சந்தோஷமாக இருக்கிறேன் என்னும் ஒற்றை வார்த்தையின் மூலம் என்னுடைய உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலாது. அத்தனை சந்தோஷமாக உணர்கிறேன். மதுரையில் "குழந்தைகள் மனநலம்" பற்றிய கருத்தரங்கத்தை டாக்டர்.ஷாலினியின் தலைமையில் நடத்த வேண்டும் என்பது மதுரைப் பதிவர்கள் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த விஷயம். அதை ஒரு கனவு என்று கூட சொல்லலாம். சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தக் கனவு நிஜமானது.
செப்டம்பரின் ஒரு அருமையான மாலைப்பொழுதில் இந்த நிகழ்ச்சிக்கான விதை தூவப்பட்டது. சமூகத்துக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று மதுரை பதிவுலக நண்பர்கள் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற "குட் டச் பேட் டச்" நிகழ்ச்சியை மதுரையில் நடத்தலாம் என முடிவானது. ஆனால் டாக்டர்.ஷாலினியின் தேதிகள் கிடைப்பது சிக்கலாகிப் போனது. முதல் முறையாக நாம் நடத்தலாம் என முடிவு செய்த விஷயம் என்பதால் அதை மாற்றவும் மனம் வரவில்லை. நல்லதே நினைப்போம், நல்லது நடக்கும்" என்னும் நம்பிக்கையோடு பொறுமை காத்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. கடைசியாக ஜனவரி31 அன்று நிகழ்ச்சியை நடத்துவதென முடிவானது.
31-01-10 - 7:00 AM"பொதிகையில்"
டாக்டர்.ஷாலினி வந்து இறங்கினார். தருமி ஐயாவும், நண்பர் ஸ்ரீதரும் அவரை வரவேற்று அமெரிக்கன் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் புகைவண்டி நிலையத்துக்குப் போக இயலவில்லை. கருத்தரங்கம் நடத்துவதற்காக செமினார் ஹாலைத் தந்து உதவிய அமெரிக்கன் கல்லூரி நிர்வாகமே டாக்டர் தங்குவதற்காக விருந்தினர் விடுதியையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலை சிற்றுண்டிக்கு எல்லோரும் சந்திப்பது என முடிவானது.
9:00 AMநான் அமெரிக்கன் கல்லூரியை அடைந்தபோது தருமி ஐயா ஏற்கனவே வந்திருந்தார். டாக்டரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். போனில் அவரின் குரலைக் கேட்டு கொஞ்சம் டரியலாகிப் போயிருந்தேன். ஆள் கொஞ்சம் கெத்து காமிப்பார் போல என்று எண்ணியிருந்தேன். ஆனால் நேரில் என்னுடைய கணிப்புக்கு அப்படியே எதிர்ப்பதமாக இருந்தார் ஷாலினி. ரொம்பவே சாப்ட் டைப் - எளிமை. கலகலப்பாக பேசினார். கொஞ்ச நேரத்தில் ஸ்ரீதரும் வந்து சேர்ந்தார். மீனாட்சி பவனில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திருமலை மன்னரின் அரண்மனைக்கு கிளம்பினோம். அங்கே எடுத்த சில போட்டோக்கள்..
11:00 AMடாக்டரை மீண்டும் விடுதியில் தங்க வைத்து விட்டு கல்லூரிக்கு திரும்பினோம். கல்லூரி வாசலில் கட்ட வேண்டிய பிளக்சை பிரகஸ்பதி வழக்கம் போல வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்தது. (வேற யாரு.. நானேதான்..) அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது நண்பர் ஜாபர் ஈரோட்டில் இருந்து வந்து விட்டதாக அலைபேசினார். அவரை கூப்பிட்டுக் கொண்டு கல்லூரிக்கு வந்து சேர்ந்தபோது நண்பர் வால்பையனும் வந்து விட்டிருந்தார்.
2:00 PMமதிய உணவுக்கு அண்ணா நகர் தாய் ரெஸ்டாரண்டுக்குப் போனோம். எங்களுக்குள் பேசுவதற்கான விஷயங்கள் நிறையவே இருந்தன. ஷாலினி இப்பொது சமண மதம் பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாராம். அதைப்பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஓரளவுக்கு மக்கள் கூட்டம் வந்த பிறகு டாக்டரை அழைத்து வரலாம் என முடிவு செய்தோம். சாப்பிட்டுமுடித்து அவரை விடுதியில் விட்டுவிட்டு செமினார் ஹாலுக்கு கிளம்பினோம்.
3:00 PM
அதை அதிர்ச்சி என்று சொல்லுவதா இல்லை பேரதிர்ச்சி என்று சொல்லுவதா? ஹாலில் மொத்தம் மூன்றே பேர்தான் இருந்தார்கள். சீனா ஐயா, ஜெரி மற்றும் அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த நண்பரொருவர். எனக்கு பேச்சே வரவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நூறு பேர் வருவார்கள் என்றெண்ணிக் கொண்டிருந்த நிலையில் வெறும் மூன்று பேர் மட்டும் இருந்தால் மண்டை காயுமா காயாதா? நானும் நம்பர் ஜாபரும் நிறைய பதட்டத்துடன் கல்லூரி வாசலில் வந்து நின்று கொண்டிருந்தோம். வருவோர் போவோர் முகத்தை எல்லாம் பார்த்து இவர்கள் நம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களாக இருப்பர்களோ என்று அடித்துக் கொண்டது மனது. சற்று நேரம் கழித்து ஒன்றிரண்டு பேர் என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வரத் துவங்கியபின்தான் நிம்மதி ஆனது.
3:30 PMஅரங்கத்தில் ஐம்பது பேர் கிட்டே இருந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது. சீனா ஐயா நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, கா.பா.. அட நான்தானப்பா.. வரவேற்புரை வழங்கினார். குழந்தைகள் மனநலம், பெண்களின் அடிப்படை உடற்கூறுகள், குட் டச் பேட் டச் எனப் பல விஷயங்களை பற்றி எளிமையாக விளக்கினார் ஷாலினி. தவறுகளை செய்பவர்களை விட இடம்கொடுப்பவர்கள் அதிகமாக இருப்பதாலேயே பிரச்சினைகள் ஜாஸ்தி ஏற்படுகின்றன என்றவர் பல எடுத்துக்காட்டுகளையும் கூறினார். குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கும்போது ஜனன உறுப்புகளைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசி முடித்தார். அவர் முடிக்கும்போது அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி விட்டிருந்தது.
5:00 PMஒரு சிறிய தேநீர் இடைவேளைக்குப் பிறகு கேள்வி நேரம் தொடங்கியது. நேரில் கேட்க சங்கோஜமாக இருக்கக்கூடிய கேள்விகளை மக்கள் எழுதித் தந்தார்கள். அதை நண்பர் காவேரிகணேஷ் வாசிக்க டாக்டர் பதில் சொல்லத் தொடங்கினார். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஷாலினி நல்லதொரு மனநல மருத்துவர் என்பதோடு மட்டுமல்லாது இதிகாசங்களையும் கரைத்துக் குடித்தவராக இருக்கிறார். தனக்கு தேவையான இடங்களில் அருமையான உதாரணங்களோடு அவர் இதிகாசக் கதைகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.
குழந்தைகள் மனநலம் மட்டும் என்றிராமல் நிறைய பொதுவான கேள்விகளும் கேட்கப்பட்டன. அனைத்துக்கும் டாக்டர் சலிக்காமல் பதில் சொன்னார். இந்தக் கேள்வி பதில் நேரமே சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆண்கள் எல்லாம் ஹாலை விட்டு வெளியேறி விட, பெண்கள் மட்டும் டாக்டருடன் தனிப்பட்ட முறையில் ஒரு அரை மணி நேரம் உரையாடினார்கள். மொத்தத்தில் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தபோது மணிஏழரையைத் தாண்டி விட்டிருந்தது.
நாலு மணி நேரம். ஒரு சின்ன சலிப்பு கூட இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தினார் ஷாலினி. அருமையாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் வால்பையனும், காரைக்குடியில் இருந்து வந்திருந்த நண்பர் "தமிழ்த்துளி" தேவன்மாயமும் டாக்டர்.ஷாலினிக்கு ஒரு நினைவுப் பரிசினை அளித்தார்கள். தருமி ஐயா நன்றியுரை ஆற்றினார். பதிவர்கள் அனைவரும் டாக்டருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். இன்னும் சில புகைப்படங்கள் உங்களுக்காக..
இரவு உணவை முடித்துக் கொண்டு புகைவண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். டாக்டருக்காக "பாண்டியனில்" டிக்கட் புக் செய்யப்பட்டு இருந்தது. திருநெல்வேலி லக்ஷ்மி விலாசின் ஸ்பெஷல் இனிப்புகளை டாக்டருக்கு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தோம். அவர் கிளம்பிய பின்பு தருமி ஐயா சொன்ன வார்த்தைகள் ... "நல்லாத் தெரிஞ்ச நண்பர் ஒருத்தரோடப் பழகுன மாதிரியே இருந்தது.. போகுரப்ப மனசுக்கு சங்கடமாப் போச்சு..இல்ல?" சத்தியமான வார்த்தைகள். It was an wonderful experience. Thanks a lot Dr.Shalini.
நன்றிகள் பல..நன்றி என்று சொல்லி உங்களை எல்லாம் அந்நியப்படுத்த விரும்பவில்லை.. இருந்தாலும்..
கடைசி நேர அவசரத்தில் டிக்கட் எடுக்கவும், அதை கன்பார்ம் செய்து கொடுக்கவும் பேருதவி செய்த அண்ணன் "வானம்பாடிகள்" பாலாவுக்கு ரொம்ப நன்றி.
பதிவுகளின் மூலம் இந்த நிகழ்ச்சி இன்னும் பலர் சென்றடைய உதவிய கேபிள் சங்கர், ராஜூ, ஈரோடு கதிர், நர்சிம், ஈரோடு பதிவர் குழுமம் ஆகியோருக்கு மதுரைப் பதிவர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுக்காக சிரமம் பார்க்காமல் வந்த நண்பர் வெயிலானுக்கும் நன்றி.
நாங்களும் எங்கள் பங்களிப்பை செய்வோம் என்று உதவிய நண்பர்கள் ஆ.ஞானசேகரனுக்கும், வால்பையனுக்கும், ராஜாவுக்கும், அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த ரவிக்கும் நன்றி.
நிகழ்வை நல்ல முறையில் நடத்த தோள்கொடுத்த அமெரிக்கன் கல்லூரிக்கும் நன்றி.
இறுதியாக, கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்.. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியம் ஆகி இருக்காது. ரொம்ப நன்றி.
மதுரைப் பதிவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிதாக சில மதுரைப் பதிவர்களின் அறிமுகமும் கிடைத்தது.
மதுரை சரவணன்
வெற்றி
காவேரிகணேஷ்
எம்.பிரபு
ஸ்ரீவித்யா