன்னைக்குதே ஊருக்கு வெளிய இருக்குற சேரில செருப்பு தைக்கிற கன்னியப்பனும் காணாம போனான்.. அத யாரும் கவனிக்கல..!!

January 26, 2009

குடியரசு தினம்?!!!

வந்து போகின்றன..
சுதந்திர தினமும்,
குடியரசு தினமும்!!
ஒவ்வொரு முறையும் -
வறுமை, வன்முறை,
தீவிரவாதம்..
ஒழிக்க வேண்டுமாய்
பிரதமரின் ஆவேசப் பேச்சு!
ஆவேசம்.. பேச்சில் மட்டும்!!
அமைதியை வலியுறுத்தி
எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!
ஊர்வலத்தில்.. அடிதடி!!
எதற்கென தெரியாமலே
வாங்கிய மிட்டாய்க்கு
விசுவாசமாய்..
கொடிக்கு சல்யுட் அடிக்கும்
எம் குழந்தைகள் -
தெருக்களில் நிர்வாணமாய்!!
அரசு அலுவலர்க்கோ -
டிவி பார்த்து
பொழுதை கழித்திட..
வார நாட்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை!!
இது போன்ற நாட்களில்
மட்டுமே - நினைவுக்கு வரும்
அந்நாள் தியாகிகள்...
இன்றைய சூழலில் சொல்வதானால்..
பிழைக்க தெரியாதவர்கள்!!!
உடன்பிறக்கா சகோதரர்
அயல்தேசத்தில் இன்னல் பட..
எதுவும் செய்ய இயலாத
பேடிகளாய் நாம்!!
எங்கோ ஒலிக்கும் பாடல் கேட்டு..
எனக்குள் சிரித்து கொள்கிறேன்!
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே...
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே"!!!!





January 23, 2009

முதல் காதல்!!!


நான் அப்போ எட்டாவது கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். நாங்க இருந்த ஏரியா பேரு சோலைஅழகுபுரம். நான் இருந்த காம்பவுண்ட்ல மொத்தம் இருபது வீடு. என்னோட வாழ்க்கைல ரொம்ப முக்கியமான விஷயத்த நான் கத்துக்கிட்டு இருந்த டைம் அது. அது தான்பா, பிகர் மடிக்கிறது. நம்ம தோழர் ஒருத்தன் இருந்தான். பேரு குமாரு. நாங்க செல்லமா அவன வீனா கூனானு தான் கூப்டுவோம். இந்த மேட்டர்ல பெரிய ஆளு. ஆறில் இருந்து அறுபது வரை.. யாரையும் விட மாட்டான். அவன் தான் நம்மளோட மானசீக குரு.

ரொம்ப ஜாலியா போயிட்டு இருந்த நம்ம லைப்ல திடீர்னு ஒரு ட்விஸ்ட். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு புதுசா ஒரு குரூப் குடி வந்துச்சு. அய்யர் வீடு. ரெண்டு பொம்பள பிள்ளைங்க. நம்ம பசங்களுக்கு நல்ல நாள்லயே சூடு ஏறும். இதுல ரெண்டு பொம்பள பிள்ளைனு சொன்னா கேக்கவா வேணும். நம்ம தானைத் தலைவர் குமார் அரும்பாடுபட்டு அவங்கள பத்தின தகவல்கள கொண்டு வந்தான். மூத்த பொண்ணு காலேஜ் முத வருஷம். ரெண்டாவது பொண்ணு +2. ஏன்டா மாப்ள, ரெண்டுமே நம்மள விட பெரிய புள்ளைகளா இருக்கேனு நான் சொன்னதுக்கு நம்மாளு ஒரு மொற தான் மொரச்சான். நான் அப்புறம் ஒண்ணுமே கேக்கலியே. தலைவன் எவ்வழி.. நாமும் அவ்வழி.. ஹி ஹி ஹி..

அவங்க ரெண்டு பேர்ல சின்ன பிள்ளைக்குத்தான் நெறைய ரசிகர்கள். சும்மா தள தளனு ரோஸ் கலர்ல கும்முன்னு இருப்பா. அவள கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரதுக்கே ஒரு குரூப் இருந்தாங்க. அவகிட்ட யார் பேசினாலும் நல்ல பேசுவா. அதனால பசங்க எல்லாம் அவ பின்னாடி தான் லோ லோனு சுத்திகிட்டு இருந்தானுங்க. அக்காவுக்கு கொஞ்சம் மாறுகண். அவ யார் கிட்டவும் சிரிச்சு பேசி நாங்க பார்த்ததே இல்ல. ஆனா எனக்கு என்னமோ அவள ரொம்ப பிடிச்சு இருந்தது. பசங்க எல்லாம் என்ன கிண்டல் பண்ணினாலும் நான் கண்டுக்கல. எனக்கு பிடிச்சிருக்கு, அவ்ளோ தான் போங்கடானு ரொம்ப தீவிரமா அவள பார்க்க ஆரம்பிச்சேன்.

காலைல நாம ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியும் சரி, திரும்பி வந்ததுக்கு அப்புறமும் சரி, அவள பார்த்தா தான் வேலை ஓடும்னு ஆகி போச்சு. ஜன்னல் வழியா ஒரு லுக்கு. அவ அந்த இடத்துல இருந்து நம்மள ஒரு தடவ பார்த்துட்டானா அப்படியே பறக்குற மாதிரி ஒரு பீலிங். அட கருமமே, இதுதான் காதலானு குஷி ஆகிட்டேன். என்னடா , இவ்ளோ சீரியஸா பேசுறானேன்னு பசங்க கூட கொஞ்சம் பயந்துட்டானுங்க . நாம அதெல்லாம் கண்டுக்கவே இல்லையே. லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சுல. டெய்லி அவள ஜன்னல் வழியா பார்த்துகிட்டே பொழப்ப ஓட்டிட்டு இருந்தேன். அவ நம்மள பார்க்கிறாலானு கூட தெரியாம நம்ம லவ் பயங்கர ஸ்பீடா டெவலப் ஆகிட்டு இருந்தது.

அந்த நாள், இன்னைக்கு வரைக்கும் என்னால மறக்க முடியல. என்னைக்கும் போல சாதரணமாதான் தொடங்குச்சு. காலைல போகும்போது நம்ம புள்ளைய பார்க்க முடியல. ஒரு பீலிங்கோடதான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தேன். சாயங்காலம் வேகம் வேகமா டிரஸ் மாத்திட்டு அவ வீட்டுக்கு முன்னாடி போய் பட்டறைய போட்டாச்சு. தரிசனம் கிடைக்குமானு பார்த்திட்டு இருந்தப்ப திடீர்னு கதவ திறந்துகிட்டு அவளே வந்தா. மொகத்தில அப்படி ஒரு கோவம். "நானும் டெய்லி பார்த்துகிட்டே இருக்கேன். போறப்ப வரப்ப எல்லாம் இங்கயே பார்த்துகிட்டு இருக்க. நீ என்ன பெரிய இவனா? இங்க என்ன அவுத்து போட்டா ஆடிட்டு இருக்கோம்? ஒழுங்கா இருந்துக்க ". அவ்ளோ தான். உள்ளே போய் கதவ சாத்திட்டா. எனக்கு உள்ள நான் கட்டி வச்சு இருந்த காதல் கோட்டை ஒரே நிமிசத்துல சுக்கு நூறா உடஞ்சு போச்சு. அவளால இப்படி பேச முடியும்னு நான் நெனச்சு கூட பார்க்கல. சரி சரி, சுனா பானா, யாரும் பார்க்கலை, விடு விடுன்னு எஸ்கேப் ஆகிட்டேன். இப்படியாக என்னோட முதல் காதல் சொல்லாமலேயே தோத்து போச்சு. பசங்க அப்புறமா கேட்டப்ப நான் சொன்ன பதில், அதெல்லாம் ஒரு ஆளாடா? ஹி ஹி ஹி.. கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைல!!!

(இது ஆரம்பத்துல எழுதுனது.. மறுபடியும் போட்டிருக்கேன்.. )

January 20, 2009

நான் செத்த பிறகு வா..!!!

அந்த ஊரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முனிவர் அவர். அவரை பார்க்க அரசன் ஒருவன் வந்திருந்தான்.

"முனிவரே, நான் இந்த நாட்டின் அரசன். நான் சொல்லும் வேலைகளை செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனாலும் எனக்கு மனதில் நிம்மதி இல்லை. நான் ஞானம் பெற வழி சொல்லுங்கள்" என்றான்.

முனிவர் அவனை உற்று நோக்கி விட்டு சொன்னார். " மன்னா, நான் செத்த பிறகு வா.."

மன்னனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. "நாம் இந்த நாட்டின் அரசன்.. நம்மை ஒரு சாதாரணமான முனிவர் மதிக்காமல் பேசுவதா.." ஆனாலும் அவனால் முனிவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏதும் பேசாமல் திரும்பி சென்று விட்டான். இரவு முழுவதும் அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மறுநாள் எழுந்து கோபம் தணிந்தவனாக முனிவரை சென்று பார்த்தான்.

"தவசீலரே.. தாங்கள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரிய வில்லை.. நான் செத்த பிறகு வா என்று சொன்னீர்களே.... தாங்கள் இறந்து விட்டால் எனக்கு எப்படி அறிவை போதிக்க முடியும்.. தயவு செய்து விளக்குங்கள்" என்று பொறுமையாக கேட்டான்.

"மன்னா.. நேற்று நீ பேசும்போது உனக்கு நான் இந்த நாட்டின் அரசன் என்னும் அஹங்காரம் அதிகமாக இருந்தது. எனவே தான் நான் என்னும் உன்னுடைய மமதை அழிந்த பிறகு வா என்று சொன்னேன்.." என்றார் முனிவர். அரசன் தன் தவறை உணர்ந்து கொண்டான். நான் என்பதை துறந்து ஞானம் அடைந்தான்.

***********

குருவின் நெருங்கிய சிஷ்யன் அவன். ஒரு நாள் அவனுக்கு பெரிய சந்தேகம் வந்தது. "நான் பெரிய அறிவாளி ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?". நேராக போய் குருவிடம் கேட்டான். குரு ஒன்றும் சொல்ல வில்லை. அருகிலும் இருக்கும் கோப்பையையும் தண்ணீர் கூஜாவையும் கொண்டு வர சொன்னார். இப்போது தண்ணீரை கோப்பையில் ஊற்ற தொடங்கினார். சற்று நேரத்தில் கோப்பை நிரம்பி வழிய தொடங்கியது. சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் குருவே..."

முனிவர் சிரித்து கொண்டே சொன்னார்." கோப்பையில் ஒன்றும் இல்லாதவரை அது நிரம்பும். எப்போது அது நிரம்பி விட்டதோ, அதன் பின்னர் அதில் ஊற்றிய நீரெல்லாம் வீணாய் தான் போனது. அதே போல, நீ என்று வரை உனது உள்ளத்தை எந்த களங்கமும் இல்லாமல் வெறுமையாய் வைத்து இருக்கிறாயோ, அன்று வரை நீ வாழ்வில் நிறைய கற்று கொள்ளலாம். எனக்கு எல்லாம் தெரியும் என்று நீ எண்ணினால், அதன் பின்னர் வெளியே வழிந்தோடும் நீர் போல உனக்குள் எதையும் செலுத்த முடியாது. இது தான் நீ கேட்ட கேள்விக்கான பதில்". சிஷ்யன் மனமும் தெளிவு அடைந்தது.

************

சமீபத்தில் ரசித்தது...


அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார்.

பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க.. ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் கம்முனாட்டி திருடிட்டான்.."

இத எங்க போய் சொல்ல...!!!

January 19, 2009

படிக்காதவன் - விமர்சனம்!!!



முந்தி எல்லாம் நம்மாளுங்க தெலுங்கு படத்த கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்போம். நாலு பாட்டு, ரெண்டு சண்டை, ஒரு மழை டான்ஸ்... இதெல்லாம் இல்லாம அவங்களால படம் எடுக்க முடியாதுன்னு. ஆனா இனிமேல் அவங்க தான் நம்மள கிண்டல் பண்ணுவாங்க போல. வர வர நம்ம மக்கள் எடுக்கற படமெல்லாம் தெலுங்கு படத்தையே தோக்கடிச்சுரும் போல இருக்கு. அதுல லேட்டஸ்ட் தான்.. படிக்காதவன். கொஞ்சம் வின்னர், கொஞ்சம் பொல்லாதவன், ரன் கிளைமாக்ஸ் எல்லாத்தையும் ஒண்ணா கலந்து அடிச்சிருக்காங்க.


அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையா தனுஷ். வீட்ல அவர் மட்டும் தான் சரியா படிக்கல. நல்லா படிக்கற ஒருத்திய கல்யாணம் பண்ணினா உன் வாழ்க்கைல பெரிசா வரலாம்னு நண்பர்கள் கொடுக்குற உலகமகா அட்வைஸ கேட்டு ரோட்டுல போறப்ப லிப்ட் கேக்குற தமன்னாவ லவ் பண்றாரு. அந்தம்மா ஒரு பெரிய ரவுடியோட(சுமன்) மக. சொந்த ஊருல இருந்தா அவள கொன்றுவாங்கன்னு சுமன் மெட்ராஸ் அனுப்பி வச்சா அது லவ் பண்ணிக்கிட்டு திரியுது. ஒரு பிரச்சினைல மறுபடியும் சொந்த ஊருக்கே போறாங்க தமன்னா. அங்க சுமனோட எதிரி ஷாயாஜி ஷிண்டே ஆளுங்க கொல்ல வரும்போது தனுஷ் புகுந்து காப்பத்திராரு. அதனால தனுஷ் கல்யாணம் பண்ண தமன்னாவுக்கு சுமன் சமாதம் சொல்றாரு. இதுக்கு இடையில திருநெல்வேலி தாதா அதுல் குல்கர்னி தனுஷ கொல்ல ட்ரை பண்றாரு. கடைசியில என்ன ஆகுதுங்கறது தான் படம்.


தனுஷுக்கு பழக்கமான ரோல். இன்னும் எத்தன படத்துக்குத்தான் அப்பன மதிக்காத பிள்ளையா நடிப்பாரோ. ஆனாலும்.. நல்லா ஆடுறார், ஒரே அடியில அத்தன பேரையும் அடிச்சு நொறுக்குகிறார். கொடுத்த வேலைய கரெக்டா செஞ்சிருக்கார். கிளைமாக்ஸ்ல அதுல் குல்கர்னி கூட சண்ட போடுறப்ப கொடுக்குறாரு பாருங்க ஒரு எபெக்ட்.. பழைய காதல் கொண்டேன் மாதிரி.. சூப்பர். தமன்னா, வேஸ்ட். அத பார்த்தா நம்ம ஊர் பொண்ணு மாதிரியே இல்ல. மைதா மாவ பெசஞ்சு வச்சா மாதிரி இருக்கு. நாலு பாட்டுக்கு ஆடிட்டு போகுது. அவ்ளோ தான். விவேக் இண்டெர்வல் அப்புறமா தான் வரார். ரொம்ப நாள் கழிச்சு சிரிக்க வச்சு இருக்கார். ஆனா இந்த ரோல் வடிவேலுக்காக எழுதுனதுங்கறது நல்லா தெரியுது.


தமிழ் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செஞ்சு ஒரு வில்லனோட நிப்பாட்டுங்க சாமிகளா. ஒருத்தரையே தாங்க முடியாது. இந்த படத்துல நாலு பேரு. அதுலயும் ஷாயாஜி ஷிண்டே.. முருகா.. அவரோட கெட்டப்பும் பேச்சும்.. கெரகம்.. அதுல் குல்கர்னி கடைசி ஒரு சண்டைக்கு. நல்லா எடுத்திருக்காங்க. காதல் தண்டபாணி முத சீன்லையே செத்து போறாரு. சுமன் கொஞ்சம் சௌன்ட் விட்டுட்டு பாதிலேயே ஆஃப் ஆகிடுராறு.


படத்துக்கு இசை மணிஷர்மா. அவரோட தெலுங்கு பாட்டெல்லாம் தட்டி எடுத்து மெட்டு போட்டிருக்காரு. பரவாயில்லைதான். கடைசியா சுராஜ். படத்தோட இயக்குனர். சாப்பாட்டுல மசாலா சேத்துக்கலாம். ஆனா மசாலாவையே சாப்பாடா கொடுத்தா.. முடியாது ராசா.அடுத்த படமாவது கொஞ்சம் பாக்குற மாதிரி எடுங்க.



படிக்காதவன் - பெயில்.

January 7, 2009

அவனும் அவளும்...(4)!!!

அன்று அவளுடைய பிறந்த நாள். முதல் வாழ்த்து அவனுடையதுதான். காலையில் இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தார்கள். அவன் அவளிடம் கேட்டான்.
"என்ன வேண்டிக்கிட்டீங்க சாமிக்கிட்ட..?"
"எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லனுமா.. முடியாது.. போடா.."
"அட.. என்கிட்டே சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறியாம்.. சும்மா சொல்லும்மா.."
"எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்... "
"வேற?"
"இந்த வருஷம் மாதிரியே ஒவ்வொரு வருஷமும் எனக்கு வர முதல் வாழ்த்து உன்னோடதா தான் இருக்கணும்..அது வேண்டிக்கிட்டேன்"
"அடேங்கப்பா.. அப்புறம்?"
"நான் என்ன கதையா சொல்றேன்? நல்லா உம் கொட்டி கேட்குற..?"
"சரி.. மேல சொல்லுடிம்மா.. "
"கடைசியா.. நீ நல்லா இருக்கணும்டா.. எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா.. கடைசி வரைக்கும் நீயும் நானும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.. அவ்ளோதான்.."அவள் குரல் தழுதழுத்து விட்டது.
"அம்மாடி.. என்னம்மா இது.. கண்டிப்பா இருப்போம்மா.. சரியா.." அவன் அவளை தேற்றினான்.
"சரி.. சரி.. நீ என்ன வேண்டிக்கிட்ட.. சொல்லு.."
"வேண்டாம்டிமா.."
"எனக்கு ஒரு நியாயம்.. உனக்கு ஒண்ணா? சொல்லு..."
"அது.. நான் அப்புறமா சொல்றேனே..."
"ச்சுப்.. சொல்லுன்னா சொல்லணும்.. இல்லனா நான் கோபக்காரி ஆகிடுவேன்.. சொல்லு"
"நான் கடவுள வேண்டிக்கிட்டதேல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். சாகுற வரைக்கும் நாம இப்படியே இருக்கணும். என்னைக்காவது சாவு வந்தா.. எனக்கு முன்னாடி நீ செத்து போய்டணும். என்னால உன்னோட நினைவுகளை மட்டும் வச்சிகிட்டு வாழ்ந்திட முடியும். ஆனா.. உனக்கு முன்னாடி நான் போய்ட்டா.. அத உன்னால தாங்க முடியாதுடி.. நீ என்மேல அந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும்டிமா..." சொல்லி முடித்தபோது அவன் கண்களில் கண்ணீர் திரண்டு இருந்தது.

அவளால் எதுவும் பேச முடியவில்லை. வாயடைத்து போய் இருந்தாள். சிறிது நேரத்திற்கு பின் அவனை கட்டி கொண்டாள். அவளுடைய அழுகை வெகு நேரத்திற்கு பின் தான் ஓய்ந்தது.
அன்று அவன் அவளை பல இடங்களுக்கு கூட்டிப் போனான். அன்றிரவு அவன் அவள் மடியில் நிம்மதியாக தூங்கினாள்.
இது நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு, அவள் ஒரு பேருந்து விபத்தில் செத்துப்போனாள்.அவன் பைத்தியம் போல் ஆனான். தற்கொலைக்கு முயன்று அவன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டான். இன்றும் அவள் நினைவுகளில் நடைபிணமாக வாழ்ந்து வருகிறான்.
(இது என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்)
lum

January 6, 2009

கடவுள்... சில கேள்விகள்!!!

வெகு நாட்களாகவே என் நெஞ்சை நிரடிக் கொண்டிருக்கும் கேள்வி இது. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா? முதலிலேயே சொல்லி விடுகிறேன், நான் நாத்திகவாதி அல்ல. ஆனால் நான் ஒரு குழப்பவாதி. உண்மை என்ன என்று அறிந்து கொள்ள ஆசைப்படும் சாதரண மனிதன் நான். நாம் பிறக்கும் இடத்தை (மதத்தை) பொறுத்தே நம்முடைய குணாதிசயம் மற்றும் நம்பிக்கைகள் உருவாகுகின்றன. ஆனால் வளரும் பருவத்தில் நமக்கு தோன்றக் கூடிய பல கேள்விகள் இந்த அடிப்படை நம்பிக்கைகளையே சந்தேகப்பட வைக்கின்றன. என்னுடைய கேள்விகள் இவை தான்.


*நம்மை எல்லாம் படைத்த, நமக்கும் மேலான சக்தி தான் கடவுள் என்றால் அவர் எங்கே இருக்கிறார்?
*இந்த உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களை படைத்த இறைவன் எந்த வடிவில் இருப்பார்?
*உயிர்களை படைத்த கடவுள் ஏன் அவற்றின் நடுவே உயர்வு தாழ்வுகளை படைக்க வேண்டும்?
*கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு என தனியாக கோயில்கள் எதற்காக?
*நம்முடைய ஒவ்வொரு செயலுமே கடவுளுக்கு தெரியும் என்றால் எதற்காக நம்மை பாவம் செய்ய விட வேண்டும். தவறு என்ற ஒன்று இருந்தால் தானே பிரச்சினை. நம்மை எல்லாரையும் நல்லது மட்டுமே செய்ய வைக்கலாம் அல்லவா?
*எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மை கடவுள் காத்ததாக இருந்த காலம் போய் இன்று நாம் கடவுளை காப்பாற்ற வேண்டி உள்ளது ஏன்?
(சமீபத்தில் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சிவம் என்னும் நாவலை படித்தேன். அதில் உள்ள கருத்துக்களையும் இங்கு சேர்த்துள்ளேன் )


என்னுடைய பாட்டியைப் போல் கடவுள் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் மிகவும் கம்மி. ஆனால் இன்று வரை வாழ்வில் அவர் கஷ்டங்களை மட்டுமே சந்தித்து கொண்டு வருகிறார். ஐம்பது ஏக்கர் ஏலத் தோட்டத்திற்கு அதிபதியாக இருந்தவரை அவருடைய தம்பியே ஏமாற்றி விட்டார். ராணி போல் வாழ்ந்தவர் இன்று எங்கள் வீட்டில் ஓர் ஓரமாக படுத்து கிடக்கிறார். எல்லாம் கடவுள் நமக்கு வைக்கிற சோதனை தாண்டா தம்பி என அவர் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள என் மனம் மறுக்கிறது. நம்பும் மனிதர்களை காப்பாற்றாத கடவுள் எதற்கு என்று தான் தோன்றுகிறது.


இன்று உலகில் நடக்கும் பல பிரச்சினைகளுள் மதம் சம்பந்தப்பட்டவையே அதிகம். உன்னுடைய கடவுள் பெரிதா, இல்லை என்னுடைய கடவுள் பெரிதா என்று நடந்த போர்களில் உயிர் இழந்த மக்கள் பலர். தன் பெயராலேயே, தன் கண் முன்னாடியே, தன்னுடைய குழந்தைகள் அடித்து கொண்டு சாவதை தடுக்க முடியாவிட்டால் அந்த கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஒவ்வொரு மதமும் சொல்வது என்ன... அன்பு ஒன்று மட்டுமே உலகில் பிரதானம் என்பது தானே. ஆனால் அது உண்மையாக பின்பற்ற படுகிறதா? அப்படி என்றால், இந்த மதங்களின் மூலகாரணமாக இருக்க கூடிய கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால் பிரச்சினையே இருக்காது அல்லவா.


இந்த கேள்விகள் என் ஒருவனிடம் மட்டும் இல்லை. நம் அனைவர் இடத்திலும் உள்ளது. ஆனாலும் அதை வெளிப்படையாக கேட்க தயங்குகிறோம். காரணம் - பயம். ஒரு வேளை.. கடவுள் இருந்து விட்டால்?.. நாம் தண்டிக்க படுவோமோ என்னும் பயம். தண்டித்தால் அது கடவுளே இல்லை என்பது தான் என் எண்ணம். அந்த பயத்தால் தான் அறிவியல் இவ்வளவு வளர்ந்த போதிலும் கோவில்களுக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தசாவதாரத்தில் கமல் கடைசியில் சொல்வார்..."நான் கடவுள் இல்லை என்று சொல்ல வில்லை.. ஆனால் இருந்தால் நன்றாக இருக்கும்". என்னுடைய கருத்தும் அதுதான்!!!

va

January 3, 2009

நான் கடவுள் - பாலா..!!!


கிட்டத்தட்ட மூன்று வருட காலத்திற்கு பின் தரிசனம் தரத் தயாராகி விட்டார் கடவுள். பாலா என்னும் அற்புதமான இயக்குனரின் கனவு திரையில் வெளியாகும் காலம் வந்து விட்டது. பல தடைகளை தாண்டி இந்த பொங்கலுக்கு வெளியாகிறது பாலாவின் "நான் கடவுள்". இந்த படத்தை ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்சினைகள். முதலில் நடிப்பதாக இருந்த அஜித் பல பிரச்சினைகளால் விலகிக் கொள்ள பின்னர் முடிவானவர் தான் ஆரியா. அதே போல் தான் கதாநாயகியும். பாவனா, கிருத்திகா என ஒரு நீண்ட பட்டியலே நடிக்க வந்து இறுதியாக பூஜா கதாநாயகியானார்.மூன்று வருட தவம் போல இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் பாலா.

பாலா என்னும் தனிப்பட்ட மனிதரை எனக்கு அவ்வளவாக பிடிக்காது. நான் ஒரு தீவிரமான அஜித் ரசிகன் என்பது தான் இதற்கு காரணம். "நான் கடவுள்" படத்தில் இருந்து விலகுமுன் அஜித் பட்ட கஷ்டங்களால் எனக்கு பாலா மீது பயங்கரமான கோபம் உண்டு. ஆனாலும் பாலா என்னும் படைப்பாளியை நான் பெரிதும் மதிக்கிறேன். தமிழில் அவரைப் போல் இயக்குனர்கள் வெகு குறைவு. மனிதர்களின் உணர்வுகளை காட்சிபடுத்துவதில் பாலாவுக்கு இணை அவர்தான். பத்து வருடங்கள். நான்கு படங்கள். ஆனால் ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். அது தான் பாலா.

சேது, நந்தா, பிதாமகன் என அவரது மூன்று படங்களுமே வெவ்வேறு தளங்களை பற்றியவை. சேது - காதலை கொண்டாடியது. நந்தா - தாய் மகனுக்கான உறவைப் பற்றியும், பிதாமகன் - நட்பை அடிப்படையாகக் கொண்டும் வெளிவந்தன. எனக்கு விவரம் தெரிந்த பிறகு முதல் முறையாக ஒரு படத்தில் அழுதேன் என்றால் அது சேதுவின் கடைசி காட்சியில் தான். அவளுடைய காதலை வலியுறுத்த காதலி இறந்து போகிறாள். அவளுடைய துயரங்கள் அத்துடன் முடிந்து போகின்றன. ஆனால் அவளுடைய நினைவுகளை சுமந்து கொண்டு மீண்டும் பாண்டி மடத்துக்கே போகும் விக்ரமின் முடிவு நெஞ்சை கனக்க செய்தது.இளையராஜாவின் இசையில் இன்னும் மறக்க முடியாத படம் சேது.

சேது தந்த நம்பிக்கையோடு, மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நந்தாவுக்கு போனேன்.அதுவும் அஜித் நடிக்க மறுத்து பின்பு சூரியா நடித்த படம். ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தால் படம் என்னவோ போல் இருந்தது. ஒன்றுமே பிடிக்கவில்லை. நல்லவேளை தல தப்பிச்சுட்டருடா என்று சொல்லியவாறு வீட்டுக்கு வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு தாயே தன் மகனை கொல்வாளா.. என்ன படம் இது என வருவோர் போவோர் எல்லோரிடமும் புலம்பி கொண்டிருந்தபோது, நண்பன் கேட்டான். "என்னடா படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டு ரெண்டு நாளா அதப்பத்திய புலம்பிக்கிட்டு இருக்க? " அப்போதுதான் எனக்கே உரைத்தது. நந்தா என்னை எந்த அளவுக்கு பாதித்தது என்று நானே பிறகு தான் உணர்தேன். சூர்யா என்ற நல்ல நடிகரை வெளிக்கொணர்ந்ததும் பாலா தான். அதன் பிறகு இன்றுவரை அந்த படத்தை இருபது தரமாவது பார்த்து இருப்பேன்.

பிதாமகன் - நம்பவே முடியாத ஒரு பாத்திரம்தான் விக்ரம் நடித்த சித்தன். ஆனாலும் கேள்வி கேட்காமல் நம்பும் வகையில், அவன் மேல் நமக்கு பரிதாபம் பிறக்கும் வண்ணம் திறமையாக கையாண்டு இருப்பார் பாலா. சூர்யா, விக்ரம் இடையிலான நட்பை எளிதாக ஒரே பாடல் காட்சியில் ( இளங்காற்று வீசுதே..) புரிய வைத்து விடுவார். சூர்யா சாகும்போது அழுதது சித்தன் மட்டும் அல்ல, நாமும் தான்.

எல்லாமே மிகவும் கனமான, வாழ்வின் சோகத்தை சொல்கிற படங்கள். ஆனால் எல்லா படங்களிலுமே நகைச்சுவை அதிகமாக இருக்கும். அதுதான் பாலாவின் தனித்திறமை.கடைசியாக இனிமேல் வர இருக்கும் நான் கடவுள். படத்தின் விளம்பர ஸ்டில்களை பார்த்தாலே மிரட்டலாக இருக்கின்றன. ஆர்யாவின் தோற்றமும், அவரது போஸ்களும் ரொம்பவே வித்தியாசம். நான் இன்னும் பாடல்களை கேட்கவில்லை. ஆனால் கேட்ட நண்பர்கள் எல்லாருமே பாடல்கள் அபாரம் என்றார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாவது உலகம் நாவல் தான் இந்த படத்தின் கதைக்கு கரு என்கிறார்கள். வாழ்வில் புறக்கணிக்கப்பட்ட, உதாசீனம் செய்யப்படும் மக்களை பற்றிய படம் என்றும் சொல்கிறார்கள். பாலாவுடனான மற்றுமோர் அனுபவத்துக்கு காத்து இருக்கிறோம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா "நான் கடவுள்"? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

January 2, 2009

அவனும் அவளும்...(3)!!!


"நீ கவிதை எல்லாம் கூட எழுதுவியா?" அவனுடைய பழைய டைரி ஒன்றை புரட்டிக் கொண்டு இருந்தபோது அவள் கேட்டாள்.

"ம். அப்பப்போ. சும்மா தோணுனத எழுதி வைப்பேன்"

"அடேங்கப்பா. எல்லாம் ஒரே காதல் கவிதையால்ல இருக்கு"

"தபூஷங்கர்னா ரொம்ப பிடிக்கும். விகடன்ல அவரோட கவிதைகள படிச்ச எபக்ட் மேடம்"

"அப்ப நீங்களும் பெரிய கவிஞர் தான்னு சொல்லுங்க"

"சேச்சே.. அப்படில்லாம் இல்லம்மா.. பட்... நான் உனக்குத்தான் நன்றி சொல்லணும். நான் இந்த கவிதைகள எழுதுறேன்னா அது உனக்காகத்தானே. சோ.. தாங்க்ஸ்.. "

"அதுக்கும் நான்தானா.. என் நேரம்" அவள் சலித்து கொண்டாள்.

அவன் சிரித்து கொண்டு இருந்தான்.

அவன் அவளுக்காக எழுதிய கவிதைகளில் சில...

தொடங்கினால்
முடிந்து விடும்
என்பதாலேயே...
உனக்கான - என்
கவிதைகள்
எழுதப்படாமலே
இருக்கின்றன!!!

*******

நீ அருகில்
இல்லாத
நேரங்களில் கூட
என் வீடெங்கும்
நிரம்பி
வழிகின்றன...
உன் நினைவுகள்!!!

*******

ஏன் என்னைப்
பார்த்து அடிக்கடி
சிரிக்கிறாய் என
நான் உன்னைக்
கேட்டபோது -
"ச்சும்மா" என்று
சொல்லி.. அதற்கும்
சிரித்துச் சென்றாய்!!!

*******

நீ யார்
எனத் தெரியாத
நிலையிலும்....
நீ - என்
எல்லாமுமாக
இருக்கிறாய்..!!!

(இது அவன் அவளை பார்ப்பதற்கு முன் எழுதியது)!!!

நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை!!!


2009- புதிய ஆண்டு பிறந்து விட்டது. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று காலை கணினியின் முன் வந்து அமர்ந்தால் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

அதிர்ச்சி 1: முதல் வேலையாக என் வலைப்பூவை திறந்தேன். தங்களை ஒருவர் பின்தொடர்கிறார் என்று இருந்தது. இது நமது தளம் தானா என சரிபார்த்துக் கொண்டேன். உண்மை தான். முதல் முறையாக இணையத்திலிருந்து ஒரு தோழர் எனது எழுத்துக்களை படித்திருக்கிறார். சந்தோசம் தாங்க வில்லை. நம்மளையும் நம்பி ஒருத்தரா? என்று வியந்து போனேன். நாம் நமது திருப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்றபோதிலும், இன்னொருவர் அதை படித்து கருத்து கூறும்போது நம்மையும் அறியாமல் ஒரு குதூகலம் உண்டாவதை உணர்ந்தேன். அன்பர் பிரேம்குமாருக்கு நன்றி.

அதிர்ச்சி 2: இரண்டு நாட்களுக்கு முன் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். நான் அவருடைய எழுத்துக்களை விரும்பி வாசிப்பது உண்டு. அவருடைய எழுத்துக்கள் பற்றியும், சமீபத்தில் அவர் கூறி இருந்த சில விஷயங்கள் பற்றியும் என்னுடைய கருத்துக்களை சொல்லி இருந்தேன். சாருவின் வலைத்தளத்தை நான் தினமும் படிக்கும் பழக்கம் உண்டு. இன்றும் அதே போல் எதேச்சையாக திறந்தால், என்னுடைய கடிதம் வெளியிடப்பட்டு அதை ஒட்டிய சாருவின் விளக்கமும் இருந்தது. அட போங்கடா.. முடியல. மிகவும் குஷியாகிப் போனேன். நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

புத்தாண்டு பிறந்ததை மாணவ நண்பர்களோடு கேக் வெட்டி கொண்டாடினேன். ஆக மொத்தத்தில் இந்த புத்தாண்டு ரொம்ப இனிதாகவே பிறந்திருக்கிறது. எங்கும் அமைதியும் சந்தோஷமும் நிலவட்டும். தோழர்கள் அனைவருக்கும், மீண்டும் ஒரு முறை... என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!