July 31, 2009

வரலாறும் தமிழகத்தடங்களும் (நிறைவு பாகம்)..!!!

பாகம் - 1





பாகம் - 2





எந்த ஒரு சமூகத்தின் வரலாற்றையும் அடுத்து வரும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எழுத்து வடிவங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்த வகையில் ஆரம்ப காலம் முதலே நம் தமிழ்ச் சமூகம் மாபெரும் தவறுகளை செய்து வந்திருக்கிறது. நம் முன்னோர் பல நல்ல விஷயங்களை செய்து இருந்தாலும் அதை சரியாக ஆவணப்படுத்தவில்லை. மன்னர் காலத்திய கல்வெட்டுக்களும், வேறு தகவல்களும் ரொம்பவும் கம்மியாகவே உள்ளன. அப்படி கிடைக்கும் விவரங்களும் கொஞ்சம் புனைவு கலந்ததாகவே இருக்கின்றன. நாம் அதே தவறை செய்து விடக் கூடாது. தமிழகத்தின் வரலாற்றை சொல்லும் நிகழ்வுகளையும், அதனோடு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பொறுப்பாக பதிவு செய்யும் கடமை நமக்கு உண்டு. அந்த நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கும் ஒரு புத்தகம்தான் "தமிழகத்தடங்கள்.."

"ஸ்பாட்" என்ற பெயரில் குமுதத்திலும், புதிய பார்வையிலும் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். இதன் ஆசிரியர் மணா ஊர்மணம், தமிழ் மண்ணின் சாமிகள் முதலான வேறு சில புத்தகங்களையும் எழுதி உள்ளார். "அலைச்சலில் ருசி இருந்தால் அது லேசில் அலுப்பதில்லை.." என்று சொல்லும் மணா, தமிழக வரலாற்றில் முக்கியமான இடங்களையும் அவற்றின் சரித்திரப் பின்னணி பற்றியும்... தமிழ் மண்ணுக்காக போராடிய முக்கியமான மனிதர்களின் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற நினைவுச் சின்னங்கள் பற்றியும் எழுதிய கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகளுக்கு சாட்சியாக இருக்கும் சாம்பல் நத்தம் (இன்றைய சாமநத்தம்) என்னும் கிராமத்தைப் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்தைப் பின்பற்றுபவன். அவனுக்கு இருக்கும் வெப்பு நோயை ஞானசம்பந்தர் குணப்படுத்தி அவனை சைவ மதத்துக்கு மாற்றுகிறார். இதன் தொடர்ச்சியாக எட்டாயிரம் சமணர்கள் இந்த கிராமத்தின் தெருக்களில் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டு உள்ளார்கள். இந்த நிகழ்வைச் சொல்லும் சித்திரங்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ளனவாம். கிராமத்தின் வீதிகளில் தோண்டும்போது முதுமக்கள் தாழிகளை மக்கள் கண்டெடுத்து உள்ளார்கள். எனினும் இன்று வரை இங்கே தொல்லியல் துறை ஒரு ஆய்வு கூட நடத்தியது இல்லையாம்.
நம் சுதந்திரப் போருடன் தொடர்புடைய மனிதர்கள் பற்றியும், இடங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் பல தகவல்கள் உள்ளன. பாளையங்கோட்டையில் ஊமைத்துரை சிறை வைக்கப் பட்டிருந்த இடம்... மருது பாண்டியரை ஆதரித்த வேலு நாச்சியாரின் சிவகங்கை அரண்மனை.. வெள்ளையரை அழித்திட தன உடம்பில் வெடிமருந்தை கட்டிக் கொண்டு மனித வெடிகுண்டாக மாறி கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கம் குதித்த கிட்டங்கி.. வாஞ்சிநாதனால் சுடப்பட்ட ஆஷின் கல்லறை.. காளையார் கோவில் கோபுரம் காக்க நாட்டைத் துறந்து தங்கள் உயிரையும் ஈந்த மருது பாண்டியரின் சமாதி.. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி கோவை சிறையில் இழுத்த செக்கு.. இந்த நிகழ்வுகளையும் அந்த சின்னங்களையும் பற்றி படிக்கும்போதே நம் கண்களில் கண்ணீர் வரும். எத்தனை எத்தனை உன்னத ஆத்மாக்கள் தங்கள் வாழ்வை தியாகம் செய்து வாங்கிய சுதந்திரம் இது என்பதை நமக்கும் நினைவூட்டும் வண்ணம் இந்தக் கட்டுரைகள் அமைந்து உள்ளன.
வெகு சமீபத்திய நிகழ்வுகளையும், அதன் நினைவுச் சின்னங்களையும் மணா இந்தத் தொகுப்பில் பதிவு செய்கிறார். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ராஜா சாண்டோவின் சமாதி கோவையில் கேட்பாரற்றுக் கிடக்கும் செய்தியை நாம் படிக்கும் போது மனது கனத்துப் போகிறது. கூலியை உயர்த்திக் கேட்ட கொடுமைக்காக நாப்பத்து நாலு உயிர்களைக் கூண்டோடு எரித்த கொடுமை கீழ்வெண்மணியில் நடந்ததை சொல்லுபோதும், சாதியின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு சான்றாக குமரியில் இருக்கும் தாலியறுத்தான் சந்தை பற்றித் தெரிய வரும் போதும் சமூகத்தின் மீது கோபம் வருகிறது.
எம்.ஆர்.ராதாவை நம் அனைவருக்கும் ஒரு கலகக்காரராகத்தான் தெரியும். ஆனால் தன் காதல் மனைவி பிரேமாவதியின் நினைவாக கோவையில் ஒரு ஸ்தூபியை அவர் கட்டி இருக்கிறார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? காலமெல்லாம் சென்டிமென்ட்டை கிண்டல் செய்த அந்த மனிதனுக்குள் ஒரு காதலன் ஒளிந்து இருந்ததை அறியும் போது நம்மையும் அறியாமல் ஒரு நெகிழ்வு வருகிறது. சினிமாவோடு சம்பந்தப்பட்ட மற்ற இடங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், தேவக்கோட்டை ரஸ்தா ஸ்டூடியோ, தியாகராஜா பாகவதரின் வீடு ஆகிய இடங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன.
எளிமையான வரிகள். சுவாரசியமான நடை. இது தான் இந்தப் புத்தகத்தின் அடையாளம். இதன் முன்னுரையை பிரபஞ்சன் எழுதி உள்ளார். வெறுமனே இடங்களைப் பற்றி எழுதாமல், அதனுடன் தொடர்புடைய மற்ற வரலாற்று விஷயங்களையும் சொல்லி இருப்பது சிறப்பு. நம் தமிழின மக்களைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல இந்தப் புத்தகம் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.
புத்தகம் : தமிழகத் தடங்கள் (முதல் தொகுதி)

ஆசிரியர் : மணா

வெளியீடு: உயிர்மை

விலை: 90/-
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 29, 2009

வரலாறும் தமிழகத்தடங்களும்(பாகம் - 2)..!!!

(பாகம் - 1 படிக்க இங்கே க்ளிக்குங்கள்)
மதுரை என்றவுடன் மக்களின் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். உலக அதிசயங்களில் ஒன்று என்னும் ரேஞ்சுக்கு பேசப்படும் இடம். அதன் உள்ளே இருக்கும் ஆயிரம் கால் மண்டபமே ஒரு அதிசயம்தான். ஆனால் இன்று.. கேட்பாரற்றுக் கிடக்கும் பழங்காலச் சிற்பங்களும், ஒளி மங்கிக் கிடக்கும் ஓவியங்களுமாய் அதன் நிலையைப் பார்த்தால் மனிதனுக்கு ரத்தக்கண்ணீர் தான் வருகிறது. நம்முடைய பண்பாட்டுச் சின்னங்களான கோவில்களை அரசாங்கம் மிகுந்த அக்கறையோடு பாதுகாக்க வேண்டாமா? அது அரசினுடைய கடமைதானே..
மாறாக அரசாங்கம் இன்று என்ன செய்து கொண்டு இருக்கிறது? கோவில்களை மீண்டும் பொலிவாக்குகிறோம் என்னும் பெயரில் புராதானச் சின்னங்களை தானே அழித்து வருகிறது. சமீபத்தில் ஒரு ஆங்கில நாழிதளில் கூட இதைப் பற்றி எழுதி இருந்தார்கள். தென் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு கோவில்களில் சான்ட் ப்ளீச்சிங் (sand bleaching) என்னும் முறைப்படி கோவில் சுவர்களில் இருக்கும் பழங்கால சித்திரங்களை எல்லாம் அரசாங்கமே அழித்த முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டி இருந்தார்கள். நம்முடைய பாரம்பரியத்தை சொல்லும் கலைப் பொருட்களை அழிக்கிறோம் என்னும் பிரக்யையே அரசிடம் இல்லை என்பது வேதனை.
இன்னொரு சம்பவம். மதுரை அருகே இருக்கும் இடமான கரடிப்பட்டி பெருமாள் மலையில் சமணப்பள்ளிகளும், குகையில் வரையப்பட்ட ஓவியங்களும் இருக்கின்றன. ஆனால் மணல் திருடுபவர்களால் அந்த மலையே காணாமல் போகும் அபாயம் இருப்பதை பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டி இருந்தன. ஆனால் இன்று வரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. தவறு செய்வதை விட அதைத் தட்டிக் கேட்கும் பொறுப்பில் இருந்தும் சட்டை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம் அல்லவா?!!
அரசாங்கம் மட்டுமே தவறு செய்வது இல்லை. இந்தத் தவறினைச் செய்வதில் பெரும்பங்கு வகிப்பது நாம்தான். நம் சமூகம்தான். எழுத ஒரு கரித்துண்டு கிடைத்தால் உடனே காதல் வசனங்களாக, கெட்ட வார்த்தைகளாக கிறுக்கித் தள்ளுவது... ஏதேனும் கோவிலுக்கு செல்லும்போது, பாரம்பரியம் மிக்க இடங்களுக்கு போகும்போது அவற்றின் சுவற்றை உற்றுப் பாருங்கள். நம் நண்பர்களின் கைங்கரியம் தெரியும். இதை விடக் கேவலம் இருக்க முடியாது. போன இடுகையில் நண்பர் ஜோ இவ்வாறு பின்னூட்டம் போட்டு இருந்தார். "நம்மவர்களைப் போல வரலாற்று பிரக்யையற்றவர்களை வேறெங்கும் காண முடியாது". வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அக்கறை காட்டாத அரசாங்கம்.. பொறுப்பில்லாத பொதுமக்கள். என்னதான் செய்ய முடியும்? இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கம் தன்னிலை உணர்ந்து செயல்பட வேண்டும். நம் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்திட வழிமுறைகளைச் செய்ய வேண்டும். இது போன்ற சின்னங்களை சேதப்படுத்தும் மக்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு விதிக்க வேண்டும். குறிப்பாக பாடத்திட்டங்கள் எளிமையாக மாற்றப்பட வேண்டும். வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை சமூகத்திடம் தூண்டா விட்டால் எத்தனை பாடுபட்டும் பயனில்லாது போகும். எனவே அடுத்த தலைமுறைக்கு நம் வரலாற்றை எடுத்துச் சொல்லும் பணியை தெளிவாக முறைப்படுத்த வேண்டும்.
அப்படி ஒரு எளிய முறையில் தமிழர்களின் சமீப வரலாற்றை சுவாரசியமாக சொல்லி இருக்கும் புத்தகம்தான் மணாவின் "தமிழகத் தடங்கள்.."!!!
(தொடருவேன்..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 28, 2009

வரலாறும் தமிழகத்தடங்களும்(பாகம் - 1)..!!!

எந்த ஒரு சமூகத்திற்கும் அதனுடைய வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்று. தம்முடைய கலாச்சாரம், கடந்து வந்த பாதை முதலான விஷயங்களை அறிந்து கொள்ள வரலாறு உதவுகிறது. ஆனால் நம் தமிழ்ச் சமுதாயம் தன்னுடைய வரலாற்றை எந்த அளவுக்கு மதிக்கிறது? இன்றைய தலைமுறையைப் பொறுத்த வரை வரலாறு என்பது பத்தாம் வகுப்பு வரை கண்டிப்பாக படிக்கப்பட வேண்டிய, எந்தப் பயனையும் தராத, தேவை இல்லாத, ஒரு அறுவையான பாடம். அவ்வளவுதான்.
கனத்த மனதுடன் இங்கே ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. கல்லூரியில் நான் மாணவர்களுக்கு பாடத்தை மட்டும் நடத்துவது இல்லை. முக்கியமான உலக நடப்புகள், தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்வது உண்டு. அதே போல, வார நாட்களில் ஏதேனும் ஒரு வகுப்பில் மாணவர்கள் இடையே சுவாரசியமான போட்டிகளும் நடத்துவேன். இந்த வாரம் பிரபலங்களைப் போல நடித்துக் காட்டி யாரெனக் கண்டுபிடிக்கும் போட்டி நடத்துவது என முடிவானது.
அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, சார்லி சாப்ளின் எனப் பல பிரபலங்களை எளிதில் கண்டுபிடித்து விட்டனர். இந்தப் போட்டியின் ஒரு சுற்றாக தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட தியாகிகளின் பெயரும் இருந்தது. ஆனால் அவர்களை மாணவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை விடக் கொடுமை, அவர்கள் யாரென மாணவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். வாஞ்சிநாதன் என்ற பெயரைச் சொல்லி யாரெனத் தெரியுமா எனக் கேட்டால், விஜயகாந்த் நடித்த படம் சார் என்றார்கள்.
நான் மிகைப்படுத்தவில்லை. நடந்த உண்மையை சொல்கிறேன். இதே நிலைதான் மற்ற தியாகிகளுக்கும். நான் அவர்களைப் பற்றி சொல்ல முயன்ற போதும் அதைக் கேட்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை. தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். "நீங்க எந்தக் கவலையும் இல்லாம இப்படி சிரிக்கக் காரணமே இவங்களை மாதிரி மக்கள் பண்ணிய உயிர்த் தியாகத்துனால தான்ப்பா.." நான் அழுத்தி சொன்ன பிறகு அமைதியாகக் கேட்கத் தொடங்கினார்கள். வரலாற்றின் முக்கியத்துவத்தை, நம்மை நாமே அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர வேண்டாமா? அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தவறியது யாருடைய குற்றம்?
வெறும் நூறு வருடம் பழைமையான சின்னங்களைக் கூட வெளிநாடுகளில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இங்கே நம் நாட்டில் என்ன நடக்கிறது? வேறு எங்கும் போக வேண்டாம். மதுரைக்கு வாருங்கள். மதுரையின் பெயரைக் கேட்டவுடன் ஞாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவிலும் திருமலை நாயக்கர் மகாலும். இன்று அவற்றின் நிலை என்ன?
திருமலை நாயக்கர் மகாலில் எஞ்சி நிற்பது ரங்கவிலாசம் என்னும் ஒரு பகுதி மட்டுமே. அதன் சுற்றுப்புறங்கள் இன்று பொதுமக்கள் மலஜலம் கழிக்கும் பகுதிகளாய் மாறிப் போனது கொடுமை. இதைத் தடுக்க அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. புனர்நிர்மாணம் என்ற பெயரில் மகாலின் உள்ளேயும் பாழடித்து விட்டார்கள். அதனுடைய உட்புறங்களில் இருந்த வண்ணச் சித்திரங்களை எல்லாம் அழித்து விட்டு புதிதாக வரைவதாய் பெயர் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மகாலின் உள்ளே இருந்த பழம்பொருள் அருங்காட்சியகமும் ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டது. வெகு சமீபத்தில் பதிவுலக நண்பர் அன்புவுடன் மகாலுக்கு போய் இருந்தேன். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நந்தி சிலை ஓரமாக கேட்பாரற்று கிடந்தது. அதன் மீது சிமின்ட் மூடைகள் அடுக்கப்பட்டு கிடந்தன. மனம் நொந்து போனேன். பிறகு நானும் அன்பும் அதை சரி செய்து விட்டு வந்தோம். நம் தொல்லியல் துறையின் செயல்பாடு இப்படி இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை..?!!!

(தொடருவேன்..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 26, 2009

வெடிகுண்டு முருகேசன் - திரைவிமர்சனம்..!!!


குறைந்த பட்ஜெட். நடிக்கத் தெரிந்த நல்ல நடிகர்கள். சாதாரணமான கதை. அலட்டிக் கொள்ளாத திரைக்கதை. தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்ளும் நகைச்சுவை காட்சிகள். போதாக்குறைக்கு வடிவேலுவின் காமெடி. அப்புறம் தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்டான மதுரைப் பக்கம் இருக்கும் கதைக்களம். எல்லாத்தையும் கலந்து கட்டி அடித்தால் "வெடிகுண்டு முருகேசன்" ரெடி.


ஊரில் இருக்கும் டீக்கடைகளுக்கு தண்ணீர் ஊற்றி பிழைப்பு நடத்தி வருபவர் பசுபதி. தன் கூடப் படித்த புத்தி சரியில்லாத பெண்ணை தன்னோடு வைத்து காப்பாற்றி வருகிறார். பசுபதியின் நல்ல மனதைப் பார்த்து அவரை காதலிக்கிறார் போலிஸ்காரரான ஜோதிர்மயி. ஒரு கட்டத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத பெண்ணை வில்லனின் தம்பி கெடுத்து விடுகிறார். நியாயம் கேட்கும் பசுபதியை கொல்லும் முயற்சியில் செத்தும் போகிறார். தம்பியின் சாவுக்கு பழி வாங்கத் துடிக்கும் வில்லனிடம் இருந்து பசுபதி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.


சரியும் தவறும் கலந்த சாதரண மனிதன்... இப்படித்தான் அறிமுகம் ஆகிறார் பசுபதி. சாராயம் குடித்துக் கொண்டும், ஊரில் இருக்கும் எல்லாரையும் சத்தாய்த்துக் கொண்டும் திரிபவர். மனநிலை சரியில்லாத பெண்ணைக் காப்பாற்றும் காட்சியில் உருக வைக்கிறார். நகைச்சுவை காட்சிகளில் பின்னி எடுக்கிறார். ஓவராக சவுண்டு விடுவதை மட்டும் குறைத்துக் கொண்டிருக்கலாம். போலீஸ வேலைக்கு போகப் பிடிக்காமல் பொசுக் பொசுக்கென்று அழுபவராக ஜோதிர்மயி. ஒரு விபச்சாரக் கேசில் தான் பசுபதியை முதல் முதலாக சந்திக்கிறார். ஆனால் அவர் மீதே காதல் கொள்வது முரண். மற்றபடி நன்றாக நடித்து இருக்கிறார்.


அலெர்ட் ஆறுமுகமாக வடிவேலு. இரண்டாம் பாதியின் காதாநாயகன். களவாணியாக வருகிறார். கைப்புள்ள ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் சிரிக்க வைக்கிறார். போலீஸ இன்ஸ்பெக்டரின் பேண்டுக்குள் கையை விட்டு மாட்டிக் கொள்ளும் காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. பொன்னி என்னும் மனநிலை சரியில்லாத பெண்ணாக நடித்து இருப்பவர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார், வில்லனாக வருபவரும் நன்றாக காமடி செய்கிறார். வில்லன்னா பொழுதுபோக்கு இருக்கக் கூடாதா என்று சூரியன் எப்.எம்முக்கு பொன் போடுவது செம லொள்ளு. செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஜட்ஜாக நடித்து இருக்கிறார்.


படம் நல்லா எடுத்தா இவங்களே கை தட்டுவாங்கன்னு மக்களை பார்த்து சொல்றது.. ரவுடி கூட்டத்தை கல்லால் அடிக்கும் பசுபதி அதன் பிறகு ஏதோ சம்பந்தம் இல்லாமல் உளறி விட்டு, இதுதாண்டா பன்ச் டயலாக் என்பது... சிறைக்குள் இருக்கும் பசுபதியை பார்த்து ஜோதிர்மயி வெட்கப்பட, போச்சுடா.. இப்ப நான் போய் பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு வரணும் போல இருக்கேன்னு பசுபதி பொலம்பறது.. கிளைமாக்சில் வில்லன் திருந்திட்டானாம், இதுல ஏதும் புதுசா இல்லைன்னு கலாய்க்கிறது.. படத்தில் சகட்டு மேனிக்கு எல்லாரையும் ஓட்டி இருக்கிறார்கள்.


தினாவின் இசையில் சாரலே பாட்டு மட்டும் ஓகே. பின்னணி இசையில் காது கிழிகிறது. படத்தில் வசனங்கள் அருமை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பல நல்ல விஷயங்களை சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள். வசனம் எழுதி இயக்கி இருப்பவர் மூர்த்தி. "கருப்பசாமி குத்தகைதாரர்" படத்தை இயக்கியவர். இன்னும் நல்ல கதையாக தெரிவு செய்து இருக்கலாம். இரண்டாம் பாதி நகர மாட்டேன் என்று அடம் பிடிப்பதால் வடிவலுவை வைத்து ஓட்டி இருப்பதை தவிர்த்து இருக்கலாம். சிரிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி இயக்குனர் படம் எடுத்து இருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்.


வெடிகுண்டு முருகேசன் - சிரிப்புத் தோரணம்



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 23, 2009

சொந்த ஊரும் நம்பர் பிளேட்டுகளும்..!!!


வேலை என்னும் பெயரால்
ஏதேதோ ஊர்களில்
பெயர் தெரியா மனிதர்களின்
ஊடே - முகவரி அற்றவனாக
சுற்றித் திரிந்து இருக்கிறேன்..!!

சாலையில் நடக்கையில்
கடந்து போகும் வாகனங்களில்
எல்லாம் - நம்பர் பிளேட்டுக்களை
உற்று நோக்கி மீளும் என் கண்கள்..!!

எதிர்பாரா தருணங்களில்
சட்டென தட்டுப்படும்
என் ஊரின் பதிவெண்ணை
பார்க்கும் போதெல்லாம்....
வார்த்தைகளால் விளக்க முடியாத
உணர்வு என்னை ஆட்கொள்ள - முகம்
தெரியா அந்த ஓட்டுனர் எனக்கு
நெருக்கமானதாய் உணர்வேன்..!!

நாட்கள் பல தாண்டி
ஓடிக் களைத்தவனாக..
கூடு தேடும் பறவையாய் - என்
சொந்த ஊரில்.. நான்..!!

இப்போதும் சாலையில் என்னைக்
கடந்து போகும் வாகனம் அனைத்திலும்
ஒரே பதிவெண் - இருந்தும்
நான் மட்டும் அந்நியனாய்..!!

இப்போதெல்லாம் நான்
நம்பர் பிளேட்டுகளை
பார்ப்பதே இல்லை..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 21, 2009

விஜய் ரசிகர்களிடம் பிடிக்காத 10..!!!

1."தறுதல"பதிக்கு விசுவாசமா இருக்கொம்கிற பேர்ல.. அடிபட்ட இடம் "தல"யா இருந்தாலும் வேற ஏதாவது சொல்லி கத்துறது..
2. லவர் தலயோட ரசிகரா இருந்தாலும் எனக்கு விஜய் தான் பிடிக்கும்னு பீத்திகிட்டு அசிங்கப்படுறது..
3. சட்டக் காலர்ல சிகரட்ட சொருகிக்கிட்டு அலையுறது.. கேட்டா பேஷனாம்.. தம்மடிக்கிறதே தப்பு.. இதுல என்னங்கப்பா பேஷன்..
4. எஸ்.எம்.எஸ் அனுப்ப காசுன்னாலும் கவலைப்படாம அஜித்தை கலாய்ச்சு மெசேஜ் அனுப்பறது..
5. தெரு முக்கு, சந்து போந்து, எதையும் விடாம நாளைய தமிழகமேன்னு போஸ்டர் ஓட்டுறது.. அதுல அவங்கப்பா ஆசியோடன்னு போடுறது பெரிய கொடும.. அவங்கப்பா பண்ணுற ஒரே நல்ல விஷயம், விஜய வச்சு படம் எடுக்காம இருக்கிறது.. அதனால்தான் இன்னும் விஜய் பீல்டுல இருக்காப்ல..
6. இப்போ ஒரு வீடியோ வந்சுச்சு.. சைலன்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கொம்லன்னு.. திட்டுனது எல்லாம் சொந்த ரசிகக் கண்மனிகலத் தான .. ஆனாலும் திருந்தாம சுத்துதுங்க.. என்ன பண்றது..
7. விஜயும் அஜித்தும் ஒண்ணா சேர்ந்திடுவாங்கலோன்னு இவங்க ஒரு பயத்துல லுக்கு விடுவாங்க பாருங்க.. அடங்கொன்னியா.. குமரி முத்தெல்லாம் தோத்து போகணும்..
8. சுவர் இல்லன்னா கூட வெறும் கைய காத்துல ஆட்டிக்கிட்டே இருக்குறது.. கேட்டா காக்கா வெரட்டுற மாதிரி அஜித்த உள்ளுக்குள்ள இருந்து விரட்டப் போறாங்களாம்.. ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்.. ஆனா.. சரி.. விடுங்க..
9. ஏழு பேர் விஜய் ரசிகர்களும் ஒரு அஜீத் விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது...... ஆனாலும் அவங்களை பார்த்து இந்த ஒருத்தன் கேக்குற விஜய்க்கு நடிக்கத் தெரியுமாங்குற கேள்விக்கு எல்லாப் பயலும் அப்பீட்டாவானுங்க பாருங்க.. ஐயோ ஐயோ..
10. விஜய் படத்த பார்க்காமயே படத்த பத்தி நல்லதா சொல்றது.. ஏன்னா படம் பார்த்தா தூக்கு மாட்டி செத்துப் போவோம்னு அவங்களுக்கு தெரியுமே..

பதிவின் மூலம் இங்கே.. வசந்த்.. இது நகைச்சுவைக்காக மட்டுமே.. தப்பா எடுத்துக்காதீங்க..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 20, 2009

இப்படியும் சில மனிதர்கள் - 100 வது இடுகை...!!!

டிசம்பர் 2006. நான் கொங்கு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த நேரம். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரி நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஆத்திர அவசரத்திற்கு டவுனுக்கு போக வேண்டுமானால் நேரத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது. கேன்டீன் சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. என் வசதிகளை உத்தேசித்து மதுரையில் இருந்து பைக்கை கொண்டு போய் ஹாஸ்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.




வெகு தூரத்துக்கு வண்டியில் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு வண்டியை ஓட்டி செல்ல முடிவு செய்தேன். அன்று கிறிஸ்துமஸ் தினம். லீவுக்கு மதுரையில் இருந்தேன். பைக்கை மத்தியான ட்ரைனுக்கு புக் செய்து விட்டதாகவும், அதே ட்ரைனில் நானும் போக இருப்பதாகவும் வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பினேன். என் நெருங்கிய நண்பனுக்கு அன்று குழந்தை பிறந்து இருந்தது. அவனை பார்த்து வாழ்த்தி விட்டு பயணத்தை தொடங்கினேன்.




வாடிப்பட்டி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. வெயிலும் அவ்வளவாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களை ஹம் செய்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். திடீரென எங்கிருந்து வந்ததென தெரியாமலே ஒரு கார் சாலையின் வளைவில் இருந்து வெளிப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரேக் போட்டால் பின்னால் வரும் பஸ்காரன் தட்டி விடக் கூடும். சட்டென வண்டியை சாலையை விட்டு இறக்கினேன். மணல் பிரதேசம் என்பதால் வாரி விட்டது. என் கால் முட்டி போய் தார் சாலையின் முனையில் மோதியது மட்டுமே தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.




எனக்கு நினைவு திரும்பிய போது என் முகத்தின் வெகு அருகே குனிந்து நின்ற மனிதர் ஒருவரைப் பார்த்தேன். வயதானவர். "தம்பி.. தம்பி.. எந்திரிப்பா.." என அவர் தான் என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் கலவரத்தை மீறி ஒரு கருணை இருந்தது. நான் எழுந்து கொள்ள முயன்றேன். முடியவில்லை. வலது காலை நகர்த்த முடியாத அளவுக்கு வலி. அவர் என் கைகளை தனது தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை மெதுவாக எழுப்பினார். வயல் வேலை பார்ப்பவர் போல.. அவருடைய உடையில் இருந்த சேறு என் மீதும் அப்பிக் கொண்டது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் வண்டி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது இருந்தது.




"வண்டிக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல.... அப்படி ஓரமா நிக்கட்டும்.. விடுங்க தம்பி.. ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு சந்தோஷப்படுங்க" பேசியவாறே நடந்தார். இப்போது வலி கொஞ்சம் குறைந்து இருந்தது. அருகில் இருந்த சரிவில் பத்தடி தூரம் நடந்து அவருடைய வீட்டை அடைந்தோம். காரை வீடு. எளிமையாக இருந்தது.




என்னைப் பார்த்து அவருடைய மனைவி பதைபதைத்துப் போனார். என்னை திண்ணையில் அமரவைத்து காலை சுத்தம் செய்தார். பெரிய அளவில் வெட்டுக்காயம் இருந்தது. தையல் போட வேண்டி இருக்கும் எனத் தோன்றியது. வேறு எங்கும் பெரிய அளவில் அடிபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். அவர் வைத்துக் கொடுத்த தேநீரை அருந்திய போது தேவாமிர்தமாக இருந்தது. "கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி.. என் மகன் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. பிறகு டாக்டர்கிட்ட போகலாம்.." அந்த அம்மா சொன்னார்.




அவருடைய மகன் வந்ததும் விஷயத்தை சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தனர். கொடைரோட்டுக்கு பைக்கிலேயே போய் டாக்டரைப் பார்த்து தையல் போட்டுக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருக்கும் என்னுடைய நண்பனுக்கு போன் வரச் சொல்லி விட்டு, நான் பத்திரமாக போக முடியுமா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் மகன் கிளம்பிப் போனார். (அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்)




என் கால் சரியாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆனது. கல்லூரியிலேயே இருந்தேன். ஊருக்குப் போகவில்லை. கால் சரியாகி ஊருக்குப் போன பிறகுதான் அம்மாவிடம் கூட உண்மையை சொன்னேன். அம்மா அவர்களைப் பார்க்க வேண்டும் என்றார். அழைத்துக் கொண்டு போனேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் யார் இவர்களுக்கு? முன்பின் தெரியாத ஒருவன் மேல் எதற்காக இவர்கள் இத்தனை அக்கறை காட்ட வேண்டும்? என்னுடைய நன்றியைத் தெரிவித்தபோது அந்தப் பெரியவர் சொன்னார்.."கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." எத்தனை நல்ல மனது அவர்களுக்கு.. தெரிந்தவர்களுக்கு உதவவே யோசிக்கும் காலத்தில் முகம் தெரியாத மக்களின் மீது கூட அன்பு செலுத்த முடியும் என்னும் இது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.




இதை சொல்லும் போது எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்தில் இருக்கும் "அன்பின் வலி" என்னும் கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. உயிரைக் காக்க உதவி செய்யுங்கள் என்ற விளம்பரத்தை பார்த்து பணம் அனுப்பி வைக்கிறார் ஒரு வாட்ச்மேன். உதவி பெற்ற மனிதர் ஆப்பரேஷன் முடிந்த பிறகு தன்னுடைய மனைவியோடு சென்று பணம் அனுப்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லுகிறார். யாராவது பார்த்து உதவி செய்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே விளம்பரம் செய்கிறார்கள்.. ஏதோ என்னால் முடிந்ததை செய்தேன் என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் அந்த வாட்ச்மேன்.
நாம் தினமும் பத்திரிக்கையில் இதுபோன்ற பல விளம்பரங்களை பார்க்கிறோம். ஆனால் என்றேனும் உதவ வேண்டும் என்று தோன்றி இருக்கிறதா? சக மனிதர்களின் மீது அன்பு செலுத்த, அக்கறை காட்ட இன்று யாருக்கும் நேரம் இல்லை. இது போன்ற சூழலில் அன்பு என்கின்றன ஒன்று எங்கே எனத் தேட வேண்டியதாக இருக்கிறது. எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கட்டுரை. எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. அதை நாம் உணர்கிறோமா என்பதுதான் முக்கியம். யாரும் நம்மிடம் அன்பு செலுத்த மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்புவதை விட, நாம் பிறர் மீது அன்பு செலுத்தத் தொடங்குவோம். இந்த உலகை இன்னும் அழகாக மாற்றக் கூடியது, சக மனிதரின் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே..!!!




***************




இது என்னுடைய நூறாவது இடுகை. இப்போதுதான் விளையாட்டாக ஆரம்பித்தது போல உள்ளது. எட்டு மாதங்கள். நூறு இடுகைகள். என் மீது அன்பும் அக்கறையும் காட்டும், முகம் தெரியாத நிறைய நண்பர்கள். சந்தோஷமாக இருக்கிறது. நான் ஏதோ பெரிதாக சாதித்து விட்டடதாக நினைக்கவில்லை. போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஆனாலும் நடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை இன்று வரை ஆதரித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் என்னை வழி நடத்திச் செல்லும் என நம்புகிறேன். மீண்டும் நன்றி..!!!



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 14, 2009

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!!

கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினது எல்லாம் அந்தக் காலம். வர்றவன் போறவன்.. கிழிஞ்சது கிழியாதது... பட்டன் வச்சது வைக்காதது.. தோலான் துருத்திக்கு எல்லாம் தேடிப் பிடிச்சு டாக்டர் பட்டம் கொடுக்குறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் பேஷன். சாதாரண ஆளுங்களே டாக்டர் பட்டம் வாங்கறப்போ, நம்ம நடிகர்கள்.. நாளைக்கு நம்ம நாட்டை ஆளப் போற புண்ணியாத்மாக்கள்..(அந்த நெனப்புல தாண்ணே பல பேரு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காய்ங்க.. ) அவங்க டாக்டர் பட்டம் வாங்க வேண்டாமா? ஒரு நடிகர் எப்படி பிரபலமாகி டாக்டர் பட்டம் வாங்கலாம்னு சொல்லத்தான் இந்த இடுகை..
-->உங்க அப்பா ஒரு இயக்குனராவோ, தயாரிப்பாளராவோ இருந்தா ரொம்ப நல்லது. அப்பத்தான் உங்களோட அத்தனை படமும் தொடர்ச்சியா ஊத்தினாலும் மறுபடியும் உங்களை வச்சு படம் எடுப்பாங்க. அப்படி இயக்குனர் அப்பா இல்லாதவங்க யாராவது ஒரு இளிச்சவாயனா பார்த்து தத்து எடுத்துக்கோங்க..
-->கதை இருக்கோ இல்லையோ.. கதாநாயகிய பார்த்து செலக்ட் பண்ணுங்க. ஏன்னா கண்டிப்பா உங்களுக்காக ஓடலைன்னாலும் படம் நாயகியோட கவர்ச்சிக்காகவாவது ஓடும்.
-->படத்துல நீங்களே ஒரு பாட்டு பாடுறது ரொம்ப அவசியம். கொத்து புரோட்டா, சால்னா, கோடு, ரோடு, பூரி, பிஸ்கோத்துன்னு எல்லாம் தமிழ் இலக்கிய வார்த்தைகளா போட்டு பாடுங்க. பாட்டுக்கு நடுவுல "இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பது.." அப்படின்னு விளம்பரம் பண்ணனும். (விளம்பரம் முக்கியம் அமைச்சரே..)
-->நீங்க தொடர்ந்து முயற்சி பண்ணினா, கண்டிப்பா நடுவில யாராவது ஒரு நல்ல இயக்குனர் கிட்ட தெரியாத்தனமா சிக்கி, ஏதாவது ஒரு நல்ல படத்துல நடிச்சுருவீங்க. இனிமேல்தான் ரொம்ப முக்கியமான நேரம். வளர்ந்து வர இன்னொரு நடிகன் எவனையாவது செலக்ட் பண்ணி இவன்தாண்டா எனக்கு போட்டின்னு சொல்லிறனும். உங்களோட எல்லாப் படத்துலயும் அவனத் திட்டி வசனமும், பாட்டும் இருக்கணும்.
-->உங்களுக்குன்னு ஒரு ரசிகர் க்ரூப்ப செட் பண்ணிக்கோங்க. உங்களோட படம் பாடாவதியா இருந்தாலும் ரிலீஸ் ஆகுற தியேட்டர்ல எல்லாம் போய் பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேக்குறது, திரைய கிழிக்கிறது.. இதுதான் இவங்க வேலையே. அப்படியே உங்களோட எதிரியோட படம் வந்தா, முதல் ரோவுல உக்கார்ந்துக்கிட்டு, இது வெளங்காது.. படம் தேறாதுன்னு எல்லாம் பரப்பணும். ரசிகர்கள் அடிச்சிக்கிட்டு சாவாய்ங்க. நீங்க ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்.
-->வேற யாராவது ஒரு நடிகர் வளர்ந்து வர மாதிரி தெரிஞ்சா.. இருக்கவே இருக்காரு உங்க அப்பா இயக்குனரு. அவரை விட்டு வளரும் நடிகனுக்கு ஒரு படம் எடுக்க சொல்லுங்க. நீங்களும் கெஸ்ட் ரோல் பண்ணலாம். அதுக்கு அப்புறமும் அவன் சினி பீல்டுல இருக்க முடியுமா என்ன?
-->கெட்டப் மாத்துறேன்னு எல்லாம் சிரமப்பட்டு நடிக்கக் கூடாது. ஏன்னு கேட்டா மக்களுக்கு அதுதான் பிடிச்சு இருக்குன்னு சொல்லணும். அதிகபட்சம் சுண்டு விரல் பக்கத்துல ஒரு சின்ன விரல ஒட்ட வச்சுக்கோங்க. அதுக்கே மக்கள் பின்னாடி "தீ" வச்ச மாதிரி தெறிச்சு ஓடுவாய்ங்க..
-->நாம ரொம்ப நல்லவரு, அமைதி.. அப்படின்னு எல்லாம் சீன போடணும். அதனால்.. முடிஞ்ச அளவுக்கு நிருபர்கள் கூட்டுற பிரஸ் கான்பெரன்ஸ்ல கலந்துக்காதீங்க.. அப்புறம்.. சைலன்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கோம்ல.. இதுதான் நடக்கும்..
-->படம் சரியா ஓட மாட்டேங்குதா.. இருக்கவே இருக்கு.. அரசியல். வருவேன்.. ஆனா வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டே.. இளிச்சவா ரசிகர்களை ஏமாத்துங்க. உண்ணாவிரதம், நற்பணி இயக்கம்னு எதையாவது கொளுத்திப் போட்டுகிஇடே இருந்தாப் போதும். ரசிகனும் ஆன்னு வாயப் பொளந்துக்கிட்டு உங்களுக்காக தோரணம் கட்டுறது, ஆடுறது, பாடுறது எல்லாம் செய்வான்.

ஆத்தாடி ஆத்தா.. இவ்ளோ செஞ்ச பின்னாடி உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமலா போய்டும்..? எவனாவது ஒரு கேனப்பய யுனிவர்சிடி உங்களைக் கூப்பிட்டு குடுப்பான்.. என்சாய்....
டிஸ்கி: இந்தப் இடுகை யாரையும் குறிப்பிடுவது அல்ல.. யார் மனசையும் நோகடிக்கிரதுக்காக கிடையாது.. அப்படின்னு சொன்னா என்ன நம்பவா போறீங்க.. (பசங்க மீனாட்சி ஸ்டைலில் படிக்கவும்..) அதான்.. அதேதான்.. :-)))))
***************
அச்சு ஊடகங்களில் நம் பதிவுலகம் பரவலான கவனிப்பை பெற்று வருவது ஆரோக்கியமான விஷயம். மற்ற நண்பர்களைப் பற்றி பத்திரிக்கைகளில் வரும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அவர்களை போனில் அழைத்து வாழ்த்துவேன். இப்போது என் முறை. இந்த வார கல்கியில் என்னுடைய பதிவு பற்றியும், நண்பர்கள் நரசிம், ஆதவா, ஷீ-நிசி, முத்துவேல் பற்றிய அறிமுகம் வந்துள்ளது. நிரம்ப மகிழ்ச்சி. ஒரு சின்ன அங்கீகாரம். இதற்குத் தானே ஆசைப்படுகிறோம். கல்கிக்கு நன்றி. என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் இதனை சாத்தியமாக்கிய நண்பர் "அகநாழிகை" பொன்.வாசுதேவனுக்கும் நன்றி.
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 11, 2009

வாமனன் - திரை விமர்சனம்..!!!


ஆஞ்சநேயா - அல்டிமேட் ஸ்டாரின் அசத்தல் படம். அந்தப் படம் வெளிவரும் நேரத்தில் தல கொஞ்சம் வாயை விட்டார்..."இது நான் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போடும் அப்ளிகேஷன்.." படம் பப்படம் ஆனது. தலயின் பரம ரசிகர் ஜெய். சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்."நான் நடிக்கும் படங்களில் வாமனன் மட்டுமே ஓடும்..மற்றதெல்லாம் ஒரு வாரம் தாண்டினாலே அதிசயம்..".இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே.. வாமனன் எப்படி இருக்குன்னு..?


நடிகனாகும் ஆசையில் சென்னை வருகிறார் ஜெய். நண்பன் சந்தானத்துடன் தங்கி இருக்கிறார். ப்ரியாவைக் காதலிக்கிறார். லக்ஷ்மி ராய் ஒரு மாடல். அவருடைய விளம்பர ஷூட்டிங்கில் தெரியாத்தனமாக ஒரு அரசியல் கொலையை காமிரா பதிவு செய்து விடுகிறது. அந்த டேப்புக்காக லக்ஷ்மியும், அவரின் நண்பரும் கொலை செய்யப் படுகிறார்கள். கொலைப்பழி ஜெய்யின்மேல் விழுகிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்பினார் என்பதுதான் கதை.


விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அதற்காக அவரைப் போலவே நடிக்க முயற்சித்தால் எப்படி? (நடுவே ரெண்டு சீனில் விஜயை வேறு சொல்லிக் காட்டுகிறார்கள்) திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல சுற்றி வருகிறார். ஈ என இளிக்கிறார். நடிப்பில்.. சுப்ரமணியபுரத்தில் பார்த்தவரா இவர்? ப்ரியா அறிமுகம். ரெண்டு பாட்டு. அவ்வளவுதான். லக்ஷ்மி ராய் பிகினியில் அலைகிறார். அடிபட்டு செத்துப் போகிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான லூசு அம்மாவாக ஊர்வசி. எரிச்சல். போலிஸ் கமிஷனராக தலைவாசல் விஜய். லோக்கல் ரவுடி மாதிரி காட்டி இருக்கிறார்கள்.


படத்தின் சுவாரசியங்கள் - சந்தானமும் ரகுமானும். முதல் முறையாக கெட்ட வார்த்தை பேசாமல் காமெடியில் பின்னி எடுக்கிறார் சந்தானம். ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படம் பிடிக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். ரகுமான் யார் எனத் தெரியாமலே சஸ்பென்சாக வைத்து கடைசியில் உண்மை தெரிய வரும் போது நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. நன்றாக நடித்து இருக்கிறார். படத்தில் வேஸ்ட் செய்யப்பட்டவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம். டெல்லி கணேஷ், சம்பத், ரோகிணி, நீயா நானா கோபி.. திரையில் வந்து போகிறார்கள்.


யுவன் ஷங்கரின் இசையில் ஒரு தேவதை, ஏதோ செய்கிறாய் என்று இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஓகே தான். அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். டாப் ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் நன்றாக இருக்கிறது. டப்பா கதைக்கு சொதப்பல் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அகமத். மணல் ஓவியத்தில் ஜெய் காதலை சொல்லும் காட்சியிலும், பீஹார் கூட்டத்தை பயன்படுத்தி ஜெய் வில்லன்களை அழிக்கும் காட்சியிலும் அகமதின் டச் தெரிகிறது. படத்தில் சுவாரசியமாக இருப்பது கடைசி பத்து நிமிஷம் தான். ஆனால் அங்கு வந்து சேர்வதற்குள் நமக்கு மண்டை காய்ந்து விடுகிறது.


வாமனன் - வெத்துவேட்டு


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 9, 2009

மிருகவதை (உயிரோடை போட்டிக்காக)...!!!

"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி சும்மாவே இருக்கப் போறீங்க.. எதுவும் பண்ணுற ஐடியாவே இல்லையா?"

அவன் அவளைப் பார்த்தான். அழகாக இருந்தாள். எளிமையான அலங்காரம். நாசூக்காக உடை உடுத்தி இருந்தாள். எதற்காக இந்தத் தொழிலுக்கு வந்திருப்பாள்? யோசித்தான். தன்னைப் பற்றி அவளிடம் சொன்னால் என்ன என்று தோன்றியது.
"இன்னைக்கு என்னோட ஆறாவது திருமண நாள்.."

"சரி..?"

"ஆனா.. அவ என்கூட இல்ல.."

"ஏன்? எங்க இருக்காங்க..?"

"செத்துப்போயிட்டா..."
"ஐயயோ...எப்படி..?"
***************
முதல் முதலாக பெண் பார்க்க போன போது..
"ஏங்க..உண்மையா சொல்லுங்க.. என்னை உங்களுக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா?"

"ஏன் அப்படி கேக்குறீங்க.."
"நீங்க அழகு.. அழகுன்னாலும் அப்படி ஒரு அழகு.. தேவதை மாதிரி.. நானோ கருப்பு.. அப்புறம் வேலை... என்ன மாதிரி மூணு மடங்கு சம்பளம் வாங்குறீங்க.. என்னைக் கல்யாணம் பண்ணிக்க எப்படி ஒத்துக்கிட்டீங்க?"

"ஐயோ.. எனக்கு அழகுல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க..மனசுதான் முக்கியம்..எங்க அப்பா,அம்மாவுக்கு உங்களை பிடிச்சு இருக்கு.. எந்த கெட்ட பழக்கமும் இல்லை..போதாதா..?"
***************
அவன் நண்பர்கள் வேற மாதிரி சொன்னார்கள்.
"டேய்.. அவ எல்லா விதத்துலயும் உன்ன விட ஒசத்தி.. இருந்தும் உன்ன கட்டிக்க சம்மதிக்கிறான்னா..? மொதல்லேயே அவள உன்னோட பிடிக்குள்ள வச்சுக்கோ.. இல்லன்னா அவ கால சுத்துற நாயா மாறிடுவ..".
முதலிரவு. பல கனவுகளோடு உள்ளே வந்தாள். பூ மலர்வதை போல மென்மையான உறவாக இருக்கும் என எண்ணி இருந்தாள். ஆனால் அவன் அவளை கசக்கி நுகர்ந்தான். ஆண்மையை நிலைநாட்டி விட்டதாக எண்ணிக் கொண்டான். அவள் நொறுங்கிப் போனாள்.
***************
அவள் அவனுக்காக தன்னையே மாற்றிக் கொண்டாள். நண்பர்கள் யாருடனும் பேசக் கூடாது... சரி. அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது.. சரி. ஒரு கட்டத்தில் வேலையையும் விட சொன்னான். செய்தாள். இருந்தும் அவளால் அவனை திருப்தி செய்ய முடியவில்லை. கடைசியாக அவளுடைய உறவினர் ஒருவரோடு அவளை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தினான். அழுது புலம்பினாள். நம்ப மறுத்தான். ஒரு மழை நாளின் இரவில் தூக்கு போட்டு செத்துப்போனாள்.
***************
அவன் அழுது கொண்டிருந்தான்.
"நானே அவளைக் கொன்னுட்டேன்.. பொத்தி பொத்தி வைக்குறதா நெனச்சு.. கடைசி வரை அவளைப் புரிஞ்சுக்கவே இல்லை.." தலையில் அடித்துக் கொண்டான்.
அவள் அவனை ஆதரவாக தோளில் சாய்த்துக் கொண்டாள். "அழாதீங்க.. என்னைக்கு உங்க தப்பை உணர்ந்துட்டீங்களோ.. அப்பவே எல்லாம் சரியாப் போச்சு.. உங்களுக்கு வேண்டியது ஒரு நல்ல துணைதான்.. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க..எல்லாம் சரி ஆகிடும்.."
அவன் அவளை மெதுவாக அணைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். பசி கொண்ட மலைப்பாம்பாய் அவள் மீது பரவினான். அவள் அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள். உடலெங்கும் முத்தமிட்டவாறே அவள் முகத்தை நெருங்கினான். அவள் கண்கள் செருகிக் கிடந்தாள். கிட்டத்தில் பார்த்த போது.. அந்தக் கண்கள்.. அவள் முகம் இறந்து போனவளின் முகம் போலவே தோன்றியது.
"என்ன தைரியம் இருந்தால் என்னை தனியே தவிக்க விட்டு செத்துப் போவாய்...? இந்தக் கழுத்தை அப்படியே நெறித்தால் என்ன..?"
மெதுவாக அவள் கழுத்தைப் பற்றினான். முதலில் அவள் அதை கவனிக்க வில்லை. பிடி இறுகத் தொடங்கியதும் தான் சுதாரித்துக் கொண்டாள். அவனை உதற முற்பட்டாள். முடியவில்லை. மூச்சு முட்டத் துவங்கியது. பலம அனைத்தையும் திரட்டி அவனைத் தள்ளி விட்டாள். தூரப் போய் விழுந்தான்.
"ச்சே,, மனுஷனா நீ..? ஏன் இப்படி செஞ்சே.."
"மன்னிச்சிடும்மா.. நான் என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியல..ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்ன மன்னிச்சிடு.."
"உனக்கு வேண்டியது ஒரு நல்ல துணை இல்ல.. நல்ல டாக்டர். உன்னோட காம்ப்ளக்ஸ் எந்தப் பொண்ணு கூடவும் உன்னை ஒழுங்கா வாழ விடாது. தயவு செஞ்சு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணிடாத..".
உடையை சரி பண்ணிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறினாள். அவன் மீண்டும் தனியனாக அழுது கொண்டு இருந்தான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 7, 2009

நாடகம்

சிவா படுக்கையில் புரண்டு படுத்தான். ஏதோ சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து போயிருந்தது. நேரத்தைப் பார்த்தான். மணி இன்னும் ஏழு கூட ஆகவில்லை. சத்தம் இப்போது தெளிவாகக் கேட்டது. அவனுடைய அம்மாதான் பேசிக் கொண்டிருந்தார்.




"உன்னோட ஒரே எழவாப் போச்சு. ஏன் என்னோட உசிர வாங்குற? உன்னோட அலக்குடுத்தே நான் சீக்கிரம் போய் சேர்ந்துடுவேன் போல இருக்கு..".




எரிச்சலோடு எழுந்து வெளியே போனான் . ஹாலில் கிடந்த கட்டிலில் அவனுடைய பாட்டி தலை கவிழ்ந்து மெளனமாக உக்கார்ந்து இருந்தார்.




"ஏம்மா.. காலங்கார்த்தால எதுக்கு அம்மாச்சிய திட்டிக்கிட்டு இருக்கீங்க..?"




"வாடாப்பா.. எங்கடா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.. சப்போட்டுக்கு வந்துட்டியா? உனக்கு அவங்க பண்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதே.. நான் பேசுறது மட்டும் பெரிசாப் படும்.. எனக்குன்னு இந்த வீட்டுல யாரு இருக்கா? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.."




"இப்ப என்ன ஆகிடுச்சுன்னு இப்படி பொலம்புரீங்க?"




"இன்னைக்கு காலைல பால்காரன் வர மாட்டேன்னு நேத்திக்கே சொல்லிட்டான்.. சரி இந்த அம்மாக்கு காலைல காப்பி போட்டு தரனுமேன்னு ராத்திரி நான் குடிக்கிற பாலை குடிக்காம பிரிட்ஜில எடுத்து வச்சிட்டேன். ஆனா இந்தம்மா பக்கத்து வீட்டு பொண்ணுக்கிட்ட நாளைக்கு எனக்கு காப்பி போட்டுத் தரியான்னு போய் கேட்டிருக்கு.. காலைல விடியறதுக்கு முன்னாடி அவ கதவைத் தட்டிக்கிட்டு நிக்கிறா.. காப்பியோட.. அப்படின்னா நான் என்ன இந்தம்மாவ பட்டினி போட்டுக் கொல்லுறேனா? இவங்களுக்கு நான் எதுல குறை வச்சேன்? ஏன் ஒண்ணுமே செய்யாத மாதிரி நடந்து நம்ம மானத்த வாங்கணும்?"




சிவா திரும்பி பாட்டியை பார்த்தான். அவர் பாவமாக உக்கார்ந்து இருந்தார். அம்மா இன்னும் பேசிக் கொண்டே இருந்தார். இப்போதைக்கு இது முடியாது எனத் தோன்றியது. அவனுடைய வீட்டில் இது தினமும் நடப்பது. பழகி விட்டிருந்தது. துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.




சிவா. நண்பர்களுக்கு செல்லமாக சிவகுருநாதன். இளைஞன். இன்னும் திருமணமாக வில்லை. மதுரையில் ஒரு கம்பனியில் சேல்ஸ் ரெப்பாக இருப்பவன். வீட்டில் இருப்பது நான்கு பேர் மட்டுமே. அவனுடைய அப்பா, அம்மா, அம்மாச்சி..கூடவே அவனும். சற்றே வசதி குறைந்த குடும்பம். வாடகை வீடு. அப்பாவுக்கு ஊர் ஊராகப் போய் படம் வரையும் வேலை. அம்மாவின் திறமையால் தான் வீட்டில் பிரச்சினை இல்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.





அம்மாச்சி..அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் சிவாவுக்கு கண்கள் கலங்கி விடும். அம்மாச்சிக்கு பிறந்தது மொத்தம் நாலு பிள்ளைகள். மூன்று பெண்களும் ஒரு பையனும். அவனுடைய அம்மா தான் மூத்தவர். சித்திகள் இருவரும் இப்போது உயிரோடு இல்லை. தாத்தா மாமா வீட்டில் இருந்தார் . சிவாவின் அம்மாச்சி ரொம்ப வைராக்கியம் மிக்கவர். பதினைந்து வருங்களுக்கு முன்பு அவனுடைய தாத்தா ஏதோ அவரைத் தப்பாக பேசிவிட, அன்று முதல் அவரோடு பேசுவதையே நிறுத்திக் கொண்டார். மாமாவால் இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து பார்க்க முடியாத காரணத்தால் நான்கு வருடத்துக்கு முன்னாடி அம்மாச்சி சிவா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.





அம்மாச்சி வீட்டுக்கு வந்த புதிதில் ஏதும் பிரச்சினைகள் இருக்கவில்லை. ஆனால் போகப்போக சிவாவின் அம்மாவுக்கு அவருடைய சுதந்திரம் பறிக்கப் பட்டதை போலத் தோன்றியது. நினைத்த இடங்களுக்கு போக முடியவில்லை. எங்கே போனாலும் அம்மாச்சிக்கு வேண்டியதை செய்து விட்டுத்தான் செல்ல வேண்டி வந்தது. அதற்குத் தகுந்தாற்போல அம்மாச்சியின் குணங்களிலும் நிறைய மாற்றங்கள்.





முதுமையின் ரேகைகள் அவரின் மீது படியத் தொடங்கி இருந்தது. யாரையும் நம்ப மறுத்தார். சொன்னதையே பத்து தடவை சொல்வது, சொன்னால் அந்தக் காரியம் உடனே நடக்க வேண்டும் என்பது என்று அடம் பிடிக்கத் தொடங்கினார். கண்முன்னே அவர் குழந்தையாக மாறுவதை சிவாவால் உணர முடிந்தது. ஆனால் அதை சிவாவின் அம்மாவால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. பாட்டியின் நிலை பற்றி சிவா எடுத்துச் சொன்னால் அதை ஏற்க மறுத்தார். மாறாக தனக்கும் தன் பிள்ளைக்கும் இடையே பிரச்சினை வரக் காரணமாக இருப்பதாக அம்மாச்சியின்மீது வெறுப்பு கொள்ளத் தொடங்கினார்.




ஒரு ஞாயிற்றுக்கிழமை. சிவாவின் அம்மா மார்கெட்டுக்கு போயிருந்த சமயம். சிவா வீட்டில் உக்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அம்மாச்சி மெதுவாக நடந்து வந்து அவன் அருகே அமர்ந்தார்.




"என்ன அம்மாச்சி.. என்ன வேணும்?"




"நான் சொல்றத உங்கம்மா கிட்ட சொல்லிடாதையா.. வர வர அவ பேசுற பேச்சு தாங்க முடியல.. பெத்த தாயை நாயே பேயனு எல்லாம் பேசுறா.. என்னால அவ நிம்மதியே போச்சுன்னு கேவலமாத் திட்டுறா.. ஒரு சில வார்த்தைகள் எல்லாம் உன்கிட்ட சொல்லக் கூட முடியாது.. நான் இப்போ எல்லாம் கடவுள் கிட்ட என்ன வேண்டிக்கிறேன்னு தெரியுமா? கூடிய சீக்கிரம் நான் செத்துப் போய்டனும்னு தான்.. எனக்கு இருக்குற ஒரே சொந்தம் நீதான்.. என்னைய நல்ல படியா தூக்கி போட்டுரு.." சொல்லி முடித்து அவனை பார்த்து கையெடுத்து கும்பிட சிவா ஆடிப் போனான். அன்றில் இருந்து அம்மாச்சியை பார்த்துக் கொள்ளும் வேலையை வீட்டில் இருக்கும் போது முழுதுமாக அவனே செய்ய ஆரம்பித்தான். நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.




அன்றைய பொழுது நல்லதாகத்தான் விடிந்தது. ரொம்ப நாளாக தீர்க்கப் படாமல் இருந்த செட்டில்மென்ட் ஒன்று சரியாகி சிவாவின் கைக்கு பணம் வந்து இருந்தது. நண்பர்களோடு சிரித்துப் பேசியவாறே தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது போன் வந்தது. அவனுடைய மாமா.




"தம்பி.. உடனே கிளம்பி வா.. அம்மாச்சி தவறிட்டாங்க.."




திக்கென்றிருந்தது. அடித்து பிடித்து வீட்டுக்கு வந்தான். கட்டிலில் அம்மாச்சியின் உடம்பை கிடத்தி இருந்தார்கள். மாலை போட்டு தலை மாட்டில் ஊதுவத்தி ஏத்தி வைத்து இருந்தார்கள். கால்மாட்டில் சிவாவின் அம்மா அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.




"டேய்.. சிவா.. பாருடா.. உங்க அம்மாச்சி நம்மள எல்லாம் விட்டுப் போய்ட்டாங்கடா.. அம்மா.. பாரும்மா.. உன் பேரன் வந்திருக்கான்.. கண்ணத் தொறந்து பாரும்மா.. வார்த்தைக்கு வார்த்த விஜயா, விஜயான்னு கூபிடுவியே.. இனிமே யாரும்மா என்ன அப்படி கூப்பிடுவா...நீ இல்லாம நான் எப்படிம்மா இருப்பேன்.. ஐயோ.."




அவன் ஏதும் பேசாமல் பாட்டியின் காலடியில் போய் உட்கார்ந்தான். கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அவன் அழுதது எதற்காக என்பதை அவனுக்கு மட்டுமே தெரியும்.



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 6, 2009

உக்கார்ந்து யோசிச்சது(06-07-09)...!!!

ராகவன் நைஜீரியா - பதிவுலகில் இந்தப் பெயரை அறியாதவர்கள் ரொம்பக் கம்மியாகத்தான் இருக்க முடியும். பின்னூட்ட சுனாமி, சூறாவளி என என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். சென்ற வாரம் அண்ணன் தனது குடும்பத்தோடு மதுரைக்கு வந்து இருந்தார். புதன்கிழமை மாலை மதுரை பதிவுலக நண்பர்களான தருமி ஐயா, சீனா ஐயா, ஸ்ரீதர் மற்றும் சுந்தரோடு சென்று அவரை சந்தித்தேன். கண்டிப்பாக வருவதாக சொல்லி இருந்த தேவன்மாயம் அவர்களால் கடைசி நேர அலுவல்களால் வர இயலாமல் போனது. ராகவன் அண்ணன் ஒரு தன்மையான மனிதர் என்பதைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. போனிலோ, சாட்டிலோ இதற்கு முன்னர் நான் அவரோடு பேசியது கிடையாது. இருந்தபோதும் ரொம்ப நாள் பழகியவர்கள் போல இயல்பாகப் பேசினார்.
அவருடைய தங்கமணியும் அவரைப் போலவே அன்பானவர். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பது இன்னும் சந்தோஷத்தை தந்தது. அவர்களின் பாசத்துக்குரிய மகன் அரவிந்த். நிறைய பொது விஷயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறான். நான் வழக்கம் போல அவனுடன் தமிழ் சினிமா பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். (ஹி..ஹி..ஹி.. நமக்கு அதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாதுல்ல..). அன்றைய இரவு, அண்ணனின் புண்ணியத்தில் அருமையான விருந்து ஒன்றும் நடைபெற்றது. பின்பு அனைவரும் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம். சொந்த வேலைகளுக்கு ஊடே பதிவுலக நண்பர்களையும் அண்ணன் சிரமப்பட்டு சந்தித்து வருகிறார் என்பது ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கெங்கோ இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்கும் தமிழுக்கும், இணையத்துக்கும் கண்டிப்பாக நான் நன்றி சொல்லியாக வேண்டும்.
***************
சனிக்கிழமை மாலை திடீரென எனது பாட்டிக்கு உடம்பு முடியாமல் போனது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போக ஆட்டோ பிடிக்கப் போனேன். எங்கள் காலனி வாசலில் நின்ற ஆட்டோக்காரர் ஒருவரிடம் இடத்தை சொன்னேன். எழுபது ரூபாய் கேட்டார். டக்கென சரி என்று சொல்லி கூட்டிக் கொண்டு வந்தேன். அங்கே போன பிறகு அவரிடம் பணத்தை கொடுத்தேன். சாரி சார் என சொல்லி பத்து ரூபாயை திருப்பிக் கொடுத்தார். என்னங்க என்று நான் கேட்க, "உண்மையில அறுபது ரூபா தான் சார் ஆகும்.. ஆனா நான் நியாயமா சொன்னா மக்கள் பத்து ரூபா குறைச்சுக் கேப்பாங்க.. அதனால எப்பவும் பத்து ரூபா கூட்டி சொல்லுவேன். ஆனா நீங்க பேரம் பேசாம வந்துட்டீங்க.. உங்களைப் போய் ஏமாத்தலாமா சார்? எங்க கஷ்டத்த மக்கள் புரிஞ்சிக்கிட்டா நாங்க ஏன் சார் பிரச்சினை பண்ணப் போறோம்?" என்று சொன்னார். இப்படியும் மக்கள் இருக்கிறார்களே என்று கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
***************
ஒரு பதிவுலக கிசிகிசு..
கேலிக்கும் கிண்டலுக்கும் பெயர் போன பதிவர் அவர். எதிர்ப்பதிவு போட்டே பிழைப்பு நடத்துபவர். சமீபமாக இன்னொரு கடையை திறந்து வைத்துக்கொண்டு வருவோர், போவோரை எல்லாம் உரசிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னலாடை நகரில் இருந்து எழுதும் வார்த்தைகளின் ராஜாவான பதிவர் மீது இவருக்கு அப்படி ஒரு தனிப்பாசம். அவரே ஆடிக்கொரு தரம், தேர்தலுக்கு ஒரு தரம் எனப் பதிவு போடுபவர். அவர் சினிமா விமர்சனம் போட்டால் கூட நான் எதிர்ப்பதிவு போடுவேன் எனக் கிண்டல் செய்பவர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதாக கேள்வி..
**************
நேற்று இரவு மதுரையின் தெருக்களில் பொழுது போகாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். சாலையில் பயங்கர வாகன நெரிசல். ஒரு வண்டியின் பின்னால் சின்னப்பெண் ஒருத்தி எதிர்ப்பக்கமாக திரும்பி உக்கார்ந்து இருந்தாள். ஏழெட்டு வயது இருக்கலாம். வண்டியை ஒட்டியது அவள் அப்பாவாக இருக்கக்கூடும். ஒரு கையில் சாக்லேட், மற்றொரு கையில் ஐஸ்க்ரீம். சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் பாட்டு பாடியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களில் தான் இன்னும் வாழ்க்கையின் அர்த்தம் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
***************
ஒரு கவிதை மாதிரி..

தெரியாமல் விழுந்து இருக்கக்
கூடும் - இல்லையெனில்...
ஏதேனும் ஆத்திரத்தில் எறிந்து
விட்டிருக்கலாம் - இல்லையெனில்..
விபத்தாக இருக்கக்
கூடும் - இல்லையெனில்..
கேள்விகளை எழுப்பியபடியே
இருக்கிறது.. காலையில்
பயணத்தின் போது பார்த்த
குழந்தையின் ஒற்றைக் கால்செருப்பு..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 4, 2009

சர்தார் ஜோக்ஸ்...!!!

சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.



நண்பர்: இப்போ என்ன ஆச்சு?



சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!




***************




கோர்ட்டில்...



ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..



சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...



ஜட்ஜ் : ஷட் அப்..



சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..



ஜட்ஜ்: ????!!!!




***************




ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?



சர்தார்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!




***************




சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?



சர்தார் B.A (Bachelor Again)




சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?



சர்தார் M.A (Married Again)




***************






சர்தார் (கவலையுடன்):வேய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே...



நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?



சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல..



***************



சர்தார் 1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?



சர்தார் 2: கரண்ட் இல்லடா..



சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு..



சர்தார் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?



***************



சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..



மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..



சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..



***************



சர்தார் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?


சர்தார் 2: முடிஞ்சா வரேன்..


சர்தார் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு..


***************



(சர்தார்களை அநியாயத்துக்கு ஓட்டுறோம். ஆனா உண்மையிலேயே அவங்க ரொம்ப புத்திச்சாலிங்க, திறமைசாலிங்க. ஒரு சர்தார் பிச்சைக்காரனைக் கூட யாரும் பார்க்க முடியாதுன்னு சொல்வாங்க. அதனால, அவங்க திறமையைப் பத்தி ஒரு ஜோக்.. )



இங்கிலாந்து. ரயில் நிலையம். மூன்று சர்தார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மூன்று வெள்ளையர்கள். சர்தார் போய் ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி வந்தார். வெள்ளைக்காரர்களுக்கோ ஆச்சரியம். எப்படி ஒரே ஒரு டிக்கட்டில் இவர்கள் பயணம் செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார்கள் . ரயில் வந்ததும் எல்லோரும் ஏறினர். டிக்கட் செக் பண்ண ஆள் வந்தபோது மூன்று சர்தாரும் எழுந்து கழிவறைக்குள் சென்று நின்று கொண்டார்கள். TTE கதவை தட்ட ஒரே ஒரு கையை மட்டும் நீட்டி டிக்கட்டை நீட்ட, அவர் போய் விட்டார்.




ஆகா, இத்தனை நாள் இதை நாம் செய்யாமல் போய் விட்டோமே என்று வெள்ளைக்காரர்களுக்கு தோன்றியது. திரும்பி வரும்போது வெள்ளைக்காரர் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தார்கள். இந்த முறை சர்தார்கள் ஒரு டிக்கட் கூட எடுக்க வில்லை. மற்றவர்களுக்கோ குழப்பம். என்னடா இந்தத் தடவை டிக்கட்டே எடுக்க வில்லை, சரி பார்ப்போம் என்று ரயிலில் ஏறினார்கள். வெள்ளை மக்கள் மூவரும் TTE வருவதைப் பார்த்தவுடன் கழிவறைக்குள் ஓடி விட்டனர். இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்..



"சார்.. டிக்கட்..?"


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

July 2, 2009

கடவு - எஸ்ரா, கோணங்கி மற்றும் தமிழ்நதியின் விவாதம்..!!!

சனிக்கிழமை இரவு மூன்று மணி வரை ஆட்டம் போட்டதால் ஞாயிறு அன்று காலை தாமதமாகத்தான் கிளம்ப முடிந்தது. அரங்கத்துக்கு நானும் ஸ்ரீதரும் போய் சேர்ந்தபோது காலை பதினோரு மணி ஆகி விட்டது. நாங்கள் உள்ளே நுழைவதற்கும் கோணங்கியின் கதைகள் பற்றிய கட்டுரை வாசிக்கப்பட்ட நேரத்திற்கும் சரியாக இருந்தது. அரங்கில் எஸ்ராவும் கோணங்கியும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
உண்மையை சொல்வதானால் எனக்கு கோணங்கியின் எழுத்துக்கள் சுத்தமாக புரிபடுவது இல்லை. அம்ருதா வெளியீடான அவருடைய முத்துக்கள் பத்து என்னும் சிறுகதைத் தொகுப்பை படிக்க முயற்சித்து, கதைகள் புரியாமல் மூடி வைத்து விட்டேன். இதை நண்பர் நரனிடம் சொன்னபோது அவரின் கருத்து வேறு மாதிரி இருந்தது. நரன் என்னிடம் கோணங்கி பற்றி வெகுவாக சிலாகித்து சொன்னார். அவர் ஒரு உண்மையான தேசாந்திரி எனவும் அவருடைய எழுத்துக்கள் அனைவரையும் கட்டிப்போடக் கூடியவை என்றும் சொன்னார். ஆனால் கோணங்கியின் எழுத்துக்கள் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுவன என்பதையும் குறிப்பிட்டு இருந்தார். எனவே கோணங்கி பற்றிய கட்டுரையை கவின்மலர் வாசித்தபோது கூர்ந்து கவனித்தேன்.
கட்டுரையை பற்றி பேசுவதற்காக எஸ்ரா அழைக்கப்பட்டார். அருமையாகப் பேசினார். அவர் சொன்னதில் சில வரிகள்...
"கோணங்கியின் எழுத்துக்கள் நிறைய பேரை போய் அடைவதில்லை. காரணம் அவரின் மொழி. மொழியில் அவர் புதிய வார்த்தைகளை, புதிய தளங்களை உண்டாக்குகிறார். அவரின் கதைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கதை சொல்லும் கதைகள். கதை சொல்லாத கதைகள். வாசகனையும் கதையின் ஒரு பாத்திரமாக இழுத்துச் செல்லும் உத்தி அவருடையது. ஆழ்ந்த வாசிப்பின் மூலம் நாம் அவற்றை புரிந்து கொள்ள முடியும். தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் அவரும் ஒருவர்.
நான் சமீபத்தில் ஒரு ஸ்தபதியை சந்தித்தேன். அவர் ஆண், பெண் சிற்பங்களை உருவாக்குகிறார். ஆனால் கை, கால், தலை, உடம்பு என எல்லாவற்றையும் தனித்தனியே செய்கிறார். அவற்றை எவ்வாறு இணைப்பது என்பதை கடைசியில் முடிவு செய்கிறார். உதாரணமாக ஒரு ஆணின் காலையும், ஒரு பெண்ணின் காலையும் கொஞ்சம் இடைவெளி உடன் வைத்தால் அவை அண்ணன் தங்கையை குறிக்கின்றன. அதே கால்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தால் அவர்கள் காதலர்கள். அந்த இடைவெளியை தீர்மானிப்பவன் கலைஞன். இதுதான் கோணங்கியின் சூத்திரமும் கூட. தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடம் அவருக்கு உண்டு."
எஸ்ராவைத் தொடர்ந்து கோணங்கி பேசினார். அவருடைய எழுத்தைப் போலவே பேச்சும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. ஆதி மனிதன், பனிவாள் என்றெல்லாம் சொன்னார். கண்டிப்பாக அவருடைய புத்தகங்களைத் தேடித் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பின்பு சிறிது நேரம் பதிவுலக நண்பர் கும்கியுடன் செலவிட முடிந்தது. மனிதர் இலக்கியத்தில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சாரு, சமகால இலக்கியம் என்று நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து அறிய முடிந்தது. நண்பர் வால்பையன் புண்ணியத்தில் குழந்தை மனம் படைத்த கவிஞர் விக்கிரமாதித்யனின் அறிமுகமும் கிடைத்தது.
தோழி உமாஷக்தியிடமும், நண்பர் அமிர்தம் சூர்யாவிடமும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். மதிய உணவுக்குப் பின் சிறுகதைகள் குறித்த உரையாடல்கள் தொடர்ந்தன. ஜி.முருகனின் "சாம்பல் நிற தேவதை" என்னும் புத்தகத்தை பற்றி இரா.சின்னசாமி என்பவர் பேசினார். புத்தகத்தை விமர்சனம் செய்ததை விட தான் எந்த வகையில் அந்தப் புத்தகத்தை விமர்சிக்கத் தகுதியானவன் என்பது பற்றியும், தன்னுடைய வாசிப்பு அனுபவம் பற்றியும் அதிகம் பேசினார். திருச்செந்தாழையின் "வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்" என்னும் புத்தகத்தை லக்ஷ்மி சரவணக்குமார் விமர்சித்தார். பாராட்டினை விடவும் புத்தகத்தின் குறைகளை பெரிதாகச் சொன்னார். மாலை நான்கு மணிக்கு உரையாடல் முடிவுக்கு வந்தது.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்க நாஞ்சில் நாடன் வந்து இருந்தார். அனைத்து எழுத்தாளர்களும் கலந்து கொண்ட ஒரு சிறு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய இலக்கிய சூழல் குறித்த தன்னுடைய கவலைகளை நாஞ்சில் நாடன் பகிர்ந்து கொண்டார். பெண்கள் பெருமளவில் கலந்து கொள்ள முடியாததையும், அப்படி வரும் பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். கடந்த முப்பது வருடங்களில் தமிழின் எந்தப் புத்தகம் பற்றிய விமர்சனமும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வந்தது இல்லை என்பதை சுட்டிக் காட்டினார். (இதை சமீபத்தில் சாருவின் தளத்தில் படித்ததாக ஞாபகம்). இன்றைய சூழ்நிலையில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு இருக்கக் கூடிய சவால்கள் பற்றி பேசும்படி கேட்டுக் கொண்டார்.
எஸ்ரா, கோணங்கி, சுரேஷ்குமார் இந்திரஜித், ஜி.முருகன், ஆதவன் தீட்சண்யா, தமிழ்நதி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பேசினார்கள். கடைசியாகப் பேசிய தமிழ்நதி வெகு நாட்களாக என் மனதில் இருந்த ஒரு கேள்வியை சபையில் போட்டு உடைத்தார். "இங்கே எல்லோரும் எழுதுவது பற்றி பேசினீர்கள். எனவே எழுதாமல் விட்டுப்போன ஒரு விஷயத்தை பற்றி நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். அருகாமையில் தமிழின மக்கள் கொத்துக்கொத்தாக செத்த பொது ஏன் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் அதைப் பதிவு செய்ய வில்லை?". இதற்கான ஒரு தெளிவில்லாத பதிலை கோணங்கியும், எஸ்ராவும் சொன்னார்கள். வருங்காலத்தில் கட்டாயம் இதைப் பற்றி எழுதுவோம் என்றார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆதவன் தீட்சண்யா பேசத்தொடங்கினார். "இலங்கை தமிழர்கள் எங்களை மதித்ததே கிடையாது. எங்கள் மக்கள் மேலவளவிலும், திண்ணியத்திலும் கஷ்டப்பட்டபோது அங்கிருப்பவர்கள் வருந்தினார்களா? நாங்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?". இந்த ரீதியில் போனது அவருடைய பேச்சு. எனக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது. இது என்ன சின்னப் பிள்ளைகள் சண்டையா? அன்னைக்கு என்னைய கொட்டுனைல.. பாரு இன்னைக்கு உன்னைய கடிச்சு வச்சுட்டேன்னு சொல்றதுக்கு? அதற்குள் அங்கிருந்த மக்களிலே ஒரு சிலர் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பேராசிரியர். அரசுக்கும் ஆதவனுக்கும் கொஞ்சம் பிரச்சினை ஆனது. இடையில் கவிஞர் விக்கிரமாதித்யனும் தனது எதிர்ப்பை சொன்னார். கடைசியாக நிகழ்ச்சியின் அமைப்பாளர் தேவேந்திர பூபதி வந்து அனைவரையும் சமாதானம் செய்து உரையாடலை முடித்து வைத்தார்.
இரண்டு நாட்கள். நண்பர்களின் அருகாமை. எக்கச்சக்கமான இலக்கிய அறிமுகங்கள். கொண்டாட்டம். மகிழ்ச்சிகளின் பரிமாற்றம். கடவுக்கும், அதன் அமைப்பாளர் கவிஞர் தேவேந்திர பூபதிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)