January 6, 2009

கடவுள்... சில கேள்விகள்!!!

வெகு நாட்களாகவே என் நெஞ்சை நிரடிக் கொண்டிருக்கும் கேள்வி இது. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா? முதலிலேயே சொல்லி விடுகிறேன், நான் நாத்திகவாதி அல்ல. ஆனால் நான் ஒரு குழப்பவாதி. உண்மை என்ன என்று அறிந்து கொள்ள ஆசைப்படும் சாதரண மனிதன் நான். நாம் பிறக்கும் இடத்தை (மதத்தை) பொறுத்தே நம்முடைய குணாதிசயம் மற்றும் நம்பிக்கைகள் உருவாகுகின்றன. ஆனால் வளரும் பருவத்தில் நமக்கு தோன்றக் கூடிய பல கேள்விகள் இந்த அடிப்படை நம்பிக்கைகளையே சந்தேகப்பட வைக்கின்றன. என்னுடைய கேள்விகள் இவை தான்.


*நம்மை எல்லாம் படைத்த, நமக்கும் மேலான சக்தி தான் கடவுள் என்றால் அவர் எங்கே இருக்கிறார்?
*இந்த உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களை படைத்த இறைவன் எந்த வடிவில் இருப்பார்?
*உயிர்களை படைத்த கடவுள் ஏன் அவற்றின் நடுவே உயர்வு தாழ்வுகளை படைக்க வேண்டும்?
*கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு என தனியாக கோயில்கள் எதற்காக?
*நம்முடைய ஒவ்வொரு செயலுமே கடவுளுக்கு தெரியும் என்றால் எதற்காக நம்மை பாவம் செய்ய விட வேண்டும். தவறு என்ற ஒன்று இருந்தால் தானே பிரச்சினை. நம்மை எல்லாரையும் நல்லது மட்டுமே செய்ய வைக்கலாம் அல்லவா?
*எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மை கடவுள் காத்ததாக இருந்த காலம் போய் இன்று நாம் கடவுளை காப்பாற்ற வேண்டி உள்ளது ஏன்?
(சமீபத்தில் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சிவம் என்னும் நாவலை படித்தேன். அதில் உள்ள கருத்துக்களையும் இங்கு சேர்த்துள்ளேன் )


என்னுடைய பாட்டியைப் போல் கடவுள் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் மிகவும் கம்மி. ஆனால் இன்று வரை வாழ்வில் அவர் கஷ்டங்களை மட்டுமே சந்தித்து கொண்டு வருகிறார். ஐம்பது ஏக்கர் ஏலத் தோட்டத்திற்கு அதிபதியாக இருந்தவரை அவருடைய தம்பியே ஏமாற்றி விட்டார். ராணி போல் வாழ்ந்தவர் இன்று எங்கள் வீட்டில் ஓர் ஓரமாக படுத்து கிடக்கிறார். எல்லாம் கடவுள் நமக்கு வைக்கிற சோதனை தாண்டா தம்பி என அவர் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள என் மனம் மறுக்கிறது. நம்பும் மனிதர்களை காப்பாற்றாத கடவுள் எதற்கு என்று தான் தோன்றுகிறது.


இன்று உலகில் நடக்கும் பல பிரச்சினைகளுள் மதம் சம்பந்தப்பட்டவையே அதிகம். உன்னுடைய கடவுள் பெரிதா, இல்லை என்னுடைய கடவுள் பெரிதா என்று நடந்த போர்களில் உயிர் இழந்த மக்கள் பலர். தன் பெயராலேயே, தன் கண் முன்னாடியே, தன்னுடைய குழந்தைகள் அடித்து கொண்டு சாவதை தடுக்க முடியாவிட்டால் அந்த கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஒவ்வொரு மதமும் சொல்வது என்ன... அன்பு ஒன்று மட்டுமே உலகில் பிரதானம் என்பது தானே. ஆனால் அது உண்மையாக பின்பற்ற படுகிறதா? அப்படி என்றால், இந்த மதங்களின் மூலகாரணமாக இருக்க கூடிய கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால் பிரச்சினையே இருக்காது அல்லவா.


இந்த கேள்விகள் என் ஒருவனிடம் மட்டும் இல்லை. நம் அனைவர் இடத்திலும் உள்ளது. ஆனாலும் அதை வெளிப்படையாக கேட்க தயங்குகிறோம். காரணம் - பயம். ஒரு வேளை.. கடவுள் இருந்து விட்டால்?.. நாம் தண்டிக்க படுவோமோ என்னும் பயம். தண்டித்தால் அது கடவுளே இல்லை என்பது தான் என் எண்ணம். அந்த பயத்தால் தான் அறிவியல் இவ்வளவு வளர்ந்த போதிலும் கோவில்களுக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தசாவதாரத்தில் கமல் கடைசியில் சொல்வார்..."நான் கடவுள் இல்லை என்று சொல்ல வில்லை.. ஆனால் இருந்தால் நன்றாக இருக்கும்". என்னுடைய கருத்தும் அதுதான்!!!

va

6 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

நம்முடைய குணத்தை மதங்கள் தீர்மானிப்பதில்லை, நண்பா! நமக்குதேவைப் படுவது போல நாம் தான் மதங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் உண்மை புரியும்.
இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன் தான் படைத்தானா?
இப்படி எல்லாம் கேட்கும் போதே, இந்த மாதிரிக் கயவாளித்தனத்தை, மனிதன் தான் படைத்துக் கொன்டிருக்கிறான், இறைவன் அங்கே தேவைப் படுவது பழியைச் சுமப்பதற்காக.
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
மனிதன் தன்னுடைய ஏமாற்றத்தைச் சுமப்பதற்குக் கூட அங்கே கடவுள் ஒருவன் தேவைப் படுகிறான்.
என்ன, ஏற்கெனவே குழம்பியிருக்கிற உங்களை இன்னும் குழப்புகிறேனா?
கவிஞர் கண்ணதாசன் எழுதிய
"பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்"
என்கிற கவிதையை வாசித்துப் பாருங்கள். உங்கள் தேடலில், கேள்வியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கான பதிலும் நிச்சயமாகக் கிடைக்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

விரிவான விளக்கம். ஆனால் மேலும் குழப்பி உள்ளீர்கள். மனிதன் தன் செயல்களுக்கு ஒரு வடிகாலாக கடவுளை பயன்படுத்துகிறான் என்றால் உண்மையில் கடவுள் இல்லை என்று தானே அர்த்தம்.

ஸ்ரீதர்கண்ணன் said...

நம்பும் மனிதர்களை காப்பாற்றாத கடவுள் எதற்கு என்று தான் தோன்றுகிறது.

எனக்கும் இதே சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கிறது

????????

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீதர்கண்ணன் said..
நம்பும் மனிதர்களை காப்பாற்றாத கடவுள் எதற்கு என்று தான் தோன்றுகிறது.எனக்கும் இதே சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கிறது
????????//
விடை தெரியா கேள்வி நண்பா..

தருமி said...

ம்ம்...ம்.. இதுதான் ஆரம்பம். தெளிவு விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்

manisakthivel said...

விதி , தலையெழுத்து இந்த ரெண்டையும் வைத்து பொழப்பை நடத்துகிறார்கள் சில விசமிகள் , கடவுள் இருக்கும் என்பவர்கள் இந்த ரெண்டை சேர்க்காமல் பேசமுடியுமா ?