July 15, 2010

நெடுங்குருதி - எஸ்ரா (1)..!!!

ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள் எவையெவை என்று சொல்லலாம்... அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறிய ஒன்றும் இருக்கிறது. அது அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை.

இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில் குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு.. இதுதான் நான். ஆனால் அங்கே குடிபோன பின்பு என்னுடைய இயல்புகளே மாறிப்போனது. புதிய நட்புகள், தெருவோரச் சண்டைகள், எப்போதும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும் வசவுகள், தெரு முக்கில் உருட்டும் லங்கர்கட்டைகள், சூது, வகுப்புகளுக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா.. அந்தப் பகுதியின் இயல்புகளில் நானும் தொலைந்து போனவனாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் இன்றிருக்கும் நானாக மாறிய தருணங்கள் அவை.

சொந்த ஊரை விட்டு வெகுதூரம் விலகி இருக்கும் ஒவ்வொரு மனிதனின் மனிதிலும் எங்கோ ஒரு ஓரத்தில் தங்களின் ஊரைப் பற்றிய கனவுகளும் ஆசைகளும் ஒளிந்து கிடக்கின்றன. ஊர் என்பது வெறும் வசிப்பிடமாக மட்டும் இருப்பதில்லை. அது ஒவ்வொருவரின் உணர்விலும் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. எத்தனை விதமான ஊர்களைப் பற்றி நம்முடைய இதிகாசங்களில், கதைகளில் படிக்கிறோம்? வெகு விசித்திரமான ஊர்களைப் பற்றிய கதைகளை என்னுடைய பால்யத்தில் கேட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க புதிர்களால் நிரம்பிய தெருக்களால் ஆன ஊர் ஒன்று இருந்ததாம். ஒருமுறை அதன் உள்ளே சென்று விட்டால் மீண்டு வெளியே வரவே இயலாதாம். இதைப் போலவே, பெண்கள் மட்டுமே வாழும் ஊர் ஒன்றும் இருந்ததாம். அதன் உள்ளே போகும் ஆண்கள் யாவரும் பெண்களாக மாறி விடுவார்களாம். மீண்டும் வெளியேறிச் செல்லும்போதுதான் ஆண்களாக மாறுவார்களாம். விந்தைதான் இல்லையா?

இவை எல்லாமே மனித மனத்தின் கற்பனைதான் என்றாலும், இதன் அடிப்படை ஒன்றுதான். ஒவ்வொரு ஊரும் தனக்கென ஒரு தனித்துவமான இயல்பைக் கொண்டதாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு மூர்க்கமான ஊரைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் கதைகளையும் சொல்லும் நாவல்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி".

வேம்பலை என்றொரு கிராமம். அங்கு வசிக்கும் வேம்பர்கள் என்ற மக்கள். இவர்களின் வாழ்க்கையைத்தான் இந்த நாவல் பதிவு செய்கிறது. குற்றப்பரம்பரை என்று சொல்லி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றிய பதிவு என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும், ஒரு நூற்றாண்டு காலம் நீளும் கதையை வெகு இயல்பாக சொல்லிச் செல்கிறார் எஸ்ரா. அவருக்குப் பிரியமான வெயில், வேம்பு மற்றும் எறும்புகள்.. இந்த நாவல் எங்கும் இந்த மூன்றும்தான் நிறைந்து இருக்கின்றன.

கோடைக்காலம், காற்றடிக்காலம், மழைக்காலம் மற்றும் பனிக்காலம் என்று நான்காக பகுக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். வேம்பர்களின் வாழ்வில் வசந்தமே கிடையாது என்று இதையும் ஒரு படிமமாகக் கொள்ளலாம். நான்கு காலங்கள் இருந்தும் கோடைக்காலமே நாவலின் பிரதானப் பகுதியாக இருக்கிறது. குறிப்பாக வெயில் மற்றும் அதன் வெம்மையை நெடுங்குருதியை வாசிக்கும் யாவராலும் உணர முடியும். எல்லாப் பகுதியிலுமே வெயிலும் கிட்டத்தட்ட ஒரு பாத்திரமாகவே நாவல் முழுவதும் வலம்வருகிறது. கதையின் மாந்தர்கள் எங்கு சென்றாலும் அவர்களோடு தானும் ஒருவராக வெயில் பயணிக்கிறது.

"வெயில் கூரையின் வழியாகத் தன் விரலை அசைத்தபடியே இருந்தது.."

"பூனைக்குட்டி வாசல் வரை வந்து நின்றது. வெயிலின் நீண்ட கிளைகள் விரிந்து வெளிச்சத்தில் கண் கூசுவதால் திரும்பவும் இருளுக்குள் போய் விட்டது"

"உக்கிரமான வெயில் கூட அவளது குரலைக் கேட்டதும் பயந்து ஒடுங்கிக்கொண்டது போல மப்பு போடத் துவங்கிய்து.."

"இளங்காலையின் வெயில் ஆற்று மணலில் எதையோ எழுதிக் கொண்டிருந்தது.."

"சாலையில் வெயில் வீழ்ந்து கிடந்தது.."

வளைந்து நெளிந்தும் ஊர்ந்து கொண்டும்... சாலைகளோடு பின்னிப் பிணைந்தும் கதையின் பாதையெங்கும் பயணித்தபடியே இருக்கிறது வெயில். வெயிலின் கொடுமை மற்றும் வெக்கையின் காரணமாகவே வேம்பலை மூர்க்கம் நிறைந்த கிராமமாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

நெடுங்குருதியில் மையப் பாத்திரங்கள் என்று யாருமில்லை. நாகு என்ற சிறுவனின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாகுவின் தாய், தந்தை, அவனுடைய அக்கா வேணி, மற்றொரு சகோதரியான நீலா, சிறு குழந்தையாய் இருக்கும்போதே இறந்து போன அண்ணன் செல்வம் என ஒவ்வொருவராக அறிமுகம் ஆகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. இதுபோக அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற மனிதர்களில் ஒரு சிலரைப் பற்றிய கதைகளும் வருகின்றன.

உருப்புடியாய் எந்தத் தொழிலும் செய்யாத அய்யா.. அவரைக் கரித்துக் கொண்டே இருக்கும் அம்மா.. இவர்களைப் பார்த்து வளர்கிறான் நாகு. சிறு வயதில் அவனுடைய உற்ற தோழியாய் இருப்பவள் ஆதிலட்சுமி. பாம்பு கடித்து அக்கா நீலா இறந்து போக, பரதேசியாய் வீட்டை விட்டு ஓடிப்போகிறார் அய்யா. தாயுடன் தன் தாத்தா ஊருக்குக் கிளம்புகிறான் நாகு. தரகு வேலை பார்ப்பவனாகிறான். சாராயம், பெண்கள் என்று வாழ்பவனுக்கு மல்லிகா என்னும் பெண்ணோடு திருமணம் ஆகிறது. ஐயாவைக் கண்டுபிடித்து மீண்டும் வேம்பலைக்கே குடி வருகிறான். இந்த நேரத்தில்தான் குற்றப்பரம்பரைச் சட்டம் வேம்பர்கள் மீது ஏவப்படுகிறது. அதற்கு அடங்க மறுத்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகிறான் நாகு. ரத்னாவதி என்னும் பரத்தைக்கும் நாகுவுக்கும் பிறந்த திருமால் எல்லாம் தொலைத்தவனாக ஊரைப் பிரிந்து போகிறான். மல்லிகாவுக்கும் நாகுவுக்கும் பிறந்த பிள்ளை வசந்தா. ஒழுக்கம் கெட்ட தன் கணவனோடு மீண்டும் அவள் வேம்பலைக்குக் குடி வந்து, தன் கணவனின் பிள்ளைக்கு நாகு என்று பெயரிடுவதோடு முடிகிறது கதை. கசப்பின் மிகுதியால் நிரம்பி வழியும் மனிதர்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படம்பிடிக்கிறது இந்தப் புத்தகம்.

தீராத வேட்கையோடு பாய்ந்தோடும் காட்டாறு போகும் பாதையெல்லாம் தன்னுடைய கிளைகளை உருவாக்கிக் கொண்டே போவது போல, நெடுங்குருதியின் பாதையில் பல்வேறு கிளைக்கதைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

(தொடருவேன்..)

16 comments:

சிவக்குமரன் said...

நல்லதொரு பார்வை நண்பா!

Anbu said...

தொடருங்கள் அண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இரா.சிவக்குமரன் said...
நல்லதொரு பார்வை நண்பா!//

:-))))

// Anbu said...
தொடருங்கள் அண்ணே..//

thanks anbu..:-))

அத்திரி said...

நண்பா பெரிய்ய்ய்ய பொஸ்தகமா படிச்சிருக்க போல

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
நண்பா பெரிய்ய்ய்ய பொஸ்தகமா படிச்சிருக்க போல//

ரொம்பப் புகழாதீங்கண்ணே.. வெக்கம் வெக்கமா வருது..:-))))

ஜெய்சக்திராமன் said...

அருமையான பகிர்வு...

thamizhparavai said...

அடுத்து இந்தப் புத்தகம்தான் வாங்கப் போகிறேன்.. அதனால் பதிவைப்படிக்கவில்லை...
படித்து விட்டு வந்து பகிர்ந்து கொள்கிறேன்...

மேவி... said...

"(தொடருவேன்..)"
இப்படி தான் ஒருத்தரு காற்றில் யாரோ பறக்கிறார்கள்ன்னு ஒரு பதிவெழுதி ..தொடர்வேன்ன்னு சொன்னாரு...அப்படி சொன்னவாறு எங்க போனாருன்னு உங்களுக்கு தெரியுமா கார்த்தி ???

= = =
பதிவு நல்ல இருக்கு கார்த்தி ..எஸ்ரா புஸ்தகத்தை பத்தி நீங்க எழுதும் ஒரு passion ஓட எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் ங்கிற மாதிரி எழுதுவீங்களே ...என்னாச்சு ???? நீங்க எல்லாம் எஸ்ரா ஓட அடியாள் ன்னு சொல்லாதீங்க


writerpayon யை கேட்டதாக சொல்லவும்

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
நண்பா பெரிய்ய்ய்ய பொஸ்தகமா படிச்சிருக்க போல//

ரொம்பப் புகழாதீங்கண்ணே.. வெக்கம் வெக்கமா வருது..:-))))"

விடுங்க ண்ணே இலக்கிய வாழ்க்கை ல இது எல்லாம் சகஜம் .... அவருக்கு தனிய ஒரு TEA வாங்கி தந்துருங்க ..

உங்களுக்கும் ஒரு ஓட்ட சைக்கிள் ரெடி யாக இருக்குது

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெய்சக்திராமன் said...
அருமையான பகிர்வு...//

நன்றிப்பா..

//தமிழ்ப்பறவை said...
அடுத்து இந்தப் புத்தகம்தான் வாங்கப் போகிறேன்.. அதனால் பதிவைப் படிக்கவில்லை...படித்து விட்டு வந்து பகிர்ந்து கொள்கிறேன்...//

கண்டிப்பாக படிங்க..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
"(தொடருவேன்..)" இப்படி தான் ஒருத்தரு காற்றில் யாரோ பறக்கிறார்கள்ன்னு ஒரு பதிவெழுதி ..தொடர்வேன்ன்னு சொன்னாரு... அப்படி சொன்னவாறு எங்க போனாருன்னு உங்களுக்கு தெரியுமா கார்த்தி ??? //

ஹி ஹி ஹி.. இந்த தடவை சரித்திரம் மாறும் தல..

//டம்பி மேவீ said...
பதிவு நல்ல இருக்கு கார்த்தி .. எஸ்ரா புஸ்தகத்தை பத்தி நீங்க எழுதும் ஒரு passion ஓட எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் ங்கிற மாதிரி எழுதுவீங்களே ... என்னாச்சு ???? நீங்க எல்லாம் எஸ்ரா ஓட அடியாள் ன்னு சொல்லாதீங்க //

நல்லா இருக்குன்னு சொல்றீங்களா இல்லைனு சொல்றீங்களா நண்பா? அவ்வ்வ்வ்வ்வ்..

//writerpayon யை கேட்டதாக சொல்லவும்//

இது என்ன புது கலாட்டா?

//விடுங்க ண்ணே இலக்கிய வாழ்க்கை ல இது எல்லாம் சகஜம் .... அவருக்கு தனிய ஒரு TEA வாங்கி தந்துருங்க ..உங்களுக்கும் ஒரு ஓட்ட சைக்கிள் ரெடி யாக இருக்குது//

இப்போ நீங்க தான் நம்மள ஓட்டுறீங்க.. நாம எல்லாம் கத்துக்குட்டிக்கும் கீழப்பா.. விட்டுடுங்க..

ஹேமா said...

ஏனோ எனக்கு உங்கள் விமர்சனத்தில்கூட ஈழத்தமிழன் பற்றியும் வருங்காலத்தில் யாராவது இப்படி எழுதுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
தொடருங்கள் கார்த்தி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...
ஏனோ எனக்கு உங்கள் விமர்சனத்தில்கூட ஈழத்தமிழன் பற்றியும் வருங்காலத்தில் யாராவது இப்படி எழுதுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.தொடருங்கள் கார்த்தி.//

வரலாற்றின் இருண்ட பக்கங்கள்.. நினைக்கும்போதே நெஞ்ச்ய் விம்முகிறது தோழி..:-((

சுதர்சன் said...

இந்த பகிர்வை படிக்கும் போது, கதை கண்களில் கட்சியாக தெரிகிறது. அசத்துங்க தல..!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுதர்சன் said...
இந்த பகிர்வை படிக்கும் போது, கதை கண்களில் கட்சியாக தெரிகிறது. அசத்துங்க தல..!//

நன்றிப்பா

suneel krishnan said...

நல்ல அறிமுகம் ,இம்முறை இதுவா இல்லை யாமாமா என்று எண்ணி இருந்தேன் இதையே வாங்கி விடலாம் :)