March 18, 2010

கைக்குள் அடங்கும் உலகம்..!!!

சமீபத்தில் நண்பரை பார்ப்பதற்காக திண்டுக்கல் போயிருந்தேன். அன்பான மனைவி, இரண்டு வயது பெண் குழந்தை என்று அழகான குடும்பம். வீட்டை எதிர்த்து எங்கள் உதவியோடு காதல் திருமணம் செய்து கொண்டவர். (இன்றைக்கு எல்லோரும் ராசியாகி விட்ட சூழலில் கூட நானும் திருமணத்துக்கு உதவிய மற்ற நண்பர்களும் அவர்கள் இருவரின் வீட்டிலும் வில்லன்களாக பார்க்கப்படுவது தனிக்கதை). நண்பரின் மனைவியும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு எனக்கு நல்லதொரு தோழிதான். நான் போன நேரம் வீட்டில் இருவருக்கும் சின்ன வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் விவகாரம் நம்ம பஞ்சாயத்துக்கு வந்து நின்றது.

நண்பரின் மனைவி சொன்ன பிரச்சினையின் சாராம்சம் இதுதான்: "நண்பர் எங்கே போனாலும் தன்னையும், குழந்தையையும் அழைத்துப் போவதே கிடையாது. திருமணத்துக்கு முன் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இப்போதும் அப்படியே இருந்தால் நியாயமா? நான் என்ன அது வேண்டும், இது வேண்டும் என்றா கேட்கிறேன்? கூடவே இருங்கள் இல்லை என்னையும் கூட்டிப் போங்கள் என்று தானே சொல்கிறேன். இது தப்பா?" அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த விழித்தேன். நானே பலமுறை வெளியே போகும்போது நண்பரை குடும்பத்தை தவிர்த்து விட்டு வரும்படி கூறி இருக்கும் சூழ்நிலையில் நான் எங்கே இதற்கு தீர்ப்பு சொல்வது? நண்பரை பார்த்தால் அவர் மென்று முழுங்கிக் கொண்டிருந்தார். "கண்டிப்பா நான் சொல்றேன்மா.." என்று மேலோட்டமாக அடித்து விட்டு வந்தேன்.

இது போன்ற குற்றச்சாட்டை நான் கேட்பது இது முதல் முறை அல்ல. நான் இந்த பத்தியை எழுதக் காரணமான மற்றொரு ஜீவன் - என்னுடைய நெருங்கிய தோழி ஒருவர்தான். அவர் ஒரு வீட்டுப் பிராணி. எதற்காகவும் வெளியே சுற்றாதவர். நண்பர்கள், ஏதாவது வேலை என்று நான் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறேன் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய குற்றச்சாட்டு. அதற்காக எனக்கு சாபம் கூட கொடுத்து இருக்கிறார்.."உனக்கு பொண்டாட்டியா வர்றவ ஒரு பிடாரியா அமையணும்.. நாலரைக்கு கல்லூரி முடிஞ்சா டாண்னு அஞ்சு மணிக்கு வீட்டுல இருக்கணும்னு உன் சிண்டைப் பிடிச்சு உலுக்குரவளா இருக்கணும்.." என்ன ஒரு வில்லத்தனம்?

பொதுவாகவே நான் பார்த்த பல பெண்களும் இத்தகைய குற்றச்சாட்டை சுமந்து திரிபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய உலகம் என்பது ஒரு குறுகிய இடத்துக்குள் முடிந்து போகிறது. படித்த பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நான், என் கணவர், என் பிள்ளைகள்.. சுருங்கச் சொன்னால் என் குடும்பம்... இவ்வளவுதான். "ஏம்மா அவரைத் தொங்கிக்கிட்டு.. நீங்களா வேணும்கிற இடத்துக்குப் போயிட்டுவர வேண்டியதுதானே" என்று சொல்லிப் பாருங்கள். அது பெண்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.

எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது வெளியே சுற்றுவது என்பது பெண்களைப் பொறுத்தமட்டில் தேவையில்லாத ஒன்று. ஆனால் அத்தகைய வட்டத்துக்குள் சுருங்கிக் கிடக்க பெரும்பான்மையான ஆண்களால் முடிவதில்லை என்னும்போதுதான் பிரச்சினை வருகிறது. அவர்கள் சுதந்திரமாக சுற்றி வர விரும்புகிறார்கள். யாருடைய தலையீடும் இல்லாமல் தாங்கள் விரும்புவதை செய்ய விரும்புகிறார்கள். அதற்கு தங்களுடைய மனைவியையும் கூட கூட்டிச் செல்வதென்பது முடியாத காரியமாக இருக்கும்போதுதான் மனவேறுபாடுகள் வருகின்றன.

இது ஒரு பிரபலமான நகைச்சுவை துணுக்கு.

ஆண் 1 : வீட்டுல ரொம்ப முக்கியமான முடிவெல்லாம் நான்தான் எடுப்பேன்.. சின்ன சின்ன விவகாரத்த எல்லாம் என்னோட சம்சாரம் பார்த்துப்பா..

ஆண் 2 : அப்படியா?

ஆண் 1 : ஆமா.. அமெரிக்கா ஈராக்குல குண்டு போட்டது சரியா? அடுத்த ரஷியப் பிரதமரா யாரு வரணும்? இந்தியா ஒலிம்பிக்குல தங்கம் வாங்க என்ன செய்யலாம்.. இதெல்லாம் நான் யோசிப்பேன்.. மத்த சின்ன விஷயம்.. அதாவது.. வீட்டுக்கு என்ன சாமான் வாங்குறது.. பிள்ளைய ஸ்கூல்ல சேக்குறது.. வரவு செலவு.. இதெல்லாம் அவ பார்த்துப்பா..

வெறும் நகைச்சுவை என்றால் கூட இதில் இருக்கக் கூடிய சமூகம் பற்றிய தொனியை நன்றாக கவனித்து பாருங்கள். ஆண் என்பவன் குடும்பத்தைப் பற்றிய அக்கறை இல்லாதவனாகவும் பொறுப்புகள் அற்று வெறுமனே வெளியே சுற்றித் திரிபவனாகவும், பெண் என்பவளே சரியான கோணத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் இருப்பதாக அமைந்துள்ளது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இத்தகைய வித்தியாசமான மனநிலை ஏற்பட என்ன காரணமாக இருக்க முடியும்? உண்மையை சொல்வதானால் சிறு வயதில் இருந்தே இதன் அடிப்படைக் கூறுகளை குழந்தைகளின் மனதில் நமது சமுதாயம் விதைத்து செல்வதைக் காண முடியும்.

சிறு பிள்ளையில் பெண்களை என்ன விளையாட்டுக்கள் விளையாட சொல்கிறோம்? பானை, செப்பு வைத்து சோறு சமைத்து விளையாடுவது, காலாட்டுமணி கையாட்டுமணி, கண்ணாடி வளை ஜோடி சேர்த்தல் என எல்லாமே ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகள். பள்ளி போகும் பருவமா? சரி.. வீடு விட்டால் பள்ளி, பள்ளி முடிந்தால் வீடு.. எங்கேனும் வெளியே போக வேண்டுமானாலும் பெற்றோர் இல்லாமல் போகக் கூடாது. கல்லூரியிலும் இதே கதைதான். திருமணம் என்று ஒன்று நடந்தாலும் கணவன் தயவில்தான் எல்லாம் இருக்க வேண்டும். பின்பு குழந்தைகளுக்கான வாழ்க்கை. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. விளையாட்டு தொடங்கி வாழ்க்கை வரை அவர்கள் விரும்பும்படி இருக்கலாம். இதுதானே நடக்கிறது?

ஆரம்பம் முதல் கடைசி வரை இப்படித்தான் இருக்க வேண்டும், எப்போதும் குடும்பம் சார்ந்தே இயங்க வேண்டும் என்று பெண்களின் மனதில் அவர்கள் அறியாமலே சில எண்ணங்களுக்கான விதைகள் தூவப்படுகின்றன. வளரும்போது இதுவே அவர்களின் இயல்பாக மாறி விடுகிறது. இதை பெண்களின் மீதான ஒரு வன்முறை என்று கூட சொல்லலாம். அத்தகைய வன்முறையை பெண்களும் விரும்பி ஏற்றுக் கொள்ளுகிரவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரியாமலேயே, நத்தை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல பெண்களின் உலகம் அவர்கள் கண் முன்னாலேயே சுருங்கிப் போய் விடுகிறது. இந்த நிலை என்று மாறக் கூடும்? பெண்களின் உலகம் என்று பரந்து விரிந்ததாக மாறக் கூடுமோ, தாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றுக்கும் ஆண்கள் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என எதிர்பார்க்காமல் தனக்கான தேவைகளை தாங்களே மற்றவரின் உதவியை எதிர்பார்க்காமல் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுகிறார்களோ.. அன்றுதான் அவர்கள் தங்களுக்கான உண்மையான சுதந்திரத்தை அடைந்ததாக சொல்லிக் கொள்ளலாம்.

(மகளிர் தினத்தை ஒட்டி எழுதியது.. நான் பார்த்த, பழகிய.. குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்.. தற்போது சென்னை முதலான இடங்களில் இது போன்ற விஷயங்களில் பெண்கள் முன்னேறி வருவது மகிழ்ச்சியே.. )

41 comments:

செந்தில் நாதன் said...

அண்ணே,

கைய குடுங்க. நான் இப்படி ஒரு இடுகை எழுதனும்னு ரெம்ப நாள் யோசிசுருகேன்..ஆனா உங்கள மாதிரி ஒரு கோர்வையா அழகா எழுதி இருக்க மாட்டேன்..

//விளையாட்டு தொடங்கி வாழ்க்கை வரை அவர்கள் விரும்பும்படி இருக்கலாம்//

இது முழுக்க உண்மை இல்ல. கல்லூரி வரை நம்ம விருப்பங்களும் அப்பா/அம்மாவின் விருப்பம்மாகவே இருக்கு..

இணையம் வீட்டுக்குள் வரும் பொழுது இந்த நிலைமை மாறும்?
//பெண்களின் உலகம் என்று பரந்து விரிந்ததாக மாறக் கூடுமோ//

சேட்டைக்காரன் said...

சுவாரசியம் குறையாமல் ஒரு சமகால ஆதங்கத்தை எழுதியிருக்கிறீர்கள்.

வானம்பாடிகள் said...

:)). இக்கரைக்கு அக்கரை. அப்படி வாய்ப்பு இருக்கும்போது, எல்லாத்துக்கும் நானே ஓடுறதா இருக்குன்னு பிட்டு விழும். (அனுபவந்தேன் அனுபவந்தேன்..ஹி ஹி)

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா

Anonymous said...

கானா பானா நான் என்ன சொல்றது? :))

முகிலன் said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்திகைப் பாண்டியன். பல பேரோட வீட்டுல இன்னிக்கி இதுதான் நடக்குது

கவிதை காதலன் said...

பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க... நல்லா இருக்கு பாஸு

கவிதை காதலன் said...

பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க... நல்லா இருக்கு பாஸு

க.பாலாசி said...

சரியாச் சொன்னீங்க தலைவரே.... இது அவங்களாவே கட்டிக்கிறது... அவிழ்த்துப்போடுவது அவர்களின் உரிமையே...

Karuppu said...

பாஸ்,
நல்லா எழுதி இருக்கீங்க...நிதர்சனமான நடந்து கொண்டு இருக்கிறது(சிலரது வாழ்க்கையில்)....

//வெறும் நகைச்சுவை என்றால் கூட இதில் இருக்கக் கூடிய சமூகம் பற்றிய தொனியை நன்றாக கவனித்து பாருங்கள். ஆண் என்பவன் குடும்பத்தைப் பற்றிய அக்கறை இல்லாதவனாகவும் பொறுப்புகள் அற்று வெறுமனே வெளியே சுற்றித் திரிபவனாகவும், பெண் என்பவளே சரியான கோணத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் இருப்பதாக அமைந்துள்ளது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இத்தகைய வித்தியாசமான மனநிலை ஏற்பட என்ன காரணமாக இருக்க முடியும்? உண்மையை சொல்வதானால் சிறு வயதில் இருந்தே இதன் அடிப்படைக் கூறுகளை குழந்தைகளின் மனதில் நமது சமுதாயம் விதைத்து செல்வதைக் காண முடியும். //

இது கொஞ்சம் ஓவரா எழுதி இருக்கிறது மாதிரி எனக்கு தெரியுது.... நானும் தென் மாவட்டத்துல இருந்துதான் வாரேன்...

கொஞ்சம் பெரிய ஆளா ஆகிட்டா போதும்...வயல் வேலை, அந்த வேலை இந்த வேலைன்னு போட்டு சாவடிச்சிடுவாங்க....கூடவே எங்க தங்கச்சியும் அம்மாவும் இருப்பாங்க.....Finallay I am trying to say that there is no concept called superiority man and inferiority women in middle class families....Both of them have a responsibilities to take care of the family and they are doing also....
நகர வாழ்க்கை முறை எனக்கு தெரியாது...என்னுடைய வாழ்க்கை முறையில் இருந்து இதை எழுதி இருக்கேன்..... :)

I felt to write a comment like this....

நல்லவன்,
சிங்கை கருப்பு..

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க.. ..//

இது உண்மைங்களா..??

நேசமித்ரன் said...

மனவியல் சார்ந்த சின்னச் சின்ன கவனக் கோரல்கள் ஏக்கங்கள் ஆக பரிணமிக்கும் நிதர்சன வலி சொற்களாகி இருக்கும் இவ்விடுகை
மற்றொரு பரிணாமத்தின் துவக்கம் உங்கள் எழுத்துகளில்...

:)

டம்பி மேவீ said...

என்ன தல . மே மாசம் நெருங்க நெருங்க .... இந்த மாதிரி பதிவெல்லாம் எதிர்பார்க்கலாமா ......

எல்லா இடங்களிலும் இப்படி தான்.... நான் பார்த்த பல பணக்கார அல்லது வளர்ந்த குடும்ப பெண்களுக்கும் இந்த மாதிரி கட்டுப்பாடு எல்லாம் இருக்கும்... ஆனால் அவர்களெல்லாம் மதில் மேல் பூனையாய் குழம்பிய மனநிலையில் இருப்பார்கள்...

அதே போல் என்னை மாதிரி மிகவும் கட்டுபாடான குடும்பத்தில் பிறந்த ஆண்களுக்கும் நிறைய இம்சை இருக்கும்

டம்பி மேவீ said...

அண்ணிக்கு லிங்க்யை ஈமெயில் பண்ணுங்க . இப்பவே நல்ல பெயர் வாங்க ஆரம்பிச்சுடுங்க

மதார் said...

பதிவு அருமை .

அது என்னங்க பின்குறிப்பு //நான் பார்த்த, பழகிய.. குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்..//

நீங்க எந்த காலத்துல இருக்கீங்க ? சென்னையில் இருக்கும் அத்தனை அலுவலகங்களிலும் குறிப்பா சாப்ட்வேர் ஆபீஸ் போய் பாருங்க . அங்கிருக்கும் பெண்களில் பலர் தென்மாவட்டப் பெண்கள்தான் . இங்கே சென்னையில் இருந்துகொண்டு உங்களுக்கு பதில் பின்னூட்டம் போடும் நானும் தென்மாவட்டமே . சொல்லப் போனா சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணைவிட தென்மாவட்ட பெண்கள் வெளிஉலக அனுபவத்தில் குறைந்தவர்கள் அல்ல .//பெண்களின் உலகம் என்று பரந்து விரிந்ததாக மாறக் கூடுமோ, தாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றுக்கும் ஆண்கள் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என எதிர்பார்க்காமல் தனக்கான தேவைகளை தாங்களே மற்றவரின் உதவியை எதிர்பார்க்காமல் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுகிறார்களோ.. அன்றுதான் அவர்கள் தங்களுக்கான உண்மையான சுதந்திரத்தை அடைந்ததாக சொல்லிக் கொள்ளலாம்.//முழுக்கமுழுக்க இன்றைய பெண்கள் யாரும் ஆண்களை மட்டுமே துணைக்கு நம்பி இருப்பதில்லை . தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள பெண்கள் தயாராய் உள்ளனர் .

குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் நீங்க ஊர்சுற்றி வருவதற்கு பெண்களின் வளர்ப்புமுறை , தைரியம் பற்றி குறை கூற வேணாம்.
பெண்களும் உங்களுக்கு போட்டியாய் ஊர்சுற்ற அவர்கள் தோழியுடன் வெளியில் போனால் குடும்பம் உருப்படுமா?

கமல் said...

மேலை நாடுகளில் மேற்கத்தையப் பெண்களைப் போலவே எம் தமிழ்ப் பெண்களும் தனியே வாழவும், தனித்துச் சாதிக்கவும் பழகிவிட்டார்கள். இது இந்தியா, மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வழக்கத்திற்கு வர நிறையக் காலம் எடுக்கும்.

கமல் said...

காலத்திற்கேற்ற கட்டுரை.

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு நண்பா.. முதல் பாதியில் ஏதோ உங்களைத் தயார்படுத்திக் கொள்வது போல தோன்றினாலும் ;) உண்மையை அழகாக எழுதியுள்ளீர்கள்!! அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பது பிடிக்கிறது. நாமும் அதை மதித்து நடப்பது தேவையானது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிறந்த புனைவு நண்பரே !
மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

மீண்டும் வருவான் பனித்துளி !

கார்த்திகைப் பாண்டியன் said...

//செந்தில் நாதன் said...
அண்ணே,கைய குடுங்க. நான் இப்படி ஒரு இடுகை எழுதனும்னு ரெம்ப நாள் யோசிசுருகேன்..ஆனா உங்கள மாதிரி ஒரு கோர்வையா அழகா எழுதி இருக்க மாட்டேன்..//

நன்றி நண்பா..

//இது முழுக்க உண்மை இல்ல. கல்லூரி வரை நம்ம விருப்பங்களும் அப்பா/அம்மாவின் விருப்பம்மாகவே இருக்கு..//

பெண்கள் அளவுக்கு ஆண்கள் மீது கருத்துத் திணிப்புகள் கிடையாதுன்னுதான் நண்பா சொல்ல வரேன்..

//சேட்டைக்காரன் said...
சுவாரசியம் குறையாமல் ஒரு சமகால ஆதங்கத்தை எழுதியிருக்கிறீர்கள்.//

நன்றிங்க..

//வானம்பாடிகள் said...
:)). இக்கரைக்கு அக்கரை. அப்படி வாய்ப்பு இருக்கும்போது, எல்லாத்துக்கும் நானே ஓடுறதா இருக்குன்னு பிட்டு விழும். (அனுபவந்தேன் அனுபவந்தேன்..ஹி ஹி)//

பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி பாலா சார்.. அனுபவம் பேசுது.. ஹி ஹி.. ரைட்டு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
நல்லா எழுதி இருக்கீங்க நண்பா//

நன்றி தல..

// மயில் said...
கானா பானா நான் என்ன சொல்றது?:)//

தெய்வமே.. நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. உண்மையில ராம் சார் தான் இதுக்கு பதில் சொல்லணும்..:-))

//முகிலன் said...
நல்லா எழுதியிருக்கீங்க கார்த்திகைப் பாண்டியன். பல பேரோட வீட்டுல இன்னிக்கி இதுதான் நடக்குது//

:-))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவிதை காதலன் said...
பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க... நல்லா இருக்கு பாஸு//

எல்லா அனுபவமும் நம்மள சுத்தியே நடக்கும்போது அப்படித்தான் இருக்கும் நண்பா

//க.பாலாசி said...
சரியாச் சொன்னீங்க தலைவரே.... இது அவங்களாவே கட்டிக்கிறது... அவிழ்த்துப்போடுவது அவர்களின் உரிமையே...//

என்னுடைய ஆதங்கமும் அதுதான் பாலாஜி

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karuppu said...
பாஸ்,நல்லா எழுதி இருக்கீங்க...நிதர்சனமான நடந்து கொண்டு இருக்கிறது(சிலரது வாழ்க்கையில்).... இது கொஞ்சம் ஓவரா எழுதி இருக்கிறது மாதிரி எனக்கு தெரியுது.... நானும் தென் மாவட்டத்துல இருந்துதான் வாரேன்... கொஞ்சம் பெரிய ஆளா ஆகிட்டா போதும்...வயல் வேலை, அந்த வேலை இந்த வேலைன்னு போட்டு சாவடிச்சிடுவாங்க....கூடவே எங்க தங்கச்சியும் அம்மாவும் இருப்பாங்க.....Finallay I am trying to say that there is no concept called superiority man and inferiority women in middle class families....Both of them have a responsibilities to take care of the family and they are doing also....நகர வாழ்க்கை முறை எனக்கு தெரியாது...என்னுடைய வாழ்க்கை முறையில் இருந்து இதை எழுதி இருக்கேன்..... :)//

உங்களோட கருத்த தெளிவா சொன்னதுக்கு நன்றி நண்பரே.. நீங்க சொல்றதும் சரிதான்..ஆனா நான் சொல்ல வரது என்னன்னா.. எந்த அளவுக்கு பெண்கள் மற்றவர்களை சார்ந்து இயங்குராங்க என்பதுதான்.. ஆண்களுக்கு இருக்கும் ஒரு சில சுதந்திரங்கள் அவர்களுக்கு மறுக்கப்படுவது உண்மைதானே.. மற்றபடி நகரத்துக்கும் கிராமத்துக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது நண்பா..

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
//.. பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க.. ..//
இது உண்மைங்களா..??//

அக்கப்போருக்கு எப்படி எல்லாம் அலையுது பாரு?

கார்த்திகைப் பாண்டியன் said...

// நேசமித்ரன் said...
மனவியல் சார்ந்த சின்னச் சின்ன கவனக் கோரல்கள் ஏக்கங்கள் ஆக பரிணமிக்கும் நிதர்சன வலி சொற்களாகி இருக்கும் இவ்விடுகை மற்றொரு பரிணாமத்தின் துவக்கம் உங்கள் எழுத்துகளில்...//

பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி இருக்கீங்க. நன்றி தல..

// டம்பி மேவீ said...
என்ன தல . மே மாசம் நெருங்க நெருங்க .... இந்த மாதிரி பதிவெல்லாம் எதிர்பார்க்கலாமா //

எப்படிய்யா இவ்வலவு டீசண்டா சாணி அடிக்கிறீங்க?

//எல்லா இடங்களிலும் இப்படி தான்.... நான் பார்த்த பல பணக்கார அல்லது வளர்ந்த குடும்ப பெண்களுக்கும் இந்த மாதிரி கட்டுப்பாடு எல்லாம் இருக்கும்... ஆனால் அவர்களெல்லாம் மதில் மேல் பூனையாய் குழம்பிய மனநிலையில் இருப்பார்கள்... //

இது புதுத் தகவல்..

//அதே போல் என்னை மாதிரி மிகவும் கட்டுபாடான குடும்பத்தில் பிறந்த ஆண்களுக்கும் நிறைய இம்சை இருக்கும்//

இது காமெடி..:-)))

//டம்பி மேவீ said...
அண்ணிக்கு லிங்க்யை ஈமெயில் பண்ணுங்க . இப்பவே நல்ல பெயர் வாங்க ஆரம்பிச்சுடுங்க//

அது ஒரு முடிவில்லாத் தேடல்ப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

@ மதார்

ரொம்ப நன்றிங்க.. யாராவது ஒருவரிடம் இருந்தாவது விரிவான எதிர்வினை வரும் என எதிர்பார்த்தேன்..

//அது என்னங்க பின்குறிப்பு //நான் பார்த்த, பழகிய.. குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்..//..//

நான் இந்த இடுகையை எழுதிய பின்னாடிதான் யோசிச்சேன்.. வெளிநாட்டுல இப்படி இல்ல.. ஏன் நம்ம சென்னைல கோட இப்படி இல்லைன்னு யாரும் சொன்னா என்ன பண்ரதுன்னு? அதுக்காகத்தான் அந்த வரிகளை சேர்த்தேன்..
//நீங்க எந்த காலத்துல இருக்கீங்க ? சென்னையில் இருக்கும் அத்தனை அலுவலகங்களிலும் குறிப்பா சாப்ட்வேர் ஆபீஸ் போய் பாருங்க . அங்கிருக்கும் பெண்களில் பலர் தென்மாவட்டப் பெண்கள்தான் . இங்கே சென்னையில் இருந்துகொண்டு உங்களுக்கு பதில் பின்னூட்டம் போடும் நானும் தென்மாவட்டமே . சொல்லப் போனா சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணைவிட தென்மாவட்ட பெண்கள் வெளிஉலக அனுபவத்தில் குறைந்தவர்கள் அல்ல . //

நீங்களே சொல்றீங்க பாருங்க.. சென்னைல இருக்கிற மக்களுக்கு இருக்கக் கூடிய exposure level மற்ற எல்லா ஊரிலையும் இருக்குதா? எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லை என்பதுதான் உண்மை.. அந்த வருத்தைத்தான் நான் சொல்ல வருகிறேன் தோழி.. காலம் மாறினாலும் இன்னும் இங்கெ சில விஷயங்கள் மாற வில்லை என்பதுதான் நிதர்சனம்..

//முழுக்கமுழுக்க இன்றைய பெண்கள் யாரும் ஆண்களை மட்டுமே துணைக்கு நம்பி இருப்பதில்லை . தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள பெண்கள் தயாராய் உள்ளனர் .//

முழுக்க முழுக்க என்பதில் நான் வேறுபடுகிறேன் மதார் அவர்களே.. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இது சாத்தியம் என்கிறீர்களா?

//குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் நீங்க ஊர்சுற்றி வருவதற்கு பெண்களின் வளர்ப்புமுறை , தைரியம் பற்றி குறை கூற வேணாம்.//

இது கொஞ்சம் விஷமமான வார்த்தைகள்.. பெண்கள் சார்ந்து பேசுவதை விடுத்து ஆண்கல் மீதான வன்மம் தான் பெரிதாக தெரிகிறது.. அப்படி அத்தனை ஆண்களும் பொறுப்பு இல்லாமல்தான் இருக்கிறீர்களா?

//பெண்களும் உங்களுக்கு போட்டியாய் ஊர்சுற்ற அவர்கள் தோழியுடன் வெளியில் போனால் குடும்பம் உருப்படுமா?//

இது வீண்வம்பு தோழி.. இதனால் குடும்ப வாழ்க்கையில் வீணான பிரச்சினைதான் வரும்... யாரையும் சார்ந்து இருக்காமல் பெண்கள் முன்னேறி வர வேண்டும் என்பதுதான் இந்த இடுகையின் சாராம்சம்.. அதில் இருந்து நாம் தடம் மாற வேண்டாமே?

இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அறிய தந்தமைக்கு நன்றி..:-)))

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. அக்கப்போருக்கு எப்படி எல்லாம் அலையுது பாரு?..//
:-D))
ஆனா கேள்விக்கு பதில் வரலையே..??!!

கார்த்திகைப் பாண்டியன் said...

// கமல் said...
மேலை நாடுகளில் மேற்கத்தையப் பெண்களைப் போலவே எம் தமிழ்ப் பெண்களும் தனியே வாழவும், தனித்துச் சாதிக்கவும் பழகிவிட்டார்கள். இது இந்தியா, மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வழக்கத்திற்கு வர நிறையக் காலம் எடுக்கும். காலத்திற்கேற்ற கட்டுரை.//

:-((((((

//ச.செந்தில்வேலன் said...
நல்ல பதிவு நண்பா.. முதல் பாதியில் ஏதோ உங்களைத் தயார்படுத்திக் கொள்வது போல தோன்றினாலும் ;) உண்மையை அழகாக எழுதியுள்ளீர்கள்!! அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பது பிடிக்கிறது. நாமும் அதை மதித்து நடப்பது தேவையானது.//

இதுவும் நல்லா இருக்கு நண்பா..:-))

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சிறந்த புனைவு நண்பரே !
மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !மீண்டும் வருவான் பனித்துளி !//

அவ்வ்வ்வ்வ்.. புனைவா? நண்பா.. என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?

கார்த்திகைப் பாண்டியன் said...

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
:-D)) ஆனா கேள்விக்கு பதில் வரலையே..??!!//

பக்கத்து வீடு எல்லாம் இல்ல தல.. எல்லாம் நம்ம நண்பர்கள் மற்றும் சொந்த அனுபவம்தான்..:-)))

bharathi said...

nalla irukku nanpare!
naangalum appadithan nanpare!

NIVETHA said...

"கைக்குள் அடங்கும் உலகம் " நல்லா இருந்தது .(ithu ellarukkum illanaalum oru silarukku porunthum thozhare)

கார்த்திகைப் பாண்டியன் said...

//bharathi said...
nalla irukku nanpare! naangalum appadithan nanpare!//

நாங்களும் அப்படித்தான் என்றால்? அப்படின்னா என்ன அம்மிணி?
// NIVETHA said...
"கைக்குள் அடங்கும் உலகம் " நல்லா இருந்தது .(ithu ellarukkum illanaalum oru silarukku porunthum thozhare)//

:-)))))))

~~Romeo~~ said...

\\"உனக்கு பொண்டாட்டியா வர்றவ ஒரு பிடாரியா அமையணும்.. நாலரைக்கு கல்லூரி முடிஞ்சா டாண்னு அஞ்சு மணிக்கு வீட்டுல இருக்கணும்னு உன் சிண்டைப் பிடிச்சு உலுக்குரவளா இருக்கணும்.." //

இதை விட உலகத்தில் வேறு அதிபயங்கர சாபம் ஏதும் இல்ல பாஸ் .. ஹா ஹா ஹா

குமரை நிலாவன் said...

நல்ல பதிவு நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//~~Romeo~~ said...
இதை விட உலகத்தில் வேறு அதிபயங்கர சாபம் ஏதும் இல்ல பாஸ் .. ஹா ஹா ஹா//

என்னய்யா.. அதுல உங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா?

//குமரை நிலாவன் said...
நல்ல பதிவு நண்பா//

:-)))))))

ஸ்ரீ said...

மிக நல்ல பதிவு.நல்ல கோர்வையான எழுத்து,நல்ல நடை,நல்ல கருத்து.பாராட்டுகள்.

shaan said...

அந்த பெண் கூறுவதில் தவறெதுவும் இல்லை. நீங்கள் சொல்வது தான் தவறு. பெண்களுக்கு எப்போதும் குடும்பம் சார்ந்தே இருக்க வேண்டும் என்று யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. அது பெண்களுடைய மரபணுக்களிலேயே இருக்கிறது. நட்பு என்பது இரு நபர்களிடம் மட்டும் இருந்தால் போதாது. இரு குடும்பங்களிடயே வேண்டும். ஒருவர் தன் மனைவியை தன் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பருடைய மனைவிடமும் அறிமுகப்படுத்தும் போது நட்பு மேலும் வளரத்தான் செய்யும். உங்கள் மனைவியும் அவர் மனைவியும் உங்கள் குழந்தைகளும் அவர்கள் குழந்தைகளும் நண்பர்கள் ஆவார்கள். இல்லை, நான் செல்லும் இடத்துக்கு என் மனைவி வரமுடியாது என்று கூறினால் அதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தான் பொருள். மனைவியைக் கூட்டிச் செல்ல முடியாத ஒரு இடம் இருக்கிறது என்றால் அது எப்படிப்பட்ட இடம்? அது நல்லதல்ல. அது பெண்களுக்கு உள்ளூரத் தெரியும். அதனால் தான் இந்த புகார்.

shaan said...

மற்றபடி எப்போதாவது தனியே செல்வது தவறல்ல. ஆனால் பலமுறை தனியே சென்றால் அது தவறு தான்.

இய‌ற்கை said...

ம்ம்ம்.. என்ன சொல்லாலாம்ம்ம்ம்ம்? :-)))

அன்புடன் அருணா said...

முழுமையாக உடன்பட முடியவில்லையெனினும் நல்ல பதிவு.

கார்த்திகைப் பாண்டியன் said...

//shaan said...
அந்த பெண் கூறுவதில் தவறெதுவும் இல்லை. நீங்கள் சொல்வது தான் தவறு. பெண்களுக்கு எப்போதும் குடும்பம் சார்ந்தே இருக்க வேண்டும் என்று யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. அது பெண்களுடைய மரபணுக்களிலேயே இருக்கிறது.//

எனக்கு இதில் கருத்து வேறுபாடு உள்ளது நண்பா.. இது போன்ற விஷயங்களை நாம் இருக்கும் சமூகம்தான் உருவாக்குகிறதே தவிர மரபணு என்பதை என்னால் ஏற்க முடியவில்லை

//shaan said...
மற்றபடி எப்போதாவது தனியே செல்வது தவறல்ல. ஆனால் பலமுறை தனியே சென்றால் அது தவறு தான்.//

அவர்கள் அதையும் குற்றமாக சொல்வதைத்தான் நண்பா நான் சொல்ல வருகிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இய‌ற்கை said...
ம்ம்ம்.. என்ன சொல்லாலாம்ம்ம்ம்ம்? :-)))//

டீச்சரே இப்படி யோசிச்சா எப்படி?

// அன்புடன் அருணா said...
முழுமையாக உடன்பட முடியவில்லையெனினும் நல்ல பதிவு.//

கண்டிப்பாக கருத்து வேறுபாடு இருக்கும் என்பதை அறிவேன் தோழி.. என்னுடைய கருத்துக்களை அனைவரும் அப்படியே ஏற்க வெண்டும் என எண்ணுபவன் நான் கிடையாது.. ஏதொ ஒரு விதத்தில் இந்த இடுகையில் இருக்கும் கருத்துக்களோடு கொஞ்சமேனும் ஒத்துப் போகிறீர்கள் அல்லவா.. அதே போல எதிர்க்கருத்தும் இருக்கிறது அல்லவா.. ஆக மொத்தத்தில் உங்களை சிந்திக்க வைத்து இருக்கிறேன்.. அதுதான் முக்கியம்.. நன்றி