March 31, 2009

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!!

"காதல்.. காதல்.. காதல்.. காதல் போயின்... சாதல்.. ". இன்னைக்கு வேலைக்கு போகாத இளைஞர்கள் கூட இருக்காங்க.. ஆனா காதலிக்காத மக்கள் இருக்குற மாதிரி தெரியல.. காதல் இன்னைக்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஆகிடுச்சு. எனக்கு ஒரு ஆள் இருக்குடான்னு சொன்னாத்தான் மரியாதை. காதலிக்கறது பெரிசில்லை.. காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலையும் ஜெயிக்கணும்.. காதல் செய்யும் நண்பர்கள் உங்களோட காதலிகளை சந்தோஷமா வச்சுக்க சில யோசனைகள்..



----- > காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேகஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.


---- > காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..



----> காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..



---- > உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..



---- > காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..



---- > முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..



---- > ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..



---- > உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..



---- > உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..



---- > கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..


நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 29, 2009

ரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 2)!!!

(பாகம் - 1 படிக்க இங்கே க்ளிக்கவும்.... )
பொறியியல் கல்லூரிகளில் பிளேஸ்மென்ட் எப்படி நடக்கிறது? ஒரு கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ECE, EEE, EIE, CSE, IT என்று பல துறைகள் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் எங்கே வேலையில் உள்ளார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.. அது IT துறையாகத்தான் இருக்கும். எங்கள் கல்லூரிக்கு செமினார் கொடுக்க வந்த மனிதர் ஒருவர் நொந்து போய் சொன்னார்.. "எல்லாருக்குமே IT வேலை என்றால் காலேஜில் இத்தனை துறைகள் எதற்கு..?"

வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களின் மிகப் பெரிய பிரச்சினை.. ஆள் பற்றாக்குறை. எனவே அவர்கள் தங்களுடைய வேலைகளை இந்தியா போன்ற மனிதவளம் பொருந்திய நாடுகளில் ஒப்படைக்கிறார்கள். அத்தோடு இன்னொரு முக்கியமான காரணம், அமெரிக்காவில் ஒருவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் இங்கே ஐந்து இந்தியர்களிடம் வேலை வாங்கலாம். இந்த சூழல் 2003 - 2004 வாக்கில் தொடங்கியது.


இப்போது இந்தியக் கம்பனிகளுக்கு வெளிநாட்டில் இருந்து ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும் என்றால் நிறைய ஊழியர்களை கணக்கு காட்ட வேண்டும். அத்தனை பேருக்கு எங்கே போவது? அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் பொறியியல் கல்லூரிகள். எல்லா பெரிய கல்லூரியும் ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பனியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போட்டுக் கொள்ளும். வருடா வருடம் இத்தனை மாணவர்களை கம்பனிகள் பிளேஸ்மென்ட் என்ற பெயரில் எடுத்துக் கொள்வார்கள். அதற்கு பலனாக கல்லூரி கம்பனிக்கு ஏதாவது செய்ய வேண்டும். இப்போது எங்கள் கல்லூரியில் நூறு சதவிகிதம் பிளேஸ்மென்ட் என்று விளம்பரம் செய்யும் பொறியியல் கல்லூரிகள், அட்மிஷன் நேரங்களில் வேண்டுமளவு டொனேஷனை மாணவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வதுதான்.


இப்போ ரெஷசன் காரணமா இந்த பிளேஸ்மென்ட் சக்கையா அடி வாங்கி இருக்கு. குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் 2008ஆம் வருடம் தங்கள் படிப்பை முடித்த மாணவர்கள்.போன வருடம் எனது துறையில் மொத்தம் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை நாற்பத்து ஐந்து. அதில் முப்பது ஒன்பது பேர் கல்லூரியில் படிக்கும்போது ஜூன் 2007யிலேயே வேலைவாய்ப்பு பெற்றவர்கள். எல்லாமே முன்னணி சாப்ட்வேர் கம்பனிகள். (பிரச்சினை என்பதால் பெயர்களை சொல்லவில்லை). ஆனால் மூன்றே பேரைத் தவிர மற்றவர்கள் வேலைக்கு சேர அழைக்கப் படவில்லை. இந்த வருஷம் பாதி பேருக்கு மேல இன்னும் வேலை கிடைக்காமத்தான் இருக்காங்க..


சமீபத்தில் எங்கள் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு வரும்படி அழைத்தபோது நெறைய பேர் முடியாது என்று மறுத்து விட்டனர். வேலையில் சேராமல் எப்படி வருவது என்று சங்கடம். அப்புறம் எல்லாரையும் சமாதானம் செய்து வர வைத்தோம். வந்தவர்கள் எல்லாம் தங்கள் சோகத்தை சொன்னபோது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரே ஒரு மாணவரை பற்றி மட்டும் சொல்கிறேன்..அவருடைய வார்த்தைகள் இவை... "நான் கிராமத்தை சேர்ந்தவன். அப்பா கடன் வாங்கி படிக்க வைச்சார். ஒண்ணுக்கு ரெண்டு வேலை (dual placement) கிடைச்சதுன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா இன்னைக்கு வரைக்கும் எந்த கம்பனியும் கூப்பிடலை. இந்த ரெஷசன் பத்தி சொன்னா புரிஞ்சுக்குற மக்கள் எங்க ஊர்ல கிடையாது.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரியல.."


பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழக்கும் மக்கள் ஒருபுறம்.. வேலை கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் இன்னொரு புறம்.. நாம் ஒரு இக்கட்டான சூழலில் நின்று கொண்டு இருக்கிறோம். அங்கங்கே சில தற்கொலைகள் கூட நடைபெற்றுள்ளன. (மாதவராஜ் அவர்கள் இது பற்றி விரிவான ஒரு பதிவினை எழுதி உள்ளார்..)


பொறியியல் மாணவர்களைப் பொறுத்தவரை என்னுடைய ஆசை எல்லாம் ஒன்றுதான்.. அவரவர் துறை சார்ந்து முன்னேற வேண்டும். IT ஒன்றை மட்டுமே நம்பக் கூடாது. IT மக்களுக்கு.... பத்து வருடங்களுக்கு ஒரு முறை இதுபோல் IT துறையில் பிரச்சினைகள் வருவதும் பின்பு அது சரியாவதும் உண்டு என்று சொல்கிறார்கள். நம்புவோம்.. பிரச்சினைகள் சரியாகும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 27, 2009

ரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 1)!!!

அது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ. பெங்களூரு நகரில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவாசல். முகத்தில் தாடியோடும், நிறைய கவலைகளோடும் ஒரு மனிதர் அங்கே நிற்கிறார். கீழே கையில் ஆறு மாத குழந்தையோடு அவரின் மனைவி அமர்ந்து இருக்கிறார். அருகே இரண்டு பெரிய பைகள். அந்த புகைப்படத்தை எனக்கு காமித்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் (முன்னாள்) மாணவர். "என்னடா இது?'.. நான் கேட்ட போது அவர் சொன்ன பதில்.."இது தான் சார் ரெசஷனோட உண்மையான முகம். அமெரிக்கால போன மாசம் வரைக்கும் வேலை.. கை நிறைய சம்பளம்.. ஆனா இன்னைக்கு.. பத்தி விட்டுட்டாங்க.. எங்க கம்பனி வாசல்ல வந்து குவார்டர்ஸ் கேட்டு நின்னுக்கிட்டு இருந்தப்ப எடுத்தேன்..."

அடுத்து அவர் சொன்னது இன்னும் அதிர்ச்சி. "என்னையவே இன்னும் ரெண்டு மாசத்துல கிளப்பி விட்டுருவாங்கன்னுதான் சார் நினைக்கிறேன். அஞ்சு டெஸ்ட் வைப்பாங்க.. அதுல எல்லாத்தையும் கிளியர் பண்ண முடியாட்டி நோட்டிஸ் தான். அந்த கொஸ்டின் பேப்பர்ல இருக்குற கேள்விக்கு ஒரு பயலும் பதில் சொல்ல முடியாது. அவ்வளவு கஷ்டமா இருக்கும். வேலை இல்லன்னு சொல்லாம, கம்பனியோட பேர் கெடாம இப்படித்தான் ஆளுங்கள வெளிய அனுப்பிக்கிட்டு இருக்கான்..சின்ன கம்பனில நேரடியா வேலை இல்லன்னு சொல்லிடுறான். ஆனா எங்க கம்பனி பெரிசுல்ல.. அசிங்கமா வேலை இல்லன்னு சொல்றதுக்கு பதிலா இது ஒரு டெக்னிக்கு..நானே அடுத்து மேல்படிப்பு படிக்கலாம்மான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்..."

இன்னைக்கு எல்லாரயும் போட்டு உலப்பிக்கிட்டு இருக்குற விஷயம்.. ரெசஷன் (Recession) என்கிற உலகப் பொருளாதார சரிவு. இங்க அடிச்சா அங்க வலிக்கும்னு சொல்ற மாதிரி அமெரிக்கால ஆரம்பிச்ச இந்த சரிவு இன்னைக்கு உலகம் பூரா பரவிக்கிட்டு இருக்கு. உண்மையச் சொல்லணும்னா இந்தியால இன்னும் தீவிரமா இந்த சரிவோட பாதிப்பு தெரிய ஆரம்பிக்கலை. அடுத்து வர நாட்கள்ல இன்னும் நெலமை மோசமாகும்னு சொல்றாங்க.
சமீபத்தில் நீங்க இந்த மாதிரி செய்திகளை நிறைய கேட்டு இருக்கலாம். ஐ.டி துறைல மொத்தமா இத்தன பேருக்கு வேலை போச்சு... அப்படின்னு எல்லாம்.... நேத்து வரைக்கும் ராஜாவா இருந்த ஐ டி மக்கள் ஒரே நாள்ல ஒண்ணுமில்லாம போனது எப்படி..? இந்த சரிவால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பது சாப்ட்வேர் நிறுவனங்களும் , அதைச் சார்ந்த மற்ற எல்லா தொழில்களும்தான். இந்த ரெசஷனால பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய மிக முக்கியமான இன்னொரு தொழில்.. கல்வி.

குறிப்பாக பொறியியல் கல்லூரிகள். இன்னைக்கு ரொம்ப ஈசியா ஆரம்பிக்கக் கூடிய, நிறைய லாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் என்னன்னு பார்த்தீங்கனா.. பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கறதுதான். நான் படிச்ச காலத்துல (98-02) எல்லாம் எங்களுக்கு ப்ளேஸ்மென்ட் அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது. ஆனா இன்னைக்கு இருக்குற மாணவர்கள் காலேஜுக்கு உள்ள நுழையும்போதே ரொம்பத் தெளிவா கேக்குற முதல் கேள்வி.. ப்ளேஸ்மென்ட் இருக்கான்னுதான்.. அந்த நிலை உருவானதுக்கு காரணம்.. சாப்ட்வேர் கம்பனிகள். நாலு வருஷம் படிச்சு முடிச்ச உடனே கைல முப்பதாயிரம் ரூபா சம்பளத்தோட வேலை. அதனால பொறியியல் கல்லூரில சேரக்கூடிய மக்களோட எண்ணிக்கை ஜாஸ்தி ஆச்சு.
(தொடரும்.....)

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 26, 2009

பெயர்க்காரணம் - 50 வது பதிவு..!!!

மதுரை திருமலை நாயக்கர் மஹால். வருடம் - 1990. செவன்த் டே பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்து இருந்தாங்க. குட்டிபசங்கள எல்லாம் வரிசைல நிக்க வச்சிட்டு டிக்கட் வாங்கிட்டு வர அவங்க டீச்சர் போய்ட்டாங்க. அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.

சுத்தி முடிச்சுட்டு வெளில வந்த பசங்க எல்லாம் ஆளாளுக்கு மிட்டாயும் ஐசும் வாங்கி சாப்பிட்டப்போ அந்தப் பையன் மட்டும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தான். அதப் பார்த்துட்டு அவங்க டீச்சர் அவனுக்கு வேணும்கரத வாங்கி குடுத்து கூட்டிக்கிட்டு வந்தாங்க. நடந்த விஷயத்த கேள்விப்பட்ட அவனோட அம்மாச்சி சொன்ன வார்த்தைகள் இதுதான்.. "இந்த வயசுலேயே இப்படி இளிச்சவாத்தனமா இருக்கே.. இதெல்லாம் இந்த உலகத்துல எப்படித்தான் பொழைக்கப் போகுதோ?" அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..

***************

மார்ச் 26, 1978 - என் பெற்றோரின் திருமணம் நடந்த நாள். அம்மாவின் முதல் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்து மூன்றே நாளில் இறந்து போயின. அடுத்த குழந்தை எட்டு மாதத்தில் குறைப்பிரசவமாக இறந்தே பிறந்தது. அம்மாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். குறிப்பாக முருகன் மீது அபார பக்தி. எனவே மீண்டும் கருத்தரித்த போது இந்த குழந்தையாவது நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று எல்லா முருகன் கோயிலையும் சுற்றி வந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியாடும் ஒருவர் அம்மாவிடம் சொன்னாராம்.. "நீ பாண்டி கோயிலுக்கு போய் வேண்டிக்கோ.. இந்த குழந்தைக்கு அவன் பெயரை வை.." அம்மாவும் அதை செய்து இருக்கிறார். கடைசியில் நல்லபடியாக குழந்தை பிறந்தது. முருகனுக்கும் பாண்டி சாமிக்கும் நன்றி சொல்ல அவர்கள் குழந்தைக்கு வைத்த பெயர்.. "துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்".

என் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி தங்கி இருந்தவர்தான் நான் படித்த பள்ளியின் பிரின்சிபால் - ஜேம்ஸ் அங்கிள். ரொம்ப பெரிசா இருக்கு என்று அவர்தான் என்னுடைய பெயரை சுருக்கியவர். ஆனால் பள்ளியில் பதிவு செய்யும்போது தப்பாக கார்த்திகைப் பாண்டியன் என்று எழுதி விட்டார். அதன் பின்னர் அதுவே நிலைத்து விட்டது.

மனுஷனுக்கு எப்போதும் என்னைக் கிண்டல் செய்வது என்றால் அவ்வளவு சந்தோஷம். என்னை தீபாவளிப் பாண்டியா என்றுதான் கூப்பிடுவார். கேட்டால் கார்த்திகையும் பண்டிகை, தீபாவளியும் பண்டிகைதானே என்பார். நானும் அவரோடு மல்லுக்கு நிற்பேன் - பேரை தப்பா எழுதனதும் இல்லாம கிண்டல் வேற பண்றீங்களான்னு.. ஆனா அவர் கண்டுக்கவே மாட்டார்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வேறொரு பள்ளிக்கு மாற்றல் ஆகி சென்று விட்டார். சமீபத்தில் விரகனூரில் அவர் தங்கி இருக்கும் வீட்டை தேடி போய் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ரொம்ப சந்தோஷப் பட்டார் .

"நான் உனக்கு சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ இத்தன பேருக்கு சொல்லிக் கொடுக்குறியாடா.. ரொம்ப பெருமையா இருக்கு.."

அவர் சொன்னபோது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். நிறைய நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன்.வாசல் வரை வந்திருப்பேன்..

" டேய் தீபாவளிப் பாண்டியா.."

சட்டென்று திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

"மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. கூப்பிட்டு பார்த்தேனப்பா.. "

சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். சொல்ல முடியாத ஏதோ ஒரு சந்தோஷ உணர்வு எனக்குள் நிரம்பி வழிந்தபடி இருந்தது.

(இன்று என் பெற்றோரின் திருமண நாள். அவர்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.. அதே நேரத்தில் இது என்னுடைய அம்பதாவது பதிவு. என்னுடைய எழுத்துக்களை ஊக்குவித்து வரும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 23, 2009

இனிதே நடந்த பதிவர் சந்திப்பும்.. சில சந்தோஷங்களும்...!!!

நான் இணையத்துல எழுத ஆரம்பிச்சதே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்னும் நம்பிக்கையில்தான். உலகத்திலயே ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது இரட்டிப்பாகும்.. அது சந்தோசம்.. மகிழ்ச்சி. நாம சந்தோஷமா இருந்தா போதாது, நம்மள சுத்தி இருக்குற மக்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு ஒரு தத்துவமே இருக்கு. நேற்றைக்கு என் வாழ்வில் அப்படி ஒரு சந்தோஷமான நாள்.
பெரிய பதிவர்கள் சந்திப்பு நடத்தும் போதெல்லாம் நம்மளால கலந்துக்க முடியலயேன்னு ஆதங்கம் இருக்கும். கொஞ்ச நாளா நம்ம கூட சில நண்பர்கள் தொடர்ச்சியா அலைபேசி மூலமா தொடர்புலையே இருந்தபோதுதான் எனக்கு தோணுச்சு... நமக்கு உள்ளேயே ஏன் ஒரு பதிவர் சந்திப்பு மாதிரி நடத்தக் கூடாது? அருகில் இருக்கக் கூடிய நண்பர்கள நாம போய் பார்க்கலாமேன்னு தோணின உடனே இரண்டு நண்பர்கள்ட்ட போன் பண்ணிக் கேட்டேன்.. அவர்கள்.. சொல்லரசன் மற்றும் ஆதவா. அவங்க ரொம்ப மகிழ்ச்சியோட ஒத்துக்கிட்டாங்க.. திருப்பூர்ல சந்திக்கிறதுன்னு முடிவாச்சு.
திருப்பூரில் நான் போய் இறங்கிய ஐந்தாவது நிமிடம் நண்பர் சொல்லரசன் வந்து சேர்ந்தார். ஆடை வடிவமைக்கும் கம்பெனி ஒன்றில் மானேஜராக பணிபுரிகிறார். புதிதாக எழுத ஆரம்பித்து இருப்பவர். சமூக சிந்தனை கொண்டவர். (வீட்டுக்குப் போகும் ஞாயிற்றுக்கிழமையை எனக்காக தியாகம் செய்து இருந்தார். அவருக்கு நன்றி... ) என்னை சரியாக அடையாளம் கண்டு கொண்டு விட்டார். ஒரு டீயைக் குடித்து விட்டு அவரது அலுவலகத்தை அடைந்தோம்.
கொஞ்ச நேரத்தில் நண்பர் ஆதவாவும் வந்து சேர்ந்தார். அவருடைய எழுத்துக்களை படித்து மிகவும் பெரிய ஆள் ஒருவரை எதிர்பார்த்துக் காத்து இருந்தால், குழந்தை முகத்தோடு வந்து நின்றார் ஆதவா. வீட்டில் இருக்கும் ஒரு நாளை நான் அபகரித்துக் கொண்டேனா என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்.. "வீட்ல சும்மாத்தான் இருந்திருப்பேன்.. உங்கள எல்லாம் பார்த்ததால இந்த நாள் எனக்கு உபயோகமான நாள் நண்பா.."
மூவரும் அமர்ந்து பேசத் தொடங்கினோம். பரஸ்பர அறிமுகம், விருப்பங்கள், அனுபவங்கள், புத்தகங்கள், பதிவர்கள் என எல்லா விசயங்களையும் கலந்து கட்டி அடித்தோம். நேரம் போனதே தெரியவில்லை. நடுவில் என்னுடைய பதிவில் வேத்தியன் தனது பக்கத்தை வந்து பார்க்கும்படி அழைத்து இருந்தார். போய் பார்த்தால் ஒரே குஷியாகி விட்டது. ஆதவாவிற்கு ஹரிணி அம்மாவும், எனக்கு வேத்தியனும் பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருந்தார்கள். இந்தக் கொஞ்ச நாட்களில் நம்மை மதித்து நண்பர்கள் விருது கொடுத்தது எங்கள் இருவருக்குமே சந்தோஷம். எங்களோடு விருது வாங்கிய நண்பர்கள் கமல், ஷீ-நிஷி, அன்புமணி.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கொஞ்ச நேரத்திலேயே நண்பர் அகநாழிகை போன் செய்து விருது பெற்றதுக்கு வாழ்த்தினார். நண்பர்கள் எல்லாருமே அவரிடம் பேசினோம். கூடிய சீக்கிரம் பெரிய அளவில் பதிவர் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார். அவரை அடுத்து கவிதைகளில் கலக்கி வரும் நண்பர் ஷீ-நிஷி பேசினார். அவருடைய அறிமுகமும் கிடைத்து விட்டது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்கள். கடைசியாக ஆதவாவின் அம்மா போன் செய்து அவரை சாப்பிட கூப்பிட்ட போதுதான் எங்களுக்கு நேரமே உரைத்தது. அடுத்த முறை வீட்டுக்கு வர வேண்டும் என்ற அழைப்போடு நண்பர் ஆதவா விடை பெற்றுக் கொண்டார்.
நண்பர் சொல்லரசன் புண்ணியத்தில் பிரியாணி, சிக்கன் என்று மதிய உணவு அமர்க்களப் பட்டது. அதன் பின்னர் கொஞ்ச நேரம் பேசி விட்டு மாலை ஆறு மணி போல் கிளம்பினேன். பஸ்ஸில் வரும்போது ஆதவா போன் செய்து காணாமல் போன பாலோயர்ஸ் விட்ஜெட்டை கண்டுபிடிப்பது பற்றி வேத்தியன் ஒரு பதிவு போட்டிருப்பதாக சொன்னார். பெருந்துறை வந்து இறங்கின மறு வினாடி பிரௌசிங் சென்டருக்கு போனேன். வேத்தியன் சொன்னபடி செய்து பார்த்தால்.. ஒங்கக்காமக்கா.. காணாம போன நம்ம தங்கங்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தனர். வேத்தியன்.. உங்களுக்கு இரட்டை நன்றி.. அட போங்கப்பா.. ஒரே நாள்ல எத்தன சந்தோஷம்..
ஆக மொத்தத்தில் ஒரு நாள் முழுக்க பயன் உள்ளதாக கழிந்த நிம்மதி.அருமையான நினைவுகள். காலங்கள் கடந்த பின்னும் நம்மை வழி நடத்திச் செல்வது இந்த சந்தோஷமான நினைவுகள் தான்.. இல்லையா?
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 19, 2009

எல்லாப் புகழும் வில்லுக்கே...(2)!!!

கடந்த ரெண்டு மூணு நாளாவே நம்ம பதிவர்கள் எல்லாம் விஜயையும் அவரோட திருச்சி பிரஸ் மீட் பத்தியும் எழுதி கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க. இத்தனை நாளா நான் ரொம்ப அடக்கம்னா அப்படின்னு சீன் போட்டுக்கிட்டு இருந்த அவரோட உண்மையான முகம் இப்போ வெளிப்பட்டிருக்கு. எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்துற கடமை நமக்கு இருக்குங்கறதால இந்தப் பதிவு...

இருக்குறதுலேயே பெரிய லூசு யாரு?

* கதையே தெரியாம நடிச்சுட்டு, வில்லு படம் என்னோட அம்பதாவது படமா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்னு காமடி பண்ண விஜயா?

* ஜெம்ஸ் பாண்டு, எம்ஜியார் படம் பார்த்த பீல் வரும்னு சானல் சானலா போய் உளருன பிரபுதேவாவா..?

* இந்த படாமாவது நல்லா இருக்கும்னு நம்பி பார்த்த விஜய் ரசிகர்களா..?

* அத ஒரு படமா மதிச்சி பிரஸ் மீட்டுக்கு வந்த நிருபர்களா...?

* ரசிகர்கள விஜய் என்ன லட்சணத்துல மதிக்கிறாருன்னு பார்த்த பிறகும், விஜய் மாதிரி வருமான்னு இந்தப் பதிவ படிச்சிட்டு என்ன திட்டப் போற விஜய் ஆதரவு பதிவர்களா?

நீங்களே சொல்லுங்கப்பா..

***************

க்ரைம் ஸ்டோரி புத்தகத்தில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்....

கேள்வி: உங்களைக் கவர்ந்த சினிமா இயக்குனர்கள் பற்றி..?

பதில்: தங்கர் பச்சானையும், ராதாமோகனையும் ரொம்ப பிடிக்கும். அழகியும், அபியும் நானும் படங்கள் என்னை பாதித்தவை. இவர்கள் படங்களுக்கு நம்பி போகலாம். சமீபத்தில் எனக்கு ஒரு கலா விபத்தும் நிகழ்ந்தது. என்னை விபத்துக்கு உள்ளாக்கியவர் விஜய்... படம் வில்லு. இதற்கு முன்பே குருவி என்ற பெயரில் கழுகாக வந்து கொத்திக் குதறி இருந்தவர் இந்த முறை வில்லை விட்டு ரணகளப் படுத்தி விட்டார். இனி விஜய் படத்தை டிவியில் பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன்.

(மைன்ட் வாய்ஸ்: என்னால அவர் படத்த டிவியில கூட பார்க்க முடியாதுங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்.... )

***************

உலகத்திலேயே அதிகம் கிண்டல் செய்யப் படுவது சர்தார்கள்தான் என்பதை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப் போன சர்தார்கள் கோபமாக வெளியே வந்து கத்தத் தொடங்கினார்கள்..

"யாருடா அவன்? எங்கள விட பெரிய லூசா? யாருடா அந்த விஜய்? குருவி, வில்லுங்கர படத்துல எல்லாம் நடிச்சு இருக்கானாமே.....?"

***************

போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?

கைதி : படம் பார்க்கணும்...

போலீஸ் : சரி வில்லு போகலாமா ?

கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

***************

குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...

"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."

(மைன்ட் வாய்ஸ்: ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன..?)

***************

ஒருவர் :அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர் :யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

***************

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் "அஜய்" என்ற படத்தை பார்க்கிறார் விஜய்.

விஜய்: அப்பா அப்பா.. இந்த படம் சூப்பரா இருக்கு.. சீக்ரமா இந்த படத்தோட ரைட்ச வாங்கு.. நாம ரீமேக்கு பண்ணலாம்..

எஸ். எ. சி. : அட பக்கி.. நல்லா பாரு.. இது நீ நடிச்ச கில்லி படத்தோட உல்டா.. அதுவே ஒக்கடு தெலுங்க படத்தோட உல்டா.. உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு.. அடச்சே.. என்ன கொடுமடா சாமி?

(நன்றி - பதிவர் விஷ்வா... முதல் வில்லு பதிவில் அவர் பின்னூட்டத்தில் போட்ட சில ஜோக்குகளை இங்கே பயன்படுத்தி உள்ளேன்...)

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 17, 2009

துப்பட்டா அணிவது எதற்கெனில்...?!!

இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று இருந்தேன். நேற்று மாலை வீட்டுக்கு நண்பன் வந்திருந்தான். இருவரும் காலார நடந்தவாறே ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று அரசரடி சாலையில் சென்று கொண்டு இருந்தோம். விஷ் என்று வேகமாக ஒரு பைக் எங்களைத் தாண்டி சென்றது. ஒரு இளைஞனும் அவனை நெருக்கமாக அணைத்தபடி ஒரு பெண்ணும்.. அவளுடைய துப்பட்டா ஏதோ கட்சிக்கொடி போல காற்றில் பறந்து கொண்டு இருந்தது." பக்கி.. எப்படி போகுதுங்க பாரு.." நண்பன் சொல்லி வாய் மூடுவதற்குள் தடால் என்று சத்தம்.

அந்தப் பெண்ணின் துப்பட்டா வண்டி சக்கரத்தில் சிக்கி வாரி விட்டு விழுந்து கிடந்தனர். அருகில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிச்சென்று பைக்கை தூக்கி விட்டோம். அந்தப் பெண்ணுக்கு நல்ல அடி. துணி எல்லாம் அங்கங்கே கிழிந்து.. பாவமாக அழுது கொண்டு இருந்தது. அவனுக்கும் முழங்கையில் அடி. பக்கத்தில் இருந்த மருந்துக் கடையில் பிளாஸ்திரி வாங்கி ஒட்டி அனுப்பினோம். சென்னையில் இருக்கும் என் நண்பனிடம் அலைபேசியில் இதை பற்றி சொன்ன பொழுது அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.. "மதராஸ்ல இதெல்லாம் சகஜம்டா மாப்ள.. பிள்ளைங்க இங்க எல்லாம் இப்ப டிரஸ் பண்றதே வேற மாதிரி.. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு விபத்து இந்த மாதிரி நடக்கும்..".

துப்பட்டா அணிவது எதற்காக? பெண்கள் சுடிதார் அணியும்போது உடம்பின் அங்கங்கள் அசிங்கமாக வெளியே தெரியாமல் இருப்பதற்காக அணியும் உடைதான் துப்பட்டா. ஆனால் இன்று பெண்கள் துப்பட்டாவை எப்படி எல்லாம் அணிகிறார்கள்?

* ஒரு பக்கமாக - ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* நாதஸ்வரக்காரர்கள் இரு பக்கமாக அணிவார்களே - அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி...
* மிக முக்கியமாக - காதலனோடு செல்லும்போது தீவிரவாதி போல தலையை மூடிக் கொள்ள..

சுடிதாரின் நிலைமையே இப்படி என்றால் மற்ற உடைகளைப் பற்றி சொல்வதற்கு இல்லை. பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும்..சேலை தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. சேலை போல் பெண்களை செக்சியாக காட்டும் உடை வேறு கிடையாது என்று என் தோழிகள் அடிக்கடி சொல்லுவார்கள். வேலைக்காக, கல்விக்காக.. வெளியே செல்லும் பெண்களுக்கு மிகவும் சவுகரியமான உடை சுடிதார்தான். அதை எப்படி அணிகிறார்கள் என்பதில்தான் பிரச்சினையே.. நாம் உடுத்தும் உடை அடுத்தவர்களின் கவனத்தை கலைக்க கூடாது அல்லவா?

பெண்கள் எப்படி உடுத்தினால் என்ன.. ஆண்கள் தான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொன்னால்.. சாரி.. அது நடைமுறைக்கு சாத்தியமே கிடையாது. ஏன் என்றால் நாம் வாழும் சமூகம் அப்படிப்பட்டது. இங்கே ஆண், பெண் இரு பாலருமே சிறு வயதில் இருந்தே பிரிக்கப்பட்டுத்தான் வளர்க்கப்படுகிறார்கள். எதிர் இனம் இவர்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. மூடி வைக்கப்பட்ட பொருளைத் திறந்து பார்க்கும் ஆர்வம் போலத்தான் பெண்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஆண்களிடம் உள்ளது. எழுத்தாளர் சாரு நிவேதிதா அடிக்கடி சொல்வார்.. இந்தியா ஒரு sexual starvation நிறைந்த நாடு என்று... அதுதான் உண்மை. இன்னும் நமது ஊரில் அஜால் குஜால் படங்கள் அமோகமாக ஓட இதுதான் காரணம். இந்த சூழலில், பெண்கள் எப்படி இருந்தாலும் ஆண்கள் கண்டு கொள்ளக் கூடாது என்பது பாலை அருகில் வைத்து விட்டு பூனையைக் குடிக்காதே என்று சொல்வது போல் கேலிக்குரியது.

நான் கலாச்சார காவலனோ, பெரிய வெங்காயமோ கிடையாது. பெண்கள் தங்கள் இஷ்டப்படி உடை உடுத்துவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர்கள் உடையால் பிறரின் கவனம் சிதைக்கப்படக் கூடாது என்பதைத்தான் விரும்புகிறேன். என் வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோல் உடை அணிந்தால் நான் ஒத்துக் கொள்வேனா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.. இல்லை என்று தோன்றியது. எனவே எனக்கு தோன்றியதை இங்கே பதிவு செய்துள்ளேன். வேறு யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல..!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 14, 2009

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்...!!!

எனக்கு (நமக்கு?!!) மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று இசை. காலையில் கேட்கும் பாடல்கள் அன்று முழுவதும் என் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு சில பாடல்கள் நல்ல படங்களில் இடம் பெறாத காரணத்தினாலேயே கவனிக்கப்படாமல் போவது உண்டு. சில பாடல்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் என்ன படம்.. யார் இசை என்று தெரியாது. அதுபோல் உள்ள சில பாடல்களைப் பற்றித்தான் இங்கே தொகுத்துள்ளேன்.இவை எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

இரு கண்கள் சொல்லும் காதல் சேதி...
(படம்: காதல் சாம்ராஜ்யம் இசை: யுவன் ஷங்கர் ராஜா..)
தேசிய விருது பெற்ற அகத்தியனின் படம். பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பு. படம் கடைசி வரை வெளிவரவே இல்லை. SPB சரண் மற்றும் புதுமுகங்கள் நடித்து இருந்தனர். அருமையான காதல் பாடல். ஒரு முறை ப்ரொவ்சிங் சென்டரில் கேட்டேன். பிடித்துப் போனது. என்னுடைய ஆல்டைம் காதல் ஹிட்சில் இந்தப் பாடலும் உண்டு.

என்னம்மா தோழி பொம்மையக் காணோம்...
(படம்: காலைப்பனி இசை: ?!!!!!...)
நாசர் நடித்த படம். வேற ஒன்றும் எனக்கு தெரியாது. ஆனால் அருமையான பாடல். ஒரு தாய் தன் மகளை தோழியாக பாவித்து பாடும் பாடல்.

வினோதனே.. வினோதனே.. விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்..
(படம்: தென்னவன் இசை: யுவன் ஷங்கர் ராஜா...)
சத்தியமா நம்ப மாட்டீங்க. இது ஒரு விஜயகாந்த் படப் பாடல். கிரண் நடித்து இருப்பார். இதே படத்தில் வரும் இன்னொரு பாடலான "சாமி சத்தியமா" கேட்க நன்றாக இருக்கும். ஒரே விஷயம் தயவு செஞ்சு பாட்ட கேக்குறதோட நிறுத்திக்கோங்க.. பார்த்தா ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல..

யார் யாரோ.. நான் பார்த்தேன்..
(படம்: சின்னா இசை: டி. இமான்...)
அர்ஜுன் நடித்து சுந்தர்.சி இயக்கிய படம். SPB மிகவும் ரசித்து பாடி இருப்பார். இதே பாடலை வெறும் இசைக் கோர்வையாக ( வரிகள் இல்லாமல்) வீணை கொண்டு வாசித்து இருப்பார்கள். அதுவும் நன்றாக இருக்கும்.

பையா பையா சின்ன பையா..
(படம்: அலை இசை: வித்யாசாகர்...)
அட்டகாசமான துள்ளலிசைப் பாடல். சிம்பு நடித்த படம். விக்ரம் குமார் (யாவரும் நலம் இயக்குனர்) இயக்கிய முதல் படம். பாலிவுட் கவர்ச்சி நடிகை கிம் ஷர்மா கெட்ட ஆட்டம் போட்டு இருப்பார். வழக்கம் போல் சிம்புவும் நடனத்தில் தூள் கிளப்பி இருப்பார்.

தொட்டு விடத்தான் நான் தொட்டு விடத்தான்..
(படம்: கருப்பு ரோஜா இசை: ?!!!....)
பிரமாண்டத்திற்கு பெயர் போன ஆபாவாணனின் படம். மாய மந்திரம் என்று என்ன எல்லாமோ வரும். இந்த படத்தால் தான் நான் ஒழிந்தேன் என்று எழுத்தாளர் இந்துமதி பேட்டி கொடுத்ததாக ஞாபகம். ஆனால் பாட்டு கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா..
(படம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி..)
நிறைய பேருக்கு இந்த பாட்டு தெரியும் ஆனால் என்ன படம் என்று தெரியாது. ஹரிஹரன் அனுபவித்து பாடி இருப்பார். ஒரு பாட்டை எப்படி படமாக்கினால் கொலைவெறி வரும் என்பதற்கு சிறந்த உதாரணம். லிவிங்ஸ்டானின் சேட்டைகள் அவ்வளவு கொடூரமாக இருக்கும். படம் வெளிவரவே இல்லை.

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா..
(படம்: தாயின் மணிக்கொடி இசை: வித்யாசாகர்...)
இதுவும் பிரபலமான பாடல்தான். படத்தின் கதாநாயகி நிவேதா படம் வெளி வரும் முன்னரே மரணம் அடைந்தார். மற்ற எல்லாமே துள்ளலிசைப் பாடல்கள். எல்லா பாட்டுமே நன்றாக இருக்கும்.

இது போல் இன்னும் சில பாடல்கள் உள்ளன. முடிந்தால் அதையும் எழுதுகிறேன். இதே போல் உங்களுக்குத் தெரிந்த நல்ல பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 13, 2009

எனக்குப் பிடித்தவர்கள்...!!!

ரொம்ப நாளைக்கு முன்னதாகவே நண்பர் ஆதவா என்னை இந்தத் தலைப்பில் பதிவிட அழைத்து இருந்தார். சமீபத்தில் தோழர் mayveeயும் கூப்பிட்டு விட்டார். எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் புத்தகமும் இசையும். எஸ்ரா பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். இசையை பொறுத்தவரை எனக்கும் ஏ. ஆர். ரஹ்மான் பிடிக்கும். அவரைப் பற்றி இணையத்தில் எல்லாருமே எழுதி விட்டார்கள். வேறு யாரைப் பற்றி எழுதலாம் என்றெண்ணியபோது... இந்த வரலாற்று நாயகர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று உறுதி செய்தேன். நாம் இன்று அனுபவித்து வரும் சுதந்திரம் என்பது ஒரே நாளில், ஒரு சில மனிதர்களின் முயற்சியால் கிடைத்தது அல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வாங்கித் தந்தது நம் விடுதலை. நம் நாட்டுக்காக போராடிய, தன் இன்னுயிரை ஈந்த... எனக்கு பிடித்த இருவரை பற்றி இங்கே எழுதி உள்ளேன்.

வாஞ்சிநாதன்

நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்துக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. 1857 ஆம் ஆண்டுதான் சுதந்திரப்போருக்கான முதல் முயற்சி நடைபெற்றது என்று வரலாற்றில் சொன்னாலும் அதற்கு முன்னரே கட்டபொம்மன், பூலித்தேவன் என்று நம் தமிழக மன்னர்கள் பலர் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி உள்ளனர். நம் தமிழ் மண்ணில் பிறந்த வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்.. வாஞ்சிநாதன்.

நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில் 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன். செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது. தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை. ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி. புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள் வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது. இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று, வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது. தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார். இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார். வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் தான் தனக்கு எமன் என்பதை அறியாமல், முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு வீர மரணம் எய்தினார்.

இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார். ஆனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை, அன்று தனது துயிலைக் கலைத்தது. பிற்காலத்தில், பாரத முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களால் வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற வரலாற்றுச் சிறப்புப்பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

பகத்சிங்

"இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை.."

பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் செப்டம்பர் 27, 1907 அன்று பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். 1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய நண்பர்கள் ராஜகுரு மற்றும் சுகதேவ். தனது பதிமூன்றாவது வயதில் மஹாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமை கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய ஆங்கிலேயக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர். சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
அடுத்ததாக இந்தியாவை காப்பதாக சொல்லி ஆங்கில அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 8, 1929 அன்று சட்டசபையில் கையெறி குண்டுகளை வீசினர். அப்போது பகத்சிங் சொன்ன வார்த்தைகள்தான்.. "இன்கிலாப் ஜிந்தாபாத்.." (புரட்சி ஓங்குக).

சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. "நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.'' — சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது. பகத்சிங் நாட்டு மக்களால் ஷகீத் (shaheed) என்று கொண்டாடப்பட்டார்.

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். நம் நாட்டுக்காக போராடிய மக்களில் நமக்கு தெரிந்தது கொஞ்சம் என்றால்.. முகம் தெரியா மக்கள் பல பேர். அவர்களின் தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கடமை நமக்கு உண்டு. நம் தேசத்துக்காக வாழ்ந்து மடிந்த அவர்களுக்கு என் வீரவணக்கம்.

( நன்றி - தகவல்கள் உதவி: தமிழ் விக்கிபீடியா.. வெப்உலகம்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 11, 2009

கடிதங்கள்..!!!


தொலைந்து போன பொருள் ஒன்றைத்
தேடி கொண்டு இருக்கையில்..
என்றோ நான் எழுதிய கடிதமொன்று
என் கைகளில் சிக்கியது.. !!
கடைசியாக நான் கடிதம் எழுதியது
எப்போது..? என் நினைவில் இல்லை.. !!
அலைபேசி வந்த பின்னர்
கடிதம் எழுதும் பழக்கம் இன்னும்
மக்களிடம் உள்ளதா..? தெரியவில்லை.. !!
நமக்கென கடிதம் ஏதும் வந்து
இருக்கிறதா என தபால்காரருக்காக
காத்து நின்ற நாட்கள்..
காணாமல் போய் விட்டன..!!
எழுதவதற்கு ஒன்றும் இல்லாத
போதும் நம் நேசங்களுக்காக எழுதிய
கடிதங்கள்.. மறக்க முடியாதவை..!!
அவை வெறும் காகிதங்கள் அல்ல..
தந்தையாக, தாயாக, மகனாக, மகளாக,
உடன்பிறப்பாக, நட்பாக, காதலாக..
கடிதங்கள் நமக்கு எல்லாமுமாக
இருந்து இருக்கின்றன..!!
பிடித்தவர்கள் கடிதத்தை தன்னுடன்
வைத்து கொண்டே அலைந்த
நாட்களும், தனிமையைத் தவிர்க்க
தலையணைக்கு அடியில் கடிதங்கள்
வைத்துக்கொண்டு தூங்கிய நாட்களும்..
மீண்டும் கிடைக்குமா எனத் தெரியவில்லை..!!
அன்பு, சந்தோஷம், ஆசை, துக்கம், கோபம்
என நாம் கடந்து வந்த உணர்வுகளை
நாம் திரும்பி பார்க்க உதவும்
காலக் கண்ணாடிதான்.. கடிதங்கள்.. !!
என்னவென்று தெரியாத ஏதோ ஒன்றைத்
தேடி அலைந்து நாம் களைத்துப் போய்
அமரும் நேரத்தில் - கடந்து வந்த வாழ்க்கையை
திரும்பி பார்க்கவேனும் வேண்டும்.. கடிதங்கள்..!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 9, 2009

கண்டேன் எஸ்.ராமகிருஷ்ணனை..!!!

நேற்று என் வாழ்வின் மிக முக்கியமான.. மிகவும் சந்தோஷமான நாட்களில் ஒன்று. இலக்கிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த நாள் முதலாய் என் ஆதர்ச எழுத்தாளராய் விளங்கி வரும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை, அவருடைய வீட்டில் சந்தித்து உரையாட முடிந்தது. அவருடன் நான் இருந்த போது எனக்கு உண்டான உணர்வை என்ன சொல்லி விளக்குவது என்றே தெரியவில்லை. ஒரு முறை கோயமுத்தூரில் புத்தக திருவிழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பை நழுவ விட்டேன். அது முதல் எப்படியாவது எஸ்ராவை சந்தித்து விட வேண்டும் என்று ஆசை. எனவே அவரை பார்த்தபோது வெகு நாட்களாய் தேடி வரும் ஒன்று எதிர்பாராமல் கிடைத்ததைப்போல் ஒரு மகிழ்ச்சி.
என்னுடைய வாழ்வில் நான் எடுத்த சில முக்கியமான முடிவுகளில் அவருடைய எழுத்துக்கும் பங்கு உண்டு. அந்த அளவுக்கு என்னை பாதித்தவர் அவர். அதனால்தான் என்னுடைய வலைத்தளத்தில் இருபத்து ஐந்தாவது பதிவாக "எஸ்.ராமகிருஷ்ணன் - உணர்வுகளின் உன்னதம்" என்று அவரைப் பற்றி எழுதி இருந்தேன். அதை சிங்கப்பூரில் இருக்கும் எஸ்ராவின் சகோதரர் திரு.ஆதிமூலம் பார்த்து விட்டு எஸ்ராவிடம் சொல்லி இருக்கிறார். அது பற்றி எனக்கும் மின்னஞ்சலில் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில், என்னுடைய தோழி ஒருவர்.. என்னையும் எஸ்ரா மீதான என் ஆர்வத்தையும் நன்றாக அறிந்தவர்... எனக்கே தெரியாமல் எஸ்ராவை சந்திக்க அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை வந்து பார்க்கும்படி எஸ்ராவும் பதில் அனுப்பி விட்டார். தோழியோ இவ்வளவு எளிதாக எஸ்ராவை பார்க்க முடியும் என்று நம்ப முடியாமல் எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். முதலில் நான் என்னை கேலி செய்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் எஸ்ரா அனுப்பிய மின்னஞ்சலை பார்த்த பின்புதான் உண்மை உரைத்தது. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை. சென்னை. தேடிப்பிடித்து நானும் என் தோழியும் எஸ்ராவின் வீட்டுக்கு போய் விட்டோம். அவரைபோலவே வீடும் எளிமை. அவருக்கான அறையில்.. புத்தகங்கள் மற்றும் உலக சினிமாக்களின் dvdக்களின் ஊடே.. கணினியின் முன் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஈரோட்டில் இருந்து இதற்காகவா வந்தீர்கள் என்று கேட்டவர் அடுத்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நான் ஆடிப்போய் விட்டேன். "என்னை சந்திக்க விருப்பம் என்று சொல்லி இருந்தால் நானே உங்களை வந்து பார்த்து இருந்திருப்பேனே.." . இதற்கு நான் என்ன பதில் சொல்ல..?
அவருடைய எழுத்தைப் போலவே பேசும்போதும் பல விஷயங்கள் தானாகவே வெளிவந்தன. மிகவும் நுண்ணிய விஷயங்களை.. நாம் சாதரணமாக கவனிக்காத விஷயங்களைப் பற்றிக்கூட தெளிவாகப் பேசினார். அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களில் சில..
"வாழ்க்கை என்ற பாதையில் எனக்கு முன்னால் பலபேர் போய் இருக்கிறார்கள். இப்போது நான் போய்க்கொண்டு இருக்கிறேன். என்னுடைய அனுபவங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன். நாளை நீங்கள் இதே பாதியில் பயணம் செய்வீர்கள். எல்லாமே ஒரு அனுபவம்தான்.."
"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.."
"நம்முடைய விருப்பங்களும் குடும்பத்தின் தேவைகளும் எப்போதும் ஒத்துப்போகாது.. படகில் இருக்கும் துடுப்புகள் எதிரெதிர் திசைகளில் இயங்குவதுபோல நம்மை அலைக்கழிக்கும். நாம்தான் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டும்.."
அவர் சொன்னது அனைத்தையும் எழுத வேண்டும் என்றால் இன்னும் இதுபோல் ஐந்து பதிவுகளாவது தேவைப்படும். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். அவர் ஒரு அற்புதமான மனிதர். எல்லாவற்றைப் பற்றியும் பேசினார். அவருடைய படிக்கும் காலம்... பயணங்கள்.. நண்பர்கள்.. வெளிநாடுகளில் நூலகங்கள் இயங்கும் முறை.. இன்றைய மாணவர்கள்.. வெவ்வேறு துறைகளில் இயங்கும் விதம் பற்றி.. எல்லாம் சொன்னார். கடைசியாக தன்னுடைய குழந்தைகளைப் பற்றி சொன்னபோது அவருடைய கண்களில் தெரிந்த சந்தோஷம்.. அவருடைய பாசத்தை சொன்னது.
நான் அவருக்காக சிறு பரிசு ஒன்றை வாங்கிச் சென்றிருந்தேன். அதை அவருக்கு நன்றி கூறி கொடுத்தேன். நான் முதன்முதலில் வாங்கிய அவரின் புத்தகமான கதாவிலாசத்தை கொண்டு போயிருந்தேன். அதில் அவருடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். என்னிடம் இல்லாத அவரின் புத்தகம் எதுவெனக் கேட்டு.. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை புத்தகத்தில் கையெழுத்திட்டு தந்தார். விடை பெற்றுக் கிளம்பும்போது கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆகி இருந்தது. அவருடைய துணைவியாரிடம் நன்றி கூறி நானும் என் தோழியும் விடைபெற்றோம். வெளியே வந்தபோது மிகவும் நிறைவாக உணர்ந்தேன் . கண்டிப்பாக என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள் அவை...!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 7, 2009

1977 - திரை விமர்சனம்...!!!


இயக்குனர்: அண்ணே.. தமிழ்நாட்டுல இப்படி ஒரு படம் இதுக்கு முன்னாடி வந்ததே இல்லண்ணே.. உங்களுக்கு ரெண்டு வேஷம்.. பாதி படம் மலேஷியாவுலையே எடுக்குறோம்.. கிட்டத்தட்ட பாண்ட் படம் மாதிரி..

சரத்: அடடா.. சொல்லுங்க பார்ப்போம்..

இயக்குனர்: மொத சீனு.. குப்பத்து மக்கள் எல்லாம் உங்கள சாமின்னு கும்பிடுறாங்க.. அப்போ ஒரு வில்லன் வந்து அவங்கள கொடும பண்றான்.. ஒரு சின்ன பையன் வந்து மரத்துல கட்டி வச்சு இருக்க மணிய அடிச்சு ராசையான்னு கத்துறான்.. உங்கள காட்டுறோம்.. கடலுக்கு நடுவுல இருக்கீங்க.. எல்லாரும் நீங்க வந்து வில்லன அடி நொறுக்கப் போறீங்கன்னு நினைக்கிறாங்க.. ஆனா ட்விஸ்ட்.. நீங்க அவன பேசியே அழ வைக்கிறீங்க..

சரத்: சூப்பரப்பு.. அப்புறம்?

இயக்குனர்: அடுத்து மகன காட்டுறோம்.. அவரு விஞ்ஞானி.. அவர் ஊருக்குள்ள வர்றப்ப பாட்டு.. உங்க கட்சி கொடிய காடுறோம்.. ஆடுறவங்க எல்லாருக்கும் டிரஸ் கலர் உங்க கொடிதான்.. அப்படியே எம்ஜியார் மாதிரி பாட்டிய கட்டிப்பிடிச்சு எல்லாம் ஆடுறீங்க..

சரத்: பின்னீட்டிங்க.. இந்த படம் நாம கண்டிப்பா பண்றோம்..

இயக்குனர்: இன்னும் கதைய கேக்கவே இல்லையே அண்ணே..

சரத்: அது கிடக்கு கழுத..
***************

இந்தப் படம் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நான் சமீபத்தில் பார்த்த மிக மோசமான தமிழ்ப்படம் இதுதான் (நான் வில்லு பார்க்கவில்லை). படம் முடிந்த பின் படம் எடுக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் காட்டுகிறார்கள். எங்க ஊருப்பக்கம் சொல்வார்கள்.."விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போல" என்று..படத்தையே பார்க்க முடியவில்லை.. இதில் இதை எங்கே பார்ப்பது.? ஒரு போட்டோவை பார்த்து அப்பா சரத் செத்துப்போகிறார். உண்மையை கண்டுபிடிக்க மகன் மலேஷியா செல்கிறார். அங்கே அவர் அப்பா கொலைக்குற்றம் சாட்டப்பட்ட தூக்குதண்டனை கைதி என்று தெரிய வருகிறது. உண்மை என்ன என்பதை சரத் கண்டுபிடிப்பதே படம்.

சரத் தான் நம்ம ஊரு சில்வர்ஸ்டேர் ஸ்டேலோன் என்று சொல்லலாம். உடலை கும்மென்று வைத்து இருக்கிறார். ஆனால் எல்லா காட்சிக்கும் ஒரே எக்ஸ்ப்ரெஷன் தான். நான்தான் உன்னோட அம்மான்னு ஜெயசுதா சொன்ன உடனே ஒரு பீல் கொடுக்குறாரு பாருங்கள்.. பாக்குறவன் எல்லாம் அழுகணும். (ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம்னு..) அப்பா சரத் அதுக்கு மேல. மேக்கப் போட்டவர தேடிப்பிடிச்சு கால்ல விழணும். சட்டையத் தொறந்து போட்டிக்கிட்டு ரெண்டு கதாநாயகியோடவும் சரத் ஆடுறப்போ.. முடியல.. நம்ம கழுத்துல நாமலே சுருக்கு மாட்டிக்கிட்ட உணர்வு.

கதாநாயகி பார்சானா. சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க. படம் பூரா அரையும் குறையுமாத்தான் அலையறாரு. அவர்க்கு கண்ணு சொருகுனா நமக்கு கண்ண கட்டுது. ஏன்னா அடுத்து பாட்டு போடப் போறங்கன்னு அர்த்தம். சரத்த ஒருதலையா காதலிக்குற வக்கீலா.. நமீதா. திரையில முக்காவாசி அவுங்கதான் தெரியுறாங்க. சரத்துக்கு கூட கொடுக்காத அளவுக்கு நமீதாவுக்கு அறிமுகம். கிட்டத்தட்ட மூணு நிமிஷம் தண்ணிக்குள்ள உருள விட்டு காமிக்கிறாங்க. (அவங்கள பாக்குறப்ப எல்லாம் அதிஷாவோட அகம் ட்ரம்மாஸ்மி பதிவு தான் ஞாபகத்துக்கு வந்து தொலையுது). ரொம்ப பழைய காமெடி - விவேக் வேஸ்ட். ஜெயசுதா, விஜயகுமார், ராதாரவி எல்லாம் வந்து போறாங்க. வில்லன கண்டா எரிச்சல்தான் வருது.

படத்தோட முதல் பாதியில கொஞ்சம் மலேஷியாவ அழகாக் காட்டுறாங்க. வித்யாசாகர் இசையில ரெண்டு பாட்டு நல்லா இருக்கு. ஆனா பின்னணி இசை.. அப்படியே பாண்டு படத்துல இருந்து காப்பி. அதோட ஒரு பாட்டுல பிரிட்னி ஸ்பியர்ஸ் மியூசிக் எல்லாம் வருது. படத்தோட மிகப் பெரிய நகைச்சுவை ஆக்க்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம். தீபாவளி துப்பாக்கி மாதிரி வச்சுக்கிட்டு ஆளாளுக்கு டுமீல் டுமீல்னு சுடுறாங்க. ஆனா ஒரு குண்டாவது சரத் மேல படனுமே.. ? சூப்பர்மான் தோத்தான்.

குறிப்பா அப்பா சரத்.. பொண்டாட்டி புள்ள கூடவே போய் காபரே டான்ஸ் வேற ஆடறாரு. எதிரிகள பிடிக்கிற காட்சியில சண்டை போடுறப்ப கருப்பு சூட் போட்டு இருக்காரு. ஆனா அர்ரஸ்த் பண்ண உடனே அவரோட யுனிபாமுக்கு மாறுற கடமை உணர்வு புல்லரிக்க வைக்குது. கடைசியில குண்டடி பட்டும் குழந்தையோட படகுல தப்பிச்சு கடல் வழியாவே இந்தியாக்கு வந்துருராறு. இயக்குனரும் நம்மள மாதிரி உக்கார்ந்து யோசிச்சிருப்பார் போல தெரியுது. கிளைமாக்ஸ் இருபது நிமிடங்கள் அப்படியே டை அனதர் டே படத்தோட உல்டா. வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்லன்னு சொல்வாங்க. அரசியலும் ஒத்துவரலை.. படமும் ஓடலை.. சரத் என்ன பண்ணுவார் பாவம்.. இது சரத்தின் சொந்தப்படம் வேற. இயக்குனர் பெயர் தினேஷ்குமார். மனுஷன் சரத் தலைல நல்லா மொளகா அரச்சு இருக்கார். ஒரு வார்த்தைல சொன்னா..

1977 - சொந்தக் காசுல சூனியம் வச்சு இருக்காங்க...!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 5, 2009

தயவு செய்து விளம்பரங்களை சென்சார் செய்யுங்கள்.. ப்ளீஸ்.. !!!

நான் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதால் பொதுவாக டிவி பார்ப்பதே கிடையாது. வீட்டுக்கு போகும்போது மட்டும்தான் பார்ப்பேன். அதுவும் பாட்டு மட்டும்தான். சென்ற வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் ஊருக்குப் போயிருந்தேன். டிவியில் ஒரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது.
அது ஒரு குளிர்பான விளம்பரம். நடிகை அசின் நடித்து இருந்தார். தாவணி எல்லாம் கட்டி அம்சமாக இருக்கிறார். அவரைப் பெண் பார்க்க வருகிறார்கள். பையனின் அப்பா அசினைப் பார்த்து பாடத் தெரியுமா என்று கேட்கிறார். உடனே இவர் வீணையை எடுத்து வந்து.. யம்மாடி ஆத்தாடி என்று காட்டுத்தனமாக பாட ஆரம்பிக்கிறார். அடுத்தது என்ன.. ஆட்டம் தானே என்று கேட்டவாறே அசின் தானாகவே டப்பாங்குத்து ஆட்டம் போடுகிறார். கடைசியில் மாப்பிள்ளைப் பையனும் அவரோடு சேர்ந்து ஆடுவதோடு விளம்பரம் முடிந்தது.
விளம்பரம் எடுப்பவர்கள் என்ன மனதில் நினைத்துக் கொண்டு இதை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை. பெண் பார்க்க வரும்போது ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா என்று கேட்பதே பைத்தியக்காரத்தனம். அதற்கு ஒரு பெண் இதுபோல் கேவலமாக ரியாக்ட் செய்வது என்பது அதை விட கேவலம். பெண் பிள்ளைகள் இதுபோல் இருப்பதுதான் சரி என்று சொல்ல வருகிறார்களா? இன்றைக்கும் நமது நாட்டுக்கு ஓரளவு பெருமை சேர்ப்பது என்பது நம்முடைய கலாச்சாரம்தான். ஏற்கனவே பலவழிகளில் அதை நாசம் செய்து கொண்டு இருக்கிறோம். இப்போது வரும் சினிமாக்களும் அதைத்தான் செய்கின்றன. இப்போது அந்த பட்டியலில் விளம்பரங்களும் சேர்ந்து கொண்டதாகவே தெரிகிறது.
தற்போது பெண்கள் விளம்பரங்களில் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு பைக் விளம்பரம். ஒரு ஆண் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறான். தெருவில் ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளுடன் வந்து கொண்டு இருக்கிறாள். இவனைப் பார்த்ததும் "இது என் குழந்தைகள் அல்ல, என் அக்காவுடையது" என்று சொல்லி அவனை நோக்கி வருகிறாள். அந்த அளவுக்கு பைக் அவளை ஈர்த்து விட்டதாம். இதை விடக் கொடுமை, சிகப்பழகு க்ரீமுக்காக வரும் விளம்பரங்கள். காதலி கறுப்பாக இருப்பதால் காதலன் இன்னொரு சிகப்பான பிகரை கரெக்ட் செய்கிறான். இவள் ஒரு கிரீமை பூசி அழகான உடனே மீண்டும் காதலன் திரும்பி விடுகிறான். இவளும் ஈஈஈ என்று இளித்துக் கொண்டே அவனுடன் போகிறாள். பெண்களைக் கண்டால் இவர்களுக்கு கிள்ளுக்கீரை போல் தெரிகிறதா?
எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை சானிடரி நாப்கின்களுக்காக எடுக்கப் படும் விளம்பரங்கள். ரொம்ப நாள் முன்னாடி பார்த்த விளம்பரம் இது. ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய்க் காலத்தில் படம் பார்க்க தியேட்டருக்கு போகிறாள். அங்கே எல்லோரும் அமர்ந்து இருக்கும் இருக்கை வழியாக போகும்போது மக்கள் முகத்தை சுழிக்கிறார்கள். உடனே குறிப்பிட்ட நாப்கின்னின் விளம்பரம். இப்போது அந்த பெண் சிரித்த முகத்துடன் இருக்கைகளின் ஊடாக தயக்கம் இன்றி போகிறாள். கெட்ட மணம் எதுவுமில்லை என்று காண்பிக்க வால் இடுப்பைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் வேறு போட்டுக் காமித்தார்கள். இவர்களை எல்லாம் செருப்பால் அடித்தால் என்ன?
இங்கே ஆண்களுக்கான பொருட்களை விற்கக்கூட பெண்கள் தான் தேவைப்படுகிறார்கள். முதலில் நல்ல ப்ளேடால் ஷேவ் பண்ணினால் பிகர் கிடைக்கும்.. நல்ல பைக்.. நல்ல டிரஸ்.. நல்ல சென்ட்.. (axe choclet வரும் கேவலமான விளம்பரம்).. எல்லாமே பெண்களைக் கவரவே.. ஏன் இப்போது கடைசியில் ஜாக்கி ஜட்டி அணிந்தால்தான் பிகர் மாட்டும் என்றெல்லாம் விளம்பரங்கள்.
சினிமாவைக் கூட நாம் தேடிப் போய்த்தான் பார்க்கிறோம். ஆனால் வீட்டுக்கு உள்ளேயே நேரடியாக வந்து சேரும் இந்த சனியன் பிடித்த விளம்பரங்களை என்ன செய்வது...?சினிமாவுக்கு இருப்பதுபோல் டிவிக்கும் ஒரு சென்சார் கொண்டு வந்தால் நல்லது என்றுதான் சொல்லுவேன். அப்போதுதான் இது போன்ற கருமம் பிடித்த விளம்பரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 3, 2009

"கடி"க்க வாங்க..!!!

கொஞ்ச நாளா ஒரே சீரியஸ் பதிவா போய்க்கிட்டு இருக்கே.. மொக்க போட்டு ரொம்ப நாள் ஆச்சேன்னு நினச்சப்போ டக்குன்னு வந்துச்சு இந்த பதிவுக்கான ஐடியா.. எங்க உக்கார்ந்து யோசிச்சன்னு கேக்காதீங்க.. அது சீக்ரட்.. நான் என்னோட காலேஜ் நாட்கள்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்தப்போ (நம்புங்கப்பா).. ஒரு கலாட்டா போட்டி நடத்துனோம்.. அதுல கேட்ட கேள்விகள்தான் இதெல்லாம்.. இங்க கேட்டு இருக்குற கடிக்கு எல்லாம் பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க. யார் அதிக கேள்விக்கு சரியா பதில் சொல்றாங்களோ.. அவங்களுக்கு.. "கடி"கர் திலகம் என்னும் பட்டம் வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்..

  1. பல்லவனுக்கு எத்தனை பல் இருக்கும்?
  2. ஒருவர் வங்கிக்குள் நுழைந்தவுடன் கீழே விழுந்து விட்டார்.. ஏன்?
  3. செஸ் விளையாட வேண்டுமானால் ஜிம்முக்கு போக வேண்டும்.. ஏன்?
  4. ஆடவர் - எதிர்ப்பதம் என்ன?
  5. வாய்மை எனப்படுவது யாதெனில் ________
  6. டைட்டன் கம்பெனியில் எப்போதும் திருடு போகாது.. ஏன்?
  7. ஆண்களுக்கு மரியாதை தராத ஊர் எது?
  8. பெண்களுக்கு மரியாதை தராத ஊர்கள்?
  9. மன்மோகன் சிங் மாலையில் மட்டும்தான் வாக்கிங் போவாராம்.. ஏன்?
  10. நாய், பூனை,யானை, ________
  11. எதையுமே போட முடியாத பை எது?
  12. உக்கார முடியாத தரை எது?
  13. இந்த பரிசை ரொம்ப வயசானவங்களுக்குத்தான் கொடுப்பாங்களாம்.. என்ன பரிசு?
  14. கண்தானம் தராத ஊர் எது?
  15. நடிகை ரம்பாவுக்கு பிடித்த தமிழ் மாதம் என்ன?
  16. இனிஷியலுடன் கூடிய மிருகம் எது?
  17. ஒருவர் பீர் குடிக்கும்போது கையில் சேவாக் படத்தை வைத்து இருந்தார்.. ஏன்?
  18. இந்தியாவின் இனிஷியல் என்ன?
  19. GTTTT - _______
  20. ஒன்பது நாய்கள்.. எட்டு கொட்டடிகள்.. ஒரு கொட்டடிக்கு ஒரு நாயை மட்டும்தான் அடைக்க வேண்டும்.. எப்படி எல்லா நாய்களையும் அடைப்பீர்கள்?
  21. கல்யாணம் ஆன நாடு எது?

விடைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே..

நண்பர்களே.. கடி தெய்வங்களே.. விடை சொல்ற நேரம் வந்தாச்சு.. ஆர்வமா பதில் சொன்ன எல்லாருக்கும் நன்றி..

  1. பல்(லெ)வன் - பதினோரு பல் இருக்கும்
  2. ஏன்னா.. அவருக்கு பாங்க்ல பாலன்சே இல்ல..
  3. யானை, குதிரை எல்லாம் தூக்க வேண்டி இருக்கும்ல..
  4. ஆடாதவர்..
  5. லிப்ஸ்டிக்
  6. அங்கதான் எப்பவுமே "வாட்ச்" பண்ணிக்கிட்டு இருப்பாங்கல்ல..
  7. விஜயவாடா
  8. போடி, கன்னிவாடி, வாடிப்பட்டி..
  9. ஏன்னா.. அவர் PM
  10. இது சும்மா. என்ன வேணும்னாலும் எழுதலாம்.. குறிப்பா உங்களோட பேர்..
  11. தொப்பை
  12. புளியோதரை
  13. நோ"பல்" பரிசு
  14. "ஐ""தரா"பாத்
  15. தை (thigh)
  16. O நாய்
  17. ஏன்னா அவர் ஓப்பனர்
  18. M - மஹாத்மா காந்தி
  19. ஒரு G நாலு T - ஒரிஜினாலிட்டி
  20. மொத்தம் எட்டு கொட்டடி.. இப்போ ஆங்கிலத்துல nine dogs னு எழுதி ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு கொட்டடில அடைச்சா. சரியாப் போச்சு..
  21. இத்"தாலி"

சரியா பதில் சொன்னது நையாண்டி நைனா.. உருப்புடாதது_அணிமா.. கூட்ஸ் வண்டி.. நிலாவன்.. நாலு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா கடிச்சு, அடிச்சு இருக்காங்க.. அதனால பட்டத்த பகிர்ந்து கொடுக்கிறேன்.. கடிகர் திலகங்களே.. மிக்க நன்றி.. (யப்பா... மத்தவங்க எல்லாம் கொவிச்சுக்காதீங்கபா.. உங்கள எல்லாம் தனியா கவனிக்கிறேன்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

March 2, 2009

வழக்கொழிந்த தமிழ் வார்த்தைகள்...!!!

சிலபல நாட்களுக்கு முன்பாக நண்பர் பிரேம்குமார் சண்முகமணி என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார். (ஆரம்பித்து வைத்தது வானவில் வீதி கார்த்தி... பிறகு mayvee.. பின் பிரேம்...) வழக்கொழிந்த தமிழ் வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் தேடிப்பிடித்து எழுத வேண்டும் என்பதாலேயே தாமதம் செய்து வந்தேன். இந்நிலையில் நேற்று தோழி இயற்கை வேறு இதே தலைப்பில் நான் எழுத வேண்டும் என்று சொல்லி விட்டதால்... இதோ பதிவு. முடிந்தவரை எளிய வார்த்தைகளைத்தான் தந்து உள்ளேன்.
முதலில் உயிரெழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளில் தொடங்குவோம்..
அங்கதம் - மரபுகளை, பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தல்
அஞ்சனம் - கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
ஆதனம் - சொத்து
ஆரம் - மாலை
ஆலிங்கனம் - தழுவுதல்
இடாப்பு - பதிவேடு
இரண்டகம் - நம்பிக்கைத் துரோகம்
ஈடாட்டம் - உறுதி குலைதல்
ஈனம் - இழிவு, கேவலம்
உத்தரீயம் - மேலாடை
உற்பாதம் - தீய விளைவு
ஊடு - பொய்க்கோபம் கொள்ளுதல்
ஊசு - பதம் கெட்டுப்போதல்
எத்தனம் - முயற்சி
எதேஷ்டம் - தேவைக்கு அதிகம்
ஏகாலி - சலவைத் தொழிலாளி
ஏனம் - பாத்திரம்
ஐது - அடர்த்திக்குறைவு
ஐமிச்சம் - சந்தேகம்
ஒக்கிடு - பழுது பார்த்தால்
ஒழுகலாறு - பழக்க வழக்கம்
ஓந்தி - ஓணான்
ஓம்பு - பேணுதல்
ஔஷதம் - மருந்து
இனி உயிர்மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்..
கச்சு - பெண்கள் மார்பில் அணியும் துணி
கபோலம் - கன்னம்
சண்டமாருதம் - பெரும் காற்று, சூறாவளி
சதிபதி - தம்பதி
ஞாலம் - பூமி
டாம்பீகம் - ஆடம்பரம்
தசம் - பத்து
தந்துகி - மிக நுண்ணிய ரத்தக்குழாய்
நயனம்- கண்
நிகண்டு - அகராதி நூல்
பத்தாயம் - எலிப்பொறி
பரதவர் - மீனவர்
மதலை - குழந்தை
மாச்சரியம் - பகைமை
யாக்கை - உடல்
ரோகம் - நோய்
லோபி - கருமி
வயணம் - சரியான விவரம்
விகசித்தல் - மலர்தல்
வைரி - எதிரி
இதுவரை தூய தமிழில் உள்ள சில வார்த்தைகளை பற்றி எழுதினேன்.. இனி.. ஒரு சில வார்த்தைகள்.. மதுரை வட்டார வழக்கில்..
சூதானம் - பத்திரம்
வெஞ்சனம் - சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு - தெரு முடியும் இடம்
வெங்கப்பய - உருப்படாதவன்
சொளகு - முறம்
சோப்ளாங்கி - சோர்ந்து போனவன்
மெனா - பைத்தியம் போல் இருப்பவன்
(இப்போதைக்கு இது போதும்.. )
தமிழில் இன்று பயன்படுத்தப் பட்டாலும் நாம் சரியாக புரிந்து கொள்ளாத வார்த்தைகளும் உள்ளன. அவற்றில் சில..

தியாகம் - எத்தனையோ பேர் செய்த தியாகத்தின் பலன்தான் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம்.. இது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா..?

மரியாதை - பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் நம் வீட்டில் கொடுக்கிறோமா?

மனிதநேயம் - சக மனிதனின் வேதனை கண்டு உள்ளம் நோகும் மனிதநேயம் இன்னும் நம் எத்தனை பேரில் மீதம் இருக்கிறது..?

இந்த சூழ்நிலைகள் எல்லாம் மாறினால்தாம் உண்மையிலேயே உலகில் மகிழ்ச்சி பிறக்கும்.. அது நடக்கும் என நம்புவோம்..
( இந்த பதிவில் எங்கேனும் தூய தமிழ் அல்லாத சில வார்த்தைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.. சுட்டிக் காட்டுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்.. )
இந்த தொடர்பதிவுக்கு நான் அடுத்து அழைக்க விரும்பும் நண்பர்கள்..
சொல்லரசன்...
கவின்..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)