February 26, 2012

விக்கிரமங்கலம் - பசுமை நடை


மதுரையைச் சுற்றி இருக்கும் சமணப் படுகைகளுக்குப் போய் வரும் பசுமை நடை நிகழ்வுக்காக நண்பர்களோடு விக்கிரமங்கலம் போயிருந்தேன். ஞாயிறு அன்று முகூர்த்த தினமாக இருந்தபோதும் காலை ஏழு மணி போல நூற்றுக்கும் குறையாத நண்பர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக வாசலில் குழுமி இருந்தார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த சாந்தலிங்கம் அய்யா உடன்வர அங்கிருந்து கிளம்பி செக்கானூரணி, கொங்கர் புளியங்குளம் வழியாக விக்கிரமங்கலம் நோக்கி பயணித்தோம்.

ஊருக்குள் நுழைவதற்கு சற்று முன்பாகவே வந்து விடுகிறது சமணர் மலை. மலையின் பெரும்பாலான பகுதியை கிரனைட்காரர்கள் வெடி வைத்துத் தகர்த்திருக்கிறார்கள் என்பதால் ஆங்காங்கே பாறைகள் பெயர்ந்து மூளியாக இருக்கிறது. சற்றே உள்வாங்கும் காட்டுப் பகுதிக்குள் நடந்து போனால் சமணர் குகைகளைப் பார்க்க முடிகிறது. தரையிலிருந்து இருபதடி உயரத்தில் மலையில் இயற்கையாகவே அமைந்த இரண்டு குகைகள். அதைப் பார்த்துவிட்டு எதிர்த் திசையில் நடந்தால் நாம் வந்து சேரும் இடம் முதலைக்குளம் மலை. மிகுந்த சிரமங்களோடு மலையேறி வந்தால் இங்கும் அதிக எண்ணிக்கையிலான சமணப்படுகைகள் காணக்கிடைக்கின்றன.



குகைகளின் வாசலில் அமர்ந்து சாந்தலிங்கம் அய்யா இந்த வரலாற்று சிறப்பு மிக்க தலத்தின் முக்கியத்துவங்கள் குறித்துப் பேசினார்.

நாம் முதலில் போன இடத்தின் பெயர் ராக்காச்சிப் புடவு. இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன. ஒரு குகையின் வாசலில்வேற்றாம்பூர் திருமனை செய்தவர்என்கிற பிராம்மி எழுத்துகளைக் காண முடியும். இங்கே வேற்றாம்பூர் எனும் ஊர் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரையைச் சுற்றி வேற்றாம்பூர் என எந்த ஊரும் இல்லை. ஆகவே இது சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்துக்கு அருகினில் இருக்கும் வேற்றாம்பூர் எனக் கொள்ளலாம். திருமனை அல்லது எண்மனை என்பது அறிவார்ந்த மக்கள் நிரம்பிய சபை எனப் பொருள்படும். ஆக, வேற்றாம்பூர் என்கிற கிராமத்தில் வாழ்ந்த உயர்ந்த மக்கள் செய்து கொடுத்த கற்படுக்கை என அர்த்தமாகிறது.



இரண்டாவதாக நாம் இப்போது நின்றிருப்பது முதலைக்குளம் மலை. இந்தப் பகுதியை பொதுமக்கள் பஞ்சபாண்டவர் குகை என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சமணப்படுகைகள் இருக்கிறதோ அந்த இடங்கள் எல்லாமே பொதுவாக பஞ்சபாண்டவர் குகை எனச் சொல்லப்படுவதன் பின்னாலிருக்கும் உளவியல் மிக முக்கியமானது. இந்தப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து கல்வெட்டுகள் வரை கிடைக்கின்றன. அவற்றில் எல்லாம் குவிரன் எனும் வார்த்தை பொதுவாக காணக்கிடைக்கிறது. இது குபேரன் எனும் வடமொழிச் சொல்லின் மருவாக இருக்கக்கூடும். அதே போல ஒரு குகையின் வாயிலில்எண்வூர் செழிவின் ஆதன்எனும் வாசகம் இருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் எண்வூர் எதுவெனத் தெரியவில்லை. செழிவின் என்பது செழியன் என்பதாகவும் ஆதன் என்பது செய்தவனின் பெயராகவும் இருக்கலாம். இன்னொரு படுகையின் மீது அந்தை பிகன் மகன் ஆதன் என்று பொறிக்கப்பட்டுள்ளது. பிகன் என்கிற தந்தையின் மகனான ஆதன் என்று இதற்குப் பொருள்.

வரலாற்று ரீதியாக இந்தக் குகைகள் மிக முக்கியமானவை. கீழக்குயில்குடி, யானைமலை போன்ற பகுதிகளில் இருக்கும் குகைகள் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டப்பட்டவை. ஆனால் இந்தப் படுகைகளோ 2300 வருடங்களுக்கு முந்தைவை. கி.மு காலத்தைச் சேர்ந்தவை. இங்கு வாழ்ந்த சமணர்கள் மீண்டும் இங்கே திரும்பி வந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. இன்னொரு முக்கியமான தகவல், இந்தக் குகைகள் பண்டைய காலத்தில் நடைபெற்ற வணிகத்துக்கு முக்கிய சாட்சியாக இருக்கின்றன என்பதாகும்.


புத்தம் பெருவணிகர்கள் மற்றும் கடல் சார்ந்த வணிகத்தைப் பெரிதும் ஆதரித்தது. எனவேதான் காஞ்சி போன்ற இடங்களில் புத்தவிகாரைகள் தோன்றின. ஆனால் சமணர்களை உள்ளூர் வணிகர்கள் ஆதரித்தனர். கேரளத்துக்கும் (சேர நாடு) மதுரைக்கும் (பாண்டிய நாடு) இருந்த வணிகத் தொடர்பை இந்த சமணக் குகைகளின் புவியியல் அமைப்பு தெளிவாகச் சொல்லும். இடுக்கி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அகஸ்டஸ் சீசரின் முகம் பொறித்த காசுகள் போலவே கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையத்திலும் கிடைத்து இருக்கின்றன. அதே வழியில் தொடர்ந்து வந்தால் சின்னமனூர், வீரபாண்டி ஆகிய ஊர்களில் சமண கோயில்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். இதன் தொடர்ச்சியாகவே விக்கிரமங்கலம், கொங்கர் புளியங்குளம் என்று சமணர்கள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். ஆக இந்த சமணக்குகைகள் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்கள்.

பிறகு சமணம் குறித்த நண்பர்களின் கேள்விகளுக்கு அய்யா பதில் சொன்னார். அதில் கழுவேற்றம் பற்றி அவர் சொன்னது மிக முக்கியமான தகவல். எட்டாம் நூற்றாண்டு போல எண்ணாயிரம் சமணர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு கல்வெட்டிலோ, இலக்கியத்திலோ எந்த ஆதாரமும் இல்லை. நான்கு நூற்றாண்டுகள் கழித்துத்தான் பெரியபுராணத்தில் இது பதிவு செய்யப்படுகிறது. மேலும் தக்கையாகப்பரணி எனும் ஒரு நூலில் மட்டுமே இது குறித்தான விவரங்கள் காணக்கிடைக்கின்றன. மேலும் சில நூற்றாண்டுகள் கழித்து ஆவுடையார் கோயில் போன்ற சில இடங்களில் இது குறித்தான ஓவியங்கள் வனையப்பட்டன. சமணர்கள் சைவத்தின் வருகையால் பாதிக்கப்பட்டது உண்மை ஆனால் கழுவேற்றம் நடந்தது என்பதை நம்மால் தீர்க்கமாகச் சொல்ல முடியாது.

தனிப்பட்ட முறையில் ஆசிவகம் பற்றியும் களப்பிரர் பற்றியும் சாந்தலிங்கம் அய்யாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். வெகு சுவாரசியமானத் தகவல்களைச் சொன்னார். விடைபெறும்போது மதுரையின் பாண்டி சாமி குறித்து அவர் சொன்னதுதான் அட்டகாசம். தமிழின் காவல் தெய்வங்களில் பாண்டி முனி என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஒன்று அது புத்தசாமி அல்லது சமணர்களின் அருகன். அவருக்குத்தான் மீசையை ஒட்டி பாண்டியாக்கி விட்டர்கள் என்றார். ஒருகணம் நெஞ்சடைத்ததற்கு எனது பெயரும் கூடக் காரணமாக இருக்கலாம். (பாண்டி சாமிக்கு வேண்டிக் கொண்டு பிறந்ததாலே தான் நான் பாண்டியன் ஆனேன்..)

பசுமை நடை முடிந்து மலையில் இருந்து இறங்கிய பின்பு நண்பர்கள் அனைவருக்கும் அருமையான காலை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு கட்டு கட்டி விட்டுக் கிளம்பினோம்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் தொடர்ச்சியான தங்களின் முயற்சிகளின் மூலம் இந்த பசுமை நடை நிகழ்வினை அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கும் நண்பர் .முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

February 22, 2012

உதிரிப்பூக்கள் - 7

ங்கள் குழாயடி குரூப்சின் மிக முக்கியமான ஆள் - கதாநாயகன் என்று கூட சொல்லலாம்- வீனா கூனா என்றும் "but" குமார் என்றும் "பாபா" குமார் என்றும் இன்னும் பல பெயர்களாலும் அழைக்கப்படும் வீரக்குமார் தான். நாம் சொல்வது எதையாவது ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேரடியாகச் சொல்லாமல் மென்று முழுங்கி "நீ சொல்றது சரிதான், பட்..." என்று ஜல்லியடிப்பதால் "பட்" குமார். பாபா வெளியான நேரத்தில் நானும் போஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று நடுரோட்டில் நட்டமாய் நிற்க வழியில் வந்த மாடொன்று மிரண்டு முள்ளுக்காட்டுக்குள் தவ்வி ஓடக் காரணமென்பதால் "பாபா" குமார். இப்படியாக நம்மாளுக்கு பல செல்லப்பெயர்கள்.

ரயில்வே காலனியில் எங்கள் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளித்தான் குமாரின் வீடு இருந்தது. அவனுடைய மொத்தக் குடும்பமுமே ரொம்ப வீரமான குடும்பம், பெயரில் மட்டும். வீரம்மா, வீரலட்சுமி, வீரவேல் என அவன் உடன்பிறந்தோர் தொடங்கி அவனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயின் பெயர் கூட வீரராஜா தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது தங்கள் வீரத்தை வெளிக்காட்ட குடும்பமாக உட்கார்ந்து சீட்டு விளையாடுவார்கள். பெரும்பாலும் ஆஸ்தான். அதில் எப்படிப் பார்த்தாலும் தோற்பது குமாராகத்தான் இருக்கும். தோற்பவர்கள் எல்லாரையும் உப்பு மூட்டை சுமக்க வேண்டும் என்பதை அவன் வெகு சந்தோசமாகச் செய்வான். அதற்காக வேண்டுமென்றே தோற்றுப் போகுமளவுக்கு பாசக்காரப் பயபுள்ள அது.

ன் வீட்டு மக்கள் மீது குமாருக்கு ரொம்பப் பிரியம். தனக்கென எதையும் தனியாக வாங்காமல் என்ன வாங்கினாலும் மொத்த குடும்பத்துக்கும் சேர்த்துத்தான் வாங்குவான். வீட்டுக்கு ரொம்ப அடங்கிய பிள்ளை. நாங்கள் எல்லாம் பள்ளி விட்டு வந்து விளையாடப் போனால் அவன் தொரட்டி எடுத்துக்கொண்டு தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை வெட்டிப் போடப் போவான். வேலை எல்லாம் முடித்த பின்னும் கூட அவன் அம்மாவிடம் அனுமதி கேட்டு பின்பே எங்களோடு விளையாட வருவான். ஆக மொத்தம் குணங்களைப் பொறுத்தவரை குமார் அப்படியே எனக்கு நேர்மாறாக நல்லவனாக இருந்தான்.

இருந்தான் என நான் சொல்லக் காரணம் இருக்கிறது. இந்த நல்ல குணமெல்லாம் நான் அவனோடு சேரும் வரைதான். அதன் பின்பாக பன்றியோடு சேர்ந்த கன்றுக்கட்டியும் என்பதைப் போல. கொஞ்ச நாட்களிலேயே குமாரின் அம்மா கண்ணீரும் கம்பலையுமாக எனது அம்மாவிடம் வந்து நின்றார்.

"கார்த்தி அம்மா.. உங்க மவன்கிட்ட சொல்லி வைங்க.. எம்பையன் ரொம்ப நல்லவன். ஒண்ணுக்குப் போகணும்னா கூட என்கிட்டே கேட்டுட்டுத் தான் போவான். ஆனா நேத்திக்குச் சாயங்காலம் எனக்குத் தெரியாம முக்குக் கடையில உங்க பையன் கூட நின்னு டீ சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். பார்த்த நிமிஷம் எனக்குக் குலை எல்லாம் ஆடிப் போயிருச்சு.. எப்படி இருந்த பய.."

அப்புறம் எனது அம்மா என்னைக் கூப்பிட்டு திட்டி.. பின்பு குமாரைக் கூப்பிட்டு மிரட்டி.. இனிமேல் ஒழுங்காக அம்மாவிடம் சொல்லிக் கொண்டுதான் ஒன்றுக்குப் போகணும் சரியா என்று பயலை சம்மதிக்க வைத்தபின்தான் அவனது அம்மா அமைதியானார்.

குமார் ரொம்ப நல்லவந்தான். ஆனால் அவனிடம் ஒரே ஒரு சிக்கல் இருந்தது. மனசுக்குள் தானொரு மன்மதக்குஞ்சு என அவனுக்கு நினைப்பு. நண்பர்கள் எல்லாரும் நடந்து போய்க் கொண்டிருப்போம். ஏதாவது பிகர்கள் கடந்து போகும். தாண்டிப் போனவுடன் பயல் எங்களிடம் கிசுகிசுப்பாகச் சொல்லுவான்.

"மாப்ள.. இப்பப் போனவள்ள ஒருத்தி என்னையவே பார்த்துக்கிட்டுப் போனாடா.."

"அதெல்லாம் இல்ல.. நாங்களும் உன்கூடத்தானடா வர்றோம்.."

"போங்கடா.. உங்களுக்கு எல்லாம் பொறாம.... அவ எனக்குக் கை கூட காமிச்சுட்டுப் போனா தெரியுமா.."

நெனப்புத்தான் பொழப்ப.. சனியன் தொலையட்டும் என்று விட்டு விடுவோம்.

பெண்களைப் பொறுத்தவரைக்கும் குமாரின் ராசியே தனிதான். அவன் அவர்களை லவ் பண்ணக் கூட வேண்டாம். மாப்ள அவ அழகா இருக்காள்ல என்று ஒரு தரம் பார்த்தாலே போதும். மிகச் சரியாக மூன்று மாதத்துக்குள் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிடும் இல்லையென்றால் அவள் யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடி விடுவாள். அதற்காகவே கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் குமார் தங்களை பார்க்க மாட்டானா என ஏங்குவதாக குமாரின் தங்கை ஒரு தடவை சொல்லிவிட எங்கள் கூட்டமே அவனை ஓட்டி எடுத்து விட்டது. ஆனால் நடப்பது எதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்கிற யோகி போல குமார் தனது கலர் பார்க்கும் கடமையைத் தவறாமல் செய்து கொண்டுதானிருந்தான்.

காலனியில் நாங்கள் இருந்த லைனில் மொத்தமே இருபது வீடுகள். அதில் தேறக்கூடியது என்று பார்த்தால் நாலைந்து பிகர்கள் மட்டுமே. ஆனால் அதிலும் குமாருக்கு வித்தியாசமான ஒரு கொள்கை இருந்தது. "மாப்ள.. ஆறுல இருந்து அறுபது வரைக்கும்.. பாரபட்சம் இல்லாமப் பாக்கணும்டா" என்பான். எங்கள் குழாயடி குரூப்சில் ரொம்பத் தெளிவாகவே சொல்வார்கள்.

"நம்ம நெட்ட கார்த்தி இருக்கானே.. சூப்பர் பிகரக் கூட ஓகேன்னுதான் சொல்லுவான். கிழிஞ்சது கிழியாதது, பட்டன் வச்சது வைக்காதது கூட சூப்பர்னு சொல்றது நம்ம குமார்தாண்டா..."

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் லைனுக்கு அந்தப் பெண் புதிதாக வந்து சேர்ந்தாள். எரிந்து ஓய்ந்த இரண்டு ஊதுபத்திகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்த மாதிரி இருப்பாள். ஏதோ இத்துப் போன ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள். எனவே எப்போதும் வெள்ளை சேலைதான். அவள் வந்தாலே நான் அரை கிலோமீட்டர் தூரம் ஓடி விடுவேன். ஆனால் குமாருக்கு அவளை ரொம்பப் பிடித்து விட்டது. வொயிட் ரோஸ் என அவளுக்குப் பெயரிட்டான். என் ஆவி பொருள் எல்லாமே அவளுக்குத்தான் எனச் சபதம் செய்து அவளைத் துரத்தத் தொடங்கினான். அந்தப் பெண் வேறு ஒன்றிரண்டு முறை இவனைப் பார்த்து சிரித்து வைக்க பயலைக் கையில் பிடிக்க முடியவில்லை.

நன்றாக சந்தோசமாக சுற்றிக் கொண்டிருந்தவன் ஒருநாள் முகம் பூராவும் களையிழந்து திரும்பி வந்தான். என்னடா ஆச்சு என நண்பர்கள் எல்லாரும் விசாரித்தோம். அந்தப் பெண்ணின் அத்தை பையன் ஒருவன் இவனை மார்க்கெட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி இருக்கிறான். அவனை உடனடியாக ஒருகை பார்க்க வேண்டும் என ஒரே பிடிவாதம். டேய் வேண்டாம்டா என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். சரி என்று நண்பர்கள் அனைவரும் மார்க்கெட்டுக்குக் கிளம்பிப் போனோம். அங்கே அந்த அத்தை பையன் நண்பர்களோடு கேரம் ஆடிக் கொண்டிருந்தான். நண்பர்கள் எல்லாரையும் இருக்கச் சொல்லிவிட்டு நானும் குமாரும் அவனிடம் போனோம். என்ன என்பதாக என்னை நிமிர்ந்து பார்த்தவனிடம் நாலே வார்த்தைதான் பேசினேன்.

"ஏண்டா.. உனக்கு எல்லாம் வெக்கமா இல்லையா.. இவன்தான் கண்ணு தெரியாமப் போய் அவ பின்னாடி சுத்துறான்னா.. நீ கத்தி எல்லாம் வேற காமிச்சு மிரட்டி இருக்க. ஒரு நல்ல பிகருக்காக அடிச்சுக்கிட்டாக் கூட பரவாயில்ல.. அவளுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. இந்த லட்சணத்துல சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண நாங்க நாலு பேரு வேற.. தூ.."

அத்தை பையன் என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான். ஆனால் அன்றைக்கு குமார் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே.. அதன் பிறகு பெண்கள் சார்ந்த எந்த விசயத்துக்கும் அவன் என்னைக் கூப்பிடுவதே இல்லை. இது நடந்த சில நாட்களில் வொயிட் ரோஸ் கூட வேலை பார்த்த ஒருவனோடு எஸ்சாகிப் போன தகவலைக் குமார் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

குமாரின் அப்பாவுக்கு ரிட்டையராக இரண்டு வருடம் இருக்கும்போது கிரேடு - 1 ஆக பதவி உயர்வு கிடைத்தது. எனவே வீடு மாற்றிக் கொண்டு சென்ட்ரிங் வீடுகள் இருந்த பகுதிக்குப் போய் விட்டான். இருந்தாலும் அவ்வப்போது எங்கள் குழாயடி சந்திப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. ஒருநாள் ராத்திரி பத்து மணிக்கு குமாரின் அம்மாவிடம் இருந்து கால் வந்தது.

"உடனே கிளம்பி வாடா.."

வீட்டுக்குப் போனால் எல்லாரும் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். குமார் தேமேவென ஓராமாக உட்கார்ந்து இருந்தான்.

"என்னக்கா ஆச்சு.."

"அத உன் பிரண்டுக்கிட்ட நீயே கேளு.."

பிரச்சினை இதுதான். குமார் வீட்டுக்கு எதிர்வீட்டில் ஒரு பெண். அதற்கு நம்மாள் வைத்திருந்த செல்லப் பெயர் லேசர் லைட். அவளைக் கல்யாணம் செய்ய வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறான். அதில் அவன் அம்மாவுக்கு உடன்பாடு இல்லை. அவர்களுக்குத் தெரிந்தே அந்தப் பெண்ணுக்கு பலரோடு பழக்கம் உண்டு என்பதால் மாட்டேன் என்கிறார்கள்.

"நீயே அவன்கிட்டப் பேசி ஒரு முடிவெடுக்கச் சொல்லு.."

அங்கே பேச முடியாது என்பதால் அவனைக் கூட்டிக் கொண்டு சாமி வீட்டுக்குப் போனேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். எவ்வளவு முடியுமோ அவ்வளவும் சொல்லி முடித்தேன். எல்லாம் கேட்டு விட்டு கடைசியாகச் சொன்னான்.

"நீ சொல்றது சரிதான். பட்.. நான் ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது.."

"நாசமாப் போச்சு.. ஏண்டா நாயே.. அதைத் தாண்டா ரெண்டு மணி நேரமா சொன்னேன்.. "

இரண்டே வாரத்தில் அவனுக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்து விட்டார்கள். சோகம் எல்லாம் அடங்கி இருக்கும் என நான் நம்பிய சில நாட்களுக்குப் பிறகு பயலைப் பார்க்கப் போயிருந்தேன். சிரித்தபடி வாடா வாடா என்றவன் என் மொபைலைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.

"கொஞ்ச நேரம் அவக்கிட்ட பேசிட்டு வர்றேண்டா மாப்ள.."

அந்தக் கொஞ்ச நேரம் அவனது பாஷையில் இரண்டு மணி நேரம் என்பதாக இருந்தது. முன்னூறு ரூபாய் பாலன்ஸ் தீர்ந்த பிறகு போனை என்னிடம் கொடுத்து விட்டு ஒரு ரூபா காயின் போனைத் தேடித் போய் விட்டான்.

அப்ப லேசர் லைட்? அதுதான் குமார்.

போன மாதம் குமாரைப் பார்க்க அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயா இப்போது மதுரையின் பெரிய ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஆண் ஒன்று பெண்ணொன்று என இரண்டு பிள்ளைகள். வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தன. வாங்கிப் போயிருந்த தின்பண்டங்களை அவனது மனைவியிடம் கொடுத்து விட்டு இரண்டு பேரும் வெளியே வந்தோம். சாவகாசமாக அருகில் இருந்த கம்பத்தில் சாய்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று ஷார்ப் ஆனான்.

"மாப்ள.. சட்டுன்னு திரும்பிடாத.. எதுத்த வீட்டுல புதுசா ஒரு ஆண்ட்டி குடி வந்திருக்கு.. வெளில நின்னு என்னையவே பார்த்துக்கிட்டு இருக்காடா.."

த்தாளி.. நீ திருந்தவே இல்லடா.

February 15, 2012

உதிரிப்பூக்கள் - 6

விளக்குத்தூணிலிருந்து திருமலை மன்னர் மகாலுக்குப் போகும் வழியில் ஒரு பழமையான வீடு இருக்கிறது. பிரம்மாண்டமான தூண்களுடன் செட்டிநாடு பாணியில் கட்டப்பட்ட வீடு. கட்டி முடித்து எப்படியும் நூறு நூற்றைம்பது வருடங்கள் இருக்கும். வீட்டைச் சுற்றி புதுப்புது கடைகள் வந்து விட்டபோதும் அந்த வீடு மட்டும் அங்கே தனித்துத் தெரியும். குறிப்பாக இரவு நேரங்களின் சோடியம் மஞ்சள் வெளிச்சத்தில் வீடு இன்னும் அழகாக இருக்கும். அதைக் கடந்து போகும் போதெல்லாம் மறக்காமல் வீட்டின் உள்ளே முற்றத்தைப் பார்த்தபடியே போவேன்.

அதற்குக் காரணம் அங்கே இருக்கும் ஒரு கிரேக்கத் தேவதையின் சிலை. வெகு நாட்களாக அந்தச் சிலையை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குப் போனேன். என் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வயதான பெண்மணி ஒருவர் வந்தார். கண்களில் குழப்பத்தோடு என்ன என்பதாகப் பார்த்தார்.

"வணக்கம்மா.. நான் இங்க பஜார்லதான் இருக்கேன். கொஞ்ச நாளாவே உங்க வீட்டைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். பழைய காலத்து வீடு. ஆனா உள்ள இருக்க அலங்காரம் எல்லாம் இந்தக் காலத்துது. ஒரு வித்தியாசமான கலவையா அழகா இருக்கும்மா. அதோட அந்தத் தேவதை சிலை.. அதைக் கிட்டத்துல பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்குங்க.."

நான் பேசப் பேச அந்த அம்மாவின் கண்களில் குழப்பம் நீங்கி ஒரு தெளிவும் சின்னதொரு பெருமிதமும் வந்தது.

"உள்ள வாங்க தம்பி.. வந்து பாருங்க.. எம்மவன் சிவில் எஞ்சினியரு.. இந்த பொம்மை.. அலங்கார வெளக்குங்க.. அவனோட வேலைதான் இதெல்லாம்.. இப்போ துபாய்ல இருக்கான்.."

நான் அருகில் சென்று அந்த சிலையைப் பார்த்தேன். பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்த சிலை. கையில் இசைக்கருவி ஒன்றை ஏந்தி யாருக்காகவோ காத்து நிற்கும் தேவதை. நிஜமாகவே தேவதைதான். நெளிநெளியான தோள் தொடும் கூந்தலும் முகத்தில் இருந்த சந்தோசமும் என அதைச் செய்த மனிதர் வெகு ரசனையாக உருவாக்கி இருந்தார். வெகு நேரம் கழித்து அந்த அம்மாவிடம் நன்றி சொல்லி விடைபெற்றேன். பழமையும் புதுமையும் ஒன்றாகச் சேர்ந்து வேறொரு நிறத்தைத் தரும் அந்த வீட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

தே மாதிரியான பழமை புதுமை என இரண்டும் கலந்த தன்மையுடைய ஒரு நகரமாகத்தான் மதுரையும் இருக்கிறது.

மதுரையை நகரம் எனச் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது ஒரு வளர்ந்த கிராமம். அவ்வளவே. பெரியளவில் தொழிற்சாலைகளோ தொழில்நுட்ப வசதிகளோ இல்லாத ஊர். பெரும்பாலான மக்களுக்கு வியாபாரம்தான். ஆனால் வரும் மக்கள் அனைவருக்கும் ஏதோவொரு பிழைப்பு கண்டிப்பாகக் கிடைக்கும். இன்றைக்கும் படிப்பு முடித்து வேலைக்காக வெளியே எங்காவது போகவேண்டிய சூழல். ஆனால் எங்கு போனாலும் மதுரையைத் தங்கள் மனதில் நினைவிலும் சுமந்து திரியும் மக்கள்.

ஊரைப் பொறுத்தவரை இரண்டாகப் பிரிக்கலாம். ஆற்றுக்கு அந்தப்பக்கம் பாதி. மீதி, ஆற்றுக்கு இந்தப்பக்கம், மீனாட்சி கோவிலைச் சுற்றி இருக்கும் பகுதி. சந்தையில் இருந்துதான் ஊரின் மற்ற பகுதிகளுக்கான போக்குவரத்து நடக்கும். ஊரெல்லாம் தூங்க ஆரம்பிக்கும் நடுராத்திரியில் யானைக்கல் பகுதி முழித்துக் கொள்ள மதுரையின் தினம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் என லோடு வந்து இறங்க இறங்க வியாபாரிகளின் கூட்டம் பெருகியபடி இருக்கும். ரெண்டு மணிக்குப் போனால் கூட மக்கள் சூடாக வடையும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். காலைல நாலு மணின்னாலும் சரி ராத்திரி பன்னெண்டு மணின்னாலும் சரி வட தின்னுக்கிட்டுத் திரியுறது உங்க ஊர்க்காரவுங்க தாண்டா என நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்வதுண்டு.

சொந்த ஊரைப் பற்றிப் பேசும்போது யாராக இருந்தாலும் ஒரு இன்ச் கூடுதலாக வளர்வது இயல்புதான். ஆனால் மதுரைக்கார மக்களுக்கு அது கொஞ்சம் ஜாஸ்தி. மதுரையைச் சுற்றின கழுதை வேறெங்கும் சுற்றாது என்று தங்களைக் கழுதை என்று சொல்லிக் கொண்டாலும் கூட ஊரை விட்டுக் கொடுக்காதவர்கள். சினிமாக்களில் சொல்வது போல எந்நேரமும் சண்டைக்கு அலையும் மனிதர்கள் இங்கே கிடையாது. வெள்ளந்தியான ஆட்கள். ஆனால் வம்பென்று வந்தால் ஒருகை பார்த்து விடக்கூடியவர்கள்.

மதுரை மக்களுக்கு எனப் பிரத்தியேக குணங்கள் சில உண்டு. பொதுவாக ரோட்டுக்கு நடுவில்தான் நடந்து போவார்கள். வாகனங்களில் யார் வந்தாலும் ஒதுங்க மாட்டார்கள். ஆனாலும் பின்னால் வண்டியில் வருபவர்கள் கண்டிப்பாக பெல் அடிக்க வேண்டும். அது எதற்கென்றால், நடுவில் நடுப்பவர்கள் திடீரென்று ஓரமாக ஒதுங்கப் போய், சுற்றிக் கொண்டு போகும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நேர்ந்து விடக் கூடாதில்லையா? அதே மாதிரிதான் மதுரை மக்களின் மொழியும். அவய்ங்க இவய்ங்க அங்கிட்டு இங்கிட்டு கிட்டத்துல என்பதான பல வார்த்தைகளை வைத்தே மதுரைக்காரர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

வண்டி ஓட்ட வேண்டுமென்றால் என்ஜினை ஸ்டார்ட் செய்வது ஆரம்பம் என்பது போல பேச்சை ஆரம்பிக்க வேண்டுமென்றால் ..க்காலி, ..த்தாளி என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் எனத் தீவிரமாக நம்பக்கூடிய நிறைய மக்கள் இங்கே உண்டு. அதே மாதிரியான இன்னொரு விஷயம் போஸ்டர் கலாச்சாரம். காதுகுத்து மொட்டை சாவு கல்யாணம் கருமாதி எனப் பாகுபாடு இல்லாமல் எல்லா விசயத்துக்கும் சகட்டுமேனிக்கு போஸ்டர்கள் தூள் கிளப்பும். ஆனால் பலமுறை அந்தப் போஸ்டர்களுக்கு எனத் தனியாக ஒரு ப்ரூப் ரீடர் இல்லையே என்று பார்ப்பவர்கள் மனம் கலங்க நேருவதும் உண்டு. அம்மாதான் ஆலனும் தமிள்நாடு நாலா வாலனும் என்கிற ரீதியிலான போஸ்டர்களைப் பார்க்கும்போது தமிழ்ச்சங்கம் வைத்த மதுரை பற்றித் தெரிந்த மக்களுக்கு ரத்தக்கண்ணீர் கூட வந்திடும் வாய்ப்புண்டு.

துரையின் மிக முக்கியமான விஷயம் - கோவில்கள். மீனாட்சி கோவில் பற்றியோ அழகர் திருவிழா பற்றியோ நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் முக்குக்கு முக்கு குடி கொண்டிருக்கும் முப்பிடத்தி அம்மன் மற்றும் குலம் காத்த அய்யனார் பற்றியும் நாம் கண்டிப்பாகப் பேச வேண்டியிருக்கிறது. போன வாரம் கூட எனது கல்லூரியில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிய வேப்ப மரம் கொண்ட காளியாத்தா கோவில் ஒன்று உருவாகி இருக்கிறது. நாலுக்கு நாலு என்கிற ரீதியில் சின்னஞ்சிறு குடிசைகளில் திருப்தி அடையும் இவர்களின் கோவில்கள் எல்லாமே பெரும்பாலும் சாலைகளின் போக்குவரத்தைக் காலி செய்வதாகவே இருக்கும். அதிலும் ஆடி மாதம் வந்துவிட்டால் இந்த சாமிகளின் கொண்டாட்டம் தாங்க முடியாது.

பெரிய பந்தல் போட்டு சாலையை அடைத்து விளக்கு பூஜை முளைப்பாரி அன்னதானம் எனத் தூள் கிளப்பும் கோவில் திருவிழாக்களில் கட்டாயமாக நடன நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெறும். அது என்ன மாயமோ மந்திரமோ.. பெரும்பாலான நடனக் குழுக்களின் பெயர் அபிநயா என்பதாகவே இருக்கும். சன் டிவி புகழ், ராஜ் டிவி புகழ் என்று ஆரம்பித்து வெறும் அபிநயா, குயில் அபிநயா, டிஸ்கோ அபிநயா என்று எங்கும் அபிநயாவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும்.

ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அறிவிப்பு செய்பவர் பேசுவது மாதிரியான தமிழை நீங்கள் வேறெங்கும் கேட்க முடியாது. அடுத்ததாதாதாதாக வர்ர்ரர்ர்ர்ர்ர இருக்கும் பாஆஆஆஆடல் எங்க்ள் நடனக்குழ்வின் சூஊப்பர் ஸ்தாஆஆர் ரஜினிகாந்தின் பாபா படப்பாடல். விளக்குகள் எல்லாம் அணைத்து விடுவார்கள். தாடி வைத்து தலைப்பா கட்டின ரஜினி கெத்தாக மேடைக்கு நடுவே வந்து முத்திரை காண்பித்தபடி நிற்பார். அவரைச் சுற்றி சீமெண்ணெய் ஊற்றி தீயைப் பொருத்தி விடுவார்கள். இனி பாபா எனப் பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும். ஒருமுறை இதுமாதிரிச் செய்யப்போய் ரஜினியின் காலில் தீப்பிடித்துக் கொள்ள அவர் பரதநாட்டியம் ஆடியது கண்கொள்ளா காட்சி. ட்யூப்ளிகட் கமல்களும் விஜய்களும் அஜித்களும் எனத் திருவிழா களை கட்டும். எந்த நாள் எந்தக் கோயிலில் திருவிழா நடனம் எனப் பட்டியல் போட்டுக் கொண்டு போய் பார்த்த காலமும் உண்டு.

டிப்புக்காக காருண்யாவில் சேர்ந்த முதல் வருடம். அப்பாவின் ஓசி பாஸ் உதவியோடு வாராவாரம் ஊருக்கு வந்து விடுவேன். அதுமாதிரி கல்லூரிக்குத் திரும்பிப் போக வேண்டிய ஒரு ஞாயிறு. ராத்திரி பதினோரு மணிக்கு ரயில். காத்தோட்டமாக இருக்கட்டுமே எனக் கைலியோடு ஏறிப் படுத்து விட்டேன். காலை நாலு மணிக்கு ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது கல்லூரிப் பேருந்து தயாராக நிற்க தூக்கக் கலக்கத்தில் அப்படியே ஏறி விட்டேன். பிறகுதான் அது சீனியர் மாணவர்களோடு சேர்ந்து பயணிக்கும் வண்டி என்பது தெரிந்தது. சத்தமில்லாமல் ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்து கொண்டேன். யாரும் கவனிக்க வில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தவன் கல்லூரியை அடைந்து ஒவ்வொருவராக இறங்கிப் போனபின்பு மெதுவாக இறங்கினேன். யாரும் பார்க்கும் முன்பாக ஹாஸ்டலுக்குள் ஓடிவிட வேண்டும் என்று விரைந்தவனை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது. இரண்டாம் வருட மாணவர் கூட்டம் ஒன்று நின்று கொண்டிருந்தது .

"ஏன்டா.. நீ படிச்ச்சவந்தானே.. இப்படி காலேஜுக்கு கைலில வரலாமா.."

அமைதியாகத் தலைகுனிந்து நின்றேன்.

"எந்த ஊருடா நீயி.." ஒரு அண்ணன் கேட்டார்.

"மதுரைண்ணே"

சொல்லி முடிக்கவில்லை. பளாரென்று ஒரு அறை விழுந்தது.

"ஏண்டா நம்ம ஊர இப்படி அசிங்கப்படுத்துற.."

எரிச்சலாக வந்தது. அவர்களிடம் என்ன சொல்ல முடியும். நம்மீதும் தப்பு இருக்கிறது என அமைதியாக வந்துவிட்டேன். வெளியூருக்குப் போய் மதுரைக்காரன் என்று சொல்லி நான் முதல்முதலாக வாங்கிக் கட்டிக்கொண்டது அப்போதுதான்.

துவும் காருண்யாவில் நடந்ததுதான். மூன்றாம் வருடப்படிப்பின் ஏதோ ஒரு செய்முறைத் தேர்வு. வந்திருந்த எக்ஸ்டர்னல் ரொம்ப ஜாலியான மனிதராக இருந்தார். வைவாவுக்கான என் முறை.

"தம்பி எந்த ஊரு.."

"மதுரை சார்.."

"அடடே.. மதுரைன்ன ஒடனே உனக்கு என்னய்யா ஞாபகம் வரும்.."

"சார்.. மதுரை மல்லி சார்.."

"அடப்பாவி.. மீனாட்சி கோவில் இருக்கு, மகால் இருக்கு.. அதெல்லாம் தோணாதா?"

"இல்ல சார்.. டக்குன்னு கேட்டீங்களா.. இப்போ திருநெல்வேலின்னா அல்வா, திண்டுக்கல்னா பூட்டு , அதுமாதிரி மதுரைன்னா மல்லின்னு சொல்லிட்டேன் சார்.."

"ஆகா.. பொழச்சுக்குவடா.. இதுவரைக்கும் எத்தனை பேருக்கு மல்லி வாங்கிக் கொடுத்திருப்ப.."

"இதுவரைக்கும் இல்ல சார்.."

"அடப்பாவி.. சுத்தம்.. அப்போ இனிமே வாங்கித் தருவியா.. சூப்பர் சூப்பர்.."

என் வாழ்நாளில் நூற்றுக்கு நூறு வாங்கிய ஒரு செய்முறைத் தேர்வு அதுதான்.

பொதுவாக விஷாலின் படங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஆனால் திமிரு மட்டும் அதில் விதிவிலக்கு. குறிப்பாக இடைவேளைக் காட்சி. நாயகனிடம் அடிவாங்கிய வில்லனின் ஆள் கத்தியபடியே ஓடுவார்.

"இருடி.. எங்க ஊருக்காரன்களக் கூப்பிட்டு வந்து உன்ன பேசிக்கிறேன்.."

இப்போது விஷாலைக் லோ ஆங்கிளில் காட்டுவார்கள். வெறியோடு கத்துவார். பின்னணியில் கொஞ்சம் கொஞ்சமாக மதுரை மீனாட்சி கோயில் தோன்ற ஆரம்பிக்கும். எப்போது அந்தக் காட்சியைப் பார்த்தாலும் புல்லரிக்கும்.

"டேய்.. நானும் மதுரைக்காரந்தாண்டா.."

February 8, 2012

உதிரிப்பூக்கள் - 5

காருண்யாவில் பொறியியல் படிக்க சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே கல்லூரியின் கல்ச்சுரல் டீமில் எளிதாக இணைந்து கொண்டேன். தமிழ்ப்பேச்சு மற்றும் கட்டுரை எழுதுதல் இவற்றோடு மிமிக்ரியும் சுமாராக வரும் என்பதும் முதல் வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே சீனியர்களிடம் நிறைய மொத்து வாங்கி அவர்களோடு நான் நெருக்கமாக இருந்ததும் கல்லூரி அணியில் எளிதில் இடம் கிடைக்க உதவியது. என் நல்ல நேரத்திற்கு என்னுடைய இரண்டாம் வருடம் முதல் சினிமா நிகழ்வுகளில் பங்கு கொள்ளக்கூடாது எனும் விதிமுறையோடு மற்ற கல்லூரிகளின் கலை விழாக்களில் பங்கு கொள்ளலாம் என்கிற அனுமதியும் கிடைத்தது. பின்பு இதையே சாக்காக வைத்துக் கொண்டு செமஸ்டரின் பெரும்பகுதி நாட்கள் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருப்பது எங்கள் குழுவின் வழக்கமாக மாறிப்போனது. அதுமாதிரியான ஒரு பயணத்தின் போதுதான் திருச்சி ஆர்..சி கல்லூரியில் அவளை முதன்முறையாகப் பார்த்தேன்.

உலகக் கலாச்சாரத்தில் பாரதப் பண்பாட்டின் பங்களிப்பு என்கிற தலைப்பில் பேசவேண்டும். நிதானமாக எனது கருத்துகளை எல்லாம் சொல்லிவிட்டு மேடையை விட்டு நான் இறங்கியபோது அடுத்ததாக அவள் மேடை ஏறிக் கொண்டிருந்தாள். அடுத்த ஐந்து நிமிடத்துக்கு அங்கே இருந்த எல்லாரும் தங்களை மறந்து அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏற்ற இறக்கத்துடன் அவள் அத்தனை அழுத்தம் திருத்தமாகப் பேசியது இருக்கிறதே.. அப்பா.. பெண்களால் மட்டும்தான் அப்படிப் பேச இயலும். அதிலும் அவளால் மட்டுமே முடியும் என்று அன்று எனக்குத் தோன்றியது. எதிர்பார்த்ததைப் போலவே அவளுக்கு முதல் பரிசும் எனக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தன.

அவளிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. போய்ப் பேசினேன். இயல்பாக உரையாடினாள். பெயர் சரிதா. சொந்த ஊர் மதுரை என்றதும் எனக்கு ரொம்ப குஷியாகிப் போனது. திருச்சி ஹோலி கிராசில் படித்துக் கொண்டிருந்தாள். அத்தோடு அவளுடைய தம்பி நான் படித்த பள்ளியில் எனக்கு ஜூனியர் என்பதையும் சொன்னாள். வெகு நேரம் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனாள். பிறகு பல கல்லூரி விழாக்களில் அவளைச் சந்திக்க நேர்ந்தபோது சின்னதொரு புன்னகையும் தலையசைப்பையும் எப்போதும் எனக்காக அவள் சேமித்து வைத்திருப்பதாகத் தோன்றும்.

என்னுடைய கல்லூரி இறுதி வருடத்தில் நிர்வாகத்தோடு சண்டை போட்டு மாநிலம் தழுவிய கலைவிழா நடத்திட அனுமதி வாங்கினோம். பொறியியல் கல்லூரிகளை மட்டும் அழைத்தால் சரிதாவால் வர இயலாது என்பதற்காகவே எல்லா கலைக் கல்லூரிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பியாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று சாதித்தேன். எதிர்பார்த்தது போலவே அவளும் வந்தாள். தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்ற எல்லா நிகழ்வுகளிலும் ஏதோ ஒரு பரிசை வென்று அந்தக் கலைவிழாவின் தனிநபர் சாதனையாளர் விருது அவளுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகான சில நாட்களில் நான் அவளை மறந்து போனேன்.

கல்லூரி முடிந்து என் கனவான ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை. எங்கே போனாலும் தான் நம்ம சுழி சும்மா இருக்காதே? அந்தக் கல்லூரியில் கல்ச்சுரல் டீமுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர். அந்த வருட ஃபெஸ்டம்பருக்கு மாணவர்களைக் கூட்டிக்கொண்டு திருச்சிக்குப் போயிருந்தேன்.

எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் சரிதாவை மீண்டும் அங்கே சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் ஆள் கொஞ்சம் கூட மாறவில்லை. மாறாக இன்னும் கம்பீரமும் நேர்த்தியும் அவளிடம் கூடி இருந்தது. அவளும் என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டாள். மதுரையில் முதுநிலை படிப்பதாகவும் வழக்கம் போல போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னாள். அவள் பேசுவதைக் கேட்கப் போயிருந்தேன்.

அன்றைக்கு நடுவர் குழு கொடுத்தத் தலைப்பு ஒன்றாகவும் அவள் பேசியது வேறொன்றாகவும் இருந்தது. ஆனால் அந்தத் தீவிரம் மட்டும் அவள் பேச்சில் குறையவே இல்லை. முழுக்க முழுக்க ஈழத்து மக்கள் படும் பாட்டையும் அவர்களின் வேதனை குறித்தும் பேசினாள். இறுதியாக தான் தலைப்புக்கு மாறுபட்டுப் பேசியது தெரிந்தே செய்ததெனவும் இளைஞர்கள் மத்தியில் இதைப் பேச வேண்டியது தனது கடமை என்பதாகவும் சொல்லி நடுவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். கீழே இறங்கியவளிடம் வேகமாகப் போனேன். நல்லாப் பேசினேனா என்று கேட்டவளிடம் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

"இருந்தோம் செத்தோம்னு போயிடக்கூடாது தோழர். நம்ம மக்களுக்கு ஏதாவது செய்யணும்.. செய்வேன்.."

இதைக் சொன்னபோது அவள் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்குள் இருந்ததை அந்தக்கண்கள் சொல்லிப்போயின. அதில் மறைந்து கிடந்த ஆசைகளையும் கனவுகளையும் என்னால் உணர முடிந்தது. அவளை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாகவும் இருந்தது. அதன் பிறகான நாட்களில் எப்போதேனும் அவள் நினைவுகள் மனதுக்குள் அவ்வப்போது வந்து போவதோடு சரி..

பிற்பாடு சில காலங்கள் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றி மதுரைக்கு வந்து சேர்ந்தேன். ஒரு மாலைநேரம் கோரிப்பாளையம் பகுதியில் நண்பர்களோடு நின்று டாப்படித்துக் கொண்டிருந்தபோது அந்தப்பெண் எங்களைக் கடந்து பேசிக்கொண்டு போனாள். என்னால் அந்தக்குரலை உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அது சரிதாதான். ஆள் ரொம்ப மாறிபோய் கசங்கிப் போயிருந்தாள். கண்கள் எல்லாம் இருண்டு போய் தொய்ந்து மொத்தமாக ஆளே வேறு மாதிரி ஆகியிருந்தாள். இடுப்பில் ஒரு குழந்தையுடன் அவள் போக முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தவன் அவள் கணவனாக இருக்கக்கூடும்.

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக இவளும் தன கனவுகளைத் தொலைத்து விட்டாளா? ஆசைகள் எல்லாம் அவ்வளவுதானா? இயல்பு வாழ்க்கைக்குள் புகுந்து புருஷன் பிள்ளை என்று தொலைந்து போகத்தான் இத்தனை பாடா? எனக்கு ஆயாசமாக இருந்தது. அவளிடம் போய்ப் பேசலாமா என்று தோன்றியது. ஆனால் அது அவளுக்குள் சில குற்றவுணர்ச்சிகளைத் தோன்றச் செய்யலாம் என்பது என்னைத் தடுத்து விட்டது.

து மாதிரியான நிறைய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். வார்த்தைகளில் விவரிக்க முடியா கனவுகளும் லட்சியங்களும் கொண்டு அலைந்து திரியும் மனிதர்கள். ஆனால் காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. நினைக்கிற விசயங்கள் எல்லாம் நடப்பது கிடையாது. தாங்கள் நினைத்த வாழ்க்கையை செய்ய நினைத்ததை சாதித்து முடித்தவர் என வெகு சிலரையே சொல்ல முடிகிறது. காற்றில் அசைந்தாடும் நுரைக்குமிழிகள் சட்டென உடைவதுபோல ஒரே தருணத்தில் எல்லாம் மாறிப் போய்விடுவதுதான் நிதர்சனம். அதனை ஏற்று வாழப்பழகிக் கொள்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். உண்மையை உணர மறுப்பவர்கள் தாங்களும் அழிந்து தங்கள் கனவுகளையும் தங்களோடு சேர்த்து புதைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

ண்பர் திருச்செந்தாழையின் கடையில் அந்தப் பெரியவரை நிறைய தரம் பார்த்திருக்கிறேன். அலைந்து திரிந்து கருத்த முகம். மூட்டை தூக்கி தூக்கி பலமான தேகம். பஜாரில் அவர் கால் படாத இடமே கிடையாது எனச் சொல்லலாம்.

போன வாரத்தின் ஒரு தினத்தில் நான் கடைக்குப் போனபோது வாசலில் உட்கார்ந்து இருந்தார். நல்ல தண்ணி. என்னைப் பழக்கம் என்பதால் அருகில் கூப்பிட்டு அமர வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“பதினெட்டு வயசுல இங்கன வந்தேன் தம்பி. கூலியாத்தான் சேர்ந்தேன். மொதலாளிக்கு எம்மேல அம்புட்டுப் பிரியம். எல்லா பதவிசும் சொல்லிக் கொடுத்து வளர்த்தாப்டி.. இங்க நல்லவனா இருந்தாப் பொழைக்க முடியாது. எல்லா சூதும் கத்துக்கிடேன். வளந்து வந்தப்போ ஒரே ஒரு ஆசை மட்டும் இருந்துச்சு. பஜார்ல நமக்குன்னு ஒரு கடையப் போட்டு உள்ள உக்காரணும்னு. நாயா ஒழச்சேன். முப்பது வருசம் ஓடிப்போச்சு. கல்யாணம் கட்டி இன்னைக்கு மவளுக்குக் கூட கல்யாணம் கட்டித் தந்துட்டேன். ஆனா இன்னும் என் ஆச நிறைவேறலை. கனவு எதுவுமே ஓடியாடல.. இன்னைக்கும் ஓடிக்கிட்டே இருக்கேன். ஆனா என்னைக்கு நானும் ஒரு கடயப் போட்டு மொதலாளியா ஆகுறேனோ அன்னைக்குத்தான் தம்பி இந்தக் கட்ட அடங்கும்..”

பேசிக் கொண்டிருந்தபோதே மனிதர் அழ ஆரம்பித்து விட்டார். எளிய மனிதனுக்கான ஆசை. அவர் வாழ்நாளுக்குள் இது நிறைவேறக் கூடுமா எனத் தெரியவில்லை. ஏதும் பேசாமல் நான் வந்து விட்டேன்.

மிழில் முனைவர் படிப்பை முடித்துவிட்டு என்றேனும் தனக்கு அரசாங்க வேலை கிடைக்கக்கூடும் எனும் நம்பிக்கையோடு பஸ்ஸ்டாண்டில் டெலிபோன் கடை வைத்திருக்கும் நண்பர். பத்து வருடப் போராட்டத்துக்குப் பின் இளையான்குடி படத்தில் நான்கு சீன்கள் வந்து விட்டோம் இனி நமக்கு வாழ்க்கை பிரகாசமாய் இருக்கும் என நம்பும் மாமா பையன். தாந்தான் இரும்பிலும் நெருப்பிலும் வெந்து சாகிறோம் தன் பையனாவது நன்றாகப் படிக்கட்டும் என்கிற எனது மாணவனொருவனின் அப்பாவும் இருபது அரியர் வைத்திருக்கும் அவருடைய பையனும். எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை எத்தனை ஆசைகள்? சொல்லிக் கொண்டே போகலாம். கனவுகளைச் சுமந்து திரியும் மனிதர்கள். யாராலும் புரிந்து கொள்ள முடியாத சித்திரங்களாய்த் தொடரும் கனவுகள். ஆனால் காலம் எளிதில் தீர்ந்திடாத புதிரென அவர்களைப் பார்த்து நகைத்தபடி இருக்கிறது.

ரண்டு நாட்களுக்கு முன்பு சரிதாவின் தம்பியைக் கடைவீதியில் பார்த்தேன்.

“எப்படிடா இருக்காங்க உங்க அக்கா?”

கேட்ட மாத்திரத்தில் அவன் கண்கள் பொங்கி அழத் தொடங்கி விட்டான்.

“டேய்.. டேய்.. என்னடா ஆச்சு..”

“அக்கா.. அக்கா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மாமாவுக்கும் அக்காவுக்கும் நடந்த சண்டைல.. தனக்குத்தானே நெருப்பு வச்சுக்கிட்டு.. அக்கா..”

அவன் முடிக்க மாட்டாமல் அழுதபடி இருந்தான். நான் விக்கித்துப் போய் நின்றிருந்தேன். என்னால் ஒருபோதும் காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.

(என் நினைவுகளில் அழியாத சித்திரமெனத் தேங்கிவிட்ட சரிதாவுக்கு.. இதை எழுதும் இந்த வேளையில் அவளுக்கு மிகவும் பிடித்தமான பிள்ளை நிலா பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டபடி இருக்கிறேன்..)

February 4, 2012

மெரினா - திரைப்பார்வை

உல சினிமா என்று சில படங்களை, குறிப்பாக ஈரானிய படங்களை, பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக இருக்கும். தொலைந்து போகும் காலணிகள், மறந்து போன வீட்டுப்பாடப் புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுக்க அலையும் சிறுவன், தங்க மீன்கள் வாங்க ஆசைப்படும் குழந்தைகள் போன்ற வெகு சாதாரணமான கதைக்கருவை எடுத்துக்கொண்டு குழந்தைகளின் உலகை வெகு அழகாகப் படமாக்கி இருப்பார்கள். ஏன் இது மாதிரியான படங்களை நம்மால் எடுக்க முடியவில்லை நம் இயக்குனர்கள் ஏன் இப்படி முயற்சிகள் செய்வதில்லை என்று ஆதங்கமாக இருக்கும்.

தமிழ் சினிமாவின் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களை நாம் எப்போதும் இயல்பானவர்களாக திரையில் பார்க்கக் கிடைப்பதேயில்லை. தமிழ்ப்படங்களில் நம் குழந்தைகளுக்கு எப்போதும் இரண்டே வேலைதான். வயதுக்கு மீறி அதிகபிரசங்கித்தனமாகப் பேசி நாயகனின் காதலுக்கு உதவ வேண்டும் அல்லது அன்பான பிள்ளையாயிருந்து அநியாயமாய் வில்லனால் சாகடிக்கப்பட வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல் குழந்தைகளின் உலகை இயல்பாக படமாக்கிய படங்கள் தமிழில் வெகு குறைவே.

அந்த வரிசையில் மெரினா என்கிற கடற்கரை பின்புலத்தை எடுத்துக்கொண்டு அங்கு பிழைத்துக் கிடைக்கும் சிறுவர்கள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்கி இருக்கிறார் பாண்டிராஜ். அவருடைய முதல் படமான பசங்க படத்தின் சாயல் இருப்பது போலத் தோன்றினாலும் அதைக் காட்டிலும் நேர்மையானதொரு படமாகவும் நன்றாகவும் வந்திருக்கிறது மெரினா.



வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து கடற்கரையில் பிழைப்புக்காக சுற்றித்திரியும் சிறுவர்கள், அவர்களுக்கு உதவும் ஒரு போஸ்ட்மேன், பெற்ற பிள்ளையை அசிங்கப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பிச்சையெடுத்துத் திரியும் பெரியவர், சினிமா ஆசைகளோடு பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் மனிதரும் அவர் பிள்ளையும், பைத்தியம் என்று மற்றவர்களால் ஒதுக்கப்படும் மனிதர், குதிரை சவாரி விட்டு பிழைப்பவர், விதவிதமான காதலர்கள்.. இவர்களின் வாழ்க்கையில் சில பகுதிகள்தான் மெரினா.

படத்தில் பெரிதாக கதை என்று ஏதுமில்லை. ஆனால் எல்லாருக்கும் சொல்வதற்கான வாழ்க்கை இருக்கிறது. கடற்கரையில் கிடக்கும் மனிதர்கள் என்பதற்காக அவர்களின் கஷ்டம் சோகம் விதிக்கெதிரான போராட்டம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிராமல் வாழ்வின் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாட்டமாய் வாழும் அவர்கள் வாழ்க்கையை சொல்லிப் போகிறது படம்.

நடிகர்களாக மிகச்சரியான மனிதர்களைத் தேர்வு செய்ததன் மூலம் படம் தரும் அனுபவத்தை மறக்க முடியாததாகச் செய்திருக்கிறார் பாண்டிராஜ். தன்னுடைய தயாரிப்பில் முதல் படம். ஏற்கனவே நிரூபித்த தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேடிப்போகாமல் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே புதுமுகங்களாய் பிடித்துப் போட்டிருக்கிறார். அவர்களும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் கிரிஷ் படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் முதல் இருபது நிமிடத்தை பார்த்தபின்பு சென்னையைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இனி சென்னை பிடிக்கக்கூடும். எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் இந்த காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கின்றன.



படத்தின் ஒரே பிரச்சினை சிவகார்த்திகேயன் - ஓவியா வரும் பகுதிகள். எந்த ஒட்டுதலும் இல்லாத இன்றைய நவநாகரீகக் காதலைக் காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பெண்கள் எல்லோருமே கேவலமானவர்கள் என்பதாக அடிக்கடி வரும் வசனங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். சிவகார்த்திகேயனைக் காட்டிலும் அவர் நண்பராக வருபவர் பட்டாசு கிளப்புகிறார். கடைசியில் அவருக்கே சி.கா பன்ச் சொல்வதும் திருமணம் முடிந்து கணவரோடு வரும் ஓவியா முதல் முறையாக பீச்சுக்கு வருவதாக சொல்லும் காட்சியும் நச்.

பசங்க படத்தில் ஏற்கனவே பார்த்த சிறுவர்களின் கொண்டாட்டங்கள், முதல் பாதியில் போலிஸ்காரர்கள் தரும் தேவையில்லாத பில்டப், அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை நாம் கணிக்க முடிவது என சிலச்சில குறைகள் படத்தில் இருக்கின்றன. ஆனால் தொய்வில்லாத திரைக்கதையும் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கும் வசனங்களும் அதை எளிதில் மறக்கடித்து விடுகின்றன.

நம் மண்ணின் இயல்போடு படங்கள் வெளியாவதில்லை, தமிழ் வாழ்க்கையை யாரும் பதிவு செய்வதில்லை என்பது போன்றான குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் இந்தப்படம். பீச்சில் வாழும் மக்களை காட்சிப்படுத்தும் நல்ல முயற்சி. இன்னும் ஆழமாகப் பேசுவதற்கான ஸ்பேஸ் படத்தில் இருக்கிறது. காதல் பகுதிகளை வெட்டியெறிந்து விட்டு அனுப்பினால் உலக திரைப்பட விழாக்களில் கண்டிப்பாக மெரினா கலக்கும் என்றும் நம்புகிறேன். இயக்குனர் பாண்டிராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மெரினா - அனுபவம்

February 2, 2012

துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்

சில மாதங்களுக்கு முன்பாக நண்பர் அய்யனார் விஸ்வநாத் நண்டு திரைப்படம் பற்றி எழுதி இருந்ததை வாசிக்க நேர்ந்தது. தமிழ்த்திரையுலகில் நோய்மையை அதன் இயல்புகளோடு நேர்மையாகப் பதிவு செய்த படம் என்பதாகச் சொல்லியிருந்தார் என்பதால் யூட்யூபில் அந்தப்படத்தைத் தேடிப் பார்த்தேன். சிவசங்கரியின் கதையை மகேந்திரன் நேர்த்தியாக இயக்கி இருந்தார். அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வரும் வடக்கத்தி இளைஞன். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவன். கூட வேலை பார்க்கும் அஸ்வினியை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். இருவருக்கும் குழந்தை ஒன்று பிறக்க சந்தோசமாக வாழ்கிறார்கள். பின்பாக அவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. நோயின் தீவிரம் அதிகரித்து மரணத்தைச் சந்திக்கிறான். இவ்வளவுதான் கதை. சகலாகலா வல்லவன்களும் முரட்டுக்காளைகளும் தூள் பறத்திக் கொண்டிருந்த வேளையில் அறிமுகமே இல்லாத நடிகர் ஒருவரை நாயகனாக்கி வெகு இயல்பான கதையை எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் படமாக்கி இருந்தார் மகேந்திரன். நோய் என்றவுடன் வாயிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழும் மனைவி, ரத்தம் கக்கும் நாயகன் என்றெல்லாம் மெலோடிராமா இல்லாமல் வாழ்க்கையின் நிதர்சனங்களை இயக்குனர் பதிவு செய்திருந்த விதம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அந்தப்படம் பார்த்த சில நாட்களுக்குப் பின்பு ஜோஷ் வண்டேலூவின் ”அபாயம்” என்கிற நாவல் வாசிக்கக் கிடைத்தது(க்ரியா வெளியீடு). கதிரியக்க உலையில் வேலை பார்க்கும் மூவர் அபாயகரமான கதிர்வீச்சில் மாட்டிக் கொள்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நோய்மை அவர்கள் உடலை சிதைக்கத் துவங்குகிறது. மருத்துவர்கள் அவர்களைத் தனியறையில் வைத்து கவனித்துக் கொள்கிறார்கள். அதிகமாய்க் கதிர்வீச்சுக்கு ஆளான முதல் மனிதன் மற்ற இரு நண்பர்களின் கண் முன்னாலேயே மரித்துப் போகிறான். எப்படியாயினும் தாங்கள் பிழைத்துக் கொள்வோம் எனும் அவர்கள் நம்பிக்கை மெதுவாகக் கரைய ஆரம்பிக்கிறது. மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறார்கள். வெவ்வேறு திசைகளில் இருவரும் பயணிக்கிறார்கள். இருந்தும் விடாமல் துரத்தும் மிருகமென வரும் மரணத்தின் கரங்களில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். நோயின் பொருட்டு மரணம் நிச்சயிக்கப்பட்ட மனிதர்களின் அக நெருக்கடிகளை வெகு அழகாகப் படம் பிடித்துக் கட்டிய நாவல். வெறும் நூறே பக்கங்களில் மனித வாழ்வின் சாரத்தையும் நோய்மை மனிதனுக்குள் உண்டாக்கும் உளவியல் மாற்றங்களையும் துல்லியமாகப் பதிவு செய்திருப்பார் ஆசிரியர்.

இதன் தொடர்ச்சியாகவே எஸ்.ராமகிருஷ்ணனின் “துயில்” நாவலை என்னால் அணுக முடிகிறது.


இரு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் மூலமாக விரிகிறது துயில். 1982 - தெக்கோடு எனும் கிராமத்தில் இருக்கும் தேவாலயத்தில் திருவிழா தொடங்க இருக்கிறது. அங்கு போனால் உடம்பில் இருக்கும் நோய்கள் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்தத் திருவிழாவில் கடல்கன்னி ஷோ நடத்திப் பிழைக்க வரும் அழகர், சின்ன ராணி மற்றும் செல்வி எனும் குடும்பத்தின் கதை ஒரு பக்கம். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாக - 1873 - தெக்கோட்டுக்கு மருத்துவ சேவை சேய்ய வரும் ஏலன் பவர் என்கிற ஆங்கில யுவதியின் அனுபவம் மற்றும் அவளுக்கு நடக்கும் சம்பவங்கள் என இன்னொரு பக்கம். நடுநடுவே எட்டூர் மண்டபம் எனும் இடமும் அங்கு வரும் ரோகிகளின் கதையும் நமக்குச் சொல்லப்படுகின்றன.

“நோய்மை எல்லா மனிதர்களையும் அவர்களது வயதைக் கரைத்து விடுகிறது. அவனுக்குள் இருந்து ஒரு சிறுவனோ, சிறுமியோ வெளிப்பட்டு விடுகிறாள் அந்த பால்ய உருவம் பிடிவாதமானது. வலி தாங்க முடியாமல் புலம்பக்கூடியது. உலகைக் கண்டு பயப்படக்கூடியது” (பக்.160) - துயிலின் ஆதாரம் இதுதான். இதை நான் என் வாழ்வில் எப்போதும் உண்ர்ந்திருக்கிறேன். உடல் நன்றாக இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் மனது சின்னதொரு பிணி வந்தாலும் அத்தனையும் அடங்கிப் போய் என்ன செய்வதனெத் தெரியாமல் படுக்கையில் வீழ்ந்து கிடப்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். இது அனைவருக்கும் பொதுவானது. நோயின் புறக்காரணிகள் தவிர்த்து உடலை நாம் எத்தனை மதிக்கிறோம் என்கிற கேள்வியை துயில் முன்வைக்கிறது. அகம் சார்ந்த பிரச்சினைகள், உணவு மற்றும் உறக்கம் என நோய்மைக்கான காரணங்களைக் கண்டடைய முயலுகிறது இந்த நாவல்.

இந்த நாவலை ஒரு விருட்சம் எனத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் எஸ்ரா. அதன் வெவ்வேறு கிளைகளாக பலப்பல மனிதர்கள் நாவலுக்கு உள்ளிருந்து கிளம்பி வந்தபடியே இருக்கிறார்கள். அழகரின் பால்யத்தில் ஆரம்பிக்கும் கதை அவனது தகப்பனின் கள்ள உறவுகளைப் பேசி பின்பு அவன் பாரியோடு சேர்ந்து ஹோட்டலொன்றில் திருடி மாட்டுவதில் வந்து முடிகிறது. அங்கிருந்து அழகரின் கதை ஜிக்கி மற்றும் டோலியின் கதையாக மாற்றம் கொள்கிறது. அவர்களின் சின்ன வயதுப் போராட்டங்கள், டோலியின் மீதான ஜிக்கியின் அன்பு, தவறான மனிதனிடம் கொண்ட நம்பிக்கை மற்றும் அன்பால் பஸ் ஸ்டாண்டுகளில் நோய் கண்டவளாகத் திரிய நேரிடும் டோலியின் துன்பம் ஆகிய எல்லாமும் நமக்குச் சொல்லப்படுகின்றன. சின்னராணியின் கதை வேறு மாதிரி. அவள் தன் இளவயது முதலே கனவுகள் பல காண்பவளாக இருக்கிறாள். அழகருடனான திருமணத்திற்குப் பின்பு தன் வாழ்க்கை வேறொன்றாக மாறிவிடும் எனத் தீவிரமாக நம்புகிறாள். ஆனால் அவை அனைத்தும் பொய்க்கின்றன. தன்னால்தான் கணவனின் பிழைப்பு எனும் கட்டாயத்தை ஏற்றுக் கொள்கிறாள். கடல்கன்னியைப் பார்க்க வந்து கண்டதையும் பேசிப் போகும் மனிதர்களை சகித்துக் கொள்ளவும் வேண்டி இருக்கிறது. தன்னையே நம்பி இருக்கும் சவலைப் பிள்ளைக்காக அத்தனை துன்பங்களையும் தாங்குபவளாக இருக்கும் சின்ன ராணியின் கதையோடு பெரும்பாலான தமிழகக் கிராமத்துப் பெண்களை நம்மால் எளிதாகப் பொருத்திப் பார்க்க இயலுகிறது.

தனது ஞானத்தந்தையாக மதிக்கும் லகோம்பேக்கு ஏலன் பவர் எழுதும் கடிதங்களின் வாயிலாக அவள் கதை விரிகிறது. தென்தமிழகத்தின் மக்கள் அவளுக்குப் பெரிதும் ஆச்சரியமாய் இருக்கிறார்கள். எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத, படிப்பறிவு ஏதுமற்ற மக்களுக்கு நடுவே தன்னை நிரூபிக்க அவள் பெரிதும் கஷ்டப்படுகிறாள். கூடவே மதமும் மக்கள் மீதான மதத்தின் கோட்பாடுகளும் அவளுக்குள் நிறையக் கேள்விகளை எழுப்புகின்றன. மதம் அல்லது சேவை என வரும்போது சேவையையே அவள் தேர்ந்தெடுக்க விழைகிறாள். சிறிது சிறிதாக அந்த மக்கள் அவளை ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கல்வியின் மூலமே அவர்களை முழுதாய் மீட்டெடுக்க முடியும் என நம்புபவள் அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது முகம் தெரியா மனிதர்களால் கொலை செய்யப்படுகிறாள். அடையாளங்கள் ஏதுமின்றி அத்தோடு ஏலன் பவரின் வாழ்க்கை காற்றோடு கரைந்து போகிறது.

பெரும்பாலும் பெண்களின் கதையாக விரியும் துயிலின் மிக முக்கியமான பெண்பாத்திரமாக நான் பார்ப்பது நங்காவை. சின்னராணியின் கிராமத்தைச் சேர்ந்தவள். அவலட்சணமான தோற்றம் காரணமாக எல்லா ஆண்களாலும் புறக்கணிக்கப்படுபவள். வெளித்தோற்றத்தின் காரணமாய் எல்லாராலும் நிராகரிக்கப்பட்டாலும் உள்மனதில் எல்லாப் பெண்களையும் போல மனதில் திருமண ஆசை கொண்டலையும் நங்கா கொஞ்சம் கொஞ்சமாய் மனப்பிறழ்வு கொண்டவளாய் மாறி இறுதியில் ஊரெல்லையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். வெளுத்த தோலையும் அழகையும் சம்பந்தம் செய்து பேசிவரும் இன்றைய சூழலில் நங்காக்கள் வேறு என்னதான் செய்து கொள்ள முடியும்? மொத்த நாவலிலும் என்னை அதிர வைத்து உலுக்கி எடுத்தவளாக நங்காவே இருக்கிறாள்.

எண்ணற்ற கதைகள். நோய்மை பற்றிய அகம் மற்றும் புறம் சார்ந்த உரையாடல்கள். தடையில்லாமல் வாசிக்கத் தூண்டும் மொழி. இத்தனை இருந்தும் இது மாதிரியான நீண்ட நாவல்களை வாசிக்கும்போது கிட்டும் உணர்வூக்கமும் வாசிப்பின்பமும் துயிலில் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் வருத்ததோடு சொல்ல வேண்டும்.

அதன் முதல் காரணம் எட்டூர் மண்டபமும் கொண்டலு அக்காவும். எஸ்ராவின் அ-புனைவுகளான தேசாந்திரி, துணையெழுத்து, கதாவிலாசம் ஆகிய புத்தகங்களில் உலவி வந்த மனிதர்களைப் பிரதியெடுத்து அவர்களை பிணி கொண்டவர்களாய் மாற்றி எட்டூர் மண்டபத்தில் அலைய விட்டதால் வந்த வினை இது. ஏற்கனவே பார்த்துப் பழகிய மனிதர்கள் - அவர்களுக்கான வலுவற்ற பின்னணிக் கதைகள் என எட்டூர் மண்டபம் வெகுவாக துயிலின் வாசிப்பைத் தடை செய்கிறது. ஒருவனுக்கு கையெல்லாம் வியர்த்து வழிவதன் காரணம் அவன் வாங்கிய கையூட்டு எனும் ரீதியலான கதைகள் வெகுவாக சோர்வைத் தருகின்றன. அதிலும் கொண்டலு அக்கா ஒவ்வொரு நோயாளியையும் தம்பீ தம்பீ என அழைப்பதும் பணிவிடைகள் புரிவதும் ஏதோ மூன்றாந்தர நாடகம் பார்ப்பதான உணர்வையே தருகிறது. கனவில் கண்ட குழந்தைக்காக செருப்புகள் திருடத் தொடங்கும் ஒருவனின் கதை மட்டுமே இந்தப் பகுதியின் ஒரே ஆறுதல்.

துயிலின் பெரும்பாலான பகுதிகளுக்கான அடிப்படை கிறித்துவ மத நம்பிக்கைகளில் இருந்து எடுத்தாளப்பட்டு இருப்பதாகவே நம்புகிறேன். பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேவதூதனால் கலக்கப்படும் பெதஸ்தா குளத்தில் நீராடினால் பிணிகள் நீங்கும் என்பதே இங்கே தெக்கோடு மாதாகோவிலாக மாறி இருக்கிறது. அதே போல கொண்டலு அக்காவை என்னால் மதர் தெரசாவின் பாதிப்பில் உண்டான பாத்திரமாகவே நம்ப முடிகிறது. ஏலன் பவரின் வாயிலாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கிறித்துவம் தென்தமிழகத்தில் என்னவாக இருக்கிறது என்பதையும் பேசுகிறார் எஸ்ரா. ஆனால் அதன் மூலமாய் அவர் முன்வைக்கும் அரசியல் என்னவாக இருக்கிறது? இந்து மதப் பூசாரிகள் பெண்களைப் பேய் பிடித்தாட்டுகிறது என சவுக்கினால் அடித்தால் அதனைக் காலம் காலமாக தெரியாமல் செய்து வரும் அறியாமை என்பதாகச் சொல்கிறார் எஸ்ரா. ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி குறை சொல்லும் ஏலன் பவரிடம் நாம் கூட அதை எல்லாம் தெரிந்து தானே செய்து கொண்டிருக்கிறோம் என தெக்கோடு பாதிரியார் சொல்வது வேண்டுமென்றே கிறித்துவ மதம் மனிதர்களை தங்கள் பக்கம் திசை திருப்பிடச் செய்யும் சூழ்ச்சியாக நாவலில் சொல்லப்படுவது தவறான பார்வையாகவே எனக்குப் படுகிறது.

போக, நாவலில் வரும் எல்லோரும், கொண்டலு அக்கா தொடங்கி பிணி கொண்ட ரோகி வரை, ஏலன் பவர் தொடங்கி படிப்பற்றிவற்ற கிராம மக்கள் வரை.. எல்லோருமே பக்கம் பக்கமாய் நோய்மை குறித்துப் பேசுகிறார்கள். அல்லது, அவர்கள் அனைவரின் மூலமாகவும், எஸ்ரா பேசிக் கொண்டே இருக்கிறார். இது வாசிப்பவருக்கு பெரும் மனச்சோர்வையும் அயர்ச்சியையும் தருவதாகவே இருக்கிறது. பிறகு, தெக்கோடு திருவிழாவை எஸ்ரா விவரிக்கும் சூழலை வாசிக்கும் யாருக்கும், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது. கடைசியாக, நாவலில் எல்லாவற்றையும் தாண்டி என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாத விசயம் - அதன் இறுதிப்பகுதி. கணவன் பிரிந்து போய்விட்ட சூழலில் சின்னராணியை தம்பான் பலாத்காரம் செய்வதும் அதன் விளைவாக அவள் அவனைக் கொன்று போடுவதும்.. ஏதோ 80களில் வெளியான பண்ணையார் கொடுமை செய்யும் படங்களே என் நினைவில் வந்து போயின.

நெடுங்குருதி, உறுபசி, யாமம் என்பதான அருமையான எஸ்ராவின் படைப்புகளுக்கு முன்பாக துயில் ஒன்றுமே கிடையாது. அற்புதமான களமும் மனதுக்கு நெருக்கமான மனிதர்களும் வாசிப்பைத் தடை செய்யாத மொழியும் கையிலிருந்தபோதும் துயிலைப் பொறுத்தவரை எஸ்ராவின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக வரத் தவறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போதும் என் மனதுக்கு நெருக்கமாக நானுணரும் எஸ்ராவாக அவர் அடுத்த நாவல் இருக்கும் எனும் நம்பிக்கையோடு எப்போதும்போல நான்.