November 5, 2010

மைனா - திரைப்பார்வை

”மைனா படம் பார்த்த இரண்டு நாட்களாக தூக்கமில்லை.." - உதயநிதி ஸ்டாலின்

"நல்ல படம் பார்த்த நிம்மதியில் நான் நன்றாக தூங்கினேன்.." - கமல்ஹாசன்

"தமிழில் ஒரு உலகப்படம் பார்த்த திருப்தி.." - விக்ரமன் (அண்ணே.. சத்தியமாச் சொல்லுங்க.. இதுக்கு முன்னாடி உண்மையாலுமே ஏதாச்சும் உலகப்படம் பார்த்திருக்கீங்களா?)

ங்கொய்யால.. ஆளாளுக்கு கொடுத்த காசை விட அதிகமாக் கூவுறாய்ங்களே.. நெஜமாவே படம் நல்லாயிருக்குமோ என்ற நப்பாசையோடுதான் “மைனா” பார்க்கப் போனேன். ”கொக்கி”யில் ஈர்த்த பிரபுசாலமனின் படம்.


சிறுவயதிலேயே தாயை இழந்தவன் சுருளி. குடிகார அப்பாவால் தெருவில் நிற்கும் மைனாவுக்கும் அவளுடைய அம்மாவுக்கும் உதவுகிறான். வளர்ந்து இளைஞனாகும் சுருளி மைனாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறான். அவளும் அவனை விரும்புகிறாள்.ஆனால் மைனாவின் அம்மாவோ பணத்துக்கு ஆசைப்பட்டு அவளை வேறு ஒருவனுக்கு கட்டித்தர முடிவு செய்கிறாள். கோபம் கொள்ளும் சுருளி மைனாவுடைய அம்மாவின் கடையை அடித்து நொறுக்க போலிசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அவன் சிறையில் இருக்கும் நேரத்தில் மைனாவுக்குத் திருமணம் செய்ய முயலுவதைக் கேள்விப்பட்டு சுருளி தப்பிக்கிறான்.

தப்பிப் போன கைதியைப் பிடிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கும் அவரது உதவியாளர் ராமையாவுக்கும் வந்து சேர்கிறது. கல்யாணத்தை தடுத்து மைனாவோடு தப்பிக்கும் சுருளி இவர்களிடம் மாட்டுகிறான். தங்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தந்த சுருளி மீது கடும்கோபத்தில் இருக்கும் அவர்களோடு மைனாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறான். பல பிரச்சினைகளுக்குப் பிறகு சுருளி நல்லவன் என்பதை காவலர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் உதவியோடு மைனாவுக்கும் சுருளிக்கு கல்யாணம் நடக்க இருக்கும் வேளையில் அதிர்ச்சி தரும் திருப்பமொன்று நடைபெறுகிறது. கடைசியில் காதலர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பதுதான் “மைனா”.

பருத்தி வீரன் கார்த்தியின் அப்பட்டமான காப்பியாக விதார்த். ஏற்கனவே “தொட்டுப்பார்” என்றொரு படத்தில் நடித்திருக்கிறாராம். எல்லாம் நம் தலையெழுத்து. எப்போதும் கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அவர் காட்டானா கிறுக்கனா ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது. அத்தோடு மைனா மைனா பாட்டில் தலையை ஒருமாதிரி ஆட்டிக்கொண்டே ஆடுகிறார் பாருங்கள், அந்த மலையுச்சியில் இருந்து நாமே தள்ளி விட்டால் என்ன என்றுதான் தோன்றுகிறது.


நாயகியாக ”சிந்து சமவெளி” அனகா - இதில் அமலா. என்னதென்று சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு இந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறது. ஆள் பார்க்க ரொம்பப் பாவமாக இருப்பதால் கதைக்கு நச்சென்று பொருந்துகிறார். கடைசி காட்சியில் நன்றாக நடித்தும் இருக்கிறார். கண்டிப்பான அதிகாரியாக சேது. தன்னுடைய பெயர் கெட்டுப்போன காண்டில் விதார்த்தை போட்டுக் காய்ச்சுவதும், பின்பு அவருடைய காதலை உணர்ந்து திருந்தும்போதும், கடைசியில் ஆடும் ருத்ரதாண்டவத்திலும் நிறைவாக செய்திருக்கிறார்.

தம்பி ராமையாவினுடைய கேரியரில் இது ரொம்ப முக்கியமான படம். மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாக தூக்கிச் சுமக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் நகைச்சுவை பட்டையைக் கிளப்புகிறது. அதேபோல செண்டிமென்டல் காட்சிகளிலும் அசத்துகிறார். சுருளியின் அப்பாவாக வரும் பொணந்தின்னி, அமலாவின் அம்மாவாக வருபவர், சேதுவின் மனைவி மற்றும் குடும்பம் என இயக்குனர் சரியான ஆள்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்.

இமானின் இசையில் எல்லாப் பாட்டுமே நன்றாக இருப்பதோடு அவற்றை அழகாகப் படமாக்கி உள்ளார்கள். ஆனால் பின்னணி இசை? அவ்வ்வ்வ்.. எஸ்.ஏ.ராஜ்குமார் “லாலாலா” என்று கொலை செய்வதை இமான் வேறு விதமாகச் செய்கிறார். கதாநாயகி மெதுவாகத் தலையை ஆட்டினால், சிரித்தால், கண் சிமிட்டினால்... உடனே சில்லுன்னு ஒரு ஜிவ்வு இசை. வெகு நாட்கள் குளிக்காதவன் மீது தண்ணீர் பட்டவுடன் சிலிர்த்துக் கொள்ளுமே.. அதுபோல ஒரு ம்யூசிக் எபெக்ட். ஒரு தடவைன்னா சரி.. ஒவ்வொரு தடவைக்கும் இப்படி ஜிவ்வு கொடுத்தா எப்பூடி?



படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் கலை இயக்குனர் வைரபாலனும். தங்கள் வேலையை ரொம்ப நேர்த்தியாக செய்து தந்திருக்கிறார்கள். குறங்கினி, மூணார் என்று பச்சைப்பசேல் இடங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. மொத்த படக்குழுவினரும் காட்டுப் பகுதிகளில் படம் பிடிக்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் என்ன பண்ண? கஷ்டப்பட்டு தைத்த சட்டை என்றாலும் ஆயிரம் பொத்தல் இருந்தால் போட்டுக் கொள்ள முடியுமா? அதுதான் மைனாவுக்கும் நடந்திருக்கிறது. இயக்குனர் திரைக்கதையில் அநியாயத்துக்கு சொதப்புகிறார். மொத்தப் படமுமே க்ளிஷேக்களின் தொகுப்பாகத்தான் இருக்கிறது.

* நாயகி வயதுக்கு வந்தவுடன் பூ மலர்வதைக் காட்டுவது

* நாயகி படிக்க இருட்டில் வெளிச்சம் வேண்டும் என்று நாயகன் சைக்கிள் ஒட்டி டைனமோ லைட்டில் படிக்க வைக்கிறார்

* நாயகி குடிக்கும் தண்ணீரின் ஒரு துளி மேலே விழுந்தவுடன் சிலிர்த்துக் கொண்டு பாட்டு பாடுவது

வயசுக்கு மீறிப் பேசும் / செயல்படும் சிறிசுங்களை இன்னும் எத்தனை படத்துக்குத்தான் இயக்குனர்கள் காமிப்பார்களோ?நாமளும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? அப்போ படத்தில் நல்ல காட்சிகளே இல்லையா? ஒண்ணு ரெண்டு தேறுது..

* விபத்தில் சிக்கும் பஸ்ஸிலிருந்து விதார்த் போலீசைக் காப்பாற்றும் காட்சி

* அம்மா என்றழைத்தவுடன் ராமையாவின் மனைவி உணர்ச்சி வசப்படுவது

* கிளைமாக்ஸ் திருப்பம்

நன்றாக இருக்கும் கடைசி பத்து நிமிடத்துக்காக மொத்தப் படத்தையும் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. திரைக்கதையில் ரொம்பவே சொதப்பி இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி மசமொக்கை. ரொம்ப நாடகத்தனம். ரெண்டாம் பாதியும் ஜவ்வாக இழுத்து கடைசியில் வேகம் பிடிக்கும் பத்தே நிமிடத்தில் படம் முடிந்து போகிறது. கிடைத்த அருமையான தளத்தை பயன்படுத்தத் தவறி விட்டார் பிரபு சாலமன். “லீ,லாடம்” என அவரது வரலாறு தெரிந்தும் துணிந்து போன என்னை நானே நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

றெக்கை ஒடிஞ்ச "மைனா"

23 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks

ஊடகன் said...

வணக்கம் மீனகம் வலைத்தள தரவரிசையில் உங்கள் வலைப்பூவினையும் பதிவு செய்யவும்.

http://meenakam.com/topsites/

cheena (சீனா) said...

அன்பின் கா.பா - பாக்கலாம்னு நினைச்சென் - சரி யோசிப்போம்

நேசமித்ரன் said...

க்ளிஷேக்களின் தொகுப்பாக//

ம்ம்ம்ம்

I like your gesture in this post

:)

Unknown said...

படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தினால் இப்படித்தான் ஆகும் .. நாளைக்கு போகலாம் என்றிருந்தேன்... காசு மிச்சம் ...

பிரபாகர் said...

நல்ல விமர்சனங்க... தப்பிக்க வெச்சிட்டீங்க.... தான்க்ஸ்

பிரபாகர்...

ILA (a) இளா said...

போச்சுடா இனிமே சின்ன படத்தயாரிப்பாளர்கள் முடிஞ்சாங்க. தமிழ் சினிமா வாழ்க

Muruganandan M.K. said...

நல்ல விமர்சனம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Sri said...

Sir ungalukku rasanaiye illaiya?
Padam Super super super

Sri said...

இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் பிரபு சாலமோனும் இணைந்திருக்கிறார். காதலனும் காதலியும் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் காதலுக்காக உயிரைவிடுகிற உருக்கமான காதல் கதை தான் என்றாலும், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களம் மைனா.

மேக்கப் இல்லாத முகங்கள், புதுமையான லொகேஷன், வித்தியாசம் என்கிற வார்த்தைக்கு மரியாதை செய்கிற வகையில் ஒரு க்ளைமாக்ஸ் என மைனா தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.

மலையில் இருந்து பஸ் விழும் காட்சி! படத்தின் உச்சக்கட்ட காட்சி இதுதான். படத்தைப் பார்க்கும் நாமே மலையில் தொங்கும் ஒரு உணர்வு. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இந்த ‘மைனா’ உலகத்தை காண்பித்ததற்காக ஒரு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.

குடுகுடுப்பை said...

நல்ல படம் பார்த்த நிம்மதியில் நான் நன்றாக தூங்கினேன்.." - கமல்ஹாசன்//

இவரு தினமும் நல்லா தூங்குவாரா இருக்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@நேசன்

//க்ளிஷேக்களின் தொகுப்பாக//
ம்ம்ம்ம் I like your gesture in this post //

தல.. நீங்க இதை கவனிக்கணும்னு ஆசைப்படேன்.. நன்றி..

//ILA(@)இளா said...
போச்சுடா இனிமே சின்ன படத்தயாரிப்பாளர்கள் முடிஞ்சாங்க. தமிழ் சினிமா வாழ்க//

அப்படிச் சொல்ல முடியாதுங்க.. குறைஞ்ச விலை.. ஆனா நல்லா விளம்பரம் பண்ணினா நிறைய சம்பாதிக்கலாம்னு சின்னப் படங்கள வாங்கத்தான் செய்வாங்க பாருங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sri said...
Sir ungalukku rasanaiye illaiya?
Padam Super super super//

ஏதோ எனக்குத் தெரிஞ்ச மட்டும் எழுதுனேங்க... எனக்குப் பிடிக்கல.. அம்புட்டுத்தான்..

// Sri said...
இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் பிரபு சாலமோனும் இணைந்திருக்கிறார். காதலனும் காதலியும் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் காதலுக்காக உயிரைவிடுகிற உருக்கமான காதல் கதை தான் என்றாலும், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களம் மைனா.//

உண்ர்ச்சி வசப்பட்டு நீங்கதான் எழுதி இருக்கீங்கன்னு நினச்சேன்.. காப்பி பேஸ்ட் பண்ணாம எழுதிப் பழகுங்க தலைவா.. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்..:-)))

☀நான் ஆதவன்☀ said...

//வயசுக்கு மீறிப் பேசும் / செயல்படும் சிறிசுங்களை இன்னும் எத்தனை படத்துக்குத்தான் இயக்குனர்கள் காமிப்பார்களோ?//

+1 வாத்தியாரே :)

Ganesan said...

மைனா றெக்கைய வெட்டிட்டாங்களா?

Unknown said...

அது சரி ஏன் இந்த கொலைவெறி? பாவம்ய பிரபு சாலமன்.விமர்சனத்துக்கு நன்றிகள்

Sai said...

இந்த மாதிரி விமர்சனம் எழுதுனா சின்ன படங்கள் சாக வேண்டியதுதான்.. டிக்கெட் என்ன 500 ரூபா குடுத்தா பார்த்திங்க வயித்தெரிச்சல கொட்டுறதுக்கு..?
இதுல
”கே.ஆர்.பி.செந்தில்
படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தினால் இப்படித்தான் ஆகும் .. நாளைக்கு போகலாம் என்றிருந்தேன்... காசு மிச்சம் ...”

இதுதான் உங்களை போன்ற பதிவர்களின் மிக மோசமான பின் விளைவுகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@சாய்

500 கொடுத்தாலும் சரி 5 கொடுத்தாலும் சரி.. நம்ம காசு கொடுத்துதான் நண்பா பாக்குறோம்.. பிடிச்சிருந்தா ஆகா ஓகோன்னு பாராட்டுறதும் நாம்தானே.. எனக்கு இந்தப் படம் பிடிக்கலன்னு சொல்லக் கூடாதா? வயித்தெரிச்சல் இங்க எங்க வந்தது.. நல்லாயில்லையேன்னு ஆதங்கம்தாங்க..

மதுரை சரவணன் said...

மைனா பார்க்க வேண்டாம் நைனா என கூறுகிறீர்கள்... ஓ,கே.

சரவணகுமரன் said...

// வெகு நாட்கள் குளிக்காதவன் மீது தண்ணீர் பட்டவுடன் சிலிர்த்துக் கொள்ளுமே.. அதுபோல ஒரு ம்யூசிக் எபெக்ட்.//

ஹி ஹி... :-)

தமிழ் வசந்தன் said...

மைனா நல்லாருக்கோ இல்லையோ அதை புரியும்படி விமர்சிக்க நீங்க எடுத்துக்கிட்ட மெனக்கெடல்கள் நல்லாயிருக்கு.விமர்சனமே ஒரு படைப்பைப் போல இருக்கு. தொடர்ந்து செய்யுங்கள். பாராட்டுக்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை மைனா பார்க்ககூடிய நல்ல படம் தான். படம் பார்க்கும் போது நம்மை மெய்மறக்க வைக்கிற சுகம் அதில் ஒளிந்திருக்கிறது. இதுதான் அதன் வெற்றிக்குக் காரணமாக இருக்குமோ! பிரபு சாலமனின் இந்த முயற்சியும் தனித்துவமானதாகத்தான் இருக்கிறது.

பிரேமாவின் செல்வி said...

இப்போதான் உங்க மைனா விமர்சனம் படிக்கிறேன். உண்மையிலேயே நான் உணர்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறீர்கள். குறிப்பாக ஆண்ட ஜிவ் இசை. கொடுமைடா சாமி. படு மொக்கை. அது ஹிட் என கேள்விப்படும்போது என்னால் சுத்தமாக நம்ப முடியவில்லை

கிருபா said...

@பிரேமாவின் செல்வி
//இப்போதான் உங்க மைனா விமர்சனம் படிக்கிறேன். உண்மையிலேயே நான் உணர்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறீர்கள். குறிப்பாக ஆண்ட ஜிவ் இசை. கொடுமைடா சாமி. படு மொக்கை. அது ஹிட் என கேள்விப்படும்போது என்னால் சுத்தமாக நம்ப முடியவில்லை

//

உண்மைதான் சில(பல)நேரங்களில் இப்படி நடக்கிறது.சேரனின் ஆட்டோகிராப் பேசப்பட்டதும் ,மாயக்கண்ணாடி தோற்றதும் வியப்பு
இரண்டிற்க்கும் காரணம் இருக்கிறது
புரியும்படி சொன்னால் கிரிக்கெட் ரசிகையாக இருந்தாலும் பெண்களுக்கான கிகெட்டை(Women's cricket)-ஐ பார்பது இல்லை அவர்களும் நன்றாகவேதான் விளையாடுகிறார்கள் இப்படித்தான் போய்கொண்டு இருக்கிறது உலகம்