August 21, 2009

மாதவம் செய்திட வேண்டுமம்மா..?!!!

"வாழ்த்துகள் அம்மா.. உங்களுக்கு பேத்தி பொறந்திருக்கா.."

"அடச்சே.. பொட்டப் புள்ளையா.. செலவு கணக்கு தானா? ஒத்தப் பையனோட போதும், நிப்பாட்டிக்கடான்னா கேட்டாத்தானே.. இனி இதை வளர்த்து, ஆளாக்கி, கட்டிக்கொடுத்து.. கிழிஞ்சிடும் போ.."
***************
"என்னங்க.. புள்ளைக்கு பால் பவுடர் தீர்ந்து போச்சு.. வரும்போது வாங்கிட்டு வாங்க.."

"ஏண்டி.. நீ பெத்து வச்சு இருக்கிறது பிள்ளதானா? இந்தத் தீனி திங்கிறது.. இதுக்கு பால் டப்பா வாங்கிப்போட்டே நான் அழிஞ்சிடுவேன் போலையே.."
***************
"அப்பா.. எனக்கும் புது சட்டை, பொம்மை எல்லாம் வேணும்.."

"சனியனே.. இங்க என்ன கொட்டியா கிடக்குது.. அதெல்லாம் உங்க அண்ணன் பயன் படுத்தின பழசு எல்லாம் கிடைக்குதுல்ல.. அத வெச்சு வெளையாடு.. போதும்.."
***************
"அப்பா.. எங்க கிளாஸ்லையே நான் தான் மொத ரேங்க்.. ரிபோர்ட் கார்ட்ல கையெழுத்து போட்டுக் குடுங்கப்பா.."

"சரி சரி.. பெரிசா ஏதோ சாதிச்சுட்ட மாதிரி பீத்திக்காத.. வேலையா இருக்கேன்னு தெரியுதுல.. உங்கம்மாக் கிட்ட வாங்கிக்க போ.."
***************
"நீ பெரிய பொண்ணு ஆகிட்ட.. இனிமேல இஷ்டத்துக்கு வெளிய போய் விளையாடக் கூடாது.. சரியா? அடக்க ஒடுக்கமா வீட்டுல இருக்கணும்.. புரிஞ்சுதா?"

"ஏம்மா.. அண்ணனும் என்ன விட பெரிய பையன் தானே.. ஆனா அவன மட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க?"

"அது நாம வாங்கி வந்த வரம்டி.."
***************
"எனக்கு மேல படிக்கனும்னு ஆசையா இருக்குப்பா.. ப்ளீஸ்ப்பா.."

"பொம்பளப்பிள்ள இவ்வளவு படிச்சதே போதும்.. போய் உங்க அம்மாவுக்கு ஒத்தாசையா சமையல கத்துக்க.. கூடிய சீக்கிரம் உன்னைய ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுத்தாத்தான் நிம்மதி.. "
***************
"சீக்கிரம் விளக்க அணைச்சிட்டு பக்கத்துல வா.."

"என்னங்க.. எனக்கு பயமா இருக்கு.. இதை கொஞ்ச நாள் கழிச்சு வச்சிக்கலாமே.."

"இதப்பாரு.. நீ பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல.. ரொம்ப நாளா இதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.. கிட்ட வா.."

"இல்லைங்க.. ஆனாலும்.."

"சும்மா பேசிக்கிட்டு இருக்காம வான்னா.."
***************
"என்னங்க.. சாயங்காலம் எங்கையாவது வெளில போகலாமா?"

"இங்க அவனவனுக்கு இருக்குற டென்ஷன்ல இது ஒண்ணுதான் குறைச்சல்.. போடி.. போய் வேலையப்பாரு.."
***************
"பையன் பொறந்திருக்கான்னு சொன்னவுடனே சிரிப்பைப் பாரு இவளுக்கு.."

"அதுக்கு இல்லம்மா... பொட்டப் புள்ளையா பொறந்து என்ன மாதிரி சிரமப்பட வேண்டாம்ல.. அதுதான் ஒரு சின்ன சந்தோஷம்.."
***************
"டேய்.. நீ அப்பா பிள்ளையா.. அம்மா பிள்ளையா.."

"அப்பா பிள்ளை.."

"ஏன் அப்பா பிடிக்கும்.."

"அவர்தான் சாக்லேட் எல்லாம் வாங்கித் தருவார்.. அம்மா படி படின்னு திட்டும்.. எனக்கு அம்மா வேண்டாம்.."
***************
"டேய் தம்பி.. ஏதாவது சாப்பிட்டுட்டு போடா.."

"உனக்கு வேற வேலையே இல்லையாமா... வேலையா போகுற நேரத்துல கடுப்ப கிளப்பிக்கிட்டு.. எங்களப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்.. போ.."
***************
"மருமகளே.. பசிக்குது.. கொஞ்சம் காப்பி போட்டு தாரியா.."

"ஆமா.. உங்களுக்கு செய்றதுக்குத் தான் எங்க அப்பா அம்மா என்னைய இங்க கட்டிக் கொடுத்தாங்களா.. சும்மா சும்மா எதையாவது கேட்டுக்கிட்டு.. ஊத்துற கஞ்சிய குடிச்சுட்டு பேசாம படுத்துக் கிடங்க.. நொய் நொய்னு என் உசிர வாங்காதீங்க.."
***************
"தம்பி... கண்ணு சரியாத் தெரிய மாட்டேங்குது.. சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னைய கண்ணு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறியா?"

"இப்போ உனக்கு எதுக்கு கண்ணாடி.. நீ டிவி பார்க்கலைன்னு யார் அழுதா... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. சும்மாக் கிட.."
***************
"மகராசி.. சுமங்கலியாப் போய் சேர்ந்துட்டா.. அவ மனசு நெறஞ்ச வாழ்க்கை.. எத்தனை பேருக்கு கிடைக்கும்.. கொடுத்து வச்ச மனுஷி..!!!"

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

35 comments:

Anonymous said...

ஓட்டுபோட்டாச்சு. சந்தனமுல்லை குட்பை ஜயஷ்ரின்னு ஒரு பதிவு போட்டிருக்காங்க. உங்க இடுகைக்கும் அதுக்கும் நிறைய தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//"தம்பி... கண்ணு சரியாத் தெரிய மாட்டேங்குது.. சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னைய கண்ணு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறியா?"

"இப்போ உனக்கு எதுக்கு கண்ணாடி.. நீ டிவி பார்க்கலைன்னு யார் அழுதா... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. சும்மாக் கிட.."
***************//

இந்த வார்த்தைகள் பல நடுத்தர குடும்பங்களில் கேட்க்கலா இப்போவும்......

Prabu M said...

இந்தப் பதிவில் ஆண்கள் பேசும் வசனங்கள் நம் வாழ்வின் அவைக்குறிப்புகளிலிருந்து நீக்கும் சர்வ வல்லமை (!) நமக்கு இருக்கிறது... ஆனால் அந்த மருமகள் ஒரு பெண்தானே!! நல்ல பதிவு நண்பா... பாவம் பெண்கள்... இன்றும் கூட... :(

நையாண்டி நைனா said...

/*
"இதப்பாரு.. நீ பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல.. ரொம்ப நாளா இதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.. கிட்ட வா.."
*/

சிரிச்சி.. சிரிச்சி... வந்தார் கானா பானா டோய்...

ஈரோடு கதிர் said...

//நல்ல பதிவு நண்பா... பாவம் பெண்கள்... இன்றும் கூட... :(//

அப்படியே வழிமொழிகிறேன்..


கார்த்திகை பாண்டியன்

அருமையான பதிவு. மிக எளிதாக கையாண்டு சுருக்கென மனதில் தைக்கும் வகையில் இருக்கிறது

Raju said...

நல்ல பார்வை.
சில உண்மைகள் மாதிரியோ அல்லது நீங்கள் செய்த்தற்கு எதிர்மறையாகவோ..!

குடந்தை அன்புமணி said...

ஒரு நாவலையே இப்படி சுருக்கிப் போட்டீங்களே...
காலம் மாறினாலும் இந்த நிலை மட்டும் மாறாது போலிருக்கு... ம்!

தேவன் மாயம் said...

ஓட்டுப்போட்டு விட்டேன்.4/4.

தேவன் மாயம் said...

நடுத்தரக் குடும்ப சூழ்நிலையை இயல்பா எழுதி இருக்கீர்!!

மணிஜி said...

ஒரே மூச்சில் மூன்று தலைமுறைகளை தாண்டி.....ஆனால் இந்நிலை மாறிவிடும் என்று நம்பிகிறேன்

நர்சிம் said...

என்னாச்சு தல?.

லோகு said...

இப்படி கூட சொல்ல முடியும்னு சொல்லி இருக்கீங்க.. அபார எழுத்து திறமை அண்ணா.. இதெயெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் சொல்லி தாங்க..

****

ஆனா இப்ப பெண் சமுதாயத்தின் நிலை இவ்ளோ மோசமா இல்லை என்பது என் கருத்து..

புல்லட் said...

எம் பெற்றோர் காலத்தில் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருந்தார்கள்.. அவர்கள் பாவம்.. ஆனால் இப்போது உப்படியான நிலமை இல்லை.. எல்லாரும் சனியன் பிடித்த பெண்களாகிவிட்டார்கள்.. தற்பெருமை ஈகோ கர்வம் செருக்கு மூர்க்கம் சண்டை பிடிக்கும் குணம் என்று சாத்தானின் வடிவங்களாகவே மாறிவிட்டார்கள்.. நீங்கள் இன்னும் திருமணம் செய்யாதபடியால்தான் இப்படி சொல்கிறீர்கள்..மாட்டிக்கொண்ட என் நண்பர்களின் அடிப்படையில் நான் என் கருத்த சொன்னேன்..

Karthik said...

SEMA!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமையான நடை.மிக மிக நல்ல பதிவு.வாழ்த்துகள்.

சுந்தர் said...

கல்வி அறிவும், பொருளாதார சுதந்திரமும் இல்லாத பெண்கள் மட்டும்தான் , இந்த மாதிரி தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள் என நினைக்கிறேன்.

நாஞ்சில் நாதம் said...

நல்லாயிருக்கு

ஹேமா said...

கார்த்தி,இது பதிவல்ல.எழுத்துக்கள் அல்ல.பெண்ணாய்ப் பிறந்தவர்களின் கண்ணீர்த் துளிகள்.ஒவ்வொரு சொல்லும் எனக்குள் அடக்கம்.
என்னதான் நாகரீகமும் கண்டுபிடிப்புக்களும் வளர்ந்தாலும் இது மட்டும் இருந்த இடத்திலேதான்.விதிவிலக்காய் எங்காவது ஒன்றிரண்டு நல்லது நடக்குது.

Anonymous said...

ச்சே பாவம் பெண்கள்.
அவங்களுக்கு தான் இந்த உலகத்துல எவ்ளோ தொல்லைகள். இம்சைகள்.

Anonymous said...

ஹேமா சொன்னதையே தான் நானும் வருமொழிகிறேன்.
பல முறை நான் பெண்ணாய் பிறந்ததுக்காக வருந்தியதுண்டு.
இந்த பிளாக் எழுத் ஆரம்பிக்கும் போது கூட.
கடவுள் மனிதர்களை ஆண், பெண் என இல்லாமல் ஒருவராகவே படைத்திருக்கலாம்.

சொல்லரசன் said...

ஆறில் இருந்து அறுபது வரை பெண்களின் நிலை தற்போது மாறிவருகிறது.சுந்தர் சொல்லியது போல் சில தாக்குதல்கள் ஒழிக்கபடவேண்டும்

வால்பையன் said...

இனி இதுக்கு வேலையில்லை நண்பா!
இனி பெண்கள் தான் நாட்டை ஆளப்போறது!

அத்திரி said...

நண்பா அருமை................

பீர் | Peer said...

//லோகு said...
... ஆனா இப்ப பெண் சமுதாயத்தின் நிலை இவ்ளோ மோசமா இல்லை என்பது என் கருத்து..//

<<<>>>

//வால்பையன் said...

இனி இதுக்கு வேலையில்லை நண்பா!
இனி பெண்கள் தான் நாட்டை ஆளப்போறது!//

சரியா சொல்லியிருக்கீங்க லோகு, வால்பையன்.

ஆனால், மருமகள் விசயத்தில் பிரபு.எம் சொல்லியுள்ளதை ஏற்றுக்கொள்வதோடல்லாமல், அதையும் நம்மால் மாற்ற முடியும் என்று நம்புவோம்.

கார்த்திக், இந்த வசனங்கள் வரலாறாகும்.

தமிழ். சரவணன் said...

//"மருமகளே.. பசிக்குது.. கொஞ்சம் காப்பி போட்டு தாரியா.."

"ஆமா.. உங்களுக்கு செய்றதுக்குத் தான் எங்க அப்பா அம்மா என்னைய இங்க கட்டிக் கொடுத்தாங்களா.. சும்மா சும்மா எதையாவது கேட்டுக்கிட்டு.. ஊத்துற கஞ்சிய குடிச்சுட்டு பேசாம படுத்துக் கிடங்க.. நொய் நொய்னு என் உசிர வாங்காதீங்க.."//

தலைவா நீங்க எந்த காலத்தில் இருக்கிங்க... இதுவரைக்கும் சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் (மாமியார், நாத்தனார்கள்) வரதட்சணை கொடுமை சட்டத்தில் விசாரனைக்கைதிகாளக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்... என்று அரசு ஆய்வரிக்கை சொல்கின்றது... அந்த காலம் எல்லாம் மலையெறிப்பொச்சி தலைவா!

Unknown said...

:)

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் பெண்ணைப் பெற்ற பெருமையில் பயமுறுத்தினது:
//இனி இதுக்கு வேலையில்லை நண்பா!
இனி பெண்கள் தான் நாட்டை ஆளப்போறது!//

கராத்தே அது இதுன்னு பொண்ணுக்கு கத்துக் கொடுக்காமலேயே, ஆட்சியைப் பிடித்த பெண்களிடம்சிக்கிக் கொண்டு நாடு பட்ட அவஸ்தையை நினைத்துப் பார்த்து,

வால்ஸ், இப்பூடியா பயமுறுத்துறது? எதுவானாலும் பேசித் தீத்துக்கலாம்:-))

Anonymous said...

பாண்டியன் உங்களை தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்.

RAMYA said...

அருமையான அசத்தல் எழுத்து நடை.

கதை போல் படிக்க முடியலை.

நிதர்சனம் சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கே!

தலை முறைகள் மாறி வந்து கடைசி காலத்தில் படும் அவஸ்தை மனதை என்னவோ செய்தது.

RAMYA said...

//"தம்பி... கண்ணு சரியாத் தெரிய மாட்டேங்குது.. சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னைய கண்ணு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறியா?"

"இப்போ உனக்கு எதுக்கு கண்ணாடி.. நீ டிவி பார்க்கலைன்னு யார் அழுதா... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. சும்மாக் கிட.."
//

மனதை என்னவோ செய்த வரிகள் :((

ச.பிரேம்குமார் said...

பாண்டியன், நீங்கள் சொல்வது போல் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் அருமை. கேட்டது.... கேட்டுகிட்டே இருப்பது.... சொல்வதிற்கு ஒன்றும்மில்லைபா

மேவி... said...

nantru

"உழவன்" "Uzhavan" said...

எழுதியவிதம் அருமை

Unknown said...

சின்ன சின்ன உரைநடைகளில் ஒரு பெரிய விஷயத்தை சொல்லிவிட்டீர்கள்..

அருமை..