December 1, 2009

எ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்(1988)..!!!


வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உன்னதமான உணர்வு - காதல். இதுதான் காதல் என்றோ, எப்போது யார் மீது காதல் பிறக்கும் என்றோ எவராலும் கணிக்க முடியாது. காதல் கொள்ளாத மனிதர்கள் இந்த பூமியில் யாருமே கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். இளைஞன் ஒருவன் தன்னை விட மூத்த பெண் ஒருத்தியின் மீது கொண்ட காதலின் தீவிரத்தையும், தனிமையின் வலியையும் பற்றி பேசும் படம்தான் " ஷார்ட் பிலிம் அபவுட் லவ்".

கையில் காயம் பட்டவனாக மருத்துவமனையில் படுத்திருக்கும் பத்தொன்பது வயது இளைஞன் டோமக்கின் நினைவுகளின் வாயிலாக விரிகிறது படம். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தன் நண்பனின் தாயுடன் வசித்து வருகிறான் டோமக். எதிர்த்தாற்போல் உள்ள குடியிருப்பில் இருக்கும் பெண்ணின் நடவடிக்கைகளைத் தன்னிடம் இருக்கும் தொலைநோக்கி வழியாக பார்த்து வருகிறான். அவள் இவனை விட மூத்தவள். அவளுடைய பெயர் மேக்தா. வரைகலை நிபுணர்.

இரவில் மேக்டா வீட்டுக்கு வருகிறாள். அவளுக்கு போன் செய்கிறான் டோமக். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான். உன்னோடு தினமும் இதே தொல்லையாகப் போய் விட்டது என்று அவள் கோபம் கொண்டு கத்தி விட்டு போனை வைத்து விடுகிறாள். மீண்டும் அவளை அழைக்கும் அவன் சாரி என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு போனை கட் செய்கிறான். மறுநாளும் அவளைத் தொலைநோக்கி வழியாகப் பார்க்கிறான். அவள் தன்னுடைய நண்பனோடு வந்து உறவில் ஈடுபடுகிறாள். கோபம் கொண்டு தொலைநோக்கியை தள்ளிப் போட்டு விட்டு கேஸ் கம்பெனிக்கு போன் செய்கிறான். தன் வீட்டில் கேஸ் லீக் ஆவதாகச் சொல்லி அவளுடைய முகவரியைத் தருகிறான். அவர்களின் அவசர வருகையால் மேக்டா குழம்பிப் போகிறாள். அவர்கள் உறவு கொள்வதைத் தடுத்ததில் டோமக் குரூர சந்தோசம் கொள்கிறான். மேக்டாவை அருகில் சந்திக்க விரும்பும் டோமக் அவள் வீட்டின் பால்காரனாகச் சேர்கிறான்.

மறுநாள் அவள் வெகு தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். தன்னுடைய நண்பனோடு சண்டை போட்டு விட்டு அறைக்குள் வந்து அழுகிறாள். இதைப் பார்க்கும் டோமக் பால் பாக்கெட் போடும் சாக்கில் அவளுக்கு மணி ஆர்டர் வந்திருப்பதாக ஒரு ஸ்லிப்பை அவள் வீட்டில் போட்டுச் செல்கிறான். பணம் வந்திருப்பதாக நம்பிக் கொண்டு அவளும் தபால் அலுவலகத்திற்கு வருகிறாள். எனினும் பணம் கிடைக்காமல் ஏமாந்து போகிறாள். தான் தான் அவளைப் பார்ப்பதற்காக அவ்வாறு செய்ததாக ஒத்துக் கொள்கிறான் டோமக். அவள் அழுதது தனக்கு தெரியும் என்று சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். எப்படி என்று கேட்க தான் தொலைநோக்கி வழியாகப் பார்த்ததை சொல்கிறான். அவள் கோபமாக அவனைத் திட்டி விட்டுப் போகிறாள்.

மறுநாள் தன்னுடைய நண்பனிடம் இவனைப் பற்றி சொல்கிறாள் மேக்டா. அவன் டோமக்கை வம்புக்கு இழுத்து அடித்து விடுகிறான். பால் கொண்டு வரும் டோமக் காயம் பட்டிருப்பதைப் பார்த்து மேக்டா கேலி செய்கிறாள். அவன் சடாரென்று அவளைக் காதலிப்பதாகச் சொல்லி விடுகிறான். அவள் அவனுக்கு தன்னிடம் என்ன வேண்டும் என்று கேட்க ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறான். திரும்பி வந்து தன்னோடு ஐஸ்க்ரீம் சாப்பிட ஓட்டலுக்கு வரமுடியுமா எனக் கேட்கிறான். அவள் ஒத்துக் கொள்கிறாள். ஹோட்டலில் எத்தனை நாட்களாக அவன் அவளைப் பார்த்து வருகிறான் என்று விசாரிக்கிறாள். அவன் ஒரு வருடம் என்கிறான். அவளுடைய முன்னாள் காதலன் அவளுக்கு எழுதிய கடிதங்களையும் தான் மறைத்து விட்டதை சொல்கிறான். அவள் அவனை தன்னுடைய கைகளை ஆதரவாக பிடித்துக் கொள்ளும்படி சொல்கிறாள்.

இருவரும் அவளுடைய அறைக்கு வருகிறார்கள். அவள் அவனுடைய காதலைப் பற்றி விசாரித்துக் கொண்டே அவன் கைகளை எடுத்து தன மீது வைத்துக் கொள்கிறாள். பெண்ணின் முதல் ஸ்பரிசம் காரணமாக அவன் உடனே உச்ச நிலையை அடைந்து விடுகிறான். இவ்வளவுதான் உன் காதலா என்று அவள் கேட்க வெட்கம் கொண்டவனாக வீட்டுக்கு ஓடி விடுகிறான். அவளுக்கு சங்கடமாகப் போய் விடுகிறது. மன்னித்து விடு, திரும்பி வா என்று அட்டையில் எழுதிக் காட்டுகிறாள். அவனோ குளியலறைக்குள் புகுந்து தன் கைகளை அறுத்துக் கொண்டு மூர்ச்சை அடைகிறான்.

வெகுநேரம் வரை அவன் திரும்பாததால் அவள் கவலை கொள்கிறாள். அவன் விட்டுச் சென்ற கோட்டை எடுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குப் போகிறாள். அங்கே அவன் இல்லை, வெளியே போயிருப்பதாக நண்பனின் அம்மா சொல்கிறாள். மறுநாள் அவனுடைய அலுவலகத்தில் விசாரித்து அவன் காதலுக்காக கைகளை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் இருப்பதாக அறிகிறாள். தினமும் அவனுடைய அறையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என பைனாகுலர்களின் வழியாக பார்க்க ஆரம்பிக்கிறாள். ஒரு நாள் அவன் திரும்பி விட்டதை அறிந்து அவனுடைய வீட்டுக்கு ஓடுகிறாள். அங்கே அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய தொலைநோக்கியின் வழியாக தன்னுடையஅறையை அவள் பார்க்கத் தொடங்குவதோடு படம் முடிகிறது.

உளவியல் ரீதியான பல விஷயங்களை இந்தப் படம் பேசுகிறது. உலகில் மனிதர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்ற டோமக்கின் கேள்விக்கு பதிலே இல்லாத விஷயம் அது என்கிறாள் அவனுடைய நண்பனின் அம்மா. கதையின் முக்கிய பாத்திரங்களான டோமக், மேக்டா, நண்பனின் அம்மா ஆகிய மூவருமே தீராத தனிமையால் அவதிப்படுகிறார்கள். அதுதான் அவர்களை பல்வேறு செயல்களைச் செய்ய தூண்டுகிறது. தன்னை டொமாக்பார்க்கிறான் என்பதை தெரிந்து கொண்டு அவன் கண்களில் படுமாறு படுக்கையை நகர்த்திப் போட்டு மேக்டா உறவு கொள்வது மனித மனதில் இருக்கும் குரூரத்தின் வெளிப்பாடு. ஹோட்டலில் தன்னைக் காதலிப்பதாக சொல்லும் டோமக்கிடம் மேக்டா சொல்கிறாள்.."காதலா.. அப்படி ஒன்று இந்த உலகத்தில் கிடையாது..".

படத்தில் பாலியல் விஷயங்களும் வெகு தைரியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னுடைய அறையில் இருக்கும் டோமக்கிடம் மேக்டா கேட்கிறாள் "நான் உறவு கொள்வதைப் பார்த்து நீ சுய இன்பத்தில் ஈடுபடுவது உண்டா..?" ஆமாம் என்று அவனும் ஒத்துக் கொள்கிறான். ஆனால் இப்போது அவளைக் காதலிப்பதால் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்கிறான். டோமக்கின் அறைக்கு வரும் மேக்டாவிடம் நண்பனின் அம்மா "நான் சொல்வது உனக்கு விளையாட்டாக இருக்கலாம்.. ஆனால் அவனுடைய அலாரத்தில் எப்போதும் எட்டரை மணிதான் இருக்கும்.. ஏனென்றால் அதுதான் நீ வீட்டுக்கு வரும் நேரம்" என்று சொல்லும் காட்சி டோமக்கின் காதலின் தீவிரத்தை புரிய வைக்கிறது. பைனாகுலர்களைக் கொண்டு மேக்டா டோமக்கின் அறையைப் பார்க்க ஆரம்பிக்கும் காட்சியில் அவன் மீது அவளுக்கு நேசம் பிறந்து விட்டதை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இறுதிக் காட்சியும் ஒரு கவிதை. தொலைநோக்கி வழியாக தன்னுடைய அறையை மேக்டா பார்க்கிறாள். அங்கே அவள் அழுது கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் இப்போது அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவள் கூடவே டோமக் இருக்கிறான்.

படத்தின் மிக முக்கியமான அங்கம், படத்தின் பின்னணி இசை. தொலைநோக்கி வழியாக டோமக் பார்க்கும் போது வரக் கூடிய இசை நெஞ்சை உருக்கக் கூடியது. அந்தக் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் இயற்கையான பின்னணி சத்தங்களே பயன்படுத்தப் பட்டு இருக்கின்றன. முக்கால்வாசி நேரம் இருட்டிலேயே படம் நடந்தாலும் ஒளிப்பதிவு கண்களை உறுத்தாமல் இருப்பது அழகு. 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த போலந்து நாட்டு படத்தின் இயக்குனர் கீஸ்லோவேஸ்கி. உலகத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்ற இந்தப் படம்தான் பிற்காலத்தில் "எக் சொட்டி சி லவ் ஸ்டோரி" என்ற பேரில் மணிஷா நடித்து சீன் படமாக ஹிந்தியில் வெளியானது. இசைக்காகவும் காதலின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்துக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் "எ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்"!!!

26 comments:

Raju said...

நல்லா எழுதி இருக்கீங்க தல..!
சூப்பர் FLOW..!

vasu balaji said...

விமரிசனமே படம் பார்க்கத் தூண்டுகிறது.அருமை.

நையாண்டி நைனா said...

வந்தேன் வந்தேன்... மீண்டும் நானே வந்தேன்....

மேவி... said...

அருமையாய் எழுதிருக்கிங்க ... பொதுவாய் இந்த மாதிரியான படங்களில் கதாபாத்திரங்களின் குழம்பிய மனநிலையை தான் அதிகம் காட்டுவார்கள் ....... நீங்க சொல்லவதை பார்த்தால் இசை தான் படத்தை தூக்கி செல்கிறது போல் இருக்கே

இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு முல படமான ALFRED HITCHCOCK ஓட REAR WINDOW படத்தை கட்டாயம் நீங்க பார்க்கணும். செம Thriller படம் அது

மேவி... said...

இந்தியாவிலும் இந்த படத்தை ஜிராக்ஸ் எடுக்க பட்டுள்ளது ..... தெரியுமா உங்களுக்கு

க.பாலாசி said...

விமர்சனம் நல்லாருக்கு தல....

ஸ்ரீராம். said...

நல்ல வர்ணனை. ரசிப்புணர்வுடன் எழுதப் பட்டுள்ளது.

Anonymous said...

நேரில் சந்தித்த பின்னும் இந்த பக்கம் வரலைன்னா எப்படி? ஹ்ஹஹ வந்தா பழைய தோஷம் மீண்டும் பட விமர்ச்சனம் படித்தேன் ஓசியில் ஒரு நல்ல படம் பார்த்தேன்...

நீங்கள் பூத்த புன்னகை எங்கள் மனதில் தோட்டமாய் இன்றும் என்றும்...

cheena (சீனா) said...

அன்பின் காபா - அருமையான விமர்சனம் - நல்ல படம் - நல்ல கதை - நல்வாழ்த்துகள்

Prabu M said...

ரொம்ப நல்லா எழுதுறீங்க பிரதர் :)

Senthil said...

This film was copied in india as Ek Choti si love story starring manisha koirala

தேவன்மாயம் said...

படத்தில் பாலியல் விஷயங்களும் வெகு தைரியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னுடைய அறையில் இருக்கும் டோமக்கிடம் மேக்டா கேட்கிறாள் "நான் உறவு கொள்வதைப் பார்த்து நீ சுய இன்பத்தில் ஈடுபடுவது உண்டா..?" ஆமாம் என்று அவனும் ஒத்துக் கொள்கிறான். ஆனால் இப்போது அவளைக் காதலிப்பதால் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்கிறான். டோமக்கின் அறைக்கு வரும் மேக்டாவிடம் நண்பனின் அம்மா "நான் சொல்வது உனக்கு விளையாட்டாக இருக்கலாம்.. ஆனால் அவனுடைய அலாரத்தில் எப்போதும் எட்டரை மணிதான் இருக்கும்.. ஏனென்றால் அதுதான் நீ வீட்டுக்கு வரும் நேரம்" என்று சொல்லும் காட்சி டோமக்கின் காதலின் தீவிரத்தை புரிய வைக்கிறது. பைனாகுலர்களைக் கொண்டு மேக்டா டோமக்கின் அறையைப் பார்க்க ஆரம்பிக்கும் காட்சியில் அவன் மீது அவளுக்கு நேசம் பிறந்து விட்டதை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இறுதிக் காட்சியும் ஒரு கவிதை.//

உடலையும் தாண்டிக் காதல் என்ற விசயம் அனைத்து மக்களிடமும் நடைமுறையில் உள்ளதுதான் - அதை சொல்வதுதான் சிரமம்!!- அதை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருப்பதே படத்தின் வெற்றியாக இருக்க முடியும்!

அத்திரி said...

நல்ல விமர்சனம்

மேவி... said...

கார்த்தி ,

நீங்க பட விமர்சனம் செய்தி உள்ளிர்களா ?? அல்லது திரைபடத்தை அறிமுகம் செய்தி உள்ளிர்களா ???

சொல்லி விடுங்கள்..... பலருக்கு வித்தியாசம் தெரியல....

ஆ.ஞானசேகரன் said...

விமர்சனம் தூக்கலா இருக்கு,.. வாழ்த்துகள் நண்பா

shaan said...

"இந்தப் படம்தான் பிற்காலத்தில் 'எக் சொட்டி சி லவ் ஸ்டோரி' என்ற பேரில் மணிஷா நடித்து சீன் படமாக ஹிந்தியில் வெளியானது"
- அருமையான கதைகளை கெடுப்பதில் நமது ஆட்கள் கைதேர்ந்தவர்கள்.

"Life is beautiful" பார்த்திருக்கீர்களா? "Children of Heaven" இன்னொரு அருமையான படம்.

Anonymous said...

DVD வாங்கினா டிக்ஸ்னரி இலவசமா தருவாங்களா?

மண்குதிரை said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க நண்பா

நன்றி

Prabhu said...

ரொம்ப அருமையா இருக்கு. ஐரோப்பா காரன் எப்பவுமே கொஞ்சம் வித்தியாசமா தைரியமாக எடுக்குறாங்க.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல விவரிப்பு. சினிமா விமர்சனம் என்றாலே நீங்கள் முத்திரை பதித்துவிடுகிறீர்கள் நண்பா. மகிழ்ச்சி

ஹேமா said...

காதலின் உணர்வை உங்கள் எழுத்தில் அழகாய் தந்திருக்கிறீர்கள் கார்த்திக்.வயதைத் தொலைக்க வைக்கும் காதல்.உங்கள் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

யாத்ரா said...

நண்பா இந்த ஒரு மாசத்துக்குள்ள தான் இந்தப் படத்தை நானும் பாத்தன், என்னையும் மிக மிக பாதித்த படம், தவிர கிரிஸ்டாப் கீவ்லோவ்ஸ்கியின் மற்ற படங்களையும் தேடிப் பாக்கணும் என நினைத்திருந்தேன். இந்தப் படத்தை பாத்தவங்க யார் கூடவாவது பேச முடிந்தால் நன்றாயிருக்கும் என்றிருந்தது, நீங்க எழுதியிருப்பதைப் படித்த போது, ஒரு நல்ல படத்தைப் பாத்துட்டு அதைப் பத்தி சிலாகிச்சி பேசி அதன் உணர்வுகளை காட்சி நுணுக்கங்களை விரிவா பகிர்ந்துகிட்ட மகிழ்ச்சி கிடைத்தது. நன்றி நண்பா.

குமரை நிலாவன் said...

விமரிசனமே படம் பார்க்கத் தூண்டுகிறது.அருமை.

Jackiesekar said...

கார்த்தி இதே படத்தை இந்தியில் சோட்டிசி லவ்ஸ்டோரி என்று எடுத்து இருப்பார்கள்.. அதில் மேக்டா பாத்திரத்தில் மனிஷா கொய்ராலா...

Jackiesekar said...

பட் இந்த படம் ஒரு கவிதையான உணர்வை தரும்...

asker said...

நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு .
dvdworld65.blogspot.com