September 30, 2010

ரஜினி என்றொரு மந்திரச்சொல்


தமிழ் சினிமா வரலாற்றில் எந்தப் படத்துக்கும் இல்லாத பரபரப்பும் எதிர்பார்ப்பும் "பாபா"வுக்கு இருந்தது. எங்கும் பாபா எதிலும் பாபா. ஊரின் சந்து பொந்து இண்டு இடுக்கெல்லாம் பாபா. நாளைக்குப் படம் ரிலீஸ். முந்தைய நாள் மாலைக்கான ரசிகர் ஷோவுக்கான டிக்கட் என் கையில் இருக்கிறது. சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் குதியாலத்தொடு "அண்ணாமலை" தியேட்டருக்குப் போய் விட்டேன்.

"தம்பி.. நைட்டு ரெண்டு ஷோ.. எட்டு மணிக்கு ஒண்ணு.. அடுத்தது பதினோரு மணிக்கு.. உங்ககிட்ட இருக்குறது பதினோரு மணி டிக்கட்டு.. போயிட்டு பொறுமையா வாங்க.."

"என்னது? பொறுமையா வாரதா.. அடப் போங்கையா.. தியேட்டர் வாசல்ல நின்னு ரசிகர்கள் ஆட்டத்தைப் பார்த்தா தானா பொழுது போகுது.."

ஏழு மணி போல யானை மீது வைத்து படப்பட்டியை எடுத்து வந்தார்கள். ஆட்டம்தான் பாட்டம்தான்.. ஏரியாவே கோலாகலமாக இருந்தது. எட்டு மணி ஷோ ஆரம்பித்து விட்டார்கள். ஒரே பசி. கையிலோ காசு ரொம்ப கம்மியாக இருந்தது. போய் இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டேன். ஒன்றை சாப்பிட்டுவிட்டு இன்னொன்றை பத்திரமாகப் பைக்குள் வைத்தாயிற்று. பதினோரு மணி வரைக்கும் தாக்குப்பிடிக்கணும் இல்லையா?

பத்து மணிக்கு கவுண்டரை திறந்து விட்டார்கள். கூட்டம்.. அடிதடி.. தள்ளு முள்ளு.. பெரிசுங்க யாராவது கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்திருந்தால் அன்றைக்கு "நேரடியாகவே" பாபாவைப் பார்ப்பதற்கான டிக்கட் கிடைத்திருக்கும். அடித்துப் பிடித்து உள்ளே போய் டிக்கட்டை எடுப்பதற்காக பாக்கெட்டுக்குள் கையை விட்டால்.. கூழ் கூழாக வருகிறது.

வாங்கியிருந்த வாழைப்பழமும் டிக்கட்டும் ஒன்றாகக் கசங்கிப் போய்.. ஒன்றும் செய்ய முடியாதென தியேட்டர் மானேஜரும் கையை விரித்து விட்டார். எனக்கு அழுகை வராத குறைதான். படம் பார்க்க முடியாமல் நொந்து நொம்பலமாகி வீட்டுக்கு வந்தபோது மணி பனிரெண்டு. நேராக டிவியின் முன் உட்கார்ந்து கொண்டேன். பேயறைந்த மாதிரி ராத்திரி ரெண்டரை வரை உட்கார்ந்தே இருக்கிறேன்.. தூங்கவே இல்லை. வீட்டில் பயந்து போய் அதட்டி என்னைப் படுக்க வைத்தார்கள். ஆனாலும் காலை நாலு மணிக்கெல்லாம் முழிப்பு வந்து விட்டது.

"பரேட்" பார்க்கப் போவதாக சொல்லி விட்டு ரயில்வே கிரவுண்டில் போய் உட்கார்ந்து கொண்டேன். ஐந்து மணிக்குக் கிளம்பி நேராக"குரு"தியேட்டர். ஆறு மணிக்கு ஷோ. பிளாக்கில் நூறு ரூபாய்க்கு டிக்கட். உள்ளே போய் உட்கார்ந்த பிறகுதான் நிம்மதி ஆனது.

ரஜினியின் அறிமுகக் காட்சி. சீட்கள் அந்தரத்தில் பறக்கின்றன. விசில்கள் காதைக் கிழிக்கின்றன. நான்கு பக்கங்களில் இருந்தும் அகிலா கிரேனில் சுத்தி சுத்தி காமிக்கிறார்கள். ஸ்க்ரீனில் ரஜினியைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. (அதன் பிறகு தலைவர் புர்ர்ர்ரா என்றதும் படமும் அப்படியே ஆனது வேறுகதை)

வீட்டுக்கு வந்தால் எல்லோரும் டர்ன் போட்டுத் திட்டுகிறார்கள்.

"நீயெல்லாம் படிச்சவந்தானா? இன்ஜினியராம் வெளக்கெண்ணை.. இதுல நீ நாலு பசங்களுக்கு பாடம் வேற சொல்லிக் கொடுக்குற.. அப்படி என்னதாண்டா இருக்கு அவன்கிட்ட?"

அதுதான் ரஜினி.

படித்தவர், படிக்காதவர், பெரியவர், சிறியவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்தவர் என்பதுதான் ரஜினி. எந்த வயதில் இருந்து நான் ரஜினிக்கு ரசிகன் ஆனேன் என்பது சரியாக நினைவில் இல்லை. ஆனால் விவரம் தெரிந்து பார்த்த முதல் படம் "அண்ணாமலை". தலையை நிமிர்ந்து ரசிகர்களைப் பார்த்து கண்ணடிக்கும் காட்சி.. வாவ்.. அந்த ஸ்டைலும் அழகும் யாருக்கு வரும்?

பின்பு ரஜினிக்குத் தீவிர ரசிகனாகிப் போனது பற்றி சொல்ல வேண்டுமானால் - பாட்ஷா, முத்து, படையப்பா.. சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக சிவாஜி பார்த்ததும் செம சுவாரசியம். ஒவ்வொரு தியேட்டராக சுற்றி விட்டு "வெற்றி" தியேட்டருக்கு காலை எட்டரை மணிக்கு வந்தபோதுதான் பொட்டி வந்தது. அப்படியே உள்ளே போய் விட்டோம்.

800 பேர் உட்காரக் கூடிய தியேட்டர். உள்ளே 1500 பேர் இருந்தோம். யாரும் உட்காரவில்லை. மூன்று மணி நேரமும் நின்று கொண்டே, ஆடியபடியே பார்த்தோம். எனக்கருகில் ஆடிக் கொண்டிருந்தவர் உகாண்டாவைச் சேர்ந்தவராம். படம் வெளியாகும் நேரம் பார்த்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தார். எப்பிடி..

சிறு வயதிலிருந்தே.. எப்போதும் இரண்டு நடிகர்களுக்குப் பின்னால் பிரிந்து கிடப்பது என்ற தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியின் காரணமாக.. ரஜினி - கமல் என்ற போட்டியில் நான் ரஜினியின் பின்னால் இருந்தேன். ரசிகர்களுக்கு உதவுபவர், நேர்மையானவர், அவருடைய படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் - இதெல்லாம் சின்ன வயசில் ரஜினி பற்றி எனக்கு சொல்லப்பட்ட விஷயங்கள்.

கமல் - அப்படியே நேர்மார். விக்ரம் படத்தின் "மீண்டும் மீண்டும் வா" என்ற பாட்டைப் பார்த்துவிட்டு "ச்சீ இந்த ஆளு அசிங்கமா நடிக்கிறாரு" என்று என்னுடைய பெண் தோழிகளிடம் நல்லவனாகக் காட்டிக் கொண்டது இப்போது கூட நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் கமல் ரசிகர்களை ஓட்டுவது என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரி. அவரும் அதற்குத் தகுந்த மாதிரி அப்போது அட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த ஓடாத படங்களாகவே - குணா, சிங்காரவேலன், மகராசன், கலைஞன் .. நடித்துக் கொண்டிருந்தார் என்பது முக்கியம். கமல் ரசிகன் யாராவது எங்கள் கூட்டத்தில் சிக்கினால் சீன் சிந்தாபாத் தான்.

பாவம்.. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ஜீவன் இருந்தது. அது என் அப்பா. அவர் ஒரு தீவிர எம்,ஜி.யார் ரசிகர் (அ) வெறியர். அவருக்கு கமலைத்தான் பிடிக்கும். நண்பர்களோடு சேர்ந்து கொண்டு அவரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருக்கிறேன்.

இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன் லக்கி - யுவகிருஷ்ணா எழுதிய சில வார்த்தைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. "இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும்."

பொதுவாகவே இப்படித்தான் இதை யோசிக்கத் தோன்றுகிறது.. ஏன் எம்,ஜி.யார் ரசிகர்களுக்கு ரஜினியைப் பிடிப்பதில்லை? மக்களிடம் செல்வாக்கோடு இருந்தவர் என்றால் எம்.ஜி.யாருக்குப் பிறகு ரஜினிதான். தங்கள் தலைவன் இருந்த இடத்தில் இன்னொருவன் என்பதாலேயே ரஜினியை எம்.ஜி.யார் ரசிகர்கள் வெறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த டிரென்ட் இன்று கூடத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் அஜித்தின் பின்னால்தான் - விஜயை வெறுப்பது போல..

ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது சில விமர்சனங்கள் உண்டு. குழப்பமானவர், ரசிகர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார், அது இதுவென.. எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் ரஜினி என்றொரு நடிகனின் ரசிகன். எனவே படத்தைப் பார்த்தோமா.. கொண்டாடினோமா என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். அதைப் போலவே அரசியலுக்கு வா என்றெல்லாம் அவரை அழைக்க மாட்டேன். அவருக்கு அரசியல் சரிவராது என்பது எனது தனிப்பட்டக் கருத்து. "பாட்டாளி மச்சி தோழர்களே".. இன்னும் மறக்க முடியவில்லை.. அவ்வவ்..

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பரொருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவருடைய இரண்டரை வயது மகன் பத்திரிகையில் வந்திருந்த எந்திரன் விழாமபரத்தைக் காண்பித்து.."மாமா.. எந்தி எந்தி.. ரஜினி.." என்று சொல்லியபடியே தலையில் கை வைத்துக் கொண்டான். ஸ்டைல்பண்ணுகிறானாம். ரஜினி என்பது ஒரு மேஜிக். "எந்திரன்" அதை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கும் என்று நம்புகிறேன். ரஜினி ராக்ஸ்..

(இந்தப் பத்தியை எழுத் தூண்டியது யுவகிருஷ்ணாவின் இந்தப் பதிவுதான் - அவருக்கு என் நன்றி..)

September 28, 2010

உக்கார்ந்து யோசிச்சது (28-09-10)

கண் அறுவை சிகிச்சைக்காக "அரவிந்தில்" அனுமதிக்கப்பட்டு இருந்த நண்பரொருவரின் அம்மாவைப் பார்ப்பதற்காக போயிருந்தேன். தெற்காசியாவின் புகழ் பெற்ற மருத்துவக் குழுமம். மக்கள் சேவையே தங்கள் முக்கியக் கடமையெனக் கொண்டவர்களாக இருந்தவர்கள். இதில் "கள்" என்பது என்பது இறந்த காலத்தில் இருப்பதைக் கவனியுங்கள். அப்படியானால் அரவிந்தின் இன்றைய நிலை என்ன? காசேதான் கடவுளப்பா என்பதுதான் இப்போது அவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.

மருத்துவமனை வளாகத்தின் உள்ளே, சிகிச்சை பெறுபவர்களைப் பார்க்க வரும் உறவினர்களின் வண்டியை நிப்பாட்ட டோக்கன் போடுகிறார்கள். ஏன்யா.. இது என்ன சினிமா தியேட்டரா?ஆயிரம், லட்சம் என இவர்களுக்கு கொட்டிக் கொடுப்பது போதாதென இதில் கூடவா.. தலையில் அடித்துக் கொண்டே நண்பரின் அம்மாவைப் பார்க்கப் போனேன். காலை பத்து மணிக்கு டிஸ்சார்ஜ் செய்வதாக சொன்னவரை மாலை ஐந்து மணி வரை இழுத்து அடித்திருக்கிறார்கள். காரணம் வெரி சிம்பிள். காலை பத்து மணியோடு ஒரு நாள் முடிந்து விடுகிறது. இப்போது மாலை வரை இழுத்து விட்டதால் மற்றொரு நாளுக்கான வாடகை.. சரியாப் போச்சா?

அத்தோடு இங்கே வேலை பார்க்கும் செவிலியர் பற்றி என்ன சொல்வது.. நோயில் அவதிப்படுவோரை எந்த முகச் சுழிப்பும் இல்லாமல் அக்கறையோடு கவனித்துக் கொள்வதால்தான் சகோதர எண்ணத்தோடு அவர்களை சிஸ்டர் என்று அழைப்பதாக எனக்கு நானே ஒரு புரிதலை வைத்திருக்கிறேன். அதை எல்லாம் வெகு சாதாரணமாக உடைத்துப் போடுகிறார்கள் அரவிந்தில் இருக்கும் "சிஸ்டர்கள்". பேசும் எல்லாரிடமும் ஒரு கடி.. முகத்தில் பொங்கி வரும் கருணை என.. அடப் போங்கப்பா.

நண்பரின் அம்மா நடக்க முடியாதவர் என்பதால் வீல் சேர் வேண்டுமெனக் கேட்டிருந்தோம். அதற்கு முக்கால் மணி நேரம் ஆக்கினார்கள். நடுவில் போய் வண்டி கிடைத்ததா எனக் கேட்ட நண்பருக்கு நாலு திட்டு வேறு. கடைசியாக வண்டியைக் கொண்டு வந்து அறையின் வாசலில் எனக்கென்ன என்று போட்டு விட்டுப்போனது இன்னும் கொடுமை. சிரமப்பட்டு நண்பரின் அம்மாவை வெளியே கூட்டிவந்தோம். மருத்துவம் என்பது உலகிலேயே உயர்ந்த சேவை என்பதெல்லாம் வாயளவில்தானா?அனைத்தும் வணிகமயம் ஆகி வரும் சூழலில் இது போல புலம்புவதைத் தவிர நாம் வேறன்ன செய்து விட முடியும். (இது என் அனுபவம் மட்டுமே.. நல்லவிதமாக "அரவிந்தைப்" பற்றி சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் மக்களே..)

***************

சுஜாதாவின் "விஞ்ஞானக் கதைகளை" வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுவாரசியமாக கதை எழுதுவதில் மனிதரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சுஜாதாவை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு அவர் சொல்லிய விஷயங்களில் பலவும் இன்று நடைமுறையில் இருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. எதிர்பாரா திருப்பங்கள், வாசகர்களையே முடிவுகளை அனுமானிக்கும்படியாக கதையை அந்தரத்தில் விடுதல் எனப் பல உத்திகளை மனிதர் அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார். அதுவும், கடைசி ஒற்றை வார்த்தையில் மொத்தக் கதையே மாறி போவதும் பட்டாசு கிளப்புகிறது.

"சோம்னா" என்றொரு கதை. நனவிலும் கனவிலும் மாறி மாறி வாழ்பவன் ஒருவன் தன்னுடைய பிரச்சினைகளை நண்பனோடு பகிர்ந்து கொள்கிறான். கடைசியில் பார்த்தால் கனவுகளில் அவனைக் காதலிப்பவள் தான் நிஜத்தில் நண்பனின் மனைவியாகப் போகிறவள். வெறி கொண்டவனாக காதலன் நண்பன் மீது கத்தியுடன் பாய்ந்து குத்துகிறான். கதையின் கடைசி வரி இதுதான். "அவனுக்கு வலிக்கவே இல்லை". ஆக மொத்த கதையும் சொல்பவனின் கனவு என்னும் பொருளில் மாறிப் போகிறது. மாஸ்டர் கிளாஸ்.

ஆனால் நான் அடுத்து சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். அது.. சுஜாதாவும் ஒரு சில வெளிநாட்டுக் கதைகளால் "inspire" ஆகி இருக்கிறார் என்பதே. இந்தத் தொகுப்பில் இருக்கும் மற்றொரு பாலு (1996 ) - தலைப்பு சரியாகத் தெரியவில்லை.. என்ற கதை டெலிபோர்டலைப் பற்றியது. விஞ்ஞானி ஒருவரும் அவருடைய இரட்டைச் சகோதரனும் சேர்ந்து பாலு என்னும் மனிதனை தங்கள் சோதனைக்கு உடன்பட வைப்பதுதான் கதை. இந்தக் கரு அப்படியே கிறிஸ்டோபர் பிரீஸ்டின் "the prestige" (1995) என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது. அந்த ஆங்கில நாவல் படமாகவும் (the prestige - 2006) வந்து இருக்கிறது. இந்த என் கருத்து சரிதானா என்பதை விஷயம் அறிந்தவர்கள் விளக்கினால் தேவலாம்.

***************

பதிவுலக நண்பர்களுக்காக "பரிசல்" கிருஷ்ணா ஒரு சிறுகதை போட்டியை அறிவித்து இருக்கிறார். மூன்று சுவாரசியமான சம்பவங்கள். மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு கதை எழுத வேண்டும். அதற்கான விதிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள். ஏற்கனவே பல நண்பர்கள் தங்களுடைய படைப்புகளை அனுப்பத் தொடங்கி விட்டார்கள். நானும் என்னுடைய கதையை அனுப்பி விட்டேன். நீங்களும் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்புங்கள் மக்களே...

***************

பறவைகளைப் பற்றிய மிக முக்கியமான ஆவணப்படம் என்று "winged migration" பற்றிச் சொல்லலாம். போன வாரம் இந்தப் படத்தை மாணவர்களுக்காக கல்லூரியில் திரையிட முடிந்தது. ஏழு கண்டங்களில் படப்பிடிப்பு, நாலரை வருஷங்கள், கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் செலவு.. படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் பரவசத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. பறவைகளோடு நாமும் சேர்ந்து பறப்பது போன்ற உணர்வு படத்தை பார்க்கும்போது கிடைக்கிறது. இதுவரை பார்த்திராத நிறைய வகையான பறவைகளைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார்கள். அத்தோடு மனிதனின் தவறான செயல்களால் பறவை இனத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் பொட்டில் அறைந்த மாதிரி சொல்லிச் செல்கிறார்கள். மனிதனால் சிறை பிடிக்கப்படும் பஞ்சவர்ணக் கிளியொன்று கூண்டில் இருந்து தப்பித்துப் போகும் காட்சியில் வகுப்பறையே சந்தோஷத்தில் அதிர்ந்தது. யூட்யூபில் இருக்கும் படத்தின் சுட்டி இங்கே..

***************

சமீபத்தில் நான் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று - சிந்து சமவெளியைப் பார்த்தது. உயிர், மிருகம் என்று கொஞ்சம் உருப்படியாக எடுத்த சாமியின் படம், ஜெமோ வேறு இருக்கிறார் என்று நம்பிப் போனதற்கு செருப்படி. துருக்னேவ் அது இது என்றெல்லாம் பீலா விட்டு கடைசியில் அஜால் குஜால் படம் எடுத்து இருக்கிறார்கள். தெரியாமல் ஏற்பட்டுவிடும் உறவு, அதன் காரணமான மனதின் போராட்டம் என்றிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஆனால் இங்கே எல்லாமே வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கிறது. மாமனார் மருமுகள் உறவு கொள்வது.. அதன் பிறகு அவர்கள் ரொம்ப சந்தோஷத்தோடு ஒன்றாகக் குடும்பம் நடத்துவது..கருமம்டா. இதற்கு "மாமனாரின் இன்ப வெறி" என்று நேரடியாகவே எடுத்து இருக்கலாம்.

***************

"buzz "இல் நண்பர்கள் மூலமாகத்தான் இந்தத் தளம் அறிமுகமானது. வசுமித்ர.. மனிதர் கவிதைகளில் பட்டாசு கிளப்புகிறார். எனக்கு ரொம்பப் பிடித்தமான அவருடைய கவிதை இங்கே..

தற்காலிகமாகத்தான் அவன் செயல்புரிந்தான்
மழைக்குப் பின்பு ஈரம் கூடாத தரையில் கால் பதித்தவாறு
அப்படியாகத்தான்
வாய்த்தது அக்குரல்

தனிமையைப் பீய்ச்சியடிக்கும்
ஒரு
ஒரு
ஒரே
சொல்
அத்தகையது

அப்படியாக
அவன் அவளைச்சந்திக்கும்போதெல்லாம்
சொல்லியும்
இசைத்தும் வந்தான்

வயலின் நாணை அறுத்தெறிந்தபொழுது
துள்ளி விழுந்த அதன் கடைசித்துளி
மற்றும்
சிறு
சுதி

அவனுக்கு மொழியென்பது
மௌனத்தின்
என்றைக்கும் வாய்க்காத கிசுகிசுப்பு

பனிக்கட்டிகள் தங்கள் நிறத்தை இழந்து தவழ்கையில்
மழை வெப்பம் உள்ளங்காலை நனைக்கிறது

பிணவறைக்குள் ஒரு கவிஞன் நுழைகையில்
கடவுளர்கள்
மௌனத்தைப் புடம் போட்டுக்காக்கின்றனர்

கவிஞன் இறுமுகிறான்
பிணவறை இசைக்கத்தொடங்கியது ஓலத்தை
அதன்
தார்மீகத்தை
இப்படியாக
இருப்பை

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

September 25, 2010

எஸ்.எம்.எஸ் மொக்கைகள்

தண்ணி அடிச்சா மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..

* மாப்ள.. நீ ஒண்ணியும் கவலைப்படாத.. நான் ஸ்டேடியாத்தான் இருக்கேன்..

* டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா

* ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா

* நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க

* இன்னொரு கல்ப் அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்

* இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்

கடைசியா.. இதுதான் பட்டாசு...

* மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது

@@@@@

உலகத்துலேயே சின்ன லீவ் லெட்டர் எது தெரியுமா?

மதிப்பிற்குரிய ஐயா,

உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்

மிக்க நன்றி.

@@@@@

* டீ மாஸ்டர் என்னதான் "லைட்டா" டீ போட்டாலும், அதுல இருந்தாலும் வெளிச்சம் வராது

* பவர் கிளாசை எவ்ளோ நேரம் பிரிட்ஜ்ல வச்சாலும் அது கூலிங் கிளாஸ் ஆகாது

* ரயில் என்னதான் வேகமாப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாத்தான் வரும்..

@@@@@

உலகக் காதலின் சின்னமா தாஜ்மகால சொல்றோம். ஆனா உங்களுக்கு சில உண்மைகள் தெரியுமா?

* மும்தாஜ் ஷாஜகானோட நாலாவது பொண்டாட்டி (மொத்த டிக்கட் ஏழு)

* மும்தாஜ கரெக்ட் பண்றதுக்காக அவளோட புருஷனையே ஷாஜுக்குட்டி போட்டுத் தள்ளியிருக்காரு (இது காதலா கள்ளக்காதலா?)

* மும்தாஜ் செத்தது அவளோட பதினாழாவது பிரசவத்துல (அவ்வ்வ்வவ்வ்வ்)

* அவ செத்ததுக்குப் பிறகு மும்தாஜோட தங்கச்சிய வேற சாசு கரெக்ட் பண்ணியிருக்காரு (மச்சக்காரன்யா..)

தாஜ்மகாலைப் பத்தி இப்போ சொல்லுங்க சாமிகளா..

@@@@@

உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். விருப்பம் போல காதல் செய். உள்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டுமே பேசு. ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்துச் சொல்லும்..

"தறுதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்குட்டு உருப்புடப் போகுது?"

@@@@@

பத்து வருஷத்துக்கு முன்னாடி..

ஒரு பணியாரம் பத்து பைசா, ஒரு போன்காலுக்கு ஒத்த ரூவா

இன்னைக்கு..

ஒரு போன்காலுக்கு பத்து பைசா, ஒரு பணியாரம் ஒத்த ரூவா

அதனாலத்தான் சொல்றேன்..

வாழ்க்கை ஒரு வட்டம்டா

@@@@@

இவ்வளவு சொல்லிட்டு "அவரப்" பத்தி சொல்லலைனா எப்படி?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே காமெடிதான்.

* "கில்லி"ன்னு சொல்லிக்கிட்டு ஹீரோ கபடி ஆடுவாரு

* "போக்கிரி"ல போலிஸ்னு சொல்லிபுட்டு கடைசில கூர்க்காவ காமிப்பாங்க

* "அழகிய தமிழ்மகன்"னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அப்படி யாரையும் கண்ணுல காட்டவே இல்ல

* இது கூட பரவாயில்லைங்க.. "குருவி"ன்னு சொன்னாங்க.. ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல

* "வேட்டைக்காரன்"னு சொல்லி ஒரு ஈத்தர ஆட்டோக்காரனக் காமிக்குறாங்க

* கடைசி கொடுமை.. "சுறா"ன்னு சொல்லி கருவாடக் காமிக்குறாங்க..

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...

(வர பதிவுகள் எல்லாமே ரொம்ப சீரியஸா இருக்கு.. ஏன் மொக்கை போட மாட்டேங்கிற என்று கேட்ட நண்பர்களுக்காக..)

September 23, 2010

ஆபரேஷன் புளூ டைமண்ட் (சவால் சிறுகதை)

பாங்காக்கில் இருந்து சென்னை வரும் விமானம். 23ஆம் எண் இருக்கையில் அமைதியாக அமர்ந்து இருப்பவள்தான் காமினி.. நம் கதையின் நாயகி.

"இதுவரை எல்லாமே சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.. கடைசி வரை இப்படியே இருந்தால் சந்தோசம்.."

இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு. வெகு நேரமாகத் தன்னை யாரோ உற்று கவனிப்பது போல.. சடாரென்று உள்ளுணுர்வு உந்தித் தள்ள திரும்பிப் பார்த்தாள்.

"இவ்வளவு நேரமாக அந்த சர்தார் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தானோ? ச்சே ச்சே இருக்காது..." தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கும் என ஒலிபெருக்கி அழகி அறிவித்துக் கொண்டிருந்தாள்.

விமானத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்கள் நால்வரும் எழுந்தார்கள். எங்கிருந்து முளைத்ததெனத் தெரியாமல் அதிநவீன துப்பாக்கிகள் அவர்கள் கரங்களில் இருந்தன. ஒருவன் கேப்டனின் கேபினுக்குள் போக மற்றவன் ஓங்கிக் கத்தினான்.

"இப்போது முதல் இந்த விமானம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்வரை நீங்கள் எல்லாரும் எங்களுடைய கைதிகள். எந்த வீம்பும் பண்ணாதவரை யாருக்கும் ஆபத்தில்லை."

காமினிக்கு லேசாக வியர்த்தது. இது என்ன எதிர்பார்க்காத சிக்கல்?

ரண்டு மணி நேரங்களாக விமானம் ஓடுதளத்தில்தான் நின்று கொண்டிருக்கிறது. பயணிகள் எல்லாரும் பீதியில் அமிழ்ந்து போய்க் கிடந்தார்கள். சிறிது நேரம் கழித்து கேப்டனின் கேபினுக்குள் இருந்த தீவிரவாதி ஆர்ப்பாட்டத்தோடு வெளியே வந்தான்.

"அரசு ஒத்துக் கொண்டு விட்டது. நம் நண்பர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.."

அவன் பேசிக் கொண்டிருந்தபோதே விமானத்தின் உள்ளே புதியதோர் நறுமணம் எழுந்தது. எங்கிருந்து இந்த வாடை வருகிறது என பிரயாணிகள் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரைவழி வெண்ணிறப் புகைமண்டலம் ஒன்று விமானத்தின் உள்ளே பரவத் தொடங்கியது.

"தோழர்களே.. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம. ஏதோ சூது.." பேசிக் கொண்டிருந்த தீவிரவாதி மயங்கி விழுந்தான். கூடவே பயணிகளும்..

காமினி மெதுவாக சிரமப்பட்டுத் தன கண்களைத் திறந்தாள். கால்மாட்டில் ஓர் உருவம் மங்கலாகத் தெரிந்தது. டாக்டர்? அந்த அறையில் அவளைப் போலவே நிறைய பேர். கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள்.

"எத்தனை சீக்கிரம் முடியுமோ இங்கிருந்து கிளம்பி விட வேண்டும்"

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அது ஒரு நீண்ட வராண்டா. அதன் கடைசியில் இருந்த அறைக்குள் எல்லாருடைய உடைமைகளும் கிடந்தன. தன்னுடையதைத் தேடி எடுத்துக் கொண்டாள். அங்கிருந்த களேபரத்தில் யாரும் அவளைக் கவனிக்கவில்லை. சத்தம் போடாமல் மெதுவாக நடந்து வெளியே வந்தாள். சாலையில் போன ஆட்டோவை நிப்பாட்டி ஏறிக் கொண்டாள்.

"எக்மோர்.."

துரை. ஹோட்டல் பிரேம் நிவாஸ். ரூம் நம்பர் 206.

"ஹலோ.. ரிசப்ஷன்?"

"எஸ் மேடம்"

"எனக்கொரு கார் வேண்டும். அவசரமாக.."

"ஏற்பாடு செய்து விடலாம். டிரைவர்?"

"தேவையில்லை"

"நல்லது.. பதினைத்து நிமிஷம்."

காமினி குளித்து முடித்து வந்தபோது போன் ரிங்கிக் கொண்டிருந்தது.

"உங்களுக்கான கார் கீழே காத்துக் கொண்டிருக்கிறது. போர்ட் ஐகான். இளம்பச்சை நிறம்.."

"நன்றி"

காமினி லிப்டில் இருந்து வெளிப்பட்டாள். ரிஷப்ஷனில் இருந்து திரும்பும்போது காலில் ஏதோ இடறியது. குனிந்தாள்.

"டிஸ்யூங்"

தலைக்கு மேலே கண்ணாடி சிதறியது. "ஓ மை காட்.. யாரோ நான் இங்கே வந்திருப்பதை அறிந்திருக்கிறார்கள்.." சட்டெனக் குனிந்து ஓடி காருக்குள் ஏறினாள். விர்ரூம்.. பயங்கர வேகத்தில் கார் கிளம்பியது.

ஏதோ ஒரு மாடியில் ஒளிந்திருந்து சுட்டிருக்கிறார்கள. யாராக இருக்கும்? அவளுக்கு பிளாட்டில் பார்த்த சர்தார்ஜியின் ஞாபகம் வந்தது. அவனாக இருக்குமோ? சிந்தனை செய்தபடியே காரின் ரியர்வியூ மிரரைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

அவளுடைய காரின் வாலைப் பிடித்தபடியே ஒரு புல்லட். அதில் இருந்த இரண்டு பேரின் முகத்திலும் நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று தெளிவாக எழுதி இருந்தது. காரின் வேகத்தைக் கூட்டினாள்.

துரையின் குறுகிய ரோடுகளில் காரை அத்தனை வேகமாக ஓட்டுவது சிரமமாக இருந்தது. இருந்தும் காமினி சமாளித்து ஓட்டினாள். அவர்களும் விடாமல் துரத்தி வந்தார்கள். அபாயகரமான ஒரு வளைவில் காமினி காணாமல் போனாள்.

புல்லட் நின்ற இடம் ஒரு சந்தின் முனை. அங்கிருந்து ரோடு மூன்று வழிகளில் பிரிந்தது. அவர்கள் குழம்பிப் போனவர்களாக நின்றார்கள். அந்தப் பெண் எந்த பக்கமாகப் போனாள்? அவர்கள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது பின்னாடி இருந்து அந்த சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் விக்கித்துப் போனார்கள்.

காமினியின் கார் வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடப்பதை உணர்ந்து அவர்கள் விலகுவதற்குள்.. டம்ம்.. அவர்கள் புல்லட் இரண்டு மூன்ற குட்டிக் கரணம் அடித்து சாலையின் ஓரமாக விழுந்தது. அவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள். கார் நிற்காமல் போய் விட்டிருந்தது.

ந்த டெலிபோன் பூத்தின் முன் காமினி தன காரை நிப்பாட்டினாள். மனப்பாடம் செய்திருந்த நம்பரை அழைத்தாள்.

"ஹலோ.."

".."

"வானவில்லின் நிறம் நீலம்.."

".."

"பத்திரமாக இருக்கிறது."

".."

"தெரியும்.. தப்பித்துக் கொண்டு விட்டேன்.."

".."

"சரி.. இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன்.."

காருக்குள் ஏறி உட்கார்ந்து வண்டியைக் கிளப்பினாள்.

"வண்டியைக் கொஞ்சம் ஓரமா நிப்பாட்ட முடியுமா?"

அதிர்ச்சியாகி பின்னால் திரும்பினாள். அங்கே இருந்தவன்.. இவன் தானே சர்தார்ஜி வேசத்தில் வந்தவன்?

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"நீ பொம்பளைப்பிள்ள.. உன்னையக் கஷ்டப்படுத்தக்கூடாது.. உனக்குத் தெரியாமலே வைரத்தை எடுத்திரணும்னுதான் முயற்சி பண்ணினேன். ஆனா அந்தத் திடீர் விமானக் கடத்தல்னால எல்லாம் மாறிப் போச்சு.. தயவு செஞ்சு பிரச்சினை பண்ணாம அந்த வைரத்தக் கொடுத்திரு.."

"சரி.. தரேன்.."

எதையோ எடுப்பவள் போலக் கீழே குனிந்தாள் காமினி. சின்னதொரு ஆர்வத்தில் சிவாவும் கீழே பார்க்க, அந்த நேரம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. சராரென்று ரிவர்சில் கியரைப் போட்டு காரைக் கிளப்பினாள். அந்த வேகத்தில் சிவாவின் கையிலிருந்த துப்பாக்கி தவறி விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் வண்டியைக் கொண்டு போய் அருகில் இருந்த சுவரில் வேகமாக மோதினாள்.

காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் காமினி. பின்சீட்டில் சிவா மயங்கிக் கிடந்தான். அவளுக்கும் காலில் அடி பட்டிருந்தது. நொண்டியபடியே அங்கிருந்து விலகி நடக்கத் தொடங்கினாள்.

ழகர்மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தாள் காமினி. சரியான நேரத்துக்கு வந்தாயிற்று. இதுதான் அவர்கள் வர சொன்ன இடம்?

சிறிது நேரம் கழித்து ஒரு சுமோ அவளருகே வந்து நின்றது. உள்ளே இருந்தவன் கேட்டான். "காமினி?"

"ஆம்.."

"உள்ளே ஏறிக் கொள்.."

உள்ளே போனவுடன் அவள் கண்கள் கட்டப்பட்டன. அரைமணி நேரப் பயணம்.

வள் கண்களின் கட்டு அவிழ்க்கப்பட்டபோது ஒரு பிரமாண்டமான வீட்டின் உள்ளே நின்றிருந்தாள். எதிரே ஜிப்பா போட்ட ஒரு பெரிய மனிதர்.

"வைரம் எங்கே.."

அவள் மென்மையாகச் சிரித்தாள். கீழே குனிந்து தனது வலது காலின் செருப்பைக் கழட்டினாள். அதன் குதிகால் பாதியை தனியாக் பிரித்து உள்ளே இருந்த வைரத்தை எடுத்தாள். ஒரு பெரிய சைஸ் கோலிகுண்டைப் போல இருந்த அது நீல நிறத்தில் டாலடித்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"இதை நாம் கொண்டாடியே ஆக வேண்டும். என்ன பண்ணலாம் சொல்.." பரந்தாமன் பேசிக் கொண்டிருக்கும்போதே டிஷ்யூங் என்று சுட்டுக் கொண்டே உள்ளே ஒரு பெரிய போலிஸ் படையே நுழைந்தது.

பரந்தாமனால் நம்ப முடியவில்லை. "எப்படி.. எப்படிக் கண்டுபிடித்தீர்கள்" என்று அலறியபடியே காமினியைப் பார்த்தார். அவள் இப்போது சிரித்துக் கொண்டே தன்னுடைய இடது காலின் செருப்பைக் கழட்டினாள். அதன் உள்ளே "பீப் பீப்" என்றபடி ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர்.

"வாழ்த்துகள் காமினி.. உங்களால ரெண்டு மூணு கடத்தல் கும்பலை வளைச்சுப் பிடிச்சிருக்கோம்.. " கமிஷனர் சொன்னதைக் கேட்டு சிரித்தபடி உட்கார்ந்து இருந்தாள் காமினி.

"பை தி வே.. உங்களுக்கு இன்னொரு முக்கியமான மனிதரை நான் அறிமுக செய்ய வேண்டியிருக்கு.."

"யார் சார்.."

"இவர்தான்..உங்களை மாதிர்யே நம்ம டிபார்ட்மேண்டின் இன்னொரு அண்டர்கவர் ஆபிசர்.. மிஸ்டர்.சிவா.."

கமிஷனர் கைகாட்டிய திசையில் சிரித்தபடியே உள்ளே வந்தான் சிவா.

"ஏங்க ஒரு மனுஷன இப்படியாப் போட்டு அடிப்பீங்க.."

"அய்யய்யோ.. சாரிங்க.."

எழுந்து கைகுலுக்கிய காமினியின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.

September 21, 2010

யானைமலை - ஆபத்தில் இருக்கும் அற்புதம்

மதுரை ஒத்தக்கடையில் இருக்கும் யானைமலை வரலாற்று சிறப்பு வாய்ந்ததொரு இடமாக இருக்கிறது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மலையில் சமணர் குகைகள், சங்ககால கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள் என்று பல முக்கியமான இடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே இந்த இடங்கள் சரியான கவனிப்பின்றி கிடக்கும் சூழ்நிலையில், இங்கே ஒரு சிற்ப நகரத்தை அரசு உண்டாக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இதன் பின்னால் இருக்கும் அரசியல், யானைமலை மீதான கிரானைட் மாபியாக்களின் ஆர்வம், ஒத்தக்கடை மக்கள் சந்தித்து வரும் அரசியல் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்களைப் பற்றி சென்ற ஆகஸ்ட் மாத உயிர்மையில் முக்கியமான கட்டுரையொன்றை .முத்துகிருஷ்ணன் எழுதி இருந்தார்.

அறிவிப்புப் பலகையே பாதுகாக்கப்படவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கு

இதன் தொடர்ச்சியாக மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் முத்துகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு யானைமலையில் நிலவும் பிரச்சினைகள் பற்றி விசாரித்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். என்னவென்று வெறுமனே பேசிக் கொண்டிருப்பதை விட மலைக்கு நேரிலேயே போய் பார்த்தால் என்ன என்று தோன்றியதால், நண்பர்கள் அனைவரோடும் மலையையும் அதில் இருக்கும் வரலாற்றுச் சான்றுகளையும் சுற்றிப் பார்ப்பதென முடிவானது. கடந்த சனிக்கிழமை (18-09 -2010) அன்று காலை கிட்டத்தட்ட அறுபது நண்பர்கள் ஒத்தக்கடையில் ஒன்றாய்க் கூட, யானைமலையின் வரலாற்றுச் சின்னங்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.



முதலில் நாங்கள் போனது அங்கே இருக்கும் சமணர் குகைக்கு. மலையில் வெட்டப்பட்டு இருக்கும் சுமார் நாற்பது ஐம்பது படிகளில் மேலேறிப் போனால் குகையை அடையலாம். அந்த இடமொரு சுற்றுலாத்தளம் என்றாலும் கவனிப்பின்றிதான் கிடக்கிறது. உள்வாங்கி போய்க் கொண்டே இருக்கும் குகைக்குள் இரண்டு அல்லது மூன்று ஆட்கள் தங்கலாம். குகையின் முகப்பில் சமணதீர்த்தங்கரின் சிற்பம், பாகபலி, அம்பிகா ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. அதன் கீழேயே வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் பக்கவாட்டில் மிக அழகான மகாவீரரின் புடைப்பு சிற்பம் உள்ளது. எல்லா சிற்பங்களிலும் சுதை பூசப்பட்டு இருந்தாலும் காலப்போக்கில் அவை அழிந்து போய் இன்று அதன் எச்சங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

சமணர் குகையின் முன்பு நண்பர்கள் அனைவரும் அமர்ந்து கொள்ள நண்பர் சுந்தர் காளி இந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றியும், சமணர்கள் வரலாறு பற்றியும் பேசத் துவங்கினார்.



"நூறு ஆண்டுகள் பழமையான விஷயங்களைக் கூட வெளிநாடுகளில் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகள் தொன்மையான சின்னங்கள் பற்றி நம் அரசு கவலை கொள்ளாததாக இருக்கிறது. இந்த மலையில் ரொம்பப் பழமையான பிராமி எழுத்தக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கூட இருக்கின்றன. எழுத்து என்பது ரொம்ப காலம் முன்பே தோன்றி விட்டது. கி.மு.1500 வரையான எழுத்து வடிவங்கள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. அதன் பின்னர் ஒரு ஆயிரம் வருடங்களுக்கு என்ன மாதிரியான எழுத்துகள் உபயோகத்தில் இருந்தன என்று தெரியவில்லை. ஆனால் கி.மு.500 முதலான கல்வெட்டுகள் மீண்டும் நமக்கு கிடைத்துள்ளன.

சமணர் குகை

பண்டைய மனிதன் தன்னுடைய எண்ணங்களை பொறித்து வைக்க மூன்று விஷயங்களைப் பயன்படுத்தினான். கல்வெட்டு, காசு மற்றும் மண்பாண்டங்கள். அந்த காலத்து வாழ்க்கையை அறிந்து கொள்ள இவையே நமக்கு சான்றாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சமணம் மிக முக்கியமான மதமாக இருந்து வந்திருக்கிறது. சுவேதம்பரர்கள், திகம்பரர்கள் என்று இரு பிரிவினராக சமணர்கள் இருந்தார்கள். திக் - திசையையே ஆடையாய்க் கொண்டவர்கள் என்பதே திகம்பரர்கள் ஆனது. எனவே சமண முனிவர்களுக்கு வேண்டிய வசதிகளை அந்தந்த ஊரின் அரசர்களோ தானாதிபதிகளோ செய்து வந்திருக்கிறார்கள். குகையை சீர் செய்து படுக்கை போன்றவற்றை செய்து கொடுத்து, அந்தக் குகையின் முகப்பில் தங்கள் பெயரையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

தீர்த்தங்கரர் - இயக்கன் இயக்கியுடன்

மிகப் பழமையான கல்வெட்டுகள் நமக்குக் கிடைத்து இருக்கின்றன. ஒரு கல்வெட்டில் "ஆங்கோல்" என்றொரு வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இது பொதுவாக தமிழில் பயன்பாட்டில் இல்லாதொரு வார்த்தை. தொல்காப்பியத்தில் மட்டுமே காணக் கிடைக்கிறதென்றால் அதன் முக்கியத்துவம் எத்தகையது? அதே போலத்தான் சில வரலாற்று உண்மைகளை எளிதில் விளங்கிக் கொள்ள கல்வெட்டுகள் உதவுகின்றன. அசோகர் காலத்தைய கலிங்கக் கல்வெட்டு ஒன்றில் சேர, சோழ, பாண்டியர்களோடு சதபுதோ என்றொரு வார்த்தை இருந்திருக்கிறது. அது என்னதென்று தெரியாமல் நிறைய நாட்கள் அறிஞர்கள் குழம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டு ஒன்றால் அத்தனை குழப்பமும் ஒரே நாளில் தீர்ந்து போனது. சதபுதோ என்பது சத்யபுத்ரா என்பதின் மருவு என்றும் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கக் கூடியது என்றும் பொருளாகிறது.

மகாவீரர் - அம்பிகா சிற்பங்கள்

சேரர்களின் தலைநகராக இருந்த வஞ்சி - இன்றைய கரூரில் ஒரு கல்வெட்டு கிடைத்து இருக்கிறது. ஒரு சமண முனிவருக்கு ஒரு இளவரசன் முடிசூடிக் கொண்டபோது குகை வெட்டிக் கொடுத்ததைப் பற்றியக் கல்வெட்டு. அதில் மூன்று சேர அரசர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் யாரென்றால், பதிற்றுப்பத்தின் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் பத்தின் நாயகர்கள். இதன் மூலம் சங்கப்பாடல்கள் என்பவை கற்பனை அல்ல என்பதும், அந்த அரசர்கள் பற்றிய தகவல்களும் கிடைத்து இருக்கின்றன என்பது குறிப்பிடப்பட வேண்டியது. வெகு சமீபமாக வத்தலகுண்டு அருகில் மிகப் பழமையான நடுகற்களும் கிடைத்திருக்கின்றன. ஆக மிகப் பழமையானதொரு கலாச்சாரத்தின் எச்சமாகத்தான் நாம் இருக்கிறோம். அவற்றைக் காப்பது நம் கடமையும் கூட"

சுதை பூசப்பட்ட மகாவீரரின் மிகப்பெரிய சிற்பம்

சமண குகையிலிருந்து கிளம்பிய நண்பர்கள் குழு சென்ற அடுத்த இடம் லாடன் கோயில். மிகப்பெரிய குடைவரைக் கோவிலின் உள்ளே முருகன் தெய்வானையின் (வள்ளி?!!) சிற்பங்கள், வேலின் மீதிருக்கும் சேவல் மற்றும் மயிலின் சிற்பங்கள், மற்றும் இரண்டு மனிதர்களின் சிற்பங்களும் இருக்கின்றன. யோக நரசிம்மர் கோவிலின் பின்னே இருக்கும் இந்தக் கோவிலை யாருக்கும் தெரிவதில்லை என்பது சோகமான விஷயம். முருக வழிபாடு பற்றியும் இந்தக் கோவில் பற்றியும் நண்பரொருவர் பேசத் தொடங்கினார்.



"லாடன் என்பது கல்லாடன் என்பதின் மாறிய வடிவமாக இருக்கலாம். ஏனென்றால் தமிழில் ரா, லா ஆகியவை முதலெழுத்தாக வராது. எனவேதான் ராமன், ராவணன் ஆகியோருக்கு தமிழ் மண்ணுடன் தொடர்பு இருக்காது எனத் தோன்றுகிறது. முருகன் என்பவன் தமிழ் மண்ணின் தெய்வமாக இருந்தவன் பின்பு கடவுளாக்கப்பட்டான். அவரவர் வீட்டில் இருக்கும் குலதெய்வம் என்பதே தெய்வம். அது ஒரு மதம் சார்ந்து பெரிய தளத்துக்குப் போகும்போது கடவுளாக மாற்றப்படுகிறது. நாம் இன்று பார்க்கும் முருகனும் சங்க கால முருகனும் வெவ்வேறு. தமிழ்க்கடவுளான முருகன் பின்பு சிவனின் மகனாக்கப்பட்டான். அவன் ஒரு குறத்தியை மனம் புரிவதா? எனவே அவனுக்கு தெய்வானை என்றொரு பெண்ணிடம் திருமணம் முடிகிறது. அவள் இந்திரனின் மகள். இப்படியாகத்தான் மார்க்கங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

நரசிம்மம் என்பது வெற்றியின் சின்னம். எனவே பாண்டியர்கள் ஏதேனும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சமணர்களைக் கழுவில் ஏற்றியதாகக் கூட இருக்கலாம், அதனைக் கொண்டாட இங்கே நரசிம்மத்தின் சிலையை உண்டாக்கி இருக்கலாம். பிற்பாடு வந்த வைஷ்ணவ மக்கள் முருகனைப் பின்தள்ளி இன்று இந்த இடம் நரசிம்மர் கோவிலாக மாறிப் போய் விட்டது. அதன் பின்னர் நரசிம்மர் கோவில் செழித்தோங்க தமிழ்க்கடவுளான முருகன் கோவில் கேட்பாரற்றுக் கிடக்கிறது."

இலாடன் கோயில் குடைவரைக் கோயில்

இதன் தொடர்ச்சியாக சுந்தர் காளி இன்னும் சில விஷயங்களைக் கூறினார்.

"சங்க காலத்து முருகனின் குணாதசியங்களே வேறு. ஒரு சங்க காலப்பாடல். தலைவனைப் பிரிந்த பசலையால் மெலிந்து நோயுற்றவளாக இருக்கிறாள் நாயகி. அவள் வீட்டில் இருப்பவர்கள் அவளுக்கு முருகன் பிடித்திருப்பதாக சொல்லி பூசாரியைக் கொண்டு குணம் செய்விக்கிறார்கள். ஆக முருகன் என்பவன் பெண்களோடு மையல் கொள்ளும் ஒரு தெய்வமாக இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கு எல்லாம் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் குடைவரைக் கோவில்கள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கின்றன. அதற்காக எழுப்பட்டக் கோவில்கள் இல்லை என்று அர்த்தமில்லை. நமக்குத் தெரிந்து பழமையான எழுப்பப்பட்ட கோவில் கும்பகோணத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் - ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் சமீபமாக சுனாமி தாக்கிய தமிழ்நாட்டின் வடபகுதியொன்றில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுப்பப்பட்ட கோவில் கிடைத்துள்ளது. அது ஒரு முருகன் கோவில் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்."


லாடன் கோவிலின் வாசலில் இருந்த இந்த சிதைந்த சிற்பம் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு பூதகணமாக இருக்கக்கூடும். இதே போன்ற சிற்பங்களை நான் அங்கோர்வாட் கோவில் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கோவில்களின் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன்.

அதன் பின்னர் தாமரைக்குளத்தில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மனதுக்கு நிறைவானதொரு பயணம். முடிவாக, மதுரையைச் சுற்றி இதுபோல இருபது இடங்கள் இருப்பதாகவும், இனி மாதமொரு ஞாயிற்றுக்கிழமை இதுபோன்ற தொன்மையான இடங்களுக்கு சென்று வரலாம் எனவும் நண்பர் முத்துகிருஷ்ணன் கூறினார்.

தொன்மங்களின் உறைவிடமாக இருக்கும் யானைமலைக்கு எந்தத் தீங்கும் வராமல் இருக்கும் என அரசு உறுதி கூற வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையும் ஆசையும். புராதனச் சின்னங்களுக்கும் தொன்மங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமேயில்லை. ஆனால் அவற்றை சரியாகப் பாதுகாப்பதில்தான் சிரத்தை இல்லாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். மாறும் என நம்புவோம்.

September 16, 2010

வேற்றுகிரகவாசிகள்

பெய்து கொண்டிருந்த பெருமழையின் ஊடாக
நேற்று மாலை சரியாக 6 :31 மணிக்கு
வீட்டில் மின்சாரம் இல்லாமல் போனது

திருமதி செல்வம் பார்க்க முடியாதே
எனப் புலம்பியபடி அம்மாவும்
ஐபிஎல்லில் இன்றென்னாகுமோ
என்ற பதைபதைப்புடன் அப்பாவும்
அடுத்த நாள் மேத்ஸ் மேடம் தரப்போகும்
தண்டனையை எண்ணி கலக்கம் கொண்டவனாய் தம்பியும்
கடனைத் திருப்பிக் கேட்க வரும் நண்பர்களுக்கு
என்ன பதில் சொல்வதெனக் குழம்பியபடி நானும்
இருட்டாலும் என்னை ஒன்றும் செய்து விட முடியாதெனத்
தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் தாத்தாவும் - என

ண்ணுக்குப் புலப்படா ஊற்றிலிருந்து பொங்கியபடியிருந்த இருளை
கூரியதொரு வெளிச்ச வாள் கொண்டு
கிழித்துப் போட்ட
மெழுகுதிரியினை சுற்றி கூடி இருந்த மனித வட்டம்
சூரியனைச் சுற்றும் கிரகக்
கூட்டங்களின் மாதிரியாய் இருந்தது

நேரத்தைப் போக்க ஆளுக்கொரு கதை சொல்வதென முடிவாகி
பால்ய காலத்தில் தான் பிரிந்த சினேகிதி ஒருத்தியினைத்
தான் சமீபத்தில் சந்தித்த கதையை
அம்மா சொல்லி முடித்தபோது
அவள் கண்ணோரம் துளிர்த்த இரு கண்ணீர்த்துளிகளை
வேறு யாரும்
கவனிக்கவே இல்லை

வாங்கி வரும் பொருட்களில் எல்லாம்
தனக்கும் ஒரு பங்கு
கொண்டு வந்து தரும்
பக்கத்து பெஞ்சு ப்ரீத்தியின் கதையை சொல்லும்போது
தம்பியின் கண்களில் இருந்த சந்தோசம்
நான் இதுவரை அவனிடம் கண்டிராதது


வேலை நேரத்தில் தான் சென்று வந்த
ஊர்களின் விநோதங்களை அப்பா
சொல்லத் துவங்கியபோது - அவற்றின் ஊடாக
மீண்டும் ஒரு முறை பயணிக்கும்
காலப்பயணியாக மாறி விட்டிருந்தார்


பேசுவது புரிகிறதா இல்லையா எனத் தெரியாமலேயே
எல்லாவற்றுக்கும் பொக்கைவாய் பிளந்து
சிரித்தபடி இருந்த தாத்தா
என்னையும் தம்பியையும் அடிக்கடி அருகே அழைத்து
அழுந்த முத்தமிட்டதில் - பேரன்பின் பெருநதி
திசையறியாது ஓடிக் கொண்டிருந்தது


னக்கான கதையை நான் சொல்ல யத்தனித்த வேளையில்
மிகுந்து எழுந்த தொலைக்காட்சியின் அலறல்
மின்சாரம் வந்து விட்டிருந்ததை சத்தமாக
அறிவிக்க
எல்லோரையும் இணைத்திருந்த அரூப இழையொன்று
சட்டென்று தெறித்து வீழ்ந்தது

நினைவுகளில் தொலைந்திருந்த அனைவரும்
அமைதியாக அவரவர் முகமூடியைத் தேடிப்போக
வேறொரு கிரகமாய் மீண்டும்
மாறத் துவங்கியிருந்தது வீடு..!!!

September 14, 2010

ஞாநியுடன் ஒரு சந்திப்பு

"ஓ பக்கங்கள்" ஞாநி பற்றி அறிமுகம் எதுவும் தேவையில்லை. மிக முக்கியமான பத்திரிக்கையாளர்.. யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய கருத்துகளைத் தைரியமாக முன்வைப்பவர்.. நாடகம்-எழுத்து-ஓவியம்- திரைப்படங்கள் என்று பல தளங்களில் இயங்குபவர்.


கருத்துரீதியாக அவரோடு எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் நான் பெரிதும் மதிக்கும் மனிதர்களில் ஞாநியும் ஒருவர். தருமி ஐயா புண்ணியத்தில் மதுரை புத்தகத் திருவிழாவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெகு இயல்பாகப் பேசியவர் புத்தகத் திருவிழா நடக்கும் நாட்களில் ஏதேனும் ஒரு மாலை வேளையில் மதுரை வலைப்பதிவர்களைத் தானும் சந்திக்க ஆவலோடு இருப்பதாக சொன்னார்.

நண்பர்களோடு கலந்து பேசி, போன வியாழக்கிழமை (08-09-10) அன்று மாலை ஞாநியைச் சந்திப்பதற்காக பதிவர்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் ஒன்றுகூடினோம். வழக்கமாக வரும் மதுரை நண்பர்களோடு வெகு நாட்களாக வருவதாக டபாய்த்துக் கொண்டிருந்த முரளிகண்ணன், காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்த பீர் ஆகியோரும் இணைந்து கொள்ள கூட்டம் களை கட்டியது. இத்தனை நல்ல மனிதர்களை ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் வானம் ஆனந்தக் கண்ணீர் உகுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் (அட.. அதாங்க.. மழை பெய்ஞ்சது).

தமுக்கத்தின் வெட்டவெளியில் நிற்க முடியாமல் நண்பர்கள் அனைவரும் ஞாநியுடன் அருகிலிருந்த "நார்த் கேட்" ஹோட்டலின் சிற்றுண்டி சாலையில் தஞ்சம் புக சந்திப்பு தொடங்கியது. வந்திருந்தவர்கள் எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம். வலையுலகில் ஒவ்வொருவரும் எந்தவொரு எண்ணத்தோடு உள்ளே வந்தோம், வந்த பின்பு இன்றைக்கு என்ன மாதிரியான எண்ணங்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவதாக ஞாநி சொன்னார்.

பணிஓய்வுக்குப் பின் கிடைத்த அதிக நேரத்தை நல்லபடியாக செலவு செய்ய வலைப்பூக்கள் உதவுவதாக தருமி கூறினார். கல்வி சார்ந்து நிறைய விஷயங்களைச் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக தான் இயங்குவதாக மதுரை சரவணனும், தமிழில் எழுதும் பழக்கத்தை தொடர்வதற்காகவே வலைப்பூ என்று ஸ்ரீதரும் சொன்னார்கள். 2005 -ஆம் ஆண்டுவாக்கில் தேர்தல் நேரத்தில் மதுரை சார்ந்து செய்திகளை எழுத வலைப்பூ ஆரம்பித்ததாகவும், பின்னர் அதில் எழுந்த சில நடைமுறைப் பிரச்சினைகளின் காரணமாக, தான் நன்கறிந்த சினிமா பற்றி எழுதுவதாகவும் முரளிகண்ணன் சொன்னார்.

லண்டனில் வெறுமனே நேரத்தை கடத்த பயன்பட்ட வலைப்பூ எழுதும் பழக்கம் இன்றும் வலைச்சரம் தொடுப்பதில் வந்து நிற்பதை சீனா ஐயாவும், அவருடைய துணைவியார் செல்விஷங்கர் அம்மாவும் பகிர்ந்து கொண்டார்கள். தமிழில் எழுத வேண்டும் என்கிற ஆர்வமும் அதனால் கிடைக்கும் நட்புகளுமே தன்னை வலைப்பூக்களில் தொடர்ந்து இயங்க வைப்பதாக.. அட விடுங்கப்பா.. எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும்ல..:-)))

பின்னர் தன்னைப் பற்றிய சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் ஞாநி. தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக இணையத்தைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யத் துவங்கிய இரண்டாவது நபர் அவர்தானாம். ஆனால் ஆரம்ப காலத்தில் போனோடிக் (phonetic) முறைகள் இல்லாத நிலையில், தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக இருக்கவே இணையத்தில் இருந்து விலகிக் கொண்டாராம். இனி பதிவர்களின் சில கேள்விகளும் அதற்கான ஞானியின் பதில்களும்..

தமிழ் வலைப்பூக்கள் குறித்து?

இணையம் இன்றைக்கு மிகப்பெரிய தகவல்தொடர்பு சாதனமாக உருவாகி இருந்தாலும் பொது ஊடகங்கள் அளவுக்கு தமிழ் இணைய ஊடகம் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலாக எனக்கு இந்த வலைப்பூ என்ற வார்த்தையே சற்று தவறானதாகப்படுகிறது. அதிலும் இடுகை என்றொரு வார்த்தையை உபயோகிக்கிறார்கள். அது சரியானது அல்ல. பதிவு என்பதே சரியானதாக இருக்க முடியும்.

நம்முடைய பிரச்சினையே இதுதான். தமிழில் நல்ல வார்த்தைகள் இருந்தாலும் கூட நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் நிறைய சொற்களை நாம் இரவல் வாங்கிக் கொள்கிறோம்.. அவர்கள் பேசுவதுதான் சரியான தமிழ் என்றொரு எண்ணமும் இங்குண்டு. உண்மையில் இலங்கைத் தமிழில் நிறைய சம்ஸ்கிருத கலப்புண்டு.. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அவதானிப்பு போன்ற வார்த்தைகளைச் சொல்லலாம்..

வலைப்பூக்களில் எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை இந்த பின்னூட்டம் என்னும் வார்த்தை.. feedback என்பதை மொழிபெயர்த்து அப்படியே பின்னூட்டம் என்றாக்கி விட்டார்கள். மறுமொழி அல்லது எதிர்வினை என்பதே சரியானதாக இருக்க முடியும் என்பது என் கருத்து. மற்றபடி இன்றைக்கு தமிழ் வலைப்பூக்கள் ஆரோக்கியமான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் வெகு ஜன ஊடகங்களின் இடத்தை இணையம் பிடிக்க இன்னும் பத்து வருடங்கள் ஆகலாம்.

உங்களை எழுத்தால் எதையாவது மாற்ற முடியும் என நம்புகிறீர்களா?

நம்பிக்கை இல்லை என்றால் எழுதவே மாட்டேனே.. நம் கனவுகள் இன்றில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் கண்டிப்பாக நடக்கும். எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமென்றால், சென்னை மாநகரின் வீதிகளில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மனநலம் குன்றியவர்கள் பற்றி எழுதினேன். சில நாட்கள் கழித்து அந்த மாதிரியான மனிதர்களை மருத்துவமனையில் சேர்க்க அரசு உத்தரவிட்டது. இது போன்ற சம்பவங்களின் போதும் நாம் எழுதியதற்கான பலன் என மனம் நிறைகிறது.

இன்றைய இளைஞர் சமுதாயம் நம்பிக்கை தருகிறதா?

ஆம் எனலாம்.. இல்லை என்றும் சொல்லலாம். சில நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவர் குழுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். வன்முறைக்கு வன்முறைதான் தீர்வாக இருக்க முடியும் என தீர்க்கமாக நம்புவதாகச் சொன்னார்கள். நான் கண்டிப்பாக அப்படி இருக்க முடியாது என்ற வாதிட்டேன்.

"இப்போது மதுரைப் புத்தகத் திருவிழா பற்றி முக்கியமானதொரு தினசரிப் பத்திரிகையில் எந்த விதமான செய்தியும் வருவது இல்லை. காரணம் அவர்கள் கேட்ட விளம்பரங்களை கொடுக்க அமைப்பாளர்கள் ஒத்துக் கொள்ளாததால் இருட்டடிப்பு செய்கிறார்கள். வாருங்கள், போய் அவர்கள் அலுவலகத்தில் கல்லடிப்போம்" என்று சொன்னபோது எல்லா மாணவர்களும் அமைதியாகி விட்டார்கள்.

இதுதான் நான் சொல்வது.. எப்போதுமே வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று.. அதை இளைஞர்கள் உணர வேண்டும். இன்றைக்கு பெண்களுக்கு ஓரளவாவது சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்றால் அது ஒரே நாளில் கிடைத்ததா? இல்லையே.. பல நூற்றாண்டுகளின் கனவல்லவா அது.. அது எப்படி சாத்தியம் ஆயிற்று? தொடர்ச்சியான பேச்சு வார்த்தையின் மூலம்தான் அது சாத்தியமாகும்.

அதே மாணவர்களிடம் இன்னொன்றும் கேட்டேன். நாளை உங்களுக்குத் திருமணம் ஆகும்போது ஜாதி, மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்வேன் என்று அடித்துச் சொல்ல முடியுமா எண்டு.. ஒருவரும் கையைத் தூக்கவில்லை. அதுதான் மனதுக்கு மிகவும் வருத்தம். இந்த நிலை மாற வேண்டும். ஆனால் அது நம்முடைய காலத்தில் நடக்காது போலத் தோன்றுகிறது.

படைப்பாளியின் ஜாதி குறித்து பேசுகிறார்களே?

அது உங்களை அமைதியாக்கும் முயற்சி. உங்கள் எழுத்துகளை ஊமையாக்கும் தந்திரம். அதை கண்டுகொள்வதுதான் நீங்கள் உங்கள் எழுத்துக்குச் செய்யும் பெரும் துரோகம். இவற்றை எல்லாம் தாண்டிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். நேர்மையாக எழுதக் கூடியவன் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அரசியல் நெருக்கடிகள்?

நேரடியாக எனக்கு வருவதில்லை. மாறாக நான் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்குத்தான் நெருக்கடி தருகிறார்கள். அதனால் தான் அவ்வப்போது நான் என்னுடைய முகாம்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

சக எழுத்தாளர்கள்?

அவர்கள் அதிகார பீடத்தை எதிர்க்க வேண்டாம் என எண்ணுகிறார்கள். நான் அதற்கு நேர்மாறாக நினைக்கிறேன். அதனால் அவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே கிடையாது. நானும்..

அரசை எதிர்ப்பது மட்டுமே உங்கள் கொள்கை என்று சொல்கிறீர்களா?

தவறு செய்யும்போதெல்லாம் எதிர்ப்பது மட்டுமே என்னுடைய வேலை. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக அதை எப்போதும் செய்வேன்.

இதுபோக நிறைய தனிப்பட்ட விஷயங்களையும் ஞாநி பகிர்ந்து கொண்டார். அட்டகாசமான மழைக்காலப் பொழுது.. உற்சாகமான உரையாடல்.. நண்பர்களோடு அருமையாய்க் கழிந்ததொரு மாலை வேளை. எங்களோடு தானும் ஒருவர் போல தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஞானிக்கு மதுரைப் பதிவர்களின் உளமார்ந்த நன்றிகள்.

September 12, 2010

நான்மாடக்கூடல் - புகைப்படங்கள்

நான்மாடக்கூடல் - மதுரை புத்தகத் திருவிழாவின் ஒரு பிரதான அங்கமாக மாறி வரும் ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி. சென்ற வருடம் வைக்கப்பட்ட புகைப்படங்கள் மதுரையைப் பற்றியதாக இருந்தன. இந்த வருடம் தமிழக கட்டிடக்கலை சார்ந்த புகைப்படங்களும் ஓவியங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பழங்காலச் சிறப்பை மக்களுக்கு விளக்கும் விதமாக கவிஞர் தேவேந்திர பூபதியின் "கடவு" அமைப்பும், பேரா.காந்திராஜனின் "சித்திரக்கல்" அமைப்பும் இணைந்து இந்த நல்ல விஷயத்தைச் செய்து வருகிறார்கள். கண்காட்சியில் இருந்து மதுரையின் புராதான அழகை படம்பிடித்துக் காட்டும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

தமுக்கம் (தற்போதைய காந்தி அருங்காட்சியகம்)


தமுக்கம் மைதானம்


மீனாக்ஷி அம்மன் கோவில் - தெற்கு கோபுரம்


நாயக்கர் மகால் - முகப்புத் தோற்றம்


மீனாக்ஷி அம்மன் கோவில் - பொற்றாமரைக் குளம்


தெற்கு கோபுரம் - அருகே இருக்கும் குடிசைகள்


நாயக்கர் மகால் - உட்பகுதி


மகாலின் சிதிலமடைந்த பகுதி - இன்றைக்கு மாயமாக மறைந்து விட்டது


கோவில் - வடக்குக் கோபுரம்


புதுமண்டபம் பகுதி

நம்ம புத்தி, வழக்கம் போல மதுரையைப் பத்தின படங்களை மட்டும்தான் எடுத்துப் போட்டிருக்கேன். இதுதவிர காரைக்குடி, செஞ்சி, மாமல்லபுரம் என்று தமிழகக் கட்டிடக்கலைக்கு சான்றாக இருக்கும் முக்கியமான பகுதிகளின் படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. புத்தக விழாவுக்குப் போகும் எல்லாரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கண்காட்சி..

September 10, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - திரைப்பார்வை

பாஸ் என்கிற பாஸ்கரன் - ஆர்யாவின் "தி ஷோ பீப்பிள்" தயாரிப்பில் வந்திருக்கும் முதல் படம். உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட் " வெளியீடு. சிவா மனசுல சக்தி என்கிற ஒரு பாதி நல்ல படத்தை (ஏன்னா ரெண்டாம் பாதி மச மொக்கைப்பா) எடுத்த எம்.ராஜேஷ் இயக்கி இருக்கிறார். "நண்பேன்டா..” என்று டிரைலரிலேயே எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டிருந்த படம். கதை என்கிற வஸ்துவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையையும் திரைக்கதையையும் நம்பிக் களமிறங்கி ஜெயித்தும் இருக்கிறார்கள்.


வேலையில்லாத வெட்டி ஆபிசர் ஆர்யா வீட்டின் செல்லப்பிள்ளை. அவருடைய அண்ணனுக்கும் விஜயலட்சுமிக்கும் கல்யாணம் நடக்கிறது. விஜியின் தங்கை நயன்தாரா மீது ஆர்யாவுக்கு கண்டவுடன் காதல். பொறுப்பில்லாத ஆர்யாவுக்காக எப்படி பெண் கேட்க முடியும் என்று விஜயலட்சுமி சொல்ல, வாழ்வில் முன்னேறி தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் செய்து வைப்பதாக சத்தியம் செய்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஆர்யா. அவர் எப்படி ஜெயித்தார், நயனை எப்படிக் கல்யாணம் செய்தார் என்பதுதான் இந்தப்படத்தின் (ரொம்பவே வித்தியாசமான) கதை.

தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் நாயகனான வெட்டி ஆபிசராக அலட்டல் இலாத ஆர்யா. ரொம்ப இயல்பாக பொருந்திப் போகிறார். சாதாரணமாகப் பேசுவது கூட நக்கலாகப் பேசுவது போல இருப்பதால் அவருடைய குரல் இந்தப் படத்துக்கு செம பிளஸ். நடனத்தில் அடுத்த "தல"யாக வருவதற்கான அத்தனைத் தகுதிகளும் ஆர்யாவுக்கு இருக்கிறதென்பதை இங்கே பதிவு செய்வது அவசியம்.



நயன்தாரா - கவர்ச்சிக் காட்சிகள் எல்லாம் இல்லாமல் நன்றாக நடித்து இருக்கிறார். கவனியுங்கள்.. நடித்து இருக்கிறார். சில கோலங்களில் அத்தனை அழகாக இருக்கிறார். ஆனால் ஒரு சில குளோசப் காட்சிகளில் அலங்கோலம். மூக்குத்தி அவருடைய முகத்துக்குப் பொருத்தமாக இல்லை. கடைசி பாட்டுக்கு ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள்.. அட்டகாசம்.

கவுண்டருக்கு அடுத்தபடியாக கதாநாயகர்களை சகட்டுமேனிக்கு கலாய்ப்பதில் சந்தானம்தான் நம்பர் ஒன். சலூன் கடை நல்லதம்பியாக மனுஷன் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வசனங்களிலேயே சிரிக்க வைப்பதுதான் சந்தானத்தின் பலம். "பத்து பதினஞ்சு பிரண்ட்ஸ் வச்சு இருக்கவன்லாம் நிம்மதியா இருக்கும்போது ஒரே ஒரு பிரண்ட வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே"ன்னு அவர் புலம்பும்போது மொத்தத் தியேட்டரும் அதிருகிறது. அங்கங்கே எட்டிப்பார்க்கும் இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் சந்தானம் குறைத்துக் கொண்டால் நல்லது.


ஆர்யாவின் அண்ணனாக வருபவர் யாரென்று தெரியவில்லை. அமைதியாக அசத்துகிறார். பிரண்ட்சில் சூர்யாவின் நாயகியாக வந்த விஜயலட்சுமி ரெண்டு சுத்து பெருத்து இந்தப்படத்தில் ஆர்யாவின் அண்ணியாக வருகிறார். வீட்டில் சாதாரணமாக இருக்கும்போது கூட டிவி காம்பியர் போல பேசும் ஆர்யாவின் தங்கை, செல்லம் கொடுத்து தான்தான் ஆர்யாவைக் கெடுத்து விட்டதாகக் கவலைப்படும் அம்மா, காதலுக்கு வில்லனாக வரும் நயனின் அப்பா சித்ரா லட்சுமணன், வட்டிக்குக் கடன் கொடுக்கும் தாண்டவன், அவருடைய பையனாக வரும் தின்னிப்பண்டாரம், கண்கள் இல்லாவிட்டாலும் நம்பிக்கையோடு வாழும் பெண் என கதாப்பாத்திரங்களை அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். ஒரு காட்சிக்கு ஷகிலாவும் உண்டு.

படத்தில் பயங்கர பின் நவீனத்துவமான கிளைமாக்ஸ். முண்ணனி நாயகன் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அவர்தான் படத்தின் ரியல் சீன் ஸ்டீலர். ஏதோ சீரியசாக நடக்கப் போகிறது எனக் கொண்டு போய் செம ராவடியாக முடித்து இருக்கிறார்கள். கதையும் பிரதியும் நிஜமும் ஒன்றாகக் கலக்கிற அந்தக் காட்சி.. அட போட வைக்கிறது.



ரகுமான், ஹாரிசுக்குப் பிறகு ஒரு இசையமைப்பாளருக்கு தியேட்டரில் கைதட்டு விழுகிறதென்றால் அது யுவனுக்குத்தான்.இந்த வருஷம் அவருக்கான ராசியான வருஷம் போல.. பையா, தில்லாலங்கடி, காதல் சொல்ல வந்தேன் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் கலக்கி இருக்கிறார். யார் இந்தப் பெண்தான், ஐலே ஐலே, மாமா ஆகிய மூன்று பாட்டுக்கள் சூப்பர். அதே போல டைட்டிலில் வரும் செம அடியும் கலக்கல். பின்னணி இசையில் ஒரே ராஜா பாட்டுக்களின் ஊர்வலம்.

பாடல் படமாக்கிய விதத்தில் யார் இந்த பாடல் "ஹம தில் தே சுக்கே சனம்" ஐஸ்வர்யா - சல்மானை ஞாபகப்படுத்தினாலும் நன்றாக இருக்கிறது. அதே போல வெளிநாட்டில் எடுத்திருக்கும் ஐலே ஐலேவும் அதில் நயனும் கொள்ளை அழகு. பாடல் காட்சிகளில் வி..பி, குணா போன்ற படங்களை ஓட்டி இருக்கிறார்கள். வேண்டுமென்றே செய்தார்களா இல்லை எதேச்சையாகவா என்று தெரியவில்லை. ஒளிப்பதிவும் கலையும் படத்துக்குத் தேவையானதை செய்திருக்கின்றன.

படத்தின் ஒரே பிரச்சினை அதன் நீளம். முதல் பாதியின் நிறைய காட்சிகளில் ஜவ்வடிக்கிறது. அதைக் கொஞ்சம் கத்திரி போட்டால் போதும். மற்றபடி.. முழுக்க முழுக்க கலகலப்பாக ஒரு படம் என்று முண்டா தட்டி, எந்தவொரு காட்சியிலுமே சீரியசாகப் போய்விடக் கூடாது என்று வம்பாடு பட்டிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் ராஜேஷுக்கு காமெடி காட்சிகள் போலவே காதல் காட்சிகளும் ரொம்ப அழகாக வருகின்றன. அடுத்த படம் உதயநிதி ஸ்டாலினோடு என்று சொன்னார்கள் - வாழ்த்துகள். லாஜிக் பார்க்காவிட்டால் இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரித்து வருவதற்கான அருமையான பொழுதுபோக்கு படம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் - சிரிப்புத்தோரணம்