November 22, 2010

கீழக்குயில்குடி - பசுமைநடை

யானைமலைக்கு பசுமைநடை போய்வந்ததன் தொடர்ச்சியாக இந்த மாதம் எழுத்தாளர் .முத்துகிருஷ்ணன் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து நானும் நண்பர் ஸ்ரீதரும் கீழக்குயில்குடிக்குப் போயிருந்தோம். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது கீழக்குயில்குடி. ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் அடிவாரத்தில் ஒரு அய்யனார் கோவில் இருக்கிறது. கோவிலின் முன்பாக இருக்கும் குளம் முழுதும் பாசி படர்ந்து நீண்டதொரு பச்சைப்போர்வை போல பார்க்கவே அத்தனை அழகாக இருக்கிறது.


குளத்துக்கு முன்பாக ஸ்ரீதர்

கோவிலின் இடது பக்கமாக நடந்து போய் சமணர் குகையை அடைந்தோம். மக்கள் இந்தப்பகுதியை “செட்டிப்புடவு” என்றழைக்கிறார்கள். புடவு - குகை அல்லது பள்ளம். இரண்டு பேர் தங்கக்கூடிய குகை. அதனுள்ளே எங்கிருந்தோ நீர் கசிந்து வருகிறது. குகையின் உள்ளே படுகைகள் ஏதுமில்லை. இங்கிருக்கும் மிகப்பெரிய தீர்த்தங்கரரின் சிற்பம் காது வளர்த்து செட்டியார் போலக் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. குகையின் உள்சுவரிலும் நான்கைந்து புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. சிற்பங்களின் கீழே தமிழ் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக அயோத்திதாசரைப் பற்றி பல ஆய்வுகள் செய்து வரும் பேரா.அலோஷியஸ் பேசினார். “புடைப்புச் சிற்பத்தின் கீழே இருக்ககூடிய எழுத்துகளை பிராம்மி எழுத்துகள் என்று சொல்கிறார்கள். ஆனால் அசோகர் காலத்து கல்வெட்டுகளில் இவை தம்மலிபி என்றே அழைக்கப்பட்டன. அப்படியானால் இந்த பெயர்மாற்றம் எப்படி உண்டானது? இதில் இருக்கக்கூடிய சமயம் மற்றும் சமூகம் சார்ந்த அரசியல் என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வரலாற்றை கூர்ந்து பல கோணங்களில் பார்த்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது”.



சமணர் குகை

அடுத்ததாக, இந்த பயணத்தில் கலந்து கொண்ட மிக முக்கியமான மனிதரான தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு.சாந்தலிங்கம் கீழக்குயில்குடி பற்றி தானறிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

“சமணர்கள் வாழ்ந்த இடங்கள் என மொத்தம் 94 இடங்கள் இதுவரை தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட அறுபது இடங்கள் தென் தமிழகத்தில்தான் இருக்கின்றன. காரணம் அவர்கள் நீர்நிலைகள், குறிப்பாக ஊற்றுகள் நிரம்பிய மலைப்பகுதிகளாகப் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். வடதமிழ்நாட்டில் மலைப்பகுதிகள் கம்மி என்பதால் வெகு குறைவாகவே அந்தப்பகுதிகளில் சமணப்படுகைகள் பற்றிய சரித்திரச்சான்றுகள் கிடைத்திருக்கின்றன. தென் தமிழ்நாட்டிலும் குறிப்பாக மதுரையைச் சுற்றித்தான் எண்பெருங்குன்றங்கள் என்று சொல்லப்படும் சமணமலைகள் காணப்படுகின்றன. அதில் முக்கியமானதான கீழக்குயில்குடி சமணர் படுகைகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

ஆரம்பத்தில் சமணர்கள் உருவ வழிபாடு என்னும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்படியானால் எப்போதிருந்து சிற்பவழிபாடு தோன்றியிருக்கக்கூடும்? வரலாறு என்று சரியாக நிரூபிக்கப்படாவிட்டாலும் பெரியபுராணத்தில் சொல்லப்படும் மிக முக்கியமான நிகழ்வு சமணர்களின் கழுவேற்றம். எட்டாம் நூற்றாண்டில் நடந்ததாக நம்பபப்டும் அந்த நிகழ்வுக்குப் பிறகு எஞ்சியிருந்த சமணர்கள் மதத்தை எப்படி அழிய விடாமல் பாதுகாப்பது எனத் தெரியாமலேயே கடைசியாக உருவ வழிபாட்டைக் கொண்டுவந்து இந்த சிற்பங்களை செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல ஆரம்ப காலத்தில் சமண மதத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. மற்ற மதங்களை எதிர்கொள்ள வேண்டி சமணர்கள் தங்களைத் தாங்களே மறுஉருவாக்கம் செய்து கொள்ள வேண்டியே பின்பு பெண்களும் மதரீதியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.



மகாவீரரின் பிரமாண்டமான புடைப்புச் சிற்பம்

மேலே இருக்கும் சிற்பம் சமணர்களின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீரருடையது. இருபுறமும் சாமரம் வீசிக்கொண்டு இருப்பவர்கள் அவருக்கு உதவும் இயக்கர்கள். மேலே கந்தர்வர்கள் உருவமும் இருக்கிறது. அவருடைய தலைக்கு மேலே இருப்பது முக்குடை. சமணர்களின் மூன்று முக்கிய கொள்கைகளான நற்செயல்கள், நல்லெண்ணங்கள், மற்றும் நல்ல விஷயங்களுக்கான பார்வை என்கிற மூன்றையும் அந்த குடை நிறுவுகிறது. அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தை மூன்று சிங்கங்கள் தாங்கிப் பிடிக்கின்றன. சமணர்கள் சிங்கத்தை தங்கள் மதத்துக்கான அடையாளமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. சிலைக்கு கீழிருக்கும் வட்டெழுத்துகள் இந்த சமணர் குகையை செய்வித்தவன் என திருக்காட்டாம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவல்லபன் எனச் சொல்லுகின்றன.

அடுத்ததாக குகைக்கு உள்ளிருக்கும் சிற்பங்களுக்கு வருவோம். இங்கே தீர்த்தங்கரர்களின் சிலையோடு கூடவே இரண்டு பெண்தெய்வங்களின் சிலைகளும் இருக்கின்றன. அமைதியாக பீடத்தின் மீது அமர்ந்திருப்பது அம்பிகா- மாகவீரருக்கான இயக்கி, அதாவது உதவியாளர். இன்னொரு சிற்பம் சிங்கத்தின் மீதமர்ந்து யானை மீதிருக்கும் மற்றவனை எதிர்த்துப் போரிடுவது போல உள்ளது. இங்கே சிங்கம் என்பது சமண மதத்தின் குறியீடாகவும், யானை என்பது மற்றொரு பழமையான மதமான “ஆசிவகம்” என்பதின் குறியீடு எனக் கொள்ளலாம். அப்படியில்லாமல் இந்தப் பெண் பத்மாவதியாக இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது . பத்மாவதிதான் 23 ஆவது தீர்த்தங்கரரான “பார்சுவனாதரின்” இயக்கி.



குகையின் உட்புறத்திலிருக்கும் சிற்பங்கள்

எதற்காக பத்மாவதி சண்டை போட வேண்டும்? கீழக்குயில்குடியில் வேறென்ன சமண சிற்பங்கள் இருக்கின்றன? இந்த மலை பற்றிய நாட்டார்கதைகள் தான் எத்தனை எத்தனை? எல்லாம் தொடரும் இடுகையில்...

கீழக்குயில்குடி பற்றிய நண்பர் ஸ்ரீதரின் இடுகையை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்..

15 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

யாராவது உங்களால முடிஞ்சா தமிழ்மணத்துல இணைச்சு விட்டுருங்க நண்பர்களே.. இங்க கல்லூரில ஏதோ பிரச்சினை.. புது இடுகைகள் ஏதும் காணப்படவில்லைன்னு சொல்லுது..

Banukumar said...

அன்பின் பாண்டியன்,

தங்கள் இடுகை மகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயம், சமணத்தைப் பற்றிச் சில மாறுப்பட்ட விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அவைகளை திருத்த விழைகிறேன். அவ்வளவே. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

//ஆரம்பத்தில் சமணர்கள் உருவ வழிபாடு என்னும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.//

இது தவறு. இந்திய தொல்லியல் படிமங்கள், எச்சங்கள் சிரமண மதத்தில் இருந்தே தொடங்குகின்றன. இதுவரையில் கிடைத்துள்ள காலத்தால் முந்திய சிலைகள் சமணம் சார்ந்தது. (உதா.. - மதுரா)
உருவ வழிபாடு சமணத்தில் இருந்துத் தொடங்கியது. பின்னர் அதை மற்ற சமயங்கள் உள்வாங்கிக் கொண்டன. (உதா..- சத்யார்த்த பிரகாசம் என்னும் நூலில் (18ஆம் நூற்றாண்டு) தயானந்த சரஸ்வதி).

//அதேபோல ஆரம்ப காலத்தில் சமண மதத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது.//

இதுவும் தவறு. முதன்முதல் பெண்களுக்கு கல்விப் புகட்டிய சமயம் சிரமண மதங்கள் (சமணம், பெளத்தம்)தாம். முதல் தீர்த்தங்கரரான ஆதிபகவன் தன் மகள்களுக்கு எழுத்தையும், எண்களையும் கற்பித்தார். கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சமணத்தில் பெண்கள் 91 விழுக்காடு படித்தவர்கள்.

//அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தை மூன்று சிங்கங்கள் தாங்கிப் பிடிக்கின்றன.//

இது அரியாசணம் அல்லது சிம்மாசணம். அரசனின் குறியீடு. அரச குலத்தவர்கள் ஆதலால்.

இரா.பா,
சென்னை
http://banukumar_r.blogspot.com/

கார்த்திகைப் பாண்டியன் said...

விளக்கங்களுக்கு நன்றி பானுகுமார் சார்.. இவையாவுமே தொல்லியல் துறையைக் சேர்ந்த சாந்தலிங்கம் அவர்கள் பசுமைநடையின்போது சொன்ன தகவல்கள்.. அவற்றைத் தொகுத்திருக்கிறேன்.. உங்களைப் போன்றவர்கள் விளக்கம் தரத்தர நமக்கான தகவல்கள் இன்னும் தெளிவாகும் என நம்புகிறேன்..

நேசமித்ரன் said...

எஞ்சாய் !

மேலும் தகவல்களுக்கு

http://www.tamiljains.org/jain-cave-temples-tamilnadu

வீடியோ வோட ..

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி கா.பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

@நேசன்

நன்றி தலைவரே

@சரவணா

வாங்கப்பா.. நன்றி..:-))

தருமி said...

பசுமை நடையா .. அறிவு நடையா?

நடை நீடிக்கட்டும்.

வாழ்த்துகள்

பாலா said...

உங்களது சாகசம் தொடர வாழ்த்துக்கள் KP sir

கார்த்திகைப் பாண்டியன் said...

@தருமி

ரொம்பப் பயனுள்ளதா இருக்கு அய்யா.. அடுத்த தடவை நீங்களும்கூட வரலாமே..

@பாலகிருஷ்ணன்

மாணவரா? கொங்கு கல்லுரியா? எந்த பேட்ச்ப்பா?

பாலா said...

"எடிசனின் கண்டுபிடிப்பு" சார். நீங்க கண்டுபிடிங்க பார்ப்போம் எந்த பேட்ச் அப்படீன்னு !

நிலாமகள் said...

நல்லாயிருக்கு சார் உங்க பசுமை நடை. நாங்களும் தெரிஞ்சிகிட்டோம் பல தகவல்களை... மிக்க நன்றி!!

கார்த்திகைப் பாண்டியன் said...

@பாலா

பல்பு? நீயா? வலைப்பூ ஆரம்பிச்சாச்சா? குட் குட்.. நல்லா எழுதுடா.. வாழ்த்துகள்..:-))

@நிலாமகள்

நன்றிங்க

cheena (சீனா) said...

ஆகா ஆகா பசுமை நடையா - வாழ்க - வளர்க ! நல்வாழ்த்துகள் கா.பா

காமராஜ் said...

புதிய படங்கள் அறியச் செய்திகள்.கூடவே நன்பர்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@cheena

நன்றி அய்யா.. ஊரிலிருந்து வந்தாச்சா? ரைட்டு..:-))

@காமராஜ்

வருகைக்கு நன்றிண்ணே..