September 24, 2009

உன்னைப் போல் ஒருவன்...?!!!

உன்னைப் போல் ஒருவன் - இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. நான் இன்னும் படம் பார்க்காத நிலையில் என்னால் படத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. நான் அடிப்படையில் ரஜினி ரசிகன் என்றபோதும் கமலின் நடிப்பை வெகுவாக நேசிப்பவன். ஆனால் நம் பதிவுலக நண்பர்கள இந்தப் படத்தை அணுகி இருக்கும் விதம் உண்மையிலேயே மனதை மிகவும் நோகடித்து விட்டது. இங்கே கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரண்டு தரப்புகள். மிகவும் நல்ல கருத்துள்ள படம், அருமையான பொழுதுபோக்குப் படம், மோசமான இந்துத்துவா படம்.. இது போல இன்னும் பல விமர்சனங்கள்.


ஒரு தரப்பு படத்தை கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் இது ஒரு நல்ல படம் என்று சொன்னால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கமலைப் பற்றி விமர்சிக்கிறார்கள் என்ற காரணத்துக்காக உன்னைப் போல ஒருவனை வெறும் பொழுதுபோக்கு படம், கருத்தெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.. என்ற ரீதியில் பேசுவது மன்னிக்க முடியாதது. சாமானியனுக்கும் நல்ல விஷயங்களைக் கொண்டு போய் சேர்க்க முடியும் என்றால் அதற்கு திரைப்படத்தை விட சிறந்த சாதனம் கிடைக்காது. இதை நன்கு உணர்ந்தவர் கமல். வெறும் பொழுதுபோக்கு என்றால் அவர் "partner "ஐ ரீமேக் பண்ணலாமே.. "A Wednesday " எதற்கு?


எதிர்த் தரப்பில் சிலர், சினிமாவை உண்மையாக நேசிக்கும் கமல் என்ற கலைஞனை இதற்குமேல் கேவலப்படுத்த முடியாது என்னும் அளவுக்கு கேவலமாகத் திட்டி உள்ளார்கள். படைப்பை பற்றி பேசுவதைத் தவிர்த்து படைப்பாளியையும் அவனுடைய ஜாதியையும் முன்னிறுத்தி பேசுவதும், ஜாதிபுத்தியால்தான் இப்படி படம் எடுக்கிறார் எனச் சொல்வதும் எந்த வகை நியாயம் என்று புரியவில்லை.


நான் படித்தவரையில் தோழர் மாதவராஜின் இடுகைகள் மட்டுமே படத்தை நேர்மையாக, நடுநிலையோடு அணுகி இருந்ததைப் போல தோன்றியது.


கமல் உன்னைப் போல் ஒருவனில் பல குறியீடுகளைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு அவற்றைப் படிக்கும்போது காதலா காதலா படத்தின் ஒரு காட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. பிரபுதேவா வரைந்த ஒரு மட்டமான படத்தில் பெப்சியை ஊற்றி கந்திரகோலமாக்கி விடுவார் கமல். அதைப் பார்க்கும் சௌந்தர்யாவும், ரம்பாவும் "இது அணில், இது ராமர்.. வாவ் என்ன ஒரு பெயிண்டிங்" என்றெல்லாம் சொல்வார்கள். ஆச்சரியமுடன் கமல் திரும்பிக் கேட்பார்.."அடேங்கப்பா.. இதெல்லாமா உங்களுக்குத் தெரியுது?" இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை.


இதை எல்லாம் விடப் பெரிய கொடுமையை நேற்று டிவியில் பார்க்க நேர்ந்தது. கமல் சினிமாவில் நடிக ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் வண்ணம் விஜய் டிவி ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட கமல் ரசிகர் ஒருவர் சொன்னது... "விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.." அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!

19 comments:

நையாண்டி நைனா said...

cool nanbaa... cool.

vasu balaji said...

அப்புடி போடுங்க. நல்ல இடுகை.

நாடோடி இலக்கியன் said...

ம்.

மேவி... said...

பழமொழி சொன்ன அனுபவிக்கனும் ..... ஆராய்ய கூடாது.....


மும்பை எக்ஸ்பிரஸ் படம் வந்த பொழுது இப்படி ஒருத்தர் சொன்னார் " கமலை பார்த்து தான் இந்திய சினிமா வளர்கிறது"


விரும்பாண்டி வந்த பொழுது கமல் ரசிகர் இப்படி சொன்னார் "வீட்டுக்கு போய் என் பொண்டாட்டியை மன்னிக்க போகிறேன்"


இதற்க்கு மேல் நான் சொல்லவதற்கு ஒன்றும் இல்லை

Karthik said...

நான் நாலு நாள் பதிவுலகம் பக்கமே வர முடியல. நல்ல வேளை! :))

Unknown said...

அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!

(என்ன நானே சொல்லிகிட்டேன்..??!!)

அ.மு.செய்யது said...

நச்‍சுனு சொல்லிர்க்கீங்க...!!!!

Prabhu said...

டிவி ல சொல்றதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க! இப்போ நீங்க என்னய பாத்தாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்கு நல்லா எழுதுற, இன்னும் எழுதுப்பான்னு சொல்றது இல்ல? எல்லாம் euphemism தான்!

Unknown said...

///நான் படித்தவரையில் தோழர் மாதவராஜின் இடுகைகள் மட்டுமே படத்தை நேர்மையாக, நடுநிலையோடு அணுகி இருந்ததைப் போல தோன்றியது.///

அதற்குப் பிறகு வந்த அடுத்த நடுநிலை விமர்சனம்.............. உங்களுடையது.

ஹேமா said...

கார்த்தி,இங்கேயும் சுவிஸ் திரையரங்குகளில்னு சொல்றாங்க.இப்போ என்ன பாக்கலாமா இல்ல வேணாம?

வால்பையன் said...

//ஒரு தரப்பு படத்தை கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறார்கள்.//

அதற்காக அவர்கள் கண்களை மூடி கொண்டு படம் பார்த்ததாக அர்த்தம் இல்லை!

அவர்களுக்கு உள்ளரசியல் புரியவில்லை அல்லது அதை தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள் என்று எடுத்து கொள்ளலாம்!

கண்மூடித்தனமாக என்ற வார்த்தை கண்டிக்கத்தக்கது!

ஒவ்வோருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு!
அவர்களுக்கு நம்மைப் பார்த்தால் கண்மூடித்தனமாக தெரியும்!
அதுவும் சினிமாவுகெல்லாம் போய்!

(Mis)Chief Editor said...

தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு 'பட்டர்·ப்ளை எ·பெக்ட்' என்று எதேதோ அர்த்தம் பண்ணிக்கொண்டது பொதுஜனம்! அப்போது 'காதலா, காதலா' காட்சி எங்கே போயிற்று ஐயா?!

கமல், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல!

தங்கள் பதிவு ஏற்கத்தக்கது அல்ல என்பது என் பணிவான கருத்து!
எனக்கு 'உன்னைப் போல் ஒருவன்' பிடித்திருந்தாலும்...

அத்திரி said...

mmmmmmm............ok

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்க இணையத்துல நடக்கற விமரிசனக் கூத்து, கமலைப்பத்தியோ, அவரோட படத்தைப் பத்தியோ இல்லை!

ரெண்டு கோஷ்டியாப் பிரிஞ்சு எரிந்த கட்சி நீ -நான் எரியாத கட்சின்னு லாவணி பாடற, முட்டிமோதற மன்றம் தான்!

பத்துலட்சம் ஹிட்ஸ் ஐ எட்டிய ஒரு தனிநபரின் வலைப்பூவை மேய்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பார் ஒருத்தர்! உடனே ஒருத்தர் வந்து, ப்ளீசிங் பௌடர் போட்டு, அதெல்லாம் இல்லை, சும்மா பத்து நிமிஷ வேலை தான்-மீட்டருக்குச் சூடு வைக்க அதுவே போதும்னு சொல்வார். பிரபலப் பதிவர், பிரபலமாகியே தீருவேன்னு [நம்ம வால்ஸ் மாதிரி!] அடம்பிடிக்கிற பதிவர் இப்படி ரெண்டு கோஷ்டி, வந்து மோதிக்கும்! இது சீசன் நம்பர் ஒன்!

சாருநிவேதிதா எத்தையாவது எழுத வேண்டியது! உடனே, கிண்டலடிச்சு நூறு பதிவு வரும்! ஜெயமோகன் சம்பந்தப்பட்டதா இருந்தாக்க, இன்னும் கொஞ்சம் கூட வரும்! சாரு-ஜெமோ சண்டை விமரிசனம் எழுதறது சீசன் நம்பர் டூ!

கவுஜையா எழுதறே, நானும் எதிர்க் கவுஜை படிக்கிறேன் பார்னு கெளம்புறது சீசன் நம்பர் த்ரீ! இப்ப, ஸ்ரீ ஒரு கவுஜ எழுதினாரா, உடனே, இளையகவி வந்து எங்க அத்திம்பேர் ஸ்ரீ!ன்னு எதிர்க்கவுஜ எழுதித் தீக்கறது சீசன் நம்பர் நாலு!

இதுக்கெல்லாம் நடுவுல, அத்திபூத்தாப்புல, ஒரிஜினல் சரக்கும் [வால்பையன் சரக்கு இல்லை!] படிக்கக் கிடைக்கிறது ஒன்னு தான் கொஞ்சம் ஆறுதல்!

அப்புறம், மாதவராஜுமே கூட, இன்னைக்கு எழுதின பதிவுல கொஞ்சம் தடுமாறியிருக்காருன்னு தான் தோணுது!

கிருஷ்ண மூர்த்தி S said...

சீசன் நம்பர் மூணு விட்டுப்போச்சே!

சொல்ல வேண்டாம்னு தான் ஸ்கிப் பண்ணினேன்! ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்கா எண்ணத் தெரியலன்னு, வாத்திமாருங்க பெரம்பை எடுக்கறதுக்கு முன்னாடி......

போலி டோண்டு விவகாரம்!

வருஷம் தவறாம, இது கெளம்பி கிட்டே இருக்கு!

"உழவன்" "Uzhavan" said...

//"விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.." அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!//

ஒரு சீரியஸ் பதிவிலும், கடைசியில இப்படி ஒரு ஜோக் சொல்லி சிரிக்கவைச்சிட்டீங்க கார்த்தி :-)

க.பாலாசி said...

//எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.." அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!//

இவனுங்க இப்படித்தான் தலைவா...விடுங்க...

நடுநிலையான உங்களின் இடுகை பிடிச்சிருக்கு....

சொல்லரசன் said...

//"விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.."//

ஒரு கட்சி தொண்டன் அவனது தலைவனை சொன்னால் கேட்டுகொண்டுசும்மா
இருப்பிங்க,ஆனால் ஒரு ரசிகன் ஆர்வகோளரில் சொன்னால் அதுதவறு
"அடப் போங்கடா போக்கத்தவங்களா.." இது கமல் ரசிகர்களுக்கு மட்டுமா இல்லை........அனைத்து ரசிகர்களுக்குமா?

ஈரோடு கதிர் said...

முடியல பாண்டியன்

ஒரு சினிமாவுக்கு இவங்க போடற ஆட்டம் தாங்க முடியல

உன்னைப் போல் ஒருவன்...?!!!"
உங்க தலைப்பை பார்த்து நான் உங்கள் இடுகையை திறக்கவேயில்லை... மீண்டும் பாலாஜி சொன்னதால்தான் படித்தேன்

உங்கள் கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு..

நான் படத்தை படமாக மட்டுமே பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.

அதற்குப் பின் நான் ரசிக்கும் பதிவர்களெல்லாம் கூட இந்த சினிமாவுக்காக நடந்துகொண்ட விதத்தைப் பார்த்த போது கசப்பும் வருத்தமும்தான் வந்தது..