March 3, 2011

கமாண்ட் சார்

வெகு நாட்களாகவே கார் ஓட்டப் பழக வேண்டுமென்று ஆசை. நண்பர் ஒருவரும் ஆட்டத்தில் ஒட்டிக்கொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்பாக மதுரையின் பிரபலமான டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து விட்டேன். அவர்களுடைய வழக்கமான நேரமும் எங்கள் கல்லூரி நேரமும் ஒத்து வராததால் எங்கள் இருவருக்கு மட்டும் தனி வண்டி, தனியான நேரம் ஒதுக்கி சொல்லிக் கொடுப்பதாக ஏற்பாடு.

முதல் நாள் வகுப்பில்தான் அவரை சந்தித்தேன். கமாண்ட் சார். எங்களுக்கு ஒதுக்கி இருந்த டிரக்கரின் இன்ஸ்ட்ரக்டர். வயது எப்படியும் ஐம்பதுக்கு மேல் இருக்கும் எனத் தோன்றியது. ஏற்றி சீவிய தலைமுடியும் இறக்கி வைத்த மீசையும் அவருக்கு ஒரு கெத்தை கொடுத்தது. அடிக்கடி பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் என்று வித்தியாசமான மனிதர்.

"இப்படிப் புடிக்கணும்.."

"ரோட்டைப் பாருங்க.. இப்புடி.. ஹ்ம்ம்.. கவனிங்க.."

"நீங்க படிச்சவங்கதான.. சொன்னாப் புரியாதா.."

"command.. command.. கமாண்ட கவனிங்க சார்.."

அன்றுதான் முதல் முறையாக காரில் இருக்கும் ஒருவனோடு பேசுகிறோம் என்கிற உணர்வே இல்லாமல் வறுத்துத் தள்ளி விட்டார் மனுஷர். எனக்கு செம கடுப்பு. நீ பெரிய டிரைவிங் வெங்காயம்னா அதுக்கு நாங்கதான் ஆளா? அடுத்த நாள் முதல் அவர் வண்டியில் ஏறுவதில்லை என்று முடிவு செய்தாகி விட்டது. அத்தோடு அவருக்கு ஒரு பட்டப்பெயரும்.. "கமாண்ட் மண்டையன்.."

பத்து நாட்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போனது. நடுவில் ஒருமுறை நண்பர் கமாண்ட் சாருடைய வண்டியில் போய் வந்தவர் சொன்னார். "சார்.. அவர் நாம நினைக்கிற மாதிரி இல்ல சார். நெஜமாவே நல்லா சொல்லித் தரார்.." ஆனாலும் எனக்கு ஆறவில்லை. அதெல்லாம் அவர் வண்டியில் ஏறவே முடியாது என தீர்மானமாக சொல்லிவிட்டேன்.

ஆனால் நான் நடக்கவே கூடாது என்று ஆசைப்பட்ட நாளும் வந்தது. எல்லா டிரைவர்களும் ஏதோ பங்க்ஷன் என்று லீவ் போட்டுவிட அன்று கமாண்ட் சாரின் வண்டி மட்டும்தான் இருந்தது. வேறு வழியே இல்லை. நானும் நண்பரும் ஏறி விட்டோம். நான் ஓட்ட நண்பர் பின்னால் அமர்ந்து இருந்தார். நான் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தவுடனே கமாண்ட் சார் தன் கண்டிப்பை ஆரம்பித்து விட்டார்.

"இன்னைக்கு ஒத்தக் கையில ஓட்டுங்க. இன்னொரு கை கியரைப் புடிக்கட்டும்.."

எனக்குப் பழக்க தோஷத்துக்கு கை ஸ்டியரிங்கை நோக்கிப் போக மீண்டும் மீண்டும் இழுத்து விட்டுக் கொண்டே இருந்தார். சற்று நேரத்தில் எனது ஒரு கையில் இருந்த கண்ட்ரோல் பார்த்து எனக்கே ஆச்சரியமாகிப் போனது.

"பார்த்தீங்களா.. அம்புட்டுதான்.. இந்த தன்னம்பிக்கை வரணும் சார்.. அதுதான் முக்கியம்.."

முதல் முறையாக நான் அவர் பேசுவதை கவனிக்கத் தொடங்கினேன்.

"எப்படி எல்லாம் சார் விபத்து நடக்குது? மூணே விஷயம். நீயா நானான்னு போட்டி வரும்போது.. அது இருக்கவே கூடாது. இது வாழ்க்கை. விளையாட்டு கிடையாது. ரெண்டாவது.. அதிக கோபமோ சோகமோ இருக்கும்போது வண்டியத் தொடவே கூடாது. மூணாவது ரொம்ப முக்கியம். தண்ணி போட்டுட்டு ஓட்டவே கூடாது.."

வழியில் ஒரு கடையில் நிப்பாட்டினோம். "டீ சாப்புடலாம்.. இவன்கிட்ட ரொம்ப நல்லா இருக்கும்.."

"இன்னைக்கும் எல்லாருமே லீவு. நீங்க போகலையா.."

"லீவு போட்டா எப்படி சார் பொழப்பு ஓடும்?"

"இதுதான் உங்க முழுநேரத் தொழிலா?"

"ஆமா.. மூவாயிரம் ரூபா சம்பளம்.. இது மட்டும்தான் எனக்குத் தெரிஞ்ச வேலை.."

"வெறும் மூவாயிரம்? அப்போ.. குடும்பம்? பிள்ளைங்க படிப்பு..?"

"நல்ல வேளை எனக்குப் பிள்ளைங்க இல்ல சார்.."

எனக்குத் திக்கென்றது. முதல் முறையாக தனக்கு நல்ல வேளையாக பிள்ளைகள் பிறக்க வில்லை என்று சொல்லக் கூடிய மனிதரை என் வாழ்க்கையில் சந்திக்கிறேன். "வாங்க.. வண்டியில போய்க்கிட்டே பேசுவோம்." இப்போது நண்பர் வண்டியை ஓட்டத் துவங்கினார். நான் பின்னாடி அமர்ந்தேன்.

"எனக்கு லேட் மேரஜ் சார். நாப்பத்தாறு வயசுலதான் கல்யாணம். வேணவே வேணாம்னுதான் இருந்தான். அப்புறம் கடைசி காலத்துல லாபமோ நஷ்டமோ சாஞ்சுக்க ஒருதோள் வேணும் இல்லையா? அதனால் இப்போத்தான்.. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பண்ணிக்கிட்டேன். அவங்க ஒரு விடோ. யாருமில்லாதவங்க. அதான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா.. புள்ள குட்டி எல்லாம் இருந்தா இந்த சம்பளத்துக்கு இன்னைக்கு உலகத்துல பிழைக்க முடியுமா சார்?"

நான் அமைதியாக இருந்தேன்.

"கல்கத்தால இஸ்கான் கேள்விப்பட்டு இருக்கீங்களா.. மொத மொதல்ல பதினெட்டு வயசுல அங்க கிளார்க் வேல. வீட்டை விட்டுட்டுப் போனேன். அண்ணன் ஒருத்தன் நாலு தங்கச்சிங்க. அண்ணனுக்கு இந்தியன் எக்ச்பிரசுல வேலை. எல்லாம் நல்லத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. ஒரு நாள் திடீர்னு போன் வந்தது. அண்ணனுக்கு ஹார்ட் அட்டாக். ஒடனே வான்னு.. அவன் பெரிய ஆளு. ஜோசியம் எல்லாம் தெரிஞ்சவன். தான் சாகுற நாள முன்கூட்டியே கணிச்சு வச்சுட்டு செத்துப் போயிருந்தான். கேரளால இருந்தவன். அன்னைக்கு ஒருநாள் இந்தியா பூரா இருந்த அவன் கம்பெனி மக்களோட சம்பளத்த வசூல் பண்ணித் தந்தாங்க. நம்ம தமிழ்நாட்டுல அப்படி செஞ்சு இருக்க மாட்டாங்க. 75 ,000 ரூபா கெடச்சது. அத வச்சு அண்ணியையும் புள்ளைகளையும் செட்டில் பண்ணி விட்டோம். இப்போம் இந்தப்பக்கம் நாலு தங்கச்சிங்க.. அதுங்கள நல்லா உக்கார வைச்சு திரும்பி பார்த்தா நமக்கு வயசாகிபோச்சு.."

"அவங்க எல்லாம் இப்போ?"

அவர் விரக்தியாகத் திரும்பிப் பார்த்து சிரித்தார். "எல்லாரும் நல்லா இருக்காங்க. ஆனா என்ன ஒதுக்கிட்டாங்க . பழசு எல்லாம் எதுக்கு. அடுத்தது என்னன்னு பாருன்னு புதுப்பாடம் சொல்லிக் கொடுத்து போயிட்டாங்க.."

சற்று நேர அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார்.

"இப்போ கிடைக்கிற மூவாயிரம் ரூபா சம்பளத்தையும் தொடக்கூட மாட்டேன் சார். அப்படியே பேங்கில் போட்டுடுறேன். நாளைப்பின்ன எனக்கோ அவளுக்கோ ஒடம்பு முடியலைன்னா யார்கிட்டயும் போய் நிக்கக் கூடாது பாருங்க.."

"அப்போ வீட்டு செலவுக்கு?"

"இந்தா.. வண்டில வர்ற மக்கள் கொஞ்சம் பணம் தருவாங்க சார். அத வச்சு ஓட்டிக்குவேன். முதலாளிக்கு நம்ம மேல அம்புட்டுப் பிரியம். ஒத்த வார்த்த இது வரைக்கும் கடிஞ்சு சொன்னதில்ல. அதுக்கு பங்கம் வரமா நடந்துக்கிட்ட போதும் சார். குமார்னா கடைசிவரைக்கும் அப்படியே கெத்தா இருக்கணும் சார்.."

அவர் பெயர் குமார் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். கமாண்ட் சார் எனக்குள் எதையோ இடறி விட்டிருந்தார். மற்றவர்கள் என்று வாழும் எல்லாருமே இங்கே இப்படித்தான் மதிக்கப்படுவார்களா? இளிச்சவாயர்களாகவே இருந்து போக வேண்டியதுதானா? நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது.

"நாளைக்கும் டையத்துக்கு வந்திருங்க சார்.."

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். கையில் இருந்த கொஞ்ச பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

"இல்ல சார்.. வேணாம். முடிச்சுப் போறப்ப பார்த்துக்கலாம். என்னைக்காவது என் மனசு தாங்காம பேசுவேன். அதைப் பொறுமையா நீங்க கேட்டதே பெருசு. இந்தக் காசுக்காக நான் பேசினேன்னு இருக்க வேணாம் சார்..பார்க்கலாம்.."

அவர் சிரித்தபடியே கிளம்பினார். ஆனால் அதில் ஒளிந்திருந்த வலியும் பயமும் என்றும் என்னை துயரப்படுத்திக் கொண்டே இருக்கும்.

23 comments:

Speed Master said...

கேட்டகவே கவலையாய் இருக்கு

sathishsangkavi.blogspot.com said...

நல்ல மனிதன்...

ஆதவா said...

இருந்தாலும் நாலு தங்கச்சிகளும் இப்படி ஒருவரை துரத்தி விட்டிருக்கக் கூடாது!!! ரொம்ப நல்ல மனுசங்க!! அடுத்தமுறை பார்த்தா, கேட்டதா சொல்லுங்க. (ஆனா இன்னொரு விஷயம், தங்கச்சிங்க ஸ்டேட்மெண்ட் என்னன்னு தெரியலை இல்லையா?)

Balakumar Vijayaraman said...

க்ளாஸ்.

Anonymous said...

மனிதனின் மறுபக்கம்....

பாண்டியன் நா எல்லாம் மதுரை வந்தா ரீசீவ் பண்றேன் பேர்வழின்னு கார் கொண்டுவரக்கூடாது ஆமாம் சொல்லிப்புட்டேன்..( நல்லவேளை நமக்கும் ட்ரைவிங் தெரியுமுன்னு பாண்டியன் கிட்ட சொல்லலை..)

vasu balaji said...

எப்பவும் கடுவம்பூனை, முரட்டு ஆளுங்கன்னா உள்ள ரொம்ப சாஃப்டா ஒரு மனுசன் இருப்பான். அத கண்டுட்டா அப்புறம் அப்படி ஒரு வாஞ்சை வரும்.நல்லா சொல்லிருக்கீங்க கார்த்தி.

குமரை நிலாவன் said...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
எங்கோ ஒரு ஓரத்தில்
வலி இருக்கத்தான் செய்கிறது

இராஜராஜேஸ்வரி said...

ஒளிந்திருந்த வலியும் பயமும் என்றும் என்னை துயரப்படுத்திக் கொண்டே இருக்கும்.
we also.

தருமி said...

கவனிப்பு --> உட்கிரகிப்பு --> நல்ல வார்த்தைகள் --> மனதை நெருடும் நல்ல பதிவு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

Good :-)))))))

இளங்கோ said...

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை விதமான சோகங்கள்.

க.பாலாசி said...

என்ன சொல்றதுன்னு தெரியல.. இந்த மனிதனும் ஒரு படிப்பினை..

Anonymous said...

ஒரு சிறந்த மனிதரைப் பற்றி சொல்லியிருக்கீங்க கா.பா!

க ரா said...

நல்லதொரு மனிதர். பகிர்ந்தமைக்கு நன்றி கா.பா..

மேவி... said...

கார்த்தி, அதிசியம் நானும் இதே மாதிரி குணம் கொண்ட மணிமாறன் ங்குற ஆட்டோகாரரை இன்று சந்தித்தேன்....

நல்ல இருந்துச்சு நண்பா

மதுரை சரவணன் said...

thanks for sharing. .. annae feelings la vandi vottakkutaathu...

Unknown said...

i remember rajini film - ஆறிலிருந்து அறுபது வரை

siva said...

//இந்தக் காசுக்காக நான் பேசினேன்னு இருக்க வேணாம் சார்..பார்க்கலாம்//

Congrats for your careful narration... If this lines are not there... command sir would have reflected a very different image in us of showing sympathy for money...

chi said...

very nice person. so, that it rains some times in a month or year.

like this type of persons great thier sacrifice is or may be equal to saints or prophets.

I am also such type just be4 my marriage.

டக்கால்டி said...

அருமையான மனிதர்,
இப்பவும் கமான்ட் மண்டையன்னு தான் கூப்பிடுறீங்களா?

அவரு கமான்ட் மண்டையன் இல்லீங்க...ஒரு சாமநியனைப் போல காமன் மண்டையன்...

Prabu M said...

"நல்ல வேளை எனக்குப் பிள்ளைங்க இல்ல சார்.."

:-(((

இப்படியும் ஒரு வாழ்க்கையா...
ச்சே.. அதுலயும் எவ்ளோ கம்பீரமா வாழுறாரு கமாண்ட்!
ரொம்ப நல்ல பதிவு பாஸ்

Anonymous said...

அது என்னமோ கார் ஓட்ட கத்துகொடுக்கறவங்க எல்லாருமே படு டென்ஷனாத்தான் இருக்காங்க...

பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு..

இந்த காலத்துல 3000 ரூபாய்க்கு எப்படி குடும்பமெல்லாம் நடத்தமுடியும்??

வாழ்க்கை கற்பிக்கும் பாடம் இந்த தொகுப்பு.

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

மனிதர்களைப் படிக்க ஆரம்பித்தாய் விட்டதா ? மிக சுவாரசியமான பாடம். சந்திப்பவர்களைஎல்லாம் - அவர்களுடன் ஒரு மணி நேரம் மனம் விட்டுப் பேசுங்கள் - பெரும்பாலும் வெற்றி கிடைக்கும் - மனம் லேசாகும்.

நல்வாழ்த்துகள் கா.பா
நட்புடன் சீனா