November 1, 2010

குற்றவுணர்ச்சி

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ்சில் வந்து கொண்டிருந்தேன். பதினெட்டு வயது மதிப்பிடக் கூடிய இளைஞனொருவன் தரையைக் கூட்டி விட்டபடி எல்லாரிடமும் காசு கேட்டு வந்து கொண்டிருந்தான். அவனுடைய முகத்தைப் பார்த்தபோது சற்றே மனநிலை குன்றியவன் போலத் தோன்றியது. நான் அமர்ந்திருந்த இடத்தை சுத்தம் செய்து கை நீட்டியபோது என்முன்னே இருந்த பெரியவர் அவனிடம் பேசினார்.

"ஏண்டா.. கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு? ஏதாவது வேலை செஞ்சு பிழைக்க மாட்டியா?"

".."

"உன்னைத்தாண்டா கேக்குறேன். அய்யா வாயத்தொறந்து பதில் சொல்ல மாட்டீகளோ? தடிமாடு கணக்கா இருக்குரல.. வேலை செஞ்சா என்னவாம்?"

அவன் பதிலேதும் சொல்லாமல் என் பக்கம் திரும்பி கையை நீட்டினான். நான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த காசை அவனிடம் நீட்டினேன். அவன் அதை வாங்கிக்கொண்டு நகர்ந்து போனான். இப்போது எதிரிலிருந்தவரின் கோபம் என்மீது திரும்பி விட்டது.

"உங்கள மாதிரி ஆளுகளாலத்தான் சார் இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டேங்கிறாங்க.. நீங்க செஞ்சது ரொம்பத் தப்பு சார்.."

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். உதவி செய்வதற்காக இது போல நான் கண்டிக்கப்படுவது முதல் முறையல்ல.

சாலையில் போகும்போது யாரேனும் ஒருவர் வந்து தானம் கேட்டால் அவர் யார் என்ன எவரென்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்காமல் என்னால் இயன்ற உதவியைச் செய்து விடுவேன். "உதவி செய்வதை யாருக்கு செய்கிறோம் என்று பார்த்து செய்ய வேண்டும். ஒரு சில நேரங்களில் நீ தவறான மனிதர்களை பிச்சையெடுக்க ஊக்குவிக்கிறாய்" என்று என்னுடைய நண்பர்கள் பலரும் இது தவறு என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நான் செய்வதை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

சரி.. இதனால் எனக்கு கிடைப்பது என்ன? "பாருடா.. இவன் தானதர்மம் செய்யுறான்" என்று மற்றவர் புகழ வேண்டும் என்பதற்காகவா? கண்டிப்பாக இல்லை. அதனால் எனக்கு எந்த வேலையும் ஆகப் போவதில்லை. பத்துப் பைசாவுக்குப் பிரயோசனப்படாது. பிறகு.. நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம் என்கிற ஆத்மதிருப்திக்காகவா? ஓரளவு ஆமாம் என்றாலும் அதையும் என்னால் முழுதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. அப்படியானால் எதுதான் என்னை இயக்குவது? தீர யோசித்துப் பார்க்கையில் என்னுள் இருக்கும் குற்றவுணர்ச்சிதான் காரணமாக இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது.

ஒரு வயதானவர் என்னிடம் வந்து தர்மம் கேட்கையில் எனக்கு என்னுடைய தாத்தாதான் ஞாபகத்துக்கு வருவார். என் தாத்தாவுக்கென ஒரு குடும்பம் இருந்ததால் அவர்களால் அவரைப் பார்த்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இந்தப் பெரியவருக்கு? யாரும் இல்லாமல் இப்படித் தெருவுக்கு வந்து விட்டாரே.. ஏன் அவருக்கு இந்த நிலைமை என்றுதான் எண்ணத் தோன்றும். தான் சாகும்வரை இதுபோல பிறரிடம் கையேந்தித்தானே அவர் தன்னுடைய வாழ்க்கையை நடத்தியாக வேண்டும்? அவருக்கு ஒரு நிரந்தரத் தீர்வென என்னால் ஏதும் செய்ய முடியாதே என்கிற வருத்தம் பெரும்பாரமாய் அழுத்த ஆரம்பிக்கும். அதிலிருந்து தப்பிக்கவே நான் அவருக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லலாம்.

நூறு கோடி ஆயிரம் கோடி என்று பேசும் காலத்திலும் ஒரு வாய் சோறுக்கு அவதிப்படுவோரும் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? பசியால் ஒருவர் வாடுவதற்கு ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகம்தானே காரணம். நானும் அந்த சமூகத்தின் அங்கம்தானே? இது போன்ற மனிதர்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற குற்றவுணர்வு என்னைத் துரத்துவதிலிருந்து தப்பிக்கவே யாருக்கும் அந்தக் கணத்தில் நான் உதவி செய்வதாகப்படுகிறது.

சில நேரங்களில் ரொம்பக் கோபம் கோபமாக வரும். ஏன் இந்தப் பணக்காரர்கள் இது போன்ற மனிதர்களுக்கு உதவக் கூடாது என்று ஆத்திரமாக வரும். நம்மிடம் நிறைய பணம் இருந்தால் எல்லாருக்கும் உதவலாமே என்றும் தோன்றும். ஆனால் சந்திரபாபுவின் பிரபலமான பாடல் ஒன்றின் வரிகள் போல ஒருவேளை பணம் வந்தால் உதவும் குணம் மறைந்து போய்விடக் கூடுமோ என்னவோ?

உதவிகள் செய்யும் ஒரு சில நேரங்களில் நான் ஏமாற்றப்படுவதை நானே கண்முன்னே கண்டிருக்கிறேன். ஊருக்குப் போகக் காசில்லை என்று அழுத பெரியவர் ஒருவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து காசும் கொடுத்து வந்தபின்னர் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அவரை அதே இடத்தில் இன்னொருவரிடம் அதே வசனத்தை பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனாலும் கூட அவருடைய வறுமை அவரை இப்படி ஏமாற்றச் சொல்கிறது என்று என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கிறேனே தவிர என்னால் என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

இது "நான் ஏன் இப்படி இருக்கிறேன்" என்பதைப் பற்றிய ஒரு சுயவிசாரணை மட்டுமே. இந்த உணர்வு எனக்கு மட்டும்தான் இருக்கிறதா இல்லை உங்களில் சிலரும் இதேபோல உணர்ந்திருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியாது. "என்னமோ ரொம்பப் பேசுறியே.. கஷ்டப்படுறாங்களேன்னு வருத்தப்பட நீ ஒருத்தன் மட்டும்தான் இருக்கியா?" என்பது போன்ற கேள்விகளுக்கும் என்னிடம் பதிலில்லை. என்னைப் பொறுத்தவரை என் மனதுக்குத் தோன்றுவதைச் செய்கிறேன். என்னை விடாமல் துரத்தும் குற்றவுணர்வில் இருந்து சிறிதேனும் தப்பிக்க முயலுகிறேன். இது சரி என்றோ தவறு என்றோ யோசித்துப் பார்க்கவும் விரும்பவில்லை. மாறாக என்னியல்பில் நான் நானாக இருக்க விரும்புகிறேன். அவ்வளவே...!!!

15 comments:

sathishsangkavi.blogspot.com said...

//ஒரு வயதானவர் என்னிடம் வந்து தர்மம் கேட்கையில் எனக்கு என்னுடைய தாத்தாதான் ஞாபகத்துக்கு வருவார்.//

எனக்கும் அப்படித்தான்... வயதானவர் பிச்சை எடுப்பதை பார்த்தால் தேடிச்சென்று பணம் கொடுப்பேன்...

Unknown said...

நீங்கள் செய்ததுதான் சரி..

DHANS said...

me too

cant stop me helping them

vasu balaji said...

அவர் சுத்தம் செய்துவிட்டுதானே காசு கேட்டார். அந்தப் பெரியவருக்கு உழைப்பது என்றால் அலுவலகம் செல்வதோ, கடை கண்ணி வைப்பதோதானா? நீங்கள் செய்தது சரி கார்த்தி:)

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்களே.. இங்க ஒரு சின்ன விளக்கம்.. நான் உதவி பண்றதைப் பத்தியோ அது சரி தப்புன்னோ சொல்ல வரல... நான் என்னோட குற்றவுணர்ச்சி காரணமாகவே இதையெல்லாம் செய்றேங்கிறதை சொல்ல முற்பட்டிருக்கேன்..

ஹுஸைனம்மா said...

ம்.. சில சமயம் ஏமாத்தறாங்கன்னு தெரிஞ்சாலும், மறுமுறை மறுக்க மனம் வரத்தான் மாட்டேங்குது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள் நீங்களாகவே இருங்கள்.. :)

Radhakrishnan said...

குற்றவுணர்ச்சி! மிகவும் வலிமை வாய்ந்த சொல்.

எதற்காக குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும் கார்த்திகை பாண்டியன்?

இவ்வுலகம் தங்களால் மட்டுமே நிறுவப்பட்டது அல்ல!

நலம் பயக்கும் செயல்கள் செய்ய எந்த காரணமும் அவசியமில்லை என்பார்கள். ஆனால் நாம் காரணம் இல்லாமல் எதுவும் செய்ய துணிவது இல்லை. நன்றி.

குமரை நிலாவன் said...

//V.Radhakrishnan said...

நலம் பயக்கும் செயல்கள் செய்ய எந்த காரணமும் அவசியமில்லை என்பார்கள். ஆனால் நாம் காரணம் இல்லாமல் எதுவும் செய்ய துணிவது இல்லை. //

உதவிகள் செய்யும் ஒரு சில நேரங்களில் நான் ஏமாற்றப்படுவதை நானே கண்முன்னே கண்டிருக்கிறேன்

இந்த மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு

வினையூக்கி said...

நீங்கள் செய்தது சரியே

மங்குனி அமைச்சர் said...

எனக்கும் பல நேரங்களில் கோபம் தான் வரும் , சரியாக ஹோட்டல் வாசலில் , கடை வாசலில் , அல்லது நாம் டிரைனில் சாப்பிடும் போது வந்து பிட்ச்சை கேட்பது , ஏதோ என்னை கட்டாயப்படுத்துவது மாதிரி உணர்வு வரும் , உண்மையில் அவர்களின் மேல் உள்ளகொபத்தில் சில சமயம் பாவப்பட்டவர்கள் மீது கோபப்பட்டு எதுவும் தராமல் சென்று இருக்கிறேன் , தாண்டிய பின் யோசிச்சு திரும்ப வந்து நிறைய முறை கொடுத்திருக்கிறேன் . இப்பொழுது முடிந்த வரை உணவாக வாங்கிக்கொடுத்துவிடுகேறேன். காசு வாங்கும் சிலர் கஞ்சா வாங்கி அடிப்பதை கண்ணால் பார்த்து இருக்கிறேன் .

ஜீவன்பென்னி said...

இந்த விசயம் நம்ம ஊர்ல மட்டும் இல்லங்க. இங்க வளைகுடா நாடுகளிலும் இருக்குது. ஊருக்குப்போக வழி இல்லன்னு சொல்லி ஏதாச்சும் ஒரு பொருள வாங்கச் சொல்லி அலுவலகத்துக்கே வருவாங்க, அதே ஆளு. நான் அந்த இடத்த விட்டு வேற இடத்துக்கு வந்தப்பிறகு அங்கயும் வந்து ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்ன அதே விசயத்த சொல்லி கேட்டாரு. இது மாதிரி நிறைய நடக்கும். ஊருலயும் நீங்க சொன்ன மாதிரிதான் நானும் நிறைய பார்த்திருக்கேன். ஒரு சில இயல்புகள நாமே நினைச்சாலும் மாத்திக்க முடியாது. அதுல இழப்புகள் அதிகம் இருந்தாலும் ஒரு நிம்மதி கிடைக்கும்.

நிகழ்காலத்தில்... said...

//அவருக்கு ஒரு நிரந்தரத் தீர்வென என்னால் ஏதும் செய்ய முடியாதே என்கிற வருத்தம் பெரும்பாரமாய் அழுத்த ஆரம்பிக்கும். \\

மனதின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஏன் நீ இப்படி பாரமா இருக்கிர அப்படின்னு மனசுக்கிட்ட கேளுங்க,,,

மீண்டும் மீண்டும் முடிந்துபோன விசயத்திற்கு உயிர்கொடுத்து உங்களை நீங்களே துன்பப்படுத்திக்கொள்ளாதீர்கள் கார்த்தி...

அந்த நபர் நிம்மதியா இருப்பார். ஆனா நீங்க...?????

Ganesan said...

என்னை பிரதிபலிகிறீர்கள்..

"உழவன்" "Uzhavan" said...

//ஊருக்குப் போகக் காசில்லை என்று அழுத பெரியவர் ஒருவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து காசும் கொடுத்து வந்தபின்னர் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அவரை அதே இடத்தில் இன்னொருவரிடம் அதே வசனத்தை பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்//

இதே அனுபவம் எனக்கு வடபழனி முருகன் கோவிலில் ஒருமுறை ஏற்பட்டது.