March 16, 2010

களிமண் பொம்மைகள்..!!!

"ஹ்ம்ம்ம்.. வர வர இந்த உலகத்துல யார நம்புறது, யார நம்பக்கூடாதுன்னு ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. கலிகாலம்னு சும்மாவா சொல்றாங்க..?"

காலை நேரத்தில் புலம்பிக் கொண்டு வந்த அம்மாவைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. அவள் எப்போதுமே இப்படித்தான். எதையாவது, யாரோடாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும் அடுத்த வீட்டு அக்கப்போர் என்றால் கேட்கவே வேண்டாம்.

ஒரு வேளை இவள் பேசுவதை கேட்க சகிக்காமல்தான் அப்பா சிறு வயதிலேயே மேலோகத்துக்கு டிக்கட் எடுத்து விட்டாரோ என்றொரு சந்தேகமும் எனக்குண்டு. இதைச் சொன்னால் அவள் ஆற்றாமையில் சாமியாடக் கூடும் என்பதாலேயே நான் எப்போதும் அமைதியாக போய் விடுவது வழக்கம். இப்போதும் அமைதியாகவே இருந்தேன்.

"ஏண்டா.. இங்க ஒருத்தி ஒத்தையில பொலம்பிக்கிட்டு இருக்கேனே? என்னன்னு கேட்க மாட்டியா?"

இனிமேலும் நான் அமைதியாக இருந்தால் அவ்வளவுதான். "என்னை ஏன்னு கேட்க ஒரு நாதியுண்டா" என்று தனியாக ஒரு பிலாக்கணத்தை ஆரம்பித்து விடுவாள்.

"ஏம்மா.. என்ன ஆச்சு?"

"இந்த எதிர்த்த வீட்டு கடன்காரன் இருக்கானே.. ஸ்ரீதர்.. அவன் நம்ம வந்தனா கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணியிருக்காண்டா.. எடுபட்ட பய.. இப்பவே அவனுக்கு பொம்பள கேக்குதா?"

எனக்கு சுரீர் என்றது.

"வந்தனாவையா? என்னம்மா சொல்ற? நல்லாத் தெரியுமாம்மா?"

"அட ஆமாம்டா.. பாவம் அந்தப் புள்ள.. இருக்குற தொல்ல போதாதுன்னு, இது வேற..."

அம்மா அலுத்துக்கொண்டே அடுக்களைக்குள் மறைந்து போனாள். நான் என் சுயநினைவுக்குத் திரும்ப சற்று நேரம் ஆனது.

***************

நான் பள்ளியில் போய் சேர்ந்தபொழுது என்னுடனே வந்து சேர்ந்தவள் வந்தனா. எங்கள் வீடு இருந்த அதே தெருவில்தான் அவள் வீடும். +2 வரை ஒன்றாகவே படித்தோம். என் பிரியத்துக்குரிய தோழியாக இருந்தாள்.

பள்ளிப்படிப்பு முடித்து நான் மேல்படிப்புக்காக டவுனுக்கு போன போது வந்தனாவின் திருமணம் நடந்தது. அவளுடைய வீட்டுக்காரருக்கு பட்டாளத்தில் வேலை. திருவிழாவுக்கு ஊருக்கு வந்துபோது ஒருமுறை அவரோடு பேசி இருக்கிறேன். ரொம்பவே நல்ல மனிதர்.

இரண்டு வருடங்கள். அழகான ஒரு ஆண் குழந்தை, அன்பான கணவர் என அவள் வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்தது... சபிக்கப்பட்ட அந்த நாள் வரும் வரை. ரோந்துக்காக போன இடத்தில் கண்ணி வெடி ஒன்றில் சிக்கி வந்தனாவின் கணவர் இறந்து போக, அவளுடைய வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறிப்போனது. குழந்தையுடன் அம்மா வீட்டுக்கே வந்து விட்டாள்.

பட்டப்படிப்பு முடித்து எங்கள் ஊர் பள்ளியிலேயே எனக்கும் ஆசிரியராக வேலை கிடைத்து விட்டிருந்தது. தினமும் வீதியில் வந்தனாவைப் பார்ப்பேன். எப்போதாவது ஒரு சிறு புன்னகையைத் தந்து போவாள். அதே களையான முகம், அதே சுறுசுறுப்பு. ஆனால் பொட்டில்லாத அந்த முகத்தை பார்க்கும்போது மனசு வலிக்கும். அந்த வந்தனாவைதான் இன்றைக்கு ஸ்ரீதர்..?

என்னால் நம்பவே முடியவில்லை. ஸ்ரீதரை எனக்கு நன்றாகத் தெரியும். எதிர்த்த வீட்டில்தான் இருக்கிறான். நல்ல பையன். எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். பதினாலு அல்லது பதினைந்து வயதுதான் இருக்கும். அவனா வந்தனாவை..?

எனக்கு வந்தனாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

***************

"நல்லா இருக்குறியா..?" வந்தனா குழந்தையை போட்டுத் தொட்டிலில் ஆட்டியவாறே கேட்டாள்.

நான் அமைதியாக இருந்தேன். என்ன சொல்லி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

"தெனமும் உன்னை பார்க்கும்போது பேசணும்னு நினைப்பேன். ஆனா... பார்த்தியா.. கடைசியில எப்படிப்பட்ட சூழ்நிலைல இன்னைக்கு உன்கிட்ட பேச வேண்டியிருக்குன்னு?"

"என்னாச்சு வந்தனா?"

"யாரடா தப்பு சொல்றது? எல்லாம் என் நேரம். ஒரு பொண்ணு புருஷன் இல்லாம இருந்தா யார் கூட வேணா வந்துருவான்னு அர்த்தமா? ஸ்ரீதர ரொம்ப நல்ல பையன்னு நம்புனேண்டா.. ஆனா அவன்.." கண்களில் லேசாக நீர் ததும்பியது.

"ப்ளீஸ்.. அழாத வந்தனா.."

"அக்கா அக்கான்னு காலச் சுத்தி சுத்தி வருவான்.. எப்பவும் குட்டி பாப்பா கூடத்தான் விளையாண்டுக்கிட்டு இருப்பான்.. நான் என்ன சொன்னாலும் செய்வான்.. சமயத்துல தூங்குறது கூட இங்கதான்.. எம்மேல அம்புட்டு பிரியம்.. அவன என்னோட இன்னொரு பையன மாதிரித்தான் நெனச்சேன்.. அவன் முன்னாடி டிரெஸ் மாத்தக்கூட சங்கடப்பட்டது கிடையாது.. அப்படிப்பட்டவன் திடீர்னு... இப்போக்கூட என்னால அவன் ஏன் இப்படி பண்ணினான்னு ஒத்துக்க முடியல.. ரொம்பக் கஷ்டமா இருக்குடா.."

அவள் அழுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. எத்தனை நம்பிக்கை வைத்து இருக்கிறாள்? இதைப் போய் பாழடித்து விட்டானே? எனக்கு ஸ்ரீதரின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

***************

"அப்படி பார்க்காதீங்க அண்ணே.. பயமா இருக்குது.."

கோபத்துடன் நின்றிருந்த என்னெதிரே கண்களைத் தாழ்த்தியவனாக உட்கார்ந்து இருந்தான் ஸ்ரீதர்.

"வந்தனா உன்மேல எவ்வளவு பிரியமா இருந்தா? ஏண்டா இப்படி பண்ணின?"

"வந்தனாக்கா ரொம்ப நல்லவங்க அண்ணே.. நான் தான் லூசுத்தனமா.." உடைந்து போனவனாக ஓவென அழத் தொடங்கினான். நான் அவன் அழுது தீர்க்கும்வரை அமைதியாக இருந்தேன். பிறகு அவனே பேசத் தொடங்கினான்.

"நானா வேணும்னு அப்படி செய்யல அண்ணே... கூட இருக்கிற பசங்கதான் ஏத்தி விட்டாங்க.. நான் அவங்ககூட பழகுரதப் பார்த்து என்கிட்டே ஒரு புக்க கொடுத்து படிக்க சொன்னாங்க.. அதுல வர கதை மாதிரியே அவங்களுக்கும் புருஷன் இல்ல.. அதனாலதான் உன்கூட நல்லா பழகுறாங்க.. யூஸ் பண்ணிக்கன்னு சொன்னாங்க.. போன வாரம் டிவியில கூட ஒரு படம் போட்டாங்க.. அதுல ஒரு அக்கா இப்படித்தான்.. என்ன மாதிரி ஒரு பையன் கூட.. அதப் பார்த்துதான் நானும் அந்த மாதிரி இருக்கலாம்னு.. எனக்கு என்னமோ வந்தனா அக்காவுக்கு விருப்பம் இருக்குற மாதிரி தோணுச்சு.. அத நம்பி.. என் தலைல நானே மண்ணை வாறி போட்டுக்கிட்டேன்.."மீண்டும் அழத் தொடங்கினான்.

வயசு.. சகவாசம்.. அவன் பேசபேச எனக்கு விஜயா அக்காவின் ஞாபகம் வந்தது. எதுவும் பேசாமல் திரும்பி நடக்கத் தொடங்கினேன்.

28 comments:

Madurai Saravanan said...

கதை அருமை. அது என்ன விஜயா அக்கா கதை ...அடுத்த பாகம் தயாரா..?பலர் அடுத்தவர் தூண்டுதலாலே தவறு புரிகின்றனர். உண்மை கார்த்தி. வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் said...

சரியான புரிதலில்லாத குழப்பமான பிராயத்தில் இது போன்ற விபரீத எண்ணங்கள் ஏற்பட்டுத் தொலைக்கின்றன. அருமையாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

♠ ராஜு ♠ said...

நல்லதொரு ”நாகுரதீனா..தினநானா...
தினநானா..” கதை.

யூ மீன் ஸ்ரீதர்..? நல்ல பையனாச்சே..!
:-)

அப்பறம், பிலாக்கணம்ன்னா என்ன..? புதுசா இருக்கே வாத்யாரே..!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் அருமையான புனைவு .

மீண்டும் வருவான் பனித்துளி !

பொன்.பாரதிராஜா said...

அப்போ நம்ம விஜயா அக்காகிட்ட அப்படி நடந்துகிட்டது நீதானா?அடப்பாவி...என்கிட்ட கூட சொல்லலியே?சரி விஜயா அக்கா இப்போ எங்க இருக்காங்க? :)

தருமி said...

பொன்.பாரதிராஜா என்னமோ சொல்றாரு ...?

வானம்பாடிகள் said...

அருமை கார்த்திக். வாழ்வியல் சாபங்களில் ஒன்று இது

பிரபு . எம் said...

துணிச்சலான புனைவு....
மனதுக்குள் சில இருட்டுப் பக்கங்கள் பலருக்கும் உண்டு....
வெளிச்சத்தில் சிக்குபவர்கள் குற்றவாளிகள்...
வெளிப்பூச்சு எதுவுமில்லாமல் யதார்த்தமாகக் கதை சொல்லிவிட்டு முடிவில்லாத முடிவை வாசகனிடம் விட்டுவிடும் உங்க ஸ்டைல் பிடிச்சிருக்கு :)

பிரபு . எம் said...

தொடர்பதிவு அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பா :)

வி.பாலகுமார் said...

சூழ்நிலை, சகவாசம் மனதை பாழ்படுத்தி விடுகிறது.

//களிமண் பொம்மை"கள்"//
பன்மைக்கான பொருளை, ஒரே வரியில் அழகாக சொல்லி விட்டீர்கள்.

க.பாலாசி said...

இருகரத்திலும் கறை....

நல்ல கதை....

☀நான் ஆதவன்☀ said...

//வயசு.. சகவாசம்.. அவன் பேசபேச எனக்கு விஜயா அக்காவின் ஞாபகம் வந்தது. எதுவும் பேசாமல் திரும்பி நடக்கத் தொடங்கினேன்.//

விசாரணையில பல விசயம் வெளிவரும் போல இருக்கே :))

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. பின்னுறீங்க

நேசமித்ரன் said...

கடசீல ட்விஸ்ட் இல்லாட்டி ஒரு கிக் வர மாட்டேங்குதுல்ல.. இல்லமலும் முயற்சி பண்ணலாமே :)

நல்லாருக்குத்த் தலைவரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//Madurai Saravanan said...
கதை அருமை. அது என்ன விஜயா அக்கா கதை ...அடுத்த பாகம் தயாரா..?பலர் அடுத்தவர் தூண்டுதலாலே தவறு புரிகின்றனர். உண்மை கார்த்தி. வாழ்த்துக்கள்//

அடுத்த பாகம் இல்ல தல.. இந்தக் கதையோட கடைசி ட்விஸ்ட்மா அது..:-)))

//சேட்டைக்காரன் said...
சரியான புரிதலில்லாத குழப்பமான பிராயத்தில் இது போன்ற விபரீத எண்ணங்கள் ஏற்பட்டுத் தொலைக்கின்றன. அருமையாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி தலைவரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
நல்லதொரு”நாகுரதீனா..தினநானா... தினநானா..” கதை.//

அடப்பாவி

//யூ மீன் ஸ்ரீதர்..? நல்ல பையனாச்சே..! :-)//

அது ஒரு டகால்டி தம்பி..

//அப்பறம், பிலாக்கணம்ன்னா என்ன..? புதுசா இருக்கே வாத்யாரே..!//

வீட்டுப்பக்கம் சாதாரணமா சொல்றது தான் ராஜூ.. அங்கலாய்ப்பு...

//♫பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் அருமையான புனைவு .
மீண்டும் வருவான் பனித்துளி !//

நன்றி நண்பா..:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன்.பாரதிராஜா said...
அப்போ நம்ம விஜயா அக்காகிட்ட அப்படி நடந்துகிட்டது நீதானா? அடப்பாவி...என்கிட்ட கூட சொல்லலியே?சரி விஜயா அக்கா இப்போ எங்க இருக்காங்க? :)//

என்னைய டெமெஜ் பண்ண வேற யாரும் வேண்டாம்டா.. நீ ஒருத்தனே போதும்டா..:-))

//தருமி said...
பொன்.பாரதிராஜா என்னமோ சொல்றாரு ...?//

ஐயா.. அவன் சொல்றத எல்லாம் நம்பாதீங்க..

//வானம்பாடிகள் said...
அருமை கார்த்திக். வாழ்வியல் சாபங்களில் ஒன்று இது//

நன்றிங்க பாலா சார்..:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரபு . எம் said...
துணிச்சலான புனைவு.... மனதுக்குள் சில இருட்டுப் பக்கங்கள் பலருக்கும் உண்டு.... வெளிச்சத்தில் சிக்குபவர்கள் குற்றவாளிகள்...வெளிப்பூச்சு எதுவுமில்லாமல் யதார்த்தமாகக் கதை சொல்லிவிட்டு முடிவில்லாத முடிவை வாசகனிடம் விட்டுவிடும் உங்க ஸ்டைல் பிடிச்சிருக்கு :)//

அதேதான் நண்பா.. கரெக்டா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க.. நன்றி..

//தொடர்பதிவு அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பா :)//

இதுக்குப் போய்க்கிட்டு நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு.. விடுங்க நண்பா

//வி.பாலகுமார் said...
சூழ்நிலை, சகவாசம் மனதை பாழ்படுத்தி விடுகிறது.//களிமண் பொம்மை"கள்"// பன்மைக்கான பொருளை, ஒரே வரியில் அழகாக சொல்லி விட்டீர்கள்.//

:-)))))))))

//க.பாலாசி said...
இருகரத்திலும் கறை.... நல்ல கதை....//

நன்றி பாலாஜி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//☀நான் ஆதவன்☀ said...
விசாரணையில பல விசயம் வெளிவரும் போல இருக்கே :))//

தீர்மானமா இருக்கீங்க போல.. யோவ்.. இது புனைவுப்பா..

// "உழவன்" "Uzhavan" said...
நண்பா.. பின்னுறீங்க//

நன்றி தல..

//நேசமித்ரன் said...
கடசீல ட்விஸ்ட் இல்லாட்டி ஒரு கிக் வர மாட்டேங்குதுல்ல.. இல்லமலும் முயற்சி பண்ணலாமே :) நல்லாருக்குத்த் தலைவரே//

நன்றி நேசன்.. நீங்க சொல்ரதும் சரிதான்.. வேணும்னு வலிஞ்சு திணிக்கல.. அடுத்த தடவை மாத்தி முயற்சி பண்றேன் தல..

☼ வெயிலான் said...

கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடி போன்று மிகச் சரியாய் சமன் செய்து கதையை கொண்டு போயிருக்கிறீர்கள்.

வினோத்கெளதம் said...

கதை!!! பயங்கர ட்விஸ்ட்டா இருக்கே..!! :)))

ஸ்ரீ said...

ரைட்டு.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.எப்புடி?

கார்த்திகைப் பாண்டியன் said...

// வெயிலான் said...
கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடி போன்று மிகச் சரியாய் சமன் செய்து கதையை கொண்டு போயிருக்கிறீர்கள்.//

கொஞ்சம் டைட்டான நாட்தான் தல.. நன்றி..

//வினோத்கெளதம் said...
கதை!!! பயங்கர ட்விஸ்ட்டா இருக்கே..!! :)))//

நன்றி வினோத்..:-)))

//ஸ்ரீ said...
ரைட்டு.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.எப்புடி?//

வாங்கப்பு.. அடுத்த கதைல இன்னும் டவுசர கிழிக்கிறேன்..:-))))

Sangkavi said...

வாத்தியாரே....

கதை அருமை....

நிவேதா said...

கதையின் எதார்த்தம் நல்லா இருந்தது .ஆனா இது என்ன தொடர் கதையாங்க SIR?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

shaan said...

'sex education' முறையான வழிகளின் மூலம் கிடைக்காமல் தவறான வழிகளின் மூலம் கிடைப்பதால் ஏற்படும் விளைவை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// Sangkavi said...
வாத்தியாரே.... கதை அருமை....//

நன்றி நண்பா..

// நிவேதா said...
கதையின் எதார்த்தம் நல்லா இருந்தது .ஆனா இது என்ன தொடர் கதையாங்க SIR?//

அவ்வ்வ்.. நேர்ல சொல்றேன்மா..

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் //

ரைட்டு

//shaan said...
'sex education' முறையான வழிகளின் மூலம் கிடைக்காமல் தவறான வழிகளின் மூலம் கிடைப்பதால் ஏற்படும் விளைவை அழகாக விளக்கியுள்ளீர்கள்.//

அதுவும்தான் நண்பா..:-)))