March 18, 2011

பெண்கள் மீதான ஆண்களின் பார்வை - மாறியிருக்கிறதா?

இன்று காலை எல்லிஸ் நகர் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்தப் பெண்ணை பார்த்தேன். ஒரு நிமிடம் நாம் மதுரையில்தான் இருக்கிறோமா என சந்தேகமாகப் போய்விட்டது. நூடுல்ஸ் ஸ்ட்ராப்புடன் கூடிய ஒரு ஷார்ட் டாப்ஸ் இடைக்கு ரொம்ப மேலேயே நின்று போயிருக்க, வெகு இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து போய்க்கொண்டு இருந்தாள். ஒரு நிமிஷம் வாயைப் பிளந்து ஆவெனப் பார்த்தாலும் ச்சே ச்சே ஒரு பெண்ணை நாம் இப்படிப் பார்க்கலாமா என்று என்னை நானே திட்டிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் மொத்தத் தெருவுமே அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒரு பெண் இப்படி எல்லாம் உடையணியலாமா, அதை பார்க்கும் ஆண்கள் மனது கறை படிந்து போகாதா என்றெல்லாம் உளறிக் கொட்டி கலாச்சாரக் காவலனாக ஃபார்ம் ஆகும் ஆசை எனக்கு சுத்தமாகக் கிடையாது. மாறாக, நம் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை எப்படி இருந்திருக்கிறது என்பதையும், காலமாற்றத்தோடு இதிலும் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா என்பதையும் ஒரு ஆணாகப் பேசவே ஆசைபப்டுகிறேன்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகி தன் தோழியிடம் சொல்வதாக ஒரு வசனம் கண்டிப்பாக இருக்கும். “கழுத்துக்குக் கீழ மட்டுமே பார்த்துப் பேசுற ஆம்பிளைங்களுக்கு மத்தியில அவன் என் கண்ண பார்த்துப் பேசுனாண்டி.. அதனாலேயே அவனை எனக்குப் பிடிச்சது..” ஒரு பெண்ணை ஆண் என்பவன் எப்போதும் உடல் சார்ந்து அணுகுவதாகவே நமது சமுதாயத்தில் ஒரு எண்ணம் உண்டு. என்னளவில் அது நிறையவே உண்மை என்றே நினைக்கிறேன். அப்படியானால் அதற்கான காரணங்கள் என்ன?

முதலாவதாக நாம் கலாச்சாரம் என்று சொல்லக்கூடிய விஷயம். சிறுவயது முதலே எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்களை ஏதோ வேற்றுகிரக ஜீவராசிகள் போல பிரித்து வைப்பதையே வீடுகளில் தொடங்கி பள்ளிகளிலும் நாம் பின்பற்றி வருகிறோம். இன்றைக்கு சில கல்லூரிகளில் இதை ரொம்பப் பெருமையாக சொல்வது வழக்கமாகி இருப்பது இன்னும் அதிர்ச்சி. மூடி வைக்கும் பொருளை திறந்து பார்க்க வேண்டும் என்கிற பொதுவான எண்ணம் போல பெண் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஆண்களுக்கு அதிகமாக இருப்பது ஆச்சரியமான விஷயம் கிடையாது.

இரண்டாவது இன்றைக்கு இருக்கக் கூடிய ஊடகங்கள். குழந்தைகளுக்கான உணவுப்பொருளோ, வாசனை திரவியமோ, பிஸ்கட்டோ, துணியோ.. என்ன கருமமாக இருந்தாலும் அதை விளம்பரப்படுத்த அரைகுறை ஆடை அணிந்த பெண்கள்தான் தேவைப்படுகிறார்கள். பெண்ணை வெறும் நுகர்வுப் பொருள் என்பதைத் தாண்டி வேறு எப்படியும் காட்டிவிடக் கூடாது என்பதில் வெகு தீவிரமாக இருக்கும் ஊடகங்களின் அசாத்திய ஆதிக்கமும் கூட ஆண்கள் பெண்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணம் என்று கூட சொல்லலாம்.

பெண்களை ஒரு அதிசயப் பொருளாகவே பார்த்து வந்த காலம் இருந்தது. சரி.. அதெல்லாம் பழைய காலம். ஆனால் இன்றைக்கு நாம் தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாறி விட்டோம். இப்போது பெண்கள் நிறைய விதத்தில் முன்னேறி விட்டர்கள். இப்போதும் ஆண்கள் பார்க்கும் பார்வை அப்படியேதான் இருக்கிறதா? தொடர்ச்சியாக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதால் என்னால் ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க முடிந்தது. ஆண்களுக்கு பேசுவதற்கான விஷயமாக இன்று இருக்கும் இரண்டு விஷயங்கள்.. பெண்களும் சினிமாவும்.

பெருநகரங்களில் கொஞ்சம் இந்த நிலை மாறியிருப்பதாகத் தெரிகிறது. இப்போதும் சென்னைக்கு போகும்போதெல்லாம் எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். ஸ்பென்சருக்கு உள்ளே நுழைந்தால் ஏதோ வேறு நாட்டுக்குள் நுழைந்து விட்ட உணர்வுதான் இருக்கும். குறிப்பாக பெண்கள் அணிந்து இருக்கும் மாடர்னான உடைகளை எல்லாம் பப்பரப்பா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சங்கடமாக இருந்தாலும் எப்போதும் அதைச் செய்யாமல் இருந்ததில்லை. எல்லாவற்றோடு சேர்ந்து ஒரு சந்தேகமும் கூடவே இருக்கும். இங்கிருக்கும் ஆண்கள் எல்லாம் இதை எல்லாம் இயல்பாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்டர்களா இல்லை அவர்களுக்கும் மனதுக்குள் என்போன்ற ஊசலாட்டங்கள் இருக்குமா? தெரியவில்லை.

எது எப்படியோ, தென்மாவட்டங்களில் வாழும் என்போன்றவர்களுக்கு கலாச்சார ரீதியாக இதுபோன்ற விஷயங்களை சட்டென ஒத்துக் கொள்வது சிரமமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெண்களை நான் எந்தவிதத்திலும் குறை சொல்லவில்லை. தங்களுக்கு வசதியான உடைகளை அணியும் அத்தனை உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை எந்த மனத்தடையுமின்றி எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கை ஆண்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் நான் சொல்ல வருவது.

அதற்கான ஒரே வாய்ப்பு, இளம் வயதிலிருந்தே ஆண் பெண் பற்றிய அடிப்படைகளை சொல்லிக் கொடுக்கும் பாலியல் கல்வியாக மட்டுமே இருக்க முடியும். சாப்பாடு, தூக்கம் போல இதுவும் ஒரு சாதாரணமான உணர்வே என்கிற தெளிவு இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது கடினமாக இருக்கக் கூடும். அது சாத்தியப்படாத வரையில், பெண்களை கைக்கு எட்டாத அதிசயமாக பாவிக்கும் வரையில், கலாச்சாரத்தை பெரிதாகப் பேசும் நம் நாட்டில்தான் அளவுக்கு அதிகமான பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் ஒத்துக் கொண்டு வாழ வேண்டி இருக்கும்.

20 comments:

தருமி said...

ஒரு தடவை சிங்கை சென்று வாருங்கள். மாறிடுவோம்.

அப்பாதுரை said...

இன்றைக்கு என்றில்லை; என்றைக்குமே அப்படித்தான். சங்க இலக்கியம் பக்கம் போங்கள்;இறையிலக்கியம் பக்கம் போங்கள். 'பெண் என்ற போகப் பொருள்' பற்றித் தான் பாட்டும் பேச்சும். கடைசியில் 'பெண் என்ற மாயப்பேயிடமிருந்து என்னைக் காப்பாற்றிய'தற்காக நன்றி சொல்லிப் பாடல்.

என் கணிப்பில், இன்றைய நாகரீகம் எவ்வளவோ மேல். அழகுக்கு அழகு சேர்ப்பதில் தவறே இல்லை - அதில் விகாரத்தைக் காண்பதில் இருக்கிறது தீமை. விகாரத்தை உண்டாக்குவது பெண்களல்ல.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நட்சத்திர வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

ஒன்னு ரெண்டு பேர் மட்டுமே அரைகுறையா துணி போட்டா இப்படிட்தான் பார்ப்பாங்க. எல்லாருமே 1/2குறையா போட்டுகிட்டு போனா சலிச்சு போயிரும். தருமி சொன்னது அதுதான். சரி, ஆண்கள் மீதான் பார்வை பற்றி அடுத்தப் பதிவு போடுங்க

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.கார்த்திகை பாண்டியன்,

//ஒரு பெண் இப்படி எல்லாம் உடையணியலாமா, அதை பார்க்கும் ஆண்கள் மனது கறை படிந்து போகாதா//

//மூடி வைக்கும் பொருளை திறந்து பார்க்க வேண்டும் என்கிற பொதுவான எண்ணம்//

????தாமரை இலைத்தண்ணீர்!!!!

///இன்றைக்கு இருக்கக் கூடிய ஊடகங்கள்...என்ன கருமமாக இருந்தாலும் அதை விளம்பரப்படுத்த அரைகுறை ஆடை அணிந்த பெண்கள்தான் தேவைப்படுகிறார்கள்.///

///இப்போதும் ஆண்கள் பார்க்கும் பார்வை அப்படியேதான் இருக்கிறதா?///

????தாமரை இலைத்தண்ணீர்!!!!

////தங்களுக்கு வசதியான உடைகளை அணியும் அத்தனை உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை எந்த மனத்தடையுமின்றி எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கை ஆண்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் நான் சொல்ல வருவது.////

////கலாச்சாரத்தை பெரிதாகப் பேசும் நம் நாட்டில்தான் அளவுக்கு அதிகமான பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் ஒத்துக் கொண்டு வாழ வேண்டி இருக்கும்////

????தாமரை இலைத்தண்ணீர்!!!!

மதுரை சரவணன் said...

பெண்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது . அது என்ன தென்மாவட்டத்தை சேர்ந்த என்னைமாதிரி ....?அண்ணே நீங்க மதுரைக்காரர்ன்னு எல்லாருக்கும் தெரியும் சிக்கீரம் கல்யாணம் பண்ணிணால் எல்லாம் சரியாபோகும்...

Sharah said...

Useful Comments

குடுகுடுப்பை said...

பெரும்பாலானவர்கள் ஷாட்ஸ், வயிறு கொஞ்சமாக மார்பு தெரியும் உடை அணிய ஆரம்பித்துவிட்டால், கண்களைப்பார்த்து பேச ஆரம்பித்துவிடுவோம்.

அப்படியே ஆணகள் பார்த்தாலும், பெண்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் நிலையும் வந்துவிடும்.

இந்த மாற்றம் கொஞ்சம், கொஞ்சமாக வரும்போது மாற்றம் நடப்பதே தெரியாமல் வந்துவிடும்.

காமராஜ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன்.

jothi said...

பெண்க‌ளின் உடை நிறைய‌ மாறி இருக்கிற‌து. பெண்க‌ளின் மீதான‌ ஆண்க‌ளின் பார்வை மாற‌‌வில்லை.ஆனால் கொஞ்ச‌ம் ப‌ய‌ப்ப‌ட‌ ஆர‌ம்பித்து இருக்கிறார்க‌ள் என‌ ஒப்புக்கொள்ள‌ வேண்டும்.

பெண்க‌ளும் என்ன‌வோ தாங்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌த்தான் விரும்புகிறார்க‌ள்.

VELU.G said...

///இப்போதும் ஆண்கள் பார்க்கும் பார்வை அப்படியேதான் இருக்கிறதா?///


அப்படியேதான் இருக்கிறது.

Balakumar Vijayaraman said...

ம்ம்ம்.

Anonymous said...

பெண்களோடு மனம்விட்டுப் பேசி அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு செவி சாய்த்தாலே வல பிரச்சனைகள் பறந்தோடிவிடும். பார்வையும் மாறவில்லை, பரந்த மனப்பான்மையும்
இல்லை அந்த ஆண்களுக்கு!

"உழவன்" "Uzhavan" said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :-)

ஹேமா said...

புராண பாடல் காலங்களில் இருந்து இன்றுவரை ஆண்களின் பார்வை அப்படியேதான்!

shanuk2305 said...

ellis nagarkoo neenga pudusaa naan sinna paiyanla irundhu paarkiren anglo indians apppave ippadi varuvaanga. ippollam sattaikaravoonga romba kammi aayittango

அத்திரி said...

ஹி ஹி .......புரொபசர் இன்னும் ஓரக்கண்ணாலதான் பாக்குறேன்.......இன்னும் மாறலை

அத்திரி said...

// தருமி said...
ஒரு தடவை சிங்கை சென்று வாருங்கள். மாறிடுவோம்
//

புரொபசர் பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்,,,,,, உடனே ரெண்டு டிக்கெட் போடுங்க.....நாம போய்ட்டு வரலாம்..

அத்திரி said...

இந்த பதிவு பற்றி ”அவங்களுக்கு”!! தெரியுமா???

Anonymous said...

inga enna nadakuthu ka.pa.

angel said...

பெருநகரங்களில் கொஞ்சம் இந்த நிலை மாறியிருப்பதாகத் தெரிகிறது.

delhi il athiga paliyal kutrangal irupathaga engayo paditha gnabagam ......