March 3, 2010

கலாப்ரியாவின் "நினைவின் தாழ்வாரங்கள்"..!!!

திருநெல்வேலி பற்றி புதுமைப்பித்தன் எழுதியது ஒரு விதம்; வண்ணதாசன், வண்ணநிலவன் காட்டிய திருநெல்வேலி இன்னொரு வசீகரம். கலாப்ரியா தன் நினைவுகளின் வழியே அடையாளம் காட்டும் திருநெல்வேலியோ இந்த மூன்றில் இருந்தும் மாறுபட்டது. எவ்வளவு மாறுபட்ட மனிதர்கள், சுபாவங்கள். ஒரு ஆவணப்படத்தை காண்பது போல அத்தனை நெருக்கமாகவும், ஈரத்துடனும் இங்கே திருநெல்வேலி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சாத்தியமாக்குவது, கலாப்ரியாவின் மொழி. எதிரில் அமர்ந்து உரையாடுவது போன்ற நெருக்கத்தைத் தருகிறது. வாழ்வின் துயரங்களை கேலி செய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படி, தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போது கூட கலாப்ரியாவிடம் சுயஎள்ளல் காண முடிகிறது - எஸ்.ராவின் முன்னுரையில் இருந்து...

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-02-2010) அன்று மதுரையில் கலாப்ரியா எழுதிய "நினைவின் தாழ்வாரங்கள்" நூல் அறிமுக விழா நடைபெற்றது. "எட்டையபுரம்" என்ற வலைப்பூவில் அவர் எழுதி வந்த பத்திகளின் தொகுப்பு. தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகள் விழாவில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வின் சில துளிகள், என் நினைவுகளில் இருந்து..



வந்திருந்த நண்பர்கள் அனைவரையும் கவிஞர் சமயவேல் வரவேற்றார்.

"சுரேஷ்குமார் இந்திரஜித், ராஜமார்த்தாண்டன் ஆகியோர் நடத்தி வந்த சந்திப்பு கூட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சி இது. நல்லதொரு ஆரம்பமாக கலாப்ரியாவின் புத்தகத்தை அறிமுகம் செய்கிறோம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நண்பர்கள் முன்வைத்து உரையாடுவார்கள் என நம்புகிறேன்..."

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர் நா.முருகேசப்பாண்டியன்.



"ஒரு கவிஞன் தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்களை எந்தவிதமான சங்கடங்களும் ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்வதென்பது கஷ்டம். ஆனால் கலாப்ரியா அதை செய்திருக்கிறார். தன் மனதின் எல்லா எண்ணங்களையும், அவை பொதுபுத்தி கொண்ட சமூகத்தால் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இல்லாமல் இருந்தால் கூட, எந்த விதமான சமாதானமும் செய்யாமல் அப்படியே சொல்வதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியம் அவருக்கு இருக்கிறது. வாழ்த்துகள்.."

முதலில் பேசவேண்டிய சுந்தர்காளி சற்று தாமதமாக வந்ததால் யவனிகா ஸ்ரீராம் பேச அழைக்கப்பட்டார்.

"பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்கு முருகேசபாண்டியன் அண்ணனைத் தெரியும். குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய இலக்கிய கூட்டத்துக்கு நண்பர்களோடு போய்க் கொண்டிருந்தேன். காலச்சுவடு, இலக்கியம் என்றெல்லாம் பேசிகொண்டிருப்பதை பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர், நாங்கள் இறங்கியவுடன் தானாக வந்து பேசினார். எங்களை சரியான இடத்துக்கு கூட்டிப் போனார். நல்லப் பேசுறான்னு சொல்லி அங்க முதல் ஆளா பேசுங்கன்னு என்னை மாட்டி விட்டவர் இன்னைக்கும் அதையேதான் பண்ணி இருக்கார்.



சின்னாளப்பட்டியில் எங்கள் குடும்பத்தை தெரியாதவர் இருக்க முடியாது. கூட்டு குடும்பம் - மூன்று ஆண், நான்கு பெண்கள். எங்கள் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வார், பணம் காசு இல்லைனாலும் ஒழுக்கமா இருக்கணும்னு. ஆனா நான் அதுக்கு அப்படியே நேர்மாறாக இருந்தவன். இளம் பிராயத்தில் பெண்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஆரம்பிக்கிறது? உண்மையை சொன்னால் அது நம் வீட்டுப் பெண்கள் மீதானதாக கூட இருக்கலாம். ஆங்கிலப் படமான "பாபேல்"இல் ஒரு காட்சியில் தன் உடம்பிறந்த சகோதரி குளிப்பதை நாயகன் ஒளிந்திருந்து பார்ப்பது போல காட்சி வரும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் பெண்கள் மீதான பார்வையும், மனதின் விகாரங்கள் பற்றிய கலாப்ரியாவின் தைரியமான விவரணைகளும் மிக முக்கியமானவை..."

அடுத்ததாக பேசிய சுந்தர்காளி முக்கால் மணி நேரம் பொதுவாக மாறிப்போன விஷயங்கள் மற்றும் பால்யம் பற்றி பேசியதாகவும் புத்தகம் பற்றி கொஞ்சம் பேசியதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். புதுமாப்பிள்ளை திருசெந்தாழையும் ஓரிரு வார்த்தைகளில் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டதாக அறிந்தேன். (சிறு பணி காரணமாக வெளியே சென்று வந்ததால் இவர்களின் பேச்சை கேட்க இயலவில்லை..)

தொடர்ந்து ரமேஷ் பிரேதன் பேசினார்.

"கலாப்ரியாவின் இந்தப் புத்தகத்தை தமிழின் "Memoirs" என்று சொல்லலாம். நம்முடைய பால்யவயது நினைவுகளை திரும்பி பார்ப்பது சுகமானது. ஆனால் அதன் மூலமாக நான் எதைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் இந்தப் புத்தகம் ரொம்ப மேம்போக்கானது என்று சொல்லுவேன். பொதுவாக அவருடைய கவிதைகளில் இருக்கும் காத்திரமும், கோபமும் இந்தப் புத்தகத்தில் எங்கும் தென்படவில்லை.



நான் பிரதியை விமர்சிக்கிறேன். எழுதி முடித்தவுடன் கலைஞன் இறந்து போகிறான். எனவே இந்தப் புத்தகத்தில் இருக்கும் சோமசுந்தரமும் கலாப்ரியாவும் வெவ்வேறாகத்தான் எனக்குப் படுகிறது. இருவரின் வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. புத்தகத்தில் பயன்படுத்தி இருக்கும் சொற்றொடர்கள் உடைந்து காணப்படுகின்றன. ஒரு புது விதமாக அது பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதை கலாப்ரியா வேண்டுமென செய்தாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வடிவம் எனக்கு ரொம்பவே அழகாக இருக்கிறது..."

அடுத்தவர்.. கவிஞர் லிபி ஆரண்யா..

"இந்தப் புத்தகம் முழுதும் எம்ஜியாரை கலாப்ரியா கொண்டாடி இருக்கிறார். எனக்கு அதுபோலத்தான் கலாப்ரியா. அவருடைய கவிதைகளைப் படித்து இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் நான்.. இதை சொல்லிவிட்டு என் கருத்துகளை இங்கே முன்வைக்கிறேன்.



ஒரு கவிஞன் உரைநடைக்கு மாற வேண்டிய அவசியம் என்ன என்று இங்கே ஒரு கேள்வி இருக்கிறது? உலகத்திலேயே அதிகமாக உணர்ச்சி வசப்படக் கூடியவன் கவிஞன்தான். அதேபோல அதிகமான கருணையற்றவனும் அவன்தான். எந்த தயவு தாட்சண்யமும் பார்க்காமல் வார்த்தைகளை வெட்ட வேண்டியிருக்கும். அப்போது தான் சொல்ல வரும் விஷயம் எல்லாவற்றையும் கவிதைகளாக மட்டுமே சொல்ல முடிவதில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே கலாப்ரியா இந்த உரைநடை புத்தகத்தை எழுதி இருக்க முடியும்.

சினிமா எந்த அளவுக்கு ஒரு சமூகத்தை பாதித்து இருக்க முடியும் என்பதற்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்து எடுத்துக்காட்டு. குறிப்பாக எம்ஜியார் என்னும் மந்திர சக்தி எந்த அளவுக்கு தமிழ் மக்களை மயக்கி இருந்தது என்பதை ரொம்பத் தெளிவாக கலாப்ரியா பதிவு செய்திருக்கிறார். அதுபோலவே ஆழ்மனத்தின் வக்கிரனகளைப் பற்றி பேசவும் அவர் தயங்கவில்லை. கூடவே தன் வறுமையை பற்றியும் பேசுகிறார். ஒரு திறந்த ஆவணமாக தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்.. அண்ணாவின் மரண ஊர்வலத்தில் ஆரம்பித்து வேலை கிடைத்த கலாப்ரியா நண்பர்களோடு பயணம் செல்வதாக புத்தகம் முடிகிறது.

ஒரு பெண்ணியவாதியாக இந்தப் புத்தகத்தை படித்தால் கோபம் வரும். அதே போல கலாசாரம் பேசுபவர்கள் இதப் படித்தாலும் சினம் கொள்வது நிச்சயம். என்றாலும் துணிச்சலோடு எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கும் கலாப்ரியாவுக்கு வாழ்த்துகள். நாளை உங்களில் யாரேனும் கூட இதே போல தங்கள் நினைவுகளின் தாழ்வாரங்களைத் திறந்து விட இந்தப் புத்தகம் ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.."

நகைச்சுவையாகப் பேசி மொத்த கூட்டத்தையும் கலகலப்பாக்கினார் கவிஞர் கடற்கரய்..

"சின்ன வயசுல நாங்க இருந்த வீட்டுல டிவி கிடையாது. பக்கத்து வீட்டுல, கேட்டுல ஏறி குதிச்சுதான் பார்ப்போம். அதுக்காக எங்கம்மா என்னையப் போட்டு அடி பொளக்கும். ஆனா ஒரு நாள் காலைல நான் தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருக்குறப்ப என்னைய ஓங்கி எத்துது. என்னன்னு பார்த்தா தலைவிரிக்கோலமா அழுதிட்டு இருக்கு. கேட்டா எம்ஜியாரு செத்துட்டாருன்னு ஒரே ஒப்பாரி. அன்னைக்கு என்னோட சேர்ந்து அதுவும் எட்டி எட்டி டிவி பார்த்துச்சு. அதுதான் சினிமாவோட மகிமை. அதைதான் எந்த ஒப்பனையும் இல்லாம கலாப்ரியா சொல்லி இருக்காரு.



எனக்கு ரொம்ப ஆச்சரியம். பெண்கள் விஷயத்துல இவருக்கு ரொம்பவே அதிர்ஷ்டம். ஒண்ணும் இவர் போற இடத்துலே ஏதாவது சம்பவம் நடக்குது. இல்லைன்னா சம்பவம் நடக்குற இடமாப் பார்த்து இவர் போறாரு. கண்ணுல கரெக்டா தட்டுப்படுது. கொடுத்து வச்சா மனுஷன். நமக்குத்தான் கண்ணுல வெளக்கெண்ணை விட்டு தேடுனாலும் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. சரி.. பொண்ண பார்க்குறாரா.. அடுத்து அவங்க எப்படி உடை அணிஞ்சிருக்காங்கன்னு பாக்குறாரு.. இல்லன்னா அந்த உடை எங்க விலகி இருக்குன்னு பாக்குறாரு.. பாருங்க.. எப்படி ஒரு கூரியப் பார்வைன்னு..

எந்த இடத்திலும் புத்தகம் போர் அடிக்கல.. ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னன்னா.. புத்தகத்தில் இருக்கும் பத்திகள் சரியாக அடுக்கப்படலியோ என்பதுதான்.. ஒரு இடத்தில் நாயகன் பெரியவனா இருக்கான்.. இன்னொரு நேரம் சின்னப் பையனா இருக்கான்... அடுத்த அத்தியாயத்துல மறுபடி வளர்ந்தவனா இருக்கான்.. இதை மட்டும் கொஞ்சம் சரி பண்ணி இருக்கலாம்.. மற்றபடி இது ஒரு எளிமையான, தைரியமான படைப்பு.."

கடைசியாக பேச வந்தார் ஜெயமோகன். இதுவரை நான் அவர் பேசிக் கேட்டதில்லை என்பதால் ரொம்ப ஆர்வமாக காத்திருந்தேன். எழுத்தைப் போல பேச்சிலும் ஆழம் ஜாழ்தி. ரொம்பவே அடர்த்தியான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.



"பால்யத்தின் நினைவுகள் நம் மனதில் எல்லா பகுதிகளிலும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது கடினம். பாதரசம் சிதறிப் போனால் மிக நுண்ணிய துளிகளாக சிதறி கிடக்கும். அவற்றை மீண்டும் சேகரம் செய்வது எப்படி? ஒரு பெரிய பாதரசத்தைக் கொண்டு சிறு சிறு துளிகளாக சேகரிக்க வேண்டும். அதேபோலத்தான் நம் நினைவுகளையும் நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.."

ஜெமோ பேசிக் கொண்டிருக்கும்போதே கல்லூரியில் இருந்து அழைப்பு வந்ததால் நான் அவசரமாக கிளம்ப வேண்டியதாகப் போனது. ( ஞாயிறு அன்று கூட.. என்ன ஒரு கடமை உணர்வு..) அதன் பின்னர் ஜெமோ என்ன பேசினார் என்பதையும் கலாப்ரியாவின் ஏற்புரையையும் நான் கேட்கவில்லை. நிகழ்வுக்கு வந்திருந்த மற்ற நண்பர்கள் யாரேனும் இது பற்றி எழுதினால் மகிழ்ச்சி கொள்வேன்.

அன்றிரவு, பெங்களூரில் இருந்து வந்திருந்த நண்பர் ஜோ மற்றும் நேசமித்திரன் கலந்து கொண்ட ஒரு சிறு பதிவர் சந்திப்பும் நடைபெற்றது. சீனா அய்யா மற்றும் ஸ்ரீதரும் கலந்து கொண்டார்கள். சமூக அக்கறை கொண்ட மனிதர் என்பதாலேயே எனக்கு ஜோவை ரொம்பப் பிடிக்கும். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. கொஞ்ச நேரம் கதை பேசி விட்டுக் கிளம்பினோம். அண்ணன் நேசமித்திரன் எனக்கு "நினைவின் தாழ்வாரங்களை" அன்பு பரிசாக வழங்கினார். அவருக்கு என் நன்றி.

(அலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் அத்தனை தெளிவாக இல்லை.. பொறுத்தருள்க..)

12 comments:

Balakumar Vijayaraman said...

நல்ல பதிவு கார்த்தி, அன்று கொஞ்சம் வேலை இருந்ததால் வர முடியவில்லை.

Joe said...

நல்ல இடுகை கார்த்திக்.
நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியாத குறையை தீர்த்து விட்டீர்கள்.

"மதுரை பிரபல பதிவர்களுடன் ஒரு சந்திப்பு" - எனது இடுகை விரைவில்... ;-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//வி.பாலகுமார் said...
நல்ல பதிவு கார்த்தி, அன்று கொஞ்சம் வேலை இருந்ததால் வர முடியவில்லை.//

nandri nanba

//Joe said...
நல்ல இடுகை கார்த்திக். நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியாத குறையை தீர்த்து விட்டீர்கள். "மதுரை பிரபல பதிவர்களுடன் ஒரு சந்திப்பு" - எனது இடுகை விரைவில்... ;-)//

:-)))

அத்திரி said...

வருங்கால பிரபல எழுத்தாளர் கா.பா வாழ்க

settaikkaran said...

தாமிரபரணியில் குளித்து எழுந்தது போல, இதமளித்த பதிவு! பாராட்டுக்கள்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
வருங்கால பிரபல எழுத்தாளர் கா.பா வாழ்க//

yaen indha kolaiveri anne?

// சேட்டைக்காரன் said...
தாமிரபரணியில் குளித்து எழுந்தது போல, இதமளித்த பதிவு! பாராட்டுக்கள்!!//

thanks boss

Joe said...

//அத்திரி said...
வருங்கால பிரபல எழுத்தாளர் கா.பா வாழ்க//

மதுரைக்கு வர்ற வழியில "விழாவுக்கு வருகை தரும் பாண்டியனே, எதிர்கால எஸ்.ரா-வே வருக"-ன்னு ஏகப்பட்ட விளம்பரப் பலகைகள். சொன்னா, அப்படியெல்லாம் இல்லைன்கிறாரு, இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம்ணே!

Unknown said...

நல்லதொரு பதிவு கார்த்திகைப் பாண்டியன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// Joe said...
மதுரைக்கு வர்ற வழியில "விழாவுக்கு வருகை தரும் பாண்டியனே, எதிர்கால எஸ்.ரா-வே வருக"-ன்னு ஏகப்பட்ட விளம்பரப் பலகைகள். சொன்னா, அப்படியெல்லாம் இல்லைன்கிறாரு, இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம்ணே!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ஏண்ணே? ஏன் இந்த கொலவெறி?

//ஸ்ரீ said...
:-)))))))//

இதுக்கு என்ன தலைவரே அர்ட்தம்?

/செல்வராஜ் ஜெகதீசன் said...
நல்லதொரு பதிவு கார்த்திகைப் பாண்டியன்.//

நன்றிங்க..

selventhiran said...

அருமையான பதிவு. ஆனா,க்ளைமாக்ஸைப் படிக்க விடாமப் பண்ணிட்டீங்களே...

manjoorraja said...

நல்லதொரு பதிவு. நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//செல்வேந்திரன் said...
அருமையான பதிவு. ஆனா,க்ளைமாக்ஸைப் படிக்க விடாமப் பண்ணிட்டீங்களே...//

college work ma..:-(((

//மஞ்சூர் ராசா said...
நல்லதொரு பதிவு. நன்றி.//

thanks boss..:-))