ஆசை: புற அழகு என்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு ஒருவரை அழகு என்று சொல்ல முடியாது. மனது தான் முக்கியம். வயது ஆகும்போது புற அழகு மாறிப்போகக் கூடும். ஆனால் நல்ல மனம் என்றும் மாறாது. உடம்பு அழகாக இருந்தும் உள்மனம் அழுக்காக இருந்தால் அதனால் என்ன பிரயோஜனம்? ரோட்டில் நடந்து போகும்போது யாரென்றே தெரியாத ஒருவர் அடிபட்டுக் கிடந்தால், அவருக்கு உதவ வேண்டும் என்று யோசிக்கிறது பாருங்கள்.. அந்த நல்ல மனதுதான் உண்மையான அழகு.
உண்மை: வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.."சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.. இவன் கருப்பன்.. பொய் சொல்லுவான்.. இவனப் போட்டு அடிங்கடா.." இதுதான் இன்றைய மக்களின் மனநிலை. கருப்பு என்றால் ஏதோ அவலட்சணம் என்பதைப் போல உருவகப்படுத்துகிறார்கள். நின்று நிதானமாக மனதைப் பார்க்க யாருக்கும் நேரம் இல்லை. ஆடை பாதி, ஆள் பாதி என்பதெல்லாம் மாறி இன்றைக்கு ஆடையும் அழகும்தான் மதிப்பே என்பது போல ஆகி விட்டது.
ஆசை: எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, இரு மனங்கள் ஒன்றை ஒன்றை விரும்பி ஏற்றுக் கொண்டு, கடைசி வரை தங்கள் வாழ்கையை ஒன்றாக வாழ்வது தான் காதல். அழகைப் பார்த்தோ, அந்தஸ்தைப் பார்த்தோ வருவது கிடையாது. அது ஒரு நம்பிக்கை. என் வாழ்க்கை பூராவும் இவர் நம்மோடு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற உணர்வு. உண்மையான காதலில் அழகு ரெண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.
உண்மை: இன்றைக்கு காதல் ஒரு வியாபாரமாகிப் போய் விட்டது. ஒரு ஆண் நன்றாக சம்பாதிக்கிறானா, அவனிடம் கார் இருக்கிறதா, வீடு இருக்கிறதா.. இதை எல்லாம் பார்த்து தான் பெண்ணுக்கு காதல் வருகிறது. பெண் அழகாக இருக்கிறாளா, வீட்டில் எந்த இம்சையும் இருக்கிறதா.. இதைப் பார்த்து தான் ஆண் காதல் கொள்கிறான். அன்பு என்னும் ஆதாரமான விஷயத்தைத் தவிர இன்றைய காதலில் மற்ற எல்லாமே இருக்கிறது. காதல் இன்று பலருக்கு பொழுதுபோக்காக மாறிப் போனது இன்னும் கொடுமை.
ஆசை: பணம் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாக, அளவோடு இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காப்பாற்றும் அளவுக்கு பணத்தை வைத்துக் கொண்டு, அதிகமாக இருப்பதை இல்லாத மக்களுக்கு கொடுக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அதன் பின்னர் உலகத்தில் யாருமே ஏழை என்று இருக்க மாட்டார்கள் இல்லையா?
உண்மை: காசைத் தேடி ஓடி ஓடி தங்கள் வாழ்வை தொலைத்தவர்கள் தான் இன்று உலகம் முழுதும் நிறைந்து இருக்கிறார்கள். "கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் நமக்கு எஜமானன்.." எத்தனை உண்மை? ஒருவனுக்கு காசு சம்பாதிக்கும் வெறி இல்லை என்றால் சமூகம் அவனுக்குத் தரும் பட்டம் "பிழைக்கத் தெரியாதவன்". பணம் இருந்தால் தான் இன்று உறவுகள் கூட மனிதனை மதிக்கின்றன. பணம் என்னும் விஷயத்தை ஏன் தான் மனிதன் கண்டுபிடித்தானோ என்று பலமுறை நொந்து இருக்கிறேன். பணம் இருந்தால் தான் மரியாதை. இல்லை என்றால் மனிதனுக்கு பிணத்துக்கு சமமாகத்தான் மதிப்பு.
ஆசை: ஒரு சின்ன சம்பவம். என் பெற்றோருக்கு அதிகமான கடவுள் பக்தி உண்டு. என் தங்கையின் திருமணம் நல்ல படியாக முடிந்ததற்கு நேர்த்திக்கடன் செய்வதற்காக பட்டமங்கலம் (குருஸ்தலம், காரைக்குடி போகும் வழியில் உள்ளது) போயிருந்தோம். அங்கே அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தம்பதியைப் பார்க்க நேர்ந்தது. குழந்தை இல்லை என்ற குறை நீங்க அவர்கள் போகாத மருத்துவமனை கிடையாதாம். அவர்களை சோதனை செய்த எல்லா மருத்துவர்களுமே இருவருக்கும் உடம்பில் எந்தக் குறையும் இல்லை என்று சொல்லி விட்டார்களாம். இருந்தும் பிள்ளை இல்லையே என்ற சோகத்தில் இருந்தவர்கள், யாரோ சொன்னதைக் கேட்டு, பட்டமங்கலம் சென்று வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வந்து இருந்தார்கள். அவர்கள் கதையைக் கேட்டு நான் ஆடிப்போனேன். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்த தம்பதியை இந்தக் கோயில் வரை செலுத்திக் கொண்டு வந்தது எது? அவர்களுடைய நம்பிக்கை தானே.. அந்த நம்பிக்கைக்காகவாவது கடவுள் என்ற ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்.
தேனீ சுந்தர்
சொல்லரசன்
அ.மு.செய்யது