November 25, 2009

உறுமீன்களற்ற நதி..!!!

ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல கவிதையா? அதுதான் இலக்கியத் தரமா? என் மனதுக்குள் பல நாட்களாகவே இருந்து வரும் கேள்விகள் இவை.

சமீபத்தில் நண்பர் மற்றும் கவிஞர் யாத்ராவிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் அழகாகச் சொன்னார்.. "கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் எழுதப்பட்டு இருக்கலாம். எந்த விதிகளும் கிடையாது. பத்தி பத்தியாகக் கூட எழுதலாம். ஆனால் அதைப் படித்து முடிக்கும் போது உங்களுக்குள் ஒரு சிறு சலனத்தையேனும் உண்டாக்கி இருந்தால் அதுதான் நல்ல கவிதைக்கான அடையாளம். வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்து ஒவ்வொருவரின் புரிதல் தன்மை வேறுபடலாம். புரியா விட்டால் நல்ல கவிதை, புரிந்தால் அது சாதாரணமானது என்றெல்லாம் கிடையாது.. எல்லாமே இலக்கியம்தான்." யோசித்துப் பார்க்கும்போது இது எத்தனை ஆழமான உண்மை என்று புரிகிறது.

கவிதைகளைப் பொறுத்த மட்டில் நான் வாசிப்பின் ஆரம்பநிலையில் இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். புத்தகமாக வாங்கிப் படிக்கும் முன்பே முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இணையத்தில் வாசித்து இருக்கிறேன். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், அற்புதமான விஷயங்களை கவிதைகளில் சொல்ல முடியும் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. அதன் பின்னர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் என்னைப் பெருமளவில் ஈர்த்து இருக்கின்றன. அந்த வரிசையில், நான் வாசித்தவரையில், என்னைப் பெரிதும் கவர்ந்த கவிதைப் புத்தகமென இசையின் "உறுமீன்களற்ற நதி"யைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இசை தன் மீதும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும் காட்டும் அன்பும் பாசமும் இந்தப் புத்தகத்தின் கவிதைகள் வழியே வெளிப்படுகின்றன. பொதுவாக கவிதைகளில் காணக் கிடைக்காத கேலியும், கிண்டலும் இசையின் கவிதைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. சமூக அவலங்களின் மீதான சாடல்களையும், தன் மன அடுக்குகளில் தோன்றும் விசித்திரமான எண்ணங்களையும் அழகிய கவிதைகளாய் மாற்றும் வித்தை இசைக்கு மிக எளிதாக கைவருகிறது. கண்முன்னே நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் காணாதது போல் போக வேண்டிய சூழல், ஆசைக்கும் நிஜ வாழ்க்கைக்குமான முரண்கள், கடவுளின் மீதான தன் கோபம் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது அவருடைய கவிதைமொழி.

தமிழில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான கவிஞர்களில் தானும் ஒருவர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் பதிவு செய்து இருக்கிறார் இசை. இசையின் இயற்பெயர் .சத்தியமூர்த்தி. கோவையில் வசித்து வருகிறார். தற்போது உயிர்மையில் தொடர்ச்சியாக கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. "காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி" என்பது முதல் கவிதைத் தொகுப்பு. 'உறுமீன்களற்ற நதி" அவருடைய இரண்டாவது தொகுப்பு. டங்குடிங்குடு என்பற பெயரில் பதிவுலகிலும் எழுதி வருகிறார்.

புத்தகத்தில் இருந்து சில கவிதைகள்..

பிச்சாந்தேகி

ஒவ்வொரு இரவிலும்
தன்னுடலை வட்டவடிவ
அலுமினியத் தட்டாக்கி
யௌவனம் கொழுத்த வீடுகளின்
முன் நிற்கிறான் அவன்

காலையில் கதவு திறக்கும் பெண்ணுடலில்
முட்டி மோதி அலையுமவன் பெருமூச்சு

விளக்கை அணைத்ததும்
எங்கிருந்து கிளம்பி உடலில் நுழைகிறது
அந்த நுண்கிருமி

எரிக்க எதுவும் கிடைக்காமல்
படுக்கையில் கிடந்து புரள்கிறது ஆறடி ஜுவாலை

தலையணை எங்கும் குவிந்து கிடக்கிறது உதடுகள்

அவன் நினைவில் புணர்ந்த
பதிவிரதைகளின் சாபமோ என்னவோ
இதுவரையிலும் ஒரு சில்லரைக்காசும்
பெற முடியாத தன் தட்டை
நாற்பத்தி மூன்றாம் வயதில்
கிணற்றில் முக்கி அழித்தான்

3 கி.மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்துக்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்து விட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ 3 கி.மீ எனத்
தன்னைப் பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

தற்கொலைக்குத் தயாராகுபவன்

தற்கொலைக்குத் தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னன்னெவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து
தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்திரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கை கோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேன் என்கிறது

உறுமீன்களற்ற நதி

பதிப்பகம்: காலச்சுவடு

விலை: ரூ.60/-

(பின்குறிப்பு: வருகிற வெள்ளிக்கிழமை (27-11-09) அன்று நண்பர் யாத்ராவின் திருமண தாம்பூல நிச்சய விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..)

November 23, 2009

உக்கார்ந்து யோசிச்சது - கல்லூரி ஸ்பெஷல்...!!!

அழகர்மலையின் அடிவாரத்தில் எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் பொறியியல் கல்லூரி அது. கடந்த ஒரு வாரமாக செய்முறைத் தேர்வுகள் ஆய்வாளராக (External Lab Examiner) அங்கேதான் சென்று வந்து கொண்டிருந்தேன். ஆரம்பித்து மூன்று வருடமே ஆகி இருந்தாலும் மாணவர்களுக்கான எல்லா வசதிகளையும் நிர்வாகம் செய்து தந்திருக்கிறது. காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறைகள். அருமையான ஆய்வுக்கூட வசதிகள். அசந்து போய் விட்டேன்.

பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள்தான் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களோடு உரையாடுகையில், கேள்விகள் கேட்கையில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தேன். நன்றாக படிப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களால் தாங்கள் நினைப்பதை தெளிவாக சொல்ல முடியவில்லை. காரணம் - அவர்கள் வளர்த்துக் கொள்ள தவறிய மிக முக்கியமான திறமை. அது "Communication Skills"" என்று சொல்லப்படும் தொடர்பு கொள்ளும் திறன்.

ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும் அல்லவா? என்னுடைய மாணவர்களிடம் அடிக்கடி இதைப் பற்றி நான் பேசுவதுண்டு. பொதுவாகவே தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற ஒவ்வொரு கல்லூரியும் தனிப்பட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய நிறுவனங்கள் எல்லாம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே கேம்பஸ் பிளேஸ்மென்டுக்காக செல்வார்கள். நிலைமை மாறும் என்று நம்புவோம்.

***************

நாம் எத்தனைதான் நல்ல பிள்ளை மாதிரி அடங்கி இருக்க நினைத்தாலும் நம்ம சுழி சும்மாவே இருப்பதில்லை. ஆய்வாளராகப் போன இடத்திலும் அங்கிருந்த மக்களோடு நன்றாகப் பழகி விட்டேன். குறிப்பாக மின்னியல் துறையின் தலைவர் நமக்கு நெருங்கிய நண்பராகி விட்டார். அட்டகாசமான மனிதர். தமிழை நேசிக்கக் கூடியவர். கவிதை எல்லாம் எழுதுவாராம். அது மட்டுமல்லாது செம வேடிக்கையாய் பேசுகிறார். சாம்பிளுக்கு ஒன்று... அவர் என்னிடம் சொல்லியது..

"சார்.. நீங்க லெக்சரர்.. பாடம் சொல்லித்தாறவர்.. அதாவது பிரசங்கி.. நான் துறைத்தலைவர்.. உங்களை விட ஜாஸ்தி பேசணும்.. அப்போ நான்? அதிகப் பிரசங்கி.."

வாத்தியார் என்றால் மூன்று கிலோ இஞ்சியை முழுதாக அரைத்துக் குடித்த மாதிரியே அலைய வேண்டும் என்று யார் சொன்னது?

***************

என்னுடைய கல்லூரியில் உடன் வேலை பார்க்கும் நண்பர் அவர். ஆய்வுக்கூட உதவியாளராகப் பணிபுரிகிறார். மதுரை தியாகராயர் கல்லூரியில் பகுதி நேர பொறியியல் படிப்பு படித்து வருகிறார். நண்பருக்குத் திருமணம் ஆகி குழந்தையும் உண்டு. அவருடைய மகள் இரண்டாம் வகுப்பில் படித்து வருகிறாள். மாலை நேரத்தில் அவரை சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். நான் போன நேரம் நண்பர் தரையில் அமர்ந்து கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து அவருடைய மகளும் வந்து சேர்ந்தாள். அவர்களுக்கு இடையேயான உரையாடல் இங்கே..

"என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க..?"

"அப்பா ஹோம்வொர்க் பண்ணிட்டு இருக்கேன்மா.."

"இவ்வளவு நேரமாவா? என்ன பாடம்?"

"கணக்குமா.."

"எங்க மிஸ் கூடத்தான் ஹோம்வொர்க் கொடுத்தாங்க.. நான் முடிச்சுட்டேனே.."

"அப்பா.. பெரிய பையன்ல.. அதான் கொஞ்சம் பெரிய கணக்கா கொடுத்திருக்காங்கமா.."

"சும்மா ஏமாத்ததப்பா.. நானும் நோட்டுலதான் எழுதுறேன்.. நீயும் நோட்டுலதான் எழுதுற... உனக்கு தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுப்பா.."

சொல்லிவிட்டு ஓடி விட்டாள். நண்பர் என்னைப் பார்த்து அசடு வழிய, நான் சிரித்தபடி கிளம்பினேன்.

***************

வெள்ளிக்கிழமை சாயங்காலம் கல்லூரி முடிந்து வெளியே தான் வந்திருப்பேன். திடீரென மழை பிடித்துக் கொண்டது. நனைந்து கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளம் வரை என்னோடு டபுள்ஸ் வரும் நண்பரும் ஓடி வந்து ஏறிக் கொண்டார்.

"நல்ல வேளை.. இன்னைக்காவது மழை பெஞ்சதே" என்றார்.

"அடடா, மழை பெஞ்சு ஊரெல்லாம் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்களே.. ரொம்ப சந்தோஷம்" என்றேன்.

"நீங்க வேற.. கிட்டத்தட்ட ஒரு வாரமாவே இந்த ஜெர்கினையும் தொப்பியையும் எடுத்துக்கிட்டு வரேன்... மழையே இல்லை.. ஏதோ இன்னைக்கு பெய்தாலாவது நாம இதுகளத் தூக்கிட்டு திரிஞ்சதுக்கு ஒரு அர்த்தம் இருக்குல்ல.."

அடப்பாவி மனுஷா? எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்களோ..

***************

நண்பர்களே.. நான் எப்போதுமே என்னுடைய இடுகைகளில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் பழக்கம் உடையவன். ஆனால் கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே என்னால் அவ்வாறு பதில் சொல்ல இயலவில்லை. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கல்லூரியில் இணைய வசதிகள் அதிகமாக இல்லாததும், அங்கே ப்ளாகர் தடை செய்யப்பட்டு இருப்பதும்தான் காரணம். என்னுடைய பதிவை பிரவுசிங் சென்டரில் இருந்துதான் எழுதி வருகிறேன். இருக்கக் கூடிய நேரத்தில் இடுகைகள் எழுதவும், மற்ற நண்பர்களின் இடுகைகளைப் படித்து பின்னூட்டம் இடவும் மட்டுமே முடிகிறது. கூடிய விரைவில் எனக்கென ஒரு கணினி வாங்கி விட்டால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். எனவே பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறேன் என்று யாரும் தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி..!!

***************

கல்லூரி ஸ்பெஷல்னு போட்டதால, வழக்கமா சொல்ற கவிதைக்கு பதிலா ஒரு புதிர் கணக்கு.. விடையைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க நண்பர்களே..

ஒரு கல்யாண வீடு. அங்கே வருகிற எல்லோருக்கும் ஆப்பிள் பழம் தருகிறார்கள். பெரிவர்களில் ஆண் என்றால் ஐந்து பழமும், பெண் என்றால் மூன்று பழமும் தர வேண்டும். குழந்தைகளுக்கு அரை பழம் (1/2) மட்டுமே கொடுக்க வேண்டும். திருமணத்துக்கு வந்தது மொத்தம் நூறு பேர் . நம்மிடம் இருப்பதும் நூறு ஆப்பிள்கள்தான். சரியாகப் பகிர்ந்து கொடுத்தாயிற்று. அப்படியானால் வந்த நூறு பேரில் எத்தனை ஆண், எத்தனை பெண் மற்றும் எத்தனை குழந்தைகள் இருந்தார்கள்? யோசிங்க யோசிங்க..

நெக்ஸ்டு மீட் பண்றேன்.... :-))))))))))

November 20, 2009

சாதிக் கழுதைகள்..!!!

"எலேய்.. அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பார்க்காம கழுதைய வெரசா ஓட்டிக்கிட்டு ஆத்தங்கரைக்கு போய் சேரு.. நானும் சீக்கிரமா வாறன்.. நான் வரப்ப நீ அங்க இல்ல.? மவனே தோல உரிச்சிடுவேன்.."

"செரிப்பா.. நான் வந்திடுறேன்" என்றவாறே தத்தக்கா புத்தக்கா என்று நடக்கும் கழுதைகளைப் பத்தியபடி கிளம்பினான் சின்னான்.

"ஒம்போது வயசு முடியப் போகுது.. பள்ளிக்கொடம் போயிருந்தா எப்படியும் மூணாங்கிளாசாவது படிச்சிட்டு இருந்திருப்பான்.." நடந்து போகும் மகனை பார்த்தபடி நின்றான் எசக்கி.

சிலுக்குவார்பட்டி மொத்த ஊருக்கும் அவன் ஒருத்தன் தான் சலவைத் தொழிலாளி. எசக்கியோட அப்பா, அவன் அப்பனுக்கு அப்பா என்று அவன் குடும்பமே பரம்பரை பரம்பரையாய் அந்த ஊரிலேயே சலவைத் தொழில் செய்பவர்கள். பரவையில் இருந்து எசக்கிக்கு வாக்கப்பட்டுவந்தவள் முத்துமாரி. ரெண்டு பேருக்கும் அஞ்சு வருஷமா பிள்ளையில்லாம இருந்து, கோவில் கோவிலாக அலைந்து பெற்ற பிள்ளைதான் சின்னான். தன்னை மாதிரி இல்லாமல் தன் பையன் நல்லா படிச்சு வாழ்க்கைல முன்னுக்கு வரணும்னு எசக்கிக்கு ஆசை.

சின்னானுக்கு ஐந்து வயது ஆகும்போது சுடலைமுத்து வாத்தியாரிடம் பேசினான். அவர் திகைத்துப் போனார். "நீ எதுக்கும் நம்ம நாட்டாமைக்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுரு" என்று மட்டும் சொன்னார்.

தன் மகனின் படிப்பைப் பற்றி எசக்கி சொல்வதைக் கேட்டு நாட்டாமை சிரித்தார்.

"ஏண்டா.. உனக்கு புத்தி எதுவும் பெசகிப் போச்சா? அழுக்கு எடுக்குற பயலுக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேல? பையனுக்கு தொழில் சொல்லி குடுப்பியா.. அதை விட்டுட்டு.. போடா.. போ.. போய் பொழப்ப பாரு.."

"அதுக்கு இல்ல சாமி.. புள்ள நல்ல சூட்டிகையா இருக்கான்.. அவன் ஆத்தாளும் அவன நாலெழுத்து படிக்க வெச்சு பார்க்கனும்னு ஆசைப்படுறா.. நீங்க மனசு வச்சா முடியும்.."

"அதெல்லாம் வேலைக்கு ஆவாது.. நீ கெளம்பு.."

"இல்லைங்கையா..அது வந்து.."

நாட்டாமைக்கு கோபத்தில் கண்கள் சிவந்து போனது.

"எடுபட்ட நாயே.. என்ன எகத்தாளமா? திமிரு ஜாஸ்தியாப் போச்சா? நானும் சொல்லிகிட்டே இருக்கேன்.. கேக்காம எதுத்து எதுத்து பேசிக்கிட்டு இருக்குற மயிரு.. ஏண்டா எம்புள்ளையும் உம்புள்ளையும் ஒரே பள்ளிகொடத்துல படிச்சா பொறவு எனக்கு என்னடா மருவாதி.. நான் சாதிமான்டா.. ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாலும் செருப்பத் தூக்கி சாமி ரூம்புக்குள்ள வைக்க முடியாது.. இன்னொரு தரம் இதப் பத்தி என்கிட்டே பேசினன்னு வையி.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. ஆமா.."

நினைக்கும் போதே எசக்கிக்கு கண்கள் ஈரமாயின. விதியை நொந்தவாறே குடிசைக்குள் நுழைந்து கஞ்சியைக் குடித்து விட்டுக் கிளம்பினான். அவன் ஆத்தங்கரைக்கு வந்தபோது சின்னான் இன்னும் வந்திருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆற்றிலும் அவ்வளவாக கூட்டம் இல்லை.

"படிச்சு படிச்சு சொன்னேனே.. இன்னும் பயலைக் காணலியே.. பக்கி எங்கயாவது விளையாடப் பூயிட்டானா? இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் மண்டையப்பொளக்க ஆரம்பிச்சிடுமே.."
சாலையை பார்த்தபடி மகனுக்காக காத்திருந்தான். சற்று நேரம் கழித்து தூரத்தில் யாரோ ஓடி வருவது தெரிந்தது. நெருங்கி வந்தால்.. சங்கிலி. இவனுக்குப் பங்காளி முறை வேண்டும்.
"என்னடா மாப்புள.. இப்படி ஓடியார?"

"மச்சான்.. ஸ்ஸ்.. மச்சான்.. நம்ம சின்னான்.."

"என்னடா.. சின்னானுக்கு என்ன ஆச்சு?" பதறிப் போனான் எசக்கி.

"நம்ம சின்னான் நாட்டாம மண்டிய கல்லக் கொண்டு அடிச்சு ஒடச்சிட்டானாம்... மரத்துல கட்டிப் போட்டிருக்காங்க.. ஊரே பஞ்சாயாத்துல தெரண்டு நிக்குது.. "
எசக்கிக்கு கண்ககளை இருட்டிக் கொண்டு வந்தது. பாவிப் பய மகன் எதுக்கு இப்படி பண்ணினான்னு தெரியலையே.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரை நோக்கி ஓடத் துவங்கினான்.
ஊர்ப் பஞ்சாயத்து நடக்கும் இடம். ஒரு வேப்பமரத்தில் சின்னானைக் கட்டி இருந்தார்கள். பக்கத்தில் கிடந்த பெஞ்சில் நாட்டாமையும் ஊர்த் தலையாரியும் உட்கார்ந்து இருந்தார்கள். நாட்டாமையின் தலையில் இருந்த வெள்ளைக்கட்டில் அங்கங்கே திப்பை திப்பையாய் ரத்தம். அவர் கண்கள் கோபத்தில் ரத்தமாகச் சிவந்து இருந்தது. ஓடி வந்த எசக்கி நேராக நாட்டாமையின் கால்களில் வந்து விழுந்தான்.
"ஐயா மகராசா.. எம்மவ என்ன தப்பு பண்ணினான்னு தெரியல.. அவன தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. சின்னப் பய.. தெரியாத்தனமா ஏதாவது செஞ்சிருப்பான்.. எஞ்சாமி.. அவன எதுவும் பண்ணிப்புடாதீங்க.."
நாட்டாமை அவனை ஓங்கி எத்தினார். "எண்டா.. ஒம்மவனா ஒண்ணும் தெரியாதவ.. பரதேசிப் பயலுகளா.. அப்பனும் மகனும் என்னமா நடிக்கிறீங்கடா.. போய் ஏன் இப்படி பண்ணினான்னு அவன்கிட்டவே கேளு.."
எசக்கி மரத்தில் கட்டப்பட்டுக் கிடந்த சின்னானை நெருங்கினான். அவன முகம் கல்லாய் இறுகிக் கிடந்தது.

"ஒனக்கு ஏதும் மற கழண்டு போச்சா? ஏண்டா இப்படி பண்ணின?"
சின்னான் வழக்கம் போலத்தான் கழுதைகளை மேய்த்துக் கொண்டு வந்தான். ஆத்தங்கரைக்கு போகும் வழியில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. அவனுக்கு வெகு நாளாகவே பள்ளிக்கு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் கண்ணில் படும் போதெல்லாம் அவனுக்கு ஏக்கமாகவே இருக்கும். சுற்றும் முற்றும் பார்த்தான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்கம்பக்கம் யாரும் இல்லை. மெதுவாக வேலி ஏறி குதித்தான். வகுப்பறைக்குள் நுழைந்தான். வாத்தியார் அமரும் மேசையை ஆசையாய் தடவி பார்த்தான். கரும்பலகையில் கிறுக்கினான். எனக்கு மட்டும் ஏன் இப்படி? நா ஏன் படிக்கக் கூடாது? அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.
குமுறிக் கொண்டே வந்த வழியே வெளியேறி கழுதைகளை கூட்டிக் கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினான். சற்று தூரம்தான் போயிருப்பான். எதிர்த்தாற்போல் யாரோ வருவது தெரிந்தது. நாட்டாமை தான் வந்து கொண்டிருந்தார். சின்னானின் உள்ளம் ஆத்திரத்தில் கொந்தளித்தது. ஒன்னாலே தான என்னோட ஆசையெல்லாம் மண்ணாப் போச்சு.. உன்ன விட மாட்டேண்டா.. கீழே குனிந்து கல்லை எடுத்தான்.
எசக்கிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சின்னானின் கண்கள் கலங்கி இருந்தன. மீண்டும் நாட்டாமையிடம் ஓடி வந்தான்.
"ஐயா.. அவன் செஞ்சது தப்புத்தே.. ஆனா அவன் சின்னப்புள்ள.. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க.. அவன விட்டுடுங்க.."

நாட்டாமை திரும்பி தலையாரியைப் பார்த்தார். "என்னய்யா சொல்லுற.."

"நீங்க பார்த்து என்ன பண்ணினாலும் சரிதாங்கையா.."

நாட்டாமை சின்னானிடம் திரும்பினார். "சரிடா.. உன் குடும்பமே இந்த ஊருக்காக ஒழச்சு இருக்கீங்க.. அதனால ஒம்மவன விட்டுடுறேன்.. ஆனா அவனுக்கு பதிலா ஒனக்கு பத்து கசையடி.. சம்மதமா.." அவர் கண்கள் குரூரமாய் மின்னின.
எசக்கிக்கு சுரீரென்றது. மெளனமாக சரியென தலையசைத்தான். நாட்டாமை கண்ணசைக்க தண்டனை நிறைவேறியது. சங்கிலிதான் அவனைக் கைத்தாங்கலாக வீடு வரை கொண்டு வந்து விட்டான். முத்துமாரி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். சின்னான் ஒன்றுமே பேசாமல் இறுகிப் போய்க் கிடந்தான்.
சங்கிலி போனவுடன் எசக்கி வீட்டுக் கதவை மூடி விட்டு சின்னானிடம் வந்தான். "ஒன்னால என்ன ஆச்சுன்னு பார்த்தியா.. ஏண்டா இப்படி பண்ண.." பையனோ அமைதியாக நின்றான். "சொல்லுடா.." கோபம் வெறியாக மாறியது. "அறிவு கெட்ட நாயே.. இனிமே இப்படி பண்ணுவியா.. பண்ணுவியா." என்றவாறே சின்னானை போட்டு அடிக்கத் தொடங்கினான். நடுவில் புகுந்து தடுக்க முயன்ற மனைவிக்கும் மிதி. முடிந்த வரை அடித்து ஓய்ந்தவனாக கீழே உட்கார்ந்தான்.
பையனைப் பார்த்தான். சின்னான் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய அழுது கொண்டிருந்தான். அவனை பார்க்க பார்க்க எசக்கியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென்று போய் அவன் காலில் விழுந்தான். "என் ஊட்டுல போய் மகனாப் பொறந்த பாவத்துக்கு.. நானே ஒன்ன அடிச்சுப் போட்டேனே.. உனக்கு ஒண்ணும் பண்ண முடியாத இந்த அப்பன மன்னிச்சுடுப்பா.." சின்னான் அப்பனை கட்டிக் கொண்டு அழுதான். இரவு வெகுநேரம் வரை அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.
மறுநாள் காலை விடிந்தபோது அந்த வீட்டின் முன் கழுதைகள் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்தன.

November 15, 2009

பிடிச்சது - ரொம்பப் பிடிச்சது - பிடிக்காதது..!!!

பதிவுலகில் அவ்வப்போது ஏதாவது ஒரு பதிவை சங்கிலிதொடராக எழுதச் சொல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது நம் மக்களை பிடித்து ஆட்டுவிப்பது "பிடித்தது, பிடிக்காதது" என்னும் பதிவு. கடந்த இரண்டு வாரங்களாகவே கல்லூரியில் கொஞ்சம் ஆணி ஜாஸ்தி என்பதோடு, இணைய வசதியும் இல்லாததால் நான் அதிகமாக பதிவுகளைப் படிக்கவில்லை. நேரமில்லாத சூழ்நிலையில் நம்மை யாரும் இந்த ஆட்டத்துக்கு இழுக்க வில்லை என்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நண்பர் "வானவில் வீதி" கார்த்திக் விடுவேனா பார் என்று கூப்பிட்டு விட்டார். சரி எழுதி விடுவோம் என்று சிறிதும் யோசிக்காமல் எனது மனதில் பட்டதை எழுதுகிறேன். பதிவையும் கொஞ்சம் மாத்தி இருக்கேன். எப்படி வருகிறதென்று பார்ப்போம்..

எழுத்தாளர்

பிடித்தது : சாரு நிவேதிதா, வாண்டுமாமா

ரொம்பப் பிடித்தது : எஸ்.ராமகிருஷ்ணன், ஆதவன்

பிடிக்காதது :ரமணிச்சந்திரன்

கவிஞர்

பிடித்தது : மனுஷ்யபுத்திரன், இசை

ரொம்பப் பிடித்தது : யூமா.வாசுகி, முகுந்த் நாகராஜன்

பிடிக்காதது :கொளஞ்சி (இந்த ஆளை யாருன்னு தேடிக்கிட்டுஇருக்கேன்), புரியாத கவிதை எழுதுற எல்லோரும்

இசையமைப்பாளர்

பிடித்தது : இளையராஜா, வித்யாசாகர், யுவன்ஷங்கர்

ரொம்பப் பிடித்தது : ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்

பிடிக்காதது :ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர்

பிடித்தது : வாலி, நா.முத்துக்குமார்

ரொம்பப் பிடித்தது : தாமரை, வைரமுத்து

பிடிக்காதது : விவேகா (கந்தசாமி பாடல் வரிகளைக் கேட்டதில் இருந்து உடம்பின் சகல ஓட்டைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருக்கிறது), கபிலன்

இயக்குனர்

பிடித்தது : மகேந்திரன், ஷங்கர்

ரொம்பப் பிடித்தது : பாலா, செல்வராகவன்

பிடிக்காதது :பேரரசு

நடிகர்

பிடித்தது : தனுஷ், ஜெயம் ரவி

ரொம்பப் பிடித்தது : ரஜினி, அஜித்

பிடிக்காதது :விஜய்

நடிகை

பிடித்தது : ஷாலினி, அசின்

ரொம்பப் பிடித்தது : ஐஸ்வர்யா, ரம்பா

பிடிக்காதது :சிம்ரன்

அரசியல்வாதி

பிடித்தது : நன்மாறன், கலைஞர்

ரொம்பப் பிடித்தது : யாருமில்லை

பிடிக்காதது :ராமதாஸ்

பதிவர்

உங்க திட்டம் பலிக்காது.. அஸ்கு புஸ்கு.. இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேனே.. :-)))))))))

November 12, 2009

உக்கார்ந்து யோசிச்சது (12-11-09)..!!!

சமீபத்தில் எங்கள் கல்லூரி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்கு, நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும்படி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள். (உன்னையப் போயான்னு எல்லாம் சிரிக்கக் கூடாது..!!) சரி, ஆட்டம் பாட்டம்னா நமக்கும் கொண்டாட்டம் தானேன்னு ஒத்துக்கிட்டேன். அங்கே போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க நடனம்னு சொன்னது பரதநாட்டியப் போட்டின்னு. நமக்கு பார்த்து ரசிக்க வேணும்னா தெரியுமே ஒழிய, பரதநாட்டியம் பத்தி வேற ஒண்ணுமே தெரியாது.

இதை போட்டி அமைப்பாளர்களான பள்ளி ஆசிரியர்கள்கிட்ட சொன்னா, அவங்க சிரிச்சுக்கிட்டே, " இந்தப் போட்டிக்கு நடுவரா வந்திருக்கிற எல்லோருமே அப்படித்தான் சார்.. நீங்க சும்மா வாங்க"ன்னு சொல்றாங்க. ஆனாலும் நமக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல்ல. "இல்லைங்க..நான் இந்த ஆட்டத்துக்கு வரலை"ன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டேன். இன்னொரு ஆசிரியரை (என்னை மாதிரியே எதுவும் தெரியாதவர்) வச்சு போட்டியை நடத்தினாங்க. நம்ம நண்பன்கிட்ட பீல் பண்ணி சொன்னா "போடா போக்கத்தவனே.. அநியாயமா ஒரு கிப்டு வீணாப் போச்சே"ன்னு திட்டிட்டுப் போய்ட்டான்.

தங்கள் திறமையை நிரூபிக்கும் கனவோடு எத்தனை குழந்தைகள்..? உயிரைக் கொடுத்து பயிற்சி செய்திருப்பார்கள் இல்லையா? எல்லாப் பள்ளிகளிலும் இதேபோலத்தான் நடக்கிறதா? இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் பள்ளி நிர்வாகத்தினர் கொஞ்சம் சிரமம் எடுத்து விஷயம் தெரிந்தவர்களை நடுவர்களாகக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமே?சிந்திப்பார்களா?

***************

நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வரும் 27 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. அவருடைய பதிவுகளை நான் இதுவரை படித்தது கிடையாது. ஆனால் மற்ற நண்பர்களின் பதிவுகளில் பத்தி பத்தியாக பிரித்து மேய்ந்திருக்கும் அவருடைய பின்னூட்டங்களை மட்டுமே பார்த்து இருக்கிறேன். போன வாரம் போன் செய்து இருந்தார். நம்பரை எங்கிருந்து பிடித்தார் என்று தெரியவில்லை (வாலு?). "கல்யாணம், வந்திடுறீங்க" என்று உரிமையோடு கட்டளையும் இட்டார். மறுக்க முடியுமா? ஆகவே நாமும் ஆஜர் ஆகிறோம். ஒரு இனிய பதிவர் சந்திப்பாகவும் இந்த விழா அமையும் என்று நம்புகிறேன். வந்திருங்க மக்கா, கலக்கிருவோம்.

***************

ராமாயணம் நடந்த காலம் கிமு பத்தாயிரம் என்று கணக்கிட்டு இருக்கிறார்களாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தசரதனின் அரசவையில் சோழ மன்னர்கள் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறதாம். அதேபோல மகாபாரத யுத்தத்தின் போது பாண்டவர், கௌரவர் இரு தரப்பினருக்கும் சேர மன்னன் உணவு வசதிகள் செய்து தந்ததாக குறிப்புகள் இருக்கின்றனவாம். இந்த இரண்டு தகவல்களையும் கலைமகள் தீபாவளி மலரில் இருக்கும் ஒரு கட்டுரையில் படித்தேன். இது உண்மைதானா? தமிழ் அத்தனை பழமையான மொழி என்பது இருக்கட்டும். அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா? வரலாறு தெரிஞ்சவுங்க யாராவது கொஞ்சம் விளக்கம் தாங்கப்பா..

***************

வேட்டைக்காரனில் வரும் "என் உச்சி மண்டையில" என்ற பாட்டை சமீபத்தில் கேட்க முடிந்தது. விஜய் ஆண்டனி பொளந்து கட்டி இருக்கிறார். ஆனால் பாட்டு ஏற்கனவே "அ ஆ இ ஈ" படத்தில் வந்த மேனாமினுக்கி பாட்டின் உல்டா. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. பாட்டை எப்படி படம் பிடித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்க வைக்கிறது. அதே போல தற்போது டிவியில் விரும்பி பார்க்கும் பாடல் - நினைத்தாலே இனிக்கும் படத்தின் "பனாரஸ் பட்டு கட்டி". விஜய் ஆண்டனியின் இசையும், ப்ரித்விராஜும் பிரியாமணியும் பாடலை என்ஜாய் செய்து ஆடும் விதமும், ரசிக்க வைக்கும் நடன அமைப்பும் என்று பாட்டு களை கட்டுகிறது.

***************

லா.ச.ராமாமிர்தம் அவர்களுடைய "புத்ர" என்னும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் வாசிக்கும் அவருடைய முதல் நாவல் இது. ஒரே வார்த்தையில் சொல்வதானால் - அட்டகாசம். ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப் போராட்டம் தான் கதை. ஒரு வரிக் கதைதான். ஆனால் அதை சொல்லியிருக்கும் விதத்தில் மனிதர் அசரடிக்கிறார். வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கும் விதம் கொள்ளை அழகு. முடிவுமட்டுமகொஞ்சம் சட்டென்று முடிந்ததுபோலத் தோன்றியது. இருந்தாலும், மொழியின் வளமைக்காகவே வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

***************

ஒரு கவிதை முயற்சி..

கடவுள்

இருக்கலாம்..
இல்லாமலும் இருக்கலாம்..
இருப்பின்,
அவன்
அவள்
அது
இதில் எதுவாக
இருக்கும்? Justify Full

நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))))))))))


November 7, 2009

டிஷ்யூங் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009..!!!

ஊருக்கு ஒதுக்குப்புறமான ரகசிய ஆய்வுக்கூடம். வட்ட மேஜையைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.

"இது சாத்தியமா டாக்டர்?"

டாக்டர் என்றழைக்கப்பட்ட புரொபசர் கியூட்டன் (நியூட்டனின் பாதிப்பு) நிமிர்ந்து பார்த்தார். குள்ள உருவம். நரைத்த தாடி. கண்ணாடிக்குப் பின் தீர்க்கமான கண்கள். கொஞ்சம் மறை கழண்ட கேஸ் தான் என்றாலும் அறிவியலில் புலி. திருகுனி புத்தியால் ஆராய்ச்சி ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்க முயன்று பிடிபட்டவர். பத்தாண்டு காலம் களிசோறுடன் கடுங்காவல். இரண்டாடுகளுக்கு முன் வெளியே வந்து மீண்டு(ம்) ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறவர்.

"என் மேல் நம்பிக்கை இல்லையா?"

"அதற்கில்லை.. இயற்கைக்கு மாறாக எப்படி?"

"அறிவியல் ஒரு மர்மதேசம்.. இங்கே எதுவும் நடக்கும்.."

"டிவியில் திகில் நாடகங்கள் நிறைய பார்ப்பீர்களா டாக்டர்..?"

கியூட்டன் முறைத்துப்பார்க்க கேட்டவன் வாயை மூடிக் கொண்டான்.

"என்னோடு வாருங்கள்". எழுந்து நடக்கத் தொடங்கினார். "அணுகுண்டு பற்றிய ஒரு ஆராய்ச்சியின் போது எதேச்சையாகத்தான் இதைக் கண்டுபிடித்தேன். இன்னும் கொஞ்ச நாட்கள்தான். உலக நாடுகள் எல்லாம் என் காலடியில் கிடக்கும்."

ஒரு அறையைத் திறந்து உள்ளே நுழைந்தார். லேசான இருட்டு அறையெங்கும் பரவி இருந்தது. அங்கே சதுர வடிவில் ஒரு மேஜை. அதன் மீது செத்துப்போன ஒரு நாயின் உடம்பு கிடந்தது. கியூட்டன் தன் கோட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு வினோத வடிவிலான ஒரு துப்பாக்கியை எடுத்தார்.

"இந்த நூற்றாண்டின் அதி அற்புதமான கண்டுபிடிப்பைக் காண தயாராகுங்கள் மானிடர்களே.."

துப்பாக்கியில் இருந்து பிரகாசமான ஒளிக்கற்றை நாயின் மீது பாயத் தொடங்கியது. சரியாக ஐந்து நிமிடங்கள் முடிந்த போது.. நாயின் உடம்பில் அசைவுகள். மெதுவாக எழுந்து நின்ற நாய் சிறிது நேரத்திலேயே வேகமாக குரைக்கத் துவங்கியது. பார்த்தவர்களின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போயின.

"இக்கி..இக்கி..இக்கி.." வெறித்தனமாக சிரித்துக் கொண்டிருந்தார் கியூட்டன்.

"நிறுத்துங்கள் டாக்டர். சிரித்துத் தொலைக்கிறீர்கள். பயமாய் இருக்கிறது." ஒருவன் கத்தினான்.

"என் கண்டுபிடிப்பை பற்றி இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?"

"மிருகத்துக்கு உயிர் கொடுத்தீர்கள். சரி. மனிதனுக்கு..?"

அடுத்த அறைக்கு வந்தார்கள். அங்கே மேஜையில் ஒரு மனிதனின் பிணம். மீண்டும் துப்பாக்கியில் இருந்து பாய்ந்தன அதிசயக் கதிர்கள். சற்றே நேரத்தில் மாண்டவன் மீண்டான். இறக்கும் முன்பு அவனுக்கு இருந்த நினைவுகள் அப்படியே இருந்ததுதான் ஆச்சரியம்.

"ஒத்துக் கொள்கிறோம் டாக்டர். நீங்கள் ஒரு மாமேதை. எத்தனை விலையானாலும் இந்த துப்பாக்கியை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?"

"இதன் சூத்திரம் அறிந்தவன் நான் ஒருவன் மட்டுமே. இதை வைத்து இந்த உலகையே ஆள்வேன்.." பரவசத்தில் ஆடிக் கொண்டிருந்தார் கியூட்டன்.

"சாரி பார் தி பிரேக்..ஆனால் டாக்டர்..?" ஒருவன் அவருடைய ஆட்டத்தை தடை செய்தான். என்ன என்பது போல கியூட்டன் அவனைப் பார்த்தார்.

"இதுவரை நீங்கள் செத்துப் போன மனிதனை உயிர்ப்பித்துக் காட்டினீர்கள். ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவரைக் கொன்று அவர் மீது இந்த ஒளிக்கற்றையை சோதித்துப் பார்க்க விரும்புகிறோம். எனவே.."

"அதற்கு?" கியூட்டனின் கண்களில் லேசான பயம் தோன்றியது.

அவன் சிரித்துக் கொண்டே துப்பாக்கியை எடுத்து புரொபசரின் முன் நீட்டினான்.

"அடங்கோயால..இவங்க நமக்கு மேல லூசா இருப்பாய்ங்க போல இருக்கே.. அடே மாபாதகர்களா.. என்னிடம் இருப்பது பரிசோதனைக்காக நான் வடிவமைத்த அதிசயத் துப்பாக்கி.. அதை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது.. சுட்டு விடா....."

அவர் சொல்வதற்கு முன்பாகவே அவன் சுட்டான்.

"டிஷ்யூங்.."

November 3, 2009

பதிவுலகில் ஒரு வருடம் - வரலாறு - நன்றி..!!!


நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. நவம்பர் மூன்று, 2008 - என்னுடைய வலைப்பூவை இப்போதுதான் ஆரம்பித்ததுபோல இருக்கிறது. அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. நாட்கள்தான் எத்தனை வேகமாகப் போகின்றன?!! சொல்லவொண்ணா சந்தோஷ உணர்ச்சியில் மனம் குதூகலிக்கிறது. என்னுடைய சந்தோஷங்களை என்னுடைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுவதை விட வேறு நல்ல விஷயம் என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்? என் வலைப்பூவின் பிறந்தநாளைக் கொண்டாட, நான் ப்ளாக் எழுத வந்த கதையை உங்களுக்கு சொல்லி மகிழவே இந்த இடுகை.


2008 ஜூன் மாதத்தின் ஒரு மதியப்பொழுது. வேலை வெட்டி இல்லாமல் காலேஜில் நெட்டை நோண்டிக் கொண்டிருந்தபோது முதல்முறையாக சாரு நிவேதிதாவின் ப்ளாக் கண்ணில் தட்டுப்பட்டது. அப்போது குட்டிக்கதைகள் வந்து கொண்டிருந்த நேரம். சுவாரசியமாக தினமும் படிக்க ஆரம்பித்தேன். நடுவில் ஒருநாள் அதிஷா என்பவருடைய தளமுகவரியை சாரு குறிப்பிட்டு இருந்தார். நடுத்தரக் குடும்பத்து இளிச்சவாயர்களை அடையாளம் காண்பதைப் பற்றிய இடுகை அது. செம காமெடி. ரசித்துப்படித்தவன் அதற்கு முன் அதிஷா எழுதிய எல்லா இடுகைகளையும் படிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து லக்கியின் தளம் அறிமுகமானது. பின்பு பரிசல்காரன்.


எனக்கோ ஆச்சரியம். வலையில், தமிழில் இப்படி ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருந்தது ரொம்ப அதிசயமாக இருந்தது. கம்ப்யூட்டரின் முன் வந்தால் முதலில் இவர்கள் மூவருடைய ப்ளாகை ஓபன் பண்ணி பார்த்துவிட்டுத்தான் மற்றதை படிப்பேன். அந்த அளவுக்கு இவர்கள் என்னை ஈர்த்தவர்கள். பின்பு பின்னூட்டங்களில் இருந்தவர்களையும் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஆதர்ஷ எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனும் ப்ளாக் எழுதுகிறார் என்று தெரிந்தபோது சந்தோஷம் இரட்டிப்பானது. இப்படித்தான் தமிழ் வலையுலகம் எனக்கு அறிமுகமானது.


சரி..எத்தனை நாள்தான் படித்துக் கொண்டே இருப்பது? நாமும் பின்னூட்டம் போட வேண்டாமா? அதற்கு நமக்கென ஒரு வலைப்பூ வேண்டுமே?! ப்ளாகரை தேடிக் கண்டுபிடித்தேன். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது எனக்கு மிகவும் பிடித்த புத்தகமான பொன்னியின் செல்வனையே தலைப்பாக வைத்து தளத்தை ஆரம்பித்தேன். தமிழில் எழுதவும் தெரியாது என்பதால் முதல் இரண்டு இடுகைகள் ஆங்கிலத்திலேயே எழுதினேன்.பின் பரிசலின் தளத்தில் இருந்த லிங்கின் மூலம் கூகிள் ட்ரான்ஸ்லிடேரஷன் அறிமுகம் ஆனது. இன்று வரை அதைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.


தமிழில் எழுதிய முதல் இடுகை என்னைப் பற்றிய அறிமுகமாக அமைந்தது. இரண்டு மாதங்களில், டிசம்பர் மாத இறுதி வரை மொத்தம் பனிரெண்டு இடுகைகள் எழுதினேன். அதை என்னைத்தவிர வேறு யாரும் படிக்கவில்லை. தினமும் தளத்தை திறந்து யாராவது கமென்ட் போட்டிருக்கிறார்களா, யாரும் நம்மை பாலோ பண்ணுகிறார்களா என்று பார்ப்பதிலேயே பொழுது போய்க் கொண்டிருந்தது. 2009 - புது வருடத்தில் நான் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் என் தளத்துக்கு விடிவு பிறந்தது. என்னுடைய தாத்தில் முதல் பின்னூட்டம் இட்டவர் நண்பர் ச.பிரேம்குமார். (என்ன கொடுமை இது பாண்டியா?) என்னுடைய முதல் பாலோவர். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இனிமேல் தூள் கிளப்புவோம் என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப காலம் முதலே என்னுடன் பயணிக்கும் நண்பர் நையாண்டி நைனாவின் நட்பும், கூட்ஸ் வண்டியின் அறிமுகமும் கிடைத்தது இந்த நேரத்தில்தான்.


திரட்டிகளைப் பற்றி நான் அப்போது அறிந்திருக்கவில்லை. எனக்கே தெரியாமல் என்னுடைய பதிவை தமிழ்வெளி மற்றும் திரட்டி.காம் ஆகிய திரட்டிகளில் இணைத்து இருந்தேன். ஒரு இடுகை எழுதினால் மூன்று அல்லது நான்கு கமெண்டுகள் வரும். அதற்கே தலைகால் புரியாமல் ஆடுவேன். மற்ற நண்பர்களுடைய தளங்களில் தமிலிஷ் மற்றும் தமிழ்மணம் கருவிப்பட்டைகள் இருக்கும். அவற்றை எப்படி இணைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். கடைசியாக பிப்ருவரி 14 அன்று என்னுடைய தளத்தை இந்த இரண்டு திரட்டிகளிலும் இணைத்தேன். இன்றைக்கு வலையுலகில் ஒரு சிலருக்கேனும் என்னைத் தெரியுமளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திரட்டிகள்தான். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


ஒரு வருடம். 140 இடுகைகள். 175+ பாலோவர்ஸ். கிட்டத்தட்ட 75,00 ஹிட்ஸ். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு இடுகை. அனுபவம், கதை, கட்டுரை, கவிதை என்று தோன்றுவதை எல்லாம் எழுதி வந்திருக்கிறேன். கேபிள் ஷங்கரின் பதிவுகளால் பாதிக்கப்பட்டு சினிமா விமர்சனம் எழுதத் தொடங்கி இன்று அது ஒரு வழக்கமாகவே மாறி விட்டது. நான் தொடர்ந்து எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து ஆக்கப்பூர்வமாக விமர்சித்து, என்னை ஊக்குவித்து வரும் என்னுடைய நண்பர்கள்தான். அவர்களுக்கு என் நன்றி. நான் ப்ளாக் ஆரம்பித்த போது யாராவது என்னிடம் வந்து இத்தனை எழுதுவாய் என்று சொல்லியிருந்தால் நானே சிரித்திருப்பேன். ஆனால் எதிர்பாராத விஷயங்களை நம்மையும் அறியாமால் நடத்துவதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.. இல்லையா?


அற்புதமான நண்பர்களை இந்தப் பதிவுலகம் எனக்கு அளித்து இருக்கிறது. முதன் முதலில் எனக்கு போன் செய்த பொன்.வாசுதேவன், குமாரை நிலாவன், ராஜூ, திருப்பூரில் நான் சந்தித்த சொல்லரசன், ஆதவா, சிவகாசியில் இருக்கும் அன்புத்தம்பி அன்புமதி என நண்பர்கள் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகத் தொடங்கியது. பின்பு வந்த திருச்சி பதிவர் சந்திப்பு, மதுரை மற்றும் ஈரோட்டில் நடந்த சந்திப்புகள் என்று எல்லாமே களைகட்டியது. ஆ.ஞானசேகரன், கமல், இளையகவி, தேவன்மாயம், சீனா ஐயா, தருமி ஐயா, வால்பையன், சுந்தர், பீர், ஜாலிஜம்பர், பாலகுமார், அருண், கதிர், ஜாபர், பாலாஜி, ஜெர்ரி, பப்பு, லோகு, தண்டோரா, Mayvee என்று நட்புவட்டம் வளர்ந்து கொண்டே வந்தது. இன்னுயிர் நண்பர் ஸ்ரீதரின் அறிமுகமும் கிடைத்தது. கடவு நிகழ்ச்சியின்போது ச.முத்துவேல், யாத்ரா ஆகியோரை சந்திக்க முடிந்தது. கோவையில் வடகரை வேலன் அண்ணாச்சியையும், செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்தது. மேலும் நான் நேரில் பார்த்திராவிடினும் என் மீது அன்பைப் பொழியும், என் மீது அளவு கடந்த அக்கறை கொண்ட நண்பர்கள் ஆ.முத்துராமலிங்கம், கடையம் ஆனந்த், அத்திரி, குடந்தை அன்புமணி, ரம்யா, ஜாக்கிசேகர், பட்டிக்காட்டான், இயற்கை, கவின், கார்த்திக், வினோத் கெளதம், பிரியமுடன் வசந்த், அ.மு.சையது, நாடோடி இலக்கியன், தீப்பெட்டி கணேஷ், சம்பத், உழவன், ஜெட்லி, தவப்புதல்வன், ஷீ-நிஷி, புதியவன், கும்மாச்சி, வானம்பாடிகள், சுரேஷ் என்று எண்ணிக்கையில் அடங்கா நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். என் தங்கையின் திருமணத்திற்கு தங்கள் வீட்டுத் திருமணம் என்கின்ற உணர்வோடு பதிவுலக நண்பர்கள் வந்து கலந்து கொண்டபோது உள்ளம் நெகிழ்ந்து போனேன். உங்கள் அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றி. (நண்பர்களில் யாருடைய பெயரையேனும் தவற விட்டிருந்தால் தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)


சந்தோஷங்கள் மட்டும்தானா? பதிவுலகில் சங்கடங்களே இல்லையா? இருக்கின்றன. ஆனால் சந்தோஷத்தோடு ஒப்பிடும்போது அவற்றை பெரிய பொருட்டாக நினைப்பதற்கு இல்லை. ஆரம்ப காலத்தில் என்னுடைய தளத்தில் என் அலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தேன். நடு இரவு இரண்டுமணிக்கு போன் செய்து.."என் பேரு சுப்பிரமணி.. இப்போ அங்க என்ன மணி" என்றெல்லாம் கலாட்டா செய்ய ஆரம்பித்தவுடன் எடுத்து விட்டேன். இது வரை எந்த வம்பு தும்புக்கும் போனது கிடையாது. நான் செய்த தவறாக எண்ணும் ஒரே விஷயம் உயிரோடைக்கு எதிர்வினை ஆற்றியது தான். அது என் குணமல்ல. கோபத்தில் எழுதியதற்காக இன்று வரை வருந்துகிறேன். மற்றபடி சிறுகதைப்போட்டி, பட்டறை என்று பதிவுலகம் ஆரோக்கியமான பாதையில்தான் பயணித்து வருகிறது.


பதிவுலகில் எழுதியதன் மூலம் தான் எஸ்ராவை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. என் வாழ்நாளின் மறக்க முடியாத நாள் அது. வாமு கோமு, நரன், இசை, திருச்செந்தாழை என்று பல எழுத்தாள நண்பர்களை பதிவுலகம் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. என்னுடைய வாசிக்கும் ரசனையையும் மேம்படுத்தி இருக்கிறது. நல்ல புத்தகங்களை தேடி வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நல்ல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். எதுவும் அளவோடு இருந்தால் நமக்கு நன்மையே பயக்கும். பதிவுலகமும் அப்படித்தான். நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். வரும் நாட்களிலும் இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த என் பயணத்தில் என் கூட வந்து கொண்டிருக்கும், வரப்போகும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றி..!!!

November 1, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009..!!!


‌‌
சீனா ஐயா அவர்கள் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். அவருக்கு நன்றி. தொடர் இடுகையின் விதிமுறைகள் பற்றி மேலும் தகவல்கள் அறிய இங்கே சொடுக்குங்கள்.

1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?

மதுரைக்காரன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. பள்ளிப்படிப்பை மதுரையிலும், பொறியியல் இளநிலை படிப்பை கோவையிலும் முடித்தேன். ஆசிரியராக வேண்டும் என்பது லட்சியம். கொடைக்கானலில் முதல் முறையாக ஆசிரியப்பணி. பின்னர் திண்டுக்கல். அங்கேயே முதுநிலை படிப்பு. பின்பு பெருந்துறையில் வேலை. தற்போது மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர்.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எனக்கும் நண்பர்களுக்கும் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவுகள் எப்போதுமே விசேஷமானவை. நன்றாக என்ஜாய் செய்வோம். அதுபற்றி நான் முன்னரே எழுதிய பதிவு இங்கே. சமீபத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்றால், நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் காத்திருந்து, மழையில் நனைந்து "ஆஞ்சநேயா' என்ற பெயரில் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டது.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

எந்த ராசா எந்தப் பட்டிணம் போனாலும், தீபாவளி அன்னைக்கு நாங்க மதுரைலதாண்ணே இருப்போம் / இருந்தோம் / இருக்கோம். மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

பண்டிகை என்றால் முன்பிருந்த உற்சாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. எனக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. குறிப்பாக டிவி வந்த பின்பு மக்கள் நிறையவே மாறி விட்டதைப் போன்றதொரு உணர்வு எனக்கு வெகு நாட்களாக உண்டு.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

கல்லூரியில் சேர்ந்த பிறகு ஆடைகளை தைத்து போடும் பழக்கம் கிடையாது. ரெடிமேட்தான். எப்போதும் மதுரை ஏ.கே.அகமெதில் தான் வாங்குவேன். இந்த வருடம் அகமேத் + போத்திஸ்.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் எதுவும் செய்யவில்லை. எல்லாம் கடையில்தான். இனிப்பும், காரமும் பக்கத்து வீட்டாருக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக வாங்கியதே தவிர, வீட்டில் உள்ளவர்களுக்கு என ஸ்பெஷலாக எதுவும் வாங்கவில்லை.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

உறவினர்களையும் ஊரில் இருக்கும் நண்பர்களையும் நேரில் சந்தித்து விடுவேன். வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கு அலைபேசி மூலமாகவும் மாணவ நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்துகள் சொல்வேன்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

வீடு தங்க மாட்டேன். முழுக்க முழுக்க ரவுண்ட்ஸ் தான்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ஆதரவு இல்லாதவர்களின் இல்லங்களுக்கு ஆடைகள், பட்டாசு வாங்கிக் கொடுப்பது என்று ஒரு சில உதவிகள் செய்வதுண்டு.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

வானம் வெளித்த பின்னும்
- ஹேமா

வானவில் வீதி - கார்த்திக்

சிவசைலம் - அத்திரி

தினசரி வாழ்க்கை
- Mayvee காசி விஸ்வநாத்


யப்பா.. நான் கூப்பிட்டு இருக்குற மகராசங்க எல்லாம் பத்து நாளுக்குள்ள எழுதிடுங்கப்பா.. அடுத்த தீபாவளி வரைக்கும் ஆக்கிப்புடாதீங்க..தாங்காது...:-))))))