July 7, 2010

அம்பாசமுத்திரம் அம்பானி..!!!

நடிகனுக்காகப் படமில்லை, படத்துக்காகத்தான் நடிகன் என்று எப்போ முதலாளிகளும், இயக்குனர்களும் நினைக்க ஆரம்பிக்கிறாங்களோ அப்போத்தான் தமிழ் சினிமா உலகம் உண்மையா முன்னேறும் - இது இப்போ யாரோ சொன்னது கிடையாது.. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பு டி.எஸ்.பாலையா சொன்னது (உபயம்:ஆ.வி பொக்கிஷம்). ஆனா இதை யாராவது கேக்குறாங்களா என்ன? கதாநாயக நடிகர்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு சில படங்கள் கதையையும், திரைக்கதையும் நம்பி வருவதுண்டு. அந்த வகையில் "திண்டுக்கல் சாரதி"யின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் கருணாசின் அடுத்த படம்தான் "அம்பாசமுத்திரம் அம்பானி". கென் மீடியா தயாரிப்பு.


சின்ன வயதிலேயே வறுமையின் காரணமாக தன்னுடைய தாயைப் பறிகொடுக்கிறான் தண்டபாணி. பணம் சம்பாதிக்கும் வெறியோடு சென்னைக்கு வருகிறான். அவனுடைய ஆசை எல்லாம் வசந்த்&கோ போல தண்டபாணி&கோ என்றொரு நிறுவனத்தின் அதிபராவதுதான். அண்ணாச்சி என்னும் பெரிய மனிதரின் உதவியோடு சொந்தமாக ஒரு பேப்பர் ஏஜன்சி வைக்கும் அளவுக்கு வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறான். அதே அண்ணாச்சி கட்டும் புதிய காம்ப்ளக்சில் தனக்கும் ஒரு கடையை வாங்கி விட வேண்டும் என்று படாதபாடுபடுகிறான். நடுவில் அவன் வாழ்க்கையில் காதலும் வருகிறது. கடைசியில் தண்டபாணியின் கனவு பலித்ததா? என்ன மாதிரியான பிரச்சினைகளை அவன் சந்திக்கிறான்? அவனால் கடையை வாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.


கதையின் நாயகனாக கருணாஸ். தனக்கு பொருந்தக் கூடிய கதாபாத்திரங்களாக தெரிவு செய்து நடிக்கிறார். அதற்கே மனிதரைப் பாராட்ட வேண்டும். இயல்பாக வரும் நகைச்சுவைக் காட்சிகளில் நம்மைக் கவர்பவர், கடைசி காட்சியில் கனவுகள் எல்லாம் கலைந்து போன நிலையில் அழுது புலம்பும் காட்சியில் மனத்தைக் கலங்கடிக்கிறார். தான் நம்பிய சிறுவனே தன்னை அடித்துப் போட்டு பணத்தை பறித்துக் கொண்டு ஓடும் காட்சியிலும் கருணாஸின் நடிப்பு அபாரம். பாடல்களில் அவர் ஆடி இருக்கும் ஆட்டம் அட்டகாசம். அரசாங்கம் படத்தில் விஜயகாந்தை காதலித்த நவ்நீத் கவுர் இந்தப் படத்தில் கருணாசின் ஜோடி. நன்றாக வளர்ந்து ஓங்கு தாங்காக இருக்கிறார். வஞ்சனை இல்லாமல் தாராளமாகக் காமிக்கிறார். படத்துக்கு தேவையான நடிப்பும் இருக்கிறது. தமிழ்ப்பட நாயகிக்கு இது போதாதா?


அண்ணாச்சியாக கோட்டா சீனிவாச ராவ். அவருடைய மகனாக சேரன்ராஜ். நல்லவர்களுக்கு நல்லதுதாண்டா செய்வோம் என்று சொல்லும் இருவருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள். நாயகியின் அப்பாவாக மறைந்த வி.எம்.சி.ஹனீபா. மனிதர் கடைசியாக நடித்த படம். ஆள் ஏற்கனவே உருகிப்போய் தான் இருந்திருக்கிறார். கடைசிப் படத்தில் இறந்து போன பிணமாகவே நடித்து இருப்பது பெரிய சோகம். கருணாசின் கூடவே இருந்து கழுத்தை அறுக்கும் சிறுவனாக வரும் ஷங்கர், தப்பாக ரீசார்ஜ் பண்ணிய பாவத்துக்காக ஊர் தாண்டி ஊர் வந்து செல்லில் பேசிப் போகும் மயில்சாமி, வீட்டு ஓனராக வரும் டெல்லி கணேஷ், நாயகியை ஒருதலையாகக் காதலிக்கும் லிவிங்க்ஸ்டன் என எல்லோரும் கதையை முன்னகர்த்தி செல்ல பயன்பட்டு இருக்கிறார்கள்.

பாடல்களுக்கு இசை அமைத்து இருப்பவரும் கருணாஸ்தான். "பூப்பூக்கும் தருணம்" பாட்டும், "ஒத்தக்கல்லு" பாட்டும் கண்டிப்பாக ஹிட்டாகும். குறிப்பாக ஒத்தக்கல்லு பாட்டில் ரகசியாவின் நடனம்.. அடேங்கப்பா. பார்மேஷன்கள் எல்லாமே தூள். அதே போல செல்போனில் காட்சிகள் மாறுவது போல படமாக்கப்பட்டு இருக்கும் "பூப்பூக்கும்" பாட்டும் ரசிக்க வைக்கிறது. இரண்டு பாடல்களையுமே பட்டாசாக படம் பிடித்து இருக்கிறார்கள். நடனம் அமைத்து இருக்கும் ஸ்ரீதருக்குப் பாராட்டுகள். பின்னணி இசை - சபேஷ் முரளி. ஜோக்குக்கெல்லாம் "டோயிஈஈ.. டின் டின் டின் டின்" என்று அடிக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் காலத்து இசையை எல்லாம் என்றைக்குத்தான் மறப்பார்களோ? ஒளிப்பதிவு செய்திருக்கும் புலித்தேவனும், எடிட்டிங்கில் வி.டி.விஜயனும் படத்துக்கு வேண்டியதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.


கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ராம்நாத். கதைக்காகப் பெரிதாக மெனக்கெட வில்லை. சப்பை கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் ரசிக்க வைக்கிறார். முதல் பாதி முழுக்க குட்டி குட்டி ஜோக்குகள். துண்டு துண்டாக காட்சிகள் இருந்தாலும் போரடிக்காமல் போகிறது. இரண்டாம் பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் ஜவ்வடித்தாலும் சற்று நேரத்தில் சென்டிமென்டலாக பிக்கப் ஆகி விடுகிறது. ஆரம்பத்தில் வரும் டீக்கடை காட்சியை படத்தின் கிளைமாக்சில் கொண்டு வந்து இணைப்பது இயக்குனரின் சாமர்த்தியம். நெகட்டிவ்ஸ்? குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு படத்தில் தேவை இல்லாமல் குல்பி காட்சிகள் மூலம் கவர்ச்சியைத் திணித்து இருப்பதுதான் எரிச்சல். அதேபோல அடுத்து வரும் காட்சிகளை நாம் முதலிலேயே கணித்து விட முடிவதும் மைனஸ்தான். இருந்தாலும் ஒரு நீட்டான பொழுதுபோக்கு படத்தைத் தந்ததற்காக இயக்குனருக்குப் பாராட்டுகள்.

அம்பாசமுத்திரம் அம்பானி - மனதை அள்ளிக் கொள்கிறான்

13 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஹலோ.. மைக் டெஸ்டிங்.. ஒன் டூ த்ரீ.. என்னப்பா இது.. படிச்ச யாருமே கமெண்டு போடல?

அத்திரி said...

என்னது புரொபசர் கடையில் பின்னூட்டம் இல்லையா அய்யகோ நான் என்னடே செய்வேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

@அத்திரி

அண்ணே.. நாடு அநியாயத்துக்கு கெட்டுப் போச்சுண்ணே..:-(((

pinkyrose said...

karthi sir itho vanthutan but cinema ... konjam kastamana subject aanalum unga paadam mathiri irukathunu nenaikran...

கார்த்திகைப் பாண்டியன் said...

@pinkyrose

முதல் வருகைக்கு நன்றிங்க..

ஆதவா said...

இதையும் பார்த்தாச்சா...

பாருங்க,. தியேட்டருக்கு கூட்டம் வாராதது மாதிரி பின்னூட்டத்திற்கும் ஆள் வரலை!! என்ன கொடுமைங்க !

படம் நல்லாயிருக்குனு சொல்றீங்க, பார்ப்போம்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

@ ஆதவா

:-))))))

மேவி... said...

அடடடா .....உங்களது இலக்கிய பணிக்கு ஆஸ்கர் விருதே தரலாம் ....ம்ம் யார் கேட்குற ....

வாத்தியாரே .... உங்க touch இந்த பதிவுல இல்லையே ..என்னாச்சு ???? கொஞ்சம் எப்ப சப்பைய தான்ல இருக்கு

அதுவும் அந்த போட்டோவுல அந்த நடிகை (பெயர் மறந்து போயிருச்சு ...சொன்ன நல்ல இருக்கும்) உடன் கருணாஸ் இருக்கும் போஸ்கே ஒரு தடவை பார்க்கலாம்

மேவி... said...

"எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தோழரே.. வந்தது வந்துட்டீங்க.. ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்க.."

ஏன் இந்த விளம்பரம் ......

மலர்கள் யாருக்கும் சொல்லிவிட்டு மலர்வதில்லை ....அது போல தான் நீங்களும் இருக்க வேண்டும்

எல்லோரையும் இஷ்டப்பட்டு பின்னோட்டம் போட வைக்கணும் ..இப்படி கஷ்டபடுத்தி மிரட்டி பின்னோட்டம் வாங்க கூடாது ...

எஸ்ரா சைட் ல பின்னோட்டம் option இருக்கா..

திருக்குறள் எழுதின திருவள்ளுவரே பின்னோட்டம் கேட்டதில்லை ..தெரியுமா

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said...

ஹலோ.. மைக் டெஸ்டிங்.. ஒன் டூ த்ரீ.. என்னப்பா இது.. படிச்ச யாருமே கமெண்டு போடல?"

அப்பன்னா யாருமே படிக்கலன்னு அர்த்தம் .....

யாருப்பா அது ..மைக் டெஸ்ட் பண்ணுறவங்க எல்லாம் கார்த்திகை பாண்டியன் ப்ளாக் ல பேசுறது ????

கார்த்திகைப் பாண்டியன் said...

@ டம்பி மேவீ

உங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சு தல..

தேவன் மாயம் said...

நல்ல விமரிசனம் கார்த்தி!! படம் கிளப்பல்!!

Jackiesekar said...

அப்ப படம் பார்க்கலாமா? பார்த்துடுவோம்..