July 31, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (நிறைவு)..!!!

ஊறுகாயின் முதல் பகுதி இங்கே..

தூஸ்ரா பார்ட் இக்கட..

யார் அந்த ராகினி.. ராகினி.. ராகினி..

நீ எதுக்கு அவளுக்கு கார்டு போட்ட.. போட்ட.. போட்ட..

அது எப்படி அந்தக் குரங்குகிட்ட போச்சு.. போச்சு.. போச்சு..

பிளாஷ்பேக் ஸ்டார்ட்..

அது பாருங்க.. சின்ன வயசுல இருந்தே நமக்கு பொம்பளப் பிள்ளைங்கன்னா ஒரு இது.. அட.. இதுன்னா அதுதாங்க.. இப்போக்கூட எங்கம்மா பெருமையா சொல்லுவாங்க.. சிறுசுல எல்லாரும் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு ரொம்ப அடம் பிடிப்பாங்கள்ள.. நான் மட்டும் குடுகுடுன்னு ஓடிப்போய் ரிக்ஷாவுல ஏரி உக்காந்துக்குவேனாம்.. ஆனா அது ஏன்னு எனக்கு மட்டுதான் தெரியும். ஏன்னாக்க, அந்த ரிக்ஷாவுல ஒரே ஆம்பளப்பையன் நான்தான். அப்போ பார்த்துக்குங்க.. எந்த அளவுக்கு பிஞ்சுலேயே பழுத்த கேசுன்னு..

ஆள் வளர வளர, உல்டாவா அறிவு மங்கித்தான் போச்சு. கூட சேந்த டிக்கெட்டுகளும் அந்தக் கேசுதான். அப்புறம் எங்குட்டு உருப்பட? ஆறில் இருந்து அறுபது வரை.. அட படம் இல்லைங்க.. அந்த வயசுக்குள்ள இருக்குற ஒரு பிகரையும் விடுறது கிடையாது. ஆனா ஒரு கொள்கை. எதையும் எட்ட நின்னு ரசிக்கலாம்.. அவ்வளவுதான். தேவை இல்லாம தொந்தரவு பண்ணக் கூடாது.. நல்லா இருக்கில்ல?

ஓகே.. இன்னும் கதைக்குள்ளையே போகாம ஏண்டா இப்படி கழுத்த அறுக்குற - இது வாசிக்குரவங்களோட மைன்ட்வாய்ஸ். சோ.. இனி கதை..

ஒன்பதாம் கிளாஸ் தொடங்குற முத நாளன்னைக்கு அவளைப் பார்த்தேன். புதுசா வந்து எங்க கிளாஸ்ல சேர்ந்தா. ராகினி.. பாருங்க.. பேரை சொல்லும்போதே சிலிர்க்குது. அவளைப் பத்தி ஒரே ஒரு வாக்கியம். அவ்ளோ அழகு.

ஒழுசப் படத்துல வந்த ஒரே ஒரு நல்ல பிட்டு மாதிரி, அமாவாசைல வந்த நிலா மாதிரி.. எங்க கிளாஸ்ல இருந்த அத்தனை பிகரையும் அவ தூக்கி சாப்டுட்டா. அவக்கிட்ட பேச மாட்டோமான்னு எல்லாரும் ஏங்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அவ கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். பொம்பளப் பிள்ளைங்க கிட்டக் கூட யோசிச்சுத்தான் பேசுவா.

இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. அன்னைக்கு ஒரு நிறைஞ்ச சனிக்கிழமை. முந்தின நாள் சாயங்காலம் பார்த்த "காதலுக்கு மரியாதை" பாட்டை முனங்கிக்கிட்டே பியூரட்டைக் கழுவிக்கிட்டு இருக்கேன். பின்னாடி இருந்து யாரோ "ஹாய்"னு கூப்பிட திரும்புறேன். பார்த்தா.. அப்டியே ஷாக் ஆகிட்டேன். அங்கே ராகினி. கிளாசே பேசணும்னு நினைக்கிற ராகினி தானா வந்து என்கிட்டே பேசுறா.. ஐயோ.. ஐயோ.. இது கனவா இல்லை நிஜமா?

ஏன் எப்படின்னு தெரியல. ஆனா அங்க ஆரம்பிச்சு அவ எனக்கு நல்ல பிரண்ட் ஆகிட்டா. பசங்களுக்கு எல்லாம் ஒரே காண்டு. அவனுங்கள எவன் மதிச்சான்? கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓடிப் போச்சு. உள்ளுக்குள்ள உருவாகிட்ட என்னோட காதலை எப்போ அவக்கிட்ட சொல்றது?

அந்த நாள் தானா வந்துச்சு. என்கிட்டே அவளே எதேச்சியா கேட்டா.

"ஏன்டா.. என்னைய உனக்கு ரொம்பப் புடிக்குமா?"

"ஆமா ராகினி.. நிறைய.. நிறையப் புடிக்கும்.."

"எனக்காக என்ன வேணும்னாலும் செய்வியா?"

"கண்டிப்பா.. சொல்லு.. என்ன பண்ண? ஹோம் வொர்க் பண்ணலன்னு உன்ன அடிச்சானே வாத்தி.. அவன் மூஞ்சில பிளேட் போட்டுரவா? இல்ல வேற ஏதாவது?"

"ஏய்.. அதெல்லாம் வேண்டாம்.. நீ தைரியசாலிதான்.. ஒத்துக்குறேன்.. ஆனா அத எனக்கு புரூப் பண்ணனும்.."

"எப்புடி?"

"எங்க வீட்டுக்கு, என் பேருக்கு ஒரு கிரீட்டிங் கார்டு போடணும்.. அவ்வளவுதா.."

ஆகா.. மூர்த்தி.. இப்படி ஒரு வாய்ப்புக்குத்தாண்டா ஏங்கிக்கிட்டு இருந்த. யூஸ் பண்ணிக்கோ. கடை கடையா அலஞ்சு ஒரு பிரண்ட்ஷிப் கார்டு (அவங்க வீட்டுல மாட்டிக்கிட்டா சமாளிக்கனும்ல) வாங்கி.. அதுல அழகா கையெழுத்தும் போட்டு அனுப்பினா.. அதுதான் இப்போ ஒரு கொரங்கு கையில சிக்கி, அது வந்து என்னைய மிரட்டிட்டு போகுது. இது எப்படின்னு நாளைக்கு ராகினிக்கிட்ட கேட்டுரணும்.

பிளாஷ்பேக் ஓவர்.. இட்ஸ் டைம் டு கம் பேக் டு நார்மல்..

மறுநாள் ஸ்கூலுக்குப் போறேன். எனக்காக ராகினி படபடப்பாக் காத்துக்கிட்டு இருக்கா.

"என்னடா ஆச்சு? நேத்து ஸ்கூலுக்கு வரல?"

"அது.. அது.. அம்மா கூட கோயிலுக்குப் போயிட்டேன்.."

"அப்பாடா.. அவ்வளவுதான? நான் கூட யாரும் மிரட்டுனதால நீ மெரண்டு போய் வரலையோன்னு ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?"

டமார் டுமீர்.. எனக்குள்ள ஒரு டிரான்ஸ்பாமர் வெடிக்குது. என்னது.. என்னை ஆளுங்க மெரட்டினது இவளுக்கு தெரியுமா?

"உனக்கு எப்படி..?"

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"நேத்து சாயங்காலம் ராஜா வந்து என்கிட்ட பேசினான்.."

ராஜா? அது யாரு? ஓ.. ஓவரா ஆடுனானே அந்த ஒல்லிப்பிச்சான்.. அவனா? சரி..?

"இல்லடா.. தப்பா எடுத்துக்காத.. அவன் ரொம்ப நாளா என் பின்னால சுத்திக்கிட்டு இருக்கான்.. ஆனா அவன் என்ன விரும்புறானா இல்ல விளையாட்டுக்கு சுத்துறானான்னு தெரியல.. அதனாலத்தான்.."

"அதனால..?"

"உன்னை எனக்கு ஒரு கார்டு போடச் சொன்னேன்.. தெரியாத மாதிரி அந்தக் கார்ட நானே அவன் கண்ணுல படுற மாதிரி ரோட்டுல போட்டுட்டு போனேன்.. அதைப் பார்த்துட்டுத்தான் அவன் உன்னை மிரட்டினான்... அப்புறமா என்கிட்டே வந்து பேசிட்டான்.."

"ஐயையையோ.. அதுக்கு நீ என்ன சொன்ன?"

"சீ போடா.. எனக்கு வெக்கமா இருக்கு.." ஓடியே போயிட்டா.

அடப் பாதகத்தி.. அவன லவ் பண்றாளா? அப்போ நானு?

இப்போ இந்தக் கதையோட தலைப்ப நல்ல அழுத்திப் படியுங்க மக்களே..

ஊறுகா..

இப்படியாக ஒரு தெய்வீகக் காதல் ஊத்தி மூடப்பட்டது..!!!

July 29, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (2)..!!!

ஊறுகாயின் முதல் பகுதியை ருசிக்க இங்கே சொடுக்குங்கள்..

நான் ராகினிக்கு அனுப்பின கார்டு இந்த சிம்பான்சி கையிலையா? நம்ப முடியவில்லை இல்லை இல்லை.. எப்பிடி? நம்ம மூஞ்சி ஒரு தினுசா போறத ரசிச்சுக்கிட்டே குண்டன் பேச ஆரம்பிச்சான்.

"தம்பி, இந்தப் பையன் கிட்டத்தட்ட நாலு வருஷமா ராகினிய லவ் பண்ணிக்கிட்டு இருக்கான். அந்தப் பொண்ணோட ஏரியாதான். அப்படி இருக்குறப்ப நேத்து வந்த பய நீ... குட்டையைக் குழப்பலாமா?"

என்னது.. இந்தக் குரங்கா? ராகினிய லவ்வா.. உவ்வே.. (ஆமா.. இவர் பெரிய மன்மதக்குஞ்சு.. தூ..) மைன்ட்வாயிஸ் இப்படி சொன்னாலும் வாய் வேற மாதிரித்தான் பேசும் போல..

"இல்லண்ணே.. நான் அந்தப் புள்ளைய லவ்வெல்லாம் பண்ணல.. சும்மா விளையாட்டுக்குத்தான் கார்டு அனுப்புனேன்.."

"அடி செருப்பால.." ஒடிசல் பார்ட்டி காண்டாகி என் மேலேயே தாவிட்டான். ஏய் ஏய் இருப்பான்னு குண்டன் மேல விழுந்து காப்பாத்துனதால மீ த எஸ்கேப்பு.

"அவன்தான் லவ் பண்ணலைன்னு சொல்றானே.. அப்புறம் ஏன் இப்படி கோவப்படுற?"

"ஐயோ.. அவன் புளுகுராண்ணே.. இங்க பாருங்க. அவன் என்ன கையெழுத்து போட்டிருக்கான்னு... Yours , Only Yoursனு போட்டிருக்கான் பாருங்க.. இதுக்கு என்ன அர்த்தம்?"

"இல்லண்ணே.. அதுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது.. சும்மாத்தான் அப்படி எழுதுனேன்.."

குண்டன் கோபமாகி என்னைய முறைக்கிறான். ஆகா மூர்த்தி.. சிக்கிட்டியேடா..

"இந்த பாரு தம்பி.. சொல்றத சொல்லிட்டோம்.. இனியும் நீ ஒழுக்கமா இல்லன்னா அப்புறம் உங்க வீட்டுல வந்து பேசுற மாதிரி இருக்கும்.. ஆமா.. பார்த்து நடந்துக்க.. முடிஞ்ச அளவுக்கு அந்தப் புள்ள இருக்கற பக்கமே பார்க்காத .. என்ன புரிஞ்சுதா? மதுரைக்காராய்ங்களை பத்தி தெரியும்ல.." சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான் குண்டன்.

டேய்.. நானும் மதுரைக்காரந்தாண்டா.. கத்தலாம்தான்.. ஆனா கண்டிப்பா அடி விழும்.. சோ.. சகலத்தையும் மூடிக்கிட்டு சத்தம் போடாம வீட்டுக்கு வந்துட்டேன்.

அவனுக்கு அந்த கார்டு எப்படி கிடைச்சு இருக்கும்? ஒருவேளை போஸ்ட்மேனை கரெக்ட் பண்ணியிருப்பானோ? என்னோட ரூமுக்குள்ள வந்து கதவ சார்த்திக்கிட்டேன். ஏற்கனவே வீட்டுல ரொம்ப நல்ல பேரு... இந்த லட்சணத்துல இது வேறத் தெரிஞ்சுது.. அம்புட்டுத்தான்.

லைட்டா காய்ச்சல் வர மாதிரி இருந்தது. ச்சே ச்சே.. நான் தைரியசாலி.. இவய்ங்க எப்பவுமே இப்படித்தான் மிரட்டுவாய்ங்க.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா? இருந்தாலும் உடம்பெல்லாம் குது குதுன்னு ஆகிடிச்சு. போர்வையை இழுத்து போர்த்திட்டு படுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அம்மா வந்து தொட்டுப் பாக்குறாங்க...

"என்னடா இது.. உடம்பெல்லாம் நெருப்பா கொதிக்குது? காலைல நல்லாத்தான இருந்த.."

எல்லாம் விதி. வேற என்னத்த சொல்றது? அன்னைக்கு ஸ்கூலுக்கு மட்டம். புண்பட்ட நெஞ்சை படம் பார்த்து ஆத்தலாம்னு மத்தியான ஆட்டம் "மின்சாரக் கனவு" பார்த்தேன். கருமம் அதுலயும் ஒரே பொண்ண ரெண்டு பேர் லவ் பண்றானுங்க.. இது எங்கிட்டு வெளங்க?

ராத்திரி. தூக்கம் வராம கட்டில்ல புரண்டுக்கிட்டு இருக்கேன்.

யார் அந்த ராகினி.. ராகினி.. ராகினி..

நீ எதுக்கு அவளுக்கு கார்டு போட்ட.. போட்ட.. போட்ட..

அது எப்படி அந்தக் குரங்குகிட்ட போச்சு.. போச்சு.. போச்சு..

பாட்ஷா மாதிரி காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. வேற வழி இல்லை. நாளைக்கு ராகினிக்கிட்டயே விஷயத்த கேட்டுற வேண்டியதுதான்.

(மொக்க ஜாஸ்தியா இருக்குன்னு கோவிக்காதீங்க மக்களே.. அடுத்த பகுதில முடிச்சிடுறேன்.. அப்புறம்.. அங்கங்கே கலர்ல இருக்குறது எல்லாம் நம்ம மைன்ட் வாய்ஸ்னு ஞாபகம் வச்சுக்கொங்கப்பா..)

July 28, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை(1)..!!!

அவ காத்துல மிதந்து வர்றா. என் கிட்டக்க வந்து என் கைய எடுத்து அவ இடுப்புல வச்சுக்கிறா. அப்படியே பேக்ரவுண்டுல பாட்டு.. ஸ்டார்ட் ம்யூசிக்.

"அன்பே அன்பே கொல்லாதே.."

நச்சு.. நச்சு..

"அடடா.. இது என்ன அதிசயம்.. காதல்ல முத்தம் கொடுத்தா இச்சு இச்சுன்னு தான கேக்கும்? இங்க என்ன நச்சு நச்சு? அத்தோட வலிக்குது? சரி விட்ட இடத்துல இருந்து தொடருவோம்.. அன்பே அன்பே கொல்.."

மறுபடியும் அந்த நச்சு நச்சு..

ச்சே.. கனவுல கூட நிம்மதியா காதலிக்க விட மாட்டாய்ங்களே.. என்ன கொடுமை சார் இது? அரைக்கண்ண மெதுவா தொறந்து பார்த்தா.. எதிர்த்தாப்பிடி பத்ரகாளி கணக்கா எங்கம்மா. ஓ.. என்னை மிதிச்சது நீதானா?

"ஏம்மா காலங்கார்த்தால இப்புடி உயிரை வாங்குற?"

"ஏண்டா நாயே.. எட்டு மணி உனக்கு காலங்கார்த்தலையா? எந்திரிடா.. ஸ்கூலுக்குப் போக வேணாம்? வெளில உன்னைப் பார்க்க யாரோ ரெண்டு தடிப்பசங்க வந்திருக்காய்ங்க.. என்னன்னு போய் பாரு"

ஆகா? யாரப்பா அது? இந்த உலகப் புகழ் பெற்ற தலைவரை காலைல தேடிக்கிட்டு வந்திருக்கிறது? கைலி பனியனோட எந்திரிச்சி வெளில வந்தேன். அங்க ரெண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தானுங்க. எங்கம்மா சொன்னதுல தப்பே இல்ல.

ஒருத்தன் ஒடிசலா வளர்த்தியா இருக்கான். மத்தவன் கொஞ்சம் குண்டு. ஆளும் குட்டை. அவங்களுக்கு என் வயசுதான் இருக்கும். ராஜ்கிரண் படமெல்லாம் பார்த்திருக்கீங்க தான.. அதுல ஓடி வந்து அவர்கிட்ட அடி வாங்கி ரெண்டா மடிஞ்சு விழுவானுகளே.. அதே மாதிரி இருக்கானுங்க. என்ன அவங்க எல்லாம் கைலியும் அரைக்கை சட்டையும் போட்டிக்கிட்டு திரிவானுங்க. இதுக பேன்ட் போட்டு பனியன் போட்டிருக்குதுக. அவ்வளவுதான் வித்தியாசம்.

(கதை நடப்பது 1998 ல - அதனால ராஜ்கிரண் படத்த எடுத்துக்காட்டா சொல்ல வேண்டியிருக்கு.. அப்புறம் கதைல லாஜிக், நேட்டிவிட்டி எல்லாம் இல்லைன்னு சொல்லக் கூடாது பாருங்க..)

"யார் நீங்க.. உங்கள எனக்கு தெரியலையே.."

"குமார் அண்ணே அனுப்பிச்சாரு. நாங்க சிவாவப் பார்க்க வந்தோம்.. உங்களைக் கேட்டா தெரியும்னு சொன்னாங்க..."

"ஹலோ ஹலோ.. யார் சிவா.. யாரு குமார்.. எனக்குத் தெரியாதே?"

"நீங்க மூர்த்திதான.."

"ஆமா"

"சுந்தரம் ஸ்கூல்ல பத்தாப்பு?"

"டபுள் ஆமா.."

"அப்பா நாங்க சரியாத்தான் வந்திருக்கோம்.. கொஞ்சம் சட்டைய போட்டுக்கிட்டு வாங்க தம்பி.. நடந்துக்கிட்டே பேசுவோம்..."

இவங்க பேசுற தோரணையே சரியில்லையே.. யோசிச்சுக்கிட்டே சட்டைய போட்டுக்கிட்டு கிளம்புறேன். தெரு முக்குக்கு வந்தாச்சு. அது வரைக்கும் அமைதியா வந்துக்கிட்டு இருந்தவங்கள்ள குண்டா இருந்தவன் திடீர்னு என் பக்கம்மா திரும்புறான்.

"ஏன்டா வெண்ண.. வந்தோமா படிச்சோமான்னு போகாம உனக்கு எதுக்குடா இந்த வெட்டி வேலை எல்லாம்?"

அடக் கருமம் படிச்சவனே.. என்ன பிரச்சினைனே சொல்லாம இப்படி திடீர்னு திட்டுறியே.. நீ வெண்ணையா நானா? நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு?

"என்ன சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல"

"அட என்னண்ணே நீங்க.. இவன்கிட்ட போய் பேசிக்கிட்டு.. ரெண்டு நொக்கு நொக்கு நோக்கிட்டு போய்க்கிட்டே இருப்போமா? அத விட்டுட்டு?" வளந்தவன் எம்மேல பாயப் பார்க்க மத்தவன் அவனைத் தடுத்துட்டான்.

ஆகா.. ஏதோ பெரிசா மாட்டி இருக்கோம் போல இருக்கே.. இவ்ளோ டெரரா இருக்கான்.. அப்படி என்ன தப்பு பண்ணினோம்? எனக்கு அடிவயத்துல அப்படி புளிய கரைக்க ஆரம்பிக்குது.

"அண்ணே.. நான் என்ன தப்பு பண்ணினே... சொல்லிட்டு அடிங்க.. ஆமா.."

"டேய் தம்பி.. அத எடுர்றா.." குண்டன் சொல்ல ஒடிசல் பார்ட்டி சட்டைக்குள கைய விடுறான்.

ஆகா டூல்ஸ் கீல்ஸ் கொண்டாந்து இருக்காய்ங்களோ? மூர்த்தி.. கடைசில உன் விதி இப்படியா முடியணும்? அட சனியன் போட்ட பனியனுகளா.. இல்ல இல்ல.. பனியன் போட்ட சனியனுகளா.. அய்யய்யோ.. பயத்துல வாய் உளருதே.. என்னன்னே சொல்லாம இப்படி நம்மள கொடும பண்ரானுவளே?

ரொம்ப பில்டப்போட அந்த ஒட்டரக்குச்சி சட்டைக்குள்ள இருந்து கைய எடுத்தா.. அது ஒரு கிரீட்டிங் கார்டு. அட.. இது நாம ராகினிக்கு அனுப்பினது ஆச்சே? இது எப்படி இந்த கிறுக்கன் கிட்ட? எனக்குஅதிர்ச்சி.

அப்படியே ப்ரீஸ் (freeze ) பண்றோம். ஏன்னா..ஒரு ட்விஸ்ட் இருந்தாத்தான இடைவேளை விட முடியும். சோ.. தி கேம் ஸ்டார்ட்ஸ் நவ்... (நன்றி-தில்லாலங்கடி)

July 26, 2010

காச மட்டும் வச்சுக்கிட்டு?

சென்ற வாரம் எங்கள் கல்லூரியில் கணினித்துறை சம்பந்தமான ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு வருகை தரும் முக்கியமான மனிதர்களை கவனித்துக்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் நானும் ஒருவன். மதுரையிலேயே இருக்கும் மற்றொரு பொறியியல் கல்லூரியில் கணினித்துறை தலைவராக இருக்குமொரு மனிதரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வந்து சேர்ந்தது.

நிகழ்ச்சி நடக்கும் நாளன்று, காலை எட்டு மணிக்கே அவரது வீடு இருக்கும் ஒத்தக்கடை பகுதிக்கு கல்லூரி காரை எடுத்துக் கொண்டு போய் விட்டேன். வீட்டின் வாசலில் இருந்து அலைபேசியில் அழைத்தால் ஆள் எடுப்பதாக தெரியவில்லை. தொடர்ச்சியாக ஐந்தாறு முறை முயன்று கடைசியாக மனிதர் எடுத்து விட்டார்.

"தம்பி.. வாசல்ல உங்க காரைப் பார்த்துட்டேன்.. இந்தா அஞ்சு நிமிஷம்.. வந்துர்றேன்.."

சரி என்று காரில் காத்திருக்கத் தொடங்கினேன். நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டன. எனக்கோ மண்டை காய்கிறது. வந்த மனுஷன வீட்டுக்குள் கூட கூப்பிடாமல்.. வாசலில் தேவுடு காத்துக் காத்துக் கொண்டு.. ச்சே.. என்ன மாதிரியான மனிதரிவர்? ஏற்கனவே கல்லூரியில் இவரைப் பற்றி சொல்லியிருந்தார்கள். ஆள் கொஞ்சம் முசுடு.. கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு வாங்க.. ஏன்தான் நமக்கு மட்டும் இப்படிப்பட்ட ஆளாக மாட்டுகிறார்களோ?

இன்னும் பத்து நிமிஷம் போனபின்பு கடைசியாக மனிதர் வந்து சேர்ந்தார். மனதிற்குள் திட்டிக் கொண்டே காரின் பின்கதவைத் திறந்து விட்டு அருகில் நின்று கொண்டிருந்தேன். ஆனால் அவரோ உள்ளே ஏறாமல் நேராக வந்து, நான் எதிர்பார்க்காதவிதமாக, எனது கைகளை பிடித்துக் கொண்டார்.

"மன்னிச்சுக்கிடுங்க தம்பி.. வீட்டுல பிள்ளைங்களோட வெளியூர் போயிருக்காங்க.. நானே எல்லாம் செஞ்சு கெளம்ப வேண்டிய சூழ்நிலை.. அத்தோட எங்க அம்மாவுக்கு நடக்க முடியாது.. அவங்களுக்கு நான் தான் எல்லாம் செய்யணும்.. அதான் உங்களைக் கூட உள்ள கூப்பிட முடியல.. சங்கடமா நெனச்சுக்காதீங்க.."

எனக்கு சுருக்கென்றது. பெரிய பொறுப்பில் இருக்கும் மனிதர்.. என்னிடம் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஆனாலும் தன்மையாக வந்து மன்னிப்பு கேட்கிறார். அவசரப்பட்டு அவரைத் தப்பாக நினைத்து விட்டோமோ?

"ச்சே ச்சே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்.. வாங்க போகலாம்.."

மற்றவர்கள் சொல்வதை வைத்து அவசரப்பட்டு யாரையும் தப்பாக எடை போடக்கூடாது என என்னை நானே குட்டிக் கொண்டேன். இருவருமே காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டோம். என்னைப் பற்றி விசாரித்தார்.

"டீச்சிங்ல ரொம்ப இண்டரெஸ்ட் சார்.. படிச்சு முடிச்சோனே இதுக்கு வந்துட்டேன்.."

"ரொம்ப சந்தோசம் தம்பி.. நான் என்னோட பசங்களுக்கு சொல்றதெல்லாம் இதுதான்.. தயவு செஞ்சு வேற எந்த வேலையும் கிடைக்கலைன்னு வாத்தியார் வேலைக்கு வராதீங்க.. இது அப்படிப் பாக்குற வேலை கிடையாது.. அந்த வகைல உங்கள நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி.."

கொஞ்ச நேரத்திலேயே மனிதர் ரொம்ப இயல்பாக பேசத் தொடங்கி விட்டார். எங்களின் பேச்சு பல தளங்களுக்கு போய் விட்டு கடைசியாக மாணவர்களைப் பற்றித் திரும்பியது.

"இன்னைக்கு இருக்குற பசங்களுக்கு காசும் கேரியரும் முக்கியமா படுற அளவுக்கு மத்த விஷயங்கள் பெரிசாத் தெரியறதில்லை.. இல்லையா தம்பி?"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார்.. இன்னிக்கு இருக்குற பசங்க எல்லாத்துலையும் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்காங்க.. அவ்ளோதான்"

"அதேதான் தம்பி.. ஆனா பொறுப்பா இருக்காங்களா? உறவுகளை மதிக்கிறாங்களா? இல்லையே.. அங்கதான பிரச்சினை ஆரம்பிக்குது.."

எனக்கு அவருடைய கருத்துகளை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. ஒன்றுமில்லாதவை என ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை. அமைதியாக இருந்தேன். அவர் தொடர்ந்தார்.

"என் நெருங்கின பிரண்டோட பையன் தம்பி.. இஞ்சினியரிங் படிச்சான்.. பெறகு எம்.பி.ஏ.. கொஞ்ச நாள் ஒரு பெரிய கம்பெனியில வேலை.. அவங்களே அடுத்து வெளிநாட்டுல ஒரு மேல்படிப்பும் படிக்க வச்சாங்க.. முடிச்சவுடனே மானேஜர் வேலை.. மாசம் ரெண்டு லட்சம் சம்பளம்.. சரின்னு சொல்லி அதே பீல்டுல இருக்கிற ஒரு பொண்ணப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.. அதுக்கு ஒரு லட்சம் சம்பளம்.. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது.. ஒரு குழந்தையும் ஆகி போச்சு.. ஆனா இப்போ பொண்ணு விவாகரத்து வேணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறா.."

"ஏன் சார்.. என்ன பிரச்சினை..?"

"பையன்தான் பிரச்சினை.. எந்நேரமும் வேலை வேலைன்னு வீட்டுலயும் கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழ வேண்டியது.. சாப்பிட தூங்க மட்டும் தான் வீடா? பையனோட மூஞ்சியைக் கூட பார்க்க மாட்டானாம்.. பொண்டாட்டியையும் கவனிக்கிறது கிடையாது.. மெஷின் மாதிரி வாழணும்னா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு பொண்ணு ஒரே அழுகை.. அந்த குழந்த மூஞ்சிக்காகவது கொஞ்சம் மாறுப்பான்னு சொன்னா, அது ஒரு விபத்து தெரியாத்தனமா பெத்துக்கிட்டேன்னு ஈவிரக்கம் இல்லாம சொல்றான்.. அந்த பொண்ணு வேற என்னதான் பண்ணும்.. பாவம்.."

"ஹ்ம்ம்ம்ம்ம்ம்.."

"அவங்க வீட்டுல சுத்தமா நிம்மதியே போச்சு.. பெரியவங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பிரயோஜனம் இல்ல... ரெண்டு பேருக்கு சேர்த்து மூணு லட்சம் சம்பளம்.. ஆனா காச மட்டும் வச்சு நாக்கு வழிக்கறதா தம்பி.. சொல்லுங்க.. யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்களத் தொலைச்சிட்டு அப்புறம் என்னத்துக்கு காசு? இதை புரிஞ்சிக்காம அப்புறம் என்ன சம்பாத்தியம் வேண்டிக் கிடக்கு.. மனுஷனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தானே தம்பி முக்கியம்?"

"உண்மைதான் சார்.."

"நல்லா யோசிச்சு பாருங்க.. எப்பவும் இல்லாத அளவுக்கு இப்போத்தான் முதியோர் இல்லங்கள் ஜாஸ்தி ஆகியிருக்கு.. காசு மட்டுமே பிரதானமா இருக்குற காலத்துல வயசான பெத்தவங்க எல்லாம் பாரம் ஆகிடுறாங்க..உறவும் மனுஷங்களும் நல்ல மனசும் தான் முக்கியம்.. இந்தக் காலத்து பசங்க இதை என்னைக்கு உணருராங்களோ அப்போத்தான் வெளங்குவாங்க.."

பேசிக் கொண்டே வந்ததில் கல்லூரி வந்து விட்டிருந்தது. அவர் பிறகு சந்திப்பதாக விடை பெற்றுக் கொண்டார். அவர் போன பிறகும் மனது அவர் சொன்னதையே வெகு நேரம் நினைத்துக் கொண்டிருந்தது. அவர் சொன்னது அத்தனையும் உண்மை என்றில்லா விட்டாலும், இன்றிருக்கும் நிலைமையைத்தானே சொல்கிறார். எத்தனையோ பேர் காசு பணத்தின் பின்னால் ஓடி வாழ்க்கையைத் தொலைப்பது தானே நிஜம்? கேள்விகள் நிறைய இருந்தாலும் விடைகள்தான் கிடைப்பதில்லை. பெருமூச்சு விட்டபடியே வேலையை பார்க்கக் கிளம்பினேன்..!!!

July 23, 2010

உக்கார்ந்து யோசிச்சது (23-07-10)..!!!

தனது கலைப்படைப்புகள் மூலமாக சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்.

இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர், தமிழின் ( மறைந்த ) மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவர் யாரென்பதை இடுகையின் கடைசியில் சொல்கிறேன்.

***************

நான் திண்டுக்கல்லில் வேலை பார்த்த கல்லூரியில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. தகவல்தொழில்நுட்பத்துறையின் (IT) தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்மணி அவர். வயது நாற்பதுக்கும் மேல் இருக்கும். ஒரு முறை கல்லூரியின் வராந்தாவில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த இறுதியாண்டு மாணவனைப் பார்த்திருக்கிறார்.

"என்னப்பா.. நல்லாயிருக்கியா? புராஜக்ட் எல்லாம் எப்படி போகுது?"

"ஒண்ணும் பிரச்சினை இல்ல மேடம்.. நல்லா போய்க்கிட்டு இருக்கு.."

"குட்.. எதுல புராஜக்ட் பண்ற?"

"MS Office ல மேடம்.."

"ஓ.. ஏன்ப்பா அவ்ளோ கஷ்டப்பட்டு ஏதோ ஒரு ஆபிஸ்ல பண்ணனும்? நம்ம காலேஜ் ஆபிஸ்லேயே பண்ணலாமே.."

அந்த மாணவனின் முகம் போன போக்கு எப்படி இருந்திருக்கும் (இஞ்சி தின்ன குரங்கு மாதிரி?!) என்பதை யோசித்துப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது.

***************

இதுவும் மற்றொரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதுதான். அதே தொழில்நுட்பத்துறை. ஆனால் இங்கே துறைத்தலைவர் ஒரு ஆண். கிட்டத்தட்ட அறுபது வயதைத் தாண்டியவர். அவருடைய உதவியாளர் ஒருமுறை அவரிடம் சொல்லி இருக்கிறார்.

"சார்.. கம்ப்யூட்டர்ல நிறைய வைரஸ் வந்திருச்சு.. பார்மட் (format) பண்ணலாம்னு இருக்கேன்.. அதனால உங்க பைல எல்லாம் ஒரு பேக்கப் (back-up) எடுத்து வச்சிக்கிட்டா உதவியா இருக்கும்..."

"சரிப்பா.."

சிறிது நேரம் கழித்து துறைத்தலைவர் தனது உதவியாளரை அழைத்து சொல்லி இருக்கிறார்.

"தம்பி... எல்லா பைலையும் காப்பி பண்ணி டெஸ்க்டாப்புல (Desktop) சேவ் பண்ணிட்டேன்.. இப்போ நீங்க ஏதோ பார்மட் பண்ணனும்னு சொன்னீங்களே.. அதைச் செய்யுங்க.."

உதவியாளருக்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவதே என்றே தெரியவில்லை. "ஞே.."தான்.

அடயெங்கப்பா.. எங்க இருந்துதான் இவங்கள எல்லாம் பிடிச்சுட்டு வர்றாய்ங்களோ? இரண்டுமே உண்மையாக நடந்த சம்பவம்.. புனைவல்ல.. ஏதும் IT துறைக்கு வந்த சாபமா இருக்குமோ?

***************



மேலே படத்தில் இருப்பது மதுரையின் பைபாஸ் ரோட்டில் இருந்து எல்லீஸ் நகருக்கு பிரியும் எண்பது அடி சாலையின் முகப்புப் பகுதி. அங்கே தரையோடு தரையாக இருக்கிறதே.. அது சாலையை இரண்டாகப் பிரிப்பதற்காக போடப்பட்ட தடுப்பு. ராத்திரி நேரங்களில் இது இருப்பதே தெரியாததால் நிறைய பிரச்சினை. இதனால் வாரத்துக்கு இரண்டு விபத்தாவது ஏற்பட்டு விடுகிறது. இரு சக்கர வாகனங்கள் நேராகப் போய் இதன் மீது மோதி விழுந்து விடுகிறார்கள் அல்லது யாரேனும் தங்களுடைய காரை இதன் மீதாக நட்டக்குத்தலாக ஏற்றி பார்க் (park) செய்து விடுகிறார்கள். உயிர்ச்சேதம் ஏற்படுமுன் மதுரை மாநகராட்சி மக்கள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா?

***************

இதுவரை எல்லாப் படங்களிலும் ஹிட்டடித்த ஜெயம் ராஜா - ரவியின் கூட்டணியில் தில்லாங்கடி இன்று வெளியாகிறது. எப்போதும் டிரைலர்களில் (மட்டுமாவது) அசத்தும் சன் டிவி இந்த முறை கோட்டை விட்டிருக்கிறார்கள். அதுவும் நளினியிடம் பன்ச் டயலாக் பற்றிப் பேசும் ஜெயம் ரவியின் குரல் - அவ்வ்வ்வவ்வ்வ்... சுத்தமாக ஒத்துழைக்கவில்லை. சன் டிவி - படம் என்ன ஆகுமெனத் தெரியவில்லை... பார்ப்போம்.

வெகு சமீபமாக வெளியான யுவனின் இசை ஆல்பங்களிலேயே "
தில்லாங்கடி"தான் படுமோசம் எனத் தைரியமாக சொல்வேன். எதுவுமே நம்ம ஊருப் பாட்டு மாதிரியே இல்லை. ஒரே கொல்டி வாடை. சொதப்பி எடுத்திருக்கிறார். அதே போல "நான் மகான் அல்ல"வும் Below par தான். புது வசந்தம் காலத்து பாட்டு போல ஆரம்பிக்கும் வா வா நெலாவப் புடிச்சு தரவா ஒரு பாட்டுதான் நன்றாக இருக்கிறது. கார்த்தி - யுவன் காம்பினேஷன் என்ற எதிர்பார்ப்புக்கு ஆப்பு.

***************

பொதுவாக ஆங்கில நாவல்களை விரும்பிப் படிக்க மாட்டேன். ஆனால் டான் பிரவுனின் "டாவின்சி கோட்" படித்த நாள் முதலாக அவருடைய ரசிகனாக மாறி விட்டேன். அவருடைய எழுத்தில் இருக்கும் வரலாற்றுப் பிழைகள், ஒரே மாதிரியான கதை சொல்லும் முறை என எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ரொம்ப நாட்களாகத் தேடி வந்த அவருடைய புத்தகமான "தி லாஸ்ட் சிம்பல்" இப்போதுதான் கிடைத்து இருக்கிறது. அடுத்து அதைத்தான் வாசிக்க வேண்டும்.

***************

வாழ்க்கையில் ஜெயித்தவர்களைப் பற்றிப் பேச நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் தோற்றவர்கள் பற்றி? மனதெல்லாம் ஆசைகளைச் சுமந்து, கனவுலகில் வாழ்ந்து, நிதர்சனத்தில் எதையுமே சாதிக்க முடியாமல்.. இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்து போனவர்கள் எத்தனை எத்தனை பேர்? அது போன்ற ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது அஜயன் பாலாவின் "ஒரு இலையின் வாழ்வு" என்கிற இந்த இடுகை. வாசித்துப் பாருங்கள் நண்பர்களே..

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி.. வழக்கம் போல ஒரு ஜோக்.

இன்னைக்கு உலகக் கோப்பை கால்பந்தால யாருக்கு ரொம்ப லாபம்னு கேட்டிங்கன்னா.. அது Paul க்குதான். அதாங்க.. ஜோசியம் சொல்ற ஆக்டோபஸ். இப்போ அதுக்கு ரொம்பக் கடினமான ஒரு டெஸ்ட். அதுக்கு முன்னாடி ரெண்டு டப்பா கெடக்குது. அதுல ஒண்ணை அது செலக்ட் பண்ணியாகணும். ஒரு நாள், ரெண்டு நாள், மூணு நாள்.. ஊஹும். அதுவும் யோசிக்குது யோசிக்குது.. ஒண்ணும் வேலைக்கு ஆகல. கடைசியாப் பார்த்துச்சு. டபக்குன்னு தண்ணிய விட்டு வெளில தவ்வி தற்கொலை பண்ணிக்கிச்சு. அட.. அப்படி என்ன அந்த ரெண்டு டப்பால எழுதி இருக்குன்னு கேக்குறீங்களா?

ஒண்ணுல .. வேட்டைக்காரன். இன்னொண்ணுல சுறா..

(நன்றி -அத்திரி)

***************

மேலே இருக்கும் பொன்மொழியைச் சொன்ன எழுத்தாளர் - ஜி.நாகராஜன்

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

July 21, 2010

From Nigeria வித் லவ்..!!!

பழகிய இடங்களின் ஊடாக தினம் தினம் ஓடியாடி செய்யும் வேலைகள். இலக்குகள் இல்லாத் தேடல்கள். ஓய்வுக்காக ஏங்கித் தவிக்கும் மனது. எதிர்பாரா நேரத்தில் கிடைக்கும் சாய்வதற்கான தோள்களில், நடுநடுவே கிடைக்கும் ஆசுவாசங்களில் ஒளிந்திருக்கிறது வாழ்க்கையின் ருசி...

- யாரோ

போன வாரத்தின் நடுவே எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

"அண்ணே.. எப்படி இருக்கீங்க? என்ன யோசிக்கிறீங்க? குரல் அடையாளம் தெரியலையா?"

யாரப்பா இது நம்மளை இத்தனை உரிமையோடு அழைப்பது? ஒரே குழப்பம். வெகு சமீபமாக அலைபேசியைத் தொலைத்து விட்டிருந்ததால் நம்பர்கள் சரியாக இல்லாமல் ஒரு சில நண்பர்களின் கோபத்துக்கு ஏற்கனவே ஆளாகியிருந்தேன்.

"அண்ணே.. சத்தியமா தெரியலைண்ணே.. தப்பா எடுத்துக்காதீங்க.. யாருன்னு சொல்லிடுங்க.. ரொம்ப சோதிக்காதீங்க.."

"அடடா.. பயப்படாதீங்க தம்பி.. நான் ராகவன் நைஜீரியா.. எப்படி இருக்கீங்க?"

மதுரைப் பதிவுலக நண்பர்கள்

ஆகா.. நம்ம அண்ணனா? நைஜீரியா ராகவனைப் பற்றி நான் என்ன சொல்வது? இந்த பின்னூட்ட சுனாமியை அறியாதவர்கள் வலையுலகில் யாரும் இருக்கிறார்களா என்ன? பாசக்கார மனிதர். அன்பானவர். போன வருடம் இதே நேரத்தில் மதுரை வந்து பதிவுலக நண்பர்களைச் சந்தித்து எங்களை எல்லாம் சந்தோஷத்தில் ஆழ்த்தியவர். இதோ மீண்டும் வந்து விட்டார். அதற்குள் ஒரு வருடம் ஆகி விட்டதா என்ன?

நலம் விசாரிப்புகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை தான் குடும்ப சகிதமாக மதுரை வருவதை உறுதி செய்தார். ரொம்ப நல்லதாகப் போயிற்று. மதுரைப் பதிவர்கள் எல்லாம் சந்தித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்ணன் வருவதை சாக்காக வைத்தே எல்லாரையும் சந்தித்து விடலாமே.. சரியென்று நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லியாகி விட்டது.

மூத்த பதிவர்கள் - ராகவன், தருமி, சீனா (எப்பூடி)

செவ்வாய்க்கிழமை மாலை. மதுரை ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் ராயல் கோர்ட் ஹோட்டலில் அண்ணனுக்கு தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்ற முறை வந்தபோது தம்பி அரவிந்த் ஆசையாகக் கேட்ட ஜிகர்தண்டாவை வாங்கித் தர முடியவில்லை. எனவே இந்த முறை முன்னேற்பாடாக அவனுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொண்டு போயிருந்தோம். நாலரை மணி போல அவரது அறைக்கு சென்றபோது, முகமெங்கும் பொங்கி வழியும் சந்தோஷத்துடன் அண்ணனும் அண்ணியும் வரவேற்றார்கள். இருவருமே ஆள் கொஞ்சம் வற்றி இருக்கிறார்கள். {என்னண்ணே.. வீட்டுல ஒழுங்கா சமைக்கிறது இல்லையா..:-))))}

ஜெரி - அண்ணன் - மதுரை சரவணன்

ஐந்து மணிக்கு மேல் நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். சீனா ஐயா தன்னுடைய துணைவியார் அம்மா.செல்விஷங்கர் அவர்களுடன் வந்து சேர்ந்தார். ஸ்ரீதர், பாலகுமார், மதுரை சரவணன், ஜெரி, சுந்தர் (முன்னாள் பதிவர்?) ஆகிய நண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். காரைக்குடியில் இருந்து தானைத்தலைவர் தேவன்மாயமும் வந்து சேர்ந்து கொள்ள ஆட்டம் களை கட்டத் தொடங்கியது. பதிவர்கள் ஒன்று கூடினால் கும்மிக்கு கேட்கவா வேண்டும்? கடைசியாக தருமி ஐயாவும் வந்து சேர்ந்து கொள்ள ஒரே கலாட்டாதான்.

1983 -ஆம் வருடத்தில் தான் எடுத்த மீனாட்சி அம்மன் கோவிலின் படத்தை அழகாக லாமினேட் செய்து அண்ணனுக்காக எடுத்து வந்தருந்தார் ஐயா.

அரவிந்துடன் தருமி அய்யா

அதே போல மதுரைப் பதிவர்களின் சார்பாக ஒரு சிறிய நினைவுப்பரிசும் (கொற்கை - ஜோ டி குருஸ்) வழங்கப்பட்டது.

அரவிந்துடன் சீனா ஐயாவும் அம்மாவும்

இரவு ஹோட்டலின் ரூப் டாப்பில் அனைத்து நண்பர்களுக்கும் அருமையான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ராகவன் அண்ணன். சமீபத்தில் தருமி ஐயாவின் "அமீனா" மொழிபெயர்ப்பு புத்தகத்துக்கு சிறந்த புத்தகம் என "திசை எட்டும்" இதழ் கொடுத்திருக்கும் விருதுக்காக பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நண்பர்களின் பார்வைக்காக சில படங்கள் இங்கே..



ஸ்ரீ - அண்ணன் - தேவன்மாயம்

சுந்தர் - பாலகுமார் - கா.பா - சீனா ஆகியோருடன் அண்ணன்

பாட்டு, சினிமா, பதிவுலகம் என எல்லா விஷயங்களையும் பேசியபடி மொக்கை போட்டு முடித்தபோது மணி பத்து ஆகி விட்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்கள்.. சுத்தமாகப் போனதே தெரியவில்லை. மனது லேசாகி ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்புக்கு நன்றி கூறி நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுக் கொண்டோம். மகிழ்ச்சியான இது போன்ற தருணங்கள்தான் வாழ்வை இன்னும் சுவாரசியம் ஆக்குகின்றன இல்லையா? அருமையானதொரு வாய்ப்பைக் கொடுத்த ராகவன் அண்ணனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மதுரைப் பதிவர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!!

(ஹி ஹி ஹி.. அப்புறம் அந்த மேல சொல்லியிருக்கிற யாரோ.. நானாகக் கூட இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க..)

நண்பர் மதுரை சரவணின் இடுகையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்..

July 19, 2010

நெடுங்குருதி - எஸ்ரா (2)

இந்நாவல் நீலகண்டப்பறவை போல, அக்னிநதி போல காலமாற்றத்தின் மீது உருவாகி இருக்கிறது. சிறந்த இந்திய நாவல்களின் தரத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. முதன்முறையாக இந்நாவலில்தான் தமிழ் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பிரபஞ்சன்


வேம்பலை ஒரு கற்பனை கிராமம். சரி.. ஆனால் அங்கு இருப்பதாக சித்தரிக்கப்படும் மனிதர்கள் உண்மையானவர்கள். இந்த மண்ணில் நிஜமாகவே வாழ்ந்தவர்கள். அவர்கள் அந்த ஊருக்கு வந்ததெப்படி? கொற்கைப் பாண்டியனின் வீரர்களிடம் இருந்து தப்பி வந்தவர்கள் என்று ஆரம்பிக்கிறது அவர்களின் வரலாறு.

வெல்சி
துரை என்னும் ஆங்கில அதிகாரியால் சிறைப்பட்டு சாகும் வேம்பர்களால்தான் முதன் முறையாக வேம்பலையில் பயம் விதைக்கப்படுகிறது. அதன் பிறகு பதவி உயர்வு பெற்று வெளியூர் செல்லும் வெல்சியும் மனச்சிதைவுக்கு ஆளாகி செத்துப்போகிறான். ஆனால் அவன் விட்டுச் சென்ற சோகமும் துயரமும் எப்போதும் தீராததாக வேம்பலையை பீடித்துக் கொள்கிறது.

வேம்பலையின் சுவாரசியமான மனிதர்களில் ஒருவன் சிங்கி. வாலிபத்தில் அனைவரும் பயப்படும் திருடனாக இருந்தவன். இருந்தும் சிறு பிள்ளைகளிடம் திருடுவதில்லை எனத் தனக்கென சில கொள்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான்.

ஒரு முறை காலில் காயம்பட்டு சாகக் கிடப்பவனைப் பண்டார மகள் ஒருத்தி காப்பாற்ற, சொந்த ஊரையும் திருட்டையும் மறந்து அவளோடு தங்கி விடுகிறான். ஆனால் வயதாக வயதாக பண்டார மகள் மூர்க்கம் கொண்டவளாக மாறிப் போகிறாள். தொட்டதெற்கெல்லாம் சிங்கியை கரித்துக் கொட்ட ஆரம்பிக்கிறாள். எனவே அவளைப் பிரிந்து சிங்கி மீண்டும் வேம்பலைக்கே வந்து வாழத் துவங்குகிறான்.

நிகழ்காலத்தில் இரண்டு கண்ணிலும் பார்வை இழந்து போனவனாக தன மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் சிங்கி. அவ்வப்போது அவனுக்கு பழக்கமான குருவனின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிங்கியும் குருவனும் ஆடு புலி ஆட்டம் ஆடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். குருவன் பத்து வருடங்களுக்கு முன்பே செத்துப் போனவன். எனவே இங்கே குருவனின் குரல் மரணத்தின் அடையாளமாகவே சொல்லப்படுகிறது என நினைக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு முறை ஆட்டம் ஆரம்பித்து முடியுமுன்னே குருவன் காணாமல் போகிறான். அத்தோடு சிங்கியும் குருவனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவே இருப்பது மனிதனுக்கு சாவின் மீதாக இருக்கும் பயத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் மேவி என்னை யூடியூபில் இருக்கும் இங்கமார் பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். மனிதனும் மரணமும் ஆடும் செஸ் ஆட்டம் என்பது போன்ற கதையது. சிங்கி பற்றிய நெடுங்குருதியின் மிக அற்புதமான இந்தப் பகுதியைப் படிக்கும்போது எனக்கு அந்தப்படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

கடைசியாக ரத்னாவதி. பரத்தை என்றானபோதும் நாகுவை உண்மையாக நேசிப்பவள். பார்க்கும் மனிதர்களில் எல்லாம் நாகுவைத்தான் அவள் தேடித்திரிகிறாள். அவனுடைய பிள்ளையை தானாக விரும்பி பெற்றுக் கொள்ளுகிறாள். நாகு இறந்துபோன பின்பு மதுரைக்கு வந்து ஒரு பால்கடையை வைத்து வாழ ஆரம்பிக்கிறாள்.

தன் பிள்ளை திருமாலுக்காக வாழ முடிவு செய்தாலும், காமத்தின் நீண்ட நிழல் அவளை விடாமல் துரத்துகிறது. பூபாலனை மணம் முடிக்கிறாள். அவள் வாழ்வில் மகிழ்ச்சி திரும்பியதாக நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் பூபாலன் அநியாயமாக செத்துப் போகிறான். காலம் அவளை மீண்டும் சேற்றுக்குள் வீசி எறிகிறது.

மகனைப் பிரிந்து திரும்பி வர இயலாத ஒரு பாதையில் ரத்னா பயணிக்கத் துவங்குகிறாள். இறுதியில், கடைசிவரைத் தன்னுடைய மகனின் முகத்தைக் கூடப் பார்க்காமல், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். நிறைவேறாத ஆசைகளில் தங்களைத் தொலைத்த எல்லா மனிதர்களின் பிரதிநிதியாகவும் ரத்னாவதி இருக்கிறாள். கடை வைத்து கவுரவமாக வாழும் ரத்னாவை கோபுரத்தின் மீதிருந்து பார்க்கும் கந்தர்வனின் சிலை, அவள் மீண்டும் வேசித் தொழில் செய்யத் தொடங்கியவுடன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது.. அழகான படிமம்.

நாகுவின் அப்பாவோடு போய் என்ன ஆனான் என்றே தெரியாத பக்கிர், பிழைப்புத் தேடி வந்த இடத்தில் முறைதவறி வாழத் தொடங்கும் பக்கிரின் மனைவி, கால்கள் நடமாட இயலாத நிலையில் இருந்தாலும் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் ஆதிலட்சுமி, வேணியைக் காதலித்துத் தோற்கும் திருமா, நாகுவைத் தன் மகனைப் போல் வளர்க்கும் தரகர் தாத்தா, புதைத்து வைத்த புதையலை பூதம் காப்பது போல ஊர்ந்து திரியும் லட்சுமணன், ரத்னாவதியின் தோழி ஜெயராணி மற்றும் அவளின் அத்தை, சிறு வயதில் இருந்தே தாயின் அன்பு கிட்டாமல் வளரும் திருமால், தத்துவம் பேசித் திரியும் திருமாலின் நண்பன் பவுல், நாம் ரெண்டு பெரும் ஒரே ஆளை கட்டிக்கிடலாம் என்று கேட்கும் வசந்தாவின் தோழி ஜெயக்கொடி.. எத்தனை எத்தனை விதமான மனிதர்கள்? நாட்டார் தெய்வம் ஒன்றின் வருகையால் பணக்காரனாகும் காயாம்பூ, அதே தெய்வத்தால் ஒன்றுமில்லாதவனாக ஆகிப் போவதை என்னவென்று சொல்வது? வேம்பலையின் சாலைகளில் வழிந்தோடும் கசப்பு, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையிலும் நிரம்பி இருக்கிறது.

இந்த இசம், அந்த இசம் என்று நெடுங்குருதியை வகைப்படுத்த எனக்குத் தெரியாது. யதார்த்தம், கனவுலகம், மாய யதார்த்தம் என மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது கதை. அவ்வளவே. நாம் காணும் நிஜ வாழ்வின் நிதர்சனங்களை பதிவு செய்யும் அதே வேளையில், விவரிக்க இயலாத கனவுகளின் பக்கங்களையும் மீள்மாய உலகின் (நன்றி:ஜெயமோகன்) நம்ப முடியா சம்பவங்களையும் அழகியலோடு நம் பார்வைக்கு வைக்கிறார் எஸ்ரா.

பண்டார மகள் இறந்து போய் கிடக்கிறாள். அவள் உள்ளங்கையில் இருக்கும் தேள் சிங்கியின் உடம்பில் ஏறிக் கொள்ளுகிறது. அவனால் அந்தத் தேளின் உபத்திரவத்தைத் தாங்கவே முடிவதில்லை. அதேபோலத்தான் சிங்கியும் செத்துப் போன குருவனும் விளையாடும் காட்சிகளும். தானிய குலுக்கைக்குள் போட்டும் சாகாத மனுஷியாகவே இருக்கும் முதிர்ந்த சென்னம்மாவின் கதையும் ஒரு புதிர்த்த்தன்மையுடன் இருக்கிறது.

பாலைவனம் போல வெடித்து கிடக்கும் இடங்களின் நடுவே எப்போதும் குளிர்ந்த நீர் சுரந்து கொண்டே இருக்கும் துறவியின் சமாதி, ஊரில் இருக்கும் பெண்கள் பிடிக்கும் தண்ணீர் குடங்கள் எல்லாம் காலியாகிப் போவது, ஊருக்குள் பெயர் தெரியாத புழுக்கள் உண்டாவது, எங்கிருந்தோ வானில் இருந்து வரும் கொக்குக் கூட்டத்தால் அந்தப் புழுக்கள் அழிவது, மீன்களோடும் தவளையோடும் பேசித் திரியும் சின்னஞ்சிறு திருமால் என இந்திய நாட்டின் தொன்மையான கதைகளில் இருக்கும் மாயத்தன்மையை நாவலின் பல இடங்களில் நம்மால் காண இயலுகிறது.

இத்தனைக்குப் பிறகு, இந்த நாவலின் குறைகள் என்று எதைச் சொல்லலாம்?

முதலாவதாக நாவலின் கதை நடைபெறும் காலம் மற்றும் இடம். கதையின் பின்பாதியில் இருக்கும் விவரணைகளைப் பார்க்கும்போது இது மதுரையைச் சுற்றி நடக்கும் கதை என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது நடைபெறுகிறது என்பதைத் தெளிவாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடக்கும் கதை எனக் கொண்டால் ஒரு சில இடங்களில் இருக்கும் விவரங்கள் சற்றே வசதிகள் அதிகம் உள்ளதைப் போல சொல்வதால் சிறிது குழப்பம் ஏற்படுகிறது.

இரண்டாவதாக, கதையின் அடிநாதமாக இருக்கும் குற்றப்பரம்பரைச் சட்டம் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம். என்ன மாதிரியான நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளானார்கள்.. அவர்களுடைய எதிர்ப்பு எத்தகையதாக இருந்தது என்ற எந்தத் தகவல்களும் முழுமையாக சொல்லப்படவே இல்லை. அப்படி இருப்பின் இது சரித்திரத்தைப் பதிவு செய்யும் மிக முக்கியமான நாவலாக இருந்திருக்கும்.

மூன்றாவதாக, புற சூழல் பற்றிய வர்ணனைகள் இந்த நாவலில் மிகவும் கம்மியாகவே காணக் கிடைக்கிறது. மனிதர்களையும், அவர்களின் குணங்களையும் முக்கியமாகப் பேசுவதே எஸ்ராவின் எல்லாப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கும் யுத்தி. அதுவே இங்கும் நடந்து இருக்கிறது.

வேம்பிலை கள்வர்கள் வாழும் ஒரு மூர்க்கமான ஊர். சரி.. ஆனால் அங்கு வேம்பர்கள் மட்டும் இல்லையே? அது போக சாயக்காரர்கள்... மற்ற ஜனங்கள் எல்லாம் வந்ததெப்படி? அந்த ஊரின் அமைப்பு எப்படி இருக்கும்? நாவலில் இவற்றுக்கு பதில் இல்லை. ஒவ்வொரு ஊராகப் போய் தூங்கி, அந்த ஊரின் இயல்புகளைப் பேசும் மனிதனை உபபாண்டவத்திலும் சந்தித்ததாக ஞாபகம்.

கடையாக நாவலின் நீளம். என்னைப் பொறுத்தவரை நாகுவின் மரணத்தோடு நாவல் முற்றுப்பெறுகிறது. எனினும் காலம் காலமாக சாபம் நீடிக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக, நாகுவின் வாரிசுகளான திருமால் மற்றும் வசந்தாவின் பாடுகளைச் சொல்லும்போது சற்றே அயர்ச்சி ஏற்படுதைபோல எனக்கொரு உணர்வு.

"எந்தவொரு கதையின் முடிவையும் வாசகனே தீர்மானிக்கிறான்... கூடுதலாக சில பக்கங்களை எழுதிப் பார்க்கலாம்.. இல்லையெனில் முன்னதாகவே முடிக்கலாம்.." சமீபத்தில் எஸ்ரா எழுதிய ஒரு பத்தியில் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. சிற்சில குறைகள் இருப்பினும், நாவலின் தெளிவான நடையும் எஸ்ராவின் கதை சொல்லும் முறையும் அவற்றை மறக்கடிக்கின்றன.

நாவலை வாசித்து முடித்தபின்னும் வேம்பலையும், அதன் மனிதர்களும் இன்னும் நெஞ்சை விட்டு நீங்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஏன் இத்தனை கஷ்டங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்று மனம் அரற்றுகிறது.. அந்த உணர்வை உருவாக்குவதுதான் எஸ்ராவின் வெற்றி. கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

நெடுங்குருதி
உயிர்மை வெளியீடு
இரண்டாம் பதிப்பு - செப்டம்பர் 2005
விலை - 275/-

July 15, 2010

நெடுங்குருதி - எஸ்ரா (1)..!!!

ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள் எவையெவை என்று சொல்லலாம்... அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறிய ஒன்றும் இருக்கிறது. அது அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை.

இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில் குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு.. இதுதான் நான். ஆனால் அங்கே குடிபோன பின்பு என்னுடைய இயல்புகளே மாறிப்போனது. புதிய நட்புகள், தெருவோரச் சண்டைகள், எப்போதும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும் வசவுகள், தெரு முக்கில் உருட்டும் லங்கர்கட்டைகள், சூது, வகுப்புகளுக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா.. அந்தப் பகுதியின் இயல்புகளில் நானும் தொலைந்து போனவனாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் இன்றிருக்கும் நானாக மாறிய தருணங்கள் அவை.

சொந்த ஊரை விட்டு வெகுதூரம் விலகி இருக்கும் ஒவ்வொரு மனிதனின் மனிதிலும் எங்கோ ஒரு ஓரத்தில் தங்களின் ஊரைப் பற்றிய கனவுகளும் ஆசைகளும் ஒளிந்து கிடக்கின்றன. ஊர் என்பது வெறும் வசிப்பிடமாக மட்டும் இருப்பதில்லை. அது ஒவ்வொருவரின் உணர்விலும் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. எத்தனை விதமான ஊர்களைப் பற்றி நம்முடைய இதிகாசங்களில், கதைகளில் படிக்கிறோம்? வெகு விசித்திரமான ஊர்களைப் பற்றிய கதைகளை என்னுடைய பால்யத்தில் கேட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க புதிர்களால் நிரம்பிய தெருக்களால் ஆன ஊர் ஒன்று இருந்ததாம். ஒருமுறை அதன் உள்ளே சென்று விட்டால் மீண்டு வெளியே வரவே இயலாதாம். இதைப் போலவே, பெண்கள் மட்டுமே வாழும் ஊர் ஒன்றும் இருந்ததாம். அதன் உள்ளே போகும் ஆண்கள் யாவரும் பெண்களாக மாறி விடுவார்களாம். மீண்டும் வெளியேறிச் செல்லும்போதுதான் ஆண்களாக மாறுவார்களாம். விந்தைதான் இல்லையா?

இவை எல்லாமே மனித மனத்தின் கற்பனைதான் என்றாலும், இதன் அடிப்படை ஒன்றுதான். ஒவ்வொரு ஊரும் தனக்கென ஒரு தனித்துவமான இயல்பைக் கொண்டதாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு மூர்க்கமான ஊரைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் கதைகளையும் சொல்லும் நாவல்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி".

வேம்பலை என்றொரு கிராமம். அங்கு வசிக்கும் வேம்பர்கள் என்ற மக்கள். இவர்களின் வாழ்க்கையைத்தான் இந்த நாவல் பதிவு செய்கிறது. குற்றப்பரம்பரை என்று சொல்லி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றிய பதிவு என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும், ஒரு நூற்றாண்டு காலம் நீளும் கதையை வெகு இயல்பாக சொல்லிச் செல்கிறார் எஸ்ரா. அவருக்குப் பிரியமான வெயில், வேம்பு மற்றும் எறும்புகள்.. இந்த நாவல் எங்கும் இந்த மூன்றும்தான் நிறைந்து இருக்கின்றன.

கோடைக்காலம், காற்றடிக்காலம், மழைக்காலம் மற்றும் பனிக்காலம் என்று நான்காக பகுக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். வேம்பர்களின் வாழ்வில் வசந்தமே கிடையாது என்று இதையும் ஒரு படிமமாகக் கொள்ளலாம். நான்கு காலங்கள் இருந்தும் கோடைக்காலமே நாவலின் பிரதானப் பகுதியாக இருக்கிறது. குறிப்பாக வெயில் மற்றும் அதன் வெம்மையை நெடுங்குருதியை வாசிக்கும் யாவராலும் உணர முடியும். எல்லாப் பகுதியிலுமே வெயிலும் கிட்டத்தட்ட ஒரு பாத்திரமாகவே நாவல் முழுவதும் வலம்வருகிறது. கதையின் மாந்தர்கள் எங்கு சென்றாலும் அவர்களோடு தானும் ஒருவராக வெயில் பயணிக்கிறது.

"வெயில் கூரையின் வழியாகத் தன் விரலை அசைத்தபடியே இருந்தது.."

"பூனைக்குட்டி வாசல் வரை வந்து நின்றது. வெயிலின் நீண்ட கிளைகள் விரிந்து வெளிச்சத்தில் கண் கூசுவதால் திரும்பவும் இருளுக்குள் போய் விட்டது"

"உக்கிரமான வெயில் கூட அவளது குரலைக் கேட்டதும் பயந்து ஒடுங்கிக்கொண்டது போல மப்பு போடத் துவங்கிய்து.."

"இளங்காலையின் வெயில் ஆற்று மணலில் எதையோ எழுதிக் கொண்டிருந்தது.."

"சாலையில் வெயில் வீழ்ந்து கிடந்தது.."

வளைந்து நெளிந்தும் ஊர்ந்து கொண்டும்... சாலைகளோடு பின்னிப் பிணைந்தும் கதையின் பாதையெங்கும் பயணித்தபடியே இருக்கிறது வெயில். வெயிலின் கொடுமை மற்றும் வெக்கையின் காரணமாகவே வேம்பலை மூர்க்கம் நிறைந்த கிராமமாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

நெடுங்குருதியில் மையப் பாத்திரங்கள் என்று யாருமில்லை. நாகு என்ற சிறுவனின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாகுவின் தாய், தந்தை, அவனுடைய அக்கா வேணி, மற்றொரு சகோதரியான நீலா, சிறு குழந்தையாய் இருக்கும்போதே இறந்து போன அண்ணன் செல்வம் என ஒவ்வொருவராக அறிமுகம் ஆகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. இதுபோக அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற மனிதர்களில் ஒரு சிலரைப் பற்றிய கதைகளும் வருகின்றன.

உருப்புடியாய் எந்தத் தொழிலும் செய்யாத அய்யா.. அவரைக் கரித்துக் கொண்டே இருக்கும் அம்மா.. இவர்களைப் பார்த்து வளர்கிறான் நாகு. சிறு வயதில் அவனுடைய உற்ற தோழியாய் இருப்பவள் ஆதிலட்சுமி. பாம்பு கடித்து அக்கா நீலா இறந்து போக, பரதேசியாய் வீட்டை விட்டு ஓடிப்போகிறார் அய்யா. தாயுடன் தன் தாத்தா ஊருக்குக் கிளம்புகிறான் நாகு. தரகு வேலை பார்ப்பவனாகிறான். சாராயம், பெண்கள் என்று வாழ்பவனுக்கு மல்லிகா என்னும் பெண்ணோடு திருமணம் ஆகிறது. ஐயாவைக் கண்டுபிடித்து மீண்டும் வேம்பலைக்கே குடி வருகிறான். இந்த நேரத்தில்தான் குற்றப்பரம்பரைச் சட்டம் வேம்பர்கள் மீது ஏவப்படுகிறது. அதற்கு அடங்க மறுத்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகிறான் நாகு. ரத்னாவதி என்னும் பரத்தைக்கும் நாகுவுக்கும் பிறந்த திருமால் எல்லாம் தொலைத்தவனாக ஊரைப் பிரிந்து போகிறான். மல்லிகாவுக்கும் நாகுவுக்கும் பிறந்த பிள்ளை வசந்தா. ஒழுக்கம் கெட்ட தன் கணவனோடு மீண்டும் அவள் வேம்பலைக்குக் குடி வந்து, தன் கணவனின் பிள்ளைக்கு நாகு என்று பெயரிடுவதோடு முடிகிறது கதை. கசப்பின் மிகுதியால் நிரம்பி வழியும் மனிதர்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படம்பிடிக்கிறது இந்தப் புத்தகம்.

தீராத வேட்கையோடு பாய்ந்தோடும் காட்டாறு போகும் பாதையெல்லாம் தன்னுடைய கிளைகளை உருவாக்கிக் கொண்டே போவது போல, நெடுங்குருதியின் பாதையில் பல்வேறு கிளைக்கதைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

(தொடருவேன்..)

July 13, 2010

கருணை மனசு..!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். கிளம்பத் தயாராக இருந்த அந்த மின்தொடர் வண்டியின் ஜன்னலோர சீட்டில் அவன் உட்கார்ந்து இருந்தான். தினமும் அந்த வழித்தடத்தில் சென்று வருபவன். எப்போதும் கூட்டத்தில் தொங்கிக் கொண்டேதான் போக வேண்டும். இன்றைக்கு ஏதோ அதிசயமாக உட்கார இடம் கிடைத்து இருந்தது. அதுவும் ஜன்னலோரமாக..

இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை ருசிக்கிறது. அவனுக்கு மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை சற்றே பெருமையாகப் பார்த்துக் கொண்டான். எல்லோரும் நிற்கிறார்கள்.. நான் இன்றைக்கு உட்கார்ந்து இருக்கிறேன்..

ரயில் கிளம்பி விட்டிருந்தது.

"இந்தக் காலத்துல யாரை சார் நம்ப முடியுது? நல்ல மனுஷங்களைப் பார்க்கவே முடியுறதில்ல.. என்னமோ போங்க.." எதிர் சீட்டு மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவன் சிரித்துக் கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவனாக, அதிகாலையின் காற்று வேகமாக முகத்தில் மோதுவதை ரசிக்கத் தொடங்கினான். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்று கிளம்பியது. சிறிது நேரம் கழித்து அந்தப் பாட்டு கேட்டது.

"பழம் நீயப்பா..." உடைந்த குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான். கூட்டத்தின் ஊடாக பாடிக் கொண்டே ஒரு கிழவி.... கிழிந்து போன ஒரு சேலையை உடம்போடு போர்த்தி இருந்தாள். கையில் ஒரு அழுக்கு மூட்டை. எண்ணைப் பிசுக்கேறிய தலை. குழி விழுந்த கண்கள். ஒட்டிய வயிறும் வற்றிய நெஞ்சுமாக அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

அவனுக்கு அவளைப் பார்க்க பார்க்க மனதை ஏதோ செய்தது. அவளுக்கு உதவ வேண்டும். ஆனால்..

கிழவிக்குப் பணம் தர வேண்டுமெனில் அவன் எழுந்து அவளருகே போக வேண்டும். எழுந்தால் இந்த இடம் அவனுக்கு மீண்டும் கிடைக்காமல் போகக்கூடும். ஏதோ ஒரு நாளைக்கு அதிசயமாகக் கிடைத்த இடம். அதை இழக்கவும் மனமில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாடிக் கொண்டே கிழவி அவன் இருந்த இடத்தை நெருங்கி விட்டிருந்தாள். அவனுக்கு ஒரே குழப்பம். இடமா? இல்லை அவளுக்கு உதவுவதா? சுற்றிப் பார்த்தான்.

எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அந்தக் கிழவியைக் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. நான் மட்டும் ஏன்? சரி.. நாளைக்கும் இந்த வண்டியில் வர மாட்டாளா? அப்போது பார்த்துக் கொள்வோம். பெரிதாக உதவி செய்வோம். தன்னைத் தானே சமாதானம் செய்தவனாக கவனத்தை வெளியே திருப்ப முயன்றான். ஆனால் முடியவில்லை. கிழவியின் தீனமான குரல் அவன் உள்ளே புகுந்து மனத்தைக் குடைந்தது. இப்போது என்ன செய்வது?

சட்டென்று எழுந்தான். பாக்கெட்டில் கையை விட்டு பத்து ரூபாயை எடுத்தான். அவளருகே போய் கைகளில் கொடுத்தான்.

"மகாராசா.. என்னைப் பெத்த ஐயா.. நீ நல்லா இருக்கணும்.."

திரும்பிப் பார்த்தான். அவன் உட்கார்ந்த இடத்தில் யாரும் உட்காரவில்லை. நிம்மதியாக இருந்தது. மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டான். எதிர் சீட்டில் இருந்தவர் சிரித்தபடியே அவனிடம் சொன்னார்..

"உங்களுக்கு ரொம்ப கருணை மனசு சார்.."

அவன் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டான்.

July 12, 2010

மெட்ராசப்பட்டிணம் - தமிழில் ஒரு "டைட்டானிக்" முயற்சி..!!!

ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் ஒரு அட்டகாசமான காதல் படம். (நண்பர்கள் மன்னிக்கவும்.. எனக்கு வி.தா. பிடிக்கவில்லை..) சுதந்திரத்துக்கு முந்தைய மெட்ராஸில் நடக்கும் ஒரு காதல் கதையை ரொம்பவே அழகாக சொல்லி இருக்கிறார்கள். "சர்வ" நாசத்திற்கு பிறகு ஆர்யா நடித்து இருக்கும் படம். கிரீடம், பொய் சொல்லப் போறோம் போன்ற படங்களை தந்த விஜய் இயக்கியிருக்கிறார். கல்பாத்தி.எஸ்.அகோரத்தின் தயாரிப்பு.



2010 - லண்டன். எப்போதோ தலையில் பட்ட அடியால் கோமா நிலைக்கு போகவிருக்கும் வயதான ஏமி, அவசரமாக இந்தியாவுக்குப் போக வேண்டும் என்கிறார். தன்னுடைய பேத்தியுடன் சென்னைக்கு வருகிறார். அங்கே பரிதி என்றொரு மனிதரைத் தேடுகிறார்கள். யார் அவர்? சாகும் தருவாயில் ஏமி ஏன் பரிதியைத் தேட வேண்டும்? கதை 1945-க்கு தாவுகிறது. சாதாரண சலவைத் தொழிலாளி பரிதி. மதராசப்பட்டிணத்தின் கவர்னரின் மகள் ஏமி. இருவருக்கு உள்ளும் காதல் நுழைகிறது. ஆனால் நாட்டின் சுதந்திரமும், விதியும் அவர்களைப் பிரிக்கின்றன. பரிதியின் உயிரைக் காப்பாற்ற அவனைப் பிரிகிறாள் ஏமி. தன்னிடம் பரிதி கொடுத்த தாலியைத் தான் இறப்பதற்குள் திருப்பித் தந்து விட வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஏமி சென்னைக்கு வந்து இருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா? ஏமியைப் பிரிந்த பிறகு பரிதி என்ன ஆனான்? இருவரும் சந்தித்தார்களா? படத்தப் பாருங்கப்பா..



கட்டுமஸ்தான உடம்போடு கிண்ணென்று ஆர்யா. அலட்டிக் கொள்ளாமல் நச்சென்று நடித்து இருக்கிறார். சுதந்திர தின இரவில், தன்னிடம் இருந்து பிரிந்து விட்டதாக எண்ணிய நாயகியை ரயில் நிலையத்தில் பார்த்தவுடன் மனிதருக்கு ஒரு சந்தோசம் கண்களில் மின்னுகிறது பாருங்கள்.. கிளாஸ். அதிசயமாக ஆர்யாவுக்கு நகைச்சுவைக் காட்சிகளும் அருமையாக சூட் ஆகின்றன. நல்ல வேளையாக ஆர்யாவை தாத்தா வேஷம் போட்டெல்லாம் காட்டவில்லை. யாருப்பா இந்த ஏமி ஜாக்சன்? எங்கய்யா பிடிச்சீங்க?கொஞ்சம் சதை போட்ட லிசாரே மாதிரி கும்மென்று இருக்கிறார். காலைப்பனியில் நனைந்த ரோஜா போல அத்தனை அழகு. சந்தோசம், வெட்கம், சோகம், அழுகை என எல்லாமும் ரொம்ப நேர்த்தியாக... பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.



வில்லன் ராபர்ட் எல்லீசாக வருபவரும், ஆர்யாவின் நண்பர்களாக வருபவர்களும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். குஸ்தி வாத்தியாராக வருகிறார் நாசர். சலவைத் தொழிலாளர்களின் தலைவராக பாலாசிங். நிறைவு. கார் டிரைவராக வரும் ஜீவாவும், உதவி செய்வதாக பணம் பிடுங்கும் அவருடைய பாசாக வருபவரும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் தூக்கி சாப்பிடுபவர் மொழி பெயர்ப்பாளராக வரும் காலம் சென்ற வி.எம்.சி.ஹனீபா தான். மனிதர் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். தத்தக்க புத்தக்க என்று அவர் மொழி பெயர்க்கும் அழகும், சிக்கலான கட்டங்களில் அவருடைய உடல்மொழியும்.. அதகளம் பண்ணுகிறார். வி வில் மிஸ் யு சார்..



நிஜமும் நினைவுகளும் என மாறி மாறிப் பயணிக்கிறது படம். முதல் பாதி முழுக்க சிரிப்பு, இரண்டாம் பாதி செண்டிமெண்ட் என பக்காவான திரைக்கதை. படத்தில் மனத்தைக் கவரும் முக்கியமான காட்சிகள் சில..

--> சிறையில் இருந்து தங்களைக் காப்பாற்றிய ஏமிக்கு நன்றி சொல்ல ஆர்யாவும், அவருடைய நண்பர்களும் ஆங்கிலேயர்களின் பங்களாக்குள் நுழைவதும்.. அதனைத் தொடரும் நகைச்சுவைக் காட்சிகளும்..

--> வெள்ளையனோடு ஆர்யா குஸ்தியில் மோதும்போது எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் வசனம்.."நானூறு வருஷம் கழிச்சு இப்போத்தாண்டா திருப்பி அடிக்கிறோம்.."

--> வாத்தியாரிடம் ஆர்யாவும் நண்பர்களும் ஆங்கிலம் கற்கும் காட்சி

--> போட்டோக்களை அன்பளிப்பாகத் தரும் ஏமிக்கு திருப்பித்தர தன்னிடம் ஏதுமில்லை என்னும் ஆர்யாவிடம், ஏமி தாலியைக் கேட்பது..

--> ஆர்யாவைக் காப்பாற்ற நண்பர்கள் உயிர் இழக்கும் காட்சிகள்..

--> கடைசியாக, கூவம் ஆற்றில் ஏமி ஆர்யாவைப் பிரிவது..



படத்தில் ரவுண்டு கட்டி அடித்து இருப்பவர்.. கலை இயக்குனர் செல்வக்குமார். சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை சென்றல் ஸ்டேஷன், அதனை ஒட்டி ஓடும் கூவம் ஆறு, டிராம் வண்டிகள், கார்கள், பழைய டோபிகானா,அந்தக் காலத்து விளம்பரங்கள் மற்றும் தியேட்டர்களின் பெயரைப் பயன்படுத்தி இருப்பது என ரசித்து ரசித்து பண்ணி இருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அம்சம். ஜி.வி.பிரகாசின் இசையில் பூப்பூக்கும் தருணம், வா வா துரையம்மா, மேகமே ஆகிய பாடல்கள் அருமை. பின்னணி இசையிலும் பின்னி இருக்கிறார். ஆனால் மனிதர் காப்பி அடிப்பதை குறைத்துக் கொள்வது நலம். படத்தின் தீம் ம்யூசிக் பழைய "Mr .India" ஹிந்திப்படத்தை நினைவூட்டுகிறது. அதே போல ரகுமானிடம் இருந்தும் நிறைய இசைக்கோர்வைகளை சுட்டு பயன்படுத்தி இருக்கிறார். திருந்துங்க பாஸ்..



கடைசியாக இயக்குனர் விஜய்.. கையக் கொடுங்க சார்.. காதலர்கள் ரெண்டும் பேரும் பிரிஞ்சு போறப்ப பாக்குற நமக்கு மனசு வலிக்குது பாருங்க.. அதுதான் இயக்குனருக்கான வெற்றி.. இந்த மாதிரியான மனதை வருடிச் செல்லும் காதலைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.. வித்தியாசமான களம்.. ரொம்பவே மெனக்கெட்டு செஞ்சிருக்கார் விஜய்.. கடுமையாக உழைத்து இருப்பதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

பின்குறிப்பு : படம் முடிஞ்சு வெளில வந்து யோசிச்சுப் பார்த்தாதான் தெரியுது.. இது அப்படியே டைட்டானிக் இல்ல? மேல்தட்டுப் பொண்ணு.. கீழ்த்தட்டுப் பையன்.. பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருக்கிற ஒரு கடுவன் பூனை வில்லன்.. அங்க கப்பல்.. இங்க சுதந்திரம்.. பிரிவு.. அட ஆமாம்? அதனாலென்ன.. ஒரு நல்ல படம் எடுக்கணும்னா எதுவும் தப்பில்ல..:-)))

மதராஸப்பட்டிணம் - காதல் நகரம்