February 11, 2011

ஒளியேந்திய பெண் - ஈரோம் சர்மிளா

நேற்று மாலை ஆறு மணி அளவில் காந்தி மியூஸியத்தில் ஈரோம் சர்மிளாவின் வாழ்வையொட்டி அமைக்கப்பட்ட "ஒளியேந்திய பெண்" என்கிற ஒரு நபர் நாடகம் நடத்தப்பட்டது. ஈரோம் சர்மிளா யாரெனக் கேட்பவர்களுக்கு... கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த பெண். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958 தன்னுடைய மாநிலத்திலிருந்து திரும்பிப் பெறப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு இவர் போராடி வருகிறார். பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அறப்போராட்டத்தை கலைக்க அரசால் மூக்கின் வழியே கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சுட்டுக் கொன்று சித்திரவதை செய்யும் ராணுவத்தை எதிர்த்து சர்மிளா போராடி வருகிறார்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஓஜெஸ் என்கிற இளம்பெண் சர்மிளாவின் பாத்திரத்தை ஏற்று இந்த நாடகத்தை நடத்துகிறார். மணிப்பூரின் வரலாறு, வடகிழக்கு மாகாணங்கள் மீதான அரசின் மெத்தனம், ராணுவத்தின் பாலியல் அத்துமீறல்கள், சர்மிளாவின் தொடர்கைதுகள் என எல்லாமே நாடகத்தின் வாயிலாக அருமையாக சொல்லப்படுகிறது. நாடகத்தில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..

** உங்களை நான் இப்போது மணிப்பூருக்கு அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முதலில் நாம் ரயில் டிக்கட் புக் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ரயில் நிலையம் கிடையாது. மிக அருகில் இருக்கும் வேறொரு ஊரின் ரயில் நிலையமோ 260 கிமீ தொலைவில் உள்ளதே.. உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அங்கிருந்து சாலைவழிப்பயணமாக எட்டு மணி நேரத்தில் வந்து விடலாம்.

** உங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் உண்டு. எங்களுக்கு அது வெறும் கனவு. பெட்ரோல் ஒரு லிட்டர் 150 ரூபாய். அதற்கும் மூன்று மணி நேரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டும். இந்தியாவோடு எங்களை இணைக்கும் சாலையான NH31 இருந்தும் இல்லாத கதைதான்.

** எங்கள் தீஸ்தா - பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மின் திட்டங்கள் எத்தனையோ செயல்படுத்தபடுகின்றன. மொத்த இந்தியாவும் எங்களால் ஒளிரக்கூடும். ஆனால் எங்கள் வாழ்வோ.. என்றும் மீள முடியாத இருளிலேயே இருக்கிறது.

** இந்த நாட்டின் தேசிய கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புவியியல் ரீதியாக எல்லா மாநிலங்களுக்கும் இடமுண்டு. ஆனால் ஒரு வடகிழக்கு மாகாணம் கூட இல்லையே.. இதை எப்படி எங்களால் தேசியகீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்? உஷ்ஷ்ஷ்.. இதையெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.

** எங்கள் சமூகம் தாய்வழி சமூகம். இங்கெ இருக்கக் கூடிய மார்க்கெட்டுகள் எல்லாமே பெண்களால் நடத்தப்படுபவை. நாட்டிலேயே ரொம்பப் பெரிய இந்த மார்க்கெட்டுகளை “இமா மார்க்கெட்” என்றழைப்பார்கள். இதைத்தான் இந்திய அரசு மொத்தமாக இடித்து விட்டு பெருவணிக அரக்கர்களை இறக்குமதி செய்யத் துடிக்கிறது.

** பள்ளியில் நாம் படிக்கும்போது புத்தகங்களோடு எனக்கு சிநேகம் உண்டானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனை பேர்.. அற்புதம். ஆனால்.. அவர்களில் ஒருவர் கூடவா எங்கள் மாநிலத்தில் இருந்து வரவில்லை? ஏன் அவர்கள் சரித்திரம் இருட்டடிக்கப்படுகிறது? இந்தியாவுக்கு வெகு முன்னரே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

** வளர்ந்து பெரியவளாகி ஒரு மனித நல இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கிராமங்களுக்குச் சென்ற போது எனக்கு பல அதிர்ச்சிகள். வன்புணர்ச்சிகள், காரணமே இல்லாத ஆள் கடத்தல்கள், கொலைகள்.. இந்த சட்டம் எதை எல்லாம் தவறு என்று சொல்கிறதோ, அது எல்லாமே. எங்கள் கிராமங்களில் சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

** ௨000 ஆம் ஆண்டின் ஒரு கறுப்பு தினம். அந்த கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு சிலர் நின்றுந்தார்கள். ஆனால் அங்கே வந்ததோ ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தாங்கிய ஒரு கவச வண்டி. சட் சட் சட்... துப்பாக்கிகள் அதிர்ந்து அடங்கின. பத்து சவங்கள். அந்த சாலையின் நடுவில் கிடந்தது. ஏன் இந்தப்படுகொலைகள்? தெரியாது. மறுநாள் செய்தித்தாளில் அதைச் செய்தது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்கிற இந்திய ராணுவப்பிரிவு எனத் தெரிந்தது. இறந்து போனவர்களில் சிறுவயதிலேயே வீரச்செயல் புரிந்ததற்காக விருது வாங்கிய ஒரு சிறுவனும் இருந்தான். என்ன மாதிரியான கொடுமை இது?

** நான் யோசிக்க ஆரம்பித்தேன். எம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் இந்த நிலை மாறும்? நான் என்னுடைய எந்தப் பொருளை பணயம் வைத்தால் என் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? நான் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். அது அற வழியிலான உண்ணாவிரதம். என் முடிவைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள். இந்த அரசாங்கம் கல்லைப் போன்றது. உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கேலி செய்தார்கள். ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

** போராட்டம் அதிகமாக இந்திய ராணுவம் எங்கள் ஊரைச் சூழ்ந்து கொண்டது. சொல்ல முடியாத அட்டூழியங்கள். ஜூலை 2004, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி மனோரமா இரவோடிரவாக ராணுவத்தால் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார். “ஏ பெண்ணே.. வீணாக சத்தம் போடாதே. அரசியல் உனக்கெதற்கு? நீ வெறும் சதைக்கோளம் மட்டுமே.. இரண்டு வட்ட மார்புகளும் ஒரு யோனியும் கொண்ட பெண் அவ்வளவே..” இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு காட்டுப்பகுதியில் அவருடைய பிணம் கிடைத்தது. அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.

** இதன் எதிர்வினையாகவே மணிப்பூரிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்களின் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள். “Indian Army Rape Us". நாங்கள் உங்கள் முன்பு திறந்த மார்புகளோடு இருக்கிறோம். வந்து உங்கள் மூவர்ணக்கொடியை எங்கள் உடம்புகள் மீது பொறித்துச் செல்லுங்கள் என அறைகூவல் விடுத்தார்கள்.

** பண்டிகைகள் வந்துபோவது போல நானும் வருடா வருடம் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக இருந்தேன். என்னுடைய ஆதர்ஷமான காந்தி மகாத்மாவின் சமாதியில் நான் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன் தொடர்ந்து போராட. அதற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டேன். ஆனால் அது உண்மையல்ல. நான் என்னையும் என் உயிரையும் ரொம்பவே நேசிக்கிறேன். அதனாலேயெ அதை என் பகடைக்காயாக பயன்படுத்த விழைகிறேன். எனவேதான் என் உடம்பையும் உயிரையும் வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். நான் ஏற்றியிருக்கும் இந்த நெருப்பு பெரிதாகப் பரவும். கடைசியில் உண்மை வென்றே தீரும் என நான் தீவிரமாக நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் எனது ஊருக்கான விடிவுகாலம் பிறந்தே தீரும். அதுவரை நான் பொறுமையாகக் காத்துக் கிடப்பேன். நான் ஈரொம் சர்மிலா...

ரொம்ப அருமையாக நடந்த நாடகத்தின் முடிவில் சர்மிளாவுக்கு மதுரை நண்பர்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது. அதை ஈரோம் சர்மிளாவிடம் கொண்டு போய் சேர்ப்பிப்பதாக அவர் சொன்னதால் அதில் நண்பர்கள் அத்தனை பேரும் கையொப்பம் இட்டார்கள். அதன் பின்பாக கேள்வி பதில் நேரமும் சில அரசியல் விஷயங்களும் பகிரப்பட்டன. தன் மக்களின் நலனுக்காக போராடி வரும் சர்மிளாவின் கனவாகும் என நாமும் நம்புவோம்.

நாடகத்தை காண இங்கே சொடுக்குங்கள்..

குறிப்பு: இதை வசிக்கும் நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் இதை எழுத முடிந்தால் இன்னும் நிறைய பேரைப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது. பஸ்ஸிலும் ரீஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

14 comments:

sathishsangkavi.blogspot.com said...

மனிப்பூரில் இப்ப ஒரு அற்புத பெண்ணா...

என் பதிவில் இதை பதிவிடுகிறேன் உங்கள் அனுமதியோடு கா.பா.,

சக்தி கல்வி மையம் said...

மனிப்பூரில் இப்ப ஒரு அற்புத பெண்ணா...

ஆதவா said...

ஐரோம் சர்மிளா பற்றி நிறைய படித்திருக்கிறேன் நண்பா.. ஒவ்வொருமுறையும் நினைக்கும் பொழுதெல்லாம் இந்திய அரசு எத்தனை கேவலமான அரசு என்று என்னை நானே நொந்து கொள்வதுண்டு...

Anonymous said...

தமிழ் நாட்டில் ஒரு நாள் உண்ணா விரதம் இருப்பவரிகளிடம் கொஞ்சம் சொல்லுங்க

settaikkaran said...

நண்பர் சங்கவி உங்களது இடுகை குறித்துக் குறிப்பிட்டிருந்தார்.

அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள். அபாரம்...!

அகநாழிகை said...

வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்.

இரோம் ஷர்மிளாவின் கவிதைகளை அம்பை மொழிபெயர்த்துள்ளார். ‘அமைதியின் நறுமணம்‘ என்ற இந்த தொகுப்பினை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

shabi said...

ivaraippatriya thagavalkalai munnare VENNIRA IRAVUGAL enra blogil kurippittirunthar

கார்த்திகைப் பாண்டியன் said...

சங்கவி..
ரொம்ப நன்றி நண்பா.. உங்க பதிவு மூலமா இன்னும் நிறைய பேருக்கு இந்த விஷயத்தக் கொண்டு போய் சேர்க்க முடிஞ்சதுக்கு..

sakthistudycentre
ஆமாங்க.. தொடர் ஆதரவுக்கு நன்றி..

ஆதவா..
தெரியாத்தனமா உங்க போன்னம்பரைத் தொலைச்சுட்டேன்.. நேரம் இருக்கும்போது கூப்பிடுங்க தல..

//A.சிவசங்கர் said...
தமிழ் நாட்டில் ஒரு நாள் உண்ணா விரதம் இருப்பவரிகளிடம் கொஞ்சம் சொல்லுங்க//

அது நம்ம தலைவிதிங்க..:-(((

கார்த்திகைப் பாண்டியன் said...

//சேட்டைக்காரன் said...
நண்பர் சங்கவி உங்களது இடுகை குறித்துக் குறிப்பிட்டிருந்தார்.
அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள். அபாரம்...!//

நன்றிங்க.. உங்க நண்பர்கள் கிட்டயும் இது பத்தி பேசுங்க..

// அகநாழிகை said...
வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்.
இரோம் ஷர்மிளாவின் கவிதைகளை அம்பை மொழிபெயர்த்துள்ளார். ‘அமைதியின் நறுமணம்‘ என்ற இந்த தொகுப்பினை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.//

தகவலுக்கு நன்றி வாசு..

//shabi said...
ivaraippatriya thagavalkalai munnare VENNIRA IRAVUGAL enra blogil kurippittirunthar//

shall try to read boss..

Ramachandranusha said...

இன்று சென்னையில் spaces, 1, elliot's beach road , besant nagar on 12th feb 6.30 p.m

Ramachandranusha said...

இன்று சென்னையில் spaces, 1, elliot's beach road , besant nagar on 12th feb 6.30 p.m

தருமி said...

என் பதிவில் இட்டுள்ளேன்.

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட் சார்

prasannabalaji said...

it is wonderful one.but we have to think again and take some steps to help