February 18, 2011

நினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் (2)

நினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் (1)

சிம்லாவில் இருந்து ஊருக்குத் திரும்பும் வழியில் சென்னையில் ஹால்ட். மதுரை செல்லும் டிரைனுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்ததால் ஊர் சுற்றலாம் என முடிவு பண்ணிக் கிளம்பியானது. தனியாக சுற்றக் கிளம்பியவன் நேராக எக்மோருக்கு முன்பாக இருக்கும் ஒரு குட்டி கேசட் கடையின் வாசலில் போய் நின்றேன். மரத்தாலான ஒரு பலகையில் கேசட்டுகளை பகுதி வாரியாகப் பிரித்து அழகாக அடுக்கி இருந்தார்கள். நான் வெகு நாட்களாக ஆசையாக கேட்டுக் கொண்டிருந்த "சாஜன் சலே சசுரால்" (ஹிந்தி வீரா) கேசட்டும் அதில் இருந்தது.

அப்போதெல்லாம் கேசட்டின் விலை முப்பது ரூபாய்தான். ஆனால் அதை வாங்கக்கூட என்னிடம் காசு கிடையாது. அன்று நடந்தது என்ன, எப்படி என்பது இன்று வரை எனக்குப் புரியவில்லை. கேசட்டுகளை வாங்குபவன் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் கடைக்காரர் அசந்த வேளையில் அந்தக் கேசட்டை எடுத்து பேன்ட் பைக்குள் போட்டு விட்டேன். பிறகு எதுவுமே தெரியாதவன் போல கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினேன். இரண்டு அடிதான் நடந்திருப்பேன்.

"தம்பி நில்லுங்க.." எனக்கு பகீரென்றது.

" இங்க ஒரு கேசட் குறையுது.. எடுத்தீங்களா..?"

"இல்லண்ணே.."

சந்தேகத்தோடு நெருங்கி வந்தவர் என்னை சோதனை செய்வதாக பாக்கெட்டுக்குள் கை விட்டால் அங்கே கேசட்.

"பளார்ர்.." அவர் விட்ட அறையை என்னால் இப்போதும் உணர முடிகிறது. திக்பிரம்மை பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தேன்.

"இந்த வயசுலேயே திருட்டு வேண்டிக் கிடக்குதா.. பரதேசி.. காசு குடுத்து கேசட்ட எடுத்துட்டுப் போடா.."

என்னிடம் காசு இல்லை என்று சொன்னால் அவர் நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை. ஏற்கனவே ஒரு மணி நேரம் ஆகி விட்டிருந்தது. சீக்கிரம் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும் இல்லையென்றால் வீட்டில் தேட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி யாரும் தேடிக் கொண்டு வந்து நான் திருடி மாட்டியது தெரிந்து விட்டால் அது இன்னும் அசிங்கம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுதபடியே கடையின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அப்போது யாரென்றே தெரியாத ஒரு பெரியவர் என்னருகே வந்தார்.

"ஏம்ப்பா இந்த சின்னப்பையன் அழுதுக்கிட்டு இருக்கான்." (அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன் என்பதை நினைவில் கொள்க..)

கடைக்காரர் நடந்ததை சொன்னார். பொறுமையாகக் கேட்டவர் பணத்தைக் கொடுத்து அந்தக் கேசட்டை வாங்கி என்னிடம் தந்தார்.

"என்னைக்கும் திருடுறது தப்புப்பா.. பணம் இல்லன்னா வாங்காமக் கூட இருந்திடலாம். ஆனா தெரியாம எடுக்கக் கூடாது.. சரியா..?"

என் வாழ்வில் நான் தெளிந்த ஒரு முக்கியமான நாள் அது. நெருப்பைத் தொட்டால் சுடும் என்பதை தொட்டு நான் தெரிந்து கொண்ட நாள். முகம் தெரியா அம்மனிதருக்கு இந்நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் பின்பு கேசட்டுகளின் மீதான காதல் இன்னும் அதிகமானது. நியாயமாக காசு சேர்த்து வாங்க வேண்டுமென வீட்டில் கொடுக்கும் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் காசுகள் எல்லாவற்றையும் மிச்ச்சப்படுத்தத் தொடங்கினேன். முப்பது ரூபாய் சேர்ந்தால் ஒரு கேசட். அது பெரும்பாலும் ஹிந்தி பாப் பாடலாகத்தான் இருக்கும். தலேர், பாபா சேகல், பங்கஜ் உதாஸ், அத்னான் சாமி, லக்கி அலி என்று பிரியமானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது.

தமிழில் ஒரிஜினல் கேசட் வாங்குவேன் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே. பாடல்கள் வெளியாகும் தினமே வாங்கி விடுவேன். கேட்டு வாங்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. ரகுமான் என்றால் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அவ்வளவே.. முப்பது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த கேசட்டுகளின் விலையை ஏற்றி விட்ட பெருமையும் ரகுமானுக்கே. முதல் முதலாக ஜீன்ஸ் கேசட்டை நாற்பத்து ஐந்து ரூபாய்க்கு விற்றார்கள். (கூடவே ஒரு ட்ரிக்கர் ஜீன்ஸ் ஆபெரோடு..) பின்பு வந்த வந்தே மாதரம் அறுபது ரூபாய் என ஒரேடியாக ஹை-டெக்கானது.

நான் பாட்டு கேட்க வந்த காலத்தில் ராஜாவின் அலை ஓய ஆரம்பித்திருந்தது. எனவே அவருடைய பழைய பாடல்கள் எல்லாம் ரெக்கார்டிங் தான். கல்லூரியில் வார்டனுக்குத் தெரியாமல் வைத்திருந்த பிளேயரில் ராவெல்லாம் எங்களைத் தாலாட்டி தூங்க வைப்பது இளையராஜாதான். ஒரு 90 கேசட் நிறைய மெலடி பாடல்களாக போட்டு விட்டால் போதும். ராத்திரி பூராவும் ஓடிக் கொண்டே இருக்கும்.

இது தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு இசையமைப்பாளர் வித்தியாசாகர். அவருடைய பாடல்கள் மற்றும் ஹிந்தி படப்பாடல்கள் எல்லாம் 15 ரூபாய் ட்யூப்ளிகட் கேசட்டாக வாங்கி விடுவேன். நல்ல பாட்டு போட்டால் சரியாகப் பாடாத எங்கள் வீட்டு டெல்லி செட் டேப் ரெக்கார்டர் (பிறிதொரு டெல்லி பயணத்தில் வாங்கியது) இந்த கேசட்டுகள் என்றால் ஜம்மென்று பாடும். டவுன் ஹால் ரோட்டில் இருந்த ஒரு தள்ளு வண்டிக் கடையில் அந்தக் கேசட்டுகளை வாங்குவேன். பதினைந்து வருடங்களாக இந்தக் கடையை நடத்தி வரும் அக்காவுக்கு மாறுகண். அவரும் காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறி இப்போது அதே இடத்தில் சி.டி. கடை போட்டிருக்கிறார்.

1996 -2000 .. இதுதான் நான் ரொம்பத் தீவிரமாக கேசட்டுகள் வாங்கிய காலம். மிகச்சரியாக 2000 ஆம் ஆண்டு நெருங்கி வந்த நேரத்தில் ஹிந்தியில் ரீமிக்ஸ் என்னும் அரக்கன் புகுந்து பாப் உலகத்தைக் கிழித்துப் போட்டான். அத்தோடு சி.டி மற்றும் இணையத்தின் வீச்சு அதிகமாகத் தொடங்கிய நேரமும் அதுதான். மெதுமெதுவாக என் கேசட்டுகள் வாங்கும் வேகம் குறைய ஆரம்பித்தது. கடைசியாக வாங்கியது 2006 வாக்கில் என நினைக்கிறேன். அத்னான் சாமியின் "கிசி தின்" ஆல்பமும் கைலாஷ் கேரின் "கைலாச"வும் வாங்கினேன்.

2008 கொங்கு கல்லூரியில் வேலை பார்த்தவரை பிளேயரில் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தேன். மதுரை வந்து கொஞ்ச நாட்களில் டேப் ரிப்பேராகிப் போக மொத்தமாக எல்லாம் முடிந்து போனது. கேசட்டுகளை எல்லாம் ஒரு பையில் போட்டு பரணில் ஏற்றி விட்டாயிற்று. அந்தப் பையைத்தான் இப்போது தேடி எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே சொல்ல முடியாத துயரம். எளிதில் கிடைக்காத எத்தனையோ பாடல்கள் இந்தக் கேசட்டுகளில். ஏன் இவற்றை இப்படிப் போட்டு வைத்திருக்கிறேன்? மீண்டும் டேப்பை சரி செய்து கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் இதை எல்லாம் ரிப்பேர் வேலை பார்க்கும் கடைகள் இன்னும் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

காலம் நம் கண்முன்னே நிறைய விஷயங்களை கலைத்துப் போட்டிருக்கிறது. நாம் பொக்கிஷமாக நம்பிய சில விஷயங்கள் ஒன்றும் இல்லாததாக மாறிக் கொண்டிருக்கின்றன. அதில் இந்த கேசட்டுகளும் உண்டு. இன்னும் கொஞ்ச வருடங்களில் இவை சுத்தமாக இல்லாமலும் போகலாம். எனினும், என்னைப் போல ஒரு சில நண்பர்களின் மனதில், எப்போதும் இந்த ஒலிநாடாக்கள் நினைவுகளின் வழியே சுழன்று கொண்டேயிருக்கும்.

பின்குறிப்பு: இது என்னுடைய முன்னூறாவது பதிவு. சிறுபிள்ளை விளையாட்டென ஆரம்பித்த இந்தப் பதிவு இத்தனை தூரம் வந்திருக்கிறது எனில் அது உங்கள் அனைவரின் அன்பாலும் ஆதரவாலும்தான். நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்தநன்றிகள்.

15 comments:

vasu balaji said...

300ஆவது இடுகைக்கு வாழ்த்துகள் கா.பா.:)

King Viswa said...

மூன்னூறு அடித்தமைக்கு வாழ்த்துக்கள். மூவாயிரமாக மாறவும் வாழ்த்துக்கள்.


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

Unknown said...

300க்கு வாழ்த்துகள் கா.பா. :-))

Senthil said...

keep going!

senthil,doha

siva said...

congratulations for your 300th blog

செ.சரவணக்குமார் said...

மிக மிக அருமையான பதிவு கா.பா. இத்தனை அனுபவங்களையும் நேர்மையாக எழுத்தில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

300 க்கு வாழ்த்துகள் நண்பா.

குமரை நிலாவன் said...

300 க்கு வாழ்த்துகள் நண்பா

தருமி said...

//மீண்டும் டேப்பை சரி செய்து கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது.//

செஞ்சிருவோம்!

இளங்கோ said...

300க்கு வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் கார்த்திக் சார்!!!

மேவி... said...

300 க்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே ....

திருட்டு - கண் முடி யோசித்தால் சிறுவயதில் நான் செய்த இரண்டு திருட்டுகள் தான் ஞாபகம் வருகிறது. ஓன்று, தள்ளு வண்டியில் கடலை விற்று கொண்டு இருந்த ஆளிடம் திருடி மாட்டிகொண்டது (ஒன்றாவது படித்து கொண்டிருந்தேன்). இரண்டாவது கண்காட்சியில் நண்பனோடு சேர்த்து பேனா திருடியது(ஐந்தாவது படித்து கொண்டிருந்தேன்).

வளர்த்த பிறகு, கல்லூரி காலத்தில் பல திருட்டு வேலைகள் செய்திருக்கிறேன் .....

(பிறகு இந்த இடுக்கையில் எங்கையோ பிசுறு தட்டுது )

அத்திரி said...

வாழ்த்துக்கள் வாத்தியாரே...............

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி..:-))

ஹேமா said...

வாழ்த்துகள் கார்த்தி.
சுகம்தானே.நினைவுகளை அள்ளியெடுத்துப் பகிர்ந்துகொண்டிருக்கிறீங்க.மனசில இருக்கிறதை எழுத்தில பதிஞ்சு வைக்கிறது நல்லது.300 ஆவது பதிவுக்கும் வாழ்த்து !

Sasikumar B said...

I feel the same when i see any floppy disks , My niece has created a small dust bin box using my floppy collections, Some of them may still work, but i dont have any floppy drive to read them.