July 26, 2010

காச மட்டும் வச்சுக்கிட்டு?

சென்ற வாரம் எங்கள் கல்லூரியில் கணினித்துறை சம்பந்தமான ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு வருகை தரும் முக்கியமான மனிதர்களை கவனித்துக்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் நானும் ஒருவன். மதுரையிலேயே இருக்கும் மற்றொரு பொறியியல் கல்லூரியில் கணினித்துறை தலைவராக இருக்குமொரு மனிதரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வந்து சேர்ந்தது.

நிகழ்ச்சி நடக்கும் நாளன்று, காலை எட்டு மணிக்கே அவரது வீடு இருக்கும் ஒத்தக்கடை பகுதிக்கு கல்லூரி காரை எடுத்துக் கொண்டு போய் விட்டேன். வீட்டின் வாசலில் இருந்து அலைபேசியில் அழைத்தால் ஆள் எடுப்பதாக தெரியவில்லை. தொடர்ச்சியாக ஐந்தாறு முறை முயன்று கடைசியாக மனிதர் எடுத்து விட்டார்.

"தம்பி.. வாசல்ல உங்க காரைப் பார்த்துட்டேன்.. இந்தா அஞ்சு நிமிஷம்.. வந்துர்றேன்.."

சரி என்று காரில் காத்திருக்கத் தொடங்கினேன். நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டன. எனக்கோ மண்டை காய்கிறது. வந்த மனுஷன வீட்டுக்குள் கூட கூப்பிடாமல்.. வாசலில் தேவுடு காத்துக் காத்துக் கொண்டு.. ச்சே.. என்ன மாதிரியான மனிதரிவர்? ஏற்கனவே கல்லூரியில் இவரைப் பற்றி சொல்லியிருந்தார்கள். ஆள் கொஞ்சம் முசுடு.. கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு வாங்க.. ஏன்தான் நமக்கு மட்டும் இப்படிப்பட்ட ஆளாக மாட்டுகிறார்களோ?

இன்னும் பத்து நிமிஷம் போனபின்பு கடைசியாக மனிதர் வந்து சேர்ந்தார். மனதிற்குள் திட்டிக் கொண்டே காரின் பின்கதவைத் திறந்து விட்டு அருகில் நின்று கொண்டிருந்தேன். ஆனால் அவரோ உள்ளே ஏறாமல் நேராக வந்து, நான் எதிர்பார்க்காதவிதமாக, எனது கைகளை பிடித்துக் கொண்டார்.

"மன்னிச்சுக்கிடுங்க தம்பி.. வீட்டுல பிள்ளைங்களோட வெளியூர் போயிருக்காங்க.. நானே எல்லாம் செஞ்சு கெளம்ப வேண்டிய சூழ்நிலை.. அத்தோட எங்க அம்மாவுக்கு நடக்க முடியாது.. அவங்களுக்கு நான் தான் எல்லாம் செய்யணும்.. அதான் உங்களைக் கூட உள்ள கூப்பிட முடியல.. சங்கடமா நெனச்சுக்காதீங்க.."

எனக்கு சுருக்கென்றது. பெரிய பொறுப்பில் இருக்கும் மனிதர்.. என்னிடம் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஆனாலும் தன்மையாக வந்து மன்னிப்பு கேட்கிறார். அவசரப்பட்டு அவரைத் தப்பாக நினைத்து விட்டோமோ?

"ச்சே ச்சே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்.. வாங்க போகலாம்.."

மற்றவர்கள் சொல்வதை வைத்து அவசரப்பட்டு யாரையும் தப்பாக எடை போடக்கூடாது என என்னை நானே குட்டிக் கொண்டேன். இருவருமே காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டோம். என்னைப் பற்றி விசாரித்தார்.

"டீச்சிங்ல ரொம்ப இண்டரெஸ்ட் சார்.. படிச்சு முடிச்சோனே இதுக்கு வந்துட்டேன்.."

"ரொம்ப சந்தோசம் தம்பி.. நான் என்னோட பசங்களுக்கு சொல்றதெல்லாம் இதுதான்.. தயவு செஞ்சு வேற எந்த வேலையும் கிடைக்கலைன்னு வாத்தியார் வேலைக்கு வராதீங்க.. இது அப்படிப் பாக்குற வேலை கிடையாது.. அந்த வகைல உங்கள நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி.."

கொஞ்ச நேரத்திலேயே மனிதர் ரொம்ப இயல்பாக பேசத் தொடங்கி விட்டார். எங்களின் பேச்சு பல தளங்களுக்கு போய் விட்டு கடைசியாக மாணவர்களைப் பற்றித் திரும்பியது.

"இன்னைக்கு இருக்குற பசங்களுக்கு காசும் கேரியரும் முக்கியமா படுற அளவுக்கு மத்த விஷயங்கள் பெரிசாத் தெரியறதில்லை.. இல்லையா தம்பி?"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார்.. இன்னிக்கு இருக்குற பசங்க எல்லாத்துலையும் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்காங்க.. அவ்ளோதான்"

"அதேதான் தம்பி.. ஆனா பொறுப்பா இருக்காங்களா? உறவுகளை மதிக்கிறாங்களா? இல்லையே.. அங்கதான பிரச்சினை ஆரம்பிக்குது.."

எனக்கு அவருடைய கருத்துகளை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. ஒன்றுமில்லாதவை என ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை. அமைதியாக இருந்தேன். அவர் தொடர்ந்தார்.

"என் நெருங்கின பிரண்டோட பையன் தம்பி.. இஞ்சினியரிங் படிச்சான்.. பெறகு எம்.பி.ஏ.. கொஞ்ச நாள் ஒரு பெரிய கம்பெனியில வேலை.. அவங்களே அடுத்து வெளிநாட்டுல ஒரு மேல்படிப்பும் படிக்க வச்சாங்க.. முடிச்சவுடனே மானேஜர் வேலை.. மாசம் ரெண்டு லட்சம் சம்பளம்.. சரின்னு சொல்லி அதே பீல்டுல இருக்கிற ஒரு பொண்ணப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.. அதுக்கு ஒரு லட்சம் சம்பளம்.. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது.. ஒரு குழந்தையும் ஆகி போச்சு.. ஆனா இப்போ பொண்ணு விவாகரத்து வேணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறா.."

"ஏன் சார்.. என்ன பிரச்சினை..?"

"பையன்தான் பிரச்சினை.. எந்நேரமும் வேலை வேலைன்னு வீட்டுலயும் கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழ வேண்டியது.. சாப்பிட தூங்க மட்டும் தான் வீடா? பையனோட மூஞ்சியைக் கூட பார்க்க மாட்டானாம்.. பொண்டாட்டியையும் கவனிக்கிறது கிடையாது.. மெஷின் மாதிரி வாழணும்னா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு பொண்ணு ஒரே அழுகை.. அந்த குழந்த மூஞ்சிக்காகவது கொஞ்சம் மாறுப்பான்னு சொன்னா, அது ஒரு விபத்து தெரியாத்தனமா பெத்துக்கிட்டேன்னு ஈவிரக்கம் இல்லாம சொல்றான்.. அந்த பொண்ணு வேற என்னதான் பண்ணும்.. பாவம்.."

"ஹ்ம்ம்ம்ம்ம்ம்.."

"அவங்க வீட்டுல சுத்தமா நிம்மதியே போச்சு.. பெரியவங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பிரயோஜனம் இல்ல... ரெண்டு பேருக்கு சேர்த்து மூணு லட்சம் சம்பளம்.. ஆனா காச மட்டும் வச்சு நாக்கு வழிக்கறதா தம்பி.. சொல்லுங்க.. யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்களத் தொலைச்சிட்டு அப்புறம் என்னத்துக்கு காசு? இதை புரிஞ்சிக்காம அப்புறம் என்ன சம்பாத்தியம் வேண்டிக் கிடக்கு.. மனுஷனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தானே தம்பி முக்கியம்?"

"உண்மைதான் சார்.."

"நல்லா யோசிச்சு பாருங்க.. எப்பவும் இல்லாத அளவுக்கு இப்போத்தான் முதியோர் இல்லங்கள் ஜாஸ்தி ஆகியிருக்கு.. காசு மட்டுமே பிரதானமா இருக்குற காலத்துல வயசான பெத்தவங்க எல்லாம் பாரம் ஆகிடுறாங்க..உறவும் மனுஷங்களும் நல்ல மனசும் தான் முக்கியம்.. இந்தக் காலத்து பசங்க இதை என்னைக்கு உணருராங்களோ அப்போத்தான் வெளங்குவாங்க.."

பேசிக் கொண்டே வந்ததில் கல்லூரி வந்து விட்டிருந்தது. அவர் பிறகு சந்திப்பதாக விடை பெற்றுக் கொண்டார். அவர் போன பிறகும் மனது அவர் சொன்னதையே வெகு நேரம் நினைத்துக் கொண்டிருந்தது. அவர் சொன்னது அத்தனையும் உண்மை என்றில்லா விட்டாலும், இன்றிருக்கும் நிலைமையைத்தானே சொல்கிறார். எத்தனையோ பேர் காசு பணத்தின் பின்னால் ஓடி வாழ்க்கையைத் தொலைப்பது தானே நிஜம்? கேள்விகள் நிறைய இருந்தாலும் விடைகள்தான் கிடைப்பதில்லை. பெருமூச்சு விட்டபடியே வேலையை பார்க்கக் கிளம்பினேன்..!!!

29 comments:

இராகவன் நைஜிரியா said...

காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா...

இப்படியும் சில மனிதர்கள்... படிச்சா மட்டும் போதாது, மனிதத்தையும் கற்க வேண்டும் என அந்த அன்பருக்கு எப்போது புரியுமோ தெரியவில்லை..

இராகவன் நைஜிரியா said...

மீண்டும் முதல் பின்னூட்டம்...

Robin said...

//எத்தனையோ பேர் காசு பணத்தின் பின்னால் ஓடி வாழ்க்கையைத் தொலைப்பது தானே நிஜம்?//உண்மை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு நண்பா..

இது பல குடும்பங்களில் நடக்க ஆரம்பித்துள்ளது வேதனையானது.

ஃபேஸ்புக், ப்ளாக்னு உட்கார்ந்திருக்கறதையும் இதுல சேர்த்துக்கலாம் .

Balakumar Vijayaraman said...

நல்ல பதிவு கார்த்தி.

எதைத் தொலைத்து, எதைத் தேடுகிறோம் என தெரியாமல் தான் ஓடுகின்றனர்.

தேவன் மாயம் said...

எத்தனையோ பேர் காசு பணத்தின் பின்னால் ஓடி வாழ்க்கையைத் தொலைப்பது தானே நிஜம்?//

நிதரசனமான வார்த்தைகள் கார்த்தி!!

அப்பாவி முரு said...

அம்மண ஊரில் கோவணம் கட்ட முடியவில்லை...

:(((((

சம்பத் said...

அவர் சொன்னது அத்தைனையும் உண்மை நண்பா...சகிப்புத்தன்மையே இப்போது இல்லை :-(

Jey said...

ம்ம்ம். உண்மை...

ஆ.ஞானசேகரன் said...

//பெருமூச்சு விட்டபடியே வேலையை பார்க்கக் கிளம்பினேன்..!!!//


ம்ம்ம் நானுதான் தலைவரே!

Radhakrishnan said...

காசு மட்டுமல்ல, மேலும் பல விஷயங்களால் குடும்பத்தையே கவனிக்காமல் இருக்கும் பலரின் நிலை இதுதான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//இராகவன் நைஜிரியா said...
காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா... இப்படியும் சில மனிதர்கள்... படிச்சா மட்டும் போதாது, மனிதத்தையும் கற்க வேண்டும் என அந்த அன்பருக்கு எப்போது புரியுமோ தெரியவில்லை..//

புரிஞ்சுக்கிட்டா பிரச்சினையே இல்லையே அண்ணே..

// Robin said...
எத்தனையோ பேர் காசு பணத்தின் பின்னால் ஓடி வாழ்க்கையைத் தொலைப்பது தானே நிஜம்? - உண்மை.//

அதாங்க.. நன்றி

//ச.செந்தில்வேலன்
நல்ல பதிவு நண்பா..இது பல குடும்பங்களில் நடக்க ஆரம்பித்துள்ளது வேதனையானது. பேஸ்புக், ப்ளாக்னு உட்கார்ந்திருக்கறதையும் இதுல சேர்த்துக்கலாம் . //

:-(((((((((

//வி.பாலகுமார் said...
நல்ல பதிவு கார்த்தி.எதைத் தொலைத்து, எதைத் தேடுகிறோம் என தெரியாமல் தான் ஓடுகின்றனர்.//

வேதனைதான் பாலா

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேவன் மாயம் said...
நிதரசனமான வார்த்தைகள் கார்த்தி!!//

நன்றி தேவா சார்

//அப்பாவி முரு said...
அம்மண ஊரில் கோவணம் கட்ட முடியவில்லை... :(((((//

நிஜங்கள் சுடும் தல

//tamildigitalcinema said...
உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil///

சரிங்க.. நன்றி

//சம்பத் said...
அவர் சொன்னது அத்தைனையும் உண்மை நண்பா...சகிப்புத்தன்மையே இப்போது இல்லை :-(//

கவலைப்பட வேண்டிய விஷயம்:-((

கார்த்திகைப் பாண்டியன் said...

//Jey said...
ம்ம்ம். உண்மை...//

முதல் வருகைக்கு கருத்துக்கும் நன்றிங்க

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நானுதான் தலைவரே!//

சீக்கிரமா ஊருப்பக்கம் வாங்க தலைவரே

// V.Radhakrishnan said...
காசு மட்டுமல்ல, மேலும் பல விஷயங்களால் குடும்பத்தையே கவனிக்காமல் இருக்கும் பலரின் நிலை இதுதான்.//

:-(((((((

தருமி said...

நீங்களும் பாக்கிறதுக்கு 'சின்ன பசங்க' மாதிரி இருக்கீங்களா ... அதான் புரிஞ்சிக்கிடட்டுமேன்னு சார் அட்வைஸை இன்டரக்டா கொடுத்திருக்கார்.... !

கார்த்திகைப் பாண்டியன் said...

@ தருமி

ஐயா.. இதுல சூது எதுவும் இல்லையே..:-))))

பனித்துளி சங்கர் said...

உண்மைதான் நண்பரே . நாம் தவறாக நினைக்கும் பல நிகழ்வுகளுக்கும் , மனிதர்களுக்கும் பின்னால் பல முறையானக் காரணங்கள் இருக்கும் . நானும் இதுபோன்ற அனுபவம் பெற்று இருக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி

காரணம் ஆயிரம்™ said...

விரிவுரையாளனாக பணிபுரிந்தபொழுது(ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்ங்க!), எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு..

எங்கள் துறையான கணினித்துறையின் சிம்போஸியாவிற்கு தலைமை விருந்தினரை நான்தான் அழைத்துவரவேண்டும். ஐஐடி வளாகத்தில் அவரை சென்று பார்த்தால், தமிழ் அறவே தெரியாத பக்காவான சர்தார்ஜி! ரொம்ப பாசக்காரர்! காரில் வரும்பொழுது, ‘God is there. Dont worry’ என்பதற்கு தமிழில் கேட்டார். ’கடவுள் இருக்கிறான்; கவலைப்படாதே!’ வாக்கியத்தை ஹிந்தியில் எழுதிக்கொடுத்ததை மறுபடி மறுபடி உரக்க சொல்லிப்பார்த்துக்கொண்டார். கல்லூரிக்கு வந்ததும் அவரை மேடையில் அமரவைத்து விட்டு, வேறு துறையில் நடக்கும் எனது வகுப்பிற்காக போய்விட்டேன்.

தனது உரையின் முடிவில் ‘கடவுள் இருக்கிறான்; கவலைப்படாதே!’ என்று ஹிந்தமிழில்(தங்கிலீஷ் மாதிரி!) சொல்ல ஒரே கரகோஷமாம். அத்தோடு விடாமல், ’Thanks to Vasan Eye care’ மாதிரி, அந்த சிறு வாக்கியத்தை கற்றுத்தந்த எனக்கு ஒரு நன்றி வேறு, அந்தப்பேராசிரியர் மேடையில் சொன்னாராம்!

அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

அன்புடன்
கார்த்திகேயன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com

மேவி... said...

தல என்ன சொல்லுறதுன்னே தெரியல ...அதான் நேத்தே படிச்சிட்டாலும் பின்னூட்டம் போடாம இருந்தேன் ...

என்னை கொஞ்சம் யோசிக்க வைச்சுருச்சு...

இது RELATED ஆ முடிந்தால் இன்னைக்கு ஒரு பதிவெழுதுறேன்

(அப்பா அம்மாவுக்கு தெரியாம ஏன் சமுதாயத்துக்கு தெரியாமல் ரகசிய தோழி வைச்சு இருப்பவங்க எல்லாம் இப்படி பண்ணுவாங்க ன்னு சொல்லுவாங்க .....சத்யமா நான் உங்களை சொல்லல )

Manoj said...

Sir....100 % unnmai....money s not only life sir...thr r many precious thngs are in life beyond tht money....who cares????

கார்த்திகைப் பாண்டியன் said...

// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...உண்மைதான் நண்பரே . நாம் தவறாக நினைக்கும் பல நிகழ்வுகளுக்கும் , மனிதர்களுக்கும் பின்னால் பல முறையானக் காரணங்கள் இருக்கும் . நானும் இதுபோன்ற அனுபவம் பெற்று இருக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி//

மொத பாதி பத்தி மட்டும் சொல்லி இருக்கீங்க நண்பா?

@ காரணம் ஆயிரம்™

உங்களுடைய அனுபவப் பகிர்வுக்கு நன்றிங்க..

// டம்பி மேவீ said...
தல என்ன சொல்லுறதுன்னே தெரியல ...அதான் நேத்தே படிச்சிட்டாலும் பின்னூட்டம் போடாம இருந்தேன் ...என்னை கொஞ்சம் யோசிக்க வைச்சுருச்சு... இது RELATED ஆ முடிந்தால் இன்னைக்கு ஒரு பதிவெழுதுறேன்//

நல்லா யோசிச்சு எழுதுங்கப்பா

//(அப்பா அம்மாவுக்கு தெரியாம ஏன் சமுதாயத்துக்கு தெரியாமல் ரகசிய தோழி வைச்சு இருப்பவங்க எல்லாம் இப்படி பண்ணுவாங்க ன்னு சொல்லுவாங்க .....சத்யமா நான் உங்களை சொல்லல )//

இப்படி வத்தி வைக்கிறதே பொழப்பா போச்சு?

// Manoj said...
Sir....100 % unnmai....money s not only life sir...thr r many precious thngs are in life beyond tht money....who cares????//

யாராவது உணர்வார்களா என்ற நப்பாசை தானடா..

மதுரை சரவணன் said...

சிலர் பார்க்க ஒருமாதிரியாக தெரிந்தாலும் , நல்லவர்களாக தெரிவார்கள். காசுமட்டும் வாழ்க்கை இல்லை . இதை அனைவரும் உணர வேண்டும். வாழ்த்துக்கள்

சுவாமிநாதன் said...

இவரைப் போல் எத்தனையோ பேர்! ஒருபுறம் இருக்க, தன் குடும்பம் உயரவேண்டும் என்று பல மையில் கடந்து பெற்றோரின் நினைவிலே வாழ்க்கையை கடத்துகின்றனர் அவனும் மனிதன், மனிதவி மானம் இன்னும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் பலரிடம் தொலைத்து தான் இருக்கிறது.

Unknown said...

நண்பரே.. உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

kannamma said...

நிறைய பேர் வாழ்க்கைல பணத்ததான் பெரிய விஷயமா மதிச்சு அவங்கள மதிக்கிற நல்லவங்களா மறந்துறாங்க.
இது எப்போ மாறுதோ அன்னைக்கு தான் மனிதம் -ங்கிற விஷயம் பார்வைக்கு வரும் .அப்படி வரும் பொது தான் உனார்வுகளுக்கும் உள்ளங்களுக்கும் மதிப்பு கிடைக்கும்.

ஜோதிஜி said...

ஒரு வரியைக்கூட விட்டு விட்டு அடுத்த வரிக்கு தாவ முடியவில்லை. அந்த அளவுக்கு கோர்த்த விதம் சிறப்பு.

கார்த்திகைப் பாண்டியன் said...

//மதுரை சரவணன் said...
சிலர் பார்க்க ஒருமாதிரியாக தெரிந்தாலும் , நல்லவர்களாக தெரிவார்கள். காசுமட்டும் வாழ்க்கை இல்லை . இதை அனைவரும் உணர வேண்டும். வாழ்த்துக்கள்//

வாழ்க்கை அவ்வப்போது இது மாதிரியான பாடங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது நண்பா..

//சுவாமிநாதன் said...
இவரைப் போல் எத்தனையோ பேர்! ஒருபுறம் இருக்க, தன் குடும்பம் உயரவேண்டும் என்று பல மையில் கடந்து பெற்றோரின் நினைவிலே வாழ்க்கையை கடத்துகின்றனர் அவனும் மனிதன், மனிதவி மானம் இன்னும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் பலரிடம் தொலைத்து தான் இருக்கிறது.//

இன்னும் ஒரு சில நல்ல இதயங்கள் இருக்கத்தான் செய்கின்றன சாமி

கார்த்திகைப் பாண்டியன் said...

// முகிலன் said...
நண்பரே.. உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.//

பார்த்துட்டேன் தல.. எழுதுறேன்..

//kannamma said...
நிறைய பேர் வாழ்க்கைல பணத்ததான் பெரிய விஷயமா மதிச்சு அவங்கள மதிக்கிற நல்லவங்களா மறந்துறாங்க. இது எப்போ மாறுதோ அன்னைக்கு தான் மனிதம் -ங்கிற விஷயம் பார்வைக்கு வரும் .அப்படி வரும் பொது தான் உனார்வுகளுக்கும் உள்ளங்களுக்கும் மதிப்பு கிடைக்கும்.//

நான் மாஞ்சு மாஞ்சு எழுதுனத நாலே வரில சொல்லிட்டீங்க.. அதேதான்..:-)

// ஜோதிஜி said...
ஒரு வரியைக்கூட விட்டு விட்டு அடுத்த வரிக்கு தாவ முடியவில்லை. அந்த அளவுக்கு கோர்த்த விதம் சிறப்பு.//

ரொம்ப நன்றிங்க..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை.பாராட்டுகள்.