March 30, 2010

நினைவுகளின் நீரோடையில்.... பத்துப் பெண்கள் - தொடர்பதிவு..!!!

என் வாழ்க்கை பெண்களால் ஆக்கப்பட்டது. என் சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே வளர்ந்துள்ளேன். வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள் ( நன்றி - ஸ்ரீ ). எத்தனை உண்மையான வார்த்தைகள். பெண்கள் எப்போதுமே எனக்குப் பிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல.. நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். "எனக்குப் பிடித்த பத்து பெண்கள்" என்கிற இந்த தொடர்பதிவை எழுதும்படி எனக்கு அழைப்பு விடுத்த நண்பர் வாசகர் தேவை - எம்.பிரபுவுக்கு மிக்க நன்றி.

நான் ரொம்பவே லேட்டாக இந்த வண்டியில் ஏறுகிறேன் என்று நினைக்கிறேன். பதிவுலகில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்தத் தலைப்பில் எழுதி விட்டார்கள். அன்னை தெரசா தொடங்கி ஐஸ்வர்யா ராய் வரை எல்லா பிரபலங்களும் ஏற்கனவே பல நண்பர்களால் குறிப்பிடப்பட்டு விட்ட நிலையில் நான் யாரைப் பற்றி எழுத என்று எனக்குத் தெரியாத காரணத்தால், இடுகையில் ஒரு சின்ன மாற்றத்தை செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில்.. நான் கடந்து வந்த பாதையில்.. என்னுள் பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய பெண்களைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். கோல் போட வசதியாக கம்பத்தை மாற்றி வைத்ததற்காக ஆட்டத்தின் ரூல்ஸை வடிவமைத்த அம்பயர்கள் என்னை மன்னிப்பீர்களாக..:-)))

திருமதி.சுந்தர்சிங்

நான் படித்த செவன்த் டே பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்தவர். என்றைக்கும் எனது பிரியத்துக்கு உரியவர். தமிழ் மீதான என்னுடைய ஆர்வத்தின் மூலகாரணம் இவர்தான். பள்ளி முதல்வரின் மனைவி என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரோடும் இனிமையாக பழகக் கூடியவர். பொருளாதார சூழ்நிலையின் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து ஊக்குவித்தவர். எனக்கு ஆசிரியை என்பதை விட ஒரு நல்ல, அன்பான மனுஷி.

மீனாட்சி

இந்தப் பெயரை சொல்லும்போதே என் உடம்பில் என்னையும் அறியாமல் ஒரு சின்ன சிலிர்ப்பு ஓடுகிறது. பெயரைத் தவிர மீனாட்சியை பற்றிய எதுவும் எனக்கு நினைவில் இல்லை. அவள் ஆள் உயரமா குட்டையா.. கருப்பா சிவப்பா.. அவள் முகம் எப்படி இருக்கும்? சத்தியமாக எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனால் என்னிடம் கடைசியாக அவள் பேசிப்போன வார்த்தைகள் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

நான் அப்போது ஐந்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தேன். சுப்ரமணியபுரம் கல்லு சந்தில் நான்கு வீடுகள் இருந்த ஒரு காம்பவுண்டில் எங்கள் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த மீனாக்கா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்தவள்தான் மீனாட்சி. என்னை விட ஒரு வயது கம்மி. வந்து இரண்டு மூன்று நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியாகிப் போனாள். அந்த விடுமுறை முழுவதும் நான் அவளுடனே விளையாடிக்கழித்தேன். சாப்பாடு, தூக்கம் எல்லாமே ஒன்றாகத்தான். மற்ற பசங்க எல்லாம் கோபம் கொண்டு என்னோடு சண்டைக்கு வந்தபோதும் நான் கண்டு கொள்ள வில்லை. வீட்டில் இருந்து திருப்பதி சுற்றுலா போனபோது கூட, அவர்களோடு போக மறுத்து மீனாக்கா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமளவுக்கு மீனாட்சி மீதான என் பிரியம் ரொம்பவே அதிகமாக இருந்தது.

எந்த ஒரு ஆரம்பத்துக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா? அந்தக் கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்தது . சிறிது நேரத்தில் மீனாட்சி ஊருக்கு கிளம்பப் போகிறாள். நானும் அவளும் மொட்டை மாடியில் தனியாக இருக்கிறோம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டே இருக்கிறது. "நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்க முடியாதா..?" அவளுக்கான பதில் என்னிடம் இல்லை. அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன். "நான் அடுத்த லீவுக்கும் இங்க வருவேன்.. நாம மறுபடி பார்க்கணும்டா.. என்னை மறந்துட மாட்டியே..?" முதல் முறையாக ஒரு ஜீவன் நான் அவள் கூடவே இருக்க வேண்டும் என விரும்புவதாகச் சொன்னது அப்போதுதான். நான் அழுது கொண்டே கொண்டே தலை அசைத்தேன். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது. கிளம்பிப் போய் விட்டாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனாக்காவின் குடும்பமும் வீட்டை காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். இன்று எங்கோ வாழ்ந்து வரும் மீனாட்சிக்கு என்னை நினைவிருக்குமா என்று தெரியவில்லை? ஆனால் அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் இன்று வரை எனக்குள் உயிர்ப்பாகவே இருக்கின்றன.

அய்யனார்

இவளும் என்னுடைய பால்ய கால சினேகிதிதான். நான் சற்றே வளர்ந்து ஏழோ எட்டோ படித்துக் கொண்டிருந்தபோது பழகியவள்.என் பிரியத்துக்குரிய தோழி. வேறுபாடுகள் ஏதுமின்றி என்னோடு விளையாடித் திரிந்தவள் என்றாலும் பெண் என்கிற ஒரு காரணத்தாலேயே என்னிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட மற்றுமொரு அற்புதமான உறவு. சட்டெனத் தோன்றி மறையும் வானவில்லாய் என் வாழ்வில் வந்து காணாமல் போனவள். அய்யனாரும் நானும் ஒன்றாக சுற்றித் திரிந்த நாட்களைத்தான் "ஒரு கிழிஞ்ச சட்டையும் அய்யனாரின்நினைவுகளும் " என்கிற இடுகையாக எழுதி இருக்கிறேன்.

பிருந்தா, அனிதா மற்றும் திவ்யா

கல்லூரியில் என்னோடு படித்தவர்கள். நாங்கள் மொத்தம் ஏழு பேர். நான், தேவா, சற்குணம், மற்றும் மனோஜ்... நான்கு ஆண்கள் மற்றும் இந்த மூன்று பெண்கள். இவர்கள் மூவரின் பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டே எங்களை "BAD guys" என்று அழைப்பார்கள். எங்கள் துறையில் மொத்தமே பனிரெண்டு பெண்கள்தான். அதுவும் இரண்டாம் வருடத்தில்தான் ஆண்களோடு சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்கள். முதலாம் ஆண்டில் பெண்கள் எல்லோருக்கும் தனி செக்சன். யாருக்கும் யாரையுமே தெரியாத நிலையில் கல்லூரியில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து இருந்தார்கள். அனைவரும் பேருந்தில் ஏறி விட்ட நிலையில், நான் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தபோது, "இங்கே வந்து அமர்ந்து கொள்ளுங்கள்" என்று தாங்கள் இருந்த இருக்கையில் என்னை அழைத்து அனிதா உட்கார வைத்ததில் எங்கள் நட்புக்கான விதை தூவப்பட்டது. அந்த சுற்றுலா எங்களுக்குள் நல்ல புரிதலையும், ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணியது.

மூவரில் பிருந்தா ரொம்பவே மெச்சூர்ட் ஆன பெண். பிரச்சினைகள் வரக் கூடிய சமயங்களில் தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவள். தற்போது கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலை பார்ப்பதாகக் கேள்வி. (கேள்வியா? ஏன்.. தொடர்பில் இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. பதிலை கடைசியில் சொல்கிறேன்..) அனிதா.. அவளை எப்படி மறக்க முடியும்? ஒரே ஒரு கேள்வியால் என் வாழ்வை புரட்டிப் போட்டவள். பள்ளியில் படிக்கும் காலங்களில் எனக்கு தீர்மானமாக ஒரு எண்ணம் உண்டு. "என்னுடைய நல்ல தோழிதான் எனக்கு சிறந்த மனைவியாக இருக்க முடியும்.." கோவை ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் வைத்து அனிதா என்னிடம் சொன்ன வார்த்தைகள் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றியது. "ஒரு பொண்ணு கிட்ட தோழின்னு சொல்லி கைய குடுத்த பின்னாடி, எப்படிடா அவள காதலிக்க முடியும்? காதல்னா உடம்பப் பார்க்கும்டா கார்த்தி.. ஆனா நட்பு மனசு சம்பந்தப்பட்டது.. அது காதல விடப் பெரிசு.." நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. நான் தெளிந்த நாள் என்று அதை சொல்லலாம். இப்போது அனிதாவுக்கு திருமணம் ஆகி பிரான்சில் இருப்பதாகத் தெரிகிறது. (இதுவும் சரியாத் தெரியாதா.. ஏன் என்றால்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தல..) அமைதி என்றால் அது திவ்யா. ஆனால் ரொம்பவே தைரியசாலி. பார்ப்பதற்கு அனிதாவின் உடன்பிறந்த தங்கை போலவே தோற்றம். இப்போது திருமணம் முடிந்து லண்டனில் இருக்கிறார்.

சரி.. இத்தனை நெருக்கமாக இருந்த மக்களோடு ஏன் இன்று தொடர்புகள் இல்லை? உறவுகள் எல்லாமே திடமாக இருக்கும்.. இருந்தோம்.. அனைவரும் நட்பாக இருக்கும்வரை. அதைக் கொஞ்சம் மீறி ஒரு ஜோடிக்குள் காதல் பிறந்தபோது எங்கள் மொத்த குழுவுமே சிதைந்து போனது. என் உறவோடு நீ ஏன் பேசுகிறாய் என சந்தேகம், நீ செய்வது தப்பு நான் செய்வது சரி என.. ஹ்ம்ம்.. என் வாழ்வில் நான் மறக்க நினைக்கும் காலம் என என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டை சொல்லலாம். எத்தனைக்கு எத்தனை சந்தோஷமாக இருந்தேனோ, அத்தனைக்கு அத்தனை என் நிம்மதியை தொலைத்து திரிந்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவர்களோடு நான் இருந்த நினைவுகளை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.

காதலி (X)

நண்பர்களைப் பிரிந்து நான் தனியனாக சுற்றிக் கொண்டிருந்த கல்லூரி இறுதியாண்டு காலத்தில் எனக்கு அறிமுகம் ஆனவள். கோவையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில்தான் முதல் முதலில் அவளை சந்தித்தேன். (நானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப் போன ஜாதியும்.. இவளேதான்..) அருமையான பெண். குழந்தை போன்ற மனமுடையவள். ஆரம்பத்தில் விகல்பம் இல்லாமல்தான் பழகி வந்தோம். ஒரு சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் இருவரும் அமர்ந்து இரவு முழுதும் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே மற்றவர் மீது ஈர்ப்பு இருந்ததை அப்போதுதான் அறிந்து கொண்டோம். அவளுடைய பெற்றோருக்கும் என் மீது ஆர்வம் இருந்தாலும் ஜாதி என்னும் ஒரு விஷயம் எங்களின் எல்லா கனவுகளையும் கலைத்துப் போட்டது.

பெற்றோர் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி விட நிறையவே அழுதாள். எங்காவது போய் விடலாம் என்று கூட சொன்னாள். படிப்பு முடியாத நேரம். பிழைக்க வழி இல்லாத சூழலும், என் குடும்பத்தின் நிலையும் என்னை தடுத்து விட்டன. கல்லூரி முடிந்து நான் கிளம்பியபோது கடைசியாக அவளைப் பார்த்து விடைபெற்றதை.. என் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் அழுததை இன்று நினைத்தாலும் உள்ளம் கதறித் துடிக்கிறது. என் வாழ்வில் நான் தேடித் போன காதல் அவள். அவளுடைய திருமணத்துக்கு அழைப்பு வந்தும் போகவில்லை. அதை விடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன?

தோழி (1 )

ஒரு ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் நண்பர்களாக இருக்க முடியுமா என்கிற கேள்விக்கு பதிலாக வந்து சேர்ந்த என் பாசத்துக்கு உரிய தோழி. என் அக்காவின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவள். நண்பர்களோடு நடந்த தகராறில் வந்த கோபத்தால் எல்லாப் பெண்களுமே மோசமானவர்கள் என்று நான் உளறிக் கொண்டிருந்த காலம். இப்படி எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று எனது அக்கா சொல்லப் போக "நீ எப்படி பெண்களைப் பற்றி தவறாக சொல்லலாம்? ஆண்கள் ரொம்ப யோக்கியமா..?" என்று கடிதம் எழுதியதுதான் எனக்கும் அவளுக்குமான உறவுக்கு அடிப்படை. எங்களுக்கிடையே இருந்த நல்ல புரிதலின் காரணமாக விரைவிலேயே நண்பர்கள் ஆகிப்போனோம். எல்லோரும் விலகி நின்ற நிலையிலும், என்னையும் ஒரு ஆளாக மதித்து என்னோடு நட்பு பாராட்டிய ஒரு ஜீவன்.

அது செல்போன்கள் வராத காலம். நான் கோவையிலும், அவள் விருதுநகரிலும் இருந்தோம். எல்லாத் தொடர்பும் கடிதங்கள் வாயிலாகத்தான். இன்றைக்கும் அந்தக் கடிதங்களை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். ஒரு பெண் தன் நண்பன் மீது எந்த அளவு நம்பிக்கையும், பாசமும் வைக்க முடியும்? தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக யாரோடும் பழகாமல் ஒதுங்கியே இருக்கக்கூடியவள் என் தோழி. அப்படிப்பட்டவள் என்னோடு சிரித்துப் பேசுவதில் சுற்றி இருந்த மற்ற பெண்களுக்கு ஆச்சரியம். "கார்த்தி கூட பேசுறப்ப மட்டும்தான் நீ சந்தோஷமா இருக்க.. நீ அவன விரும்புறியா..?" கேட்ட பெண்ணுக்கு என் தோழி சொன்ன பதில்.."எனக்கு இந்த உலகத்துல ரொம்பப் புடிச்சது எங்கப்பா.. அதுக்காக அவரை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா.. கார்த்தியையும் நான் அந்த அளவுக்கு நேசிக்கிறேன்.. தயவு செஞ்சு அந்த உறவை கொச்சைப்படுத்தாதீங்க.." நீ என் வாழ்வில் கிடைக்க எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்? தற்போது அவளுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறாள். இன்று வரை என் மீதான அன்பு குறையாத, எனக்காக கவலைப்படுகிற உனக்கு நான் எப்படி நன்றி சொல்ல முடியும் தோழி?

காதலி (Y)

திண்டுக்கல்லில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னைத் தேடி வந்த காதல். எங்கள் கல்லூரியில் புதிதாக வேலைக்கு வந்து சேர்ந்தவள் அவள். நிரம்பவே கஷ்டப்படும் குடும்பம். எனக்கும் அந்த வலி தெரியும் என்பதால் பல விஷயங்களில் தானாக முன்வந்து அவளுக்கு உதவினேன். அந்தக் கருணையே அவளுக்குள் காதலாக மாறும் என்று நினைக்கவில்லை. ஜூலை மாதத்தின் ஒரு மாலையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து தன் காதலைச் சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வந்து விட்டேன். ஆனால் அவளைப் பிடித்து இருந்தது.

எனக்கான வாழ்வை என்னுடைய பெற்றோர் தான் அமைத்து தர வேண்டும் என நான் சொலி வந்த நேரத்தில், எங்கே என்னை மீறி காதலில் விழுந்து விடுவோமோ என்று எனக்கு பயம் வந்தது. இரண்டே மாதங்களில் அங்கிருந்து வேலையை மாற்றிக் கொண்டு பெருந்துறைக்குப் போய் விட்டேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது என்பது தெரிந்தால் அவள் மேலும் வருந்தக் கூடும் என்பதால் கடைசிவரை அவளிடம் காரணத்தை சொல்லவே இல்லை. "நான் வேண்டுமானால் போய் விடுகிறேன்.. நீங்கள் இருங்கள்" என்று அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவளிடம் இருந்து விலகிப் போனேன். தற்போது ராஜபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் வேலை பார்த்து வருகிறாள். நானாகவே விரும்பி அவளிடம் இருந்து விலகி நிற்கிறேன் என்றாலும் என் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என்று வருந்திக் கொண்டிருக்கிறேன் என்றால் அது அவளைப் பிரிந்ததுதான்.

தோழி (2 )

வாழ்வில் ஒரு சில உறவுகள் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்படும். ஆனால் நம் மொத்த வாழ்க்கையையும் ஒரேடியாக திருப்பிப் போட்டு விடும். அப்படிப்பட்ட ஒரு உறவு. கடந்த நான்கு வருடமாகத்தான் எனக்குப் பழக்கம். என்னை தன் விரோதியாக எண்ணிக் கொண்டிருந்தவள். இவனெல்லாம் ஒரு ஆளா என்றெண்ணிய மனிதனை என் எல்லாமே நீதான் என்று அவளே சொல்லுமளவுக்கு வாழ்க்கை மாற்றி விட்டதை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னுடைய சந்தோசம், துக்கம் என எல்லாவற்றிலும் என் கூடவே இருப்பவள். உயிருக்குயிரான தோழி. அதே நேரத்தில் என் பிரியத்துக்குரிய எதிரியும் கூட. என்னை விடவும் என்னை அதிகமாக நேசிப்பவள்.என்னருகே இல்லாதபோதும் எப்போதும் என்னுடனே இருப்பவள். என் குழந்தை என்று தான் அவளை எண்ணிக் கொள்ளுகிறேன். ஆனாலும் நான் அவளை அம்மா என்றழைப்பதுதான் வழக்கம். அந்த அளவுக்கு என் மீது பாசத்தைப் பொழிபவள். வாழ்வின் கடைசிவரை என் கூட வரும் உறவு. திருமணம் ஆகி கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். இந்த மகிழ்ச்சியும், உறவும் கடைசி வரை வாழ்க்கையில் நிலைத்து இருந்தால் அதை விட வேறு என்ன வேண்டும்?

என் வாழ்க்கையென்னும் டைரியின் ஒரு சில பக்கங்களைத்தான் நான் இங்கே உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்படாத.. சொல்லப்பட வேண்டிய எத்தனையோ பேர்.. எத்தனையோ விஷயங்கள் உள்ளன. வாழ்க்கை என்பது ஒரு இடுகைக்குள் அடங்கி விடக் கூடிய விஷயமா என்ன? நான் இந்த இடுகையை கிட்டத்தட்ட ஒரு வார காலமாக எழுதி வருகிறேன். ஒவ்வொருவர் பற்றி எழுதும்பொழுதும் காலத்தில் பின்னோக்கி பயணம் செய்பவனாக மீண்டும் ஒரு முறை அந்தத் தருணங்களில் வாழ்ந்து வந்தேன். சந்தோசம், துக்கம், ஆதரவு, வலி என.. அது ஒரு சுகமான அனுபவம். இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் பிரபுவுக்கு மீண்டுமொரு முறை என் மனமார்ந்த நன்றி.

March 26, 2010

அங்காடித் தெரு - திரைப்பார்வை..!!!

மதுரையில் பாத்திரங்கள் விற்கப்படும் தெருவில் அருகருகே இருக்கும் பிரபலமான இரண்டு கடைகள். நண்பர் ஒருவருக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக நானும் அவரும் போகிறோம். இரண்டு கடைகளின் வாசல்களிலும் நின்றபடி "உள்ளே வாருங்கள், உள்ளே வாருங்கள்" என்று கூவியபடி இருந்தார்கள் சில பணியாளர்கள். நானும் நண்பரும் ஒரு கடைக்குள் நுழைந்து விட, "என்னடா புடுங்கிக்கிட்டு இருக்கீங்க... இப்படியே வர்றவன் எல்லாம் மத்த கடைக்குப் போனா நம்ம பொழப்பு வெளங்கின மாதிரிதான்..." மற்ற கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த மனிதருக்கு காரசாரமாக வசவு விழுவது எங்கள் காதில் விழுந்தது. லேசாக மனது வலித்தாலும் அதை அத்தோடு மறந்து போனேன். நம்மைப் பொறுத்தவரை அது வாழ்வில் கடந்து போகும் மற்றுமொரு சம்பவம். ஆனால் அதை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு?

நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களின் பார்த்திராத பக்கங்களைத் துணிந்து பதிவு செய்திருக்கிறார் வசந்தபாலன். கடைகளின் வாசலை நின்றபடியே நம்மை வரவேற்கும், சிரித்துப் பேசி பொருட்களை விற்கும் பணியாளர்களை மட்டுமே நாம் அறிவோம். அந்தப் பணியில் அவர்கள் சந்திக்கும் துயரங்கள் எத்தனை.. எப்படி எப்படி எல்லாமோ பாடுபடுவதை மறைத்துக் கொண்டு அவர்கள் நமக்கு சிரிப்பை மட்டுமே தருகிறார்கள்.. நமக்கு வேண்டியதை செய்து தருகிறார்கள்.. ஆனால் அவர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள் என்ன.. எதைப்பற்றியும் இதுவரை நான் யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது யோசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். இப்படி ஒரு களத்தை தெரிவு செய்து, எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் இயக்கி இருக்கும் வசந்தபாலனுக்கும், படத்தை தயாரித்து இருக்கும் ஐங்கரனுக்கும் ஹாட்ஸ் ஆப்.



சென்னையின் புகழ் பெற்ற ரங்கநாதன் தெருவில் இருக்கும் பல்பொருள் அங்காடிக் கடை. (அண்ணாச்சி, சினேகா, போலிஸ் பிரச்சினைகள் என்று பல விஷயங்களை வைத்து சரவணா ஸ்டோர்ஸ் என்றுதான் தீர்மானம் செய்ய வேண்டி இருக்கிறது) வறுமையின் காரணமாக உறவுகளைப் பிரிந்து அங்கே வந்து வேலைக்கு சேருகிறான் நாயகன் ஜோதிலிங்கம். அங்கே கூட வேலை பார்க்கும் பெண்ணான கனியோடு காதல் ஏற்படுகிறது. பணியாளர்கள் அனைவரையும் கொடுமை செய்யும் மேலாளருடன் ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் வேலை போகிறது. தங்களுக்கென புதிதாக ஒரு வாழ்க்கையை இருவரும் அமைத்துக் கொள்ள முற்படும் நேரத்தில் எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். இறுதியில் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிக்கிறது "அங்காடித் தெரு".

நாயகன் மகேஷுக்கு இது முதல் படம் என்பதை சத்தியமாக யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பக்கத்து வீட்டுப் பையன் போல மனதில் ஒட்டிக் கொள்கிறார். அத்தோடு அருமையாக நடித்து இருக்கிறார். ரொம்ப மிகையான நடிப்பு என்றில்லாமல் பாத்திரத்தை உள்வாங்கி செய்துள்ளார். தனது வேலை போய் விடுமோ என்ற பயத்தில் மேலாளரின் காலை கட்டிக் கொண்டு அழும் காட்சி.. ஒரு சோறு பதம். உதடுகளைப் பிதுக்கியபடி, கண்களில் வழிந்தோடும் மென்சோகத்தோடு "நெசமாத்தான் சொல்றியா" என்று கற்றது தமிழிலேயே உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் அஞ்சலி. அடுத்ததாக அவர் தவறான படங்களை தெரிவு செய்தபோது ரொம்பவே நொந்து கொண்டிருக்கிறேன்.. இத்தனை அருமையான நடிகை வீணாகப் போகிறாரே என்று. அதை இந்தப் படத்தில் நிவர்த்தி செய்து விட்டார். அவர் வாழ்க்கைக்கும் இந்த ஒரு படம் போதும். கனியாக வாழ்ந்து இருக்கிறார். மகேஷோடு வம்பிழுப்பது, காதலில் பொய்க்கோபம் காட்டுவது, காதலன் தன் மீது நம்பிக்கை இழந்து விட்டானே என்று கோபம் கொள்வது, அடுத்து நாம் என்ன செய்வது என்று குழம்பி தவிக்கும் இறுதி காட்சி என.. இது அஞ்சலிக்கான படம். சொந்தக்குரலில் வேறு பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அமர்க்களம். இயல்பான காதல் என்பது எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



மேலாளர் கருங்காலியாக வரும் இயக்குனர் ஏ.வெங்கடேஷும், அண்ணாச்சியாக நடித்து இருப்பவரும் பாத்திரங்களுக்கு வெகுவாகப் பொருந்திப் போகிறார்கள். படத்தின் உண்மையான "show stealer " கனா காணும் காலங்கள் பாண்டி தான். நாயகனின் நண்பனாக வந்து ரொம்ப இறுக்கமான படத்தை தன்னுடைய இயல்பான நகைச்சுவையால் கலகலப்பாக நகர்த்திக் கொண்டு செல்கிறார். நாயகியின் அப்பாவாக கவிஞர் விக்கிரமாத்தித்தன் ஒரு காட்சியில் வந்து போகிறார். படத்தில் நடித்து இருக்கும் அனைத்து துணை நடிகர்களுமே தங்களுடைய வேடத்தை அருமையாக செய்து இருக்கிறார்கள். சினேகா கவுரவ வேடத்தில் ஒரு விளம்பர ஷூட்டிங்குக்காக வந்து போவதாகக் காட்டி இருந்தாலும், அவரையும் படத்தின் ஒரு முக்கிய பாத்திரமாக மாற்றி இருப்பது இயக்குனரின் திறமை.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனியின் இசையில் "அவள் அப்படி ஒன்று அழகில்லை, உயிர் உன்னோடுதான்" ஆகிய இரண்டு பாடல்களும் அவை படமாக்கப்பட்டு இருக்கும் விதமும் அருமை. "எல்லாப் பொருட்களும் இந்தத் தெருவில் கிடைக்கும், மனிதம் மட்டும் கிடைப்பதில்லை..", "கை கால்கள் இல்லாத மனிதர்கள் கூட உண்டு, அந்நாள் வாயும் வயிறும் இல்லாத மனிதர் என எவருமில்லை.." அமிலம் தோய்ந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நா.முத்துக்குமார். "விக்கத் தெரிஞ்சவந்தான் இங்க வாழ முடியும்..", "யானை வாழுற அதே காட்டுலதான் எறும்பும் வாழுது.. நாங்களும் வாழ்ந்து காட்டுறோம்.." படத்துக்கு வெகு பாந்தமான வசனங்களைத் தந்து இருப்பவர் ஜெயமோகன். கண்களை உறுத்தாத, படத்தை விட்டு தனித்து தெரியாத இயல்பான ஒளிப்பதிவைத் தந்து இருக்கும் ரிச்சர்டுக்கு பாராட்டுக்கள். எடிட்டிங் - ஸ்ரீகர்பிரசாத். ஒரு தெரு, ஒரு கடை.. படத்தின் பெரும்பகுதி இங்கேதான் நடைபெறுகிறது. ஆனால் எந்த இடத்தில் தோய்வே இல்லை. அதேபோல படத்தின் எந்தக் காட்சியையும் என்னால் தேவை இல்லாதது என்று சொல்ல முடியவில்லை. நிறைவாக செய்திருக்கிறார்.


படம் முழுவதும் தென்படும் நுண்ணரசியல் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.

--> சென்னை கடைக்கு வேலைக்கு ஆள் சேர்க்க நெல்லைப்பகுதிக்கு வருகிறார்கள். அங்கே இருப்பவர் சொல்கிறார்.."நம்ம சாதிப்பயலா.. அதுவும் அப்பா அம்மா இல்லாதவனா எடுங்கப்பா.. அப்பத்தான் நாம என்ன பண்ணினாலும் சரி சரின்னுட்டு நாம்ம சொல்றதக் கேட்டுக்கிட்டு இருப்பான்.."

--> வேலையில் தவறு செய்த பெண்ணை மறைவான இடத்தில் வைத்து அடிக்கிறான் மேலாளர். திரும்பி வரும் நாயகியிடம் "என்ன பண்ணின.. உன்னைய வேலைய விட்டுத் தூக்காம இருக்கிறான்?" என்கிற நாயகனின் எகத்தாளமான கேள்விக்குஅவள் சொல்கிறாள்.."அவசியம் தெரியணுமா? என் மாரப் புடிச்சு பெசஞ்சான்.. ஒண்ணும் சொல்லாம இருந்தேன்.. விட்டுட்டான்." வேலைக்குப் போகும் பெண்களின் மீதான பாலியல் வன்முறையை அப்பட்டமாக சொல்லும் காட்சி இது.

--> வேலைக்கு வரும் மக்கள் தங்குமிடம் மற்றும் அவர்கள் உணவுண்ணும் விடுதி.. பல்பொருள் அங்காடிகள், செளைக்கடைகள் என்றில்லை.. சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகள்.. திருப்பூர் பனியன் கம்பெனிகள்.. திண்டுக்கல் காட்டன் மில்கள்.. இங்கெல்லாம் நடக்கக் கூடிய உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

--> கதையின் ஊடாக அங்கே இருக்கும் மற்ற மனிதர்களின் வாழ்க்கையும் படம் பிடித்து இருக்கிறார்கள். கண் தெரியா விட்டாலும் மனிதர்களை நம்பித் தான் பிழைப்பதாக சொல்லும் பெரியவரும், கழிவறையை சுத்தம் செய்து வாழ்வில் முன்னேறும் மனிதரும் நம்பிக்கையின் குறியீடுகள். குள்ள மனிதரைத் திருமணம் செய்த வேசிப்பெண்ணுக்கு கணவரைப் போலவே குழந்தை உடல் குறைப்பாட்டோடு பிறக்கிறது. மாறாக அவர் அதற்காக சந்தோஷப்படுகிறார். "இது யாருக்கோ பிறந்த குழந்தை கிடையாது, என் கணவருக்குத்தான் பிறந்தது என்று சமூகம் ஒத்துக் கொள்ளும் அல்லவா" என்று அவர் சொல்லும்பொழுது திரைஅரங்கில் கைத்தட்டல்கள் அதிர்கின்றன.

--> வேலையைக் காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்லும் கடை சிப்பந்தி.. தன் காதலை கொச்சைப்படுத்தியவன் கண்முன்னே தற்கொலை செய்து கொள்ளும் பெண்.. பணம் வாங்கிக் கொண்டு அதை மூடி மறைக்கும் போலிஸ்.. எல்லாமே நாம் கண்கூடாகப் பார்க்கும் உண்மைகள்.

வாழ்க்கையில் தோற்றுப் போன மனிதனை நாயகனாக்கி "வெயில்" எடுத்த வசந்தபாலன் இந்தப் படத்தில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை சொல்லி இருக்கிறார். கதைக்குப் பொருத்தமான நடிகர்கள், சரியான தொழில்நுட்பக் கலைஞர் என்று பார்த்து பார்த்து தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். தமிழ் சினிமாவின் யதார்த்தப் படங்கள் என்றாலே கிராமம், அருவா, ஜாதி என்று போய்க் கொண்டிருப்பவர்கள் மத்தியில், நகரத்தின் ஒரு பகுதி மக்களையும் அவர்களின் யதார்த்த வாழ்க்கையையும் முடிந்த வரை புனைவில்லாமல் பதிவு செய்திருப்பது அருமையான முயற்சி. ஒரு சில கதாப்பாத்திரங்களின் படைப்பு கொஞ்சம் நாடகத்தன்மையோடு இருந்தாலும் படத்தில் இருக்கும் நேர்மை அதனை மறக்கடித்து விடுகிறது. உலக சினிமாக்களை பார்க்கும்போது ஏன் இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழில் வருவது கிடையாது என்று மாய்ந்து போவதை நிவர்த்தி செய்து இருக்கும் வசந்தபாலனை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.

என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும்.

அங்காடித் தெரு - நம்பிக்கை

March 24, 2010

உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!!

தமிழ்வெளி மற்றும் சிங்கைப் பதிவர்கள் இணைந்து நடத்திய மணல்வெளி கட்டுரைப் போட்டியில் நமது அன்புக்குரிய தருமி அய்யா "அரசியல்" பிரிவில் வெற்றி பெற்று இருக்கிறார். அதேபோல பிரியத்துக்கு உரிய டாக்டர்.தேவன்மாயம் "மருத்துவப்" பிரிவில் வெற்றிவாகை சூடி முத்திரை பதித்து இருக்கிறார். மற்றொரு வெற்றியாளரான பிரபாகரும் (அமெரிக்கன் கல்லூரி) எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். நமக்குத் தெரிந்த நண்பர்கள் மூவர் வெற்றி பெற்று இருப்பதில் உள்ளூர ஒரு மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் போட்டியில் நான் பங்கேற்காத நிலையிலும் என்னுடைய மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆழமான தலைப்புகளில் எழுதும் ஆர்வத்தை தூண்டி, நிறைய பேரை எழுத வைத்து, வெற்றி பெற்றவர்களை தகுந்த முறையில் கவுரவிக்கவும் செய்யும் சிங்கைப் பதிவர்களுக்கும், தமிழ்வெளிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

***************

மதுரையில் எந்த வம்பும் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு தனியாக ஒரு அவார்டே கொடுக்கலாம் போல. ஆறு மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நிறைய சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றம், கண்டிப்பான காவலர்கள், முக்கியமான இடங்களில் சிக்னல் கம்பங்கள் என எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சமீப காலமாக எல்லாம் மாறி (நாறி) விட்டது. யாருமே சிக்னலை மதிப்பது கிடையாது. சிக்னலை மதித்து நாம் பொறுமையாக காத்து நின்றால் பின்னால் இருப்பவர்கள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். காவலர்களும் யாரையும் கண்டு கொள்வதில்லை. எல்லோரும் அவரவர் நினைத்த வழியில் எல்லாம் போகிறார்கள், வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் தினம் ஒரு விபத்து நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. பொறுப்பில் இருப்பவர்கள் யோசிப்பார்களா?

***************

போன சனிக்கிழமை மாலை. நானும் எனது நண்பரும் இருசக்கர வாகனத்தில் என் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் பாலம் - எல்லிஸ் நகர் பிரியும் பாதை. எங்களுக்கு முன்னே இறக்கத்தில் பைக்கில் இருவர் போய்க் கொண்டிருந்தார்கள். ஜீப் ஒன்று ஏறி வந்து கொண்டிருந்தது. திடீரென ஜீப்பின் முன் டயர் வெடித்து விட, வண்டி தடுமாறி எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த பைக்கை அடித்து தூக்கியது. வாழ்க்கையில் கண்முன்னே விபத்து நடப்பதை நான் இத்தனை நெருக்கத்தில் பார்த்தது கிடையாது.

பதறிப்போய் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடினோம். வண்டியை ஒட்டி வந்தவருக்கு செம அடி. வலது காலின் பாதப்பகுதி எலும்பு மொத்தமாக உடைந்து போயிருந்தது. மனிதர் நல்ல மனதிடத்துடன் இருந்ததால் கொஞ்சம் தாக்குப்பிடித்து எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். மற்றவருக்கும் ஆங்காங்கே சிராய்ப்புகள். சுற்றி இருந்த மக்கள் எல்லாம் உதவிக்கு வந்து விட்டார்கள். உடனடியாக 108 க்கு போன் செய்தேன். பிறகு அவர் வீட்டாருக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னோம். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து விட அனைவருமாக சேர்ந்து அவரை ஏற்றி விட்டோம். ஆத்திர அவசரத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு ஏற்பாடு செய்திருக்கும் 108 வசதி உண்மையிலேயே அருமையான திட்டம்தான். தமிழக அரசுக்கு நன்றி.

இரண்டு நொடிகள் முனதாக சென்று இருந்தால்.. அவர் இடத்தில் நான் இருக்கக் கூடும். நினைக்கும்போதே உடம்பு பதறுகிறது. "நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா இருந்தாலும் சுத்தி இருக்குற மக்கள் ஒழுங்கா ஓட்டலைன்னா கஷ்டம்தான்.." என் அப்பா அடிக்கடி சொல்வது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. கெட்டதிலும் ஒரு நல்லது - யாரோ அடிபட்டுக் கிடக்கிறார் என்றில்லாமல் அத்தனை மக்கள் உதவிக்கு வந்து நின்றதைப் பார்த்தபோது மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

***************

இரண்டு நாட்களுக்கு முன்பு.. காலை நேரம். கல்லூரிக்கு வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு ஆவின் வேன் போய்க் கொண்டிருந்தது. வண்டியின் ஒரு கதவு மட்டுமே மூடி இருந்தது. மற்றொரு கதவு பப்பரப்பே என்று திறந்து கிடந்தது. வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் பால் டிரேக்கள். சடாரென ஒரு பிரேக் போட்டால் அத்தனை டிரேவும் பின்னால் வரும் மனிதர் மேல் விழக்கூடும். அதே போல கதவும் திடீரென யார் மேலாவது மோதக் கூடும். வேகமாக வண்டியை ஓவர்டேக் செய்து முன்னால் போய் ஓட்டுனரிடம் கதவு திறந்து இருப்பதை சொன்னேன். அசுவாரசியமாக கேட்டுக் கொண்டவர் - "எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க சார்.." என்றார். பல்பு. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அருகில் யாராவது போலிஸ் இருந்தால் சொல்லலாம் என்று பார்த்தால் அதற்குள் ஆள் எஸ்கேப். தெரிந்தே தவறு செய்வது, மற்றவர் சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்ள மறுப்பது... என்ன கொடுமை சார் இது?

***************

நேற்று மாலை நேரம்.. எட்டு மணி இருக்கும். பொழுது போகாமல் வண்டியில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். திருப்பரங்குன்றம் சாலை - அவ்வளவாக கூட்டம் இல்லை. எனக்கு முன்னாடி வண்டியில் ஒரு புதுமண ஜோடி. புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் அந்தக் களை வருமோ? ரொம்பவே மெதுவாகப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னாடி இருந்த மனைவி அடிக்கடி ஏதோ சொல்வதும் சிரிப்பதுமாக கணவனின் முகத்தருகே குனிந்து முத்தமிடுவதுமாக இருந்தார். நம்ம சுழிதான் சும்மா இருக்காதே.. சடாரென்று ஹெட்லைட்டை அவர் முகத்தில் அடித்தேன். அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். எனக்கோ சங்கடமாக போய் விட்டது. வேகமாக தாண்டி வந்து விட்டேன். நான் அவரை ஓட்டப்போய் கடைசியில் அவர் எனக்கு பல்பு கொடுத்ததுதான் மிச்சம். என்ன ஒரு வில்லத்தனம்? ஹ்ம்மம்ம்ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

***************

"பையா" படத்தின் டிரைலர் பார்த்தேன். கார், சாலை என்று பெயர் போடுவது எல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் காட்சி அமைப்புகளும், சண்டைக் காட்சிகளும் பார்க்கும்பொழுது "ரன்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. முதல் முறையாக கார்த்தியை கொஞ்சம் கலர் கலரான உடைகளில் பார்க்க முடியும் என்பது பெரிய ஆறுதல். தமன்னா..ஆ..ஆ.. வேறு இருக்கிறார். லிங்குசாமி என்ன பண்ணக் காத்து இருக்கிறார் என்று தெரியவில்லை.. பார்க்கலாம்.

***************

நிறைய விஷயங்களை சீரியசாக சொல்லியாச்சு. அதனால் முடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் மொக்கை ஜோக்ஸ்..

நபர் 1: சினிமா என் ரத்தத்துல கலந்து இருக்கு சார்..

நபர் 2: அதெல்லாம் சரி.. ஏன் ஒரே கில்மா படமா எடுக்குறீங்க?

நபர் 1: ஹி ஹி.. என்னோட பிளட் குரூப் "A" தான சார்..

oOo

டென்சன் ஜாஸ்தி ஆனால் என்ன ஆகும்?

"லெவன்"சன் ஆகும்..

oOo

நபர் 1: நானும் என் மனைவியும் "தெய்வ மகன்" படத்துக்குப் போயிட்டு வந்த பிறகுதான் எங்களுக்கு மூணு குழந்தைங்க பொறந்தது...

நபர் 2: நல்ல வேளை.. நீங்க "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்துக்குப் போகல..

oOo

பெண்: டாக்டர்.. என்னோட மாமியார் கால்ல முள் குத்திடுச்சு..

டாக்டர்: முள்ளை எடுக்கணுமா?

பெண்: ச்சே ச்சே.. முள் சின்னது.. அதையேன் தொந்தரவு பண்ணிக்கிட்டு? பேசாம காலை எடுத்துடுங்க..

ரைட்டு.. இப்போதைக்கு அவ்வளவுதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

March 20, 2010

கச்சேரி ஆரம்பம் - திரைப்பார்வை..!!!

சமீப காலமாக தமிழ் சினிமாவை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் மசாலா + ஆக்சன் ஹீரோ ஜூரம் ஜீவாவுக்கு அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பதை அடித்துச் சொல்லும் படம்தான் "கச்சேரி ஆரம்பம்". ராம், கற்றது தமிழ், ராமேஸ்வரம்னு போனவர் டிராக் மாறி... கொஞ்ச நாள் முன்னாடி தெனாவட்டு, இப்போ இந்தப் படம். சரி விடுங்க, அப்பா சவுத்ரி தயாரிப்பாளரா இருக்க பயமேன்? படத்தோட கதையைக் கேட்டு ஆஆஆஆனு வாயப் பொளக்கக் கூடாது.. சரியா? ஏன்னா இதுவரைக்கும் யாருமே சொல்லாத அற்புதமான கதை..



வேல வெட்டி இல்லாம ஊரு சுத்துற, அப்பா பேச்ச மதிக்காத உத்தமபுத்திரன் ஜீவா. (சிங்கக்குட்டில..) வீட்டுல சண்ட போட்டுக்கிட்டு ராம்னாட்ல இருந்து கிளம்பி சென்னை வாராரு.(ரொம்பப் புதுசா இருக்கே..) அங்க கதாநாயகிய பார்த்தவுடனே காதல். (அடடா..) ஆனா அவங்க மேல வில்லனுக்கு ஒரு கண்ணு. (இதப் பாருடா..) நாயகிகூட யாராவது பேசினாக்கூட அவங்கள கொல்ற அளவுக்கு வெறித்தனமா காதல்.(அச்சோ..). இப்போ ஜீவா என்ன பண்றாருன்னா, வில்லன் கூடவே இருந்து குழி பறிக்கிராறு.(மாஸ்டர் பிளான் மன்னாரு..) கடைசியில அவங்க காதல் என்னா ஆச்சு (அஆவ்வ்வ்) என்பதை வெள்ளித்திரையில் காண்க. (அடைப்புக் குறிக்குள் இருப்பது இந்தப் பதிவைப் படிக்கும் புண்ணியவான்களின் புலம்பல் என்று கொள்க...)

அருமையா டான்ஸ் ஆடுறார். நகைச்சுவையும் ஈசியா வருது. சண்டைக் காட்சிகளும் ஓகே. ஜீவா எல்லா வேலையையும் கச்சிதமா பண்றார். ஆனா கதைய செலக்ட் பண்றதுல மட்டும் கோல் அடிக்கிறாரு. இவ்வளவு அரதப் பழசான கதையில எதப் புதுசாக் கண்டாருன்னு தெரியல.. மாஞ்சு மாஞ்சு அவர் கஷ்டப்பட்டு நடிச்சது எல்லாம் வீண். ஒரு சிலரை ஏன் பிடிக்குதுன்னு சொல்ல முடியாது. ஆனா ரொம்பப் பிடிக்கும். கொழுக் மொழுக்னு செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்குற பூனம் பாஜ்வா அந்த வகையறா. லோகட் சுடில சும்மா நம்ம மனசப் பூரா அள்ளிக்கிறார். நடிப்பா? அது கிடக்கு கெரகம்..(ஹி ஹி ஹி)



இந்த வருஷத்துல இது வரைக்கும் வந்த படங்கள்ல.. சிறந்த "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" விருதை சக்ரவர்த்திக்கு கொடுக்கலாம். தெலுங்கு, ஹிந்தின்னு டெர்ரரா இருந்த மனுஷன வில்லன்கிற பேர்ல காமெடி பீசா ஆக்கி இருக்காங்க. அது எப்படிப்பா ஊரே பயப்படுற வில்லன் எல்லாம் ஹீரோக்கிட்ட மட்டும் லூசா மாறிடுறீங்க? வடிவேலு காமெடியப் பார்த்தா அவருக்கே சிரிப்பு வருமாங்கிறது சந்தேகம். அவர விட கிரேன் மனோகர் + கிங்காங் காமெடி எவ்வளவோ பரவாயில்லை. ஆர்த்தி - வழக்கம் போல நாயகியின் கல்லூரித் தோழியா வந்து கடியப் போடுறாங்க.

இமானின் பாடல்கள்ல இரைச்சல் கொஞ்சம் ஜாஸ்தி என்றாலும், ஒரு சில, கேட்க வைக்கும் ரகம். ஜீவா டான்சில் பட்டையைக் கிளப்பும் வித்த வித்த, ஜெய்ப்பூரில் அழகாகப் படமாக்கி இருக்கும் காதலே, அமோகா ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடிப் போகும் வாடா வாடா என்று மூன்று பாட்டுகள் தேறுகின்றன. வில்லனுக்குப் பின்னாடி ஒலிக்கும் ஒரு மாதிரியான பின்னணி இசை நன்றாக இருக்கிறது. அறிமுக கலை இயக்குனர் நன்றாக செய்து இருக்கிறார். குறிப்பாக வாடா வாடா பாட்டின் செட்டுகள் அட்டகாசம். ஒளிப்பதிவு படத்தோட இணைஞ்சு வருது. இழுத்துக் கொண்டே போகும் இரண்டாம் பாதியில் இருக்கும் தேவை இல்லாத மொக்கை காட்சிகளை எடிட்டர் கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.



முதல் பாதி ஓரளவுக்கு போர் அடிக்காமல் போகிறது. இரண்டாம்பாதிதான் கொஞ்சம் ஜவ்வு. முழுக்க முழுக்க பி மற்றும் சி செண்டர் மக்களைக் குறிவைத்து எடுத்து இருக்கும் படம். படத்தின் நிறைய காட்சிகளில் "தமிழ்ப்படம்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதற்குத் தகுந்தாற்போல ஆரம்பம் முதல் கடைசி வரை தங்கள் படத்தை தாங்களே கிண்டல் செய்து கொள்ளும் விதமாக காட்சிகள் இருக்கின்றன. அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சல்தான் வருகிறது.

"பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என்ற அட்டையைக் காண்பித்து கொண்டே திரையில் தலை காட்டும் இயக்குனர் திரைவண்ணனுக்கு முதல் படம். இது சிரிப்புப் படமா இல்லை சீரியஸ் படமா என்பதில் இயக்குனர் ரொம்பவே குழம்பி இருக்கிறார். திரைக்கதையிலும், நகைச்சுவையிலும் காட்டி இருக்கும் கவனத்தை கொஞ்சம் கதையிலும் காட்டி இருந்தால் கச்சேரி நிஜமாகவே களை கட்டியிருக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

கச்சேரி ஆஆஆ... ரம்பம்

March 18, 2010

கைக்குள் அடங்கும் உலகம்..!!!

சமீபத்தில் நண்பரை பார்ப்பதற்காக திண்டுக்கல் போயிருந்தேன். அன்பான மனைவி, இரண்டு வயது பெண் குழந்தை என்று அழகான குடும்பம். வீட்டை எதிர்த்து எங்கள் உதவியோடு காதல் திருமணம் செய்து கொண்டவர். (இன்றைக்கு எல்லோரும் ராசியாகி விட்ட சூழலில் கூட நானும் திருமணத்துக்கு உதவிய மற்ற நண்பர்களும் அவர்கள் இருவரின் வீட்டிலும் வில்லன்களாக பார்க்கப்படுவது தனிக்கதை). நண்பரின் மனைவியும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு எனக்கு நல்லதொரு தோழிதான். நான் போன நேரம் வீட்டில் இருவருக்கும் சின்ன வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் விவகாரம் நம்ம பஞ்சாயத்துக்கு வந்து நின்றது.

நண்பரின் மனைவி சொன்ன பிரச்சினையின் சாராம்சம் இதுதான்: "நண்பர் எங்கே போனாலும் தன்னையும், குழந்தையையும் அழைத்துப் போவதே கிடையாது. திருமணத்துக்கு முன் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இப்போதும் அப்படியே இருந்தால் நியாயமா? நான் என்ன அது வேண்டும், இது வேண்டும் என்றா கேட்கிறேன்? கூடவே இருங்கள் இல்லை என்னையும் கூட்டிப் போங்கள் என்று தானே சொல்கிறேன். இது தப்பா?" அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த விழித்தேன். நானே பலமுறை வெளியே போகும்போது நண்பரை குடும்பத்தை தவிர்த்து விட்டு வரும்படி கூறி இருக்கும் சூழ்நிலையில் நான் எங்கே இதற்கு தீர்ப்பு சொல்வது? நண்பரை பார்த்தால் அவர் மென்று முழுங்கிக் கொண்டிருந்தார். "கண்டிப்பா நான் சொல்றேன்மா.." என்று மேலோட்டமாக அடித்து விட்டு வந்தேன்.

இது போன்ற குற்றச்சாட்டை நான் கேட்பது இது முதல் முறை அல்ல. நான் இந்த பத்தியை எழுதக் காரணமான மற்றொரு ஜீவன் - என்னுடைய நெருங்கிய தோழி ஒருவர்தான். அவர் ஒரு வீட்டுப் பிராணி. எதற்காகவும் வெளியே சுற்றாதவர். நண்பர்கள், ஏதாவது வேலை என்று நான் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறேன் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய குற்றச்சாட்டு. அதற்காக எனக்கு சாபம் கூட கொடுத்து இருக்கிறார்.."உனக்கு பொண்டாட்டியா வர்றவ ஒரு பிடாரியா அமையணும்.. நாலரைக்கு கல்லூரி முடிஞ்சா டாண்னு அஞ்சு மணிக்கு வீட்டுல இருக்கணும்னு உன் சிண்டைப் பிடிச்சு உலுக்குரவளா இருக்கணும்.." என்ன ஒரு வில்லத்தனம்?

பொதுவாகவே நான் பார்த்த பல பெண்களும் இத்தகைய குற்றச்சாட்டை சுமந்து திரிபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய உலகம் என்பது ஒரு குறுகிய இடத்துக்குள் முடிந்து போகிறது. படித்த பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நான், என் கணவர், என் பிள்ளைகள்.. சுருங்கச் சொன்னால் என் குடும்பம்... இவ்வளவுதான். "ஏம்மா அவரைத் தொங்கிக்கிட்டு.. நீங்களா வேணும்கிற இடத்துக்குப் போயிட்டுவர வேண்டியதுதானே" என்று சொல்லிப் பாருங்கள். அது பெண்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.

எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது வெளியே சுற்றுவது என்பது பெண்களைப் பொறுத்தமட்டில் தேவையில்லாத ஒன்று. ஆனால் அத்தகைய வட்டத்துக்குள் சுருங்கிக் கிடக்க பெரும்பான்மையான ஆண்களால் முடிவதில்லை என்னும்போதுதான் பிரச்சினை வருகிறது. அவர்கள் சுதந்திரமாக சுற்றி வர விரும்புகிறார்கள். யாருடைய தலையீடும் இல்லாமல் தாங்கள் விரும்புவதை செய்ய விரும்புகிறார்கள். அதற்கு தங்களுடைய மனைவியையும் கூட கூட்டிச் செல்வதென்பது முடியாத காரியமாக இருக்கும்போதுதான் மனவேறுபாடுகள் வருகின்றன.

இது ஒரு பிரபலமான நகைச்சுவை துணுக்கு.

ஆண் 1 : வீட்டுல ரொம்ப முக்கியமான முடிவெல்லாம் நான்தான் எடுப்பேன்.. சின்ன சின்ன விவகாரத்த எல்லாம் என்னோட சம்சாரம் பார்த்துப்பா..

ஆண் 2 : அப்படியா?

ஆண் 1 : ஆமா.. அமெரிக்கா ஈராக்குல குண்டு போட்டது சரியா? அடுத்த ரஷியப் பிரதமரா யாரு வரணும்? இந்தியா ஒலிம்பிக்குல தங்கம் வாங்க என்ன செய்யலாம்.. இதெல்லாம் நான் யோசிப்பேன்.. மத்த சின்ன விஷயம்.. அதாவது.. வீட்டுக்கு என்ன சாமான் வாங்குறது.. பிள்ளைய ஸ்கூல்ல சேக்குறது.. வரவு செலவு.. இதெல்லாம் அவ பார்த்துப்பா..

வெறும் நகைச்சுவை என்றால் கூட இதில் இருக்கக் கூடிய சமூகம் பற்றிய தொனியை நன்றாக கவனித்து பாருங்கள். ஆண் என்பவன் குடும்பத்தைப் பற்றிய அக்கறை இல்லாதவனாகவும் பொறுப்புகள் அற்று வெறுமனே வெளியே சுற்றித் திரிபவனாகவும், பெண் என்பவளே சரியான கோணத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் இருப்பதாக அமைந்துள்ளது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இத்தகைய வித்தியாசமான மனநிலை ஏற்பட என்ன காரணமாக இருக்க முடியும்? உண்மையை சொல்வதானால் சிறு வயதில் இருந்தே இதன் அடிப்படைக் கூறுகளை குழந்தைகளின் மனதில் நமது சமுதாயம் விதைத்து செல்வதைக் காண முடியும்.

சிறு பிள்ளையில் பெண்களை என்ன விளையாட்டுக்கள் விளையாட சொல்கிறோம்? பானை, செப்பு வைத்து சோறு சமைத்து விளையாடுவது, காலாட்டுமணி கையாட்டுமணி, கண்ணாடி வளை ஜோடி சேர்த்தல் என எல்லாமே ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகள். பள்ளி போகும் பருவமா? சரி.. வீடு விட்டால் பள்ளி, பள்ளி முடிந்தால் வீடு.. எங்கேனும் வெளியே போக வேண்டுமானாலும் பெற்றோர் இல்லாமல் போகக் கூடாது. கல்லூரியிலும் இதே கதைதான். திருமணம் என்று ஒன்று நடந்தாலும் கணவன் தயவில்தான் எல்லாம் இருக்க வேண்டும். பின்பு குழந்தைகளுக்கான வாழ்க்கை. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. விளையாட்டு தொடங்கி வாழ்க்கை வரை அவர்கள் விரும்பும்படி இருக்கலாம். இதுதானே நடக்கிறது?

ஆரம்பம் முதல் கடைசி வரை இப்படித்தான் இருக்க வேண்டும், எப்போதும் குடும்பம் சார்ந்தே இயங்க வேண்டும் என்று பெண்களின் மனதில் அவர்கள் அறியாமலே சில எண்ணங்களுக்கான விதைகள் தூவப்படுகின்றன. வளரும்போது இதுவே அவர்களின் இயல்பாக மாறி விடுகிறது. இதை பெண்களின் மீதான ஒரு வன்முறை என்று கூட சொல்லலாம். அத்தகைய வன்முறையை பெண்களும் விரும்பி ஏற்றுக் கொள்ளுகிரவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரியாமலேயே, நத்தை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல பெண்களின் உலகம் அவர்கள் கண் முன்னாலேயே சுருங்கிப் போய் விடுகிறது. இந்த நிலை என்று மாறக் கூடும்? பெண்களின் உலகம் என்று பரந்து விரிந்ததாக மாறக் கூடுமோ, தாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றுக்கும் ஆண்கள் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என எதிர்பார்க்காமல் தனக்கான தேவைகளை தாங்களே மற்றவரின் உதவியை எதிர்பார்க்காமல் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுகிறார்களோ.. அன்றுதான் அவர்கள் தங்களுக்கான உண்மையான சுதந்திரத்தை அடைந்ததாக சொல்லிக் கொள்ளலாம்.

(மகளிர் தினத்தை ஒட்டி எழுதியது.. நான் பார்த்த, பழகிய.. குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்.. தற்போது சென்னை முதலான இடங்களில் இது போன்ற விஷயங்களில் பெண்கள் முன்னேறி வருவது மகிழ்ச்சியே.. )

March 16, 2010

களிமண் பொம்மைகள்..!!!

"ஹ்ம்ம்ம்.. வர வர இந்த உலகத்துல யார நம்புறது, யார நம்பக்கூடாதுன்னு ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. கலிகாலம்னு சும்மாவா சொல்றாங்க..?"

காலை நேரத்தில் புலம்பிக் கொண்டு வந்த அம்மாவைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. அவள் எப்போதுமே இப்படித்தான். எதையாவது, யாரோடாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும் அடுத்த வீட்டு அக்கப்போர் என்றால் கேட்கவே வேண்டாம்.

ஒரு வேளை இவள் பேசுவதை கேட்க சகிக்காமல்தான் அப்பா சிறு வயதிலேயே மேலோகத்துக்கு டிக்கட் எடுத்து விட்டாரோ என்றொரு சந்தேகமும் எனக்குண்டு. இதைச் சொன்னால் அவள் ஆற்றாமையில் சாமியாடக் கூடும் என்பதாலேயே நான் எப்போதும் அமைதியாக போய் விடுவது வழக்கம். இப்போதும் அமைதியாகவே இருந்தேன்.

"ஏண்டா.. இங்க ஒருத்தி ஒத்தையில பொலம்பிக்கிட்டு இருக்கேனே? என்னன்னு கேட்க மாட்டியா?"

இனிமேலும் நான் அமைதியாக இருந்தால் அவ்வளவுதான். "என்னை ஏன்னு கேட்க ஒரு நாதியுண்டா" என்று தனியாக ஒரு பிலாக்கணத்தை ஆரம்பித்து விடுவாள்.

"ஏம்மா.. என்ன ஆச்சு?"

"இந்த எதிர்த்த வீட்டு கடன்காரன் இருக்கானே.. ஸ்ரீதர்.. அவன் நம்ம வந்தனா கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணியிருக்காண்டா.. எடுபட்ட பய.. இப்பவே அவனுக்கு பொம்பள கேக்குதா?"

எனக்கு சுரீர் என்றது.

"வந்தனாவையா? என்னம்மா சொல்ற? நல்லாத் தெரியுமாம்மா?"

"அட ஆமாம்டா.. பாவம் அந்தப் புள்ள.. இருக்குற தொல்ல போதாதுன்னு, இது வேற..."

அம்மா அலுத்துக்கொண்டே அடுக்களைக்குள் மறைந்து போனாள். நான் என் சுயநினைவுக்குத் திரும்ப சற்று நேரம் ஆனது.

***************

நான் பள்ளியில் போய் சேர்ந்தபொழுது என்னுடனே வந்து சேர்ந்தவள் வந்தனா. எங்கள் வீடு இருந்த அதே தெருவில்தான் அவள் வீடும். +2 வரை ஒன்றாகவே படித்தோம். என் பிரியத்துக்குரிய தோழியாக இருந்தாள்.

பள்ளிப்படிப்பு முடித்து நான் மேல்படிப்புக்காக டவுனுக்கு போன போது வந்தனாவின் திருமணம் நடந்தது. அவளுடைய வீட்டுக்காரருக்கு பட்டாளத்தில் வேலை. திருவிழாவுக்கு ஊருக்கு வந்துபோது ஒருமுறை அவரோடு பேசி இருக்கிறேன். ரொம்பவே நல்ல மனிதர்.

இரண்டு வருடங்கள். அழகான ஒரு ஆண் குழந்தை, அன்பான கணவர் என அவள் வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்தது... சபிக்கப்பட்ட அந்த நாள் வரும் வரை. ரோந்துக்காக போன இடத்தில் கண்ணி வெடி ஒன்றில் சிக்கி வந்தனாவின் கணவர் இறந்து போக, அவளுடைய வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறிப்போனது. குழந்தையுடன் அம்மா வீட்டுக்கே வந்து விட்டாள்.

பட்டப்படிப்பு முடித்து எங்கள் ஊர் பள்ளியிலேயே எனக்கும் ஆசிரியராக வேலை கிடைத்து விட்டிருந்தது. தினமும் வீதியில் வந்தனாவைப் பார்ப்பேன். எப்போதாவது ஒரு சிறு புன்னகையைத் தந்து போவாள். அதே களையான முகம், அதே சுறுசுறுப்பு. ஆனால் பொட்டில்லாத அந்த முகத்தை பார்க்கும்போது மனசு வலிக்கும். அந்த வந்தனாவைதான் இன்றைக்கு ஸ்ரீதர்..?

என்னால் நம்பவே முடியவில்லை. ஸ்ரீதரை எனக்கு நன்றாகத் தெரியும். எதிர்த்த வீட்டில்தான் இருக்கிறான். நல்ல பையன். எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். பதினாலு அல்லது பதினைந்து வயதுதான் இருக்கும். அவனா வந்தனாவை..?

எனக்கு வந்தனாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

***************

"நல்லா இருக்குறியா..?" வந்தனா குழந்தையை போட்டுத் தொட்டிலில் ஆட்டியவாறே கேட்டாள்.

நான் அமைதியாக இருந்தேன். என்ன சொல்லி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

"தெனமும் உன்னை பார்க்கும்போது பேசணும்னு நினைப்பேன். ஆனா... பார்த்தியா.. கடைசியில எப்படிப்பட்ட சூழ்நிலைல இன்னைக்கு உன்கிட்ட பேச வேண்டியிருக்குன்னு?"

"என்னாச்சு வந்தனா?"

"யாரடா தப்பு சொல்றது? எல்லாம் என் நேரம். ஒரு பொண்ணு புருஷன் இல்லாம இருந்தா யார் கூட வேணா வந்துருவான்னு அர்த்தமா? ஸ்ரீதர ரொம்ப நல்ல பையன்னு நம்புனேண்டா.. ஆனா அவன்.." கண்களில் லேசாக நீர் ததும்பியது.

"ப்ளீஸ்.. அழாத வந்தனா.."

"அக்கா அக்கான்னு காலச் சுத்தி சுத்தி வருவான்.. எப்பவும் குட்டி பாப்பா கூடத்தான் விளையாண்டுக்கிட்டு இருப்பான்.. நான் என்ன சொன்னாலும் செய்வான்.. சமயத்துல தூங்குறது கூட இங்கதான்.. எம்மேல அம்புட்டு பிரியம்.. அவன என்னோட இன்னொரு பையன மாதிரித்தான் நெனச்சேன்.. அவன் முன்னாடி டிரெஸ் மாத்தக்கூட சங்கடப்பட்டது கிடையாது.. அப்படிப்பட்டவன் திடீர்னு... இப்போக்கூட என்னால அவன் ஏன் இப்படி பண்ணினான்னு ஒத்துக்க முடியல.. ரொம்பக் கஷ்டமா இருக்குடா.."

அவள் அழுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. எத்தனை நம்பிக்கை வைத்து இருக்கிறாள்? இதைப் போய் பாழடித்து விட்டானே? எனக்கு ஸ்ரீதரின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

***************

"அப்படி பார்க்காதீங்க அண்ணே.. பயமா இருக்குது.."

கோபத்துடன் நின்றிருந்த என்னெதிரே கண்களைத் தாழ்த்தியவனாக உட்கார்ந்து இருந்தான் ஸ்ரீதர்.

"வந்தனா உன்மேல எவ்வளவு பிரியமா இருந்தா? ஏண்டா இப்படி பண்ணின?"

"வந்தனாக்கா ரொம்ப நல்லவங்க அண்ணே.. நான் தான் லூசுத்தனமா.." உடைந்து போனவனாக ஓவென அழத் தொடங்கினான். நான் அவன் அழுது தீர்க்கும்வரை அமைதியாக இருந்தேன். பிறகு அவனே பேசத் தொடங்கினான்.

"நானா வேணும்னு அப்படி செய்யல அண்ணே... கூட இருக்கிற பசங்கதான் ஏத்தி விட்டாங்க.. நான் அவங்ககூட பழகுரதப் பார்த்து என்கிட்டே ஒரு புக்க கொடுத்து படிக்க சொன்னாங்க.. அதுல வர கதை மாதிரியே அவங்களுக்கும் புருஷன் இல்ல.. அதனாலதான் உன்கூட நல்லா பழகுறாங்க.. யூஸ் பண்ணிக்கன்னு சொன்னாங்க.. போன வாரம் டிவியில கூட ஒரு படம் போட்டாங்க.. அதுல ஒரு அக்கா இப்படித்தான்.. என்ன மாதிரி ஒரு பையன் கூட.. அதப் பார்த்துதான் நானும் அந்த மாதிரி இருக்கலாம்னு.. எனக்கு என்னமோ வந்தனா அக்காவுக்கு விருப்பம் இருக்குற மாதிரி தோணுச்சு.. அத நம்பி.. என் தலைல நானே மண்ணை வாறி போட்டுக்கிட்டேன்.."மீண்டும் அழத் தொடங்கினான்.

வயசு.. சகவாசம்.. அவன் பேசபேச எனக்கு விஜயா அக்காவின் ஞாபகம் வந்தது. எதுவும் பேசாமல் திரும்பி நடக்கத் தொடங்கினேன்.

March 11, 2010

கலையும் கலைஞனும் - மைம் ஷோ..!!!

அன்பின் நண்பர்களே.. கடந்த ஒரு மாதமாக கல்லூரியில் கலைவிழாப் போட்டிகள் களை கட்டி வருகின்றன.. அதன் ஒரு பகுதியாக நான் சார்ந்திருக்கும் மின்னியல் துறை மாணவர்களுக்காக நான் கதை எழுதி இயக்கிய மைம் ஷோவின் வீடியோவை இங்கே இணைத்து இருக்கிறேன்..

எல்லா முயற்சிகளிலுமே ஏதாவது ஒரு விஷயத்தை சமூகத்துக்கு சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு.... அதனாலேயே இன்றைய சமூகத்தில், ஒரு பொம்மலாட்ட கலைஞனுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி இந்த மைமில் சொல்ல முயன்று இருக்கிறோம்.. எங்கள் கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவுக்கு இந்த நிகழ்ச்சி தேர்வு செய்யப்பட்டதில் ரொம்ப மகிழ்ச்சி..



கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.. நல்லதொரு முறையில் இந்த மைம் உருவாக உதவிய அத்தனை மாணவர்களுக்கும் நன்றி.. என் கனவுக் குழந்தையாக இருந்த எண்ணத்தை மயமாக்கி, அதற்கு உயிர் கொடுத்தது பாசமிக்க பத்மநாதனின் அருமையான நடிப்பு.. அவனுக்கு என் உள்ளங்கனிந்த நன்றிகள்..

கடைசியாக பொம்மையின் கையில் இருக்கும் அட்டையில் உள்ள வாசகம்.."இறந்து கிடப்பது கலைஞன் மட்டுமல்ல.. நம் கலையும்தான்.. இனியாவது யோசிப்போம்.."

உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் நண்பர்களே..

March 10, 2010

உக்கார்ந்து யோசிச்சது ( 10 - 3 - 10 )..!!!

அப்பாவின் பணிஓய்வு நிகழ்ச்சிக்காக போன சனிக்கிழமை ( 27 - 02 - 10 ) கல்லூரியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். நாற்பத்து இரண்டு வருடங்கள். கடைநிலை ஊழியராக இருந்து இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் அது அவருடைய உழைப்புதான் என்று நண்பர்கள் பேசியபோது அப்பா ரொம்பவே நெகிழ்ந்து போனார். அவர் ஏற்புரை ஆற்றியபோது வந்தவர்கள் அனைவரும் கண்கலங்கி விட்டனர். அத்தனை பேருக்கும் அவர் நல்லவராக இருந்திருக்கிறார் என்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. நிகழ்ச்சி முடிந்து கல்லூரிக்கு கிளம்பினேன். ஒன்றரை மணிக்குள் கல்லூரியில் கையெழுத்து போட வேண்டும். 12:45 மணிக்கு எல்லாம் ரிங் ரோட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் துணை முதல்வர் வருகிறார் என்று சொல்லி வண்டியை நிறுத்தி விட்டார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியும் டிராபிக் கிளியர் ஆகவில்லை. யாரும் வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. மணி 1:20 . எளிமை, நேர்மை என்றெல்லாம் பேசி வருகிறார் துணை முதல்வர். மொட்டை வெயிலில் மக்களை போட்டு பாடாய்ப் படுத்துவதுதான் உங்கள் எளிமையா? என்னமோ போங்கப்பா..

வண்டியை நிறுத்தி விட்டு அங்கே நின்றிருந்த காவலர் ஒருவரிடம் பேசினேன். நிலைமையை பொறுமையாக கேட்டவர் என்னை தன்னுடைய மேலதிகாரியிடம் கூட்டி சென்றார். காவலர் அவரிடம் பேச வாயைத் திறந்ததுதான் தாமதம். வள்ளென்று விழுந்தார். "உனக்கு வேற பொழப்பே கிடையாதா? எல்லார் சொல்றதையும் கேட்டுக்கிட்டு..போய்யா.." என்னிடம் திரும்பினார்."யாரையும் விட முடியாதுங்க.. உங்க சம்பளம் போனா எனக்கென்ன.. போன் பண்ணி லீவு சொல்லுங்க.." வேலையை பார்க்கப் போய் விட்டார். நான் என்னை கூட்டிச் சென்ற காவலரிடம் அவருக்கு திட்டு வாங்கித் தந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். "பரவாயில்லை சார்" என்றபடி விலகிப் போனார். நான் திரும்பி நனடந்தேன். அருகில் காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்தது.

உங்கள் சேவையில்.. காவல்துறை உங்கள் நண்பன்..

போங்கடா போக்கத்தவங்களா..

***************

எப்.எம்மில் சகட்டுமேனிக்கு மொக்கை போடுவார்கள் என்று தெரியும். ஆனால் சுத்தமாக லூசு மாதிரி பேசுவார்கள் என்பதை போனவாரம்தான் தெரிந்து கொண்டேன். உலகக் கோப்பை ஹாக்கி துவங்கும் நாள். ஒரு பெண் தொகுப்பாளினி பேசிக் கொண்டிருந்தார்.

"இன்னைக்கு நம்ம தேசிய விளையாட்டான ஹாக்கி பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க போறோம். கிரிக்கெட் மாதிரியே தான் ஹாக்கியும். பேட் வச்சு தான் விளையாடுவாங்க.. ஆனா பாருங்க.. இந்த பேட் கொஞ்சம் ஒல்லியா இருக்கும்.. அத்தோட பேட்டோட கடைசி கொஞ்சம் வளைஞ்சு இருக்கும். அதுனாலதான் மக்களுக்கு இந்த விளையாட்டு பிடிக்கலையோ என்னமோ.. கிரிக்கெட் பேட் மாதிரி இதையும் குண்டா நேரா வச்சுட்டா நிறைய பேர் பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன்.."

அட நாசமாப் போறவங்களா.. நீங்க ஹாக்கிக்கு விளம்பரம் பண்ணலைன்னாலும் பரவா இல்ல.. ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமா கிடக்கற விளையாட்ட இப்படி எல்லாம் பேசி சாகடிக்காம இருந்தாலே போதும்டா..

***************

கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு நித்யா விஷயம் பற்றி போனபோது எதனால் இந்த சாமியார்கள் இப்படி செய்கிறார்கள் என்றொரு கேள்வி எழுந்தது. அப்போது என்னோடு வேலை பார்க்கும் ஒரு இஸ்லாமிய அன்பர் குறுக்கிட்டு சொன்னார். "இந்து சமுதாயத்தில் மட்டும்தான் இப்படி விஷயங்கள் நடைபெறுகிறது என்பது கிடையாது. எங்கள் பள்ளிவாசல்களில் ஹஜ்ரத்துகள் என்று சிலர் இருப்பார்கள். எல்லார் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கும் அவர்களுக்கு அழைப்பு உண்டு. கறி, கோழி என்று அருமையான சாப்பாடு. எந்த வேலையும் கிடையாது. வருவோர் போவோரை ஆசிர்வாதம் பண்ணுவது மட்டும்தான்."

"வெறுமனே சாப்பிட்டுக் கொண்டு உடம்பை வளர்த்துக் கொண்டிருந்தால் சும்மா இருக்கத் தோன்றுமா? வணக்கம் சொல்ல வரும் சின்னப் பெண்களிடம் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். நான் எல்லாரையும் சொல்லவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினை பல இடங்களில் இருக்கிறது. இதனாலேயே இப்போதெல்லாம் ஹஜ்ரத்துகளை அழைத்தால் வீட்டில் மாமிசம் சமைக்காமல் சாதாரண சாப்பாடே செய்கிறோம். அத்தோடு பெண் பிள்ளைகளை அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கத் தனியாக அனுப்புவதில்லை.." சொல்லி முடித்தார். என்னத்த சொல்ல? வீட்டுக்கு வீடு வாசப்படி..

***************

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பற்றி நான் எழுதிய விமர்சனத்துக்கு எக்கச்சக்க எதிர்வினைகள். நண்பர் அ.மு.செய்யது போனில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார். மேல்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் மனநிலை இதுபோல புரிந்து கொள்ள முடியாத, நிலை இல்லாத ஒன்றாகத்தான் இருக்கும் என்றார். அதேபோல நண்பர் சுதர்சனனும் கவுதமை நான் ரொம்பவே குறைத்து மதிப்பிடுவதாக குற்றம் சொன்னார். ரொம்ப நாளாக காணாமல் போயிருந்த நண்பர் ஆதவாவும் ஒரு நீண்ட பின்னூட்டத்தில் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்திருந்தார்.

ஆரோக்கியமான முறையில் நண்பர்கள் தங்களுடைய எதிர் கருத்துகளை பதிவு செய்தது ரொம்பவே பிடிக்கிறது. எக்காரணம் கொண்டும் நான் என்னுடைய் கருத்துகளில் இருந்து மாறப்போவது கிடையாது என்றாலும் ஒரு விஷயம் பற்றிய பலருடைய மாற்றுக் கண்ணோட்டத்தையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. இது தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

***************

"மறைபொருள்" என்றொரு குறும்படத்தை இணையத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஒரு கனமான விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் கண்களில் தெரியும் சோகம் நெஞ்சை உருக்குகிறது. கண்டிப்பாக பாருங்கள். மற்றொரு குறும்படம் தோழர் மாதவராஜின் பக்கத்தில் காணக்கிடைக்கிறது. "பள்ளம்" - அருமையான குறும்படம் தோழர். வாழ்த்துகள்.

***************

சமீபத்தில் ரொம்பவே ரசித்த எஸ்.எம்.எஸ்..

பொறியியல் படிக்கும் மாணவர்களின் வருங்காலம்?

எலக்டிரிக்கல் ( ECE & EEE )

ரேடியோ ரிப்பேர்.. சவுண்ட் செர்விஸ்.. விசேஷ வீட்டுகளுக்கான சீரியல் லைட் செட்டிங்க்ஸ்..

மெக்கானிக்கல் ( Mechanical )

சைக்கிள் பஞ்சர்.. ட்ராக்டர் ரிப்பேர்

சிவில் ( Civil )

சித்தாள்.. கொத்தாள்.. மேஸ்திரி

ஏரோ.. ( Aero )

பொம்ம துப்பாக்கி.. ரிமோட் பிளேன்.. பேப்பர் காத்தாடி

கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி ( CSE & IT )

சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம்

மக்களே.. இது விளையாட்டுக்காக மட்டுமே.. எந்த வேலையையுமே நான் குறைத்து மதிப்பிட வில்லை என்பதை நினைவில் கொள்க..

நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))))

March 8, 2010

(கொஞ்சம் லேட்டாக) விண்ணைத் தாண்டி வருவாயா ..!!!

"என்னண்ணே.. விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்தாச்சா?"

"இல்லப்பா.. எனக்கு அவரோட படம் அவ்வளவா பிடிக்காது.."

"ஐயையோ.. இந்தப் படத்துல சிம்பு நீட்டா நடிச்சு இருக்காருண்ணே.. எந்த சேட்டையும் இல்ல.. நம்பிப் பார்க்கலாம்.."

"ச்சே ச்சே.. நான் சிம்புவ சொல்லலைபா.. கவுதம சொன்னேன்.."

"அவ்வவ்.. என்னண்ணே சொல்றீங்க.."

"சிம்பு படம்னா கூட இதுதான் இருக்கும்னு தெரியும்.. வெறும் மசாலாப் படம்னு பார்த்துட்டு வந்திடலாம்.. ஆனா கவுதம்?.. அது என்னமோ தெரியல.. எனக்கும் அவருக்கும் ஆவுறதில்ல.. தமிழ்ல இங்கிலீஷு படம் எடுக்குறவரு.. காக்க காக்க ஒரு படம் மட்டும்தான் பிடிச்சது.. அதனாலதான் யோசிக்கிறேன்.."

என்னோடு பேசிக் கொண்டிருந்தவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே விலகிப் போனார்.


இயல்பாக இருப்பது ஒரு வகை. இயல்பாக இருப்பதுபோல காட்டிக்கொள்வது இன்னொரு வகை. கவுதமின் படங்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவை என்பதுதான் என்னுடைய கருத்து. இன்று வரைக்கும் அவருடைய படங்கள் பாடல்களாலேயே தப்பித்துக் கொண்டு வருகின்றன. நடிப்பவர்கள் எல்லோரும் ரொம்பவே அண்டர்பிளே செய்வது.. திணிக்கப்பட்டது போன்று தெரியும். அத்தோடு அவர் காமிக்கும் மேல்தட்டு வர்க்கத்தோடு என்னால் எப்போதும் என்னை இணைத்து பார்க்க முடிவதில்லை. அதனாலேயே வி.தா.வ பார்க்காமல் இருந்தேன்.

அந்த சமயத்தில்தான் நண்பர் முரளிகுமார் பத்மநாபனின் குறுந்தகவல் வந்தது... "வி.தா.வ பார்க்காதவர்கள் காதல் தேவதையின் சாபத்துக்கு ஆளாவார்கள்..." படம் அத்தனை நன்றாகவா இருக்கிறது? பதிவுகளிலும் நண்பர்கள் ஆகா ஓகோவென்று எழுதி இருந்தார்கள். அசலில் பட்ட அடி ஞாபகம் இருந்ததால் மாணவர்களிடம் கேட்டேன். அவர்களும் நன்றாகவே இருப்பதாக சொன்னார்கள். சரி நம்பிப் போகலாம் என்று முடிவெடுத்து தான் படத்தைப் பார்த்தேன்.


படத்தில் அடிக்கடி சிம்பு ஒரு வசனத்தை சொல்கிறார். "ஊருல எத்தனையோ பொண்ணு இருக்கும்போது நான் ஏன் சார் ஜெச்சிய லவ் பண்ணுனேன்..?" அதேதான். ஊருல எத்தனையோ தியேட்டர் இருக்கு.. நல்ல படம், நாதாரிப் படம்னு எத்தனையோ ஓடுது.. இந்தப் படத்த நான் ஏன் பார்த்தேன்?

ரொம்பவே சிம்பிளான கதை. மெக்கானிக்கல் படித்து விட்டு இணை இயக்குனராக விரும்பும் சிம்பு. போலாரிசில் வேலை பார்க்கும் மலையாளப் பெண் திரிஷாவைப் பார்த்தவுடன் காதலிக்கிறார். சில பல வேண்டாம்களுக்குப் பிறகு திரிஷாவும் காதலிக்கிறார். மதம், குடும்பம்.. இதை எல்லாம் மீறி காதலர்கள் இணைந்தார்களா.. சிம்பு தன் கனவுப்படத்தை எடுத்தாரா என்பதுதான் கதை.



கையைக் காலை ஆட்டாத சிம்பு. யங் சூப்பர் ஸ்டாராம் (அடங்குங்கப்பா..) காதலை சட்டென்று சொல்வது.. பின் அதற்காக வருத்தப்படுவது.. சின்ன சின்ன சந்தோஷங்கள்.. காதலைப் பிரிந்து வாடுவது என அமைதியாக நடித்து இருக்கிறார். அதே நேரத்தில் மனிதர் திரிஷாவோடு வாழ்ந்து இருக்கிறார். எத்தன இச்சு? முடியலடா சாமி. படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது திரிஷாதான். செம க்யூட். அவருடைய கேரியரில் இதுதான் பெஸ்ட் என்று சொல்லலாம். எல்லா உடைகளும் அவருக்கு பொருந்துவது அழகு. சிம்புக்கு உதவும் நண்பராக வரும் கணேஷின் ஒன் லைனர்கள் சிரிக்க வைக்கின்றன.


படத்தை தூக்கி நிறுத்துவது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவுதான். காட்சிகள் அத்தனையும் தெள்ளத்தெளிவு. குறிப்பாக கேரளா காட்சிகள்.. பாடல்களை படமாக்கி இருக்கும் விதமும் அருமை. ரகுமானின் இசையைப் பற்றி சொல்லவா வேண்டும். வழக்கமான வடிவங்களில் இருந்து மாறுபட்டு பாடல்களை கொடுத்து இருக்கிறார். ஹோசன்னா, ஓமனப்பெண்ணே, கண்ணுக்குள் கண்ணை வைத்து.. மூன்றும் என்னுடைய பேவரைட்ஸ். பின்னணி இசையில் ரொம்ப நாள் கழித்து கிழித்து இருக்கிறார் ரகுமான். ஆனால் அதே நேரத்தில் ஒரு சில காட்சிகளில் தூங்கி விட்டார் போல. அண்ணனோடு சண்டை என திரிஷா - சிம்பு மோதிக் கொள்ளும் காட்சி, பிரியும்போது வரும் சோகம் என மனதை உருக்கும் சோகப் பின்னணியில் பின்னப் போகிறார் என்று பார்த்தால், அங்கே வாத்தியங்கள் கிடந்து உருளுகின்றன. என்ன கொடுமை சார் இது? கண்ணை உறுத்தாத கலை ராஜீவனுடையது. எடிட்டிங்கில் ஆன்டணி தன்னால் முடிந்ததை செய்து இருக்கிறார்.


படத்தின் அடிப்படையே திரிஷாவின் கேரக்டர்தான். அவர் பிராக்டிகலா இல்லை காதலில் உணர்ச்சி வசப்படக் கூடியவரா? ஒன்றுமே புரியவில்லை. ஒரு காட்சியில் நாம் நண்பர்களாக இருப்போம் என்கிறார். அடுத்த காட்சியில் அத்தனை பழக்கம் இல்லாத ஒருவனை ரயில் கிஸ்ஸடிக்க விடுகிறார். அடுத்த காட்சியில் மீண்டும் நாம் நண்பர்கள் என பல்டி அடிக்கிறார். மதம், வயது எல்லாம் பற்றி பேசுகிறார், இவர் பிராக்டிகல் ஆனவர் என்று சொல்ல முடிகிறதா என்றால்.. அதுவும் இல்லை. தன் குடும்பத்தை பற்றி எதுவுமே யோசிக்காமல் கல்யாணத்தை நிறுத்துபவரை அப்படி சொல்லவும் முடியாது. ஜெயிலில் இருந்து வரும் சிம்புவிடம் அத்தனை உருகி உருகி காதல் பேசுபவர், வேலை காரணமாக அலைந்து திரியும் சிம்புவைப் புரிந்து கொள்ளாமல் பிரிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திரிஷாவின் கேரக்டேரைஷேஷனில் தானும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார் கவுதம். அதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் என சொல்லுவேன்.


படத்தின் முதல் ஒரு மணி நேரம் அட்டகாசம். நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு? திரைக்கதை இத்தனை மெதுவாக இருந்தால்தான் அது கிளாஸ் படம் என்று யாரோ இயக்குனரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள். இரண்டாம் பாதி நத்தை வேகத்தில் போகிறது. திரிஷா தனது திருமணத்தை நிறுத்தும் இடைவேளையில் பிடித்த சனி... கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வரை விடவில்லை. "I am crazy about you, I wanna make love to you.." வழக்கமாக கவுதம் படங்களில் வருவது போலவே குட்டி குட்டியான வசனங்கள். அதுவும் படம் பார்ப்பவர்களுக்கு புரிந்து விடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு பேசுகிறார்கள். மணிரத்னம் படமே பரவாயில்லாமல் இருக்கும் போல. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இதை வைத்தே படம் காமிப்பீர்கள் கவுதம்?

படம் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தங்கள் முதல் காதல் ஞாபகம் வரும் என்கிறார்கள். எனக்கு சத்தியமாக தோன்றவில்லை. இதில் வரும் candy floss காதலோடு மனம் ஒட்டவே இல்லை. ரொம்பவே மேலோட்டமான காதல் படம்.

கவுதம் தன்னோட அடுத்த படம் தலையோட பண்ணப் போறாராம். ஏற்கனவே நொந்து போய் இருக்கோம். இது வேறவா? ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. நடத்துங்க..

விண்ணைத் தாண்டி வருவாயா - மனதுக்கு வெகு தொலைவில்

March 6, 2010

கவுண்ட் டவுன்..!!!

"இன்னும் பத்தே நிமிஷம்தான்.. புது வருஷம் பொறக்கப் போகுது.. அதை சந்தோஷமாக் கொண்டாடத்தான் நாம எல்லோரும் இங்கே ஒண்ணு கூடியிருக்கோம்.." நேரலையில் எப்.எம் தொகுப்பாளினி உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தாள்.

அந்த குடிசை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது. குழந்தைகள் தூங்கி விட்டிருந்தன. அவர்கள் இருவரும் சோகமாக உட்கார்ந்து இருந்தார்கள். கசப்பான அமைதி மட்டுமே அங்கே இருந்தது. வெகு நேரம் கழித்து அவள் பேசினாள்.

"ஏங்க.. வேற வழியே இல்லையா..?" கேட்கும்போதே அவள் குரல் கமறியது.

அவன் வெறித்த கண்களோடு அவளை ஏறிட்டான்.

"என்னை என்ன பண்ண சொல்ற.. எல்லார்கிட்டயும் கேட்டுப் பார்த்துட்டேன்.. முடியல.. நாளைக்கு காலையில கடன்காரன் வந்து கழுத்தில கத்தி வச்சு மிரட்டுவான்.. அப்படி ஊரு முழுக்க அசிங்கப்பட்டு... தேவையா? எப்படி இருந்த நம்ம குடும்பம்.. இன்னைக்கு.." உடைந்தவனாக அழத் தொடங்கினான்.

"என்னங்க.. வேணாங்க.." அவள் பதறிப்போனவளாக அவனருகே வந்தாள்.

சமாளித்துக் கொண்டு சொன்னான். "போ.. போய் நான் சொன்ன மாதிரி.. சாப்பாட்டுல விஷத்த கலந்து எடுத்துக்கிட்டு வா.. இன்னைக்கோட எல்லாம் முடிஞ்சது.."

அவள் தீர்மானத்துடன் எழுந்து போனாள். அவன் குழந்தைகளை எழுப்பத் தொடங்கினான்.

"இன்னும் எட்டே நிமிஷம்.."

"ஏஞ்சல் டிரெஸ்ல உண்மையான தேவதை தரையிறங்கி வந்த மாதிரியே இருக்கடி செல்லம்.." செல்லமாக கொஞ்சியபடி குழந்தையின் கன்னத்தில் ஆழமாக முத்தமிட்டாள்.

"மம்மி.. ச்சீ.." அது கன்னத்தை துடைத்துக் கொண்டு சிரித்தது.

"என்ன, பாப்பா ரெடி ஆகிட்டாளா?" - அவன் மாடியேறி வந்தவாறே கேட்டான்.

"ஓ.. ஆகிட்டேன் டாடி.. "

"வாவ்.... அம்முக்குட்டி இன்னைக்கு சூப்பரா இருக்காளே.. சொல்லுங்க.. உங்க பர்த்டேக்கு என்ன கிப்ட் வேணும்..?"

பிள்ளை நிறைய யோசித்து விட்டு சொன்னது.

"எனக்கு கூட விளையாட ஒரு குட்டி பாப்பா வேணும்.."

அவள் அவனை முறைத்தாள். அவன் பயந்தவன் போல நடித்தான்.

"ஏய்.. அப்படி பார்க்காத.. நான் ஒண்ணும் பிள்ளைக்கு சொல்லித் தரல.. ஆனாலும் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு..ஹி ஹி"

"கருமம்.. கருமம்.. உங்கள அப்புறம் பேசிக்கிறேன்.. கேக் வெட்ட டைம் ஆகிடுச்சு.. வாங்க கீழ போவோம்.."

"இன்னும் ஆறே நிமிஷம்.."

நகரின் ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல். அவள் தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக களைந்து கொண்டிருந்தாள். அவன் பெருகி வழியும் காமத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மலராத குவிந்த தாமரை மொட்டுகள் போன்றிருந்த அவள் மார்புகளைக் கண்டு அவன் கண்கள் விரிந்தன. உணர்சிகள் உந்தித் தள்ள பசியுடன் அவளை நெருங்கினான். அவள் வெட்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்னடா.. "

"நீ ரொம்ப அழகுடி செல்லம்.."

"ஐயோடா.. இது வேறவா.."

அவன் அவளை அணைக்க முற்பட்டான். அவள் நழுவி ஓடினாள்.

"என்னடா சொன்னேன்.. புது வருசத்துக்கு ட்ரீட்னு என்னையவே கேட்ட... சரின்னுதான சொன்னேன்.. இன்னும் கொஞ்ச நேரம்.. நான் முழுசா உனக்குத்தாண்டா.. பொறுமை.. பொறுமை.."

அவன் ஆர்வத்தோடு கடிகாரத்தை பார்க்கத் தொடங்கினான். அதில் முட்கள் வெகு நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தன.

"இன்னும் நாலு நிமிஷம்.."

ஏதோ ஒரு மலைவாசஸ்தலம். மர பெஞ்சின் மீது அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மணிவிழா கொண்டாடப் போகிறவர்கள்.

காலம் போன காலத்தில் எங்களுக்கு எதுக்குப்பா என்று மறுத்தும் கேளாமல் பிள்ளைகள் வற்புறுத்திய காரணத்தால் புது வருஷத்தைக் கொண்டாட இங்கே வந்து இருப்பவர்கள்.

"இங்கே இருந்து பார்க்க ஊரு ரொம்ப அழகா இருக்கு.. இல்லைங்க..?"

"ஆங்.. ஆமா.. ஆமா.."

அவர் ஞாபகமாகத் தன் கோட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பார்த்துக் கொண்டார். மோதிரம் பத்திரமாக இருந்தது.

திடீரென இதை எடுத்து நீட்டினால் அவளுக்கு எப்படி இருக்கும்? அப்படியே சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் விடுவாள்.. நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. பனிரெண்டு அடிக்க காத்திருக்கத் தொடங்கினார்.

"இன்னும் ரெண்டே நிமிஷம்.."

மாடியில் படுத்துக் கிடந்தவன் தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன். திடுக்கிட்டேன். எனக்கு வெகு அருகே அவர் நின்றிருந்தார்.

வயதான மனிதர். தீர்க்கமான கருணை நிரம்பிய கண்கள். நீளமான வெளுத்த தாடியும் கருப்பு அங்கியும் என அவருடைய தோற்றம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. யார் இவர்? என் வீட்டு மாடிக்கு இவர் எப்படி வந்தார்? இவருக்கு என்ன வேண்டும்? எத்தனையோ கேள்விகளை கேட்க நினைத்தும் வாய் எழவில்லை.

அவர் கைகளில் என்ன? சின்னதாக ஒரு உருண்டையைக் கையில் வைத்து இருந்தார். அது ரேடியம் கலரில் மினுமினுத்தது. அதை வைத்து என்ன பண்ணப் போகிறார்?

"பைவ் செகண்ட்ஸ்.."

குழந்தைகள் சாப்பிட்டு விட்டு மீண்டும் தூங்கி இருந்தன. அவள் கலங்கிய கண்களுடன் அவனருகே போய் படுத்துக் கொண்டாள்.

"போர்.."

"ஹாப்பி பர்த்டே டூ யு.." சுத்தி இருந்தவர்கள் பாட குழந்தை வெகு உற்சாகமாக கேக்கை வெட்டத் துவங்கியது.

"த்ரீ.."

உலகின் அதிஉன்னத ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலோடு அவன் அவள் மீது பரவினான்.

"டூ.."

அவர் மோதிரத்தை எடுத்து நீட்டினார்.. "ஐ லவ் யு.."

"ஒன்.."

நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் இருந்த கருணை மறைந்து ஆவேசம் ததும்பியது. வெறி கொண்டவராக அந்த உருண்டையை வீசி எறிந்தார்.

"ஹாப்பி 2012.."

எங்கும் இருள் சூழ்ந்தது.

March 3, 2010

கலாப்ரியாவின் "நினைவின் தாழ்வாரங்கள்"..!!!

திருநெல்வேலி பற்றி புதுமைப்பித்தன் எழுதியது ஒரு விதம்; வண்ணதாசன், வண்ணநிலவன் காட்டிய திருநெல்வேலி இன்னொரு வசீகரம். கலாப்ரியா தன் நினைவுகளின் வழியே அடையாளம் காட்டும் திருநெல்வேலியோ இந்த மூன்றில் இருந்தும் மாறுபட்டது. எவ்வளவு மாறுபட்ட மனிதர்கள், சுபாவங்கள். ஒரு ஆவணப்படத்தை காண்பது போல அத்தனை நெருக்கமாகவும், ஈரத்துடனும் இங்கே திருநெல்வேலி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சாத்தியமாக்குவது, கலாப்ரியாவின் மொழி. எதிரில் அமர்ந்து உரையாடுவது போன்ற நெருக்கத்தைத் தருகிறது. வாழ்வின் துயரங்களை கேலி செய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படி, தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போது கூட கலாப்ரியாவிடம் சுயஎள்ளல் காண முடிகிறது - எஸ்.ராவின் முன்னுரையில் இருந்து...

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-02-2010) அன்று மதுரையில் கலாப்ரியா எழுதிய "நினைவின் தாழ்வாரங்கள்" நூல் அறிமுக விழா நடைபெற்றது. "எட்டையபுரம்" என்ற வலைப்பூவில் அவர் எழுதி வந்த பத்திகளின் தொகுப்பு. தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகள் விழாவில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வின் சில துளிகள், என் நினைவுகளில் இருந்து..



வந்திருந்த நண்பர்கள் அனைவரையும் கவிஞர் சமயவேல் வரவேற்றார்.

"சுரேஷ்குமார் இந்திரஜித், ராஜமார்த்தாண்டன் ஆகியோர் நடத்தி வந்த சந்திப்பு கூட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சி இது. நல்லதொரு ஆரம்பமாக கலாப்ரியாவின் புத்தகத்தை அறிமுகம் செய்கிறோம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நண்பர்கள் முன்வைத்து உரையாடுவார்கள் என நம்புகிறேன்..."

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர் நா.முருகேசப்பாண்டியன்.



"ஒரு கவிஞன் தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்களை எந்தவிதமான சங்கடங்களும் ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்வதென்பது கஷ்டம். ஆனால் கலாப்ரியா அதை செய்திருக்கிறார். தன் மனதின் எல்லா எண்ணங்களையும், அவை பொதுபுத்தி கொண்ட சமூகத்தால் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இல்லாமல் இருந்தால் கூட, எந்த விதமான சமாதானமும் செய்யாமல் அப்படியே சொல்வதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியம் அவருக்கு இருக்கிறது. வாழ்த்துகள்.."

முதலில் பேசவேண்டிய சுந்தர்காளி சற்று தாமதமாக வந்ததால் யவனிகா ஸ்ரீராம் பேச அழைக்கப்பட்டார்.

"பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்கு முருகேசபாண்டியன் அண்ணனைத் தெரியும். குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய இலக்கிய கூட்டத்துக்கு நண்பர்களோடு போய்க் கொண்டிருந்தேன். காலச்சுவடு, இலக்கியம் என்றெல்லாம் பேசிகொண்டிருப்பதை பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர், நாங்கள் இறங்கியவுடன் தானாக வந்து பேசினார். எங்களை சரியான இடத்துக்கு கூட்டிப் போனார். நல்லப் பேசுறான்னு சொல்லி அங்க முதல் ஆளா பேசுங்கன்னு என்னை மாட்டி விட்டவர் இன்னைக்கும் அதையேதான் பண்ணி இருக்கார்.



சின்னாளப்பட்டியில் எங்கள் குடும்பத்தை தெரியாதவர் இருக்க முடியாது. கூட்டு குடும்பம் - மூன்று ஆண், நான்கு பெண்கள். எங்கள் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வார், பணம் காசு இல்லைனாலும் ஒழுக்கமா இருக்கணும்னு. ஆனா நான் அதுக்கு அப்படியே நேர்மாறாக இருந்தவன். இளம் பிராயத்தில் பெண்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஆரம்பிக்கிறது? உண்மையை சொன்னால் அது நம் வீட்டுப் பெண்கள் மீதானதாக கூட இருக்கலாம். ஆங்கிலப் படமான "பாபேல்"இல் ஒரு காட்சியில் தன் உடம்பிறந்த சகோதரி குளிப்பதை நாயகன் ஒளிந்திருந்து பார்ப்பது போல காட்சி வரும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் பெண்கள் மீதான பார்வையும், மனதின் விகாரங்கள் பற்றிய கலாப்ரியாவின் தைரியமான விவரணைகளும் மிக முக்கியமானவை..."

அடுத்ததாக பேசிய சுந்தர்காளி முக்கால் மணி நேரம் பொதுவாக மாறிப்போன விஷயங்கள் மற்றும் பால்யம் பற்றி பேசியதாகவும் புத்தகம் பற்றி கொஞ்சம் பேசியதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். புதுமாப்பிள்ளை திருசெந்தாழையும் ஓரிரு வார்த்தைகளில் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டதாக அறிந்தேன். (சிறு பணி காரணமாக வெளியே சென்று வந்ததால் இவர்களின் பேச்சை கேட்க இயலவில்லை..)

தொடர்ந்து ரமேஷ் பிரேதன் பேசினார்.

"கலாப்ரியாவின் இந்தப் புத்தகத்தை தமிழின் "Memoirs" என்று சொல்லலாம். நம்முடைய பால்யவயது நினைவுகளை திரும்பி பார்ப்பது சுகமானது. ஆனால் அதன் மூலமாக நான் எதைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் இந்தப் புத்தகம் ரொம்ப மேம்போக்கானது என்று சொல்லுவேன். பொதுவாக அவருடைய கவிதைகளில் இருக்கும் காத்திரமும், கோபமும் இந்தப் புத்தகத்தில் எங்கும் தென்படவில்லை.



நான் பிரதியை விமர்சிக்கிறேன். எழுதி முடித்தவுடன் கலைஞன் இறந்து போகிறான். எனவே இந்தப் புத்தகத்தில் இருக்கும் சோமசுந்தரமும் கலாப்ரியாவும் வெவ்வேறாகத்தான் எனக்குப் படுகிறது. இருவரின் வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. புத்தகத்தில் பயன்படுத்தி இருக்கும் சொற்றொடர்கள் உடைந்து காணப்படுகின்றன. ஒரு புது விதமாக அது பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதை கலாப்ரியா வேண்டுமென செய்தாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வடிவம் எனக்கு ரொம்பவே அழகாக இருக்கிறது..."

அடுத்தவர்.. கவிஞர் லிபி ஆரண்யா..

"இந்தப் புத்தகம் முழுதும் எம்ஜியாரை கலாப்ரியா கொண்டாடி இருக்கிறார். எனக்கு அதுபோலத்தான் கலாப்ரியா. அவருடைய கவிதைகளைப் படித்து இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் நான்.. இதை சொல்லிவிட்டு என் கருத்துகளை இங்கே முன்வைக்கிறேன்.



ஒரு கவிஞன் உரைநடைக்கு மாற வேண்டிய அவசியம் என்ன என்று இங்கே ஒரு கேள்வி இருக்கிறது? உலகத்திலேயே அதிகமாக உணர்ச்சி வசப்படக் கூடியவன் கவிஞன்தான். அதேபோல அதிகமான கருணையற்றவனும் அவன்தான். எந்த தயவு தாட்சண்யமும் பார்க்காமல் வார்த்தைகளை வெட்ட வேண்டியிருக்கும். அப்போது தான் சொல்ல வரும் விஷயம் எல்லாவற்றையும் கவிதைகளாக மட்டுமே சொல்ல முடிவதில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே கலாப்ரியா இந்த உரைநடை புத்தகத்தை எழுதி இருக்க முடியும்.

சினிமா எந்த அளவுக்கு ஒரு சமூகத்தை பாதித்து இருக்க முடியும் என்பதற்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்து எடுத்துக்காட்டு. குறிப்பாக எம்ஜியார் என்னும் மந்திர சக்தி எந்த அளவுக்கு தமிழ் மக்களை மயக்கி இருந்தது என்பதை ரொம்பத் தெளிவாக கலாப்ரியா பதிவு செய்திருக்கிறார். அதுபோலவே ஆழ்மனத்தின் வக்கிரனகளைப் பற்றி பேசவும் அவர் தயங்கவில்லை. கூடவே தன் வறுமையை பற்றியும் பேசுகிறார். ஒரு திறந்த ஆவணமாக தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்.. அண்ணாவின் மரண ஊர்வலத்தில் ஆரம்பித்து வேலை கிடைத்த கலாப்ரியா நண்பர்களோடு பயணம் செல்வதாக புத்தகம் முடிகிறது.

ஒரு பெண்ணியவாதியாக இந்தப் புத்தகத்தை படித்தால் கோபம் வரும். அதே போல கலாசாரம் பேசுபவர்கள் இதப் படித்தாலும் சினம் கொள்வது நிச்சயம். என்றாலும் துணிச்சலோடு எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கும் கலாப்ரியாவுக்கு வாழ்த்துகள். நாளை உங்களில் யாரேனும் கூட இதே போல தங்கள் நினைவுகளின் தாழ்வாரங்களைத் திறந்து விட இந்தப் புத்தகம் ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.."

நகைச்சுவையாகப் பேசி மொத்த கூட்டத்தையும் கலகலப்பாக்கினார் கவிஞர் கடற்கரய்..

"சின்ன வயசுல நாங்க இருந்த வீட்டுல டிவி கிடையாது. பக்கத்து வீட்டுல, கேட்டுல ஏறி குதிச்சுதான் பார்ப்போம். அதுக்காக எங்கம்மா என்னையப் போட்டு அடி பொளக்கும். ஆனா ஒரு நாள் காலைல நான் தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருக்குறப்ப என்னைய ஓங்கி எத்துது. என்னன்னு பார்த்தா தலைவிரிக்கோலமா அழுதிட்டு இருக்கு. கேட்டா எம்ஜியாரு செத்துட்டாருன்னு ஒரே ஒப்பாரி. அன்னைக்கு என்னோட சேர்ந்து அதுவும் எட்டி எட்டி டிவி பார்த்துச்சு. அதுதான் சினிமாவோட மகிமை. அதைதான் எந்த ஒப்பனையும் இல்லாம கலாப்ரியா சொல்லி இருக்காரு.



எனக்கு ரொம்ப ஆச்சரியம். பெண்கள் விஷயத்துல இவருக்கு ரொம்பவே அதிர்ஷ்டம். ஒண்ணும் இவர் போற இடத்துலே ஏதாவது சம்பவம் நடக்குது. இல்லைன்னா சம்பவம் நடக்குற இடமாப் பார்த்து இவர் போறாரு. கண்ணுல கரெக்டா தட்டுப்படுது. கொடுத்து வச்சா மனுஷன். நமக்குத்தான் கண்ணுல வெளக்கெண்ணை விட்டு தேடுனாலும் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. சரி.. பொண்ண பார்க்குறாரா.. அடுத்து அவங்க எப்படி உடை அணிஞ்சிருக்காங்கன்னு பாக்குறாரு.. இல்லன்னா அந்த உடை எங்க விலகி இருக்குன்னு பாக்குறாரு.. பாருங்க.. எப்படி ஒரு கூரியப் பார்வைன்னு..

எந்த இடத்திலும் புத்தகம் போர் அடிக்கல.. ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னன்னா.. புத்தகத்தில் இருக்கும் பத்திகள் சரியாக அடுக்கப்படலியோ என்பதுதான்.. ஒரு இடத்தில் நாயகன் பெரியவனா இருக்கான்.. இன்னொரு நேரம் சின்னப் பையனா இருக்கான்... அடுத்த அத்தியாயத்துல மறுபடி வளர்ந்தவனா இருக்கான்.. இதை மட்டும் கொஞ்சம் சரி பண்ணி இருக்கலாம்.. மற்றபடி இது ஒரு எளிமையான, தைரியமான படைப்பு.."

கடைசியாக பேச வந்தார் ஜெயமோகன். இதுவரை நான் அவர் பேசிக் கேட்டதில்லை என்பதால் ரொம்ப ஆர்வமாக காத்திருந்தேன். எழுத்தைப் போல பேச்சிலும் ஆழம் ஜாழ்தி. ரொம்பவே அடர்த்தியான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.



"பால்யத்தின் நினைவுகள் நம் மனதில் எல்லா பகுதிகளிலும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது கடினம். பாதரசம் சிதறிப் போனால் மிக நுண்ணிய துளிகளாக சிதறி கிடக்கும். அவற்றை மீண்டும் சேகரம் செய்வது எப்படி? ஒரு பெரிய பாதரசத்தைக் கொண்டு சிறு சிறு துளிகளாக சேகரிக்க வேண்டும். அதேபோலத்தான் நம் நினைவுகளையும் நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.."

ஜெமோ பேசிக் கொண்டிருக்கும்போதே கல்லூரியில் இருந்து அழைப்பு வந்ததால் நான் அவசரமாக கிளம்ப வேண்டியதாகப் போனது. ( ஞாயிறு அன்று கூட.. என்ன ஒரு கடமை உணர்வு..) அதன் பின்னர் ஜெமோ என்ன பேசினார் என்பதையும் கலாப்ரியாவின் ஏற்புரையையும் நான் கேட்கவில்லை. நிகழ்வுக்கு வந்திருந்த மற்ற நண்பர்கள் யாரேனும் இது பற்றி எழுதினால் மகிழ்ச்சி கொள்வேன்.

அன்றிரவு, பெங்களூரில் இருந்து வந்திருந்த நண்பர் ஜோ மற்றும் நேசமித்திரன் கலந்து கொண்ட ஒரு சிறு பதிவர் சந்திப்பும் நடைபெற்றது. சீனா அய்யா மற்றும் ஸ்ரீதரும் கலந்து கொண்டார்கள். சமூக அக்கறை கொண்ட மனிதர் என்பதாலேயே எனக்கு ஜோவை ரொம்பப் பிடிக்கும். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. கொஞ்ச நேரம் கதை பேசி விட்டுக் கிளம்பினோம். அண்ணன் நேசமித்திரன் எனக்கு "நினைவின் தாழ்வாரங்களை" அன்பு பரிசாக வழங்கினார். அவருக்கு என் நன்றி.

(அலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் அத்தனை தெளிவாக இல்லை.. பொறுத்தருள்க..)