August 30, 2010

கோணங்கி என்றொரு மாயாவி (3)

கோணங்கி என்றொரு மாயாவி (1)

கோணங்கி என்றொரு மாயாவி (2)

எழுத்தாளர்கள், கதைகள் என போய்க் கொண்டிருந்த நண்பர்களின் உரையாடல் என்னும் காட்டாறு மெதுமெதுவாக கவிதைகளின் திசை வழி பாயத் தொடங்கியது. ஒரு கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ கவிதையின் வடிவம் இதுதான் என்றோ யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது. மாறாக ஒரு நல்ல கவிதை வாசகனுக்குத் தரக்கூடிய உணர்வானது, மேப்பில் என்கிற மரத்தினால் செய்யப்பட்ட தரமான வயலின் ஒன்றின் நரம்புகள் மீது விழக்கூடிய இலையொன்று உண்டாக்கும் அதிர்வை ஒத்து இருக்க வேண்டும் என்று சொன்னார் நேசமித்திரன்.

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் எப்படியோ இருந்தாலும், கவிதையைப் பொறுத்தவரை ஒவ்வொரு பத்து வருடத்துக்கும் தமிழில் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்கள் புதிதாக உருவாகி வருவதாக சந்தோஷப்பட்டார் கோணங்கி. புதிதாக எழுதும் கவிஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும் என்பதை கல்குதிரையின் மூலமாக தான் செய்து வருவதையும் குறிப்பிட்டார். சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் உர்சுலாவின் எழுத்துகள் தன்னை வசீகரிப்பதாக சொன்னார். தான் செய்யும் தொழில் சார்ந்து தாணு.பிச்சையா எழுதி இருக்கும் "உரை மெழுகின் மஞ்சாடிப் பொன்"னும் கவனிக்கப்பட வேண்டிய தொகுப்பு என்று சொன்னார். "ஓடியன்" போன்று கவிதைகளில் இன்று அவரவரின் மொழியிலேயே எழுதும் வழக்கம் உண்டாகி இருப்பதை வரவேற்றார்.

தனக்குப் பிடித்த கவிதைத் தொகுப்புகளென ராணி திலக்கின் "நாக திசை"யையும் பிரம்மராஜனின் கடல் பற்றிய பதினெட்டு கவிதைகளையும் சொன்னார் கோணங்கி. குட்டி ரேவதி, மாலதிமைத்ரி போன்ற பெண் கவிஞர்கள் தங்களுக்கான தடைகளை மீறி பல விஷயங்களை எழுதத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் தங்களுக்கென தனித்துவமான ஒரு கவிதை மொழியை அவர்கள் உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் சொன்னார். கண்ணகி நடந்து சென்ற பாதையில் கேரளத்துக்குப் பயணம் மேற்கொண்ட கவிஞரைப் பற்றி நேசன் கேட்ட போது, தான் கவிதைகளைக் கொண்டே யாரையும் மதிப்பிடுவதாகவும், அரசியல் சார்ந்த மற்ற விஷயங்களில் தனக்கு ஈடுபாடு கிடையாதென்பதையும் தெரிவித்தார்.

இன்றைக்கு இருக்கக்கூடிய கவிஞர்கள் தங்களை ஒரு வட்டத்துக்கு உள்ளாக சுருக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிய தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தார் நேசன். சுய இரக்கம், தனிமை, காத்திருப்பு, சமூகத்தின் மீதான கேலி எனச் சுற்றிச் சுற்றி ஒரே விஷயங்களைப் பேசுவதே இன்றைய கவிதைகளின் பலவீனம் என்றும் இது மாதிரியான கவிதைகள் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்காது என்பதும் அவருடைய கருத்தாக இருந்தது. அத்தோடு இன்று எழுத வரும் கவிஞர்களில் பலர் மனுஷயபுத்திரனை நகலெடுக்கவே முயல்கின்றனர் என்றும், தங்களுக்கான தனி மொழியை உண்டாக்குவதில் அக்கறை கொள்ளாமல் இருப்பதாகவும் வருத்தப்பட்டார்.

சுவாரசியமான பேச்சின் ஊடே நண்பர் "பிரியா கார்த்தி" வெளியே சென்று இரவு உணவினை வாங்கி வந்திருந்தார். அடை, சப்பாத்தி, இட்லி என்று களை கட்டியது. உணவுக்குப் பின்பு உரையாடல் மீண்டும் துவங்கியபோது மாதவ் அண்ணன் ஒரு முக்கியமான கேள்வியை கோணங்கியிடம் முன்வைத்தார். "எப்போதும் இல்லாத அளவுக்கு இன அழித்தொழிப்பு இப்போது இலங்கையில் நடந்தேறி இருக்கிறது.. இந்தியாவிலும் தண்டகாருண்யத்தில் மண்ணின் மைந்தர்களை முற்றிலுமாக அடித்து ஒடுக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.. இது போன்ற விஷயங்களை நம் படைப்பாளிகள் பதிவு செய்யாதது ஏன்?" இதே கேள்வியை சென்ற வருடம் "கடவு" நிகழ்ச்சியில் தமிழ்நதி எழுப்பியது என் நினைவுக்கு வந்தது. அப்போது கோணங்கியின் பதிலை எனக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது என்ன சொல்லப் போகிறார் என கோர்ந்து கவனித்தேன். எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் சட்டென அங்கே ஒரு அமைதி வந்து குடியேறி இருந்தது.

சற்று நேரத்துக்குப் பின் அதை கோணங்கியே உடைத்தார். "முன்னெப்போதும் இல்லாத அளவு இன்றைக்கு சமூகத்தில் ஆபத்துகள் மலிந்து கிடக்கின்றன. தன்னையும் சமூகத்தையும் ஒன்றே பாதுகாக்க வேண்டிய கடமை எழுத்தாளனுக்கு இருக்கிறது. இப்போது என்றில்லாவிட்டாலும் ஏதேவொரு உருவத்தில் படைப்புகளும் பதிவுகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இனியும் அவை வரும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் வேறெங்கும் செல்வதில்லை. அவை எழுத்தாளனையே வந்தடைகின்றன.." இதை அனைவரும் ஒத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லாவிட்டாலும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து சில விஷயங்களைக் கடந்து போகும் மனதுடையவர்களாக இருந்ததால் வேறொரு களத்தில் உரையாடல் தொடர, மீண்டும் சகஜ நிலை திரும்பியது.

எழுதுவதற்கான சூழல் உருவாக்கிக் கொள்வது என்பது மிக முக்கியம் என்று சொன்னார் கோணங்கி. அதற்காக தான் பயணிக்கும் இடங்களில் இருந்து ஏதேனும் பொருட்களைக் கொண்டு வந்து, எழுதும்போது தன்னருகே வைத்துக் கொள்ளும் பழக்கமும் அவருக்குண்டாம். பின்பு தான் இப்போது எழுதி வரும் நாவலைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார். தனுஷ்கோடி, வடமாநிலங்கள், வெளிநாடு என்று பல தளங்களில் ஒரே நேரத்தில் பயணிக்கும் பயணியாக, அவற்றை ஒன்றாக இணைக்கும் பாலமாக இருக்கும் அவருடைய ஆற்றல் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. இதை எழுத்தில் வாசிக்கும்போது நம்மால் இனங்கண்டு கொள்ள முடிவதில்லை என்பது வேறு விஷயம்.

அவருடைய பேச்சில் அவ்வப்போது தெறித்து விழும் வார்த்தைகள் அசாத்தியமாக இருப்பதும், நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத முடியாத விஷயங்களை இவர் எப்படி ஒன்றிணைக்கிறார் என்பதுமே அதிசயம்தான். உதாரணத்துக்கு, வள்ளலார் கண்ட கனவையும் தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் பிரதர்ஸில் எழுத் இருக்கும் கனவைப் பற்றியும் சில விஷயங்கள் சொன்னார். எனக்குத் தலையை சுற்றிக் கொண்டு வந்தது. என்ன மாதிரியான மனிதரிவர்? இப்படி எல்லாம் கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா என்ன என்று சந்தோஷத்தில் மண்டை காய்ந்து போனேன்.

கோணங்கி தன்னுடைய பிரயாணங்களைப் பற்றிப் பேசும்போது வேடிக்கையான சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார். அவரும் அவருடைய நண்பரும் வள்ளலார் வாழ்ந்த ஊருக்குக் காரில் பயணிக்கிறார்கள். அங்கே இருக்கும் ஏழை மக்களுக்கு கொடுப்பதற்காக நண்பர் பழங்களை வாங்கி வந்திருக்கிறார். பயணத்தின் போது டிரைவரின் அருகே முன்சீட்டில் அமர்ந்து இருக்கும் கோணங்கி சில பழங்களை எடுத்து சாப்பிட்டபடி வருகிறார். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக இருப்பதை ஏன் நீ எடுக்கிறாய் என்கிற ரீதியில் அவரை நண்பர் கடிந்து கொள்கிறார். அப்போது எதிரே ஒரு வயதான குடியானவன் நடந்து வர, காரை நிறுத்தி சட்டெனக் கீழிறங்கும் கோணங்கி அவரிடம் சில பழங்களைக் கொடுத்து இருக்கிறார். வாங்கிக் கொண்ட வயதான மனிதர் சந்தோஷப்பட கோணங்கி அவர் கால்களில் வீழ்ந்து வணங்கி இருக்கிறார்.

ஒன்றுமே புரியாத நண்பர் கோணங்கியைத் திட்டிக்கொண்டே வர, இருவரும் வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து இருக்கிறார்கள். அங்கே நண்பர் அனைவருக்கும் பழங்களைக் கொடுத்தாலும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பழங்கள் போதாமல் போய் விட்டது. எனவே கிடைக்காதவர்கள் நண்பரைத் திட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது கோணங்கி நண்பரைப் பார்த்து இஸ்ரித்துக் கொண்டே சொல்கிறார்.."நீ நல்லது பண்ணனும்னு நினைச்ச.. ஆனா பார்த்தியா? நான்தான் அங்கேயே வள்ளலாரைப் பார்த்துட்டேனே.." ஒரு குழந்தையின் குதூகலத்தோடு இதை சொல்லும்போது கோணங்கியின் கண்கள் இருளிலும் சந்தோஷமாக மின்னிக்கொண்டிருந்தன.

இங்கே மாதவ் அண்ணனைப் பற்றியும், காமராஜ் அண்ணனைப் பற்றியும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். முதல் முறைதான் பார்க்கிறோம் என்கிற உணர்வு ஏற்படாமல் ஏதோ தங்களில் ஒருவன் என்பதைப் போல தோழர், தோழர் என்று அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பதிவுலக அரசியல் நிலை சார்ந்து எனக்கும் அவர்களுக்கும் இருந்த சில கருத்து வேறுபாடுகளைப் பற்றி நான் சொன்னபோதும் அவற்றில் இருந்த நியாயத்தை ஒத்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கோணங்கியுடனான உரையாடல் என்பதால் அவர்கள் இருவரோடும் நிறையப் பேச முயாமல் போனதேன்பதில் எனக்கு வருத்தமே. மீண்டும் ஒருமுறை அவர்களை கண்டிப்பாக சந்தித்து உரையாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

டால்ஸ்டாய், தஸ்த்யாவேஸ்கி - எழுத்துகளில் அவர்களுடைய ஆளுமை என்று பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. நேரம் நள்ளிரவையும் தாண்டி விட்டிருந்தது. பேச்சின் சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பேசுவதற்கான விஷயங்கள் நிறைய இருந்தாலும் மறுநாள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாரமாக என் தோள்களில் அழுத்திக் கொண்டிருந்தது. கோணங்கியோ தன்னோடு கோவில்பட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். எனினும் கல்லூரி வேலைகள் இருப்பதால் என்னால் வர முடியாதென்பதைத் தெரிவித்தது அவரிடம் இருந்து விடைபெற்றேன். நேசன் நண்பர்களோடு தொடர்ந்து கொண்டிருக்க நான் நண்பர் பிரியா கார்த்தியோடு கிளம்பினேன். நண்பர்களின் பேச்சொலி கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத அருமையான தினங்களில் மற்றுமொரு நாள் கூடி இருந்தது. இதைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் நேசன், மாதவ் மற்றும் கோணங்கிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

15 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்தத் தொடர் பதிவு. நன்றி.

செல்வராஜ் ஜெகதீசன் said...

எனக்கும். நன்றி.

மாதவராஜ் said...

உரையாடலை மிகக் கூர்மையாக கவனித்து, அதனூடே இருந்த மௌனங்களையும் அவதானித்து எழுதியிருக்கிறீர்கள்.

இன்னொரு நாள் நாம் நிறையப் பேசுவோம்.

பகிர்வுக்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்தத் தொடர் பதிவு. நன்றி//

நன்றி சுந்தர்

// செல்வராஜ் ஜெகதீசன் said...
எனக்கும். நன்றி.//

:-))))

//மாதவராஜ் said...
உரையாடலை மிகக் கூர்மையாக கவனித்து, அதனூடே இருந்த மௌனங்களையும் அவதானித்து எழுதியிருக்கிறீர்கள்.//

மனசுல தோணுனத அப்படியே எழுதி இருக்கேண்ணே..

அவதானித்து? ஏண்ணே.. ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? அப்படி இருப்பின் மன்னியுங்கள்..

//இன்னொரு நாள் நாம் நிறையப் பேசுவோம்.//

கண்டிப்பாக அண்ணே..:-)))

Mahi_Granny said...

In one night stay u hv got really very rich experience, i feel it.

D.R.Ashok said...

மூன்று பகுதியையும் படித்தேன்... எனக்கும் கோனங்கி என்ற மனிதரை பிடிக்கும்... அவருடைய எழுத்துகள் பிடிபடவில்லை.. என்றாவது ஒருநாள் பிடிபடும் என்றே எண்ணுகிறேன்...

பகிர்வுக்கு நன்றி :)

kannamma said...

nalla pagirvu

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mahi_Granny said...
In one night stay u hv got really very rich experience, i feel it//

Exactly.. thanks mam..:-)

// D.R.Ashok said...
மூன்று பகுதியையும் படித்தேன்... எனக்கும் கோனங்கி என்ற மனிதரை பிடிக்கும்... அவருடைய எழுத்துகள் பிடிபடவில்லை.. என்றாவது ஒருநாள் பிடிபடும் என்றே எண்ணுகிறேன்...//

அந்தக்காலமும் ஒருநாள் வரும் நண்பா..

//kannamma said...
nalla pagirvu//

நன்றிங்க

யாத்ரா said...

இந்த தொடர் ரொம்ப நல்லா இருந்தது நண்பா, உங்களின் நடை அப்படியே உணர்வுகளை படம் பிடித்தது போன்றதான நடை.

அனுஜன்யா said...

மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் கார்த்தி. உங்கள் அனைவரையும் நீங்கள் உணராமலே அருகில் அமர்ந்து பார்த்தது போல் தோன்றுகிறது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

கா.பா,

டேப் எதுனா எடுத்து போயிருந்தீர்களா? எப்படி இவ்வளவு நினைவு திறன் என வருகிறது.(ஆர்வம்தானே?) நன்றி கா.பா! பத்திரப் படுத்த வேண்டிய பதிவுகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// யாத்ரா said...
இந்த தொடர் ரொம்ப நல்லா இருந்தது நண்பா, உங்களின் நடை அப்படியே உணர்வுகளை படம் பிடித்தது போன்றதான நடை//

முயற்சி பண்ணின விஷயம் நல்லா வந்திருக்குன்னா சந்தோஷம் யாத்ரா

//அனுஜன்யா said...
மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் கார்த்தி. உங்கள் அனைவரையும் நீங்கள் உணராமலே அருகில் அமர்ந்து பார்த்தது போல் தோன்றுகிறது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

ரொம்ப நன்றிங்க..முந்தி ஒரு தடவை கோணங்கி பத்தி எழுதினபோதும் உங்க பின்னூடம் இருந்தது:-))

// பா.ராஜாராம் said...
கா.பா, டேப் எதுனா எடுத்து போயிருந்தீர்களா? எப்படி இவ்வளவு நினைவு திறன் என வருகிறது.(ஆர்வம்தானே?) நன்றி கா.பா! பத்திரப் படுத்த வேண்டிய பதிவுகள்//

முக்கியமான விஷயங்களைப் பேசும்போது கவனிக்கிறதுக்குத்தானே அண்ணே நான் ஆசப்பட்டு போனது.. அதனாலத்தான் எழுத முடிஞ்சது.. நன்றிண்ணே...

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு. நிறையவே என்னை விட்டு போன மாதிரியான உணர்வைப் பெறுகின்றேன். இருப்பினும் உங்களின் பகிர்வு என்னை உடன் அழைத்துச் சென்ற உணர்வை எற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

// ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? அப்படி இருப்பின் மன்னியுங்கள்//

நிச்சயமாக இல்லை தம்பி. மிகச் சரியாக உள்வாங்கி எழுதி இருக்கிறீர்கள். எழுத்து நடையும் நேர்த்தி. வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.

Vel Kannan said...

நன்றி கார்த்திகை பாண்டியன்