January 31, 2009

வெண்ணிலா கபடி குழு!!!




ஏழு நண்பர்கள். அவர்களை இணைக்கும் பாலமாய் கபடி விளையாட்டு. துரோகம் - வெற்றி. ஒரு காதல். ஒரு சோகம். இதுதான் வெண்ணிலா கபடி குழு. லகான், சக் தே இந்தியா, சென்னை 6000028 வரிசையில், விளையாட்டை மையமாக கொண்டு வந்திருக்கும் இன்னொரு படம். பிரம்மாண்டம் என்னும் பெயரில் கோடிகளை கொட்டவில்லை. கையை காலை தூக்கினால் விஷ் விஷ் என்று சத்தம் வரும் கதாநாயகனும் இல்லை. டாய் என்று தொண்டை கிழிய சவால் விடும் வில்லன்கள் இல்லை. இவை எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல படம் தர முடியும் என்பதை இந்த படம் நிரூபிக்கறது. சாதாரண கதையை எடுத்து கொண்டு தெளிவான திரைக்கதையின் மூலம் படத்தை பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.


சிறு வயதிலே தந்தை இறந்து போக பண்ணையத்துக்கு வேலைக்கு போகிறான் மாரிமுத்து. அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஒரே பொழுதுபோக்கு - கபடி. அவர்களுடைய அணியின் பெயர்தான் வெண்ணிலா கபடி குழு. எங்கு போனாலும் தோல்வி ஒன்றை மட்டுமே காணும் வழக்கம் கொண்டவர்கள். திருவிழாவுக்கு ஊருக்கு வரும் பெயர் தெரியாத மதுரை பெண்ணின் மீது காதல் கொள்கிறான் மாரிமுத்து. அவள் அடுத்த திருவிழாவிற்கு வருவதாக சொல்லிப் போகிறாள்.சொந்த ஊரில் நடக்கும் போட்டியிலும் பிரச்சினை ஆகி விடுகிறது. ஊரார் அனைவரும் நண்பர்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் எனத் திட்டுகிறார்கள். கடைசி முயற்சியாக மதுரையில் நடக்கும் மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார்கள். வேறொரு அணி விலகியதால் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுடைய திறமையை உணர்த்தி போராட வைக்கிறார் கபடி கோச்சாக இருக்கும் கிஷோர்குமார். கடைசியில், "உயிரைக் கொடுத்து" ஜெயிக்கிறார்கள். மாரியின் பெயர் தெரியா காதல் என்ன ஆனது.. பெரும் அதிர்ச்சியோடு மனதை கனக்க செய்யும் கிளைமாக்ஸ் உடன் படம் முடிகிறது.


கிட்டத்தட்ட படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள் தான். மாரியாக வரும் விஷ்ணு நாம் அன்றாடும் பார்க்கும் முகங்களில் ஒன்றைப் போல்தான் இருக்கிறார். நண்பர்களாக வரும் அனைவருமே இயல்பாக நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக, பாண்டியாக வரும் நபரும் அப்புக்குட்டியும் பிஸ்து கிளப்பி உள்ளார்கள். சரண்யா மோகன் பாவாடை தாவணியில் பார்க்க அழகாக இருக்கிறார். முதல் பாதியோடு காணாமல் போகிறார். கோச்சாக வரும் கிஷோரின் நடிப்பு அருமை. அவருடைய உருவமும் திருநெல்வேலி பாஷையும் கச்சிதமாக பொருந்துகின்றன. இரண்டாவது பாதியில் மாரியை விரும்பும் பெண்ணாக வருவது யாரென்று தெரியவில்லை. விளக்கி வைத்த குத்து விளக்கு போல அழகாக இருக்கிறார். சின்ன சின்ன பாத்திரங்களுக்கு கூட சரியான ஆட்களை பயன்படுத்தி உள்ளனர்.


இயக்குனர் படத்தை ரசித்து எடுத்திருக்கிறார். படத்தில் சொல்லும்படியான காட்சிகள் நிறைய உள்ளன.

++ சரண்யா அறிமுகம் ஆகும்போது சைக்கிளுக்கும் பஸ்ஸுக்கும் நடக்கும் போட்டி..

++ கண்கள் கட்டிய நிலையில் சரண்யாவின் கால் கொலுசொலி கேட்டு உரியடிப்பது..

++ சரண்யா பிரிந்து போகும் இடைவேளை...

++ முதல் போட்டியின் இடைவேளையில் கிஷோர் நண்பர்களிடம் இருந்து பணத்தை வாங்கி கொண்டு ஜெயித்தால் தான் ஊருக்கு போக முடியும் என சொல்லும் காட்சி..

++ கபடி போட்டிகளை படம் ஆக்கியிருக்கும் விதம்..

படத்தில் குறைகள் இல்லாமலும் இல்லை.

++ முதல் பார்வையிலேயே யாரெனத் தெரியாமலே காதல் வருவது..

++ வலிந்து திணிக்கப் பட்டிருக்கும் திருவிழா பாடல்..

++ அவ்வப்போது எட்டிப்பார்க்கும் இரட்டை அர்த்த வசனங்கள்..

++ கிஷோர் நண்பர்களிடம் பேசும் காட்சி அப்படியே சக் தே இந்தியா படத்தில் இருந்து உருவப்பட்டு இருப்பது..

++ நீள நீளமான காட்சிகளால் மெதுவாக நகரும் முதல் பாதி..

செல்வகணேஷ் தமிழ் இசையுலகத்திற்கு நல்ல வரவு. "லேசா" பாடல் இன்னும் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது. பின்னணி இசையில் தூள் கிளப்பி உள்ளார். லக்ஷ்மணின் ஒளிப்பதிவும் நன்றாகவே உள்ளது. படத்தின் இன்னொரு பலம் பாஸ்கர் சக்தியின் வசனங்கள். படத்தின் இயல்பான ஓட்டத்திற்கு வசனம் பெரிதும் உதவியுள்ளது. இயக்குனர் சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். தன்னை இந்த படத்தின் மூலமாக திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். சுப்ரமணியபுரம், பூ வரிசையில் கண்டிப்பாக இந்த படமும் இடம்பெறும்.

வெண்ணிலா கபடி குழு - உள்ளம் கொள்ளை போகுதே!!!



21 comments:

TamilBloggersUnit said...

உங்கள் பக்கம் இணைக்கப்பட்டது,தமிழ் பிலாக்கர்ஸில் இணைந்ததற்கு நன்றி!

மேவி... said...

படம் பார்த்தேன் .... நல்ல உள்ளது. பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோ பார்த்தேன்.....
அடிக்கடி சக் தே இந்தியா நியாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.....

மேவி... said...

நான் இந்த படத்தை ஓசில தான் பார்த்தேன்....... அதனால் கதை எப்படி இருந்தால் என்ன....

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மை தான் நண்பா.. படத்தை பார்க்கும்போது சக் தே இந்தியாவின் ஞாபகம் வருவதை நாம் மறுக்க இயலாது.. முதல் முறையாக வருகை தந்துளீர்கள்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

அட முருகா.. ஓசியிலா. ? எப்படி பார்த்தீர்கள்?

ச.பிரேம்குமார் said...

ஓ ! அதுக்குள்ள படம் பாத்தாச்சா? :)

Anonymous said...

:)

தேவன் மாயம் said...

செல்வகணேஷ் தமிழ் இசையுலகத்திற்கு நல்ல வரவு. "லேசா" பாடல் இன்னும் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது. பின்னணி இசையில் தூள் கிளப்பி உள்ளார்.///

படத்தின் நிறை குறையை நல்லா அலசியுள்ளீர்..படம் பார்த்துவிடுகிறேன்..

முரளிகண்ணன் said...

நல்ல படத்துக்கு அருமையான விமர்சனம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம் said...
ஓ ! அதுக்குள்ள படம் பாத்தாச்சா? :)//

மாணவர்களுடன் பார்த்தேன் நண்பா.. நல்ல படம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேவன்மாயம் said..
படத்தின் நிறை குறையை நல்லா அலசியுள்ளீர்..படம் பார்த்துவிடுகிறேன்..//

நன்றி தேவன்மாயம் அவர்களே.. சீக்கிரம் பாருங்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையாக வருகை தந்துள்ள கவினுக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகண்ணன் said..
நல்ல படத்துக்கு அருமையான விமர்சனம்//

வருகைக்கு நன்றி முரளி.. என்னை பொறுத்தவரை இதுதான் இந்த வருடத்தின் முதல் நல்ல படம்..

ஆதவா said...

நீங்க சொல்றதைப் பார்த்தா, படம் நல்லா இருக்கும் போல.... அப்ப பார்த்துட வேண்டியதுதான்...

நிறைவான விமர்சனம்....

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
நீங்க சொல்றதைப் பார்த்தா, படம் நல்லா இருக்கும் போல.... அப்ப பார்த்துட வேண்டியதுதான்...

நிறைவான விமர்சனம்....//

நன்றி ஆதவா.. நல்ல படம்.. கண்டிப்பாக பாருங்கள்..

நையாண்டி நைனா said...

விமர்சனத்திற்கு நன்றி நண்பரே.... ஆனால் இந்த மாதிரி படங்கள் எல்லாம் இங்கு மும்பைக்கு வராது

அக்னி பார்வை said...

சில காட்சிகள் நாங்களாக தமிழில் வந்திருக்கும் இன்னொரு அருமையான படம்.. விமரிசனம் அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

// நையாண்டி நைனா said..

விமர்சனத்திற்கு நன்றி நண்பரே.... ஆனால் இந்த மாதிரி படங்கள் எல்லாம் இங்கு மும்பைக்கு வராது //

சிடி கிடைத்தால் கூட பாருங்கள் நைனா.. நம் தமிழ் மண்ணின் விளையாட்டான கபடியை அருமையாக காட்டியுள்ளார்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அக்னி பார்வை said..
சில காட்சிகள் நாங்களாக தமிழில் வந்திருக்கும் இன்னொரு அருமையான படம்.. விமரிசனம் அருமை//
நன்றி நண்பரே.. முதல் முறையாக வந்துள்ளீர்கள்.. மகிழ்ச்சி

ராம்.CM said...

கையோட கிளைமேக்ஸையும் எழுதியிருந்தால் ஒரு முழு படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்...!

ஏமாற்றிவிட்டீர்கள் கார்த்திகைப்பாண்டியன்...!

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்CM said..
கையோட கிளைமேக்ஸையும் எழுதியிருந்தால் ஒரு முழு படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்...!

ஏமாற்றிவிட்டீர்கள் கார்த்திகைப்பாண்டியன்...//

அய்யய்யோ.. படத்தின் கிளைமாக்ஸ் தானே பெரிதும் அதிர்ச்சியானது.. அதை சொன்னால் எப்படி.. வேண்டும் என்றே தான் சொல்ல வில்லை.. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ராம்..