July 30, 2011

வெப்பம் - திரைப்பார்வை

ஒரு சில படங்களைப் பார்க்கும்போது இது நல்ல படமா இல்லை நாதாரிப் படமா என்கிற மாதிரியான குழப்பம் மனதுக்குள் வந்து சேரும். வெப்பம் அதுமாதிரியான படம். இயக்குனராக எனக்குப் பிடிக்காத, ஆனால் ஒரு தயாரிப்பாளராக என்னை ஆச்சரியப்படுத்தும், கவுதம் வாசுதேவ மேனனின் படம். கதை கிட்டத்தட்ட ஆரண்ய காண்டம் படத்தின் கதையை ஒத்து வருகிறது. இதைப் பார்த்த பிறகு ஆரண்ய காண்டமும் இதுவும் ஏதாவதொரு படத்திலிருந்து பொதுவாக சுடப்பட்ட கதையோ என சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் எங்கே ஆரண்ய காண்டம் ஜெயித்ததோ - திரைக்கதை - அங்கே வெப்பம் காலை வாருகிறது.


குப்பத்தில் வசிக்கும் பாலாஜியும் கார்த்திக்கும் அண்ணன் தம்பிகள். கதை பாலாஜியின் பார்வையில் விரிகிறது. விஷ்ணு கார்த்தியின் உயிர் நண்பன். சின்ன வயதில் இருந்தே இவர்களை வளர்த்துவரும் பெரியவரின் மகள் ரேவதிக்கும் கார்த்திக்கும் காதல். கார்த்தியின் அப்பா ஜோதி அந்த குப்பத்தின் பிரபலமான மாமா. தன் அம்மா சாகக் காரணமானவன் என்பதால் கார்த்தியை ஜோதியிடம் இருந்து விலக்கியே வைக்க வேண்டும் என்பதில் பாலாஜி வெகு கவனமாக இருக்கிறான்.

ஜோதியிடம் இருந்து விபச்சாரத் தொழில் செய்யும் விஜியை விஷ்ணு காதலிக்கிறான். அவளை அங்கிருந்து மீட்டெடுக்க போதைப்பொருள் கடத்த சம்மதிக்கிறான். அவனுடைய துணைக்கு கார்த்தியும் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சரக்கைக் கொண்டு போகும் வழியில் தங்களைக் கொலை செய்ய ஜோதி திட்டம் போட்டிருப்பது இருவருக்கும் தெரிய வருகிறது. என்ன செய்வதென்று தெரியாத சூழலில் விஷ்ணு திடீரெனக் கொல்லப்பட கொலைப்பழி கார்த்தி மீது விழுகிறது. யார் உண்மையான கொலையாளி, அவர்கள் கடத்திப்போன சரக்கு என்ன ஆனது, ஜோதியை சகோதரர்கள் பழிவாங்கினார்களா என்பதுதான் வெப்பம்.


கார்த்தியாக அறிமுகம் ஆகியிருப்பது நானி. தேடிப்பிடித்து ஒரு டோங்கிரியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பேருக்காகாவது கலக்கி இருக்க வேண்டாமா.. (ஹி ஹி ஹி..). எல்லா சீனிலும் இறுக்கமாகச் சுற்றி வருவதைத் தவிர மனிதர் வேறெதுவும் செய்யவில்லை. விஷ்ணுவாக வரும் கார்த்திக் குமார்தான் கலக்கல். {நிஜப்பேர் அப்படி..:-))))} எப்போதும் தியாகம் செய்யும் நண்பன், அமெரிக்க ரிட்டர்ன் இளிச்சவாய் மாப்பிள்ளை என்று நடிப்பவர் இந்தப்படத்தில் கலக்கி இருக்கிறார். காதலிக்கும் பெண்ணுக்காக எதையும் செய்யத் தயாராகும் இடம், கேலியும் கிண்டலும் கலந்த பேச்சு, குப்பத்துக்காரனின் மொழி என்று எல்லாமே கச்சிதம்.

விஜியாக வரும் பிந்து மாதவி செம கட்டை. காதலிப்பவன் கண்முன்னே கஸ்டமர் வந்து போக தான் அனுபவிக்கும் சங்கடத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். அரையடி ஆழாக்கு உயரத்திலிருக்கும் நித்யா மேனன் எதிலும் சேர்த்தி இல்லை. மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல. முதல் காட்சியில் இவர் கடலுக்குள் போவதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள் பாருங்கள்.. அடேங்கப்பா.. பாலாஜியாக வருபவர் யாரெனத் தெரியவில்லை. கவுதம் குரல் கொடுத்திருக்கிறார் போல. வில்லன் ஜோதியாக வரும் ஆஜானுபாகுவான மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். உடம்பு அத்தனையும் விஷம் என்பதைக் கண்களில் காட்டுகிறார்.


இயக்குனர் மணிரத்னத்தின் ரசிகையாய் இருந்திருக்க வேண்டும். பேசும் வசனம் ஒரு கருமமும் புரிவதில்லை. அதோடு கவுதமின் பாதிப்பு படபடவென வந்து விழும் நிமிஷத்துக்கு ரெண்டு கெட்ட வார்த்தைகளில் தெரிகிறது. கதை ஒரு குப்பத்தில் நிகழ்கிறது. ஆனால் விஷ்ணு தவிர்த்து யாருமே அந்தப்பகுதியோடு பொருந்த முடியவில்லை. அதிலும் கனவுப்பாட்டு வந்துவிட்டால் எல்லாரும் அல்ட்ரா மாடர்னாக இலக்கியத் தமிழில் பாட்டுப் பாடுகிறார்கள். கொடுமைடா சாமி.

நா.முத்துகுமாரின் பாடல்கள் - ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. பாட்டைக் கேட்டுத்தான் படத்துக்குப் போக வேண்டுமெனத் தீர்மானித்ததே. ஆனால் ஒரு பாட்டு கூட பார்க்க விளங்கவில்லை. அத்தோடு பின்னணி இசை பயங்கர இரைச்சல் நமக்கு ஒரே எரிச்சல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ். ஒரு மாதிரியான பச்சை ஃப்ளோரசண்ட் நிறத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் கிரிம் மூடுக்கு அது நன்றாக சூட் ஆகிரது. பாடல்களில் டாப் ஆங்கிள்களில் வரும் அபார்ட்மெண்ட் காட்சிகள் ரொம்பவே அழகு. ஆண்டனியின் எடிட்டிங்தான் படத்துக்கு பெரிய பிளஸ். முதல் பாதி துண்டு துண்டாக இருக்கும் விஷயங்களுக்கு இரண்டாம் பாதியில் விடை தெரிய வரும் இடங்கள்தான் படத்தில் பார்ப்பது மாதிரியான விஷயம். இதுவும் இல்லையென்றால் படம் அரே சாம்பாதான்.


சுவாரசியமான சின்ன சின்னக் கதைகளைக் கோர்த்து அழகாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார் இயக்குனர் அஞ்சனா. முதல் பாதியைக் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக் கதை சொல்லியிருந்தால் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸை உடைக்கும்போது பிரமாதமாக வந்திருக்கும். ஆனால் முதல் பாதி சீக்கிரம் இண்டெர்வெல் விடுங்கப்பா எனக் கதற வைப்பதால், இத்தனைக்கும் முதல் பாதி ஐம்பது நிமிஷம்தான், சரிப்பட்டு வரவில்லை. பெண் இயக்குனர்கள் என்றாலே ஜாலி கோலியாக படம் எடுக்காமல் ஒரு துணிச்சலான குப்பத்து சப்ஜெக்ட் - போதைப்போருள் என எடுத்தவரை ஓகே. என்றாலும் மொத்தமாக ஒருத் திரைப்படம் என வரும்போது.. பெட்டர் லக் ஃபார் தி நெக்ஸ்ட் மூவி அஞ்சனா.

வெப்பம்சுடும்.

July 25, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர் (5)

நண்பர் அப்பாவி முரு என்கிற முருகேசன் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவரு. பிரியத்துக்குரிய ரம்யாக்கா மூலமாக எனக்குப் பழக்கம். முதல் முறை மதுரை காளவாசலில் இருக்கும் ஜெயராம் பேக்கரியில்தான் பார்த்துக்கிட்டோம். பிரியமான, எளிமையான மனுஷன். நானும் ஸ்ரீயும் ஒருமணி நேரம் மொக்கை போட்டு அப்புறமா அனுப்பி வச்சோம். அதுக்கப்புறமும் மனுஷன் நம்ம பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டார்னுதான் நினச்சேன். ஆனா விதி யார விட்டது? இரண்டாவது முறை நான் அவரப் பார்த்தது அவருக்கு ஆயுள் தண்டனை விதிச்சப்ப, அவரோட கல்யாணத்துல. ஒரு மனிதன் கடைசியாக சிரிச்சதுக்கு நாமளும் சாட்சியா இருந்ததில சின்ன சந்தோசம்.

சமீபமாக அவர் சென்னை வந்துட்டார்னு நான் நினச்சுக்கிட்டு இருந்ததால சிங்கை பயணத்தப்ப எனக்கு அவர் ஞாபகமே இல்லை. ஆனால் சிங்கை குழும மடலில் நான் வர்றது தெரிஞ்சவுடனே போன் செஞ்சு செல்லச் சண்டை போட்டாரு. நீ வாய்யா பார்த்துக்கலாம்னு சொன்னவரோடத்தான் புதன்கிழமை நான் சிங்கை ஜூவுக்குப் போறதுன்னு முடிவாச்சு. புதன் காலை சாவகாசமாக பஸ்ஸைப் பிடித்து முரு சொன்ன வாயில நுழையாத ஏதோ ஒரு ஸ்டேஷனுக்கு கிளம்புனேன். மனுசர் பாதிவழியிலேயே பஸ்ஸில ஏறிட்டார்.



முதலில் கொஞ்ச நேரத்துக்கு ஆளை அடையாளமே தெரியல. வீட்டு சாப்பாடு கல்யாண பூரிப்புனு மனுஷன் நல்லா சதை போட்டிருக்கார். ஊர்க்கதையெல்லாம் பேசிக்கிட்டு குறிப்பிட்ட இண்டர்சேஞ்சுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த வங்கில சின்னதொரு வேலையை முடிக்க முரு போக நான் அங்கிருந்த ஷாப்பிங் மால்களில் சுத்திக்கிட்டு இருந்தேன். இருப்பதிலேயே டிவி தான் ரொம்பவே சல்லிசு. 42” டிவி எல்லாம் வெறும் முப்பதாயிரம் ரூபாய்க்குத் தர்றாய்ங்க. இருக்கப்பட்டவர்கள் பட்டாசு கிளப்பலாம். நாம எங்கிட்டு?

பப்பரப்பே என்று கடைகளையும் அங்கிருந்த அரையாடை மஞ்சள் மைனாக்களையும் சாவகாசமா பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தப்ப முரு வேலை முடிச்சு வந்தாரு. நண்பா இங்க இருக்குற ஹோட்டல்ல ஹக்கியான் - மீ அப்படின்னு ஒரு ஐட்டம் செமையா இருக்கும் வாங்க சாப்பிட்டுட்டு போவோம்னு இழுத்துட்டுப் போனார். ஏற்கனவே சீன உணவைப் பார்த்து டர்ராகிக் கிடந்தாலும் நண்பர் கூப்பிடும்போது மறுக்க முடியாதுன்னு போயாச்சு.

சூடா ரெண்டு பிளேட் வாங்கிட்டு வந்தார் மனுஷன். ஏதோ தொன்னைல வழிய வழிய கொடுத்த நூடுல்ஸ். ஆக்டோபஸ்ஸும் எறாலும் போட்டதாம். அதென்னமோ சீனாக்காரன் எல்லாம் நூடுல்ஸ தண்ணிவாக்குலதான் சாப்பிடுறாய்ங்க. நமக்கு அது ஆக மாட்டேங்குது. பரிதாபமா வேடிக்கை பார்க்கிறேன். தலைவன் பாட்டுக்கு சாப்ஸ்டிக் எடுத்து பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்கார். மெதுவா எடுத்து வாயில போடுறேன். முடியல. எறா பச்சையா கெடக்கு. நூடுல்ஸ் ஒழுகுது. ங்கொய்யால.. பாண்டியா ஆசைக்கு வாங்கிட்டு இது உனக்குத் தேவையா? கொஞ்ச நேரத்துல அவரா நம்ம மூஞ்சி கொடுத்த எஃபெக்ட பார்த்துட்டு பிடிக்கலைன்னா வச்சிருங்கன்னு சொன்னாரு. அதுதாண்டா சான்சுன்னு எஸ்கேப்.



அங்க இருந்து கிளம்பி ஜூ. மொத்தம் மூணு விஷயம் - ஜூ, காட்டுக்குள்ள ராத்திரி சஃபாரி, பறவைகள் சரணாலயம். நேரமின்மை காரண்மா நாம் ஜூ மட்டும் பாக்குறதுன்னு உள்ள போயிட்டோம். இதுவரைக்கும் பொட்டக்காடுல அங்கனங்கன மிருகங்கள் நடமாடிக்கிட்டு இருக்குற ஜூவைத்தான் பார்த்து இருக்கேன். ஆனா சிங்கை ஜூ சான்சே இல்லை. சரணாலயமே ஏதோ மழைக்காடுகள் மாதிரித்தான் இருக்கு. அடர்காட்டுக்குள்ள நடந்து போற மாதிரியான உணர்வைக் கொண்டு வந்திடுறாங்க. நாங்க போன அன்னைக்கு மழையும் சேந்துக்க எடமே செமையா இருந்துச்சு. மத்தியானம் கேஎஃப்சியோட சாப்பாடு.

கண்ணாடிக்கு அந்தப்பக்கம் ரொம்ப நெருக்கத்துல போற மெகா சைஸ் முதலைகள், கிட்டக்க வந்து உருமுற சிறுத்தைகள் - சிங்கங்கள், நானூறு வருஷம் வாழுற ஆமைங்க, கொமோடோ டிராகன், வெள்ளைப்புலிகள், கங்காரு, மேலே வலையால் கூரை போடப்பட்ட பறவைகள் கூண்டு (ஜுராசிக் பார்க் எஃபெக்ட்), சிலந்தி மாதிரியான குட்டி இன்செக்ட்ஸ், வித விதமா நம்ம சொந்தக்காரங்க என எக்கச்சக்கமான மிருகங்கள். வழக்கம்போல பயத்தின் காரணமா பாம்புப் பண்ணைக்கு மட்டும் நான் போகலை. முருவுக்கு அதைச் சொல்லி என்னைக் கிண்டல் பண்ணினதுல அப்படியோரு குஷி.

மக்களைக் கவரக்கூடிய விதமா மூணு முக்கியமான ஷோ இருக்கு. “மழைக்காடுகள் திரும்பித் தாக்குகின்றன”ன்னு ஒரு நிகழ்ச்சி. காட்டை அழிக்குற மனுஷனோட பேராசைய மிருகங்கள் எதிர்த்து போராடுறதா கான்சப்ட். ராடண்ட்ஸ், குரங்குகள், பறவைகள்னு பட்டாசா இருந்தது. நாய்கள், கிளிகள் வச்சு குழந்தைகளுக்காகவே ஒரு நிகழ்ச்சி. அப்புறம் கடைசி நிகழ்ச்சிதான் எல்லாத்துலையும் டாப். சீல்களை வச்சு பண்றாங்க. அருமையா பழக்கப்படுத்துன கடல் சிங்கங்கள். நகைச்சுவையாவும் அதே நேரம் யோசிக்கிற மாதிரியான நல்ல நிகழ்ச்சிகள்.



சாயங்காலம் ஜூவுல இருந்து வெளியேறி முருவோட வீடு. கொஞ்ச நேரம் அங்க இருந்து நண்பர்களோட பேசிட்டு இருந்தேன். நம்ம ஊருல இருந்து காராச்சேவ வாங்கிட்டுப் போயி டப்பால போட்டுத் திங்கிற அளவுக்கு பயபுள்ளைங்க சாப்பாட்டுக்கு காஞ்சு கிடக்குதுங்க. ஒரு நல்ல டீ சாப்பிட்டுட்டு முருகிட்ட இருந்து விடைபெற்று அவரோட நண்பர் கூட காரேறி ஜம்முன்னு ஸ்டேஷனுக்கு வந்து எறங்கியாச்சு. வழில மலேஷியா எல்லைய வேற சுத்திக் காமிச்சாரு அந்த நல்ல மனுஷன். அவருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு அங்கயிருந்து கெளம்பி நேரா சைனாடவுன். அங்கன நண்பர் ரோஸ்விக் நம்மகூட சேர்ந்துக்கிட்டாரு.

க்யூட்டா சின்ன சின்ன கீ-செயின் எல்லாம் பொறுக்கிட்டு வந்தப்ப மழை வந்துருச்சு. அந்த ஏரியாவுல எக்கச்சக்கமான மசாஜ் பார்லர். வாழ்க்கைல நல்லவனா இருந்து என்னத்த சாதிச்சோம் பேசாம உள்ள நுழைஞ்சிடுவோமான்னு சின்ன நப்பாசை. ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் துப்பு வேணும். நமக்கு அது துளி கூட கிடயாது. வேறென்ன. பெருமூச்சுதான். வர்ற வழியில சிங்கப்பூரோட சகல கில்மாக்களும் நடக்குற கிளார்க் குவே பகுதிய எட்டக்க நின்னு வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டுக் கெளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ரைட்டு.. வெற்றிகரமா மூணு நாள் முடிஞ்சது.

அடுத்தது எங்க ராசா ? செந்தோசா.

(பிரயாணிப்போம்..)

July 20, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர்(4)

28 - 06 - 11 - செவ்வாய்க்கிழமை - சிங்கைல என்னோட இரண்டாவது நாள். மத்தியானம் என்னோட கட்டுரைய சப்மிட் பண்ண வேண்டி இருந்ததால சாயங்காலம் நாலு மணி வரைக்கும் கான்ஃபரன்ஸ் நடந்த சன்டெக் வளாகத்துலயே பொழுது போச்சு. அதுல பெரிசா சொல்றதுக்கு எதுவும் இல்லாத சூழ்நிலைல சிங்கப்பூர் என்கிற நகரம் பத்தியும் குறிப்பா அந்த ஊர் பெண்கள் பத்தியும் (ஹி ஹி) நான் என்ன ஃபீல் பண்றேங்கிற கில்மாதான் இந்தப்பதிவு பூராவும். அதனால எஸ்ஸாகிறவங்கோ இப்பவே ஜூட் விட்டுக்கோங்க சாமிகளா...

மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள நகரம் சிங்கப்பூர். எழுபது சதத்துக்கும் மேலாக சீன மக்களும் மற்ற நாட்டினரான மலாய், ஃபிலிப்பானோ, தாய், இந்தியன் எல்லாம் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியாகவும் இருக்கிறார்கள். பார்ப்பவரை ஆச்சரியம் கொள்ளச்செய்யும் விண்ணைத் தொடும் கட்டிடங்கள், அனைத்து பகுதிகளையும் பிரச்சினையின்றி இணைக்கும் பேருந்து / ரயில் போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், ரொம்பவே கறாரான ஆனால் நியாயமான சட்டங்கள், மக்களுக்கிருக்கும் சுதந்திரம், கேளிக்கை வசதிகள் என ஊரைப் பொறுத்தவரை எல்லாமே அம்சம். தங்களுடைய பொருளாதாரத்தின் மிகப்பெரிய அடிப்படை ஆதாரவளம் சுற்றுலாவே என்பதைத் தெள்ளதெளிவாக அரசு தெரிந்து வைத்திருப்பதால் வெளிநாட்டு மக்களுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு கிடைக்கிறது.

இங்கே இருக்கும் கட்டிட வல்லுன்ர்கள் எல்லாருமே மிகுந்த அழகுணர்ச்சியோடு கூடிய மனிதர்களாக இருப்பார்கள் போலும். ராஃபிள்ஸில் ஒரு டவரை அண்ணாந்து பார்க்கிறேன் பேர்வழி எனக் கழுத்து வலியே வந்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டிடங்களை பெரிது பெரிதாக கட்டினாலும் அவையனத்தையும் வெகு அழகாகக் கட்டிமுடித்து பார்ப்போர் மூக்கில் விரலை வைக்கும்படியாக அசர அடிக்கிறார்கள். குறிப்பாக நான் பார்த்தவற்றிலேயே டிபிஎஸ் பாங்கின் கட்டிடம்தான் பட்டாசு. மெட்டல் ப்ளாக் கலரில் ஒரு தெருவையே அடைத்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு கட்டடம் போதும். கிளாஸ். நம்மூரைப்போல வீட்டைக் கட்டிவிட்டு தண்ணி, எலெக்ட்ரிக் கனெக்‌ஷன் கேட்கும் பிசினஸ் எல்லாம் கிடையவே கிடையாது. முதலிலேயே அதை எல்லாம் முடித்துவிட்டுத்தான் கட்டிடம் கட்டவே ஆரம்பிக்கிறார்கள்.

ஊரில் ஷாப்பிங் மால்களுக்கு அடுத்தபடியாக நிறைய காணப்படுவது ஹோட்டல்கள். பார்க்கும் பக்கமெல்லாம் வாத்தும் கோழியும் உரித்து தொங்க விடப்பட்ட கடைகள். எண்ணெய், செய்முறை சார்ந்து ஹோட்டல்கலுக்கு தரவரிசை வழங்கப்பட்டு அதை கடைகளில் ஒட்டியும் வைத்திருக்கிறார்கள். இதைப் பெண்களின் சுதந்திரத்திற்காக திட்டமிட்டு செய்ததாகச் சொல்கிறார்கள். ஊரெங்கும் கடைகளிருக்க பெண்கள் வீட்டுக்குள் அடைபட்டு இல்லாமல் நிம்மதியாக வேலைக்கு செல்ல்வேண்டும் என இதை திட்டமிட்டு அரசாங்கம் செய்ததாம். எளிதில் செரிக்கக்கூடிய திரவ உணவை, ஒரே உணவாக இல்லாமல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமென, நாய் வாயை வைத்ததைப் போல எடுத்துப் போட்டு சாப்பிடுகிறார்கள்.

சிங்கப்பூரை ஃபைன் நகரம் என்றே சொல்கிறார்கள். தவறு செய்பவர்களுக்கு ரொம்பக் கடுமையான தண்டனைகள். அதே நேரம் பொதுமக்களுக்கு தாங்கள் விரும்பியதை பிரச்சினையின்றி செய்ய எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு. ஊரில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் யார் வேண்டுமானாலும் தம் போடலாம். நான் பார்க்க 12 / 13 வயது ஜாரிகளின் கும்பல் ஒன்று மொத்தமாக வெண்குழல் ஊதுவத்தியை புகைத்தபடி கடந்து போனது வயித்தெரிச்சல். அதே போல கட்டியணைத்து கிஸ்ஸடிக்கவும் இந்த ஊர் மக்கள் யோசிக்கவே மாட்டேன் என்கிறார்கள். மூடாகுதா ரைட்டு உடனே அடிச்சிடு பக்கத்துல இருப்பவன் பார்ப்பான் என்ன நினைப்பான் ஒரு கவலையும் கிடையாது. மக்கா.. வாழ்கிறார்கள்.




இதைச்சொல்லும் அதே நேரத்தில் மக்கள் எல்லாரும் பொறுப்புடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும். சாலையில் யாரும் குப்பை போடுவதில்லை. சிகரெட்டுகள் புகைத்தாலும் அதை ஒழுங்காக கொண்டு போய் குப்பையில் போடுகிறார்கள். சாலையின்மீது எந்த வாகனமும் வராவிட்டாலும் கூட சிக்னலுக்காக காத்து இருக்கிறார்கள். பஸ்ஸில் முன்னால் ஏறி பின்னால்தான் இறங்குகிறார்கள். போக்குவரத்து வண்டிகளில் பெரியவர்களுக்கு எனத் தனி மரியாதையே இருக்கிறது. ரயில் நிலையங்களில் எல்லாரும் வரிசையிலேயே போகிறார்கள். பெரும்பாலும் திருட்டு எங்கும் கிடையாது.

பெண்கள் - ஆகா.. இப்போதுதான் ஒரு குரூப்பே நிமிர்ந்து உட்கார்கிறது சாமிகளா. மஞ்சள் நிற மைனாக்கள். ரொம்ப ரொம்ப சுதந்திரமான பெண்கள்.அதுவும் ஆடை விஷயத்தில் கேட்கவே வேண்டாம். உள்ளாடைகளே ஆடைகளென அரியதொரு தத்துவம் கொண்ட மக்கள். ஒரு பனியன் சற்றே பெரிய ஷார்ட்ஸ்.. எல்லாம் முடிஞ்சு போச்சு. அதையே விதம்விதமாக டிசைன் செய்து அணிகிறார்கள். அலங்காரங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் - குறிப்பாக சிகையலங்காரம். தங்கள் முகத்துக்கு எம்மாதிரியான ஸ்டைல் பொருந்தும் எனப் பார்த்துப் பார்த்து செய்து கொள்கிறார்கள். அடுத்த முக்கியத்துவம் காலணிக்கு. பெரும்பாலும் குட்டையான பெண்கள் என்பதால் பெரிய ஹீல்ஸ் வைத்த செருப்புகளாய்த் தேடி அணிகிறார்கள். வாழைத் தண்டு கால்களைப் பார்த்து பெருமூச்சு விட்டே ஒரு வாரம் ஓடிப்போனது என் சொந்தக்கதை சோகக்கதை.

ஆண்கள் முக்கால்வாசி முள்ளம்பன்றி மண்டையர்களாகவே திரிகிறார்கள். தலையில் பான் பராக் துப்பிய மாதிரியே கலரிங் செய்து கொள்கிறார்கள். டி ஷர்ட் - ஜீன்ஸ் - அவ்வளவே. ஊரில் ஆண் பெண் என பேதமில்லாமல் எல்லோரும் கையில் ஒரு ஐஃபோன் வைத்திருக்கிறார்கள். கையைப் பிடித்த கரகரப்பு என எப்போதும் அதை நோண்டியபடியே இருக்கிறார்கள். ஒரு மணி நேரப் பயணத்தில்கூட பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவதை விட ஃபோனை நோண்டுவதே மக்களுக்குப் பெரிதாக இருக்கிறது. ஒரு மாதிரியான மெக்கானிக்கல் வாழ்க்கைக்குப் பழகிவிட்ட சூழல். வெளிப்படையாகச் சொன்னால் பெரிதளாவில் மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம் ஊரின் மீது இருக்கிறது. எனவேதான் சிங்கப்பூர் என்பது சுற்றிப்பார்ப்பதற்க்கான நகரமின்றி வாழ்வதற்கான நகரமாக எனக்குத் தட்டுப்படவில்லை.

சாயங்காலம் கான்ஃபரன்ஸ் முடிச்சுட்டு நேரா தியேட்டர். ட்ரஷர் இன் அப்படின்னு ஒரு சைனாக்காரன் படம். உள்ளே வெறும் ரெண்டே பேரு. ஆனா டாண்ணு சொன்ன நேரத்துக்கு படம் போட்டு முடிச்சு அனுப்புனானுங்க. அப்புறமேட்டுக்கு மால் பூரா சுத்தி ஆவ்னு வாயைப் பொளந்ததுதான் மிச்சம். விலை ஒவ்வொண்ணும் யானை விலை. ஒரு லிட்டர் தண்ணி எழுபது ரூபான்னா பார்த்துக்கிடுங்க. சும்மா வேடிக்கை பார்க்க, ஃபிகர்களைப் பார்க்க.. இப்படியே பொழுது போச்சு. சிட்டி ஹாலுக்கு நடுவுல அதிர்ஷ்டத்தின் நீரூற்றுன்னு ஒண்ணு வச்சிருந்தாய்ங்க. கைய நனைச்சு வேண்டினா நினைச்சது நடக்குமாம். வெளிநாட்டுலயும் இப்படி அஜால் குஜால் சமாச்சராங்களான்னு சிரிச்சுக்கிடே கைய நனைச்சுட்டு வந்தேன்.



வெளில வந்து நமக்கும் நண்பர் ரோஸ்விக்குக்கும் ஒரு சிக்கன் முர்தபா வாங்கிட்டு வீட்டுக்கு வந்தா தலைவர் வெற்றிக்கதிரவன் வந்திருந்தார். நல்லா வாசிக்குற மனுஷன். தனக்காக மட்டுமே எழுதுறேன்னு சொல்ற ஆளு. ரொம்ப ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாரு. அவரோட மொக்கை போட்டதுல நேரம் போனதே தெரியல. அப்படி இப்படின்னு ரெண்டு நாளு ஷாப்பிங் மால், கான்ஃபரன்ஸுன்னு சுத்தியாச்சு. அடுத்த நாள்ள இருந்துதான் உண்மையான சுத்தலை ஆரம்பிக்கணும்.

(பிரயாணிப்போம்..)

July 16, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர்(3)

வாழ்க்கையில மொதத் தடவையா ஃப்ளைட்டுல போறேன். மொத ரோல நடுசீட்டு. ஜன்னலோரம் கிடைக்கலைன்னு ரொம்பவே வருத்தம். ஆனா பக்கத்துல உக்கார்ந்து இருந்த நேபாள்கார கூர்க்கா பொண்ணு மாதிரி இருந்த கிளாமர் சப்ப மூக்கியப் பார்த்தவுடனே வருத்தம் எல்லாம் போயே போச்சு. இட்ஸ் கான். அந்நியமா இருந்தாலும் அம்சமான புள்ள. சரின்னு செட்டிலாயாச்சு. ராத்திரி எப்படியும் உக்கார்ந்துக்கிட்டே தூங்க முடியாது. நாலு மணி நேரம் பயணம். என்ன பண்ணலாம்னு யோசிச்ச நேரத்துல தூங்குறேன்னுட்டு அந்த கூர்க்கா பயபுள்ள நம்ம தோள்ல சாயுது. அப்புறமென்ன.. அவள வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கிட்டே போயிச் சேர வேண்டியதுதான்.


சொன்ன நேரத்துக்கு வண்டி கெளம்பிருச்சு. உள்ளூர் பஸ் ரேஞ்சுக்கே பேசுறேனோ? யோவ்.. டைகர் ஃப்ளைட்டு அப்படித்தான்யா இருந்துச்சு. ரன்வேல ஒரு அஞ்சு நிமிஷமா கட்ட வண்டி போற மாதிரியே உருட்டிக்கிட்டு இருந்தாய்ங்க. டேய் என்னாங்கடா இது இதான் பறக்குறதா விட்டா இப்படியே சிங்கப்பூருக்கே போய்ச் சேர்ந்துருவாய்ங்க போலயேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது பேய் பிடிச்ச மாதிரி திடீர்னு வண்டியோட வேகம் கூடுது. நாலு செகண்ட்ல அப்படியே குப்புன்னு ஏதோ ஒண்ணு அடிவயத்தக் கவ்வ பறக்க ஆரம்பிச்சாச்சு. ஹை.. நான் பறக்குறேன். நல்லாத்தான் இருந்தாலும் வண்டியை அப்படி இப்படி லைட்டா ஆட்டும்போது மட்டும் அல்லையப் பிடிக்குது. என்னன்னாலும் வீட்டுக்கு ஒத்தப்பையன் பாருங்க.. பயம் இருக்கும்ல.

பறக்க ஆரம்பிச்சு நானும் ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா ஒண்ணு கூட கண்ணுல தட்டுப்படல. பொறுக்க மாட்டாம இன்னொரு பக்கத்துல இருந்தவர்கிட்ட கேட்டுட்டேன். “ஏங்க.. இந்த ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் வந்து குடிக்க ஏதும் தர மாட்டாங்களா?” மனுசன் ஏற இறங்கப் பார்த்துட்டு சொன்னார். “தம்பி, இது பட்ஜெட்டு ஏர்லைன்ஸ். மொத விஷயம்.. இதுல எந்த ஃபிகரும் ஏர் ஹோஸ்டஸா வர மாட்டா எல்லாம் ஹோஸ்டந்தான். ரெண்டாவது.. உனக்கு ஒரு வாய்த்தண்ணி வேணும்னாலும் விலைக்கு வாங்கித்தான் குடிக்கணும். ரைட்டா?” அதுக்குப்பொறவு அங்க பேச என்ன இருக்கு. மொத்தமா ப்யூஸ் போயிருச்சு. நானுண்டு நம்ம நேபாள் ஃபிகரோட ஹீட்டருண்டுன்னு பொழுது ஓடிப்போனதுல நாலு மணி நேரம் போனதே தெரியல.

பளபளான்னு வானம் விடியுற நேரம் காலை ஏழு மணிக்கு வெற்றிகரமாக தனது முதல் விமானப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட பாண்டியன் சிங்கை விமான நிலையத்தில் தரையிறங்கினார். (வரலாற்றுக் குறிப்புய்யா) இமிக்ரேஷன் முடிஞ்சு வெளில வந்தப்ப ஒரு உருவம் நின்னு கையாட்டி காமிச்சுகிட்டு நமக்காக காத்து இருந்தது. அந்த மனுஷனப் பத்திக் கொஞ்சம் பேசிட்டு நம்ம பயணத்தத் தொடருவோம்.


ரோஸ்விக் - காளையார்கோயிலைச் சேர்ந்த மனுஷன். கலகலப்பான ஒரு ஆளுன்னு சொல்றத விட கலாட்டாவான ஆளுன்னு சொல்லலாம். இருக்குற இடத்த தன்னோட கிண்டல் பேச்சாலையும் உற்சாகத்தாலையும் நிறைக்குற மனுஷன். மதுரைல நம்ம சீனா அய்யா வீட்டுலதான் மொதத் தடவையா சந்திச்சேன். தடதடன்னு வாய் மூடாம ஒளட்டுர என்னாலயே அவர் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியலைன்னா பார்த்துக்கோங்க. சிரிக்க சிரிக்க பேசிட்டு இருந்தாரு. எஸ்ராவோட “தேசாந்திரி”ய வாங்கிக் கொடுத்து அனுப்பி வச்சோம். அதுதான் அவரோட நடந்திருந்த ஒரே சந்திப்பு. ஆனா நான் சிங்கை வர்றேன்னு சொன்னவுடனே எல்லாம் நாம பார்த்துக்கலாம், மூணு நாள் உங்க கூட இருந்து நானே சுத்திக் காமிக்குறேன்னு சொல்லிட்டாரு. நான்னு இல்லை, நம்ம மக்கள் யாரு போனாலும் அம்சமா கவனிக்கக் கூடிய ஆளு - அதுதான் ரோஸ்விக்.

வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க எல்லாம் முடிஞ்சு ஏர்போர்ட்லயே ஒரு டீயப் போட்டோம். நீங்க ரூம் போட்டிருக்கிற இடம் ரொம்பத் தூரம் அங்கெல்லாம் போக வேண்டாம்னு சொல்லி தன்னோட வீட்டுலையே தங்கச் சொல்லிட்டாரு. கையில ஒரு பஸ் கார்டு, சிம்கார்டும் வந்துருச்சு. பஸ் கார்டு நம்ம ஊரு ஏடிஎம் கார்டு மாதிரி இருக்கு. ஊருக்குள்ள எங்க சுத்துறதுன்னாலும் அதுக்கு அந்த ஒரே கார்டுல வேலை முடிஞ்சு போகுது. மொத வேலையா நான் யுனிவர்சிடில போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரணும் சொன்னேன். நீங்க போக வேண்டிய வழிய மேப் போட்டுத் தர்றேன்னு சொல்லி எழுதித் தந்துட்டு ரோஸ்விக் வேலைக்குக் கிளம்பிட்டாரு.



டிரைன் ஸ்டேஷன் ஃபுல்லா ஏசி, டிரைனுக்கு உள்ளயும் ஏசி, ஏசியோ ஏசி. டிரைன் உள்ளே ஏறினா அப்படியே நெஞ்ச அடைக்குது. அவ்ளோ சுத்தமா, அவ்ளோ அழகா ட்ரைய்ன வச்சுக்க முடியுமா என்ன? கம்பின்னு வச்சா ஒருத்தர் வேணும்னா பிடிச்சுக்கிட்டு நிக்கலாம்னு கம்பிய மூணா வகுந்து வச்சு.. எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி கட்டி இருக்குற ஒரு நகரத்துக்குள்ள நான் நுழைஞ்சு இருக்கேன். ஜன்னல் வழியா பராக்கு பார்த்துக்கிட்டே வர்றேன். எல்லாம் மெகா சைஸ் கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள். நான் போகவேண்டிய சிட்டிஹால் நிலையத்துல இறங்கிக்கிட்டேன். மொத தடவை ஊருக்குள்ள வர்றோம், வழி தெரியுமான்னு ஒரு பயம் இருந்தது. ஆனால் எறங்குனவுடனே எல்லாம் காணாமப் போச்சு. பத்தடிக்கு ஒரு போர்டு, எந்த வழில போகணும்.. எப்படிப் போகணும்னு. வழி நெடுக எஸ்கலேட்டர்கள். ஏதோ சினிமாக்கள்ல மட்டுமே பார்த்த விஷயங்களுக்கு நடுவுல நானும் நடந்துக்கிட்டு இருக்கேன்.

நேராப் போய் ரிஜிஸ்டர் பண்ணிட்டு மறுபடியும் டிரையினைப் பிடிச்சு பாசிர் ரிஸ்னு ஒரு ஏரியாவுக்கு வந்தாச்சு. அங்க இருந்த பஸ்ஸப் பிடிச்சு ரோஸ்விக் வீடு. நடுவுல குழலி, கோவியார், பிரியமுடன் பிரபு ஆகிய மக்கள்கிட்ட வந்தாச்சுன்னு அட்டெண்டன்ஸ் போட்டாச்சு. குளிச்சு முடிச்சு கிளம்பினப்போ நல்ல பசி. காலைல தோசை சோறு எல்லாம் எங்க கிடைக்கும்னு சொல்ல வந்த ரோஸ்விக் கிட்ட நான் சொன்னது, “எப்பவுமே அதைத்தான நண்பா சாப்பிடுறோம்.. அதனால ஒரு வாரம் சைனீஸ்தான்..”

பாசிர் ரிஸ் ஸ்டேஷன்ல இருந்த ஒரு சைனாக்காரன் கடைக்கு முன்னாடி நிக்குறேன். வாத்து கோழின்னு எல்லாம் முண்டமாத் தொங்குது. அங்க இருந்த ஏதோ ஒரு நூடுல்ஸ் படத்தக் காமிச்சு குடுறான்னு சொல்றேன். அவன் திரும்பி பார்த்து “ஸ்பைசி?”ன்னான். ஆமாண்டான்னு சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல சட்டியத் தூக்கிக் கொடுத்தான். உள்ள பார்த்தா நூடுல்ஸ் ஏதோ பிரவுன் கலர் மசாலால மொதக்குது. கூடவே கொஞ்சம் சிக்கன் துண்டுங்க. சாப்பிடலாம்னு ஃபோர்க்ல நூடுல்ச எடுத்தா கால் கிலோமீட்டர் நீளத்துக்கு வருது. அத எப்படி பிச்சித் திங்கன்னும் தெரியல. பக்கத்துல இருந்த டப்ஸா மண்டையன்லாம் என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே சாப்பிடுறாய்ங்க. சாப்பாட்டுல ஒரு மாதிரியான வாடை அடிக்கங்காட்டி ஒழுங்கா சாப்பிடவும் முடியல. ஒரு வழியா ஒப்பேத்திட்டு கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் போயிட்டேன். அன்னைக்கு மத்தியானமும் சாப்பாடு இதே லட்சணம்தான். அப்படியொரு கேவலமான பிரியாணிய அன்னைக்குத்தான் சாப்பிட்டேன். ஆனா கூட இருந்தவங்க எல்லாம் காணாததக் கண்ட மாதிரி அடிச்சுக்கிட்டு சாவுறானுங்க.

கான்ஃபரன்ஸ், சிட்டி ஹால் மால்னு சுத்திட்டு சாயங்காலமா வீட்டுக்கு வந்தேன். எட்டு மணி போல நண்பர் ரோஸ்விக் வந்து சேர்ந்தார்.

“என்ன தலைவரே சாப்பிடப் போகலாமா?”

“கண்டிப்பா நண்பா.. இங்க நம்ம ஊரு சாப்பாடு எங்க கிடைக்கும்?”

(பிரயாணிப்போம்..)

July 12, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர் (2)

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் ஒரு சுபயோக தினத்தில் அந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது.

“ஜூன் மாத இறுதியில் சிங்கையில் நடக்க இருக்கும் ICMAT சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள உங்கள் ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டுள்ளது..”

அடப்பாவிகளா.. நான் எழுதுனதையும் ம்ம்மமமதிச்சு ஒருத்தன் செலக்ட் பண்ணி இருக்கான்னா அவன் எம்புட்டு நல்லவனா இருப்பான்? உங்க ஊரா எங்க ஊரா.. சிங்கப்பூராச்சே.. கண்டிப்பா போறோம்னு முடிவு பண்ணியாச்சு.

பொதுவாகவே பிரயாணம் என்பது தனக்குள் பல புது அனுபவங்களைப் பொதிந்து வைத்திருக்கக் கூடியது. புதிய மனிதர்களின் சந்திப்பு அகவையமாக ஒரு மனிதனுக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். வெளிநாட்டுப் பயணம் நமக்கு புதியதொரு கலாச்சாரத்தையும் வாழ்வின் புது கோணங்களையும்..

அடக் கெரகமே என்னதான்டா சொல்ல வர்றன்னு கேக்குறவங்களுக்கு.. உள்ளூர்லயே நாயா சுத்துறவனுக்கு வெளிநாட்டுக்குப் பரதேசம் போக கசக்கவா போகுது.. வுடு ஜூட்.


சண்டெக் வளாகத்தில்

சிங்கை பதிவர் நண்பர்கள் பத்தி தருமி அய்யா சொல்லியிருந்தாலும், நண்பர் ரோஸ்விக் நமக்கு நல்லாத் தெரிஞ்சவர்னாலும், அப்பாவி முருன்னு ஒரு ஜீவன் அங்க இருக்குறதையே நான் மறந்து போனதாலயும்.. பெரிய அறிவாளி மாதிரி இங்க இருந்தே யுனிவர்சிடி ஹாஸ்டல்லயே ரூம் புக் பண்ணியாச்சு.

ஊருக்குப் போறதுக்கு மூணு நாள் முன்னாடிதான் தருமி மூலமா சிங்கை நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். எங்க போகலாம், எவ்ளோ செலவாகும்னு எல்லாம் கோவி அண்ணன் மெயில் பண்ணி இருந்தார். குழலியும் ஜெகதீசனும் நேர்ல வந்து பாக்குறதா சொன்னாங்க.

அன்னைக்கு சாயங்காலமே ரோஸ்விக் கிட்ட இருந்து போன். “ஏந்தலைவரே நாங்க இருக்கும்போது ஏன் வெட்டியா ரூம் புக் பண்ணினீங்க”ன்னு செல்லச் சண்டை. அப்புறம் ஏர்போர்ட்ல தானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரு.

அவரு போன வச்ச கொஞ்ச நேரத்துல அப்பாவி முரு. போன்லயே செம மாட்டு. “ஏன்யா எங்கள உங்களுக்குத் தெரியாதா.. நாங்க எல்லாம் இருக்கோம்ல.. வந்து சேருய்யா..” பாசக்காரப் பயபுள்ளைங்க. எங்கம்மாவுக்கு இதப் பார்த்து ஒரே குஷி. வெளிநாடு போய் ஒண்ணுந்தெரியாத தம்புள்ள(?!!) என்ன பண்ணுமோன்னு பயந்துக்கிட்டு இருந்தவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி. ரைட்டு.. பையனப் பார்த்துக்க அங்கன ஆளிருக்குன்னு சின்னதா சந்தோசம்.


நண்பர் ரோஸ்விக்கின் அலுவலக மாடியில்

ஜூன் 26 - ஞாயிறு சாயங்காலம் மதுரைல இருந்து திருச்சிக்கு கார்ல கிளம்பியாச்சு. போற வழில போற தெரிஞ்ச பக்கிக்கு எல்லாம் போனப் போட்டு ஒரே சலம்பல். “அப்புறம் மாப்ள.. நல்லா இருக்கியா? பேசி நாளாச்சுல.. ஆமாடா... இல்ல இல்ல.. கார்ல போயிட்டுருக்கேன். இன்னைக்கு நைட்டு சிங்கப்பூர் ஃப்ளைட்டு. அட ஆமாடா.. ஒரு கான்ஃபரன்சு.. அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு வரலாம்னு..”

வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டே இருந்த டாக்ஸி டிரைவர் கொஞ்ச நேரம் கழிச்சு என்னைக் கேட்டேபுட்டாரு.

“தம்பி மொதத் தடவையா வெளிநாடு போறீங்களோ..”

“ஹி ஹி.. ஆமாண்ணே”

“தெரியுது..”

திருச்சி விமான நிலையம். டைகர் ஏர்வேஸில் புக் செய்திருந்தேன். வெறும் ஹேண்ட் லக்கேஜ் மட்டும்தான். ஏழு கிலோ தான் கொண்டு போக முடியும்னு சொல்லிட்டாங்க. நான் கொண்டு போன பேக் பத்து கிலோ இருந்துச்சு. அப்புறம் பெரிய வருத்தத்தோட கொஞ்சம் டிரஸ், படிக்க வச்சிருந்த விஷ்ணுபுரம் எல்லாத்தையும் எடுத்து வீட்டுல கொடுத்து விட்டுட்டு மக்களுக்கு ஒரு பெரிய டாட்டா காட்டிட்டு உள்ள போயாச்சு.

கஸ்டம்ஸ் செக்கிங் முடிச்சு ஃபிளைட்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நண்பர்கள் சொன்னதெல்லாம் ஞாபகம் வருது. “மாப்ள.. மொத தடவை ஃபிளைட்டு.. லட்டு லட்டா பொண்ணுங்க ஏர் ஹோஸ்டசா வருவாளுங்க. வேணும்கிற மட்டும் சரக்கு எல்லாம் கிடைக்கும். ஹ்ம்ம்.. உனக்கும் அதுக்கும் ஆகவே ஆகாது. சொல்லி என்ன பிரயோசனம்.. உனக்குப் போயி இதெல்லாம் நடக்குது பாரு.. என்னமோ தொலை.. என்சாய் பண்ணிட்டு வாடா..”

லைட்டா வாயத் தொடச்சுக்கிட்டு பஸ்ல ஏறி எக்கச்சக்கமான கனவுகளோட ஃபிளைட்டுக்குப் போறேன். அங்கே ஸ்டெப்சுக்குப் பக்கத்துல நாலு மஞ்ச மாக்கானுங்க வெளிர்மஞ்சள் சட்டை போட்டுக்கிட்டு ”வெல்கம் ஆன் போர்ட் டூ டைகர் ஏர்வேஸ் சார்”னு சொன்னப்பவே எனக்கு மண்டைக்குள்ள மணி அடிச்சது.

(பிரயாணிப்போம்..)

July 8, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர்..!!!


கான்பரன்சில் காபா



நம் மூதாதைகளின் கூட்டத்தோடு (சிங்கை ஜூ)




ஹக்கியான் மீ - ஆக்டோபஸ் + இறால் + நூடுல்ஸ்... அவ்வ்வ்வ்..




யுனிவர்சல் ஸ்டுடியோ - செந்தோசா



ஆத்தா பழிவாங்குறா - ஒரு டெர்ரர் பயணம்



தானைத்தலைவன் ரோஸ்விக்கோடு




துரியன் கட்டிடத்துக்கு முன்பாக ஜம்பிங் ஜாக்


மேர்லியான் சிங்கமும் தமிழ்நாட்டு தங்கமும் (ஹி ஹி.. ஒரு வெளம்பரம்..)



சிங்கை பதிவர் சந்திப்பில்

கண்ணா இது சும்மா டிரைலர்தான்மா.. மெயின் பிக்சர் இனிமேல் வரும்..

உள்ளூர்ல சுத்துனாலே நாலு கட்டுரை வரும்.. இதுல சிங்கப்பூர் போயிட்டு சும்மா விடமுடியுமா?

சோ.. பிரயாணக் கட்டுரைகள் ஆரம்பம்..:-)))