August 10, 2010

தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா?

காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் அவன். 95% மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதலாவதாக வந்தவன். எங்கள் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு மின்னியல் படிப்பில் சேர்ந்து இருந்தான். இருபது நாட்களாக ஒழுங்காக வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்தான். மிகவும் ஆர்வமாக இருக்கிறான் என்றும், நன்றாக வரக் கூடியவன் என்றும் அவனுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் எல்லாருமே பெருமையாக சொன்னார்கள்.

ஆனால் போன வாரம் தொடங்கிய மாதாந்திரத் தேர்வுக்கு அவன் வரவில்லை. அவனுக்குப் பதிலாக அவனுடைய அப்பாதான் வந்திருந்தார். அவனுடைய வகுப்பாசிரியர் என்கிற முறையில் அவரிடம் பேசினேன்.

"என்னாச்சுங்க.. பையன் ஏன் வரல?"

"அது.. பரீட்சைக்கு.. ரொம்ப பயப்படுறாங்க.. "

நன்றாகப் படிக்கக் கூடியவன் பரிட்சைக்கு பயப்படுகிறானா? என்னால் நம்பமுடியவில்லை.

"அது வந்துங்க.. இவ்வளவு நாள் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு.. திடீர்னு ஆங்கிலத்துல தேர்வு எழுதச் சொன்னா.. என்னால முடியல.. நான் படிக்கவே போகலன்னு ஒரே அழுகைங்க.."

ஆகா.. இதுதான் விஷயமா? அவனை அழைத்து வரச் செய்து, தைரியம் சொல்லி, அவனைப் போலவே தமிழ் மீடியத்தில் படித்த சீனியர் மாணவர்களை விட்டுப் பேசச் சொல்லி, ரொம்ப நேரம் கவுன்சில் பண்ணி.. கடைசியில்தான் சமாதானம் ஆனான். இப்போது கல்லூரிக்கு சந்தோஷமாக வந்து போய்க் கொண்டிருக்கிறான்.

இவனை மாதிரி எத்தனை மாணவர்கள்? திறமை இருந்தும் இந்த மொழிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள்? இவர்களைப் போன்ற மாணவர்களுக்காகத்தான் "தமிழிலேயே பொறியியல் படிக்கலாம்" என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது இது மிகவும் நல்லதொரு திட்டமாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை என்ன? தமிழில் பொறியியல் கல்வி சாத்தியமா? சாத்தியமா என்பதை விட இந்த அணுகுமுறை சரிதானா என்று யோசிக்க வேண்டும்.

பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை நம் நிலை என்ன? இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு வருஷமும், தங்களுடைய பட்டப்படிப்பை முடித்து வெளிவரும் பொறியாளர்களின் எண்ணிக்கை, எப்படியும் ஒரு லட்சத்தைத் தாண்டும். ஆனால் இவர்களில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே நல்ல வேலைக்குப் போவதற்கான தகுதிகளைப் பெற்றிருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது... நம்ப முடிகிறதா?

பொறியியல் படிப்பின் தரம் அத்தனை சொல்லிக் கொள்ளும்படியானதாக இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. குறிப்பாக தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் ஆங்கில அறிவில் நமது மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

அத்தோடு, இன்றைக்கு நம் மாணவர்கள் எந்தப் பிரிவில் படித்தாலும் சரி, அவர்களுக்கு கடைசியாக விதிக்கப்பட்டது சாப்ட்வேர் துறையைச் சேர்ந்த வேலையாகத்தான் இருக்கிறது. கம்ப்யூட்டர் சயன்ஸ், .டி படித்த மாணவர்களை விட பிற படிப்புகளைப் படித்துவிட்டு கணினித்துறையில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று ரொம்பவே அதிகம்.

சரி
... இவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் யாவை? எல்லாமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பின்புலம் கொண்ட நிறுவனங்கள். அவர்களுக்கான வேலை என்று வரும்போது ஆங்கிலம் என்பது தவிர்க்க இயலாத அத்தியாவசியத் தேவையாகி விடுகிறது. நான்கு வருடங்கள் ஆங்கிலத்தில் படித்த மாணவர்களே சரளமாக பேச தந்தி அடிக்கும்போது, பொறியியலைத் தமிழில் படிக்கும் மாணவர்களின் கதி என்னாவது?

இங்கே ஒரு சில கேள்விகள் எழலாம். ஏன்.. தாய்மொழியில் படிக்கும் வழக்கம் ஜப்பான் மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளில் இல்லையா? ஆமாம். இருக்கிறது. ஆனால்அங்கே இருக்கும் அரசாங்கத்தால் அந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிகிறது. அது நம் இந்தியாவில் சாத்தியமா? இங்கே இருக்கிறவர்களுக்கே வழியைக் காணோம்.. இதில் எங்கே புதிதாக வருபவர்களுக்கு.. அதுவும் தமிழில் படித்தவர்களுக்கு? சாத்தியமே கிடையாது.

பொறியியல் படிப்பைத் தமிழில் சொல்லித் தருவதில் இருக்கும் இன்னொரு மிகப் பெரிய பிரச்சினை - ஆசிரியர்கள் பற்றாக்குறை. இன்றைக்கு விரும்பி ஆசிரியர் பணிக்கு வரும் மக்கள் ரொம்பக் குறைவு. இதில் எங்கே போய் தமிழில் பாடம் சொல்லித் தருபவர்களைக் கூட்டி வருவது? அப்படியே கிடைத்தாலும் தமிழில் சொல்லித் தருவதென்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கக் கூடும். மொழிபெயர்ப்பு, பாடப்புத்தகங்கள் என்று பலப்பல நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன.

இந்தக் காரணங்களை எல்லாம் யோசித்துப் பார்க்கும்போதுதான் நம் தாய்மொழியில் பொறியியல் படிப்பதென்பது கஷ்டமென சொல்கிறேன். உடனே.. "ஆகா.. இங்கே ஒருவன் தமிழ்ப் பற்றில்லாமல் இருக்கிறான்" என்றெல்லாம் ஆயுதங்களைத் தூக்கி விட வேண்டாம். சாதக பாதகங்களை ஆராய்ந்து, என் மனதுக்குப் பட்டதைச் சொல்லி இருக்கிறேன். இவை என்னுடைய கருத்துகள் மட்டுமே.

ஒரு சில விஷயங்களை வெளியே இருந்து பார்ப்பதை விட, அவை நடைமுறைக்கு வரும்போதுதான் உண்மை நிலைகள் தெரிய வரும். அதே போலத்தான் இந்த "தமிழில் பொறியியல்" என்னும் பிரச்சினையும். பார்க்கலாம். நல்லது நடந்தால் சந்தோஷமே.. இதைப் பற்றிய உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள் தோழர்களே..!!!

27 comments:

ஆதவா said...

பொதுவாகவே, இன்று உயர்மட்ட வேலைகள் எல்லாமே ஆங்கிலம் சார்ந்தே இருக்கிறது. தமிழுக்கு அத்தகைய வேலைகள் வழங்கப்பட முடியாது. கூடாது.
பொறியியலை தமிழில் படித்து வெளிநாட்டு ஆதரவு அலுவலகங்களில் வேலை தேடுவதைப் போன்ற முட்டாள்தனம் வேறேதுமில்லை.
முதலில் கல்வி முறையே சரியில்லை.

ப்ரியமுடன் வசந்த் said...

good view..!

ப்ரியமுடன் வசந்த் said...

பாலிடெக்னிக்ல இருந்து மட்டுமில்ல +2ல தமிழ்வழி கல்வி பயின்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் நிலையும் அதேதான் ஆனால் அது முதல் இரண்டு செமஸ்டர்ஸ் பாதிக்குமே தவிர மீதமிருக்கும் செமஸ்டர்களில் ஆங்கிலத்தில் அவர்கள் தெளிவாகிவிடுகின்றனர்..

ஆங்கிலம் 50% மாணவர்களுக்கு வில்லனாக தெரிவதற்க்கு காரணம் ஆரம்ப உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தினை ஒரு கதையாக வாசித்து செல்லும் ஒரு சில ஆசிரியர்கள் என்றே நான் சொல்லுவேன் என்னுடைய அரசு பள்ளி ஆசிரியர் அப்படித்தான் அவர் கடனே என்று ஆங்கிலப்பாடத்தை நடத்துவார் வகுப்புகளில் குடும்ப விஷயங்களை அடுத்த ஆசிரியருடன் பேசிக்கொண்டு இருப்பார் ..இப்படியிருக்கையில் பாடங்கள் எப்படி எங்களுக்கு புரிந்திருக்கும் எங்களுக்கு வேறு வழியில்லாமல் உடன் படிக்கும் மற்ற மாணவர்கள் நான் அனைவரும் ட்யூசன் மூலம் படித்து ஓரளவு ஆங்கில அறிவை வளர்த்து கொண்டோம்...

இது ஆரம்பத்தில் களைய வேண்டிய களை முதிர்ச்சியில் களை எடுத்தால் நஷ்டம் மாணவர்களுக்குத்தான்...

Jey said...

well analysed article.

வானம்பாடிகள் said...

நல்லா சொன்னீங்க கார்த்தி. கந்தன் ப்ளாஸ்டிக்ஸ் கடையை கந்தன் இளக்கி கடைன்னு தமிழ்ல எழுதற அளவுதான் இருக்கு. கார்போ ஹைட்ரேட்னு தமிழ்ல எழுதி படிச்சிட்டா தமிழ் வழிக்கல்வின்னு ஆயிடுமா? இதை விட அந்தந்தக் கல்லூரியில் வழக்கமான வகுப்புகளுக்கு முன்பாக, அல்லது அதனோடு ஒரு கூடுதல் நேரம் கான்வர்சேஷனல் இங்கிலீஷ் கட்டாயமாக்குவது நல்லதென நினைக்கிறேன்.

எதுவானாலும் தமிழ்ல யோசிச்சி ஆங்கிலதில் மொழி பெயர்த்து பேசுவது உள்ளவரை இது இப்படித்தான். 3வது வருடம் படிக்கும் பொறியியற் கல்லூரி மாணவன் ஆங்கிலத்தில் படித்து தமிழில் சொல்லிப்பார்த்து புரிந்து கொள்ளும் அவலம் இங்குதான் இருக்கிறது.

Joe said...

தமிழ்நாட்டில் படித்து, தமிழ்நாட்டின் ஏதோவொரு நகரத்தில் வேலைக்கு சேர்பவர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் ஆங்கிலத்தில் உரையாட ரொம்பவும் தடுமாறுகிறார்கள். கல்லூரியில் தமிழ்வழிக் கல்வி இருப்பினும், மாணவர்கள் ஆங்கிலத்தினை பிழையின்றி பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

"நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்" என்று பிரபல பதிவர் கா.பா-வால் பாராட்டப்பட்ட அடியேனும் கூட தமிழ்ப் பள்ளியில் படித்தவன் தான். "What one man can do, another one can always do" என்று அந்தோனி ஹோப்கின்ஸ் பேசிய வசனம் நினைவுக்கு வருகிறது.

முகிலன் said...

இந்தத் தாய்மொழிக்கல்வியை ஆரம்பப் பள்ளியிலிருந்தே கொண்டு வர வேண்டும் என்பது என் எண்ணம்.

தாய்மொழிக்கல்வி இல்லாத காரணத்தால் தான் இந்தியா அறிவியலில் பின்னால் இருக்கிறோம் என்பதும் என் கருத்து.

முனைவர். மன்னர் ஜவஹர் அவர்களிடம் இது குறித்து நான் கேட்ட போது முதல் மூன்று வருடங்களுக்கு தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு கம்யூனிக்கெஷன் இங்க்லீஷ் பாடம் கட்டாயமாக இருக்கும் என்றும் சொன்னார்.

புத்தகங்கள் முதல் வருடத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதாகவும் அடுத்த வருடத்திற்கு இந்தக் கல்வியாண்டு முடிவதற்குள் ரெடியாகிவிடும் என்றும் சொன்னார்.

இப்போதுதானே ஆரம்பமாகியிருக்கிறது. பொறுத்துப் பார்ப்போம். எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாவிட்டால் அடுத்தடுத்த வருடங்களில் அட்மிசன் குறையும், கோர்ஸையும் ஊத்தி மூடிவிடுவார்கள். வரவேற்பு நன்றாக இருந்தால் கண்டிப்பாக அளவு அதிகரிக்கும்.

ஆசிரியர்-பாடப்புத்தக பிரச்சனையைத் தவிர வேலை வாய்ப்பு போன்றவற்றில் எதுவும் பாதிப்பு இருக்கும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆங்கிலத்தில் படித்தால் தான் ஆங்கிலம் பேச முடியும் என்ற கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை.

குமரை நிலாவன் said...

ஏன்.. தாய்மொழியில் படிக்கும் வழக்கம் ஜப்பான் மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளில் இல்லையா? ஆமாம். இருக்கிறது. ஆனால்அங்கே இருக்கும் அரசாங்கத்தால் அந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிகிறது. அது நம் இந்தியாவில் சாத்தியமா?


இது உண்மை கண்டிப்பாக நம் அரசாங்கத்தால் வேலைவாய்ப்பை
உருவாக்கித்தர முடியாது

இந்த விசயத்தில் பலியாகப்போவது மாணவர்கள்தான்.

Sridhar said...

The view of government creating jobs are wrong. I had been to Korea. People are studying in Korean language. And Korea is the country which files most technological patents compare to any other countries in the world. Lot of research organizations and Korean owned technological companies provide employments in Korea (not government).

நியோ said...

உங்கள் இடுகை தேவையான விவாதத்தை தொடக்கி வைத்துள்ளது ... பின்னர் வருகிறேன் ... நன்றி

தேவன் மாயம் said...

மேலோட்டமாக பார்க்கும்போது இது மிகவும் நல்லதொரு திட்டமாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை என்ன? தமிழில் பொறியியல் கல்வி சாத்தியமா? சாத்தியமா என்பதை விட இந்த அணுகுமுறை சரிதானா என்று யோசிக்க வேண்டும்.///

இப்படித்தான் யோசிக்க வேண்டும்!!

தேவன் மாயம் said...

சிங்காரச் சென்னையில் உள்ள இளைஞர்கள் முக்கால்வாசிப்பேர் இப்பொழுதே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள்!! தமிழில் படித்தால் அரசியல்வாதியாக ஆகலாம். சென்னையில்கூட வேலை கிடைக்காது. தமிழ்வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் துணைவேந்தர்களின் பிள்ளைகளை இந்த தமிழ்ப்படிப்பில் சேர்ப்பார்களா?

Anonymous said...

கல்வி கற்பது வேலைக்கா இல்லை அறிவை வளர்க்கவா என துவக்கலாமே

கார்த்திகைப் பாண்டியன் said...

பல கோணங்களில் தங்கள் கருத்தைச் சொல்லி வரும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி.. இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாகக் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எனது எண்ணம்..

//ஜோ சொன்னது..
"நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்" என்று பிரபல பதிவர் கா.பா-வால் பாராட்டப்பட்ட அடியேனும் கூட தமிழ்ப் பள்ளியில் படித்தவன் தான்.//

இதில் இருக்கும் சூதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ sreedhar
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்ரி.. வேண்டுமானால் இப்படி சொல்லலாமா? தனக்கான வேலை வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் மற்ற நாடுகலைப் போல இந்தியா இல்லை என்பதுதானே உண்மை நிலை?

//Anonymous said...
கல்வி கற்பது வேலைக்கா இல்லை அறிவை வளர்க்கவா என துவக்கலாமே//

ஆதவாவின் கருத்தை கவனியுங்க நண்பா.. இங்கே அடிப்படையே தப்பு.. கல்வி கற்பது அறிவை வளர்ப்பது என்பதெல்லாம் இன்றைக்கு வெரும் பேச்சளவில்தான்.. நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்லித்தானே இன்றைய குழந்தைகளை வளர்க்கிறோம்?

டம்பி மேவீ said...

பாஸ் ...எந்த மொழியில் வேண்டுமானலும் படிக்கலாம் ...மொழிபெயர்ப்பு தன்மை தான் முக்கியம். நான் ஆங்கிலத்தில் படித்த விஷயங்களை எல்லாம் தமிழில் சொல்லி சொல்லி தான் கிளைன்ட் யை impress பண்ணுகிறேன்.


எந்த மொழியில் படித்தாலும் அதை தேவைபடுகிற மொழியில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். நான் படித்தெல்லாம் இங்கிலீஷ் மீடியத்தில் தான் ....

எடுத்த உடனே நம்ம மக்கள்ஸ் சம்பளத்தை தான் பார்க்குறாங்க .....career growth யை யாருமே கண்டுக்கிறதில்லை ...

பொது உண்மை என்னன்னா சின்ன கம்பெனி ல தான் நிறைய கற்று கொள்ள முடியும்

டம்பி மேவீ said...

என்னை பொறுத்த வரை யாருமே இங்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை....

காசை நோக்கிய பாதையில் நமது உழைப்பை செலுத்தினால் அடிமைகள் மாதிரி தான் வாழ வேண்டிருக்கும் ...

excellence ... innovation .. இதையெல்லாம் கருத்தில் கொண்டால் யாரும் எதையும் செய்யலாம்.

நான் மார்க்கெட்டிங் ல எதையாச்சு சாதிக்க வேண்டுமென்ற தான் தமிழை கொஞ்சம் ஆர்வமாக கற்று கொண்டேன்.

நாளை வேறொரு மாநிலத்தில் என்னை போட்டால் அந்த ஊர் மொழியையும் கற்று கொள்ள முயற்சி பண்ணுவேன்...வெற்றியோ தோல்வியோ அந்த மொழியை வாச படுத்த முயற்சி பண்ணி கொண்டே தானிருப்பேன்

மதுரை சரவணன் said...

கார்த்தி இது சம்பந்தமாக சமச்சீர் கல்வி குறித்து அருணாச்சலம் என்ற தலமையாசிரியரிடம் பேசிய சம்பவத்தில் இத் தகவல்களை கூறிப்பிட்டு உள்ளேன்.

நீங்கள் கூறுவது போல் எதை வேண்டுமானலும் போசிவிடலாம் .... ஆனால் நடைமுறை சாத்தியம் என்ப்து வேலை வாய்ப்பை பொருத்த வரையில் இது முற்றிலும்சாத்தியம் இல்லை . பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

டுபாக்கூர்கந்தசாமி said...

ஆரம்ப பள்ளி முதலே தாய் மொழி கல்வி பயின்றால் பொறியியல் கல்வி நிச்சயம் சாத்தியம் தான், ஆனா அறிவியல் வார்த்தைகள் எந்த அளவுக்கு நம்பக்கிட்ட இருக்குணு பாத்தா நிச்சயம் ஏமாற்றம் மிஞ்சும்ங்கரதுல சந்தேகம் இல்ல, ஏன் ஜப்பானியர்களும், ஜெர்மேனியர்களும் பொறியியலில் வல்லுநரகளா இருக்காங்கனா அவங்க மொழில எல்லாத்துக்கும் வார்த்தைகள் இருக்கு, திடீர்னு தாய் மொழில எல்லாத்தயும் மாத்தனும்னா அதுக்கு தமிழ்ல அறிவியல் வார்த்தைகளும், ஆசிரியர்கள் மற்றும் பொற்றோர்களோட பங்கும் நிச்சயம் உறுதியா இருந்தா தமிழ் மொழில பொறியியல் கல்வி சாத்தியம் 15 வருடம் கழித்து.

Joe said...

//
இதில் இருக்கும் சூதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..:-)))
//

சூதெல்லாம் இல்லண்ணே. சும்மா, ஒரு விளம்பரம்... ;-)

நீச்சல்காரன் said...

அண்ணே,
இந்த விஷயத்தையும் இன்னும் ஆழமாப் பார்த்தால், தமிழ் வழியில் ஒரு சிறப்புள்ளது. ஆங்கில வழியில் பொறியியல் படிப்பவர்கள் பல நேரங்களில் கடனுக்கென்று சில பகுதியை மனப்பாடம் செய்ய வேண்டிவரும். தமிழ் வழியில் அது நன்கு புரியும் மற்றும் நாமாக சிந்திக்கவும் முடியும் (எந்த மொழியானாலும் தாய்மொழியில் சிந்திப்பதுதான் சிறப்பானது)
ஆங்கிலம் என்பது ஒரு தகவல் தொடர்பு வழியே ஆங்கில அறிவை வளர்க்கப் பொறியியல் பாடத்தையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் பார்க்கப் போகும் வேலைக்குத் தகுந்தமாதிரி மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாமே

Ganesh said...

Hi viewers, here we should not ask whether India will create job for those who studies in tamil?because tamil is not an India's common language like in Korea or Japan or China. but we should ask whether tamilnadu will create job for one lakh engineer per year? def its impossible,people who studies in tamil cant move out of tamilnadu to get job.i wonder even now whole tamilnadu gives job for lakh engineer?Students who opt for Tamil will feel bad after spending 4 years and money..rather than this the govt could have made tamil as compulsory subject like we have till 12 th. atleast it will ensure all engineers knows our language well to write,read,speak.

Felix Raj said...

ஜப்பான் , ஜெர்மனி, ரஷ்யா அமெரிக்க, etc ., அறிவியல் வளர்ச்சி அடைய காரணம், அணைத்து விதமான அறிவு தொழில் நுட்பங்கள் , அணைத்து அவரவர் மொழிகளில் இருக்கிறது , இந்தியாவில் .......? எந்த மொழிகளில் டாகுமென்ட் செய்வது .?

ஜாக்கி சேகர் said...

மேலே பெலிக்ஸ்ராஜ் கேட்ட கேள்வி யோசிக்க வேண்டியதுதான்..

Manoj said...

Well said sir....Engineering in tamil is such a bad move from Anna Univ...students are really in trouble if they learned engg in tamil ...moreover lectu & Proff are also in big trouble in teaching in tamil.....
if a student gettin a job in engg company na...he has to move up with many people from diffrnt companies and he has to discuss many engneering terms with thm....tht time wht tht tamil engg studentstand????????......OMG.very terrible situatn....
so practically , engineerically & Globally .....its a bad move by anna univ

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பதிவு நண்பா.. இந்த ஆண்டின் கலந்தாய்வில் இந்த தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் அனைத்தும் மிக மிகத் தாமதமாகத்தான் நிரம்பின. இன்னும் முழுமையாகவே நிரம்பியிருக்காது என்றே எண்ணுகிறேன்.

kannamma said...

Nalla vaatham.ella tamilstudent-kkum manasla iruntha onnu. Thelivana explanation.
(("aana coll-vantha mudhal naale koncham kooda tamil pesa theriyathavanga maathiri pesina eppadi?koncham aaruthala tamil pesinaa nalla irukkume..........."))