July 8, 2010

ரிக்சா..!!!

மதுரையின் ஜன சந்தடி மிகுந்த பைபாஸ் சாலை. டர்ர் பர்ர் என சீரியவாறே விரைந்து ஓடிக் கொண்டிருந்த வாகனங்களில் எல்லாம் தங்களுடைய மறுநாள் கவலைகளில் ஆழ்ந்து கிடந்த மனிதர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாலை விளக்குகள் அமந்து அமந்து எரிந்து கொண்டிருந்தன.

சாலையின் ஓரமாக அவன் இருட்டின் நிழலுக்குள் நின்றிருந்தான். காலடியில் ஒரு பெரிய சூட்கேஸ். ரொம்ப நேரமா எந்த ஆட்டோவும் வரலியே? இப்போ எப்படி வீட்டுக்குப் போறது? அப்போதுதான் அந்தப் பெரியவர் ரிக்சாவை மிதித்தபடி அவனைக் கடந்து போனார்.

"ஐயா.."

அவர் நின்று திரும்பிப் பார்த்தார்.

"சவாரி வர்றீங்களா?"

"எங்க தம்பி.."

"பி.ஆர்.சி வரைக்கும போகணும்.. பாலத்துக்கு முன்னாடியே.."

"சரி தம்பி.. ஏறுங்க.."

சூட்கேசை தூக்க தூக்க முடியாமல் தூக்கி வண்டிக்குள் வைத்து விட்டுத் தானும் ஏறிக் கொண்டான். அவரும் ரிக்சாவை ஏறி மிதிக்கத் தொடங்கினார். அவனால் இப்போது அந்தப் பெரியவரை முதுகுப் பக்கமிருந்து அருகாமையில் நன்றாகப் பார்க்க முடிந்தது.

பரட்டைத்தலை. வற்றிப்போன முகம். ஒடுங்கிய தேகம். குச்சி குச்சியாக கைகால்கள். ஆனால் வெகு இலகுவாக ரிக்சாவை மிதித்துக் கொண்டிருந்தார். ஆடைகள் அணிய வேண்டுமே என்பதற்காக பெயருக்கு இருந்தன. சாயம் போன சிவப்பு நிறத்தில் ஒரு அரைக்கை சட்டை. அதை தோள் வரை மடித்து விட்டிருந்தார். அதன் முனையில் எட்டிப்பார்த்த கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டு. தொடை வரை ஏற்றிக் கட்டியிருந்த கைலி ஓரங்களில் நைந்து கிடந்தது.

"அடடா அடடா அடடா.. என்னை ஏதோ செய்கிறாய்.."

அவன் கலைந்தான். ஒலித்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

"சொல்டா மாப்ள.. இப்போத்தான் ஊர்ல இருந்து வரேன்.. வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன். போயிட்டு கூப்பிடட்டுமா? ஓகே டா.. பை.."

போனை பாக்கெட்டுக்குள் வைத்தவாறே பெரியவரிடம் கேட்டான்.

"ரிக்சா இப்பவெல்லாம் ஓட்டம் இருக்காண்ணே?"

அவன் கேட்பதற்காகவே காத்திருந்தது போல அவர் பேசத் தொடங்கினார்.

"எங்க தம்பி.. முன்ன மாதிரி இல்ல.. இப்போ யாரு தம்பி இதுல எல்லாம் ஏறுறா? முந்தி எல்லாம் ஒரு நாளைக்கு முன்னூறு நானூறு ரூபாய்க்கு எல்லாம் ஓட்டுவேன். இன்னைக்கு நூறு ரூபா சம்பாதிக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு.."

"ஏண்ணே.. ஸ்கூல் பிள்ளைங்க எல்லாம் வருவாங்களே?"

"அடப் போங்க தம்பி.. நம்ம வீட்டுப் பிள்ளைங்களே ஸ்கூலுக்கு ரிக்ஷாவுல போகலாம்னு சொன்னா வர மாட்டேங்குதுங்க.. அதெல்லாம் கவுரவக் குறைச்சலாம்.. அப்புறம் எங்கிட்டு மத்த பிள்ளைங்க வர்றது?"

"..."

வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அவன் அமைதியாக இருந்தான். அவர் தொடர்ந்தார்.

"இந்தா.. எஸ்.எஸ்.காலனி வாசல்ல ஒரு பேன்க் இருக்குல்ல.. அங்கதான் நிப்பேன்.. ஏதோ தெரிஞ்சவங்க நாலஞ்சு பேரு வந்து போறதால பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. ஒரு நாளைக்கு நூத்தம்பது எரநூருன்னு வரும்.. இன்னொரு நாளைக்கு பத்து ரூபா கூட கிடைக்காது.. ஏதோ நமக்கு வாச்சவ நல்லவ.. குடும்பத்த நல்லபடியா கொண்டு வந்துட்டா.. புள்ளைங்க வளந்து நம்ம கஷ்டத்த கொஞ்சம் குறைச்சுட்டதால பெரிசாத் தெரியல.. நமக்கும் தண்ணி தம்முன்னு எந்தப் பழக்கமும் இல்லாததால ஏதோப் போய்க்கிட்டு இருக்கு..கடைசி வரைக்கும் உழைச்சுக்கிட்டே இருந்துட்டு யாரையும் தொந்தரவு பண்ணாம போய் சேர்ந்திடனும்.. அவ்வளவுதான் .."

"நேர்மையா வாழணும்னு நினைக்கிறீங்க பாருங்க.. நல்லாத்தாண்ணே இருப்பீங்க.."

பேசிக்கொண்டே வந்ததில் அவன் வீடு இருந்த சந்து வந்து விட்டிருந்தது. சந்தின் முக்கில் இருந்த டீக்கடை ரேடியோ நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு என்று அலறிக் கொண்டிருந்தது.

"ஐயா.. வலது பக்கமாக திரும்பிக்கோங்க.."

மெதுவாக ஒடித்து திருப்பினார்.

"அந்தா.. அந்தக் கடைசி வீடுதான்.."

ரிக்சா ஊர்ந்து போய் வீட்டின் முன்பாக நின்றது. அவன் சூட்கேசை எடுத்துக் கொண்டு இறங்கினான்.

அந்தப் பெரியவர் இறங்கி அவன் முன்னே வந்தார். முகம் எல்லாம் வியர்த்துக் கிடந்தது. துணியால் துடைத்தபடியே வந்தவரிடம் அவன் தன்னுடைய பர்சைப் பிரித்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

"தம்பி.."

"என்ன?"

"கிட்டத்தட்ட மூணு கிலோமீட்டர்.. மிதிச்சு வந்திருக்கேன்.. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க.."

அவன் முகம் இறுகியது.

"ஐயய.. இது என்ன.. உங்க வண்டில ஏறி உங்க கூட பேச்சு கொடுத்தது தப்பாப் போயிரும் போல இருக்கே? இந்தா இருக்கிற வீட்டுக்கு வந்ததுக்கு இருபது ரூபாய்க்கு மேலயா தர முடியும்? ஆட்டோவுல வந்தாலே முப்பது ரூபாதான.. ஏதோ போனாப் போகுதுன்னு உங்க ரிக்ஷால வந்தா.. ரொம்பப் பேசறீங்களே.. இந்தாங்க இந்தாங்க.. வாங்கிட்டுக் கிளம்புங்க.."

அவர் பாவமாக அவனைப் பார்த்தார். அவன் முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டான். அவர் பணத்தை வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டார். சோர்ந்து போனவராக ரிக்சாவில் ஏறி அமர்ந்து மிதிக்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக ரிக்சா இருளுக்குள் மறைந்து போனது.

26 comments:

நேசமித்ரன் said...

உணர்வு :(

இடுகை நல்லா இருக்கு சிம்பிளா !!

ராம்ஜி_யாஹூ said...

இன்னமும் பீ ஆர் சி (பாண்டியன் போக்குவரத்து கழகம்) இடப் பெயர் மாற வில்லையா.

Ganesan said...

மனிதனின் மன உணர்வுகளை கொட்டியிருக்கிறீர்கள்..

ரிக்சாவில் போகும் பொழுது ஏற்படும் நெகிழ்வு, தம் இடம் வந்தவுடன் மறைவது அந்தந்த நேரத்துக்கான காட்சியமைப்பு தென்படுகிறது..

மேவி... said...

இந்த புனைவு யாரைண்ணே டார்கெட் பண்ணிருக்கீங்க ????

நாளை இந்த புனைவுக்கான விளக்க பதிவு வருமா ???? ஹி ஹீ ஹி ஹீ ஹீ

சும்மனாச்சு கேட்டேன் ..கதை நல்ல இருக்கு ...survival of the fittest ன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா ???

நாட்டில் பொருளாதார வளர்ச்சி வர வர ...மனசுக்குள்ள ஈரம் இருந்தாலும் காசை காப்பாற்றி கொள்ள செமைய நடிப்பாங்க ...

இதை பத்தி நான் ஒரு கட்டுரை கொஞ்ச நாளுக்கு முன்னாடி படிச்சேன் ண்ணே.... பொருளாதார வளர்ச்சியும் மனித உறவுகளும் .... ஞாபகம் இருந்த நாளை எழுதுறேன்

மேவி... said...

கொஞ்சம் கஷ்ட பட்டு எழுதிருக்கீங்க போல் இருக்கே ...... கற்பனை குதுரை சரியாக ஓடவில்லையோ ????? FLOW ல ஏதோ MISSING ண்ணே ..

எஸ். ராமகிருஷ்ணன் said...

தங்களது பதிவை கண்டேன். மகிழ்ச்சி.

எழுத்துக்கள் வளர வாழ்த்துக்கள்

sakthi said...

யதார்த்தம்

சாரு நிவேதிதா said...

ஜப்பான் நாட்டில் கூட இதே மாதிரி சிறுகதை இருக்கிறது .....

திருவள்ளுவர் said...

நீங்க என் காலத்தில் பிறக்காமல் போயிட்டீங்களே

திருவள்ளுவர் said...

நீங்க என் காலத்தில் பிறக்காமல் போயிட்டீங்களே

வியாசர் said...

சொல்லு அமுது..... வளரவேல் வைரத்துடன்

மாதவராஜ் said...

முக்கியமான களம். இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக்கியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது நண்பா!

செ.சரவணக்குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே.

செ.சரவணக்குமார் said...

அண்ணே.. இதென்ன இம்புட்டு பெரிய ஆளா நீங்க?

எஸ்.ரா, சாரு சரி. வள்ளுவரு, வியாசரு எல்லாம் வந்துருக்காங்களே..

ரொம்பப் பொறாமையா இருக்குண்ணே.

க ரா said...

நல்லா இருக்குங்க. படிச்சு முடிக்க்றச்சே அந்த ரிக்சாகாரர் மேல ஒரு பரிதாபமும், அந்த பையன் மேல ஒரு எரிச்சலும் வருது.

Anbu said...

\\\எஸ்.ரா, சாரு சரி. வள்ளுவரு, வியாசரு\\\

:-((

:-))

Balakumar Vijayaraman said...

உணர்வுகளை நல்லா வெளிப்படுத்தியிருக்கீங்க.

(உங்கள் கதைகளில் மட்டும் ஏன் கார்த்தி, முன்பின் தெரியாதவர்கள் உடனே சகஜமா பேச ஆரம்பித்து விடுகிறார்கள்? )

Radhakrishnan said...

கதையின் முடிவு 'பக்' என இருந்தது. ஆனால் எழுத்தாளர்களின் பெயரில் இடப்பட்ட பின்னூட்டம் பல நிமிடங்கள் என்னை சிரிக்க வைத்தது. நல்ல கதை.

Sujatha said...

அடாசுக் கதைகளுக்கு மத்தியில் நல்லதொரு சிறுகதை...

பாலகுமாரன் said...

எழுத்துக்களில் நீங்களொரு சாணக்கியன்.

அத்திரி said...

நிதர்சனம்

பாரதியார் said...

தமிழ்மொழி செம்மொழியான சிறப்பை உங்களது சிறுகதையில் காணுகிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

@ பாசமிக்க அனானி அண்ணன்

ஏண்ணே? ஒரு பச்சப் புள்ளைய இப்படி போட்டு அடிக்கலாமா? எஸ்ரா.. சாரு.. வியாசர்.. பாராதி.. அவ்வ்வ்வ். என்ன கொடுமைண்ணே இது?

@ பாலக்குமார்..

உங்களுக்கான விளக்கத்த நேர்லயே சொல்றேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

@ மாதவராஜ்

எளிதாக சொல்லணும்னு தான் எனக்கு ஆசை தலைவரே..

வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி..:-))))

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல நடை.பாராட்டுகள்.
//கொஞ்சம் கொஞ்சமாக ரிக்சா இருளுக்குள் மறைந்து போனது.//
இது மாதிரி க்ளிஷேக்களைத் தவிருங்கள்.