September 6, 2010

எஸ்ரா புத்தக வெளியீட்டு விழா (1)

மதுரையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் ஒரு நிகழ்வாக, எஸ்ரா எழுதிய ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா, நேற்று காலை பத்து மணியளவில் சுப்ரீம் ஹோட்டலில் நடைபெற்றது. கிட்டத்தட்ட முன்னூறு பேர் அமரக்கூடிய அரங்கம் முழுதாக நிறைந்து, தாமதமாக வந்த நண்பர்கள் பலர் அமர இடமின்றி நின்று கொண்டே நிகழ்ச்சியை ரசித்தார்கள். பதிவுலக நண்பர்கள் பொன்.வாசுதேவன், தண்டோரா, செ.சரவணக்குமார், வெயிலான், முரளிக்குமார் பத்மநாபன், மதுரை சரவணன், தருமி ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். எழுத்தாளர் .முத்துகிருஷ்ணன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் தொடக்கவுரை ஆற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். "வருடத்துக்கு ஏழெட்டு புத்தக வெளியீட்டு விழாக்களை உயிர்மை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இது கண்டிப்பாக வியாபார நோக்கில் செய்யப்படுவதல்ல.. மாறாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாகவே செய்யப்படுகிறது. சென்ற முறை மதுரையில் பத்து புத்தகங்களை வெளியிட்டோம். அதில் ஒரு புத்தகத்தை எழுதிய வாஸந்தி என்னிடம் சொன்னார்.. எத்தனையோ வருடங்களாக எழுதி வருகிறேன் ஆனால் இதுதான் என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழா என்று.. இந்த நெகிழ்வும் அன்பும்தான் உயிர்மைக்கு முக்கியம்.

எஸ்ராவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நம் சமகால எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். கடுமையாக உழைக்கக் கூடியவர். அவருடைய மிகச் சிறந்த ஆற்றல் புனைகதைகள் எழுதுவதே. அவர் அத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்தானே? ஆனால் எதற்காக தான் படிக்கும் புத்தகங்கள், உலக சினிமா போன்ற விஷயங்களைப் பற்றி எல்லாம் எழுத வேண்டும்? ஒரு அரசாங்கமும், நம் நாட்டின் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார். அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்கும் ஒரு அற்புதமான "mass educator" அவர். எஸ்ராவோடு இணைந்து இயங்குவதில் உயிர்மை பெருமை கொள்கிறது.."

அடுத்ததாக புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஐந்து புத்தகங்களையும் தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகள் வெளியிட்டு அதனைப் பற்றிய தங்கள் சிறப்புரையையும் வழங்கினார்கள்.

யற்கை அறிதல் பற்றிய "காண் என்றது இயற்கை" என்ற புத்தகத்தை வெளியிட்ட கலாப்ரியா தன்னுடைய சிறப்புரையை கட்டுரையாக எழுதிக் கொண்டு வந்திருந்தார். "அமைதியாக சுழிந்தோடும் அழகான ஒரு நதி. அதன் இரு கரைகளுக்கும் இடையே ஓடத்தை செலுத்தி செல்லும் ஓடக்காரன். ஒரு நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு சற்றே ஓய்வெடுக்க கரை ஒதுங்கி புல்லின் மீது சாய்ந்து கிடக்கிறான். நதி சலசலக்கிறது. பறவைகள் பறந்து போகின்றன. அந்த நதியாய் நாமிருக்க தனக்குள் சிரித்துக் கொள்ளும் அந்த ஓடக்காரன்தான் ராமகிருஷ்ணன். நிறுத்தி நிதானமாக இயற்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்துப் பருகிட எஸ்ராவால் முடிகிறது. .வே.சு அய்யர் விழுந்து மரணமடைந்த கல்யாணி தீர்த்தம் பற்றிய வர்ணனை இந்தப் புத்தகத்தில் அத்தனை அருமையாக இருக்கிறது. அழகாக விழுந்து கொண்டிருக்கும் அருவியின் அழகிலும், பள்ளத்தாக்கின் பசுமையிலும் தன மனதைத் தொலைக்கும் எஸ்ராவுக்கு அய்யர் விருப்பப்பட்டே விழுந்தாரோ எனத் தோன்றுகிறது. இன்னும் சற்று நேரம் இருந்தால் அந்த அழகில் தானும் மயங்கி அருவியில் குதித்து விடுவோமோ என அச்சம் கொண்டு நகர்கிறார். இயற்கை மீது இப்படிப்பட்ட பிரியம் கொள்ள இவரால் மட்டுமே முடியும்.

மழையை ரசிப்பது பற்றி இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரை என்னுடைய பழைய நினைவுகளைக் கிளறி விடுகிறது. நெல்லையில் டிவி வராத காலம். மதுரையில் என்னுடைய நண்பரின் வீட்டில் இருந்தபோது தூர்தர்ஷனில் ராமாயணத்தின் ஒரு எபிசொடைப் பார்க்க முடிந்தது. மொத்தமாக அது ஒரு மோசமான சீரியல் என்றாலும் அந்த ஒரு பகுதி மட்டும் நன்றாக இருந்ததாக நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அசோகவனத்தில் சீதை சோகமாக தனித்து இருக்கிறாள். அங்கே மழை பெய்கிறது. இங்கே காட்டில் வானரங்களோடு ராமனும் சோகமாக அமர்ந்து இருக்கிறான். அங்கும் மழை பெய்து கொண்டிருக்கிறது. நாட்டிலோ பரதன் தன்னுடைய அண்ணன் எப்போது திரும்புவான் என ஏங்கிக் கிடக்கிறான். அங்கேயும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இங்கே யாரும் எதுவும் பேசிக் கொள்வதில்லை. மாறாக அனைவரையும் ஒற்றைப்புள்ளியில் இணைக்கும் மழையை இயற்கையின் கொடை என்றுதானே சொல்ல வேண்டும்.

இயற்கையின் அந்தக் கொடையை இந்த புத்தகத்தின் வாயிலாக நமக்கும் அள்ளிப் பருகத் தருகிறார் எஸ்ரா. கோணங்கிதான் எஸ்ராவை என்னிடம் ஒரு சக பயணியாக அழைத்து வந்தார். இன்று தனக்கான ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொள்வதில் எஸ்ரா முழு வெற்றி பெற்றிருக்கிறார்." மிக மெலிதானதொரு குரலில் தனக்கே உண்டான பொறுமையோடு கட்டுரையை வாசித்து முடித்தார் கலாப்ரியா. புத்தகத்தை முழுமையாக வாசித்து நிறைய இடங்களில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசினார். பார்த்து வாசித்ததை விட இயல்பாக மனதில் தோன்றியதை அவர் பேசியபோது இன்னும் நன்றாக இருந்தது.

நவீன இலக்கியப் புத்தகங்களின் மறுவாசிப்பு பற்றிய "குறத்தி முடுக்கின் கனவுகள்" என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய பாரதி கிருஷ்ணகுமார்தான் நேற்றைய நிகழ்வின் நாயகன். அருமையான பேச்சாலும் நகைச்சுவையாலும் மனிதர் பட்டையைக் கிளப்பினார். "இலக்கியத்தில் மீள்வாசிப்பு என்பது மிக முக்கியமானது.ஏனென்றால் இன்றைக்கு எனக்கு முக்கியமாகப்படும் புத்தகம் நாளைக்கு ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றலாம். நேற்று நான் படித்தபோது வெற்றுக் காகிதமாகத் தென்பட்ட புத்தகங்கள் இன்று எனக்குள் அசாத்திய மாற்றங்களை உண்டாக்கலாம். தன்னுள் எந்த மாற்றமுமே கொள்ளாமல் அப்படியே இருந்து கொண்டு வாசிப்பவர் மனதில் சொல்லவொண்ணா மாற்றங்களைக் கொண்டு வரும் பிரதிகளை விட இந்த உலகில் வேறு ஏதேனும் அற்புதங்கள் இருக்க முடியுமா என்ன?

வாசிப்பு என்பது வெறுமனே மேலோட்டமாக இருக்கக் கூடாது. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய புலன்களின் வாயிலாக நாம் அதனை உணர வேண்டும். ஏனென்றால் நாம் சொரணை உள்ளவர்கள். இப்போது கூட ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கை வாசிக்கும்போது எனக்கு அந்தத் தெருக்களின் ஊடாக நானும் பயணிக்கும் ஓருணர்வே வருகிறது. அத்தகைய அருமையான உணர்வுகளைத் தரக்கூடிய புத்தகங்களைப் பற்றிய எஸ்ராவின் இந்த புத்தகம் ரொம்ப முக்கியமானது. குறத்தி முடுக்கு பற்றிய விவரணையில் காமத்தைப் பற்றி சில வார்த்தைகளை எஸ்ரா எழுதி இருக்கிறார். அதை வாசிக்கும்போது எனக்கு சாரு எழுதிய ஒரு மிக முக்கியமான வரி ஞாபகம் வருகிறது. முகத்தோடு முகம் பார்த்து புணரக்கூடிய ஒரே மிருகம் மனிதன் மட்டுமே.. பாருங்கள்.. ஒரு புத்தகத்தைப் பற்றி வாசித்துக் கொண்டிருக்கும்போதே அது என்னை இன்னொரு இடத்துக்கு தூக்கி அடிக்கிறது.

பர்மாராணி பற்றிய கதை. அதை வாசிக்கும்போது எனக்கு கலைஞரின் பராசக்திதான் ஞாபகத்துக்கு வருகிறது. மிக அருமையான நகைச்சுவைப் படம். எப்படி.. அவர்கள் படத்தில் மிக சீரியசாக ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள் ஆனால் நமக்கு சிரிப்பு வரும். சீரியஸில் சிரிப்பையும், சிரிப்பில் சீரியசையும் கலப்பது கலைஞருக்குக் கைவந்த கலைதானே.. நான் பராசக்தி பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேனே அன்றி இங்கே அரசியல் பேசவில்லை என்பதை நினைவில் கொள்க. அடுத்ததாக தேவதாஸ் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. முதல் முறையாக என்னைப் போலவே தேவதாசை திட்டி ஒரு மனிதன் கட்டுரை எழுதி இருக்கிறார் என்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. அத்தனை அழகான பெண்கள் தன்னை நேசிக்கையில் அவ்வளவையும் விட்டு விட்டு ஒரு மனிதன் சாகலாமா? அதுவும் சாக அவன் தேர்ந்தெடுத்த வழி அநியாயம்மையா.. எத்தனை பேர் உயிரைக் கொடுத்து கண்டுபிடித்த சரக்கு.. அதுதானா உனக்குக் கிடைத்தது? இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது எனக்குக் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. மற்றொரு கட்டுரையைப் படிக்கும்போது மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. இதுதான் இந்தப் புத்தகத்தின் வலிமை. கிளைகள் பரப்பியவாறே ஓடும் ஆறு போல இந்தப் புத்தகம் பல தடங்களில் நம்மை பயணிக்க வைக்கிறது.

இந்தப் புத்தகத்தில் எனக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே சின்ன வருத்தம். வண்ணதாசனின் சின்னு முதல் சின்னு வரை.. யாருமே அதைப் படிக்காமல் இருந்திருக்க முடியாது. வண்ணதாசன் என்றாலே மென்மை. பேய் பிடித்தாற்போல பறந்தோடும் மின்சார ரயிலின் அடியில் கூட என் திருநெல்வேலி தாமிரபரணி சலசலத்தோடும் சத்தம் கேட்பதாக சொல்லக் கூடிய ஆள். அவரைப் பற்றியக் கட்டுரையில் கடைசி வரியாக அதுதான் வண்ணதாசனின் வன்மை என்பதாக எஸ்ரா எழுதி இருக்கிறார். வண்ணதாசன் கிட்ட எதுக்கையா வன்மை? அதை வல்லமை என மாற்றுங்கள்.." பட்டாசாக வெடித்து அமர்ந்தார் பாரதி கிருஷ்ணகுமார்.

(தொடருவேன்..)

19 comments:

Unknown said...

Very good one.
Thanks for Sharing.

அரிஅரவேலன் (Ariaravelan) said...

எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் எப்பொழுது இலக்கணப் பிழையில்லாமல் எழுதுவார் என மனுஷ்யபுத்திரன் சொல்லாமல் விட்டுவிட்டாரே பொன்னியின் செல்வரே!

Ganesan said...

கா.பா,

முதற்கண் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் உங்களுடைய சக ஆசிரியர்களுக்கும்..

பாரதி கிருஷ்னகுமார் மேடையில் பொளந்து கட்டுவார், கேட்டால் நமக்கு உற்சாகம் கொப்பளிக்கும்.

anujanya said...

பகிர்ந்ததற்கு நன்றி கார்த்தி. [இப்போது தான் கவனிக்கிறேன் - இந்த இடுகையிலும் கோணங்கி அவர்களின் பெயர் இருக்கிறது :))) ]

ஆசிரியர் தின வாழ்த்துகளும் (நன்றி காவேரி கணேஷ்)


அனுஜன்யா

Mahi_Granny said...

ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். மதுரைக்காரர் யாராவது இதைப் பற்றி எழுதுவார்கள் எனக் காத்திருந்தேன். முந்தி பதிந்ததற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//செல்வராஜ் ஜெகதீசன் said...
Very good one.Thanks for Sharing//

தொடர் வருகைக்கு நன்றிங்க..

//யரலவழள said...
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் எப்பொழுது இலக்கணப் பிழையில்லாமல் எழுதுவார் என மனுஷ்யபுத்திரன் சொல்லாமல் விட்டுவிட்டாரே பொன்னியின் செல்வரே!//

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் இலக்கணப் பிழைகள் மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது நண்பா.. நான் அவற்றைத் தாண்டி அவரின் எழுத்துக்களில் இருக்கும் கருப்பொருளை (context ) மட்டுமே பார்க்கிறேன்.. நான் எஸ்ராவைத் தாங்கி பிடிப்பது அவருடைய அனுபவங்களுக்காகவும், தான் அறிந்த விஷயங்களை மற்றவருக்குக் கடத்த வேண்டும் என்கிற நல்லெண்ணத்துக்காகவும் மட்டுமே.. எல்லாமே நாம் பார்ப்பதில்தான் இருக்கிறது நண்பரே..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//காவேரி கணேஷ் said...
கா.பா,முதற்கண் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் உங்களுடைய சக ஆசிரியர்களுக்கும்..//

ரொம்ப நன்றி நண்பா

//பாரதி கிருஷ்னகுமார் மேடையில் பொளந்து கட்டுவார், கேட்டால் நமக்கு உற்சாகம் கொப்பளிக்கும்//

விஷயமுள்ள மனிதர் தல.. முதல் முறையாக இபோதுதான் நான் அவர் பேச்சைக் கேட்கிறேன்.. அசத்தி விட்டார் மனிதர்..

// அனுஜன்யா said...
பகிர்ந்ததற்கு நன்றி கார்த்தி. [இப்போது தான் கவனிக்கிறேன் - இந்த இடுகையிலும் கோணங்கி அவர்களின் பெயர் இருக்கிறது :))) ]
ஆசிரியர் தின வாழ்த்துகளும் (நன்றி காவேரி கணேஷ்)//

அது நம்ம ரெண்டு பேரோட ராசி போல தலைவரே..:-))) அடுத்த இடுகைல கோணங்கியோட பேர் இருக்காது.. அதுக்கு நீங்க பின்னூட்டம் போடுறீங்களான்னு பார்ப்போம்..:-)))

//Mahi_Granny said...
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். மதுரைக்காரர் யாராவது இதைப் பற்றி எழுதுவார்கள் எனக் காத்திருந்தேன். முந்தி பதிந்ததற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்//

முக்கியமான நிகழ்வு.. யாராவது பகிர்ந்து தானே ஆகவேண்டும் அம்மா (அப்படிக் கூப்பிடலாம்தானே?)..:-))

அன்பேசிவம் said...

நண்பா, நாங்க பாரதியின் பேச்சையும் கலாப்ரியாவின் கட்டுரை வாசிப்பையும் தவற விட்டுவிட்டோம் அதைப் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

நான் அடுத்த திங்களில் மட்டுமே பதிவெழுதமுடியுமென நினைக்கிறேன். எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள். மவனே இல்லாட்டி......(தொடரும்ன்னு போட்டதால் இப்படி... :-) )

Balakumar Vijayaraman said...

நல்ல பகிர்வு கார்த்தி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
நான் அடுத்த திங்களில் மட்டுமே பதிவெழுதமுடியுமென நினைக்கிறேன். எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள். மவனே இல்லாட்டி...தொடரும்ன்னு போட்டதால் இப்படி:-)//

தல.. உங்கள மாதிரி நறுக்குத் தெறிச்சா மாதிரியெல்லாம் எனக்கு எழுதத் தெரியாது.. நான் பண்றது கதாகாலட்சேபம்.. நீங்க உங்க ஸ்டைல்ல நச்சுன்னு எழுதுங்க..

//வி.பாலகுமார் said...
நல்ல பகிர்வு கார்த்தி.//

நிகழ்வுக்கு வாங்கையான்னு சொன்னா டகால்டி வேலை காட்டிட்டு, இங்க வந்து நல்ல பிள்ள மாதிரி பின்னூட்டம் போட்டுக்கிட்டு இடுக்கீங்களா? என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?

சுவாமிநாதன் said...

நல்ல பகிர்வு, புத்தக வெளியிடு விழாவிற்கு வராத குறையை நீக்கி விட்டீர் செல்வரே .............

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// சுவாமிநாதன் said...
நல்ல பகிர்வு, புத்தக வெளியிடு விழாவிற்கு வராத குறையை நீக்கி விட்டீர் செல்வரே .............//

வராம இருக்குறதுக்கு இப்படி ஒரு சப்பக்கட்டு.. உங்கள எல்லாம்..


// ராம்ஜி_யாஹூ said...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்//

நன்றிங்க..

மேவி... said...

தொடருங்க தொடருங்க ....

தல ... பதிவை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எழுதுங்க, ஏன் சொல்லுறேன்ன என்னை மாதிரி மக்கு பசங்களும் உங்க படிக்கிறோம் ல அதான்

கார்த்திகைப் பாண்டியன் said...

@mayvee..

avvvvvvvvvvvv

மதுரை சரவணன் said...

மீண்டும் அதே அனுபவத்தை தந்ததுப்போன்ற உணர்வு... வாழ்த்துக்கள்

தருமி said...

//மீண்டும் அதே அனுபவத்தை தந்ததுப்போன்ற உணர்வு... வாழ்த்துக்கள்//

ரிப்பீட்டே ..ய்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//மதுரை சரவணன் said...
மீண்டும் அதே அனுபவத்தை தந்ததுப்போன்ற உணர்வு... வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா..:-)))

//தருமி said...
மீண்டும் அதே அனுபவத்தை தந்ததுப்போன்ற உணர்வு... வாழ்த்துக்கள்.. ரிப்பீட்டே ..ய்!//

:-))))))))

அரிஅரவேலன் (Ariaravelan) said...

//அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் இலக்கணப் பிழைகள் மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது நண்பா.. // ராமகிஷ்ணனின் எழுத்துகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிழைகள் இல்லை. எங்கெங்கும் பிழைகள் இருக்கின்றன. சத்தியசித்ரே படத்தைப் பற்றிய அவர் எழுதிய நூலை அண்மையிற் படித்தேன். நூலெங்கும் இலக்கணப் பிழைகள் விரவிக் கிடந்தன. தமிழகத்திற் பலராலும் கொண்டாடப்படுகிற எழுத்தாளர், இவ்வளவு இலக்கணப் பிழைகயோடு எழுதுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? போர்கோவைப் படித்து சரியாகப் புரிந்துகொள்ள முடிந்த ஒருவரால் நன்னூல் இலக்கணத்தைப் படித்து அதன்படி தவறில்லாமல் ஏன் எழுத முடியாமற் போகிறது? தமிழ்தானே என்னும் எண்ணமா?