December 31, 2010

டாப் டென் டப்பா படங்கள் 2010

வருஷம் முடியப்போகுதுங்கிறதால நம்ம மெய்நிகர் ஒலகத்துல இருக்குற எல்லாப் பயபுள்ளைகளும் பத்து போட்டுக்கிட்டு திரியுதுங்க. அட தலைக்கு போடுற பத்து இல்லைங்க. எனக்குப் பிடிச்ச பத்து படம், பத்து பாட்டு, பத்து நடிகை.. அடடடடா நாட்டுல இந்த பத்து போடுறவங்க இம்சை தாங்க முடியலப்பா.. ஹிஹிஹி.. ஆனாலும் பாருங்க.. ஊரோட ஒத்துப் போகணும்கிற ஒரே காரணத்தினால நாமளும் ஒரு பத்த வெளியிடுறோம். அதாவது, கடந்த வருஷம் அதிகமா எதிர்பார்ப்ப கெளப்பி விட்டு புஸ்வாணமாப் போன பத்து படங்களோட தொகுப்பு இது.

ஜக்குபாய்

அகில இந்திய ரீதியில டொராண்ட்ல வெளியான முதல் பிரபல தமிழ்ப்படம். ரவிக்குமார் - சரத்குமார்னு நம்பிப் போன மக்கள குனிய வச்சு நல்லா குமுறு கும்றுன்னு குமுறித் தள்ளிய படம். படத்த விட படத்துக்கு வெளில நடந்த ஒலகக் காமடிதான் மக்களுக்கு செம குஜால்ஸ். என் காசு போச்சேன்னு ராதிகா அழுவ, ஆறுதல் சொல்ல யாரும் வர மாட்டாங்களான்னு பார்த்து சரத் கூட்டம் போட, மேடைக்கு வந்த தலைவரு "இது வாசபின்னு ஒரு பிரெஞ்சு படம், மக்கள் நல்லா இருந்தா தானே தியேட்டருக்கு வருவாங்க.. அய்யாங் டொய்யாங்"னு வழக்கம் போல போட்டு பின்னிப் பெடலெடுக்க.. ஹே பாபாஜி.. உன் கருணையே கருணை. சரியான மக்குபாய்.

ஆறுதல்: அப்படி ஒண்ணுமே இல்ல.. அவ்வவ்..

கோவா

கதை இல்லைன்னாத்தான் நான் படமெடுப்பேன்னு அடம் பிடிக்கிற வெங்கட்பிரபுவோட மூணாவது படம். சூப்பர் ஸ்டார் மவ காசுல பொங்க வச்சு தம்பிய புரமோட் பண்ண படம் எடுத்தா வெளங்குமா? மக்கள் "கோ - வா"ல "கோ"வ மட்டும் பிடிச்சுக்கிட்டு போயிட்டு வாங்கப்பான்னு சொல்லிட்டாங்க. கடன் பிரச்சினைல ஐஸ்வர்யா மானம் சந்தி சிரிச்சதும் சினேகா பிகினில வர்றாங்கன்னு பொய்ப்பிரச்சாரம் (வருத்தம்ஸ் ஆப் இந்தியா) பண்ணி ஏமாத்துனதும் தான் படத்தோட சாதனை. வெத்து பாவ்லா.

ஆறுதல் - பியா, இது வரை இல்லாத உறவிது

அசல்

"நீங்க நடக்கிறீங்க. நடக்குறீங்க.. நடந்துக்கிட்டே இருக்கீங்க. கோட்டு சூட்டு கண்ணாடியும் உண்டு.. எப்பூடி.." இதச் சொல்லி ஒரு மனுஷன நடிக்க வைக்க முடியுமா? தலகிட்ட போங்க. வட்டாரம், மோதி விளையாடுன்னு புல் பார்ம்ல இருந்த சரண்கிட்ட கொடுத்தப்பவே தெரிஞ்சு போச்சு இது தரிசு தான்னு. போதாக்குறைக்கு டோட்டட்டைங்க்னு பரத்வாஜ் வேற. மொத மூணு நாள்ல பதினெட்டு கோடி எல்லாம் சரி, ஆனா நாலாவது நாள்ல இருந்து ஒரு பய கூட தியேட்டர் பக்கம் போகவே இல்ல. அசல்னு பேரு வச்சுப்புட்டு அத்தனையும் காப்பி. ஊசல்.

ஆறுதல் - பாவனா

தீராத விளையாட்டுப் பிள்ளை

இளைய தளபதி மாதிரி வரணும்னு விஷால் நினைக்கிறது தப்பில்லை. ஆனா அதுக்காக அவர மாதிரி ஓடாத மொக்கப் படமாத்தான் நடிப்பேன்னா என்ன நியாயம்? சத்யம், தோரணைக்குப் பிறகு வந்த ஹாட்ரிக் தோல்வி. மூணு பொண்ணுங்க. தொரத்தி தொரத்தி லவ் பண்ணி மூணு பேரையும் ஏமாத்துற ஹீரோ நல்லவரு. ஏன்னா அவரு ஆம்பிளையாமாம். ஆனா அதே ஒரு பொண்ணு திருப்பி அடிச்சா "அடங்கி நடக்கணும், பஜாரித்தனம் பண்ணாத"னு பொறுப்பா அட்வைஸ். ஏண்டா திருந்தவே மாட்டிங்களா? சன் டிவி கழுத்தைப் பிடிச்சு தள்ளுனாக் கூட ஒரு பயலும் தியேட்டருக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாய்ங்க. லூசுப்பயபுள்ள.

ஆறுதல் - தனுஸ்ரீ, யுவன்ஷங்கர் ராஜா

ரெட்டைச்சுழி

ஷங்கர் தயாரிக்கிற படம்னா ஏதாவது ஒண்ணு இருக்கும்னு சொல்ற மக்களுக்கு மரண அடி. "இயக்குனர் இமயமும் இயக்குனர் சிகரமும்" சேர்ந்து படம் எடுக்கச் சொன்னா இது ஏதோ மேடை நாடகம் மாதிரி இருந்தது. ஒரு வேளை பசங்க படம் ஏற்கனவே வந்துட்டதால ஊத்திக்கிச்சோ என்னமோ? செழியனும் தாமிராவும் இதை விட நல்லா செய்யக் கூடிய ஆளுங்க. இருந்தும் ஏமாத்திட்டாங்க.இத்தோட ஆனந்தபுரத்து வீடும் சொதப்ப ஷங்கர் அடுத்து படம் தயாரிக்கிற மனநிலைல இல்லைன்னு சொல்றாங்க. அது தமிழ் சினிமாவுக்குத்தான் நஷ்டம். ஹ்ம்ம்.. பார்ப்போம். வெற்றுச்சுழி.

ஆறுதல் - அஞ்சலி

சுறா

நானும் மூணு வருஷமா இந்த டப்பா பட லிஸ்ட் எழுதிக்கிட்டு இருக்கேன். வருஷம் தவறாம இடம்பிடிக்கிற ஒரு ஆள் - ஒரே ஆள்.. நம்ம இளைய தளபதி டாக்டர் தமிழகத்தை காக்கப் போற புரட்சி மனிதர் "விஜய்"தான். தண்ணிக்குள்ள இருந்து அவர் பாஞ்சு வந்ததைப் பார்த்து சில பல டால்பின்கள் தண்ணிக்கு உள்ளயே மூச்சடக்கி செத்துப் போனதா கேள்வி. தெலுங்கு பாட்டு ட்யூனக் காப்பி அடிக்கிறதுக்கு ஒரு படி மேல போய் படம் பிடிச்ச விதத்தையும் காப்பி அடிச்சு தமன்னா டவுசர தூக்கி தூக்கி தளபதி டான்சு ஆடுனது படத்தோட சாதனைகள்ல ஒண்ணு. யாழ் நகர்னு எல்லாம் பேரு வச்சு.. அட அட அடா.. அரசியல்ல பெரிய சாணக்கியனா வருவீங்க தளபதி. கூடிய சீக்கிரம் குதிங்க. கருவாடு.

ஆறுதல் - தஞ்சாவூர் ஜில்லாக்கரி, நான் நடந்தா அதிரடி, நடனம்

ராவணன்

இந்திய சினிமாவின் முகம் - அப்படித்தானா சொல்லிக்கிராய்ங்க - மணிரத்னத்தோட படம். அது ஏண்டா விக்ரமா நீ மட்டும் ரெண்டு வருஷம் உசிரக் கொடுத்து நடிச்சாலும் படம் ஓட மாட்டேங்குது? காட்டுக்குள இருக்குற பழங்குடித் தலைவன் பாரதி கவிதை சொல்றதெல்லாம்.. ங்கொய்யால.. பின் நவீனத்துவ புடலங்கா. ஐச பிருத்வி பிடிச்ச பிடியப் பார்த்தும் கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறான்னா.. அபிஷேக் பெரிய ஜித்தன்யா நீயி. தனிப்பட்ட முறையில எனக்குப் பிடிச்ச படம். இருந்தாலும் படம் ஜம்பலக்கடி பம்பா ஆகிப்போச்சு. சாதாரணன்.

ஆறுதல் - ரகுமான், ஒளிப்பதிவு

சிந்து சமவெளி

படத்தொடக்கப் போஸ்டர்லையே கதாநாயகிய ஒரு மார்க்கமாப் படுக்கப்போட்டு மேட்டர சொல்லி இருந்தாய்ங்க. படம் ரிலீஸ் ஆனவுடனே அது கன்பார்ம்டு. மாமனாரின் இன்பவெறியே தான். இந்த கில்மா படத்துக்கு ஜெயமோகன் வேற. துருக்னேவ் கதையாம் - அந்த ஆளு இருந்தா தூக்குப் போட்டு செத்துருப்பான். ஆனாலும் அமலா பால் எனும் தேவதையைக் கொடுத்ததுதான் படத்தின் சாதனை.

ஆறுதல் - சுந்தர் சி பாபு

ஈசன்

சுப்ரமணியபுரம் - இது தவிர வேற ஏதும் சொல்லணுமா படத்துக்கான எதிர்பார்ப்பு பத்தி? ஆனா ஒரு டுபுக்கு பழிவாங்குற கதை. அதுக்கு சம்பந்தமே இல்லாம அமைச்சரு, போலீஸ்ன்னு மண்டை காய வச்சுட்டாரு சசி. ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாட்டு மட்டும் ஒரு தனி சிறுகதை. ஒரே டீமு, ஒரே மாதிரியான மக்கள் இதுல இருந்து வெளில வந்து அடுத்த படத்துல கலக்குங்க மக்கா..

ஆறுதல் - ஜேம்ஸ் வசந்தன், நமோ நாராயணன்

மன்மதன் அம்பு

உலக நாயகனின் ரசிகர்களுக்கு அவர் கொடுத்த புத்தாண்டு பரிசான நசுங்கிப் போன சொம்பு. மும்பை எக்ஸ்பிரஸ் பரவாயில்லைன்னு பயபுள்ளைங்க தெறிச்சு ஓடுதுங்க. வழக்கம் போல எவனோ ஒரு ஹாலிவுட்காரன் 1950 ல எடுத்தத என் கதைன்னு சொல்லி, ஓரமா கே.எஸ்.ரவிக்குமார ஒக்கார வச்சிட்டு கமல் தானே எடுத்திருப்பார் போல. ஆனாலும் உதயநிதி பெரிய ராஜதந்திரிதான். இல்லைனா படத்த ஜெமினிக்கு கை மாத்தி விட்டுருப்பாரா? ஆனாலும் ஊர் ஊரா கப்பல்ல சுத்தி பார்த்துட்டு வந்தத எல்லாம் ஒரு படமா எடுக்கவும் தில்லு வேணும். அக்காங்..

ஆறுதல் - மாதவன், தேவி ஸ்ரீ பிரசாத்

இது எல்லாமே எதிர்பார்க்க வச்சு ஏமாத்துன படம். நான் டப்பான்னு மண்டை காஞ்சு பெரிய வெற்றி பெற்ற படம்னா அது "விண்ணைத்தாண்டி வருவாயா". அதே மாதிரி இந்த வருஷம் நான் பார்த்ததிலேயே ரொம்பக் கேவலமான படம் கைபேசி எண். அதப்பத்தி படிக்க இங்க சொடுக்குங்க மக்கா.

எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் கதையும் திரைக்கதையும் நல்லா இல்லைனா ஆப்புத்தான். மக்கள் முழிச்சிக்கிடாங்க - இது ஒரு நல்ல டிரெண்டு. அதை மனசுல வச்சுக்கிட்டு நல்ல படங்கள் இயக்குனர்கள் தரணும் - தருவாங்க அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு. வர்ற வருஷம் தமிழ் சினிமாவுக்கு நல்லதா அமையட்டும். (முடிக்கும்போது தத்துவம் சொல்லணும்ல)

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

December 28, 2010

ஈரோடு சங்கமமும் பெருமாள்முருகனும்

கடத்த 26 -12 -10 அன்று ஈரோட்டில் பதிவர்கள் - வாசகர்கள் பங்குபெற்ற "சங்கமம்" அற்புதமான வகையில் நடந்தேறியது. சனிக்கிழமை மதியமே நானும் நண்பர் ஸ்ரீயும் ஈரோடு போய் விட்டோம். பிரியத்துக்குரிய ஜாபரும் கார்த்தியும் எங்களை வரவேற்று அழைத்துப் போனார்கள். மறுநாள் நிகழ்வுக்கான ஆயத்தங்களைச் செய்வதிலேயே அன்றைய தினம் கழிந்தது.

ஞாயிறு காலை பதினோரு மணி போல நண்பர்கள் எல்லோரும் அரங்கிலே கூடத் தொடங்கி விட்டார்கள். சிங்கை பதிவர் பிரபாகரின் தமிழ் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. நிகழ்ச்சியின் முதல் அமர்வாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறுகதைகள் எழுதுவது குறித்துப் பேசினார்.

அதன் பின்னர் நக்கலுக்கும் நையாண்டிக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர் பாமரன் பேச வந்தார். அவருக்கான தலைப்பு - "உலக மொக்கையர்களே ஒன்று கூடுங்கள்". கணினி என்கிற விஷயத்தை தாங்கள் தீவிரமாக எதிர்த்த காலம் போய் இன்றைக்குத் தாங்களும் கணினி வாயிலாக இயங்க வேண்டி இருப்பதை குறிப்பிட்டுப் பேசினார். தற்கால அரசியல் சூழல் பற்றி வருத்தம் கொண்டாலும் இணையத்தின் மூலம் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மூலம் மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என நம்புவதாக பாமரன் தெரிவித்தார். கடைசியாக மண்ட்டோவின் சிந்தனைகள் சிலவற்றை எடுத்துச் சொல்லி தனதுரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக "தமிழ்ஸ்டூடியோ.காம்" அருண் குறும்படங்கள் எடுப்பது பற்றி பேசினார். சென்னையில் குறும்படங்கள் எடுப்பதற்கென சரியான தளமொன்று இல்லாத நேரத்தில், அம்மாதிரியான எண்ணத்தோடு கிளம்பி வரும் மக்களை யாரும் ஏமாற்றி விடாமல் அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கப்பட்டதே "தமிழ்ஸ்டூடியோ.காம்". குறும்படங்கள் எடுக்க விரும்பும் யாருக்கும் அதற்கான தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை எப்போதும் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

அவருக்குப் பிறகு பேசிய "திரை நானூறு" என்கிற அமைப்பை நடத்தி வரும் திரு.சிதம்பரம் உலக திரைப்படங்கள் பற்றியும் தமிழ் சினிமாவின் பின்தங்கிய நிலை குறித்தும் விரிவாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட பிறகு உணவு இடைவேளை விடப்பட்டது. சைவம், அசைவம் என சாப்பாடு பொளந்து கட்டி விட்டார்கள். நிறைவான மதிய உணவுக்குப் பின்னர் பதிவர்கள் மீண்டும் ஒன்றுகூட மதிய நிகழ்வுகள் தொடங்கின.

பதிவர் கருவாயன் (எ) சுரேஷ் புகைப்படங்கள் எடுக்கும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான வரைமுரைகளைப் பற்றி பேசினார். எப்படி வெளிச்சம் அதிகப்படாமல் எடுக்க வேண்டும், பின்னணி ஒரு புகைப்படத்துக்கு எந்தளவுக்கு முக்கியம், பொதுவாக புகைப்பட கருவியை எப்படி கையாள வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அழகாக சொன்னார்.

அடுத்ததாக பேசியவர் மூத்த (வயதில் அல்ல) பதிவர் ஓசை செல்லா. பதிவுலகம் தனக்கு என்ன மாதிரியான சவுகரியங்களைத் தந்திருக்கிறது, ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை எப்படி கொண்டு வரலாம் என்றெல்லாம் சொன்னவர், பதிவுகளின் மூலமே சமூகத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் மோசடியை எப்படி தன்னால் சுட்டிக் காட்ட முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

கடைசி நிகழ்வாக நண்பர் லக்ஷ்மணராஜா பேசினார். நிழற்படங்களை ஆவணப்படுத்துதல் என்கிற மிக முக்கியமான விஷயம் பற்றி அழகான இரண்டு போட்டோ ஆல்பங்களின் துணையோடு விளக்கினார். ஒரிசாவில் வேதாந்தா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் "நியாம்கிரி" என்கிற ஊரைப் பற்றின ஆவணப்பதிவு அட்டகாசமாக இருந்தது. நிழற்படங்கள் கூட கதை சொல்ல முடியும் என்று சொல்லாமல் சொல்லிப் போனார் லக்ஷ்மணராஜா. அன்றைய தினத்தின் கடைசி நிகழ்வாக திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான "சேர்தளம்" நடத்திய பதிவர் கலந்துரையாடல் நடைபெற்றது.

இப்போது மீண்டும் பெருமாள் முருகனிடம் வருவோம். நன்றாக எழுதுபவர்கள் நன்றாக பேச மாட்டார்கள் என பொதுவாக சொல்வார்கள். எஸ்ரா, பிரபஞ்சன் போன்ற விதிவிலக்குகளோடு பெருமாள் முருகனையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். வெகு அருமையாக பேசினார். இனி அவர் பேசியதில் இருந்து..

"சிறுகதைகள் எழுத நினைக்கும் யாருக்கும் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதி காலத்தில் எழுதத் தொடங்கியபோது வாசிப்பு தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு கண்டிப்பாக வாசிப்பு தேவை. காரணம், தமிழில் சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் அத்தனை சாதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே நம் முன்னோடிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அவர்களைத் தாண்டிப் போகவும் நாம் அவர்களை வாசிப்பது அவசியமாகிறது.

பத்திரிக்கைகள் கூட சிறுகதைகளுக்கு அத்தனை முக்கியம் தருவதில்லை. வெகுஜன பத்திரிக்கைகள், உயிர்மை காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள் என எல்லா பத்திரிக்கைகளுமே ஒரே ஒரு சிறுகதையை மட்டுமே வெளியிடுகின்றன. இணையைத்தில் எழுதுபவர்கள் கூட சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

இந்நிலையில் உயிர் எழுத்து மட்டுமே ஒரு இதழுக்கு ஐந்து அல்லது ஆறு சிறுகதைகளை வெளியிட்டு வருகிறது. அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். பொதுவில், இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் என்பது ரொம்பவே குறைந்து போய் விட்டது. குறைந்தபட்சம் மாதம் ஒரு சிறுகதையாவது வாசிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர் வாசிப்பின் மூலமே நம்மால் சிறுகதையின் நுட்பங்களைக் கண்டடைய முடியும். ஜெயமோகனிடம் கேட்டால் தன்னுடைய முதல் சிறுகதை என கணையாழியில் வெளிவந்த நதி பற்றி சொல்லுவார். ஆனால் அதற்கு முன்னரே குமுதம், ஆ.வி போன்ற பத்திரிக்கைகளிலே நிறைய எழுதி இருக்கிறார். அப்படியானால் அவையெல்லாம்? எழுதுவதற்கான பயிற்சி. தொடர்ச்சியாக எழுதுவதன் மூலமே ஒருவர் தனக்கான உத்திகளைக் கண்டறிய முடியும்.

ஒரு விஷயத்தை வாசிக்கும்போது நம்மை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்ளுவது அவசியம். நம்மால் உணர முடிந்த விஷயங்களையே நல்ல இலக்கியமாக ஒருவரால் மாற்ற இயலும். அதே போல நீங்கள் தெரிந்து, உணர்ந்து கொள்ளும் விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களை இன்னும் பக்குவப்படுத்தும்.

முதல் முறையாக கதை எழுதும்போது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழும் மனிதர்களைக் களனாக எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு கந்தர்வனின் அதிசயம் கதையைச் சொல்லலாம். தன்னுடைய வெற்றுக் கையால் ஒரு பனைமரத்தை பிடுங்கி எரியும் மனிதனைப் பற்றிய கதை அது.

அதே போல தி.ஜாவின் காண்டாமணி கதையைச் சொல்லலாம். குற்றவுணர்ச்சியின் காரணமாக கோவிலுக்கு கொடையாகக் கொடுத்த மணி எப்படி அந்த மனிதனின் குற்றவுணர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்பதை சொல்லும் அற்புதமான கதை. இது போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்ளும்போது அது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

சிறுகதை என்பதொரு கடல். அது பற்றிய ஒரு சில துளிகளை மட்டுமே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். இதை மனதில் கொண்டால் சிறுகதைகளை எழுதுவது சற்று எளிதாகும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த ஈரோடு பதிவர்களுக்கு நன்றி.." அட்டகாசமாகப் பேசி அமர்ந்தார் பெருமாள்முருகன்.

எழுத்தில் மட்டுமே கண்டிருந்த ஒரு சில புதிய முகங்களின் அறிமுகம், நண்பர்களுடான உரையாடல், கேலி கிண்டல் என கொண்டாட்டமாக அமைந்தது சங்கமம். இதை சீரிய முறையில் நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர் குழுமத்திற்கு நன்றிகள் பாராட்டுகளும். ஒரு விடுமுறை தினத்தை நண்பர்களுக்கென ஒதுக்கி சங்கமத்தில் கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..!!!

சங்கமம் புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்குங்கள் நண்பர்களே..

December 23, 2010

செல்லமே ( 3/4 பக்க கதை)

"ஹலோ.. வணக்கம்.. யார் பேசுறீங்க?"

"...."

"ஹலோ.."

"பிரியத்துக்குரிய என் செல்லம் நிஷாக்குட்டிக்கு இனிய மாலை வணக்கம்.."

"ஹையோ.. சுமதி அக்கா.. எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க?"

"சூப்பரா இருக்கேன்.. போங்கக்கா.. உங்க மேல எனக்கு கோபம்.. ஒரு வாரமா ஏன் பேசவே இல்ல?"

"அப்படி சொல்லாதடா கண்ணு... ஒரு வாரமா லைனே கிடைக்கல தெரியுமா? உன்கூட பேசாம நான் மட்டும் சந்தோஷமாவா இருப்பேன்.."

"அதான பார்த்தேன்.. சொல்லுங்க.. இன்னைக்கு என்ன பண்ணப் போறீங்க?"

"பாட்டு பாடப் போறேன்மா.."

பூவே பூச்சூடவா
என் நெஞ்சில் பால் வார்க்கவா..

"அருமை.. ரொம்ப அழகா பாடினீங்க.. அட்டகாசமா பாடி அசத்திய சைதை சுமதி அக்காவுக்காக ஒரு பாடல் வந்துக்கிட்டே இருக்கு.. பார்க்கலாம் வாங்க.."

போனை வைத்து விட்டு திரும்பினாள் சுமதி. நான்காம் வகுப்பு படிக்கும் அவள் பிள்ளை ரிதின்யா கையில் நோட்டோடு நின்று கொண்டிருந்தாள்.

"அம்மா.. இந்த கணக்கு புரியல.. கொஞ்சம் சொல்லித் தாயேன்.."

"சனியனே.. அதான் மாசா மாசம் ஸ்கூலுக்கு ஆயிரக்கணக்குல கொட்டிக் கொடுக்குறோம்ல.. அங்க ஒழுங்கா சொல்லித் தர மாட்டாங்களா? இங்க வந்து என் உயிரை வாங்கிக்கிட்டு? ச்சீ.. இந்த வீட்டுல அஞ்சு நிமிஷம் நிம்மதியா இருக்க முடியுதா? எல்லாம் என் தலையெழுத்து.. வந்து தொலை.."

சுமதி பிள்ளையை இழுத்து உக்கார வைக்க டிவியில் அவளுக்கான பாடல் சமர்ப்பணம் ஆகிக் கொண்டிருந்தது.

அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..

December 21, 2010

விஷ்ணுபுரம் விருது விழா 2010

முன்குறிப்பு: சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கும் நாஞ்சில் நாடனுக்கு நல்வாழ்த்துகள்.

கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான .மாதவனுக்கு விருது வழங்கும் விழா 19-12-10 அன்று பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. "மனதில் உறுதி வேண்டும்" பாட்டை ராமச்சந்திர ஷர்மா பாடி விழாவை ஆரம்பித்து வைத்தார். ஜெமோவின் தீவிர வாசகரும் பிரியத்துக்குரிய பதிவுலக நண்பருமான செல்வேந்திரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

பேராசிரியை எம்..சுசீலா வரவேற்புரை வழங்கினார். "விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைப் பொறுத்தவரை நான் ஒரு குழந்தை மாதிரி. வெகு சமீபத்தில்தான் புதிதாக என்னை இணைத்துக் கொண்டிருப்பவள். இருந்தும் எனக்கு இந்த வாய்ப்பைத் தந்ததற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த விருது முழுக்க முழுக்க ஒரு வாசகனின் பார்வையில் மாபெரும் எழுத்தாளனைக் கொண்டாடும் முகமாக வழங்கப்படுகிறது. இதில் எந்த அரசியலும் கிடையாது. ஜெயமோகனின் துணையோடும் அவருடைய வழிகாட்டுதலின் படியும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரையும் எங்கள் இலக்கிய வட்டம் சார்பாக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.."


அடுத்ததாக விழாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த கோவை ஞானி பேசத் துவங்கினார். அதிரடி. அதிர்வெடி. இப்படித்தான் அவருடைய பேச்சை சொல்ல வேண்டும். "பொதுவாக எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் வாங்கினால்தான் அவன் உயர்ந்த கலைஞனா? கவனிக்கப்படாத எத்தனையோ அற்புதமான கலைஞர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் தகுதியில் குறைந்தவர்களா? கண்டிப்பாக கிடையாது. .மாதவன் போன்ற எழுத்தாளர்கள் தமிழில் இருப்பது நமக்குத்தான் பெருமை. இப்போது அவரைப் பாராட்டி விருது தருகிறீர்கள். சந்தோசம். ஆனால் பரிசுத்தொகை 50,000/- என்பதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி லட்ச ருபாய் தரலாம். அவர் எழுத்துகளுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.


மேடையில் என்னைப் பற்றி பேச வேண்டாம் என்று ஜெமோ சொன்னார். ஆனால் நான் ஒரு நல்ல மாணவன் இல்லை என்பதால் அதை மீற வேண்டி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஜெமோவின் பெயரும் சாகித்ய அகாதெமி விருதுக்கு பரிசீலனையில் இருந்திருக்கிறது. விருதுக்குழுவில் இருந்த மூன்று தமிழர்களில் ஒருவர் சொன்னாராம்.."ஜெமோவா.. அவர் தமிழ்த் துரோகி ஆயிற்றே?" ஏனய்யா.. அப்படிப் பார்த்தால் கலைஞரை விடவும் பெரிய தமிழ்த்துரோகி யாரும் இருக்க முடியுமா? இன்னொரு நடுவர் சொன்னாராம் "என்னால் கொற்றவை நாவலைப் படிக்கவே முடியவில்லை.." ஒரு புத்தகத்தை படிக்கவே முடியாத மனிதருக்கு அந்த தேர்வுக்குழுவில் இருக்கத் தகுதி உண்டா?

மூன்றாவதாக இருந்த தமிழவன் எத்தனை போராடியும் அந்த வருடம் ஜெமோவுக்கு விருது கொடுக்கவில்லை. புவியரசுக்குத் தந்தார்கள். இந்த மாதிரி காலக் கொடுமையெல்லாம் தமிழில் மட்டும்தான் நடக்கும். தமிழில் இன்று இருக்கக் கூடிய ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் கண்டிப்பாக ஜெயமோகனைப் புறக்கணிக்கவே முடியாது. அவருடைய "பின்தொடரும் நிழலில் குரல்" ஒரு மாஸ்டர்பீஸ். இதைச் சொன்னால் என்னை என் கட்சிக்காரர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. விருது பெறும் மாதவனுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்கும் என் வாழ்த்துகள்.."

அடுத்ததாக மலையாள நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா .மாதவனுக்கு விருதையும் காசோலையும் வழங்கினார். நிகழ்வை ஒட்டி ஜெயமோகன் எழுதிய "கடைத்தெருவின் கலைஞன்" என்ற புத்தகத்தை மணிரத்னம் வெளியிட வாசகர் ராதாகிருஷ்ணன் என்கிற இளைஞர் பெற்றுக் கொண்டார்.


புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தில் உரையாற்ற அதை ஜெமோ மொழிபெயர்த்து சொன்னார். "25 வருடங்களுக்கு முன்பே என்னை ஜெமொவுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு இலக்கிய விழாவில் என்னை சந்தித்து இருக்கிறாராம். அதை என்னோடு பகிர்ந்து கொண்டபோது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு நீங்கள் விருது தருவதில் ரொம்ப மகிழ்ச்சி. இன்றைக்கு கேரளத்தில் இலக்கிய சூழல் அத்தனை நன்றாக இல்லை. அங்கிருக்கும் மக்களுக்கு மொழி பற்றிய ஆர்வம் ரொம்பவே குறைந்து வருகிறது. தங்களுடைய பிள்ளைகள் அம்மே என்றழைப்பதை விட மம்மி என்று சொல்ல வேண்டுமென கேரளா அம்மாக்கள் விரும்புகிறார்கள்.


ஆனால் தமிழில் அப்படி இல்லை என்பது மனதுக்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது. நீங்கள் உங்கள் மொழியை நேசிக்கிறீர்கள். தாயைப் போல, தாயின் முலைப்பாலைப் போல.. ரொம்ப நெகிழ்வாக இருக்கிறது. .மாதவனின் மொழிபெயர்ப்புகளை நான் வாசித்து இருக்கிறேன். தலைசிறந்த எழுத்தாளர். அவர் நெடுங்காலம் நன்றாக இருக்க வேண்டும். இனிமேலும் அவருக்குப் பல விருதுகள்.. ஞானபீடம் ஏன் நோபல் பரிசும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.." தமிழ்ச்சூழல் பற்றிய புனத்திலின் பேச்சை ஒரு சில இடங்களில் மொழிபெயர்க்கும் போது சிரிக்காமல் இருக்க ஜெமோ நிறையவே சிரமப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

"இலக்கிய விழாக்களில் விருப்பமில்லாத நண்பனொருவனிடம் மணிரத்னம் பேசுகிறார் வாடா என்று சொன்னேன். அடப்போடா அவர் என்னைக்குப் பேசினார் மைக் முன்னாடி சிரிக்கப் போறார் இதுக்கு எதுக்கு என்றான். அவன் எண்ணத்தைப் பொய்யாக்கும் வண்ணம் இப்போது மணி பேசுவார்" என்கிற செல்வாவின் கிண்டலோடு பேச வந்தார் மணிரத்னம். அளவான பேச்சு.

"தமிழ் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம் என்கிறார்கள். ஏதோ என்னால் முடிந்தது.. இங்கே வந்திருக்கிறேன். மாதவனின் எழுத்துகள் இருட்டிலிருக்கும் மனிதர்களின் மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது என்று சொனார்கள். இருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் என்னை அழைத்தார்களோ என்னமோ? மாதவனின் கிருஷ்ணப் பருந்தை வாசித்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ஆனால் போகப்போக என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அதில் ஒரு பகுதியை சினிமாவாக்க முயன்றாலே அது அற்புதமான படமாக இருக்கும்.. அவருக்கு என் வாழ்த்துகள்.."

அடுத்ததாக சிறப்புரை ஆற்ற வந்தவர் "எப்போதும் மூக்கின் நுனியில் சினத்தை சுமந்து கொண்டிருக்கும் கும்பமுனி" நாஞ்சில் நாடன். திருவனந்தபுரம் என்கிற ஊரிலிருந்து எத்தனை முக்கியமான கலைஞர்கள் வந்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார். "கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக எழுதி வரும் மாபெரும் கலைஞன் .மாதவன். அவருக்கு உண்டான விருதுகளை இன்னும் ஏன் தர மறுக்கிறார்கள்? காரணம் அரசியல். சாதி சார்ந்து விருதுகள் வழங்கும் கொடுமையெல்லாம் இருக்கிறது. நமக்கு முன்னால் விருது வாங்க வரிசையில் இருப்பவர்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. முத்தமிழ் அறிஞரில் ஆரம்பித்து கவிச் சக்கரவர்த்தி வரை எல்லோரும் இருக்கிறர்கள். இதெல்லாம் தமிழுக்கு வந்த சோதனை.


திராவிட பாரம்பரியத்தில் வந்த எழுத்தாளர்தான் .மாதவன். முரசொலி தொடங்கி பல திராவிட பத்திரிக்கைகளில் அவருடைய கதைகள் வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 200 கதைகள். ஆனால் தன்னுடைய தொகுப்பென வந்தபோது அந்தக் கதைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளும் தைரியம் மாதவனுக்கு இருந்தது. அவருக்கு விருதுகள் தந்து உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஓய்வு பெற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கூட இந்த அறச்சீற்றம் கொள்ளாவிட்டால் எப்படி?"

அடுத்துப் பேசிய விமர்சகர் வேதசகாயகுமாரின் நிதானமான பேச்சு சற்றே சலிப்படைய வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். "இதுவரை .மாதவன் கதைகள் பற்றிய திறனாய்வுகள் என எத்தனை வந்திருக்கிறது என்று பார்த்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஏன் அவர் புறக்கணிக்கப்படுகிறார்? தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவப் போக்கை மாற்றியமைத்த கதாபாத்திரங்கள் மூன்று. ஜி.நாகராஜனின் கந்தன், சுராவின் ஜே ஜே, மாதவனின் சாளைப்பட்டாணி. ஆனால் மற்ற இருவரைப் போல சாளைப்பட்டாணி கவனிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்?" இதே ரீதியில் கடைசி வரை மாதவன் ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். மேடையில் அவர் பேசியதை எல்லாம் காலையில் நேரடி உரையாடலிலேயே கேட்டு விட்டிருந்ததால் ருசிக்கவில்லை.

ஜெயமோகன் இரத்தின சுருக்கமாகப் பேசினார். "இந்த விருது தமிழின் முக்கிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு மரியாதை செய்வதற்காக உண்டானது. பணத்தைக் கொண்டு இதை மதிப்பிட முடியாது. மாறாக நாங்கள் அவர்கள் மீது கொண்டிருக்கும் மரியாதையையே காட்டுகிறது. விருது வழங்கிய குஞ்ஞப்துல்லாவை 25 வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பார்த்தேன். அந்த விழாவின் நாயகரை எனக்கு பத்து வருடங்களாக நண்பராகத் தெரியும். அதற்காக உங்கள் எழுத்துகள் எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை என்று சொல்லி பேச ஆரம்பித்தார். ஆகா இதோ நம்மைப் போன்றே ஒருவர் இருக்கிறார் என்று ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இன்றைக்கு இங்கே வந்து சிறப்பித்த அவருக்கு என் நன்றி. மாதவனுக்கு விருது வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்..”


அனைவருக்கும் நன்றி சொல்லிய .மாதவனின் ஏற்புரையோடு விழா நிறைவு பெற்றது. தமிழின் முக்கியமானதொரு முன்னோடிக்கு விருது வழங்கி சிறப்பித்த நிகழ்வில் நாமும் கலந்து கொண்டது ரொம்பவே நெகிழ்வாக இருந்தது.

பின்குறிப்பு 1: நகர்வலத்தின்போது அகில இந்திய ரீதியில் ரசவடை என்கிற விஷயத்தை அறிமுகம் செய்து வைத்த அண்ணன் கேபிளுக்கும், பிரதாப்புக்கும் நன்றி. அத்திரி, ஜாக்கி, ., சூர்யா, மேவி போன்ற சென்னை நண்பர்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஒரு சிலரைப் பார்க்க எண்ணியும் பார்க்க முடியவில்லை. அவர்கள் இந்த சிறுவனை மன்னிப்பார்களாக.. ஆமென்..

பின்குறிப்பு 2: பிரியத்துக்குரிய கோபியை முதல் முறையாக சந்தித்தேன். அமைதியாக மசமொக்கை போடுகிறார். உங்களைப் போன்றவர்கள்தான் பதிவுலகுக்குத் தேவை. வாழ்க வளமுடன்..

பின்குறிப்பு 3: அருமையாக மீன்குழம்பும் வறுவலும் செய்து அசத்திய திரு, அண்ணே அண்ணே என்று கவனித்துக் கொண்ட செல்வா.. இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள். நல்லா இருங்க மக்களே..

பின்குறிப்பு 4: ஸ்ட்ஃப்டு சப்பாத்தி செய்ய வருதான்னு டெஸ்ட் பண்ணிப் பார்க்க கிடச்ச ஸ்பெசிமென் ஆகிட்டோமுன்னு பயந்த சமயத்துல, அருமையா சமைச்சு அசத்திய விஜிக்கும் அப்பாவி ரங்கமணி ராமுக்கும் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சஞ்சய் - உங்களுக்கும்.. நன்றி நண்பா..

கடைசியா.. கொஞ்சம் பெரிய பதிவாப் போயிருச்சு. பொறுமையா வாசிச்ச அத்தனை பேருக்கும் நன்றி மக்கள்ஸ்..:-))

[ படங்கள் உதவி - கோபி ராமமூர்த்தி]

December 15, 2010

உக்கார்ந்து யோசிச்சது (15-12-10)

"ஆகா.. அது நீங்கதானா பாஸ்?"

"ரொம்ப நாளாவே உங்கள பாக்கணும்னு ஆசைண்ணே.."

"உங்களைப் பத்தி இப்படித்தான் இருப்பீங்கன்னு மனசுக்குள்ள ஒரு ஸ்கெட்ச் போட்டு வச்சிருந்தேன்.. அப்படியே.."

"சந்தோஷமா இருக்கு தல.. என்ன பேசுறதுன்னு தெரியல.."

எழுத்துகளாக மட்டுமே அறிந்த மனிதர்களை நேரில் சந்தித்து, உரிமையோடு தோளில் கைபோட்டு, பாஸு நண்பா அண்ணே என்றெல்லாம் கொஞ்சிக்குலாவி, மனம் திறந்து உரையாடி மகிழும் தருணங்கள் அற்புதமானவை. சங்கமம் 2010 மூலம் இந்த வருடமும் அப்படியானதொரு வாய்ப்பை ஈரோடு நண்பர்கள் நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.



நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு


நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்

* சிறுகதைகளை உருவாக்குவோம்

* புகைப்படங்களில் நேர்த்தி

* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்

* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்

* பதிவர்கள் கலந்துரையாடல்


நாம் அனைவரும் கலந்து கொண்டு கொண்டாட வேண்டிய திருவிழா இது. எனவே பதிவுலக வாசக நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாக கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

***************

என்னோடு கல்லூரியில் உடன் பணிபுரியும் ஆசிரியை அவர். சமீபத்தில் விடுமுறைக்கு தன்னுடைய மாமா வீட்டுக்குப் போயிருக்கிறார். சங்கரன்கோவில் அருகே இருக்கும் ஏதோ ஒரு சிற்றூர். முழுதும் நகரிலே வளர்ந்த இவர் அங்கே போவது இதுதான் முதல் முறை.

ஒருநாள் வீட்டுக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணியை "ஏங்க கொஞ்சம் இங்க வாங்க" என்று கூப்பிட்டு இருக்கிறார். அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இவரது மாமா இவரை ஓங்கி அடித்து விட்டாராம். இவர் என்ன ஏதென்று புரியாமல் திகைத்து இருக்கிறார்.

"அந்த ***** எல்லாம் மரியாதை கொடுத்துப் பேசி ஏத்தி விடுறதுக்கா? ஒழுங்கா நீ வா போ அவளே இவளேன்னுதான் பேசணும்"

இவர் அதிர்ச்சியாகி அந்த ஊரைப் பற்றி விசாரித்து இருக்கிறார். சுத்துப்பட்டில் இருக்கும் பதினெட்டு ஊர்களிலும் இதுதான் வழக்கமாம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிக்குளம், இரட்டை கிளாஸ் முறை, பஸ்ஸில் ஏறக் கூடாதெனக் கட்டுப்பாடு, செருப்பு அணியக்கூடாது.. நாம் இருப்பது 2010 தானா என்று ரொம்ப சந்தேகமாகப் போய் விட்டது என வருத்தத்தோடும் அதிர்ச்சியும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அம்பேத்கர் காந்தியிடம் சொல்வதாக இருந்த வசனம்தான் ஞாபகம் வந்தது. "இன்னும் அம்பது வருஷமானாலும் இந்த மக்களுக்கு விடிவு பிறக்கும்னு எனக்குத் தோணல.." அந்த மனிதரின் தீர்க்கதரிசனம் இன்றும் உண்மையாக இருப்பது கொடுமையான விஷயம். எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

***************

நண்பனொருவன் பல வருடங்களாக மார்க்கெடிங் லைனில் வேலை பார்த்து வருபவன். அவனோடு கூட வேலை பார்க்கும் ஒருவர் புதியவர் ஒருவரை அறிமுகப்படுத்தி பாவப்பட்ட பையன் எனவும் ஏதேனும் வேலை கிடைத்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். நம்ம பயபுள்ளைக்கு ரொம்பவே இளகிய மனசு. ரெகமன்ட் பண்ணித் தன்னுடைய கம்பெனியிலேயே வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறான். அந்தப் பரதேசிக்கு ஏழுமலை வெங்கடேசன் மீது ரொம்ப பக்தி போல. மூன்று மாசம் அமைதியாக இருந்து விட்டு திடீரென ஒரு நாள் கலெக்ஷன் பணம் முப்பதாயிரத்தை எடுத்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என ஆள் எஸ்கேப்.

எங்கு தேடியும் ஆள் கிடைக்கவில்லை. காற்றோடு கரைந்து போய் விட்டான். ஆளை அறிமுகப்படுத்தியன் என்று எனது நண்பனை கம்பெனியில் பிடித்துக் கொண்டார்கள். அப்படி இப்படி என்று பணம் புரட்டி பிரச்சினை இல்லாமல் தீர்த்து விட்டோம். "ஏண்டா, உன்கூட வேலை பாக்குற ஆளு தான் அறிமுகம் பண்ணி வைக்காம உன்ன விட்டு பண்ண சொல்றானேன்னு உனக்கு சந்தேகமே வரலையா"ன்னு கேட்டா வெறிக்க வெறிக்க விட்டத்தைப் பார்த்துட்டு ஙேன்னு நிக்கிறான். அவன என்ன பண்ண? இப்படிப்பட்ட சம்பவகள் நடக்கும்போதுதான் நாம யாருக்கும் உதவி பண்றதே தப்புன்னு தோண ஆரம்பிக்குது.. ஹ்ம்ம்..

***************

இமையத்தின் "கோவேறு கழுதைகள்" - க்ரியா வெளியீடு. வண்ணான்குடியின் பாடுகளை இத்தனை அழுத்தமாக வேறு யாரும் பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஊருக்குள் எல்லாமே நாம்தான் என அவர்களையே நம்பி வாழும் ஆரோக்கியத்தின் குடும்பம் எப்படி நகர மயமாக்கலின் பொருட்டும், கால மாற்றத்தின் காரணமாகவும் நிர்க்கதியாய் நிற்க நேரிடுகிறது என்பதை பெரும்பாரமாக நமக்குள் இறக்கி வைக்கிறார் இமையம். சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளும் அதை அம்மனிதர்கள் எப்படித் தங்களின் வாழ்க்கை முறையாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் துன்பியல் சித்திரங்களாக நம் கண்முன்னே விரிகின்றன. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

***************

இது சண்டைப்பட பிரியர்களுக்காக... 70 - 80 களை சீன குங்க்பூ படங்களின் பொற்காலம் என்று சொல்லலாம். நம்பவே முடியாத பயிற்சி முறைகள், பறந்து பறந்து போடும் சண்டைகள் என களை கட்டும். சமீபத்தில் அது போல மூன்று படங்களைப் பார்க்க நேர்ந்தது.

@ kid with the golden arms

@
invincible armour

@
the seven grandmasters

கிளாசிக்ஸ் என்று சொல்லக்கூடிய அருமையான படங்கள். டோரேண்டுகளில் கிடைக்கின்றன. அவசியம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

***************

என்னுடைய பிளேலிஸ்டில் இருக்கும் இந்த வார டாப் 5 பாடல்கள்..

* அய்யய்யோ - ஆடுகளம்

* லோலிடா -
எங்கேயும் காதல்

* டைட்டில் பாட்டு - மன்மதன் அம்பு


* ஏதோ ஒரு ஏக்கமோ - தா


* கையப் புடி - மைனா


***************

கடைசியாக..

இந்த வருடமும் கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுபவர்களில் நம் பிரியத்துக்குரிய ஏ.ஆர்.ரகுமானும் இருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துகள் தல..


இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))))

December 13, 2010

காதலைப் பற்றியும் பற்றாமலும்


ஒவ்வொரு முறையும்
காதலித்து தோற்கும்போது

இதுவேயென்

கடைசி
காதலாய்
இருக்க
வேண்டுமென
பிரார்த்தித்துக்
கொள்கிறேன்
காலக்கொடுமைக்கு
என்
பிரார்த்தனைகளும்
தோற்றே
போகின்றன

***************

நீ
நான்

ன்நா

நீ

நான்
நீ
நீ
நான்
எப்படிப்
பார்த்தாலும்
காதலுக்கு

இரண்டு
பேர்
தேவையாய்
இருக்கிறது

***************

நேற்றோருத்தியிடம் இதைத்தான்
சொல்லிக்
கொண்டிருந்தேன்
இன்று
உன்னிடம் இதைச்
சொல்லிக்
கொண்டிருக்கிறேன்
இது தோற்பின்
நாளை
வேறோருவளிடமும்
நான்
இதைச் சொல்லக் கூடும்
காதலிகள்
மாறிக் கொண்டிருக்கிறார்களே
தவிர
மாறாமலே இருக்கிறதென் காதல்

December 9, 2010

ஆழி சூழ் உலகு

தன் முன் நிற்கும் யாருக்குமே தாங்கள் ஒன்றுமேயில்லை என்னும் எண்ணத்தை உண்டாக்கக்கூடியது கடல். வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாத இயற்கையின் பேரற்புதம். சிறு குழந்தையின் தொடுதலென கால்கள் வருடிச் செல்லும் கடல் அழகின் மொத்த உருவம். அதே நேரத்தில் கோபம் கொண்டு பெருவெள்ளமாய் மாறி கண்ணில் தென்படும் அனைத்தையும் விழுங்கி செரிப்பதும் இதே கடல்தான்.

இதுதான் இயல்பென வரையறுக்க முடியாத கடலின் மடியின் வாழும் மீனவர்களும் கடலையொத்த இயல்புகளைக் கொண்டிருப்பதில் வியப்பேதும் இல்லை. கடலை நம்பி வாழும் பரதவர் வாழ்வையும் ஒரு மீனவ கிராமத்தின் வரலாறையும் பதிவு செய்யும் நாவல்தான் ஜோ டி குருஸின் "ஆழி சூழ் உலகு".

ஆமந்துறை (முட்டம் அல்லது உவரி?!) என்னும் ஊர் - அதில் வாழும் மக்களின் கதை என மூன்று தலைமுறைகளைப் பற்றி நாவல் பேசிப்போகிறது. தொம்மந்திரை, சூசை, கோத்ரா, சிலுவை என்று தான் பார்த்த மனிதர்களையும், தன் ஊரின் வாழ்க்கையையும் வரலாற்றுச் சம்பவங்களோடு சற்றே புனைவு கலந்து பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவொரு விஷயத்தையும் மையப்படுத்தாமல் இருக்கும் பின் நவீனத்துவத்தின் கூறுகள் இந்த நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன.

1985 இல் கட்டுமரத்தில் பயணிக்கும் மூன்று பேர் ஒரு சுழலில் சிக்கிக் கொள்வதோடு கதை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து அறுபது வருடங்கள் பின்னோக்கி பயணப்படும் கதை ஆமந்துறை என்னும் மீன்பிடி கிராமத்தின் கதையைச் சொல்கிறது. அம்மக்களின் வாழ்வும் அந்த காலகட்டங்களில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களும் கலந்து (உதா:தனுஷ்கோடியை கடல் கொண்டு போனது) நமக்கொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணக்கிடைக்கின்றன.

இங்கே கதையின் நாயகன் நாயகி என யாருமில்லை. மாறாக பலதரப்பட்ட மனிதர்களும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையுமே நம் பார்வைக்குக் கிடைக்கின்றன. அவர்களின் வாழ்வில் நடக்கும் விஷயங்களை சரி தவறு என பிரிக்கவில்லை என்பதிலும் நல்லவர் கெட்டவர் என யாரையும் வகைப்படுத்தவில்லை என்பதிலுமே இந்த நாவல் ஒரு உச்ச நிலையை அடைகிறது. மனிதர்களைத் தவிரவும் மூன்று முக்கியமான கதாபாத்திரங்களை இந்த நாவல் முன்வைக்கிறது. அவை - கடல், மரணம் மற்றும் காமம்.

கடலை இங்கே காலத்தின் உருவகமாகவும் கொள்ளலாம். காலத்தைப் போலவே கடலும் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் சாட்சியாக நிற்கிறது. பரதவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடலே அவர்களை சாகடிக்கும் கொலைக்கூடமாகவும் இருக்கிறது. இருந்தும் மீனவர்களால் கடலைப் பிரிவதென நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. அவர்களின் ஆரம்பமும் முடிவும் கடலாகத்தான் இருக்கிறது என்பதை நாவல் ஆழமாகப் பதிவு செய்கிறது.

பரதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இன்னொரு விஷயம் மரணம். இயற்கையாகவும், பேரழிவின் வடிவிலும், விபத்தெனவும் மரணம் ஒரு தீரா சாபமென மீனவ மக்களை ஆட்கொள்கிறது. அதைப் போலவே காமமும் ரொம்பத் தீவிரமாக நாவலில் சித்தரிக்கப்படுகிறது. உடலின் வேட்கை ஒரு மிருகமென மனிதர்களை துரத்துகிறது. காமத்துக்கு தன்னையே பலியிடும் மனிதர்கள் சந்திக்கும் குற்றவுண்ர்வையும் எல்லா மனிதர்களுமே வாய்ப்பு கிடைக்காதவரை மட்டுமே யோக்கியர்கள் என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறார் ஜோ டி குருஸ்.

வெகு எளிமையான நடையில் சொல்லப்பட்டு இருக்கும சுவாரசியமான நாவல். ஒரு இனக்குழுவின் வாழ்வியல் இப்படித்தான் இருக்கும் எனத் தெளிவாக விளக்குகிற இந்த புத்தகத்தில் அவர்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்ட மற்ற நுட்பமான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடலின் இயற்கை அமைப்பு, கடலில் வாழும் மீன் வகைகள், அங்கு வீசும் காற்றின் வாகு, கட்டுமரம் செய்யும் முறை, வலை பின்னுதலின் சூட்சுமம் எனப் பல விஷயங்களை நாவல் நுணுக்கமாக சொல்லிப் போகிறது.

இந்த புத்தகத்தில் அரசியல்ரீதியாக குருஸ் சொல்லியிருக்கும் விஷயங்கள் மிக முக்கியமானவை. போலிஸ்காரர்கள் மீன்பிடிக்கும் மக்களை ரவுடிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உதவிகளை கிடைக்க விடாமல் செய்கின்றார்கள். அந்த மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்கும் அதிகாரிகளும் ஒழுங்காக செயல்பட முடியாமல் வெளியூருக்கு தூக்கியடிக்கப்படுகிறார்கள். இன்றைக்கும் இந்த நிலை மாறியிருப்பதாகத் தெரியவில்லை.

கிருஸ்துவ மதம் பரதவர்களிடம் பரப்பட்டது பற்றியும் பங்குத்தந்தைகள் மீதும் வெகு காட்டமான விமர்சனங்களை வைக்கிறார் குருஸ். சேவை மறந்து பெண்கள் பின்னால் சுற்றும் பாதிரிகள், மாற்று மதத்தை சாத்தான்களின் கூடாரம் என கேலி பேசும் அகங்காரம், தங்கள் தேவைகளுக்கென மக்களை பயன்படுத்திக் கொள்ளும் மதத்தின் நேர்மை எனப் பல விஷயங்களை வெகு காட்டமாக உரத்து கேள்வி கேட்பதாலேயே இந்தப் புத்தகம் வெளியான பிறகு ஜோ டி குருஸ் அவரது சொந்த ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலின் பிரச்சினைகள் என்று எதைச் சொல்லலாம்? முதலில் வட்டார மொழி. புத்தகத்தின் பின்னால் அகரமுதலி கொடுக்கப்பட்டிருந்தாலும் நமக்கு சில வார்த்தைகள் இறுதிவரை என்னவென்று புரிபடுவதே இல்லை. தூத்துக்குடித் தமிழை உள்வாங்கிக் கொண்டு நாவலின் உள்நுழையும்வரை சற்றே சிரமம்தான். இரண்டாவதாக தன் வரலாற்று ஞானத்தை பறைசாற்ற குருஸ் கொண்டிருக்கும் முனைப்பு. தான் அறிந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி விட வேண்டுமென்ற ஆவல். எனவே ஒரு சில இடங்களில் கதைக்கு தேவையில்லாத தகவல்கள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

கடைசியாக குருஸ் காமத்தை சொல்லி இருக்கும் விதம். ஒரு இலக்கியப் பிரதியில் காமத்தைப் பற்றிய சித்தரிப்புகள் வரும்போது அது வாசகனுக்கு கிளர்ச்சியை உண்டாக்குமெனில் அங்கே எழுத்தாளன் தோற்றுப் போகிறான். துரதிர்ஷ்டவசமாக ஆழி சூழ் உலகில் அது போலான சம்பவங்கள் நிறையவே உண்டு. டீச்சருக்கும் சூசைக்கும் உண்டாகும் உறவு, ஜஸ்டினிடம் தன்னை இழக்கும் வசந்தா எனப் பல இடங்களில் மலையாளப்பட வாசனை. எதிர்காலத்தில் குருஸ் வெகு கவனமாக இருக்க வேண்டிய இடமிது.

மற்றபடி தன் உடம்பின் மீது எப்போதும் ஊர்ந்து செல்லும் கடலின் உப்புக்காற்றை உணர முடிந்த ஒருவராலேயே இத்தகையதொரு கலைப்படைப்பை எழுத முடியும். இதை குருஸின் முதல் நாவல் என்று நம்புவது கடினமாகவே இருக்கிறது. அதிகமான கதாபாத்திரங்களும் சம்பவங்களும் இருந்தும் எந்தப் பிரச்சினையோ குழப்பமோ இல்லாமல் கதை சொல்லும் பாங்கு ஜோ டி குருஸை ஒரு திறமையான கதைசொல்லியென பறைசாற்றுகின்றன. தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாவல்களில் கண்டிப்பாக ”ஆழி சூழ் உலகு”க்கும் ஓர் இடமுண்டு.

ஆழி சூழ் உலகு
ஜோ டி குருஸ்
தமிழினி வெளியீடு
ரூ.320/-

December 6, 2010

பதிவர்கள் உங்கள் சாய்ஸ் (2)

அன்பின் பதிவுலக நண்பர்களே.. இது உங்கள் அபிமான "பதிவர்கள் உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சி. நான் உங்க பிரியத்துக்குரிய கப்சி ரமா. போன தடவை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்து வெற்றிபெற செய்த உங்க அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்க கொடுத்த தைரியத்துல நம்ம பதிவர்களை கலாய்க்குற இந்த நிகழ்ச்சி தொடருது. வாங்க.. இன்னைக்கு பிரியாணி ஆகப்போற ஆடுங்க யார் யாருன்னு பார்ப்போம்.

மொதல்ல நாம பேசப்போற பதிவர் பதிவுலகின் டெர்ரர் மனிதர். ஜெயமோகனையே அலற விட்டவர். அவர்தான் நம்ம ”ஆல் இன் ஆல் அழகுராஜா” ராம்ஜி யாஹூ.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் ராம்ஜி சார். என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

ராம்ஜி: வணக்கம். உலக இலக்கியத்துக்கும் உள்ளூர் சிட்டுக்குருவி லேகியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்னன்னு விளக்க சொல்லி மச்சி சாருக்கு மெயில் பண்ணிக்கிட்டு இருந்தேன். நடுவுல நீங்க போன் பண்ணிட்டீங்க.

ரமா: பிரதியை எழுதி முடித்த பின் எழுத்தாளன் இறந்து போறான்னு இலக்கியவாதிகள் சொல்றாங்களே.. அது பத்தி என்ன நினைக்கிறீங்க?

ராம்ஜி: மரணம் எல்லாருக்கும் பொதுவானது. நம்ம சிலுக்கு கூட தூக்கு போட்டு செத்துப் போனாங்க. அதைப் பத்தி இவங்க யாரும் ஏன் பேச மாட்டேன்னு சொல்றாங்க?

ரமா: எப்படி சார் உங்களால மட்டும் இத்தனை விசயங்ளைப் பத்தி தெரிஞ்சு வச்சுக்க முடியுது?

ராம்ஜி: எல்லாம் நாம பாக்குற பார்வை தாங்க. நந்தலாலாவோ நாயர் கடை டீயோ.. நம்ம அறிவு தாகத்துக்கு ரெண்டு சொட்டு லிம்கா கிடைக்குதான்னு பார்க்கணும். இதைத்தானே இன்னைக்கு வைரமுத்துவும் அன்னைக்கே பூக்கோவெஸ்கியும் சொல்லிட்டுப் போயிருக்காங்க..

ரமா: ஆகா ஆகா.. புல்லரிக்குதுங்க. அப்புறம் ஒரு சந்தேகம். உங்க கணினியோட திரையில மட்டும் இருபது சானல் வரதாகவும், அதுல உலகின் அத்தனை செய்திகளும் வரதா பதிவுலகுல பேசிக்கிறாங்களே?

ராம்ஜி: எல்லாம் புரளிங்க. வயித்தெரிச்சல். உண்மையில வெறும் பதினாறு சானல் தாங்க வருது..:-(

ரமா: அடங்கப்பா.. முடியலடா சாமி.

ராம்ஜி: சாமிங்கிறது விக்ரம் நடிச்ச படம். அதுல திரிஷா ஒரு பாட்டுக்கு போட்டுக்கிட்டு வர்ற டிரஸ் கூட 1953இல் வெளிவந்த இசபெல்லா கோஸ்டாங்கிற கொலம்பியா படத்துல ஒரு அம்மணச் சாமியார் போட்டிருந்த டிரஸ்ஸோட காப்பிங்க.

ரமா: கிழிஞ்சது போங்க.. அய்யா இதுக்கு மேல எனக்குத் தாங்காது. உங்களுக்கான பாட்டு வருது கேளுங்க..

எவண்டா நம் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே.. தலை எகிறிப்போகும் அங்கே..

பேஸ்தடிச்சுப் போயிருக்கும் நேயர்கள் எல்லாரும் மறுபடியும் ஆட்டைய கவனிங்க. அடுத்து நாம பாக்கப் போறது ஒரு பிரபல பெண் பதிவர். பதிவர்னு சொல்றதை விட பிரபல பஸ்ஸர்னு சொல்லலாம்.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் மயில் விஜி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

விஜி: வணக்கங்.. கதைப்போட்டிக்கு நான் எழுதுன கதைய படிச்சதுக்கு அப்புறமா பரிசல்காரன் பதிவுல எழுதுறதையே நிப்பாட்டிட்டாருங்க.. அதனால.. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்கிற மாதிரி.. மறுபடியும் அவருக்காக ஒரு கதை எழுதிக்கிட்டு இருக்கேங்க. படிச்சா அவருக்கு தெளிஞ்சுருங்க.

ரமா: ஐய்யய்யோ.. இன்னொரு கதையா? பரிசல் செத்தார். அப்புறம் விஜி.. பதிவுலகம் எப்படி இருக்கு? என்ன விசேஷம்?

விஜி: காபா ப்ரித்திக்கு க்யாரண்டி இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருக்கார். ஆதவன் அலமேலுவா இல்ல சேட்டனா இல்ல ஆதம்பாக்கம் அன்னலட்சுமியா இல்ல புலிக்குட்டியான்னு அலைபாயுறார். அப்புறம்..

ரமா: ஆத்தாடி. போதும் சாமி. உங்களப் பத்தி சொல்ல ஏதுமில்லையா?

விஜி: ஏன் இல்ல? இதோ சொல்றேன். நான் ஒரு அப்பாவி.

(அடிப்பாவி என யாரோ பின்னாடி இருந்து புலம்பும் சத்தமும் டொமீல் என ஏதோ கட்டையால் சாத்தும் சத்தமும் கேட்கிறது..)

விஜி: அப்புறம் ரமா வேற என்ன கேக்கணும்?

ரமா: ஹி ஹி ஹி. வேற ஒண்ணுமே இல்லைங்க. இப்போ அடி வாங்குன ஜீவனுக்காக ஒரு பாட்டு வந்துக்கிட்டே இருக்குங்கோவ்..

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.. இதில் நீயென்ன.. ஞானப்பெண்ணே..

அடுத்து நாம பாக்கப்போறது ஒரு மூத்த பதிவர். மதுரை தந்த தங்கம், தன்மானச் சிங்கம், அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சீனா அய்யா அவர்கள்.

டிரிங் டிரிங்..

ரமா: அய்யா.. வணக்கம்.

சீனா: வணக்கம்.. சொல்லுங்கோ.

ரமா: எங்க நிகழ்ச்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?

சீனா: அருமை - பதிவர்கள் உரையாடல் - சகட்டு மேனிக்கு கலாய்த்தல் - உலகத்தரமான கேள்விகள் - அற்புதமான தொகுப்பாளினி - வாழ்த்துகள்.

ரமா: (ஆகா.. பின்னூட்டம் போடுற மாதிரியே பேசறாரே..)

சீனா: ரமா.. கேக்க மறந்துட்டேன்.. அப்புறம் எப்போ வலைச்சரம் எழுதுறீங்க?

ரமா: அய்யா.. நான் பதிவர் இல்லைங்க..

சீனா: அட ஆமாம்ல.. எல்லார்கிட்டயும் இதைக் கேட்டு பழகிப்போச்சு..

ரமா: அய்யா சமீபமாத்தான் உங்களுக்கு மணிவிழா நடந்ததா கேள்விப்பட்டோம். உங்களுக்கும் செல்விஷங்கர் அம்மாவுக்கும் இந்த நேரத்துல வாழ்த்து சொல்றதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுக்கான பாட்டு வந்துக்கிட்டே இருக்கு.. கேட்டு என்ஜாய் பண்ணுங்க..

நல்லதொரு குடும்பம்.. பல்கலைக்கழகம்..

அடுத்ததா நாம பாக்கப் போரது ஒரு சேட்டைக்காரப் பதிவர். மொக்கை போடுறதுல சூரர். வாங்க அவர் யாருன்னு பார்க்கலாம்.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் மேவி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

டம்பி மேவி: ரொம்ப கஷ்டமான வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். அதாவது.. சும்மா இருக்கேன்.

ரமா: சார்...

டம்பி மேவி: சாருவா? எனக்கு அவரைத் தெரியாதே.. பீருன்னு ஒருத்தர் பழவந்தாங்கல்ல பலசரக்கு கடை வச்சிருக்கார். அவரை மட்டும்தான் தெரியும்.

ரமா: சுத்தம். நீங்க ஒரு பெரிய வாசகர். உலக இலக்கியத்த எல்லாம் கரச்சுக் குடிச்சவர்னு சொன்னாங்களே.. தஸ்தாவெஸ்கிய படிச்சிருக்கீங்களா?

டம்பி மேவி: என்னது.. தாத்தா கைல விஸ்கியா?

ரமா: அவ்வ்வ்வ்வ்.. ரமா.. இது உனக்குத் தேவையா?

டம்பி மேவி: இங்க எல்லாமே எல்லாருக்கும் தேவைதான் பாஸ். இப்படித்தான் ஒரு இங்க்மெர் பெர்க்மென் படத்துல...

ரமா: படத்துல?

டம்பி மேவி: யாருக்குத் தெரியும்? சும்மா வாயில வந்தத சொன்னேன்.

ரமா: அய்யோ.. எனக்குத் தலையே வெடிச்சிடும் போலயிருக்கு..

டம்பி மேவி: நான் வேணும்னா ஏதாவது பாட்டு பாடட்டுமா? பாடியே தலைவலியை போக்க முடியும்னு அபிதான சிந்தாமணில சொல்லியிருக்காங்க.. ஏழாம் நூற்றாண்டுல சமண முனிவர்கள் கூட..

ரமா: யோவ்.. இதுக்கு மேல ஏதாவது பேசுன உந்தலையில கல்லைத் தூக்கிப் போட்டுருவேன். பாட்டு போடுறேன்.. கேட்டுட்டு ஓடிப் போயிரு..

டம்பி மேவி: ஹே ஹே ஹே.. நீ என்னம்மா எனக்கு பாட்டு போடுறது? இப்போ நான் உனக்கு பாட்டு போடுறேன் பாரு..

சுட்டி சுட்டி உன் வாலக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளுடி..

ரமா: (ஆகா.. இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்ல போல இருக்கே.. நமக்கே பாட்டு போடுறாய்ங்களே.. எஸ்ஸாகிற வேண்டியதுதான்..)

ஆகவே நேயர்களே.. இந்த பதிவர்கள் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி இத்தோடு முடிகிறது. மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் வேறு சில பிரபல பதிவர்களோடு உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து வடைபெறுவது.. உங்கள் அன்புத் தொகுப்பாளினி கப்ஸி ரமா. பை பை.

December 4, 2010

பாபா சாகேப் அம்பேத்கர்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர். சாதிப் பிரச்சினைகளின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இவருடைய சிலைகளுக்கு இரும்புவேலி அமைத்திருப்பார்கள். இதற்கு மேல் அம்பேத்கரைப் பற்றி எதுவும் தெரியாமலே வளர்ந்திருக்கும் என்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு, அந்த மக்கள் தலைவனின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்". கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த இந்தப்படம் வெளியானதில் .மு.. நண்பர்களுக்கும் இயக்குனர் லெனினுக்கும் பெரும்பங்கிருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு என் நன்றிகள்.

அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்போக்காகவும், அவருடைய அரசியல் வாழ்க்கையை வெகு தீவிரமாகவும் இந்தப்படம் பதிவு செய்கிறது. சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் சாதிரீதியாகவும் இனரீதியாகவும் அம்பேத்கர் சந்தித்த பிரச்சினைகள், சாதீய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், அரசியலில் காங்கிரசுக்கு எதிரான நிலை, காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த தீவிர கருத்து மோதல்கள் என நிறைய விஷயங்களைப் படமாக்கி இருக்கிறார்கள்.



அம்பேத்கர் ஆசிரியராக பணிபுரியும் கல்லூரியில் மற்ற ஆசிரியர்கள் தாங்களும் அவரும் ஒரே பானையில் தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதை எதிர்க்கிறார்கள். மாணவர்களோ ஒரு தீண்டத்தகாதவன் எப்படி ஆங்கிலத்தில் தங்களுக்குப் பாடம் நடத்த முடியும் என கேலி செய்கிறார்கள். வெளிநாட்டில் படிக்கும்போது இந்தியன் நாயினும் கீழானவன் என அசிங்கப்படுத்தப்படுகிறார். அத்தனையும் மீறி தன்னுடைய மேல்படிப்பை வெற்றிகரமாக முடித்து பாரிஸ்டர் பட்டம் பெறுகிறார் அம்பேத்கர்.

சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக விடுதலை என்பது கிடைக்காமல் இந்திய விடுதலை என்பது சாத்திமில்லை என நம்புகிறார் அம்பேத்கர். பம்பாய் மேலவையின் ஒரு அங்கத்தினராக பதவி ஏற்றுக் கொள்கிறார். தீண்டத்தகாதவர்களின் ஆலயப் பிரவேசத்தை ஆரம்பித்து வைக்கிறார். ஊர் பொதுக்குளத்தில் அவர்களுக்கும் தண்ணீர் குடிக்க உரிமை வேண்டும் எனப் போராடுகிறார். உயர் சாதி ஹிந்துக்களின் தீவிர எதிர்ப்பை சம்பாதிக்கிறார். சாதிப் பிரிவினை அவசியம் என்பதை ஆதரிக்கும் காங்கிரசின் கொள்கைகள் அவருக்கு எரிச்சலூட்டுகின்றன.

காந்தி எதிர்க்கும் சைமன் கமிஷனில் ஆஜராகி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத் தேவைகள் பற்றி அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம் எனத் தீவிரமாக வாதாடுகிறார். ஆனால் அம்பேத்கரின் கருத்துகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருக்க அம்பேத்கர் விட்டுக் கொடுக்க நேர்கிறது.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பை நேரு அரசு அம்பேத்கரிடம் தருகிறது. ஆனால் அம்பேத்கர் பரிந்துரைக்கும் இந்து மசோதா ஜாதி இந்துக்களின் எதிர்ப்பால் கைவிடப்படுகிறது. கோபம் கொள்ளும் அம்பேத்கர் தன்னுடைய பதிவியைத் துறக்கிறார். இந்துவாக இறக்க மாட்டேன் எனச் சொல்லும் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவுகிறார. அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவருடைய மரணம் நிகழ்ந்து எனும் குறிப்போடு படம் முடிகிறது.

தமிழில் வசனம் எழுதி இருப்பது யார் எனத் தெரியவில்லை. அம்பேத்கர் பேசுவதில் நிறையவே கூர்மையான வசனங்கள்.

"நமக்கு ஆலயப்பிரவேசத்தை விட அரசியல் அங்கீகாரம்தான் முக்கியம்.."

"மகாத்மாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சாதாரண மனிதன் எப்படி கண்டு கொள்ள முடியும்.."

"ஹிந்துக்கள் மனம் திருந்துவார்கள் என்று சொல்கிறீர்களே.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு சங்கராச்சாரியாரின் இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர வைத்து மற்றவர்களை அவர் காலில் விழ வைக்க உங்களால் முடியுமா?"

"மற்றவர்கள் உங்களை மதிப்பது இருக்கட்டும்.. முதலில் நீங்கள் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்.."

ஒரு சில இடங்களில் பேச்சுத் தமிழும் மற்ற இடங்களில் எழுத்துத் தமிழும் பேசுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதிலும் வெள்ளையர்கள் இழுத்து இழுத்து தமிழ் பேசுவது போல மொழிபெயர்த்திருப்பது தேவையற்றது.


மகாத்மா என நாம் கொண்டாடும் காந்தியின் மீது மிகத் தீவிரமான விமர்சனங்களை இந்தப்படம் முன்வைக்கிறது. மத ரீதியான காந்தியின் கொள்கைகள் அவரைக் கிட்டத்தட்ட ஒரு வில்லனாகவே காட்டுகின்றன. அம்பேத்கரின் கொள்கைகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அம்பேத்கர் தன்னுடைய கொள்கைகளை தளர்த்திக் கொள்ள வேண்டும் என அனைவரும் வற்புறுத்துகின்றனர். வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டு காந்தியை சந்திக்கும் அம்பேத்கர் சொல்கிறார்."அடிக்கடி தேவைப்படும் போதெல்லாம் உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டாம்.." காந்தியின் புனித பிம்பத்தை ஒற்றை நொடியில் இந்த வசனங்கள் சிதைத்துப் போகின்றன.

பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர்கள் தனி வாழ்க்கையில் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதற்கு அம்பேத்கரும் விதிவிலக்கில்லை என்பதை அவருடைய அண்ணனுக்கும் அவருக்கும் நடக்கும் பிரச்சினைன் மூலம் புரிய வைக்கிறார் இயக்குனர். சிறுவயதில் இறந்து போகும் பிள்ளைகள், கடைசி வரை அம்பேத்கரின் நல்லதையே யோசித்த மனைவி ரமாபாய், இறுதிக் காலத்தில் தன்னை கவனித்துக் கொள்வதற்காக அவர் மணந்து கொள்ளும் டாக்டர் சவிதா (இந்த இடத்தில் எனக்கு பெரியாரின் ஞாபகம் வந்தது) என அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கையின் சில பகுதிகள் நமக்கு அறியக் கிடைக்கின்றன.

சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதுகளை இந்தப்படம் வென்றிருக்கிறது. அம்பேத்காரைப் பற்றி அதிகம் தெரிந்திராத காரணத்தால் இந்தப்படம் எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. இரண்டாம் பாதியின் நீளம் மட்டுமே கொஞ்சம் இடைஞ்சல். மம்முட்டியின் கேரியரில் இது முக்கியமான படம். கண்ணியம் மற்றும் மிடுக்கான உடல்மொழியுடன் கூடிய வெகு அழுத்தமான நடிப்பு. தலை வழுக்கையுடன் வரும் கடைசி ஒப்பனை மட்டும் அவருக்குப் பொருந்தவில்லை. மனைவி ரமாபாயாக சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார். டாக்டர் சவிதாவாக நடித்திருக்கும் பெண் யாரென்று தெரியவில்லை. வெகு லட்சணம். காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத் என முகச்சாயல் பொருந்திப்போகும் நடிகர்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பது படத்துக்கான நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

மதுரை அலங்கார் தியேட்டரில் இந்தப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இது அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய படம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராருக்கான படம் என்பதைப் போல முன்னிறுத்தப்படுவது சோகமான விஷயம். நான் போனபோது ஒரு சாதிப் பேரவையின் சார்பாக அம்பேத்கர் படத்துக்கு மாலை மரியாதை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இன்னொரு குழுவுக்கும் அம்பேத்கர் எங்களவர் என்று சண்டை வேறு வந்ததுதான் பெரிய கொடுமை. எந்த நிலையை மாற்ற வேண்டி அம்பேத்கர் போராடினாரோ, அதில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படியான மாற்றங்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். சாதி மத பேதமற்ற பாரதம், அனைவருக்கும் சம உரிமை என்று கனவு கண்ட அந்த மனிதரின் ஆசைகள் என்றுதான் நிறைவேறக் கூடுமெனத் தெரியவில்லை.