March 15, 2011

எல் தோப்போ (1970)

"எல் தோப்போ (எலி) நிலத்தினடியே தோண்டியபடி செல்லும் ஒரு விலங்கு. சில நேரங்களில் அது சூரியனைத் தேடி பூமியின் மேல்புறத்துக்கு வரும். அப்படி சூரியனைப் பார்க்கும்போது அதன் கண்கள் குருடாகி விடுகின்றன.."

சினிமா : அலைந்து திரிபவனின அழகியல் என்கிற சாருவின் புத்தகத்தில்தான் முதன்முறையாக அந்தப் பெயர் என் கண்ணில் பட்டது - அலெஹாந்த்ரோ ஹொடரோவெஸ்கி. தன் வாழ்நாளில் வெறும் நான்கே படங்களை இயக்கி இருக்கிறார். அப்போது, ஏதோ புதிதாக முயற்சி செய்தவர் என்ற வகையில், அவரை எளிதாகத் தாண்டிப் போய் விட்டேன். சில நாட்களுக்குப் பின் உலகில் வெளியான பயங்கர வன்முறை நிறைந்த படங்கள் வரிசையில் “எல் தோப்போ” என்கிற அவருடைய படத்தைப் பார்த்தபோது லேசாக பொறிதட்டியது. படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தபின் எனக்கு உண்டான உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதிகமாக வசதிகள் இல்லாத எழுபதுகளிலேயே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார் எனில் அந்த மனிதர் ஒரு மாபெரும் கலைஞனாகவே இருக்க முடியும். அவரோடு இணைந்து பணிபுரிந்த ஃபெர்னாண்டோ அர்ரபாலின் வார்த்தைகளில் சொல்வதானால் “ஹொடரோவெஸ்கி ஒரு தெய்வீகப் பைத்தியக்காரன்”.



அகண்ட பாலைவனம். கறுப்பு நிற உடையணிந்து எல் தோப்போவும் நிர்வாணமான அவனுடைய ஏழு வயது மகனும் கறுப்புக் குதிரையில் வருகிறார்கள். அவன் தன் மகனிடம் சொல்கிறான். “இன்று உனக்கு ஏழு வயது முடிவதால் இனி நீ ஒரு ஆண்மகன். அதன் அடையாளமாக உன் முதல் பொம்மையையும் தாயின் புகைப்படத்தையும் பாலை மணலில் புதைக்க வேண்டும்..”. பிறகு தோப்போவும் அவன் மகனும் அருகிலிருக்கும் ஒரு நகரத்துக்கு வருகிறார்கள். ஊரெங்கும் பிணக்கோலம். தேவாலயத்தின் உள்ளே ஆண்கள் தூக்கில் தொங்குகிறார்கள். பெண்களும் தப்பவில்லை. விலங்குகள் இறந்து கிடக்க வீதியில் எங்கும் ரத்தவெள்ளம். குற்றுயிரும் குலையிருமாக இருக்கும் ஒருவனை தன் மகனின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து சுடச்சொல்லி அந்தத் துயரிலிருந்து விடுவிக்கிறான் தோப்போ.

தன்னை வழிமறிக்கும் மூன்று போக்கிரிகளிடமிருந்து இந்தப் பாவங்களை செய்தவன் கர்னல் என்பவனும் அவனுடைய ஐந்து ஆட்களும் என அறிந்து கொள்கிறான் எல் தோப்போ. கொடூரமான கர்னலைத் தேடிச்சென்று அவன் ஆண்குறியை வெட்டி விடுகிறான். வெட்கம் தாளாமல் கர்னல் தற்கொலை செய்து கொள்ள அவனோடு இருக்கும் பெண் தோப்போவுடன் சேர்ந்து கொள்கிறாள். குதிரையில் இருவர் மட்டுமே போகமுடியும் என்பதால் தன் மகனை அங்கிருக்கும் குருமார்களிடம் விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்கிறான். தன் மீதான காதலை நிரூபிக்க வேண்டுமானால் பாலைவனத்தில் இருக்கும் நான்கு துப்பாக்கி சாகசக்காரர்களை வெல்ல வேண்டும் எனச் சொல்கிறாள் அந்தப்பெண். அவர்கள் நால்வருமே விதவிதமான தத்துவங்களை தோப்போவுக்குச் சொல்கிறார்கள். இருந்தும் நால்வரையுமே சூதின் மூலம் வீழ்த்துகிறான் தோப்போ. ஆனால் அந்தப் பெண்ணோ தன் காதலியான இன்னொரு பெண்ணோடு சேர்ந்து கொண்டு தோப்போவை சுட்டு வீழ்த்துகிறாள். இறந்து கிடக்கும் அவன் சடலத்தை ஒரு குள்ளர்கள் கூட்டம் இழுத்துக்கொண்டு போகிறது.

இருபது வருடங்களுக்குப் பிறகு தோப்போ ஒரு இருட்டு குகையில் கண்விழிக்கிறான். உடல் ஊனமுற்றவர்களும் குள்ளர்களும் நிறைந்த அந்தக் குகையில் இருந்து தங்களைக் காக்க வந்த தேவதூதனாக அவன் நம்பப்படுகிறான். சுரங்கம் அமைத்து அந்த மக்களை குகையை விட்டு வெளியே அழைத்துப் போவதாக சத்தியம் செய்கிறான் தோப்போ. சுரங்கம் தோண்ட வேண்டி தன் மீது அன்பு செலுத்தும் ஒரு குள்ளப்பெண்ணோடு இணைந்து பக்கத்து ஊரில் வித்தைகள் செய்து காட்டி பணம் சம்பாதிக்க முயலுகிறான். அந்த நகரமோ மோசமான மனிதர்களால் நிறைந்து இருக்கிறது. பொய்யான மத நம்பிக்கைகளில் வாழும் அம்மக்களை மீட்க வரும் பாதிரி எல் தோப்போவின் மகன். தன் தந்தையை அடையாளம் கண்டுகொள்ளும் அவன் நடுவிழியில் இரக்கமின்றி தன்னை விட்டுப்போன தோப்போவைக் கொல்லத் துடிக்கிறான். இருந்தும் குள்ள மக்களுக்காக தோப்போ உழைப்பதை அறிந்து கொண்டு அவனுக்கு கொஞ்சம் அவகாசம் தருகிறான்.

ஒருவழியாக தோப்போ சுரங்கத்தை கட்டி முடிக்கிறான். பொறுமையில்லாத குள்ள மக்கள் வெளியுலகம் காண அவனுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் நகருக்குள் நுழைகிறார்கள். வேற்று ஆட்களை விரும்பாத உள்ளூர் மக்கள் ஒருவர் பாக்கியில்லாமல் குள்ளர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். கோபம் கொள்ளும் தோப்போ தன் மாய சக்தியின் உதவியோடு நகரத்தில் இருக்கும் எல்லாரையும் கொன்று விட்டு தன்னையும் எரியூட்டிக் கொள்கிறான். படத்தின் கடைசி காட்சியிலும் ஒரு (வெள்ளை) குதிரை வருகிறது. இப்போது தோப்போவின் மகன் கறுப்பு உடை அணிந்து குதிரையை ஓட்டி வருகிறான். அவனுக்குப் பின்னால் தோப்போவை விரும்பிய குள்ளப்பெண்ணும், அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் இருக்கின்றன. பயணம் தொடர்கிறது.

மதங்கள் சார்ந்து விவாதிப்பதும் குறியீடுகளின் பயன்பாடும் ஹொடரோவெஸ்கியின் படங்கள் அளவுக்கு வேறு யார் படங்களிலும் பயன்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவிதமான நாடகத்தன்மையும், ஆண் குரலில் பேசும் பெண், மொட்டைப்பாறையில் ஊற்றெடுக்கும் நீர், பாலைமணலின் அடியில் கிடைக்கும் முட்டைகள், பறவைகளைப்போல கிறீச்சிடும் பெண்கள் என சர்ரியலிச காட்சியமைப்புகளும் படம் முழுக்க நிரவிக் கிடக்கின்றன. படம் எடுப்பதில் தனக்கென ஒரு வழிமுறையை பயன்படுத்தி இருக்கிறார் ஹொடரோவெஸ்கி. அவர் படத்தில் நடிக்கும் யாரும் தொழில்முறை நடிகர்கள் கிடையாது. பயணத்தின்போது தான் சந்திக்கும் மனிதர்களையும், வித்தியாசமான உடலமைப்பு கொண்டவர்களையும் நடிக்க வைத்திருக்கிறார். படத்தில் வரக்கூடிய ஒரு வன்புணர்ச்சிக் காட்சியில் உண்மையாகவே தான் நாயகியை வற்புறுத்திப் புணர்ந்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதேபோல படத்தில் செத்துக் கிடக்கும் மிருகங்கள் எல்லாம் உண்மையானவையே.

தத்துவம் சார்ந்து பேசுவதற்கான பல இடங்களும் குறியீடுகளும் படத்தில் உள்ளன. குறிப்பாக நான்கு சாகசக்காரர்களையும் தோப்போ எதிர்கொள்ளும் இடங்கள் மிக முக்கியமானவை. முதல் மனிதன் கண்பார்வையற்றவன். இருந்தும் தன் புலன்களை கட்டுப்படுத்தத் தெரிந்தவன். “எனக்கு பயம் என்பதே கிடையாது. நான் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மாறாக அவை என்னை கடந்து போக அனுமதிக்கிறேன். இதற்குப் பிறகும் நீ என்னோடு மோத விரும்பினால் உனக்கு தோல்விதான். இவ்வுலகிம் மரணம் என ஒன்று இல்லவே இல்லை”. தான் அவனோடு போட்டி போட்டு வெல்ல முடியாது எனத் தெரிந்து கொண்டு எல்தோப்போ ஒரு குழிக்குள் அப்பார்வையில்லா மனிதனை விழச்செய்து பயத்தை உண்டாக்கி அவ்வேளையில் சுட்டுக் கொல்கிறான்.

இரண்டாம் சாகசக்காரன் தன் தாயின் மீது பெரும் அன்பு கொண்டவன். வெகு எளிதாக அவன் தோப்போவை தோற்கடிக்கிறான். "நீ உன்னை அறிந்து கொள்வதற்காக மட்டுமே துப்பாகியைக் கையாளுகிறாய். உண்மையில் உன்னைத் தொலைக்கும்போதுதான் நீ முழுமையடைய முடியும். அதற்கு பிறர் மீது அன்பு செலுத்த வேண்டும். ஆனால் பேராசைக்காரனான உன்னால் அது முடியாது. நீ எதையாவது கொடுப்பதாக நம்பும்போது உண்மையில் எடுக்கவே செய்கிறாய்.” அவனுடைய தாயின் நடைபாதையில் கண்ணடித்தூளைக் கொட்டி அவள் காயம்பட்டு அலறும் வேளையில் என்னவென்று பார்க்கும் சாகசக்காரனை வஞ்சகமாகக் கொல்கிறான் தோப்போ. மூன்றாமவன் இசைக்கலைஞன். முயல்களோடு வசித்து வருபவன். தோப்போ ஊதும் குழலோசை கொண்டே அவனை இனம் கண்டுகொள்கிறான். இருவரும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அவன் இதயத்துக்குத்தான் குறிவைப்பான் என்பதை அறிந்து வைத்திருக்கும் தோப்போ தன் உடையின் உள்ளே ஒரு உலோகத்தை ஒளித்து வைத்து தப்பித்து எதிரியைக் கொல்கிறான். “அளவுக்கு அதிகமான கவனமும் குற்றமே..”

கடைசி சாகசக்காரன் வயதானவன். தன்னுடைய துப்பாக்கியை பட்டாம்பூச்சி பிடிக்கும் வலையாக மாற்றிக்கொண்டு விட்டவன். தோப்போவின் தோட்டாக்களை வலையால் அவன் மீதே திருப்பி அடிக்கிறான். அவனைத் தன்னால் வெல்லவே முடியாதென நொந்து போகிறான் தோப்போ. “நீ ஏன் இப்படி இருக்கிறாய். என்னிடம் எதுவுமில்லை. நீ வஞ்சகம் செய்தாலும் என்னிடம் ஒன்றுமில்லை. நான் போட்டியே போடாதபோது நீ எப்படி ஜெயிக்கவோ தோற்கவோ முடியும்?” “இல்லை உங்களிடம் உயிர் இருக்கிறதே..” உடனே கிழவன் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொள்கிறான். “இப்போது என்னிடம் உயிரும் இல்லை. நீ தோற்று விட்டாய்.”

தோப்போ முதல் முறையாக தன் தவறுகளை உணருகிறான். தான் கொன்றவர்களைத் தேடிப்போகிறான். அங்கே முதல் சாகசக்காரனின் பிணத்தின் மீது தேனீக்கள் கூடு கட்டி இருக்கின்றன. அப்போது அம்மனிதன் வாழும் எண்கோண வடிவக் கிணற்றின் சுவரில் சிலுவையில் அறையப்பட்ட ஆடொன்று இருக்கிறது. இது நேரடியாக விவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. கடைசி காட்சியில் தோப்போ தீ வைத்துக் கொண்டு இறந்தபின்னும் அவனுடைய எலும்புகளின்மீது தேனீக்கள் மொய்த்துக்கொண்டு இருக்கும். எந்தப்பெண்ணுக்காக தோப்போ எல்லாவற்றையும் செய்தானோ அவளே அவனை சுட்டு விடுகிறாள். ஒரு பாலத்தின் மீது நடந்து வரும் தோப்போவை அவள் சரியாக கைகளிலும் கால்களிலும் ஆணி அறைந்ததுபோல சுடுவது கிருஸ்துவைக் குறிப்பது, பின்னால் ஒலிக்கும் வேத வசனங்கள் எனப் பல குறியீடுகள் படத்தில் உண்டு.

பதிவின் ஆரம்பத்தில் எலி பற்றி சொல்வது மனிதனையே குறிப்பதாக நம்புகிறேன். தான் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டி அனைவருமே அலைகிறோம். ஆனால் உண்மை தெரியவரும்போது தொலைந்து போனவர்களாக இருக்கிறோம். கர்னலிடம் சண்டை போடும்போது அவன் தோப்போவிடம் கேட்பான். “நீதியை நிலைநாட்ட நீ யார்?” அதற்கு தோப்போவின் பதில் “நான் கடவுள்..” நம்பிக்கையின் உச்சமான அதுதான் ஹொடரோவெஸ்கி.

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் (சாரு நிவேதிதா)
விக்கிப்பீடியா

எல்தோப்போ பற்றிய ஹொடரோவெஸ்கியின் பேட்டியை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.

13 comments:

Sriakila said...

பதிவு நீளம்...படித்துவிட்டு வருகிறேன்..

VELU.G said...

நல்ல விமர்சனம்

காட்சிகளை தெளிவாய் விளக்கியது புரியும்படி இருந்தது

தருமி said...

’நோட்ஸ்’களுடன் படம் பார்ப்பது ஒரு தேவையாகி விடுகிறது இது போன்ற படங்களுக்கு ......... பார்த்திருவோம்!

IMACHETTINAD said...

மதுரை மைந்தனுக்கு வாழ்த்துகள்!

IMACHETTINAD said...

அசட்த்துங்க மாப்பிள்ளை!!

IMACHETTINAD said...

நான் யார் தெரியுதா?

சமுத்ரா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

கா. பா. அவர்களே... விமர்சனம் அருமை. படத்தை எப்போ பார்க்கலாம்?


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

Prabashkaran Welcomes said...

விமர்சனம் என்பது தனி கலை அது தங்களுக்கு நன்கு வருகிறது வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

IAMCHETTINAD

தேவா சார்.. புது ஐடி.. நடத்துங்க..:-))

Jerry Eshananda said...

நட்சத்திர வாழ்த்துகள் கார்த்தி.

மதுரை சரவணன் said...

kaarththi arumaiyaana vimarsanam...vaalththukkal

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

தமிழ்ப் பட விமர்சனம் எழுதுவதே சிரமம். இது வேற்று மொழிப் படத்தின் அருமையான விமர்சனம். பார்த்துப் புரிந்து கொண்டு புரிய வைப்பது சிரமமாம செயல். இங்கும் கா.பா தனித்து நிற்கிறார். வாழ்க ! நட்புடன் சீனா