July 28, 2009

வரலாறும் தமிழகத்தடங்களும்(பாகம் - 1)..!!!

எந்த ஒரு சமூகத்திற்கும் அதனுடைய வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்று. தம்முடைய கலாச்சாரம், கடந்து வந்த பாதை முதலான விஷயங்களை அறிந்து கொள்ள வரலாறு உதவுகிறது. ஆனால் நம் தமிழ்ச் சமுதாயம் தன்னுடைய வரலாற்றை எந்த அளவுக்கு மதிக்கிறது? இன்றைய தலைமுறையைப் பொறுத்த வரை வரலாறு என்பது பத்தாம் வகுப்பு வரை கண்டிப்பாக படிக்கப்பட வேண்டிய, எந்தப் பயனையும் தராத, தேவை இல்லாத, ஒரு அறுவையான பாடம். அவ்வளவுதான்.
கனத்த மனதுடன் இங்கே ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. கல்லூரியில் நான் மாணவர்களுக்கு பாடத்தை மட்டும் நடத்துவது இல்லை. முக்கியமான உலக நடப்புகள், தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்வது உண்டு. அதே போல, வார நாட்களில் ஏதேனும் ஒரு வகுப்பில் மாணவர்கள் இடையே சுவாரசியமான போட்டிகளும் நடத்துவேன். இந்த வாரம் பிரபலங்களைப் போல நடித்துக் காட்டி யாரெனக் கண்டுபிடிக்கும் போட்டி நடத்துவது என முடிவானது.
அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, சார்லி சாப்ளின் எனப் பல பிரபலங்களை எளிதில் கண்டுபிடித்து விட்டனர். இந்தப் போட்டியின் ஒரு சுற்றாக தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட தியாகிகளின் பெயரும் இருந்தது. ஆனால் அவர்களை மாணவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை விடக் கொடுமை, அவர்கள் யாரென மாணவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். வாஞ்சிநாதன் என்ற பெயரைச் சொல்லி யாரெனத் தெரியுமா எனக் கேட்டால், விஜயகாந்த் நடித்த படம் சார் என்றார்கள்.
நான் மிகைப்படுத்தவில்லை. நடந்த உண்மையை சொல்கிறேன். இதே நிலைதான் மற்ற தியாகிகளுக்கும். நான் அவர்களைப் பற்றி சொல்ல முயன்ற போதும் அதைக் கேட்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை. தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். "நீங்க எந்தக் கவலையும் இல்லாம இப்படி சிரிக்கக் காரணமே இவங்களை மாதிரி மக்கள் பண்ணிய உயிர்த் தியாகத்துனால தான்ப்பா.." நான் அழுத்தி சொன்ன பிறகு அமைதியாகக் கேட்கத் தொடங்கினார்கள். வரலாற்றின் முக்கியத்துவத்தை, நம்மை நாமே அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர வேண்டாமா? அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தவறியது யாருடைய குற்றம்?
வெறும் நூறு வருடம் பழைமையான சின்னங்களைக் கூட வெளிநாடுகளில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இங்கே நம் நாட்டில் என்ன நடக்கிறது? வேறு எங்கும் போக வேண்டாம். மதுரைக்கு வாருங்கள். மதுரையின் பெயரைக் கேட்டவுடன் ஞாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவிலும் திருமலை நாயக்கர் மகாலும். இன்று அவற்றின் நிலை என்ன?
திருமலை நாயக்கர் மகாலில் எஞ்சி நிற்பது ரங்கவிலாசம் என்னும் ஒரு பகுதி மட்டுமே. அதன் சுற்றுப்புறங்கள் இன்று பொதுமக்கள் மலஜலம் கழிக்கும் பகுதிகளாய் மாறிப் போனது கொடுமை. இதைத் தடுக்க அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. புனர்நிர்மாணம் என்ற பெயரில் மகாலின் உள்ளேயும் பாழடித்து விட்டார்கள். அதனுடைய உட்புறங்களில் இருந்த வண்ணச் சித்திரங்களை எல்லாம் அழித்து விட்டு புதிதாக வரைவதாய் பெயர் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மகாலின் உள்ளே இருந்த பழம்பொருள் அருங்காட்சியகமும் ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டது. வெகு சமீபத்தில் பதிவுலக நண்பர் அன்புவுடன் மகாலுக்கு போய் இருந்தேன். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நந்தி சிலை ஓரமாக கேட்பாரற்று கிடந்தது. அதன் மீது சிமின்ட் மூடைகள் அடுக்கப்பட்டு கிடந்தன. மனம் நொந்து போனேன். பிறகு நானும் அன்பும் அதை சரி செய்து விட்டு வந்தோம். நம் தொல்லியல் துறையின் செயல்பாடு இப்படி இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை..?!!!

(தொடருவேன்..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

35 comments:

Joe said...

அருமையான இடுகை கார்த்திக்!

நம்மவர்களைப் போல வரலாற்று பிரக்யையற்றவர்களை வேறெங்கும் காண முடியாது.

Raju said...

வெட்க‌ப்பட வேண்டிய விஷயம்.
நம்ம அறநிலையத்துறை, திருமலை நாயக்கர் மஹாலை கவனிக்காமல் விட்டு விட்டதெனக் கூற முடியாது. அதான் நமீதா நடிக்கும் "ஜகன்மோகினி" படத்துக்கு சூட்டிங் நடத்த வாடகைக்க‌ளித்துள்ளதே. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க‌ படப்பிடிப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றியவர் வேறு யாருமல்ல. நம் மாண்புமிகு.முதல்வரின் மகன்தான் என்று மதுரையின் மழலை கூடச் சொல்லும். திருமலை நாயக்கர் பண்ணிய புண்ணியமோ என்னவோதான் நமீதாவின் காலடி மஹாலில் பட்டிருக்கின்றது. என்னே, நம் அரசின் பொறுப்பு...! நினைத்துப் பார்த்தால் மனதில் நிறைய ஆதங்கம் வருதுண்ணே.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நம் கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரியாது.படிப்பறிவில்லாத , காசுக்கு ஓட்டுப் போடுகிற ,சுகாதார அறிவில்லாத விலங்குகள்தான் நாம்.என்னத்த சொல்ல கெடந்து புலம்ப வேண்டியதுதான். புராதனச் சின்னங்களின் மேல் ஐ லவ் யு என்று கிறுக்குகிரவனுக்கு அதன் அருமை தெரிவதில்லை.இவர்கள் திருந்துவது நடக்காத காரியம்.கடுமையான தண்டனைகளே இவர்களை திருத்த இருக்கும் ஒரே வழி.

நர்சிம் said...

மிக மிக மிக நல்ல பதிவு நண்பா.. இன்னும் ஆணித்தரமாக எழுதி இருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டே தலைப்பைப் பார்த்தேன்..பாகம் 1..ரைட்டு..இனி வரும் பாகங்களில் அடியுங்கள்.வாழ்த்துக்கள்.

பாலகுமார் said...

நல்ல பதிவு கார்த்தி,
தடங்களை தொடர்ந்து பதியுங்கள் ....

சொல்லரசன் said...

//நம் தமிழ்ச் சமுதாயம் தன்னுடைய வரலாற்றை எந்தஅளவுக்கு மதிக்கிறது?//

அருமையான வேள்வி? பதில் கிடைப்பது கடினம்.
நல்ல முயற்சி கார்திகைபான்டியன் இதே போல் பதிவர்களும் அவர்களுக்கு தெரிந்த,அழிந்துவ‌ரும் வரலாற்று சின்னங்களை வெளிகொன்டுவரவேண்டும்.

நையாண்டி நைனா said...

/*அருமையான வேள்வி? பதில் கிடைப்பது கடினம்.
நல்ல முயற்சி கார்திகைபான்டியன் இதே போல் பதிவர்களும் அவர்களுக்கு தெரிந்த,அழிந்துவ‌ரும் வரலாற்று சின்னங்களை வெளிகொன்டுவரவேண்டும்.*/

உங்க கோபம் சரிதான்... அதுக்காக.. இப்படி கொந்தளிச்சு போய், தப்பு தப்பா தமிழை பதித்தால்...?

லோகு said...

வெட்கப்பட வேண்டிய விடயம் தான். மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்கின்ற மனப்பான்மை வளர்ந்து விட்டது. மாணவர்களிடம் பண்டைய வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்க்குமாறு இங்கு யாரும், எதுவும் செய்வதில்லை. மன்னர் கால வரலாற்றை விடுங்கள். சில வருடங்களுக்கு முன் யார் முதல்வராக இருந்தார் என்று கேட்டால் கூட சொல்ல தெரியாத அவல நிலை இங்கு இருக்கிறது.. இத்தனைக்கும் இன்றைய மாணவர்கள் கணிப்பொறி இயக்குவதிலும், இணைய பயன்பாட்டிலும் பெரும்புலிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவற்றை முறையாக பயன்படுத்தினால் எல்லா விடயங்களையும் கைப்பிடியில் வைத்திருக்கலாம். அதை அவர்களும் செய்வதில்லை. நாமும் செய்ய தூண்டுவதில்லை..

அசோகர் மரம் நட்டார் என்பது சென்றடைந்த அளவுக்கு, அவர் யார், அவர் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள் என்னென்ன என்பது சென்றடைய வில்லை.. அப்படி இருக்கிறது பாட திட்டம்..

எது எப்படியோ, உங்கள் தொடரை படிக்க ஆர்வமாக உள்ளேன்.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்.

(அடுத்த முறை 'அ'ண்ணன் ஓட்டு கேட்டு வரும் போது, மகாலையும், கோவிலையும் பாதுகாக்க கோரிக்கை வையுங்கள்)

நையாண்டி நைனா said...

திருமலை நாயக்கர் மஹால், இதற்கு பதில், திருமலை நாயக்கர் மகள் இருந்து சினிமாவிலே நடிச்சிருந்தால் அண்ணன் டக்லஸ் அதற்கு கோவிலே கட்டி இருப்பார்.

நையாண்டி நைனா said...

/*
அதன் சுற்றுப்புறங்கள் இன்று பொதுமக்கள் மலஜலம் கழிக்கும் பகுதிகளாய் மாறிப் போனது கொடுமை. இதைத் தடுக்க அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.
*/

கவலைப்படாதீங்க பாஸ், "அதை" நிறுத்த எல்லாருக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கிற மாதிரி ஒரு மருந்து கொடுத்து மக்கள் யாருக்குமே "வராத" மாதிரி செஞ்சிருவோம்.

நையாண்டி நைனா said...

இதுக்கு மேலே நான் ஏதாவது சொன்னால்.........

நன்றி வணக்கம்.

மாப்பு... நீங்க சொல்லி இருக்குறது தமிழக தடங்கள், மக்கள் ஏற்படுத்துவதோ தமிழகத்திற்கு தடங்கல்.

நன்றி வணக்கம்.

Anonymous said...

வரலாறு எனபது கடந்த காலங்கால நிகழ்வுகளின் தொகுப்பாக பார்க்கப்படவேண்டும். நிகழ்வுகளை பாரபட்சமின்றி நடுவுநிலையில் ஆராய்ந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும் நல்ல எதிகாலத்தை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

வரலாற்று நிகழ்வுகளை எல்லோரும் நடுவுநிலையுடன் எழுதி இருப்பார்கள் என்று கூறிவிடமுடியாது. தெரிந்தோ தெரியாமலோ வரலாற்று ஆசிரியரின் விருப்பு வெறுப்புக்களுடன் கூடியதாகத்தான் வரலாறு இருக்கும். எனவே வரலாற்றை பல திசைகளில் இருந்து ஆராய்ந்து படிக்க வேண்டும். வரலாறு என்பது அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் பார்க்கப்படவேண்டும்.

வரலாற்று பாடம் படிக்க நல்ல அறிவியல் பார்வை வேண்டும். இன்னும் சொல்லபோனால் வரலாற்று பாடம் படிக்கத்தான் நல்ல அறிவியல் கண்ணோட்டம் தேவைப்படும். அறிவியல் பார்வை அற்ற முட்டாள்கள் கூட குருட்டு மனப்பாடம் செய்து physics, mathematics ல் நல்ல மார்க் வாங்கிவிடமுடியும்.

நமது சமூகத்தில் வரலாறு எனபது தற்பெருமை, பழம்பெருமை பேசுதல் இவற்றுக்குத்தான் பயன்படுகிறது. நமது குறைகளை சீர்தூக்கி பார்க்க பயன்படுவது இல்லை. அப்படி குறைகளை சொன்னால் உணர்ச்சி வசப்பட்டு துரோகி, கலாசார எதிரி என பல பட்டங்கள் காத்து இருக்கும். எதையும் திறந்த மனோபாவத்துடன் பார்க்கும் விஞான மனோபாவம் நமது சமூகத்தில் வளர்க்க வேண்டியது அவசியம்.

அன்புள்ள
சிவா.

வால்பையன் said...

மிக முக்கியமான விசயத்தை தொட்டுருக்கிங்க!

ஏனோதானோன்னு முடிக்காம பல விசயங்களை சேகரிச்சு ஒரு ஆய்வு கட்டுரையா வரனும்னு இந்த சிறுவனோட வேண்டுகோள்!

Anonymous said...

உண்மை தான். இந்த ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.

வழிப்போக்கன் said...

பதிவு சூப்பர்...

Anbu said...

நல்ல பதிவு அண்ணா..

இன்னும் இதுபோல் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...

அப்புறம் நாம் செல்லும் போது ஒரு காதல் ஜோடியினர் செய்த விளையாட்டுகளை சொல்லாமல் விட்டுவீட்டீர்கள் அண்ணா...

*இயற்கை ராஜி* said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

Unknown said...

தமிழ்நாட்டில் இன்னொரு மேம்போக்கான புறக்கணிப்பு கோயில்கள் மீதானதாகும்... நாத்திகம் பேசும் (???) தி.மு.க. பார்ப்பன அ.தி.மு.க இரண்டும் மாறிமாறி ஆட்சி செய்தும், பெரும்பாலான் கோயில்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. நான் ஒன்றும் பெரிய பக்தன் அல்ல.. சிவனையும் விஷ்ணுவையும் பாதுகாக்க.. ஆனால் இந்தக் கோயில்கள் என் மூதாதைகளின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், பண்பாடு.. எல்லாவற்றையும் விட தொழில்நுட்பம்... இவைகளின் சான்று என்று கருதியாவது, நாத்திக-ஆத்திக மோதல்களைத் துறந்து கோயில்களைப் பாதுகாக்க வேண்டும். அதேபோல்தான் பழைய கட்டடங்களையும் பாதுகாக்க வேண்டும்

தேவன் மாயம் said...

அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, சார்லி சாப்ளின் எனப் பல பிரபலங்களை எளிதில் கண்டுபிடித்து விட்டனர். இந்தப் போட்டியின் ஒரு சுற்றாக தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட தியாகிகளின் பெயரும் இருந்தது. ஆனால் அவர்களை மாணவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை விடக் கொடுமை, அவர்கள் யாரென மாணவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். வாஞ்சிநாதன் என்ற பெயரைச் சொல்லி யாரெனத் தெரியுமா எனக் கேட்டால், விஜயகாந்த் நடித்த படம் சார் என்றார்கள்//
உண்மை!
கேக்க
வருத்தமாக
உள்ளது!

ச.பிரேம்குமார் said...

மிக நல்லதொரு பதிவு பாண்டியன். தொடருங்கள். வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

கல்வித்துறையில் இருக்கும் எல்லோரும் இன்று ஏதேனும் ஒரு நிகழ்வில் இப்படி வருத்தப்படும் விஷயங்கள் நிறைய நடந்து கொண்டுதன் இருக்கின்றன.....அருமையான பதிவு! பூங்கொத்து!

அத்திரி said...

அருமையான பதிவு நண்பா...தொடருங்கள்

சம்பத் said...

////திருமலை நாயக்கர் மகாலில் எஞ்சி நிற்பது ரங்கவிலாசம் என்னும் ஒரு பகுதி மட்டுமே. அதன் சுற்றுப்புறங்கள் இன்று பொதுமக்கள் மலஜலம் கழிக்கும் பகுதிகளாய் மாறிப் போனது கொடுமை.///

ச்சே... நம் ஜனங்கள்(நாம்) எப்போ திருந்த போறோம்? நல்ல இடுகை நண்பா...

ப்ரியமுடன் வசந்த் said...

ஆசிரியரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்......

ஒரு மாணவனாக......

பீர் | Peer said...

சூப்பர் ஸப்ஜக்ட், அசத்தல் ஆரம்பம்.

ஆ.ஞானசேகரன் said...

//நம் தொல்லியல் துறையின் செயல்பாடு இப்படி இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை..?!!!//

நல்ல தொடக்கம்.... வாழ்த்துகள் நண்பா.. இன்னும் தொடரட்டும்...

அ.மு.செய்யது said...

//அதை விடக் கொடுமை, அவர்கள் யாரென மாணவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். வாஞ்சிநாதன் என்ற பெயரைச் சொல்லி யாரெனத் தெரியுமா எனக் கேட்டால், விஜயகாந்த் நடித்த படம் சார் என்றார்கள்.
//

உண்மையிலே கொடுமை தான்.

ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பூலித்தேவன்..மருது பாண்டியன்..ஊமைத்துரை

இப்போதிருக்கும் மாணவர்கள் எத்தனை பேருக்கு இப்பெயர்கள் தெரியும் ?? வருந்தத்தக்க விஷயம் தான்.

Prabhu said...

ஆமாங்க. கொடும!
பிரான்ஸ்ல இன்னும் 11000 கோட்டைகள் அப்படியே இருக்கு.

மேவி... said...

wen is the next part dude??

மணிஜி said...

பாண்டியனில் வந்து இறங்கியவுடன் கார்த்திகையின் இடுகையை முழுவதும் படித்தேன்....நல்ல நோக்கில் வேதனையுடன் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே...

Jackiesekar said...
This comment has been removed by the author.
Jackiesekar said...

வெறும் நூறு வருடம் பழைமையான சின்னங்களைக் கூட வெளிநாடுகளில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இங்கே நம் நாட்டில் என்ன நடக்கிறது? வேறு எங்கும் போக வேண்டாம். மதுரைக்கு வாருங்கள். மதுரையின் பெயரைக் கேட்டவுடன் ஞாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவிலும் திருமலை நாயக்கர் மகாலும். இன்று அவற்றின் நிலை என்ன?--//

500 ஆண்டுகளில் தோன்றிய நாட்டின் 100 வருட பழமைக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆனால் நாம் எப்போதும் சொல்வோமே, கல் தோன்ற மண் தோன்ற காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் என்று... அதனால் வந்த அலட்சியம் இது....

"உழவன்" "Uzhavan" said...

என்ன செய்வது நண்பா. வருத்தமாகத்தான் இருக்கிறது. அரிய நாணயங்களையும், ஸ்டாம்ப்களையும் சேகரித்துப் பாதுகாத்த ஆரம்பக் கல்விப் பருவமானது, வணிகமயமான மேல்நிலைக்கல்விகளில் புகும்போது, வரலாறு கசந்து வயிற்றுக்கல்வியை மட்டுமே மனம் தேடிவிடுகிறது.
வரலாற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணரவைப்பதில் உங்களைப் போன்ற ஆசிரியர்களின் பங்கு பாராட்டுக்குரியதே.
அவசியமான அருமையான பதிவு.
 
அன்புடன்
உழவன்

ஆ.சுதா said...

நர்சிம் said...

மிக மிக மிக நல்ல பதிவு நண்பா.. இன்னும் ஆணித்தரமாக எழுதி இருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டே தலைப்பைப் பார்த்தேன்..பாகம் 1..ரைட்டு..இனி வரும் பாகங்களில் அடியுங்கள்.வாழ்த்துக்கள்.

அதையே நானும்..!

மேலும் இது பரவலாக எல்லா விசயங்களிலுமே நம்முடைய சமுதாயமும் தனிமனித கடமையும் பொருப்பற்று தகர்ந்து விட்டது என்பது வேதனையான விசயம்.
நீங்கள் அதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

அருமையான துவக்கம் - தொடர்க

அரசுத்துறையின் செயல்பாடு அறிந்ததே

மக்கள் வேறு வசதி செய்து கொடுக்காத வரை திருந்த மாட்டார்கள்

இருப்பினும் முயலலாம்

நல்வாழ்த்துகள்