பாஸ் என்கிற பாஸ்கரன் - ஆர்யாவின் "தி ஷோ பீப்பிள்" தயாரிப்பில் வந்திருக்கும் முதல் படம். உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட் " வெளியீடு. சிவா மனசுல சக்தி என்கிற ஒரு பாதி நல்ல படத்தை (ஏன்னா ரெண்டாம் பாதி மச மொக்கைப்பா) எடுத்த எம்.ராஜேஷ் இயக்கி இருக்கிறார். "நண்பேன்டா..” என்று டிரைலரிலேயே எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டிருந்த படம். கதை என்கிற வஸ்துவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையையும் திரைக்கதையையும் நம்பிக் களமிறங்கி ஜெயித்தும் இருக்கிறார்கள்.
வேலையில்லாத வெட்டி ஆபிசர் ஆர்யா வீட்டின் செல்லப்பிள்ளை. அவருடைய அண்ணனுக்கும் விஜயலட்சுமிக்கும் கல்யாணம் நடக்கிறது. விஜியின் தங்கை நயன்தாரா மீது ஆர்யாவுக்கு கண்டவுடன் காதல். பொறுப்பில்லாத ஆர்யாவுக்காக எப்படி பெண் கேட்க முடியும் என்று விஜயலட்சுமி சொல்ல, வாழ்வில் முன்னேறி தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் செய்து வைப்பதாக சத்தியம் செய்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஆர்யா. அவர் எப்படி ஜெயித்தார், நயனை எப்படிக் கல்யாணம் செய்தார் என்பதுதான் இந்தப்படத்தின் (ரொம்பவே வித்தியாசமான) கதை.
தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் நாயகனான வெட்டி ஆபிசராக அலட்டல் இலாத ஆர்யா. ரொம்ப இயல்பாக பொருந்திப் போகிறார். சாதாரணமாகப் பேசுவது கூட நக்கலாகப் பேசுவது போல இருப்பதால் அவருடைய குரல் இந்தப் படத்துக்கு செம பிளஸ். நடனத்தில் அடுத்த "தல"யாக வருவதற்கான அத்தனைத் தகுதிகளும் ஆர்யாவுக்கு இருக்கிறதென்பதை இங்கே பதிவு செய்வது அவசியம்.
நயன்தாரா - கவர்ச்சிக் காட்சிகள் எல்லாம் இல்லாமல் நன்றாக நடித்து இருக்கிறார். கவனியுங்கள்.. நடித்து இருக்கிறார். சில கோலங்களில் அத்தனை அழகாக இருக்கிறார். ஆனால் ஒரு சில குளோசப் காட்சிகளில் அலங்கோலம். மூக்குத்தி அவருடைய முகத்துக்குப் பொருத்தமாக இல்லை. கடைசி பாட்டுக்கு ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள்.. அட்டகாசம்.
கவுண்டருக்கு அடுத்தபடியாக கதாநாயகர்களை சகட்டுமேனிக்கு கலாய்ப்பதில் சந்தானம்தான் நம்பர் ஒன். சலூன் கடை நல்லதம்பியாக மனுஷன் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வசனங்களிலேயே சிரிக்க வைப்பதுதான் சந்தானத்தின் பலம். "பத்து பதினஞ்சு பிரண்ட்ஸ் வச்சு இருக்கவன்லாம் நிம்மதியா இருக்கும்போது ஒரே ஒரு பிரண்ட வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே"ன்னு அவர் புலம்பும்போது மொத்தத் தியேட்டரும் அதிருகிறது. அங்கங்கே எட்டிப்பார்க்கும் இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் சந்தானம் குறைத்துக் கொண்டால் நல்லது.
ஆர்யாவின் அண்ணனாக வருபவர் யாரென்று தெரியவில்லை. அமைதியாக அசத்துகிறார். பிரண்ட்சில் சூர்யாவின் நாயகியாக வந்த விஜயலட்சுமி ரெண்டு சுத்து பெருத்து இந்தப்படத்தில் ஆர்யாவின் அண்ணியாக வருகிறார். வீட்டில் சாதாரணமாக இருக்கும்போது கூட டிவி காம்பியர் போல பேசும் ஆர்யாவின் தங்கை, செல்லம் கொடுத்து தான்தான் ஆர்யாவைக் கெடுத்து விட்டதாகக் கவலைப்படும் அம்மா, காதலுக்கு வில்லனாக வரும் நயனின் அப்பா சித்ரா லட்சுமணன், வட்டிக்குக் கடன் கொடுக்கும் தாண்டவன், அவருடைய பையனாக வரும் தின்னிப்பண்டாரம், கண்கள் இல்லாவிட்டாலும் நம்பிக்கையோடு வாழும் பெண் என கதாப்பாத்திரங்களை அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். ஒரு காட்சிக்கு ஷகிலாவும் உண்டு.
படத்தில் பயங்கர பின் நவீனத்துவமான கிளைமாக்ஸ். முண்ணனி நாயகன் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அவர்தான் படத்தின் ரியல் சீன் ஸ்டீலர். ஏதோ சீரியசாக நடக்கப் போகிறது எனக் கொண்டு போய் செம ராவடியாக முடித்து இருக்கிறார்கள். கதையும் பிரதியும் நிஜமும் ஒன்றாகக் கலக்கிற அந்தக் காட்சி.. அட போட வைக்கிறது.
ரகுமான், ஹாரிசுக்குப் பிறகு ஒரு இசையமைப்பாளருக்கு தியேட்டரில் கைதட்டு விழுகிறதென்றால் அது யுவனுக்குத்தான்.இந்த வருஷம் அவருக்கான ராசியான வருஷம் போல.. பையா, தில்லாலங்கடி, காதல் சொல்ல வந்தேன் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் கலக்கி இருக்கிறார். யார் இந்தப் பெண்தான், ஐலே ஐலே, மாமா ஆகிய மூன்று பாட்டுக்கள் சூப்பர். அதே போல டைட்டிலில் வரும் செம அடியும் கலக்கல். பின்னணி இசையில் ஒரே ராஜா பாட்டுக்களின் ஊர்வலம்.
பாடல் படமாக்கிய விதத்தில் யார் இந்த பாடல் "ஹம தில் தே சுக்கே சனம்" ஐஸ்வர்யா - சல்மானை ஞாபகப்படுத்தினாலும் நன்றாக இருக்கிறது. அதே போல வெளிநாட்டில் எடுத்திருக்கும் ஐலே ஐலேவும் அதில் நயனும் கொள்ளை அழகு. பாடல் காட்சிகளில் வி.ஐ.பி, குணா போன்ற படங்களை ஓட்டி இருக்கிறார்கள். வேண்டுமென்றே செய்தார்களா இல்லை எதேச்சையாகவா என்று தெரியவில்லை. ஒளிப்பதிவும் கலையும் படத்துக்குத் தேவையானதை செய்திருக்கின்றன.
படத்தின் ஒரே பிரச்சினை அதன் நீளம். முதல் பாதியின் நிறைய காட்சிகளில் ஜவ்வடிக்கிறது. அதைக் கொஞ்சம் கத்திரி போட்டால் போதும். மற்றபடி.. முழுக்க முழுக்க கலகலப்பாக ஒரு படம் என்று முண்டா தட்டி, எந்தவொரு காட்சியிலுமே சீரியசாகப் போய்விடக் கூடாது என்று வம்பாடு பட்டிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் ராஜேஷுக்கு காமெடி காட்சிகள் போலவே காதல் காட்சிகளும் ரொம்ப அழகாக வருகின்றன. அடுத்த படம் உதயநிதி ஸ்டாலினோடு என்று சொன்னார்கள் - வாழ்த்துகள். லாஜிக் பார்க்காவிட்டால் இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரித்து வருவதற்கான அருமையான பொழுதுபோக்கு படம்.
பாஸ் என்கிற பாஸ்கரன் - சிரிப்புத்தோரணம்
24 comments:
//அடுத்த "தல"யாக வருவதற்கான அத்தனைத் தகுதிகளும் ஆர்யாவுக்கு//
அப்ப இப்ப இருக்குற "தல" அவ்ளோதானா............ஏதோ நம்மாள முடிஞ்சது
//ஆனால் ஒரு சில குளோசப் காட்சிகளில் அலங்கோலம். மூக்குத்தி அவருடைய முகத்துக்குப் பொருத்தமாக இல்லை//
எப்படியோ நயன் தாரவை நல்லாவே கவனிச்சிருக்கீங்க....................................................................................................................................................................... திரையில
அருமையான பொழுதுபோக்கு படம்.
:)அதே அதே...
ஆச்சரியம் ...உங்களுக்கு இந்த படம் பிடிக்காதேன்றே நினைத்தேன் : நயன் தாரா இருப்பதினால் ..
உங்களை நம்பி நாளை போகிறேன் ..படம் மட்டும் நல்ல இல்லையென்றால் ..வாத்தியரே பிறகு உங்களுக்கு இலக்கிய தொல்லை ஜாஸ்தியா தருவேன்
\\\அப்ப இப்ப இருக்குற "தல" அவ்ளோதானா............ஏதோ நம்மாள முடிஞ்சது \\\
உள்ள என்னடா விளையாடுற..வெளிய வாடா..
மங்காத்தாட....
வெயிட்டிங் அண்ணே..
படம் உங்களுக்கு பிடிச்சிருக்க வாய்ப்பில்லை என்று கருதினேன்..
அப்ப ஒரு வேலை எனக்கு பிடிக்காதோ..?
சும்மாதான்.. :-)
சாதாரணமாகப் பேசுவது கூட நக்கலாகப் பேசுவது போல இருப்பதால் அவருடைய குரல் இந்தப் படத்துக்கு செம பிளஸ். //
இங்கே அக்ஷய் குமார் குரல் இருப்பது போல!
கடைசி பாட்டுக்கு ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள்.. அட்டகாசம்.//
மக்கா, உங்களுக்கு வீட்ல சொல்லி சீக்கிரம் கால்கட்டுப் போடணும்ணே.
சிவா மனசுல சக்தி படம் பார்த்து அய்யோ, இதெல்லாம் படமான்னு மண்டை பிச்சுக்கிட்டேன். இது பார்க்கவா, வேண்டாமா.. சரியா சொல்லுங்க. வீக்கெண்டுக்கு ப்ளான் பண்ணனும்.
//அங்கங்கே எட்டிப்பார்க்கும் இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் சந்தானம் குறைத்துக் கொண்டால் நல்லது.//
அதுவும் ஜோக்கு தானே! ஏன் குறைச்சுக்கனும்?
//அத்திரி said...
அப்ப இப்ப இருக்குற "தல" அவ்ளோதானா............ஏதோ நம்மாள முடிஞ்சது//
இதுலையும் அரசியலா..
//அத்திரி said...
எப்படியோ நயன் தாரவை நல்லாவே கவனிச்சிருக்கீங்க............................ திரையில//
ஹி ஹி ஹி.. அது நம்ம கடமை தலைவரே..
// Sivaji Sankar said...
அருமையான பொழுதுபோக்கு படம்.
)அதே அதே...//
ஓ.. சிவாஜியும் படம் பார்த்துட்டீங்களா?
// டம்பி மேவீ said...
ஆச்சரியம் ...உங்களுக்கு இந்த படம் பிடிக்காதேன்றே நினைத்தேன் : நயன் தாரா இருப்பதினால் ..//
:-))))))))))
// Anbu said...
உள்ள என்னடா விளையாடுற..வெளிய வாடா.. மங்காத்தாட.... வெயிட்டிங் அண்ணே..//
நானும் நானும்..:-)))
//Anbu said...
படம் உங்களுக்கு பிடிச்சிருக்க வாய்ப்பில்லை என்று கருதினேன்..
அப்ப ஒரு வேலை எனக்கு பிடிக்காதோ..?//
இதுலதான் கவுதமும் ரகுமானும் இல்லையே.. அதனால ஒருவேளை எனக்குப் பிடிச்சதோ..?
இதுவும் ச்சும்மா..:-))
//விக்னேஷ்வரி said...
இங்கே அக்ஷய் குமார் குரல் இருப்பது போல!//
அதேதாங்க..
//மக்கா, உங்களுக்கு வீட்ல சொல்லி சீக்கிரம் கால்கட்டுப் போடணும்ணே.//
தெய்வமே.. கூடிய சீக்கிரம் செய்ங்க.. உங்களுக்கு புண்ணியமாப் போவட்டும்..:-)))
//சிவா மனசுல சக்தி படம் பார்த்து அய்யோ, இதெல்லாம் படமான்னு மண்டை பிச்சுக்கிட்டேன். இது பார்க்கவா, வேண்டாமா.. சரியா சொல்லுங்க. வீக்கெண்டுக்கு ப்ளான் பண்ணனும்.//
இது உங்களுக்கான படம் இல்லை.. வேண்டாம் தோழி..:-))
// வால்பையன் said...
அதுவும் ஜோக்கு தானே! ஏன் குறைச்சுக்கனும்?//
தல.. நான் ஆட்டைக்கு வரல..
படம் பார்க்கலாம் ... சிரிக்கலாம் என்று சொல்லிவிட்டீர்கள்.. பார்த்துவிட வேண்டியது தான்.. உங்கள் திரை விமர்சனம் வித்தியாசமாய் என்றும் உள்ளது. வாழ்த்துக்கள்
வாங்க 'சின்ன உண்மைத் தமிழன்'!
//மதுரை சரவணன் said...
படம் பார்க்கலாம் ... சிரிக்கலாம் என்று சொல்லிவிட்டீர்கள்.. பார்த்துவிட வேண்டியது தான்.. உங்கள் திரை விமர்சனம் வித்தியாசமாய் என்றும் உள்ளது. வாழ்த்துக்கள்//
நன்றி தலைவரே..
// தருமி said...
வாங்க 'சின்ன உண்மைத் தமிழன்//
அய்யா.. அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்..:-)))
இப்போதான் படம் பாத்துட்டு வர்றேன்....
நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க அண்ணா...
வசனங்கள் தான் படத்தின் பெரிய பிளஸ்...
ஜீவா-வை விட்டுட்டீங்களே.....
படம் நல்லா இருக்கும் போல..
''சிவா மனசுல சக்தி'' படமே எனக்கு பிடிச்சு இருந்தது..
அடுத்த ''தல''னா புரியுல..ஆர்யா நல்லா ஆடுவாரே..!!
ரைட்டு.படம் பார்க்கலாம் போல!
//அகல்விளக்கு said...
வசனங்கள் தான் படத்தின் பெரிய பிளஸ்... ஜீவா-வை விட்டுட்டீங்களே.....//
அது சஸ்பென்ஸ்ல நைனா.. //முண்ணனி நாயகன் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அவர்தான் படத்தின் ரியல் சீன் ஸ்டீலர்//அதனாலத்தான் இப்படி சொல்லி இருக்கேன்..
//வினோத் கெளதம் said...
அடுத்த ''தல''னா புரியுல..ஆர்யா நல்லா ஆடுவாரே..!!//
அடப்போப்பா.. இதுல ஒரே கைடான்ஸ் தான் ஆடியிருக்காரு..
// velji said...
ரைட்டு.படம் பார்க்கலாம் போல//
நம்பிப் பார்க்கலாங்க..
வெளிநாட்டில் இருப்பதால் படம் பார்க்க முடியவில்லை..பார்க்கனும் என்ற ஆசையிருந்தும்....
with all the minute details u can be called as tharumi saar named u
//அஹமது இர்ஷாத் said...
வெளிநாட்டில் இருப்பதால் படம் பார்க்க முடியவில்லை..பார்க்கனும் என்ற ஆசையிருந்தும்....//
ஹ்ம்ம்ம்ம்ம்..
//Mahi_Granny said...
with all the minute details u can be called as tharumi saar named u//
நாம அந்த அளவுக்கு எல்லாம் இல்லைங்க..:-))
//நடனத்தில் அடுத்த "தல"யாக வருவதற்கான அத்தனைத் தகுதிகளும் ஆர்யாவுக்கு இருக்கிறதென்பதை இங்கே பதிவு செய்வது அவசியம்.//
LOL
//கவுண்டருக்கு அடுத்தபடியாக கதாநாயகர்களை சகட்டுமேனிக்கு கலாய்ப்பதில் சந்தானம்தான் நம்பர் ஒன்//
உண்மை தான். கவுண்டரின் வெற்றிடத்தை சந்தானம் நன்றாக நிரப்ப ஆரம்பித்திருக்கிறார்.
//பாஸ் என்கிற பாஸ்கரன் - சிரிப்புத்தோரணம்
//
Nice.
நானும் படத்தை பார்த்துட்டேன். படம் "கல"க்கல்.@!
@ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
வாங்க தல..
// ஜெகதீஸ்வரன். said...
நானும் படத்தை பார்த்துட்டேன். படம் "கல"க்கல்.@!//
நாம இப்படி சொல்றோம்.. ஆனா நேத்து கல்லூரில ரெண்டு நண்பர்கள் சுத்தமாப் பிடிக்கலைன்னு சொன்னாங்க நண்பரே..:-((
ஆர்யாவோட அண்ணனா வர்றது பஞ்சு அருணாசலத்தோட மகன் -ன்னு கேள்விப்பட்டேன்.....
Post a Comment