April 2, 2011

நஞ்சுபுரம் - திரைப்பார்வை

நல்லபாம்பு தெய்வத்துக்கு சமமானது ஆனால் அடிபட்ட நாகம் தன்னை தாக்கியவனைப் பழிவாங்காமல் விடாது என்பது போலான ஐதீகங்கள் மற்றும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் நஞ்சுபுரம். சின்னத்திரையில் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான ராகவ் தயாரித்து நாயகனாகவும் நடித்து இருக்கிறார். பாம்புகள் பற்றிய பயம் இருக்கும் மக்கள் (எனக்கு உண்டு.. அவ்வ்வ்வ்..) இந்தப் படத்துக்கு போகாமல் இருப்பது நல்லது. ஒரு சில காட்சிகளில் ரொம்பவே கொடூரமாக டெர்ரர் காண்பித்து இருக்கிறார்கள்.


நாகத்தை தெய்வமாக மதித்து அவற்றை தங்கள் வாழ்வின் ஒருபகுதியாகக் கருதி வாழப் பழகிக் கொண்ட மக்கள் இருக்கும் ஊர் நஞ்சுபுரம். அங்கே மேல்சாதிக்கார ராகவுக்கும் கீழ்சாதிக்கார மோனிகாவுக்கும் காதல். ஊரே பாம்பை பார்த்து பயபக்தியோடு இருக்க ராகவ் மட்டும் உல்டாவாக இருக்கிறார். ஆற்றில் குளிக்கும் மோனிகாவை ஒரு நாகம் கடிக்க வர அதைக் காயப்படுத்தி நாயகியைக் காப்பாற்றுகிறார் ராகவ். ஆனால் தப்பிப் போன நல்லபாம்பு நாற்பது நாட்களுக்குள் அவரைப் பழிவாங்கும் என ஊரே பயமுறுத்த எல்லோரும் சேர்ந்து ஒரு பரணைக் கட்டி அதில் ராகவை பத்திரமாக தங்க வைத்து காவலும் இருக்கிறார்கள். ராத்திரி நேரங்களில் மற்றவர்களுக்குத் தெரியாமல் இறங்கிப் போய் காதல் பண்ணும் ராகவுக்கும் மோனிகாவுக்கும் கசமுசகச ஆகி விடுகிறது.

தன் மகன் கீழ்ஜாதிப் பெண்ணை விரும்புகிறான் என்பதால் ஊர் ப்ரெசிடென்ட் உதவியோடு மோனிகாவுக்கு வேறொரு மாப்பிளை பார்க்க வைக்கிறார் ராகவின் அப்பா. இதே நேரத்தில் ஊரார் சொல்லும் விதவிதமான கதைகளைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக ராகவின் மனதில் பயம் புகுந்து கொள்ள பாம்பு பற்றிய கதைகளை அவரும் நம்ப ஆரம்பிக்கிறார். பார்க்கும் இடமெல்லாம் பாம்பாகத் தெரிய பயந்து நடுங்கி பரணுக்கு உள்ளேயே அடைந்து கிடக்கிறார். கல்யாண நாள் நெருங்க மோனிகாவுக்கோ பயங்கர மன உளைச்சல். கடைசியாக சந்திர கிரகணம் அன்று தைரியத்தை மீட்டெடுத்து தன் காதலியோடு ஊரை விட்டுத் தப்பிப் போக முயற்சி செய்கிறார் ராகவ். அவர்கள் காதல் ஜெயித்ததா இல்லை பாம்பு தான் நினைத்தபடி பழிவாங்கியதா என்பதுதான் நஞ்சுபுரத்தின் கதை.

பங்கரைத் தலையுடன் சுற்றி வரும் ராகவுக்கு இதுவொரு நல்ல ஆரம்பம். ஊருக்குள் தைரியமாக சுற்றி வரும்போதும் மோனிகாவைக் கரெக்ட் செய்யும் காட்சிகளிலும் கடைசியில் பயத்தால் நடுங்கி சாகும்போதும் நீட்டாகச் செய்திருக்கிறார். சிலந்தியில் பொளந்து கட்டியது போக மிச்சம் இருக்கும் மேக்கப் இல்லாத விஜய் மகேந்திரனின் தானைத்தலைவி மோனிகா கொள்ளை அழகு. ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பாவாடை சட்டை போட்ட பட்டாசு நாயகி. அப்பப்போ முந்தானையைச் சரியவிட்டு பார்ப்பவர்களை பேஸ்தடிக்க வைக்கிறார். வில்லனாகத் தம்பி ராமையா. மைனாவுக்கு முன் ஒத்துக்கொண்ட படம் போல அவரும் இருக்கிறார் அவ்வளவே. மற்றபடி கடைசி காட்சியில் மோனிகாவுக்கு உதவி செய்யும் திருடனாக வருபவர் ஒருவரை நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லலாம்.


படத்தின் பாடல்களை எழுதி இருப்பவர் கவிஞர் மகுடேஸ்வரன். "தேளாகக் கொட்டுதம்மா தேகத்தை காதல் கொடுக்கு.." பாட்டு ஈர்க்கிறது. "யாவரும் சேர வேண்டிய புள்ளி" காமக் கடும்புனல். அதே மாதிரி வசனமும் கவிஞர்தான் எழுதி இருக்கிறார். நான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும் முனைப்பு இல்லாத இயல்பான வசனங்கள். படத்துக்கு இசையமைத்து இருப்பதும் ராகவ்தான். எக்கச்சக்கமாக ரகுமான் பாதிப்பு. அதுவும் "எண்ணட்டுமா நட்சத்திரம்" பாட்டு அப்படியே ஸ்வதேசின் தாரா வோ தாரா பாட்டு மாதிரியே இருக்கிறது. பின்னணி இசையில் ஒரு சில சத்தங்கள் நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் இரைச்சல். ஆண்டனியின் ஒளிப்பதிவும் கலை இயக்குனர்கள் உருவாக்கி இருக்கும் நஞ்சுபுரம் கிராமும் படத்துக்கு பலம்.

நாகதோஷம் இருக்கும் ஒருவனை பாம்பு கடித்து கண்ணாமுழியைப் பிடுங்கி கொலை செய்யும் முதல் காட்சியிலேயே இது வேறு மாதிரியான முயற்சி என்பதை சொல்லி விடுகிறார்கள். ஆனால் இது திகில் படமா, காதல் படமா, இல்லை சாதி சார்ந்து பேசும் படமா என பல விஷயங்களைப் போட்டுக் குழப்பி அடித்திருப்பதுதான் சிக்கல். முதல் பாதியில் ராகவ் மோனிகா காதலைச் சொல்லி பாம்பு தப்பித்து ராகவை பரணில் ஏற்றுவதுவரை ஓகே. ஆனால் இடைவேளைக்குப் பின்னரும் அதே ரீதியிலான காட்சிகள் தொடர்ந்து வருவதும் கடைசி பதினைத்து நிமிடங்களில்தான் ராகவுக்கு பயம் வருவது போலவும் திரைக்கதை அமைத்திருப்பது ரொம்பவே பொறுமையைச் சோதிக்கிறது.


காலம் காலமாக தமிழ் சினிமாவில் இருந்து கொஞ்ச நாட்களாகக் காணாமல் போயிருந்த சில காட்சிகளை இந்தப்படம் மீட்டெடுக்கும் வேலையைச் செய்திருக்கிறது. காதலியின் மீது குத்திய முள்ளைக் காதலன் தன் வாயால் எடுப்பது, கில்மா முடிந்து நாயகி தலையில் அடித்துக் கொண்டு அழுவதும் உடனே கதாநாயகன் அருகில் இருக்கும் சூலத்தில் தன் கையை அறுத்து பொட்டு வைப்பது.. ஸ்ஸ்ஸ் அப்பா.. கண்ணக் கட்டுதே. அதோடு லாஜிக் சார்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் படம் டப்பா டான்ஸ் ஆடிவிடும். ஊருக்குள் எந்த வசதியும் இல்லை என்று அறிமுகம் செய்து விட்டு ராகவ் வீட்டில் கேபிள் டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டென்னிஸ் மேட்ச் ஓடுவது எப்படி, ஊரே பாம்பு பயத்தில் இருக்கும்போது ஊருக்குள் ஒரு வைத்தியர் கூட இல்லாமல் பத்து கிமீ சுத்திப் போகும் கொடுமை, பாம்புகள் கிடக்கும் காட்டுக்குள் ஏதோ விருந்துக்குப் போனவன் மாதிரி திருடன் படுத்துக் கிடப்பதும்.. அடப் போங்கப்பா.

திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் சார்லஸ். கண்டிப்பாக இலக்கியப் பரிச்சயம் உள்ள மனிதராக இருப்பார் என நினைக்கிறேன். பயம்தான் விஷம் என்கிற விஷயத்தைக் கொண்டு போயிருக்கும் விதம் அழகு. ஐந்தறிவு உள்ள மிருகம் கூட சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது ஆனால் மனிதனுக்குள் இருக்கும் மிருகம்? இதுதான் படம் எழுப்பும் அடிப்படைக் கேள்வி. ஆனால் எத்தனை பேரை இது சரியாகப் போய் சேரும் என்று தெரியவில்லை. கடைசியில் சோகமாக முடித்தால்தான் படம் ஹிட்டு என்கிற வலைக்குள் மனுஷன் விழுந்ததும் ஏன் என்று புரியவில்லை. காதல் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்து திகில் காட்சிகளை இன்னும் கூட்டி இருந்தால் படத்தின் டெம்போ நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சி என்கிற வகையில் இயக்குனருக்குப் பாராட்டுகள்.

நஞ்சுபுரம் - திரைக்கதையால் "நஞ்ச"புரம்

7 comments:

விஜி said...

எப்படிய்யா தேடிப்பிடிச்சு இந்த படத்தையெல்லாம் பார்க்கறீங்க? ::)))

Speed Master said...

//
விஜி said...
எப்படிய்யா தேடிப்பிடிச்சு இந்த படத்தையெல்லாம் பார்க்கறீங்க? ::)))


அதே அதே


ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post.html

கார்த்திகைப் பாண்டியன் said...

விஜி..
மதாஜி.. அதெல்லாம் கம்பெனி சீக்ரெட்..:-))

speedmaster
வருகைக்கு நன்றிங்க..

Sriakila said...

இப்படி ஒரு படம் வந்துச்சேன்னு உங்க பதிவ பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேன்..:)

ஜெட்லி... said...

நீங்களும் நஞ்சிட்டீங்களா அண்ணே...
சேம் ப்ளட்...

கார்த்திகைப் பாண்டியன் said...

sriakila
பொதுசேவைங்க..:-))

ஜெட்லி..
உங்க விமர்சனம் பார்த்தேன் நண்பா.. நஞ்சபுரம்.. சேம் பின்ச்..:-))

ஆதவா said...

இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை... சற்றேனும் வித்தியாசம் இருக்கலாம் எனும் நம்பிக்கையுண்டு

இயக்குனர் சார்லஸ் வலைப்பதிவு எழுதுகிறார்...
http://vaarthaikal.wordpress.com/
நான் விரும்பிப் படிக்கும் வலைத்தளங்களும் அவருடையதும் உண்டு.
நல்ல இலக்கிய/ சினிமா அறீவு மிகுந்தவர்!!