March 14, 2011

தன்னை தொலைத்தவர்கள்

பெருந்துறையில் வேலை பார்த்த சமயம். தானாக முகச்சவரம் செய்து கொள்ளத் தெரியாது என்பதால் கடையில் போய் செய்துதான் பழக்கம். அந்த ஞாயிற்றுக்கிழமை நான் வழக்கமாகப் போகும் கடை பூட்டி இருந்ததால் ஊருக்கு சற்று தள்ளி இருந்த ஒரு கடையைத் தேடிக் கண்டுபிடித்தேன்.

மொத்தம் மூன்று நாற்காலிகள். ஒரு நடுத்தர வயதுக்காரரும் ஒரு சிறுவனும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காலியாக இருந்த நாற்காலிக்கு அருகே சற்று வயதான ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். நான் அங்கே போய் அமரலாம் என்றபோது நடுத்தர வயதுக்காரர் தடுத்தார்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. நான் முடிச்சுட்டு வந்துடுறேன்.."

நான் பெரியவரைப் பார்த்தேன். அவர் எந்த சலனமும் இல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். நான் கொஞ்ச நேரம் பொறுத்து நடுத்தர வயது மனிதரின் நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

சிறிது நேரங்கழித்து வயதான குடியானவர் ஒருவர் சவரம் செய்து கொள்ள வந்து பெரியவரின் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். இப்போது கடைக்காரர் எதுவும் சொல்லவில்லை. பெரியவரும் முகத்தில் சின்ன மகிழ்ச்சியோடு வேலையை ஆரம்பித்து இருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து மெலிதான குரலில் யாரோ பாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அது எந்த சினிமா பாட்டாகவும் அல்லாமல் தெருக்கூத்துப் பாடல் போல இருந்தது. அந்தக் கடையில் டேப் ரெக்கார்டர் எதுவும் இல்லை என்பதால் நான் யாரென மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன்.

பெரியவர் ரொம்ப சந்தோஷமாக பாடியபடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதை அமர்ந்து இருந்த குடியானவரும் ரசித்துக் கேட்டபடி இருந்தார். நான் பார்ப்பதைப் பார்த்து விட்டு கடைக்காரர் சட்டெனக் கத்தினார்.

"வாய மூடிக்கிட்டு வேல பாக்க மாட்டீங்களா? உங்களோட இதே ரோதனையாப் போச்சு?"

நல்ல வெளிச்சமாக இருந்த இடம் சட்டென தடம் தெரியாமல் இருண்டு போனதைப்போல பெரியவரின் பாட்டு நின்று போனது.

"இல்ல.. பரவாயில்ல.. அவர் பாட்டு நல்லாத்தான் இருந்துச்சு.. எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.."

பெரிவர் மெதுவாக என்னைப் பார்த்தார். அவர் கண்களில் ஒரு சின்ன நன்றி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் பாடவில்லை. சவரம் முடித்து நான் எழுந்தபோது பெரியவரும் வேலை முடித்து இருந்தார்.

"என் கூட ஒரு டீ சாப்பிட வர்றீங்களா?"

பெரியவர் கடைக்காரரைப் பார்த்தார்.

"அதான் சார் கூப்பிடுறார்ல.. போயிட்டு வாங்க.."

அருகில் இருந்த கடையில் போய் நின்றோம்.

“நீங்க பாடுனது என்ன பாட்டு? ரொம்ப நல்லா இருந்துச்சுங்க அய்யா..”

“நெசமாவா சொல்றீங்க.. கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்குப் பொறவு ஒரு டவுன் மனுஷனுக்கு என் பாட்டு பிடிச்சிருக்குங்கிறத இப்போத்தான் கேக்குறேன் தம்பி.. ரொம்ப நன்றி..”

“உங்களுக்கு இதுதான் தொழிலா இல்ல..”

“என்ன தம்பி இப்படிக் கேட்டுப்புட்டீங்க..” சொல்லும்போது அவர் நெஞ்சு நிமிர்ந்து கொண்டது. “பரம்பரை பரம்பரையா கூத்து கட்டுற குடும்பம் தம்பி. சொந்த ஊரு விழுப்புரம் பக்கம். அந்தப்பக்கம் நான் கூத்து கட்டாத ஊரே கிடையாது. ஹ்ம்ம்.. அது ஒரு காலம். டிவி, சினிமா, டான்ஸ்னு வந்தபொறவு எங்க பொழப்பு நாறிப் போச்சு. பழசையே பேசிக்கிட்டு இருந்தா முடியுமா? அதான்.. இந்தக் கடை வச்சிருக்கவன் என் சம்சாரத்தோட தம்பி மவன். அதுதான் இங்க வந்துட்டேன்.. ஆனா கூட.. என்ன மீறி அப்பப்ப இந்த பாட்டெல்லாம் வாய்ல வந்து தொலையுது.. எல்லாம் என் தலையெழுத்து..”

சொல்லி முடித்தபோது அவர் கண்களில் லேசாக நீர் துளிர்த்திருந்தது. அவருக்கு ஆறுதலும் நன்றியும் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

வேலை பார்ப்பது என்பது எல்லாருக்குமே அவசியம்தான். ஆனால் தான் விரும்பிய கலையை வாழ்வின் ஆதாரத்துக்கான வேலையாக பார்த்து வந்த ஒருவரை அதிலிருந்து அறுத்து எடுத்திருக்கும் யதார்த்த வாழ்வின் துயரம் என்னை வெகுவாகப் பாதித்து இருந்தது.

சென்ற வாரம் நண்பரொருவரின் வீட்டில் நடந்த துஷ்டிக்குப் போயிருந்தபோதும் இதே மாதிரியான மனிதரொருவரைக் கண்டேன். ஒப்பாரி வைக்க வந்த குழுவில் அவர் மட்டும் சுருதி பிசகாமல் பாட, தனிப்பாடல்கள் எனக் கலக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் தனியாகப் பேசியபோது இதே மாதிரியான பின்புலம் அவருக்கும் இருந்தது. பிழைப்பின் பொருட்டு இது மாதிர்யான இடத்துக்குத் தான் வந்து விட்டதை வருத்தமாகச் சொன்னார்.

இவர்கள் மட்டும்தான் என்றில்லை.. நீங்கள், நான்.. பொதுவாக நாம் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் நம்மை தொலைத்து விட்டு வாழ வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது. கொடிய பற்சக்கரங்கள் கொண்ட வண்டியாய் வாழ்க்கை நம் கனவுகளை நசுக்கியபடி இருக்க பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நம்மில் எத்தனை பேரால் விரும்பியபடி படிக்கவோ அல்லது நாம் விரும்பிய துறையிலோ வேலை பார்க்க முடிகிறது? கனவுகள் எத்தனை இருந்தாலும் நிதர்சனம் வேறு மாதிரியாக இருக்கும்போது அதை ஒத்துக் கொண்டு வாழும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோமே ஏன்?

எல்லாரும் தான் விரும்பும் வேலையைத்தான் செய்வோம் எனில் அது சாத்தியமா? இன்றைக்கு உலகம் தனக்கென வகுத்துக் கொண்டிருக்கக் கூடிய பாதிகளில் இதற்கான வாய்ப்புகள் நிச்சயமாகக் கிடையாது. அப்படியானால் இதற்கான பதில்தான் என்ன? இதுதான் யதார்த்தம் என்பதை ஒப்புக் கொண்டு தொலைந்து போனவர்களில் ஒருவனாக உலகத்தோடு ஒத்துப்போவதே சரியாக இருக்கும் என்பதுதான் நம்முன் இருக்கும் ஒரே பதிலா? சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைப்பதில்லை. சில கேள்விகளுக்கு விடைகளே இருப்பதில்லை. இது இரண்டாம் வகை.

38 comments:

அத்திரி said...

good post:(((((((((((((((

Prabu M said...

//கொடிய பற்சக்கரங்கள் கொண்ட வண்டியாய் வாழ்க்கை நம் கனவுகளை நசுக்கியபடி இருக்க பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
//

இந்த வாக்கியத்தை மிகவும் ரசித்தேன்....

ந‌ல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி.... உண்மைதான்... ஆனால் பெரும்பாலும் வேறு வழியில்லை... மாணவப் பருவத்தில் முனைப்பும் துடிப்பும் திடமான டிடெர்மினேஷனும் பெற்றுக் கடினமாக உழைத்து ஒருவேளை அதிர்ஷ்டமும் கைகூடினால் மட்டுமே நினைத்தபடி வாழ்க்கை அமைவது சாத்தியம்! உஃப்ஃப் சொல்லி முடிக்கிறதுக்குள்ளயே எனக்கு கண்ண கட்டுது.. நான் கிளம்புறேன் :)

நல்ல பதிவு நண்பா.. வாழ்த்துக்கள்!

அன்பேசிவம் said...

அருமையான பதிவு. நண்பா. கொஞ்ச நாள் கழிச்சி வரேன் உங்க பதிவுக்கு, நிறைய மாற்றங்கள் இருக்கிறது உங்கள் எழுத்த்துக்களில், நடையில், தொடருங்கள், வாழ்த்துகள்.


//சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைப்பதில்லை. சில கேள்விகளுக்கு விடைகளே இருப்பதில்லை//
இந்த வரியை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், என்னுடைய ட்ராப்டில் இருக்கும் பதிவின் முதல் வரி, உங்களுடைய பதிவில் கடைசியாய் இருக்கிறது.
:-)

sathishsangkavi.blogspot.com said...

//கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்குப் பொறவு ஒரு டவுன் மனுஷனுக்கு என் பாட்டு பிடிச்சிருக்குங்கிறத இப்போத்தான் கேக்குறேன் தம்பி..//

அந்த பெரியவர் இந்த வார்த்தையை சொல்லும் போது எவ்வளவு சந்தோசப்பட்டு இருப்பார்...

தமிழ்மணம் ஸ்டாருக்கு எனது வாழ்த்துக்கள்... வாத்தியாரே....

Prabu M said...

வாவ்!
இப்போதான் கவனித்தேன்.... தமிழ்மண நட்சத்திரமா?!!
சூப்பர்.... கலக்குங்க பாஸ்....
மனமார்ந்த வாழ்த்துக்கள்...:-)

vasu balaji said...

பெயரில், இடுகையில், இந்த வார தமிழ்மணத்தில் மின்னும் நட்சத்திரம். வாழ்த்துகள் கா. பா.

Balakumar Vijayaraman said...

அட, நம்ம நட்சத்திரம் தமிழ்மணத்திலா :) , வாழ்த்துகள்...

Unknown said...

சார் சூப்பர் போஸ்ட் ,

தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்

ஸ்வர்ணரேக்கா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

ஆம்.. வாழ்க்கையில் நாம் செய்து கொள்ளும் எத்தனையோ சமரசங்களில் வேலை தான் முதலில்..

நல்ல பதிவு..

VELU.G said...

//எல்லாரும் தான் விரும்பும் வேலையைத்தான் செய்வோம் எனில் அது சாத்தியமா? இன்றைக்கு உலகம் தனக்கென வகுத்துக் கொண்டிருக்கக் கூடிய பாதிகளில் இதற்கான வாய்ப்புகள் நிச்சயமாகக் கிடையாது. அப்படியானால் இதற்கான பதில்தான் என்ன? இதுதான் யதார்த்தம் என்பதை ஒப்புக் கொண்டு தொலைந்து போனவர்களில் ஒருவனாக உலகத்தோடு ஒத்துப்போவதே சரியாக இருக்கும் என்பதுதான் நம்முன் இருக்கும் ஒரே பதிலா? சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைப்பதில்லை. சில கேள்விகளுக்கு விடைகளே இருப்பதில்லை. இது இரண்டாம் வகை.
//

சத்தியமான உண்மை

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

நட்சத்திரமே! இனிய வாழ்த்து(க்)கள்.

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கா.பா..

மனம் திறந்து... (மதி) said...

விரும்பியதைச் செய்யும்போது அது "வேலை"யாகவே இருக்காதே! இப்படி எல்லோரும் விரும்பியதையே செய்யும் வாய்ப்பிருந்தால் நாடு எவ்வளவு மேன்மை பெறும் என்று நினைத்துப் பார்க்கிறேன்! அடடா! ஹூம்! நினைக்க மட்டும் தான் முடிகிறது...! இல்லை, இல்லை...வருந்தவும் தோன்றுகிறது!

அருமையான பகிர்வு, பாராட்டுக்கள்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நெகிழ்வான சம்பவம். எத்தனை மனிதர்கள் இவரை போல..

சிறப்பான பதிவு.. கடைசி வரிகள் முழுவதும் உண்மை.

நட்சத்திர வாழ்த்துகள். கலக்குங்க!!

நேசமித்ரன் said...

நல்ல சிறுகதை ஆகி இருக்க வேண்டியது

Unknown said...

அருமையான பதிவு நண்பரே! நட்சத்திரவாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் கா.பா - இனிய நட்சத்திர நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - கலக்குக ஒரு வாரம். இடுகை வழக்கம் போல அருமை. நட்புடன் சீனா ( பெருந்துறையில் இருந்து மதுரைக்குத் தானே வந்தீங்க - இப்ப ஷேவிங் எங்கே )

Anonymous said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் :)

சாகம்பரி said...

வாழ்க்கையில் கனவுகளை தொலைந்து போனாலும் புதிய கனவுகளைக் கண்டு வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக் கொள்கிறோம். தொலைத்தலின் சோகம்கூட அடி மனதில் ஆழமாய் நின்று கிடைத்தில் வெற்றிபெற வைக்கும். தேடல் நின்றுவிட்டால் அது நிரந்தர சோகமாகும் .

ராம்ஜி_யாஹூ said...

தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்

ஓலை said...

நட்சத்திர வாரத்திற்கான அருமையான் பதிவு கா.பா.

நட்சத்திர வாழ்த்துகள்.

மேவி... said...

ரொம்ப நல்லாயிருக்கு ...

வாழ்த்துக்கள்

(அங்கங்க கொஞ்சம் எஸ்ரா வாடை அடிக்குது)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் நட்சத்திரம் :))

ஜொலிக்கிறீங்களே :)))

நாடோடி இலக்கியன் said...

எழுத்து நடையில் நிறைய மாற்றங்கள் கா.பா.


நல்ல இடுகை. நேசமித்திரன் சார் சொல்வது நல்ல சிறுகதைக்கான கரு இந்த இடுகையில் இருக்கிறது. படித்துக்கொண்டிருந்தபோதே எனக்கும் அதேதான் தோன்றியது.

CS. Mohan Kumar said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.

பதிவு அருமை

மதுரை சரவணன் said...

vaalththukkal...ennadaa aalak kaanaamennu paarththen... naanum ungkalai tholaiththu ingku thedukiren.

thamizhparavai said...

நல்ல பதிவு கார்த்தி... நட்சத்திர வாழ்த்துக்கள்...!

பா.ராஜாராம் said...

நட்சத்திர வாழ்த்துகள் கா.பா!

மிக நெகிழ்வான இடுகை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

கே.என்.சிவராமன் said...

நட்சத்திர வாழ்த்துகள் கார்த்தி...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தருமி said...

நட்சத்திரத்திற்குரிய வாழ்த்தும், நல்ல பதிவொன்றிற்கான வாழ்த்தும் ...

IMACHETTINAD said...

வாழ்த்துகள் !இப்போதுதான் பார்க்கிறேன்!

பாச மலர் / Paasa Malar said...

நட்சத்திர வாழ்த்துகள்....இது போல் என் நினைவிலும் பலர் வந்து போனார்கள் உங்கள் பதிவைப்படித்ததும்...

சுந்தரா said...

//பொதுவாக நாம் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் நம்மை தொலைத்து விட்டு வாழ வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது. கொடிய பற்சக்கரங்கள் கொண்ட வண்டியாய் வாழ்க்கை நம் கனவுகளை நசுக்கியபடி இருக்க பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.//

அப்பட்டமான உண்மைங்க...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

Mahi_Granny said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். சுற்றிலும் உள்ள மனிதர்களை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள்

அன்புடன் அருணா said...

தமிழ்மணம் ஸ்டாருக்கு பூங்கொத்தோடு வாழ்த்துக்கள்

ஹேமா said...

மிகவும் பெருமையான பதிவு இது கார்த்தி !

Sudharsan said...

"Romba etharthama irunthuchu sir...!" Rasika vaitha pathivula ethuvum onu.. Kalakitinga sir!! Valthukal.

- Sudharsan