May 15, 2010

கால் முளைக்கும் கதைகளும்.. புத்தகத்தின் ருசியும்..!!!

பிரியத்துக்குரிய எஸ்ரா எழுதிய கட்டுரை ஒன்றை சமீபமாக குமுதத்தில் வாசிக்க நேரிட்டது. ஏன் நமது பள்ளிகளில் கதை சொல்வதற்கான வகுப்போ, கதை சொல்லும் கோமாளியோ இருப்பதில்லை என்கிற கேள்வியை அந்தக் கட்டுரையின் வாயிலாக எழுப்புகிறார் எஸ்ரா. யோசித்துப் பாருங்கள்.. நம்முடைய குழந்தைகளுக்கு பள்ளியில் பாடங்கள் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். விளையாட்டு, இசை, உடற்பயிற்சி என அத்தனைக்கும் நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவர்களின் தானாக சிந்திக்கும் திறனை வளர்க்க நமது பள்ளிகள் என்ன செய்கின்றன?

இன்றைக்கு இருபது முப்பது வருடங்கள் முன்பு வரை நாம் எப்படி இருந்தோம்... இரவானால் கதை கேட்காமல் தூங்கியவர்களே இருக்க மாட்டார்கள். என்னுடைய பத்தாவது வயதில் நான் குடியிருந்த சுப்புரமணியபுரம் கல்லு சந்தில் வீரையன் தாத்தா என்றொருவர் இருந்தார். அவரை நாங்கள் கதை தாத்தா என்றுதான் அழைப்போம். இரவு ஏழு மணியானால் அனைவரும் அவர் வீட்டு திண்ணையில் கூடி விடுவோம். பத்து மணி வரை கதை ஓடும். மாயமந்திரங்கள், குட்டி தேவதைகள், ராஜா ராணி, திருடன் கதை.. அவருக்குத் தெரியாத கதைகளே கிடையாது. அவரால் எப்படி இத்தனை கதைகளை ஞாபகம் வைத்து சொல்ல முடிந்தது என்று யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். முதல் நாளிரவு கேட்ட கதை மறுநாள் பள்ளியில் வேறொரு வடிவத்தில் ஒளிபரப்பாகும். ஒவ்வொரு குழந்தையின் நெஞ்சின் உள்ளே சென்று வெளிவரும்போது ஒவ்வொரு புது வடிவம் கொண்டிருக்கும்.

சில தினங்களுக்கு முன்பு என்னுடைய நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய பிள்ளைக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது. சிறிது நேரம் அதோடு விளையாடிக் கொண்டிருந்தேன். "மாமாவுக்கு ஏதாவது கதை சொல்லுங்க பார்ப்போம்" என்றவுடன் அது ஒரு கதை சொல்லத் தொடங்கியது. மனைவியின் ஆசைக்காக தன் நண்பனான குரங்கை கொல்லத் துணியும் முட்டாள் முதலையின் கதை அது. ஆனால் குழந்தை அதை வேறு விதமாக சொன்னாள். எங்கெங்கோ பயணித்து கடைசியாக தப்பு செய்த முதலையைக் குரங்கு போட்டு அடி அடியென்று அடித்ததாக கதை முடிந்தது. இதை கேட்டுக் கொண்டிருந்த நண்பரின் மனைவி குழந்தையைத் திட்ட ஆரம்பித்து விட்டார். "எத்தனை தடவை சிடிய போட்டுக் காமிச்சு இருப்பேன், இப்படித் தப்பா சொல்றியே" என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. "குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள்.. சொந்தமாக சிந்திக்க கற்றுக் கொடுங்கள்.. உண்மையில் தானாக யோசித்து அவள் இப்படி ஒரு கதை சொன்னாள் என்று நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்" என்றெல்லாம் பொறுமையாக எடுத்து சொன்ன பின்புதான் சமாதானம் ஆனார்.

கதைகள் வளர்ந்து கொண்டே போகக் கூடியவை. கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத் தனக்குள் கொண்டவை. அடைபடும் குடுவைக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொள்ளும் நீரைப்போல தான் போய்ச்சேரும் மனங்களின் எண்ணத்திற்கு ஏற்றார்போல கதைகள் உருமாற்றம் அடைகின்றன. கேட்கும் கதைகளை தங்களுக்குள் உருவகம் செய்து பார்க்கும்போது குழந்தைகள் தாங்களாகவே சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இன்றைக்கு.. கதை சொல்லவும் ஆள் இல்லை.. அதைக் கேட்பதற்கு குழந்தைகளுக்கு நேரமும் இல்லை.

சரி.. குழந்தைகளுக்கான வாசிப்பதற்கான புத்தகங்கள் என்று ஏதாவது இருக்கிறதென்றால் அதுவும் இல்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய உண்மை. தன்னுடைய குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெற்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று என்னால் அணுமானிக்க முடிவதில்லை. ஆசை ஆசையாக கம்ப்யூட்டர், விளையாட்டு சாமான்களை வாங்கித் தரும் பெற்றோர் எவரும் புத்தகங்கள் வாங்கித்தர தயாராக இருப்பதில்லை. தன்னுடைய பிள்ளைக்கு வாசிக்கும் பழக்கமே கிடையாது என்பதை பெருமையாக சொல்லும் பெற்றோர் சிலரை நான் சந்தித்து இருக்கிறேன். எங்கு போய் முட்டிக் கொள்வது?

90 - களின் இறுதி வரை குழந்தைகளுக்கான நிறைய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. குழந்தைகளுக்காக எழுதிய வாண்டுமாமா ஆசிரியராக இருந்த பூந்தளிர், பார்வதி சித்திரக் கதைகள், பாப்பா மலர், எக்கச்சக்கமான கதைகளைத் தாங்கி வந்த ரத்னபாலா, பாலமித்ரா மற்றும் விக்கிரமாதித்தனை பெரும்புகழ் கொள்ள செய்த அம்புலிமாமா கதைகள் என்று எத்தனையோ புத்தகங்கள் இருந்தன. யுவராஜா என்றவர் எழுதிய மாயாஜாலக் கதைகளை மட்டும் வெளியிட்டு வந்த கலைப்பொன்னி பதிப்பகம் இருந்த இடத்தில் இன்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் எல்லாம் அவ்வளவு பரபரப்பாக இருந்த காலமெல்லாம் இன்று மலையேறி விட்டது. வாசிக்கும் பழக்கம் குறைந்து போனதால் இவை எல்லாம் காணாமல் போயினவா? எனக்கு சொல்லத் தெரிவில்லை.

இலக்கியத்தில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே குழந்தைகளுக்கான புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. அப்படி எழுதப்படும் புத்தகங்களும் குழந்தைகளின் உலகத்தின் வாயிலாக பெரியவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளாகவே இருக்கின்றன என்பது நிதர்சனம். அவற்றைப் புரிந்து கொள்வதென்பது குழந்தைகளுக்கு கடினமானதாகவே இருந்து வருகிறது. வெகு சில புத்தகங்களே குழந்தைகளின் உள்ளத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்கள் வர வேண்டும். வாய்வழியாக சொல்லப்படும் கதைகள் ஊரெங்கும் பரவிக் கிடக்கின்றன. இதுவரை அம்மாதிரியான கதைகளை யாரேனும் தொகுத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இல்லையெனில் அதை உடனே செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும். கதைகள் மற்றும் புத்தகங்களின் ருசி அறிந்து கொண்டாலே போதும்.. குழந்தைகள் அவற்றை நன்றாகப் பற்றிக்கொண்டு விடுவார்கள்.

இவை எல்லாம் குழந்தைகளை இயல்பாக, சந்தோஷமாக வைக்ககூடிய விஷயங்கள் என்பதை பெற்றோரும் உணர வேண்டும். பள்ளிகளில் கூட.. எஸ்ரா சொன்னது போல, கதை சொல்ல ஒரு நேரத்தை ஒதுக்கலாம். குழந்தைகளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடிய கோமாளிகளும் இருக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் வளர வேண்டும். இல்லையெனில் நாளைய சமுதாயம் என்பது சாவி கொடுத்தால் இயங்கும் ஒரு இயந்திர பொம்மையாக, தானாக சிந்திக்க இயலாத ஒரு ஆட்டுமந்தைக் கூட்டமாக மாறிப் போகும் சாத்தியம் நிரம்பவே இருக்கிறது. அவ்வாறு நடக்காது என நம்புவோம்...!!!

25 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு நண்பரே.

எனக்கும் இந்தக் கேள்விகள் வருவதுண்டு.

என் மகனிற்கு எப்படி கதைகளைச் சொல்லித் தருவது என்று..

பூந்தளிரில் வரும் சுப்பாண்டி, கபீஸ் எல்லாம் நினைத்தால் இப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வெற்றி said...

நல்லா எழுதிருக்கீங்க சார்!

தருமி said...

//கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத் தனக்குள் கொண்டவை. அடைபடும் குடுவைக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொள்ளும் நீரைப்போல தான் போய்ச்சேரும் ....//

நல்ல வரிகள்.......

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல பதிவு சார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// ச.செந்தில்வேலன் said...
நல்ல பதிவு நண்பரே.எனக்கும் இந்தக் கேள்விகள் வருவதுண்டு. என் மகனிற்கு எப்படி கதைகளைச் சொல்லித் தருவது என்று.. பூந்தளிரில் வரும் சுப்பாண்டி, கபீஸ் எல்லாம் நினைத்தால் இப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

அதை எல்லாம் இப்பொ யாருமே நெனச்சு கோட பாக்குரது இல்லைங்குற வருத்தம்தான் இந்த இடுகைக்கான அடிப்படை தல..

// வெற்றி said...
நல்லா எழுதிருக்கீங்க சார்!//

நன்றி வெற்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

// தருமி said...
//கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத் தனக்குள் கொண்டவை. அடைபடும் குடுவைக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொள்ளும் நீரைப்போல தான் போய்ச்சேரும் ....//
நல்ல வரிகள்.......//

பொலம்பல்கள்தான் ஐயா..

//செ.சரவணக்குமார் said...
மிக நல்ல பதிவு சார்.//

ரொம்ப நன்றி நண்பா..

ஜெட்லி... said...

போனா மாதம் தான் எனக்கு பன்னிரண்டு வயசாச்சு...சிறுவர் மலர் தவறாமல் படிப்பேன்...!!

இப்போ இருக்குற சின்ன பசங்களுக்கு
ஆயா வடை சுட்ட கதை தெரியமானு கூட எனக்கு தெரியல...!!

அத்திரி said...

வர வர புரொபசர் ரொமப் பாசக்கார ஆளா மாறிட்டு வாராரே ( குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவா இருக்குதே)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
போனா மாதம் தான் எனக்கு பன்னிரண்டு வயசாச்சு...சிறுவர் மலர் தவறாமல் படிப்பேன்...!!இப்போ இருக்குற சின்ன பசங்களுக்கு ஆயா வடை சுட்ட கதை தெரியமானு கூட எனக்கு தெரியல...!!//

அது கூட யாரும் இப்போ படிக்கிறது இல்லையே நண்பா.. அதுதான் வருத்தமே

//அத்திரி said...
வர வர புரொபசர் ரொமப் பாசக்கார ஆளா மாறிட்டு வாராரே ( குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவா இருக்குதே)//

சே சே.. நான் பச்ச மண்ணுண்ணே.. என்னப் போயி.. ஹி ஹி ஹி

மேவி... said...

ஆமாங்க குழந்தைகளிடமிருந்து அவர்களுடைய நேரத்தை நாம் தெரிந்தே திருடி விடுகிறோம் ....... வருங்காலத்தில் பொருளாதாரம் வளரும் போது இதை விட கொடுமை எல்லாம் நடக்கும்.....

மேவி... said...

குழந்தைகள் கதை சொன்னால் அதை பொறுமையாய் கேட்கவும் ரசிக்கவும் இன்றைய பெற்றோர்களுக்கு நேரம் இருப்பதில்லை. பிறகு அதுல அவர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை

மேவி... said...

குழந்தைகளுக்கான புத்தகங்கள் வருகிறது...ஆனால் அதோட விலை தான் அதிகம்

மேவி... said...

தல, ஜெயமோகன் கூட குழந்தைகளுக்குன்னு ஒரு புக் எழுதிருக்கார்ல ..

கார்த்திகைப் பாண்டியன் said...

@மேவீ

//குழந்தைகள் கதை சொன்னால் அதை பொறுமையாய் கேட்கவும் ரசிக்கவும் இன்றைய பெற்றோர்களுக்கு நேரம் இருப்பதில்லை. பிறகு அதுல அவர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை//

:-((((

//தல, ஜெயமோகன் கூட குழந்தைகளுக்குன்னு ஒரு புக் எழுதிருக்கார்ல ..//

பனி மனிதன் நண்பா..

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/button.html

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

Unknown said...

/பிரியத்துக்குரிய எஸ்ரா எழுதிய கட்டுரை ஒன்றை சமீபமாக குமுதத்தில் வாசிக்க நேரிட்டது./

அதன் தொடர்ச்சிபோல் ஓர் உணர்வு. நல்ல பதிவு.

சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'கதை நேரம்' சொல்லி என் பிள்ளையோட நேரத்தை வீணாக்கதீங்கனு 'சண்டை'க்கு வந்த கதையை சொன்னார்.

எங்க போய் 'முட்டிகிறது'? ;(

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Thalaivan.com

நன்றிங்க.. இணைக்க முயற்சி பண்றேன்

@ பாபு

//அதன் தொடர்ச்சிபோல் ஓர் உணர்வு. நல்ல பதிவு.//

ரொம்ப நன்றி நண்பா

//சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'கதை நேரம்' சொல்லி என் பிள்ளையோட நேரத்தை வீணாக்கதீங்கனு 'சண்டை'க்கு வந்த கதையை சொன்னார். //

எது சரி எது தப்புன்னு பெற்றோர் உணர மறுக்குரது தான் பிரச்சினை நண்பா

vasu balaji said...

ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கான படம் போட்ட அல்லது அவர்களுக்கு புரியக்கூடிய புத்தகம் தேடி அலுத்ததுதான் மிச்சம். :(

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கான படம் போட்ட அல்லது அவர்களுக்கு புரியக்கூடிய புத்தகம் தேடி அலுத்ததுதான் மிச்சம். //

இந்த நிலை மாறணும் பாலா சார்

நாடோடி இலக்கியன் said...

அருமையான அவசியமான பதிவு நண்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ நாடோடி இலக்கியன்

நன்றி தல

King Viswa said...

//யுவராஜா என்றவர் எழுதிய மாயாஜாலக் கதைகளை மட்டும் வெளியிட்டு வந்த கலைப்பொன்னி பதிப்பகம் இருந்த இடத்தில் இன்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது//

நண்பரே,

இரண்டு விஷயங்களும் திருத்தப்பட வேண்டியவை.

யுவராஜா என்றவர் எழுதிய மாயாஜாலக் கதைகளை மட்டும் வெளியிட்டு வந்த கலைப்பொன்னி பதிப்பகம் = கலைப்பொன்னி பதிப்பகம் தான் தமிழில் காமிக்ஸ்களை / தமிழ் கதைகளை முதலில் வெளியிட்டவர்கள். முன்னோடிகள் என்று கூட சொல்லலாம். அவர்கள் பொன்னி காமிக்ஸ் என்று காமிக்ஸ் கதைகளுக்கே புகழ் பெற்றவர்கள். இந்த யுவராஜா மந்திரக்கதைகள் பின்னாளில் வந்தவை ஆகும். இதைத் தவிர மலர் காமிக்ஸ், ஸ்டார் காமிக்ஸ் என்று பலவற்றையும் வெளியிட்டவர்கள் அவர்கள்.

கலைப்பொன்னி பதிப்பகம் இருந்த இடத்தில் இன்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது = கலைப்பொன்னி அதே SMR ஷாப்பிங் காம்ப்ளெக்சில் தான் இருக்கிறது. முதல் மாடியில். அநேகமாக அடுத்த மாதம் அவர்கள் இடம் மாறக்கூடும். வேறு இடம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

தகவல்களுக்கு நன்றி விஸ்வா சார்..:-)))

King Viswa said...

வேற ஒண்ணுமில்ல சார், போன வாரம் தான் மதுரைக்கு வந்தேன். அதான்..............

King Viswa said...

உங்களுக்கு பூந்தளிர் பற்றிய தகவல் வேண்டுமெனில் இந்த வலைத்தளம் சென்று பார்க்கவும்: http://ayyampalayam.blogspot.com/