June 24, 2010

சொர்க்கமும் நரகமும்..!!!

அவன் அந்த ஊர்லையே பெரிய போர்ப்படைத் தளபதி. தன்னோட ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருக்கார்னு கேள்விப்பட்டு அவரை பார்க்குறதுக்குப் போனான். ஒரு ஆலமரத்துக்கு அடியில சாமியார் ஜம்முன்னு உக்கார்ந்து இருந்தார். சுத்தி நிறைய மக்கள் கூட்டம். தளபதி மரியாதைக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு தன்னோட சந்தேகத்தைக் கேட்டாரு.

"ஐயா.. சொர்க்கமும் நரகமும் உண்மையிலேயே உலகத்துல இருக்குதா?"

"நீ என்னப்பா தொழில் பண்ற?" சாமியார் திருப்பிக் கேட்டாரு.

என்னடா இது.. நாம ஒண்ணு கேட்டா சாமியாரு நம்மள சம்பந்தமே இல்லாம வேற எதையோ கேக்குறாருன்னு தளபதிக்குக் குழப்பம்.

"நான் ஒரு படைத்தளபதிங்க.."

"உன்னைய எல்லாம் எவன்யா தளபதின்னு நம்புவான்.. ஆளு பார்க்க ஆடு திருடுறவன் மாதிரி இருக்க.. ஹே ஹே ஹே.."

"யாரைப் பார்த்து என்னய்யா சொன்ன.. இப்பவே உன்ன வெட்டிக் கூறு போடுறேன் பாரு.." உறுமினான் தளபதி.

"அதேதான்.. நீ கேட்டில.. நரகத்தின் கதவு.. அது இப்போ இங்கே உனக்காகத் தொறந்து கிடக்கு.." அமைதியாக சாமியார் சொன்னார்.

தளபதிக்கு தன்னோட ஆத்திரம் தப்புன்னு புரிஞ்சது. சட்டுன்னு சாமியார் கால்ல விழுந்துட்டான்.

"ஐயா.. புரிஞ்சுக்கிட்டேன்.. மன்னிச்சுடுங்க.. என்னோட அகந்தைல கண்ணு மண்ணு தெரியாம பேசிட்டேன்.."

"நல்லது.. இப்போ உனக்காக சொர்க்கத்தின் வாசல் தெரிஞ்சிருக்குமே.."

ஒரு கணம் தோன்றி மறையும் எண்ணத்தில்தான் நன்மையையும் தீமையும் உறைந்திருக்கின்றன.

***************

நாலு சாமியாருங்க சேர்ந்து ஒரு சத்தியம் பண்ணுனாங்க. "ஏழு நாளைக்கு ஒண்ணுமே பேசாம தியானம் பண்ணனும். ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.." அப்படின்னு. சொன்ன மாதிரி ஒரு தனி அறைல வெறும் மெழுகுவர்த்திகள மட்டும் ஏத்தி வச்சுட்டு தியானத்துல உக்கார்ந்தாச்சு.

மொத நாள் முடியப் போற சமயம்.. பயங்கர காத்துக்கு மெழுகுவர்த்தி எல்லாம் படபடன்னு எரிய ஆரம்பிச்சது.

"அய்யய்யோ.. மெழுகுதிரி அணைஞ்சிடும் போல இருக்கே.." ஒருத்தர் பொலம்ப ஆரம்பிச்சுட்டார்.

உடனே இன்னொருத்தர் கோபத்தோட சொன்னாரு.." மறந்துட்டியா? நாம இப்ப பேசக்கூடாது.."

அடுத்தவரு.. "ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க"ன்னு மூஞ்சிய சுழிச்சாரு.

கடைசி ஆளு மட்டும் சும்மா இருப்பாரா? "ஹா ஹா ஹா.. அப்பாடா.. நான் மட்டும்தான் கடைசி வரைக்கும் எதுவுமே பேசல"

அடுத்தவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது, எப்போதுமே அந்தத் தவறை நாமும் செய்யக்கூடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

***************

கண்பார்வையில்லாத ஒருத்தன் தன்னோட நண்பனோட ஊருக்குப் போயிருந்தான். கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடி ஊருக்குக் கிளம்பும்போது, நண்பன் அவன்கிட்ட ஒரு லாந்தர் விளக்கக் கொடுத்து, அதை எடுத்துட்டுப் போகும்படி சொன்னான்.

கண்ணு இல்லாதவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான்.. "எனக்கு வெளிச்சமும் இருட்டும் ஒண்ணுதானே நண்பா.. எனக்கு எதுக்கு இது?"

"அப்பு.. அது எங்களுக்கும் தெரியும்.. ஆனா இது இல்லாம நீ இருட்டுல போறேன்னு வையி.. வழியில வர யாராவது உம்மேல மோதிட்டா? அதுக்குத்தான்" அப்படின்னு சொல்லி விளக்கக் கொடுத்து விட்டான் நண்பன்.

சமாதானமா லாந்தர் விளக்க வாங்கி, அதை தனக்கு முன்னாடி தூக்கி பிடிச்சுக்கிட்டு கிளம்பினான் அந்தப் பார்வை இல்லாதவன். சித்த தூரத்துலையே எதிர்த்தாப்பிடி வந்த ஒருத்தன் மேல மோதிட்டான். அவனுக்கு பயங்கர கோபம்.

"என்னய்யா ஆளு நீ? மூஞ்சிக்கு முன்னாடி ஒரு விளக்கு எரியறது கூடவா உனக்கு தெரியாது?"

"தம்பி.. உங்க விளக்கு அணைஞ்சு ரொம்ப நேரம் ஆகிடுச்சு போல.." அமைதியா சொல்லிட்டு எதிர்ல வந்தவன் போய்ட்டான்.

மற்றவர்களுக்கு ஞானம் அளிக்க அடுத்தவரின் கருத்துக்களைப் பயன்படுத்துவது, கண்பார்வையற்றவன் கைவிளக்கேந்திப் போனது போலத்தான்.. வழியில் விளக்கு அணைந்து போகலாம். அது ஒருபோதும் தெரியாது.

***************

யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் புத்தகத்தை வாங்குவதற்காக "அகல்" பதிப்பகத்தை தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். சென்னையில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு குட்டி காம்பவுண்டுக்குள் ஒரு சின்ன வீடு. அதுதான் வீடு. அதுதான் அலுவலகம். நான்கைந்து புத்தகங்கள் சேர்த்து வாங்கினேன். பதிப்பக உரிமையாளர் நான் மதுரையில் இருந்து வருவதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் வாங்கிய புத்தகங்களோடு பரிசாக "ஜென் கதைகள்" என்ற புத்தகத்தையும் அன்பளிப்பாகத் தந்தார். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அதற்கான பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். "அவ்ளோ தூரத்துல இருந்து புத்தகம் வாங்க வந்திருக்கீங்க.. உங்களுக்கு இது கூட செய்யலைன்னா எப்படி?" அத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் புத்தகங்களை, வாசகர்களை நேசிக்கும் இது போன்ற மக்கள் இருக்கும்போது இலக்கியம் கண்டிப்பாக வாழும் என்றே நம்ப முடிகிறது.

ஜென் கதைகள்
தமிழில்: சேஷையா இரவு
வெளியீடு: அகல் பதிப்பகம்
விலை: ரூ.60

15 comments:

Robin said...

//அத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் புத்தகங்களை, வாசகர்களைநேசிக்கும் இது போன்ற மக்கள் இருக்கும்போது இலக்கியம் கண்டிப்பாகவாழும் என்றே நம்ப முடிகிறது.// உண்மை.
புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பது அவசியம்.

Raju said...

என்ன சொல்றீங்க..?
நான் ரெடி!
அட்மிஷன் நடைபெறுகிறதுன்னு ஒரு போர்டோட, ஆஸுரமம் போட்ருவோமா..?

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

சென்ஷி said...

நல்ல இடுகை..

***

மஞ்சள் வெயில் வாசிச்சிட்டு உங்க விமர்சனப் பார்வை படிக்க ஆவலுடன் இருக்கோம்.

வேறு என்னென்ன புத்தகங்கள் வாங்குனீங்க?

Thomas Ruban said...

அருமையான பதிவு,பகிர்வுக்கு நன்றி சார்.

அத்திரி said...

புரொபசர் சொன்னா கேட்டுக்கனும்.....

சரிங்க வருங்கால டாக்டரே

அத்திரி said...

//♠ ராஜு ♠ said...
என்ன சொல்றீங்க..?
நான் ரெடி!
அட்மிஷன் நடைபெறுகிறதுன்னு ஒரு போர்டோட, ஆஸுரமம் போட்ருவோமா..?
//

இடமும் பாத்தாச்சு ராஜூ புரொபசர் தலையாட்டினால் ஆரம்பிச்சிடலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Robin said...
உண்மை.புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பது அவசியம்.//

நிச்சயமா நண்பா.. நன்றி

//♠ ராஜு ♠ said...
என்ன சொல்றீங்க..? நான் ரெடி!
அட்மிஷன் நடைபெறுகிறதுன்னு ஒரு போர்டோட, ஆஸுரமம் போட்ருவோமா..?//

ஏய்.. நான் நல்லவன்ப்பா..

// rk guru said...
அருமையான பதிவு வாழ்த்துகள்..//

நன்றிங்க.. உங்க பதிவையும் படிச்சாச்சு..

sudharsan said...

நீங்கள் சொன்ன கருத்துகள் அத்தனையும், உண்மைதான். புத்தகம் படிப்பதும், கதைகள் கேட்பதும் இப்பொது குறைந்துதான் விட்டது.அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//சென்ஷி said...
மஞ்சள் வெயில் வாசிச்சிட்டு உங்க விமர்சனப் பார்வை படிக்க ஆவலுடன் இருக்கோம்.//

கூடிய சீக்கிரம் எழுதுறேன் நண்பா

//வேறு என்னென்ன புத்தகங்கள் வாங்குனீங்க?//

வில்லியம்சின் யானைக்கூட்டம் மற்றும் யூமாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்கள்

// Thomas Ruban said...
அருமையான பதிவு,பகிர்வுக்கு நன்றி சார்.//

நன்றிங்க..

//அத்திரி said...
புரொபசர் சொன்னா கேட்டுக்கனும்..... சரிங்க வருங்கால டாக்டரே//

அதானே.. எங்கடா ஓட்டுறதுக்கு ஆளக் காணோமேன்னு பார்த்தேன்..

//இடமும் பாத்தாச்சு ராஜூ புரொபசர் தலையாட்டினால் ஆரம்பிச்சிடலாம்//

கூட்டணி வேறயா? வெளங்கிடும்..

சொல்லரசன் said...

//மற்றவர்களுக்கு ஞானம் அளிக்க அடுத்தவரின் கருத்துக்களைப் பயன்படுத்துவது,//

வேலமரத்து வாத்தியாரே இது உங்களுக்கும்தானே!!!!!!!!

"உழவன்" "Uzhavan" said...

அருமையான கதைகள் நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் கார்த்திகை பாண்டியன்,.. புதிய டெம்பிளேட்க்கு மாறியாச்சா.... வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

கதைகள் அனைத்தும் அருமை...

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
வேலமரத்து வாத்தியாரே இது உங்களுக்கும்தானே!!!!!!!!//

காணாமல் போனவர்னு அறிவிப்பு கொடுக்கலாம்னு இருந்தேன் தலைவரே..:-))

// "உழவன்" "Uzhavan" said...
அருமையான கதைகள் நண்பா..//

நன்றி நண்பா

//ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் கார்த்திகை பாண்டியன்,.. புதிய டெம்பிளேட்க்கு மாறியாச்சா.... வாழ்த்துகள்//

வணக்கம் நண்பா.. கொஞ்சம் புதுசா மாத்தி பார்ப்போம்னுதான்..:-))
//ஆ.ஞானசேகரன் said...
கதைகள் அனைத்தும் அருமை...//

நன்றி தல..