May 12, 2010

கல்வி - வியாபாரம் - பாடாய்ப்படும் பிள்ளைகள்..!!!

என்னுடைய நெருங்கிய நண்பரவர். மதுரையில் இருக்கும் மற்றுமொரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர். நேற்று மதியம் போல எனக்கு போன் செய்திருந்தார்.

"சொல்லுங்க நண்பா.. வணக்கம்.. எப்படி இருக்கீங்க..?"

"கார்த்தி.. கார்த்தி.."

அவர் குரலில் மிகுந்த பதட்டமும் கோபமும் இருந்தது நன்றாகத் தெரிந்தது. எனக்கு பயமாகிப் போனது.

"என்னாச்சு நண்பா.. ஏதும் பிரச்சினையா? நான் கிளம்பி வரட்டா? எங்க இருக்கீங்க?"

"அதெல்லாம் ஒண்ணும் வர வேண்டாம் கார்த்தி.. என்னோட குழந்தைய ஸ்கூல்ல சேக்குறதுக்காக வந்து இருந்தேன்.. இப்போ அந்த ஸ்கூல் வாசல்ல இருந்துதான் உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.."

"என்ன நண்பா.. பிள்ளைக்கு ஏதாவது முடியலையா.."

"அவ நல்லாத்தான் இருக்கா.. இங்க ஒரு விஷயத்தப் பார்த்து எனக்குத்தான் மனசு பொறுக்கல.. வலிக்குதுப்பா.."

"என்னம்மா.. என்ன நடந்தது பொறுமையாக சொல்லுங்க.."

தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

"இது என்னோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற ஸ்கூல்தான் தலைவரே.. கொஞ்ச நாள் முன்னாடிதான் ஆரம்பிச்சாங்க.. ரொம்பப் பெரிய பள்ளிக்கூடம்னு எல்லாம் சொல்ல முடியாது.. கேள்விப்பட்ட வரைக்கும் கோச்சிங் நல்லாயிருக்குன்னு சொன்னங்க.. இந்த வருஷம் பிள்ளைய இங்க பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் சேர்க்கலாம்னு வந்தேன்.. ஆனா வந்த இடத்துல மண்ட காஞ்சு போச்சுப்பா.."

"..?"

"மொதல்ல பிள்ளைக்கு இன்டர்வியூ வைக்கணும்னு சொன்னங்க.. சரி.. ஏதோ ,பி,சி,டி சொல்ல சொல்லுவாங்கன்னு பார்த்தா அஞ்சு டெஸ்ட் வச்சாங்க.. ஐநூறு மார்க்குக்கு.. தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், அப்புறம் இன்னொண்ணு எதுவோ.. அஞ்சு வயசு பிள்ளைப்பா.. அதுக்கிட்ட போய்? இவங்க எல்லாம் மனுஷங்களா?"

"ஓஓ.. பாப்பா பரிட்சையில ஏதும் சரியா பண்ணலையா நண்பா?"

"கருமம்.. அவ அப்படி பெயிலா போகிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேனே.."

"பாப்பாதான் பாஸ் ஆகிட்டாளே.. அப்புறம் என்னண்ணே?"

"இப்போ பிரச்சினை அவ இல்லப்பா.. எம்பொண்ணு கூடவே பரிட்சை எழுதுன இன்னொரு பையன்.. பெயிலாகிட்டான்.. பச்ச மண்ணு.. அவங்க அப்பா அந்த இடத்துலயே அவனப் போட்டு அடி அடின்னு அடிச்சு.. தாங்க முடியலப்பா.. தடுக்கப் போன என்ன அவங்கப்பா ஒரே வார்த்தைல ஒதுக்கிட்டாரு.. சார் உங்க பிள்ள பாஸ் ஆகிட்டால்ல.. நான் என்ன பண்ணினா உங்களுக்கு என்னன்னு.. செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது.. அந்தப் பையன் அழுது அழுது ஓஞ்சு போய் ஓரமா உட்கார்ந்துட்டான்.. மழைல நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி.. இன்னமும் அப்படியே கண்ணுக்குள்ள நிக்கிறான்ப்பா.. அவங்கப்பா ஆட்டோ டிரைவராம்.. நாமதான் படிக்கலை நம்ம பிள்ளையாவது படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டு அது நடக்கலைன்னு தெரிஞ்சதும் பிள்ளையப் போட்டு அடிச்சுட்டு.. அப்புறம் அந்த ஆளும் அழுதுக்கிட்டே போனாரு.. மனுஷன் கெஞ்சுறாரு.. ஸ்கூல்காரங்ககிட்ட.. எவனும் கண்டுக்க கூட இல்ல.."

"வருத்தம்தாண்ணே.."

"சரியாப் படிக்காத பிள்ளைய எடுத்துக்க மாட்டாங்களாம்.. ஏன்டா.. அப்புறம் என்ன ம**த்துக்குடா பள்ளிக்கூடம்? நல்லா படிக்கிறவங்க மட்டும்தான் ஸ்கூலுக்கு எடுப்போம்னா, சொல்லி கொடுக்க நீ எதுக்கு? அவனே படிச்சுப்பானே.. அப்போ பரவாயில்லாம படிக்கிற பசங்க எல்லாம் தெருவுலதான் நிக்கணுமா? என்னடா சொல்ல வர்றீங்க?"

அத்தனையும் நிதர்சனம். என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

"இன்னொண்ணையும் கேளு.. டெஸ்ட்ல பாஸ் பண்ணினா அடுத்து பெத்தவங்கள கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.. நீங்க படிச்சு இருக்கீங்களா? வீட்டுல உங்க பிள்ளைக்கு பாடம் சொல்லித் தரமுடியுமா? ஏன்டா வெண்ணைகளா.. நாங்களே எல்லாம் சொல்லித் தரணும்னா அப்புறம் நீங்க எதுக்குடா இருக்கீங்க..? என்னையும் கூப்பிட்டு இப்படித்தான் கேட்டாங்க.. நம்ம பிள்ளைய கூட்டிட்டு வந்திருக்கோம்.. அது ஏற்கனவே அந்தப் பையன் அடி வாங்குனதப் பார்த்து பயந்து போய் கிடக்கு.. மேல பிரச்சினை பண்ணக் கூடாதுன்னு அமைதியா கேட்டுக்கிட்டு இருக்கேன்.. எல்லாத்தையும் விட பெரிய கொடுமை அதுக்கு அப்புறம் தான் நடந்தது.."

"என்னண்ணே ஆச்சு..?"

"ஸ்கூல் ஹெட்மாஸ்டர்.. கூப்பிட்டு பேசினாங்க.. உங்க பொண்ணு ரொம்ப நல்லா மார்க் வாங்கி இருக்கு.. அறிவியல்ல எம்பது.. கணக்குல தொண்ணூறு.. இங்கிலீஷ்ல அறுபத்து அஞ்சு.. தமிழ்லதான் முப்பத்து அஞ்சு.. அது ஒண்ணும் பிரச்சினை இல்ல.. பார்த்துக்கலாம்னு.. அடப்பாவிகளா.. தாய்மொழில பிள்ளைக்கு மார்க் கொறஞ்சு இருக்கு.. அத சரி பண்ணனும்னு சொன்னா அது ஒரு நியாயம்.. ஆனா அத ஒரு விஷயமாவே மதிக்காம இருந்தா..? என்ன லட்சணத்துல இருக்குதுன்னு பாரு.."

"இன்னைக்கு எல்லாமே அப்படித்தானே அண்ணே இருக்கு.. யாரு தமிழா மதிச்சு படிக்கிறா சொல்லுங்க.. நாம மட்டும் தனியா கத்திக்கிட்டு இருந்தோம்னு வைங்க.. நீங்களும் நானும் மட்டும் அப்புறம் லூசுன்னு ஆகிடுவோம்.."

"எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா.. ஏன் இப்படி? எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா அந்தம்மா ஒரு வார்த்தை சொல்லுச்சு.. இந்த ஏரியாவுலேயே நாங்கதான் கம்மியா பீஸ் வாங்குறோம்னு.. எனக்கு மயக்கமே வந்துருச்சு.. கொள்ளைக்கு இப்படி ஒரு பேரா.. பேப்பர்ல ஜோக்ஸ் படிக்கும்போது .. மத்தவங்க சொல்றபோதெல்லாம்.. எல்லாரும் மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு நினைப்பேன்.. ஆனா இன்னைக்கு அது எனக்கே நடந்து இருக்கு தலைவரே... நான் என்னோட மொத்த படிப்புக்கும் செலவு பண்ணினத பிள்ளையோட ஒரு டெர்ம் பீசா கட்ட சொல்றாங்க.. நான் பரவாயில்ல.. கொஞ்சம் பணம் வச்சிருக்கேன்.. அது இல்லாதவனோட கதி? இனிமேல் படிப்புங்கிறது காசு இருக்கிறவனுக்கு மட்டும்தானா ? நடுத்தர மக்கள், ஏழைங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க?"

""கஷ்டம்தாண்ணே.. ஆனா நாம என்ன பண்ண முடியும்?"

"இப்படியே எல்லாரும் சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி தலைவரே? அந்த சின்னப் பையன மாதிரி இந்த ஊரு பூரா அத்தனை பேரு இருப்பாங்க? அந்த ஆட்டோ டிரைவர் மாதிரி எத்தனை பெற்றோரோட கனவுகளோட இவங்க விளையாண்டுக்கிட்டு இருக்காங்க..? இந்தக் கல்வித்திட்டம் மாறணும்.. பள்ளிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு நியாயமான கட்டணம் வசூலிக்கப்படனும்.. இதுக்கெல்லாம் அந்நியனும் ஜென்டில்மேனும் வர மாட்டாங்க தலைவரே.. இப்போ என்னோட வேதனைய நான் உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன் இல்ல? இதை உங்க பதிவுல எழுதுங்க.. அதை படிக்கிறவங்கள இதைப் பத்தி எழுதச் சொல்லுங்க.. உங்க பதிவர்கள் அத்தனை பேரையும் எழுதச் சொல்லுங்க.. இதனால் என்ன மாறும்னு எனக்குத் தெரியாது.. ஆனா இந்த மாதிரியான அநியாங்கள் நடக்குதுன்னு மக்களுக்குத் தெரியவாவது வேணுமா இல்லையா?"

"கண்டிப்பா எழுதுறேன் நண்பா.. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க.. பாப்பா?"

"இந்தா கிட்டத்துலதான் நிக்குறா.. அவள இந்த ஸ்கூல்ல சேர்த்தா என்னோட நிம்மதி போயிடும்.. அதனால வேற நல்ல ஸ்கூலா.. மக்களை மதிக்கக் கூடியவங்களா.. பார்க்கணும்.."

"சரி நண்பா.. பார்த்து பத்திரமா வீட்டுக்குப் போங்க.. "

"ரைட்டு தலைவரே.. மறந்துடாதீங்க.. கண்டிப்பா எழுதுறீங்க.."

இதோ.. எழுதி விட்டேன். அவரைப் போன்ற உள்ளக்குமுறல்கள் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். ஏதோ ஒரு விடிவு பிறக்கும் என்னும் நம்பிக்கையோடு.. பிறக்க வேண்டும் என்ற ஆசையோடு.. முடிந்தால் நீங்களும் எழுதுங்கள் நண்பர்களே..!!!

29 comments:

சந்தனமுல்லை said...

Gud post!

M.G.ரவிக்குமார்™..., said...

நண்பா,இதற்கு தீர்வென நான் நினைப்பது அரசுப் பள்ளியில் நம் குழந்தைகளைச் சேர்ப்பது தான்!....இப்போது அரசுப் பள்ளிகளிலும் நல்ல முறையில் கற்றுத் தருகிறார்கள்!...நம் மக்களும் அதை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும்!...நம் மதுரையில் 5 தனியார் பள்ளிகள் அடிக்கும் கொட்டம் இருக்கிறதே சொல்லி மாளாது!......

Santhappanசாந்தப்பன் said...

"நேசன்" சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்!

தனியார் பள்ளிகள் எல்லாம் ஏதோ விஞ்ஞானிகளை உருவாக்குவது போல மாயை ஏற்படுத்தி விட்டார்கள்...

மக்கள் மாறவேண்டும்!

Balakumar Vijayaraman said...

//அவள இந்த ஸ்கூல்ல சேர்த்தா என்னோட நிம்மதி போயிடும்.. அதனால வேற நல்ல ஸ்கூலா.. மக்களை மதிக்கக் கூடியவங்களா.. பார்க்கணும்.."//

உங்கள் நண்பர் மனதில் நிற்கிறார்.என் வாழ்த்துகளைச் சொல்லவும்.

அமுதா கிருஷ்ணா said...

அரசு பள்ளிகளில் சேர்ப்பது தான் ஒரே வழி...

vasu balaji said...

10வதுல 88% வாங்கின புள்ளைய நல்ல பள்ளின்னு போய் சேர்த்தா அத கண்டுக்கிறாம 75ல கொண்டு இறக்கி விடுற கொடுமையெல்லாம் இருக்கு பாஸ்:(

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ம்ம‌ மேல‌யும் த‌ப்பு இருக்கு ந‌ண்பா

மெடிக்க‌ல்,எஞ்சினிய‌ரிங் ப‌டிக்க‌னும்னா அர‌சு க‌ல்லூரிக‌ளுக்கு முன்னுரிமை குடுக்கிறோம்,ஆனால் ப‌ள்ளி ப‌டிப்புக்கு ம‌ட்டும் த‌னியார் கிட்ட‌ தான் ஓட‌றோம்.

கிராக்கி அதிகாம‌ச்சுன்னா ரேட் ஏத்த தான் செய்வானுக‌????????

Radhakrishnan said...

எல்லாரும் எழுதி?...

பிரச்சினைகள் எல்லாம் எழுதியே தீர்ந்துரும்னு கனவு காண்பது எளிதுதான்.

எனது பையன் அரசு பள்ளியில் படிக்காதபோது இதை நான் வலியுறுத்தி எழுதினால் எனக்கும் வாழ்க்கை தர்மத்திற்கும் என்ன அர்த்தம்?

மன்னிக்கவும். பத்து வரை அரசு பள்ளி. பன்னிரண்டு முதல் தனியார் பள்ளியும் கல்லூரியும். இப்படி வாழ்ந்து சுகம் கண்ட பின்னர் ஐயோ என அலறுவது என்ன நியாயம்?

மேலும் தனியார் கல்லூரிகளை என்ன செய்வதாய் உத்தேசம்?

இதே விஷயத்தை எல்லா இடத்திலும் அணுகிப் பாருங்கள். மனம் வலிக்கத்தான் செய்யும். 'எதையும் தாங்கும் இதயம்' ... வேதனையாக இருக்கிறது.

Unknown said...

தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியம் கொடுப்பதால், ஆசிரியர்கள் கூலிக்கு மார் அடிக்கிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெற்று ஆணவத்துடன் திரிகிறார்கள். வகுப்பில் பாடம் , திறமையுடன் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் மிகக் குறைவு! பாடம் நடத்துவது என்றால்- வாசித்து செல்வது என்று கொள்க. பிள்ளைகளும், பெற்றவரும் சேர்ந்து படிக்கவிட்டால் , நிலை?
இதுவும் ஒரு கோணம் - நாம் கவலை கொள்ள!

Joe said...

தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே சிறப்பாக ஆங்கிலம் பேச முடியும், நல்ல வேலைக்கு போக முடியும் என்று நாம் நினைக்கும் வரை, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

அன்புடன் அருணா said...

இது பற்றி நிறைய எழுதலாம்...சில விதிவிலக்குகளும் உண்டு.

ஜாபர் ஈரோடு said...

\\ அந்தப் பையன் அழுது அழுது ஓஞ்சு போய் ஓரமா உட்கார்ந்துட்டான்.. மழைல நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி.. இன்னமும் அப்படியே கண்ணுக்குள்ள நிக்கிறான்ப்பா.. \\

மனசு வலிக்குது கா.பா

தருமி said...

சொல்ல நினச்சதை நம்ம பாலா சொல்லிட்டார்.//அதனால வேற நல்ல ஸ்கூலா.. மக்களை மதிக்கக் கூடியவங்களா.. பார்க்கணும்.."//
இது க்ளாஸ்.

நம்ம 'ஜாதியை' குறை சொல்றதும் நடக்குது. //ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெற்று ஆணவத்துடன் திரிகிறார்கள்// தப்பு இருக்குது.

*இயற்கை ராஜி* said...

அந்தப் மாதிரி பள்ளீகள் வேணாம்ன்னு பெற்றவர்கள் முடிவெடுத்தால் தான் இது போன்ற கொடுமைகள் குறையும்

Anonymous said...

ithula yaara nondhu kolvathu......... TN govt pottu irukka rules avadhu jeikkumanu....................

மேவி... said...

தல உங்களுக்கே தெரியும் ...எனக்கு நமது கல்வி திட்டத்தின் மீது எந்த வித மரியாதையும் இல்லை. இங்கே இருக்கும் பலரும் கல்வியை வாழ்க்கை போராட்டத்துக்கு தகுதி படுத்தும் ஒரு கருவியாக தான் பார்க்கிறார்கள்.....

கல்வி முறை பிறந்த கதை எனக்கு தெரிந்ததால் எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை......

ஜோதிஜி said...

பெற்றவர்கள் முடிவெடுத்தால் கொடுமைகள் குறையும்

சின்னப் பையன் said...

கொடுமை

நேசமித்ரன். said...

உங்கள் நண்பருக்கு என் வணக்கங்கள்

Anonymous said...

ஐயோ. அந்த குழந்தையை அப்படி போட்டு அடிப்பதா? வாசிக்கும் போதே மனம் கனக்கிறது.

Romeoboy said...

இதை எல்லாம் படிக்கும் போது பேசாம என்னோட பையன கவேர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்து விடலாம் போல இருக்கு ,

மேவி... said...

தல இதுக்கு கூட பிராண்டிங் தான் காரணம்.

இந்த பதிவுக்கு பல சப்பகட்டுகள் சொன்னாலும், நான் அந்த பிஞ்சு மனசு என்ன பாடு பட்டு இருக்கும் என்பதையே யோசிக்கிறேன்.

இன்னொரு விஷயம் அடிமைத்தனமான அறிவை வளர்க்கிற கல்வி முறைக்கா இத்தனை போட்டி என்று நினைத்தாலே கோவமா இருக்கு???


பணத்திற்கு எப்படி அடிமையகுவது ?? பணத்தை சம்பாரிக்கும் வழிகள் என்ன ??? என்ற கேள்விகள் தான் இப்படி எல்லாம் மக்களை செய்ய வைக்கிறது. அதே மாதிரி அதிக பணம் சம்பாரிப்பது தான் சாதனை என்ற நினைப்பு இருக்கும் வரைக்கும் இதையெல்லாம் மாற்ற முடியாது

Jackiesekar said...

கார்த்தி இதை பத்தி நானும் எழுதனும்னு நினைச்சி இருந்தேன்... நல்ல போஸ்ட்...

kumar said...

இதோ,ஆதங்கத்தோடு பின்னூட்டம் இடுபவர்களில் 99 % பேர் அரசு பள்ளிகளில் படித்து வந்தவர்களாகவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நாம் படித்து உருப்படாமலா போய்விட்டோம்? தனியார் பள்ளிகூடங்கள் ஒரு மாயை.பக்கத்துக்கு வீட்டுக்காரன் பிள்ளை கான்வென்ட்டில் படிக்கும்போது என் பிள்ளை ஏன் படிக்ககூடாது என்ற
என்ன ஓட்டமே தனியார் பள்ளிகளின் அராஜகத்திற்கு தூண்டுகோல்.(இதில் அம்மணிகளின் பங்கு மிகுதி) பொதி சுமக்கும் கழுதைகளாக பிள்ளைகளை மாற்றியதுதான் இவர்கள் சாதனை.பத்து வருடத்துக்கு முன் உங்கள் ஊரில் கான்வென்ட் ஆரம்பித்தவன் தான் இன்று உங்கள் ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரன்.இதை யாராலும்
மறுக்க முடியாது. அரசு பள்ளிகளின் தரம் முன்னை விட கூடியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.முக்கியமான விஷயம் படிக்க
வேண்டும் என்று நினைக்கின்ற பிள்ளைக்கு பள்ளி ஒரு பொருட்டே அல்ல.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Good Post Karthi..

But.. sad though.. :(

தயாளன் said...

நேசன்..., said...

//நண்பா,இதற்கு தீர்வென நான் நினைப்பது அரசுப் பள்ளியில் நம் குழந்தைகளைச் சேர்ப்பது தான்!....//

இதுதான் சரியான தீர்வு.

மேவி... said...

"basheer said...

இதோ,ஆதங்கத்தோடு பின்னூட்டம் இடுபவர்களில் 99 % பேர் அரசு பள்ளிகளில் படித்து வந்தவர்களாகவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்."


அண்ணே ...நான் படித்ததெல்லாம் பயங்கர பணகார கல்வி நிறுவனங்களில் தான் ....... என்னை பொறுத்த வரைக்கும் இட்லியை எங்கு சாப்பிட்டால் என்ன ..பசி போன சரி தான்

Unknown said...

/இது என்னோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற ஸ்கூல்தான்/

அப்படியே பள்ளிகூடப் பேரையும் சொல்லியிருக்கலாமே, கார்த்தி!

கார்த்திகைப் பாண்டியன் said...

//பாபு said...
அப்படியே பள்ளிகூடப் பேரையும் சொல்லியிருக்கலாமே, கார்த்தி!//

நல்ல விஷயத்துக்கு விளம்பரம் பண்ணலாம் நண்பா.. இந்த மாதிரி நாதாரிப் பய பள்ளிக்கூடத்துக்கு நாமளே ஏன் நண்பா வெட்டி வெளம்பரம் பண்ணிக்கிட்டு..