February 27, 2009

உக்கார்ந்து யோசிச்சது (27-02-09)...!!!

இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று நம் அனைவருக்கும் பெருமை சேர்த்து இந்தியா திரும்பி இருக்கிறார் ரஹ்மான். அவருக்கு வாழ்த்துக்கள். இதே நேரத்தில் நமது தமிழக அரசு இந்த வருடத்துக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. மொத்தம் 71 கலைஞர்களுக்கு இந்த வருடம் விருது வழங்கப்பட்டு உள்ளது. எல்லாம் சரி... ஆனால் உண்மையாக பாராட்டப்பட வேண்டிய கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா? எல்லா பத்திரிக்கைகளிலும் பரத், நயன்தாரா, அசின் விருது பெற்றனர் என்றுதான் செய்தி. ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எல்லா நாட்களிலுமே சினிமா நட்சத்திரங்களைப் பற்றித்தான் எழுதுகிறீர்கள். இதுபோன்ற தருணங்களிலாவது மற்ற கலைஞர்களைப் பற்றி எழுதலாமே.. ஏற்கனவே நம் நாட்டின் பாரம்பரியக் கலைகள் ஒவ்வொன்றாக அழிந்து வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழ் மக்களின் அரவணைப்பும் உரிய அங்கீகாரமும் மட்டுமே இது போன்ற கலைகளையும் கலைஞர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்யும்.
தமிழக அரசும் சில விசயங்களை கவனிக்க வேண்டும். ஏற்கனவே சினிமா கலைஞர்களுக்கு பல விருதுகள் உள்ளன. அவர்களைத் தவித்து மற்ற கலைஞர்களுக்கு மட்டும் இது போன்ற விருதுகளைக் கொடுக்கலாமே. அரசியல் காரங்களைத் தள்ளி வைத்து விட்டு உண்மையான கலைஞர்களை அரசு கவுரவிக்க வேண்டும். செய்வார்களா? ( இதில் கொடுமை என்னவென்றால், இரண்டு நாட்கள் முன்னாடி நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னான்.. தானைத்தலைவி நமீதாவுக்கு விருது கொடுக்காத தமிழக அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார்களாம் மதுரையில்.. அடங்கொய்யால.. இவங்களை திருத்தவே முடியாதுப்பா.. )
***************
பதிவுலகில் எல்லாருமே நான் கடவுளைப்பற்றி விதவிதமாகப் பேசி, துவைச்சு, அலசி காயப் போட்டாச்சு. அனைவரும் அருமை என்று ஒத்துக்கொண்ட விசயம்.. இளையராஜாவின் இசை. இந்தப் படத்திற்கான அவருடைய இசையைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராஜாவின் இன்னொரு படமான "நந்தலாலா" பற்றி யாரும் அதிகம் பேசவில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கு நான் கடவுளை விட நந்தலாலாவின் இசை மிக அபாரம் என்றே தோன்றுகிறது. "ஒண்ணுக்கொண்ணு துணை இருக்கும் உலகத்திலே அன்பு ஒன்றுதான் அனாதையா?" என்னும் பாடலைக் கேட்டு பாருங்கள். உள்ளத்தை உருக்கும் இசை. யேசுதாஸ் பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு கதை சொல்வது போல் வரும் "மெல்ல ஊர்ந்து.." பாடலும், தாயைப் பற்றி இளையராஜாவே பாடும் "தாலாட்டு கேட்க நானும்" பாடலும் ரொம்ப இனிமை. கடைசியாக ஒரு நரிக்குறவப் பெண்ணின் குரலில் ஒலிக்கும் "எலிலே" பாடலில் தமிழில் ஒரு புது முயற்சி. வெறும் உறுமி மேளத்தின் பின்னணியில் பாடல் பட்டையைக் கிளப்புகிறது. கண்டிப்பாக கேட்க வேண்டிய ஆல்பம்.
***************
நேற்று ஹைதராபாத்தில் இருந்து பதிவுலக நண்பர் பாரதிராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். சீக்கிரமா "எல்லாப் புகழும் வில்லுக்கே" பார்ட் டூ எழுதுங்க நண்பா என்றார். ஏன்யா.. நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா? முதல் பதிவுக்கே ஒரு பெயரில்லா நண்பர் என்னோட மொத்த குடும்பத்தையே காலி பண்ணிட்டார். (அப்படி ஒரு கெட்ட வார்த்தைகள நான் கேட்டதே இல்ல). அதுவாவது பரவா இல்லா.. இன்னொரு பெயரிலி எனக்கு வரப்போற பொண்டாட்டியக்கூட விடாமத் திட்டிட்டாரு. நான் எங்க போய் அழ..? "சரி சரி.. சுனாபானா.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னு" என்ன நானே தேத்திக்கிட்டு.. கூடிய சீக்கிரமே அடுத்த "வில்லு" பதிவ எழுதுறேன் நண்பான்னு சொல்லி இருக்கேன்.
ஏற்கனவே இரண்டு நண்பர்கள் தொடர்பதிவு எழுதக் கூப்பிட்டு இருக்காங்க. "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" பற்றி பிரேம் எழுத சொல்லி இருக்கார். "எனக்கு பிடித்த இருவர்" என்ற தலைப்பில் எழுத நண்பர் ஆதவா அழைப்பு விடுத்து இருக்கார். இரு பதிவுமே கொஞ்சம் தகவல்கள் சேகரித்து எழுத வேண்டியவை. கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன். அதோட.. குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை ஒண்ணு பதிவுல எழுதணும்னு எண்ணம் இருக்கு.. எழுதலாமா வேண்டாமான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க நண்பர்களே..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு அஜால் குஜால் கதை..
ஒருத்தன் வீட்டுக்கு வர வழியில கடைத்தெருவுல ரோபோ ஒண்ணப் பார்த்தான். அதுல என்ன விசேஷம்னா யார் பொய் சொன்னாலும் அந்த ரோபோ கண்டுபிடிச்சு அவங்க தலையைக் சேர்த்து ஓங்கி ஒரு அடியப் போடும். விலை பத்தாயிரம் ரூபாய். இவன் ஆசைப்பட்டு அதை வீட்டுக்கு வாங்கிட்டுப் போய்ட்டான். பொண்டாட்டிய வீட்டுலக் காணோம். லேட்டா வர்றா. எங்கடி போனன்னு இவன் கேட்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு ஒடம்பு முடியல..ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போயிருந்தேன்னு சொன்னா. ரோபோ அவ தலையில ஓங்கி அடிச்சது. பொய் சொல்லாம உண்மைய சொல்லுடின்னா.. படத்துக்கு போய் இருக்கா..அப்புறம் இவன் ரோபோவப் பத்தி சொன்னான். அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இது எவ்வளோ விலைங்கன்னு கேட்டா.. விலை கூட சொன்ன திட்டுவாலோன்னு பயந்து இவன் ஆயரம் ரூபாய்ன்னு சொன்னான்.. இவனுக்கு மண்டைல ஒரு போடு. பொண்டாட்டிக்கு இவன் போய் சொல்றன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறமா உண்மையான விலைய சொன்னான். அந்த நேரம் பார்த்து அவன் மகன் வீட்டுக்குள்ள வந்தான். இவ்வளவு நேரமா எங்கடா போன பக்கின்னு அப்பன் கேட்க... கிளாஸ்ல கூட படிக்கற பையன் வீட்டுக்கு போய் இருந்தேன்ப்பான்னு அவன் சொல்ல.. போடு.. அவனுக்கும் அடி விழுந்துச்சு. உண்மைல அவன் தெருவுல கோலிக்குண்டு விளையாண்டுக்கிட்டு இருந்திருக்கான். அம்மாவுக்கு கோபத்த அடக்க முடியல.. இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு.. (கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 26, 2009

அவனும் அவளும் (5)....!!!

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு அவன் அவளை சென்னையில் பார்த்தான். கண்டிப்பாக அவளேதான். மறக்கக் கூடிய முகமா அவளுடையது? ஆள் முன்னைக்கு இப்போது இன்னும் இளைத்து இருந்தாள். கையில் ஒரு குழந்தை வேறு இருந்தது. அவள் அவனைப் பார்க்கும்முன் திரும்பி விட எத்தனித்தபோது, அவள் அவனுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டாள். மெதுவாக திரும்பி அவளை நோக்கி சென்றான். அவள் கண்களில் ஆச்சர்யம் தேங்கி நின்றது.
"நீ இங்க எப்படி..? சென்னைக்கு எப்போ வந்த?"
"நான் இங்க வந்து எட்டு மாசம் ஆகுதும்மா.. பக்கத்துல ஒரு கம்பனிலதான் வேலை பாக்குறேன்"
"அதிசயமா இருக்கு.. நானே எப்பயாவதுதான் கடைத்தெருவுக்கு வருவேன்.. இன்னைக்கு என் நல்ல நேரம்.. உன்னப் பார்த்துட்டேன்.. எங்க தங்கி இருக்க?"
"கோடம்பாக்கத்துல ஒரு பிரென்ட் கூட ரூம் எடுத்து தங்கி இருக்கேன்"
"சரி வா.. இங்க கிட்டக்கத்தான் என் வீடு.. போய் அங்க பேசிக்கலாம்"
"பரவா இல்ல.. நான் இன்னொரு நாள் வரேனே."
"எத்தன நாள் கழிச்சு பாக்குறோம்? உன்ன அவ்வளவு சீக்கிரம் போக விட்டுடுவேனா? சொன்னா கேளு.. வா.. கிளம்பு.. ஒண்ணும் பேசக் கூடாது". அவள் எப்போதுமே அப்படிதான். ரொம்ப பிடிவாதக்காரி. அவள் சொன்னால் அது நடக்க வேண்டும். இன்னமும் மாறவில்லை போல என்று நினைத்துக் கொண்டான்.
அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுடைய அப்பா தென்மாவட்ட நகரம் ஒன்றில் சொந்தமாகக் கடை வைத்திருந்தார். அவன் அருமையாக கவிதை எழுதுவான். எந்தக் கல்லூரியில் போட்டி நடந்தாலும் அதில் கலந்து கொள்வான். அவனுக்கு என்று அவனது கல்லூரியில் ஒரு ரசிகர் மன்றமே இருந்தது. அவள் அவனுக்கு ஒரு வருடம் ஜுனியர். நிறைய புத்தகங்கள் படிப்பவள். அருகில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். இருவருக்குமே அலைவரிசை ஒத்துப் போனதால் எளிதாகப் பழக முடிந்தது. கடைசியில் வழக்கம் போல் காதலில் போய் முடிந்தது.
அவர்களைப் பார்த்து வியக்காத மக்கள் கல்லூரியில் கிடையாது. அப்படி ஒரு அழகான, அன்பான காதலர்கள். ஆனால் யாரும் நன்றாக இருந்தால்தான் விதிக்குப் பிடிக்காதே. ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் அவள் காணாமல் போனாள். காற்றில் கரைந்த கற்பூரம் போல் சுவடே இல்லாமல் மறைந்து விட்டாள். அவன் அவளுடைய ஊருக்கு போனபோது பூட்டி இருந்த வீடுதான் அவனை வரவேற்றது. அவளுடைய அக்கா யாரையோ காதலித்து ஓடிபோனதாகவும், அவமானம் தாங்காமல் அவர்கள் குடும்பத்தோடு ஊரைக் காலி செய்து விட்டுப்போய் விட்டதாகவும் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். அதுதான் அவன் அவளைப்பற்றி கடைசியாகக் கேள்விப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறான்.
சிறிய வீடு. அழகாக வைத்து இருந்தாள். கணவர் வேலைக்கு சென்று விட்டார் எனவும் இரவு லேட்டாகத்தான் வருவார் என்றும் சொன்னாள். நிறையப் பேசினாள். கணவரை பற்றி, அவருடைய குடும்பம் பற்றி, வேலை பற்றி எல்லாம் சொன்னாள். அவளுடைய அக்கா இப்போது மீண்டும் அவர்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து விட்டதையும் சொன்னாள். அவளுடைய பையன் அங்கும் இங்கும் ஓடி விளையாண்டுக் கொண்டிருந்தான். வெகு நேரம் பேசி விட்டு அவள் ஓய்ந்து போனாள். அவன் எதுவுமே பேசவில்லை. கொஞ்ச நேரம் அங்கே நிசப்தமாக இருந்தது.
"ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்.. பக்கத்துல இருந்துகிட்டும் ஏன் இப்படி அமைதியா இருக்க.. என்கிட்டப் பேச மாட்டியா..?" கேட்டபோது அவளுடைய குரல் கம்மியது. அவன் அப்போதும் அமைதியாக இருந்தான்.
"என்ன ரொம்பத் தேடி இருப்ப இல்ல? என்மேல கோபம் இருந்தாத் திட்டிடு.. இப்படி அமைதியா இருக்காத.. ப்ளீஸ்..".
அவன் முதல் தடவையாகப் பேசினான். "உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு என்னைக்குமே நான் நினைக்க மாட்டேன்.. எங்க இருந்தாலும் நீ நல்லா இருந்தாப் போதும். உன்னோட சூழ்நிலையில நான் இருந்தாலும் அப்படித்தான் பண்ணி இருப்பேன்.. நீ சங்கடப்படாதே..".
"உனக்கு எம்மேல வருத்தமே இல்லையா?"
"கண்டிப்பா இல்ல" அவன் சொல்லிக் கொண்டே எழுந்தான். "அப்போ நான் கிளம்புறேன்".
"இன்னொருநாள் அவர் இருக்கறப்ப கண்டிப்பா வரணும்.."
"சரி.." சொல்லிக்கொண்டே வாசலில் இருந்த செருப்புகளை அணிந்து கொண்டான். "நான் போயிட்டு வரேம்மா.."
"ஒரு நிமிஷம்.. "வாசலில் நின்றபடி அவள் கேட்டாள்." உனக்கு....கல்யாணம் ஆகிடுச்சா... ?"
அவன் ஒரு நிமிஷம் அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தான். திரும்பி நடக்கத் தொடங்கினான். பஸ்சைப் பிடித்து ரூமுக்கு வந்து சேர்ந்தான். ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டு ஓவென அழத்தொடங்கினான். அன்று இரவு முழுவதும் அந்த அறையில் இருந்து விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 25, 2009

சின்ன சின்ன ஆசைகள்..!!!


தூக்கத்தில் ஒருநாள் -
என் கனவில் கடவுள்..
கேட்டார் என்னிடம்...
"சொல் கண்ணே..
உன் ஆசைகள் என்னென்ன?"
எதைச் சொல்ல...
எதை விட...
"தாயின் மடியில்
தலைவைத்து தூங்கி விட ஆசை!!
அவள் கையால் அமுதம் உண்ண ஆசை!!
தந்தை கரம் பிடித்து
தெருவினில் அலைந்திட ஆசை!!
வாங்கி வந்த பொம்மைக்காய்
அண்ணனோடு சண்டை போட்டிட ஆசை!!
பசியை முழுதாய் ஒழித்திட ஆசை!!
தினம் தினம் புதிதாய் உடுத்திட ஆசை!!
நான் நினைப்பதெல்லாம் நடந்திட ஆசை!!
எல்லாவற்றுக்கும் மேலாக -
நானே ஒருநாள் கடவுளாய் மாறிட ஆசை!!"
சொல்லி முடித்து கடவுளைப் பார்த்தேன்..
அனைத்துக்கும் பதிலாய்..
அவரின் புன்னகை மட்டுமே!!
சத்தமாக ஒலித்த மணியோசை
கேட்டு கலைந்தது கனவு!!
நானிருக்கும் அநாதை இல்லத்தின்
இன்றைய பணிகளைத் தொடங்க வேண்டும்..
பதறி எழுகிறேன் நான்!!
என்றேனும் ஒருநாள் என்
ஆசைகளும் கனவும் கைகூடும்
என்னும் நம்பிக்கையோடு..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 23, 2009

"தநா 07 அல 4777" - விமர்சனம்!!!


உலகத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவன். திமிர் பிடித்த பணக்காரர்களே உலகில் இருக்கக் கூடாது என நம்பும் இன்னொருவன். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வுகள்.. போராட்டங்கள்.. தாங்கள் தொலைத்த வாழ்க்கையை இவர்கள் மீண்டும் மீட்டு எடுப்பதுதான் "தநா 07 அல 4777" (எம்ஜியாரின் கார் நம்பர்). வித்தியாசமான கதைக்களம். "Taxi no.9211" என்னும் ஹிந்திப் படத்தின் தமிழ் பதிப்பு.

மணி(பசுபதி) ஒரு முன்கோபி.பத்து வருடங்களில் பல வேலைகள் மாறி விட்டவன். சமுதாயத்தில் நடக்கும் தவறுக்கு எல்லாம் பணம்தான் காரணம் என்று நினைப்பவன். வீட்டில் மனைவி சுபாவிடம்(சிம்ரன்) எல்ஐசியில் வேலை செய்வதாக உதார் விட்டுக் கொண்டு டாக்ஸி ஒட்டிக்கொண்டு இருக்கிறான். கெளதம்(அஜ்மல்) பொறுப்பு இல்லாத ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. சாகும்போது அவனுடைய அப்பா சொத்தை எல்லாம் தன்னுடைய நண்பர் பெயருக்கு மாற்றி விடுகிறார். சொத்தைக் கேட்டு தன் தந்தையின் நண்பர் மீது கேஸ் போட்டு இருக்கிறான் கெளதம். அவனுடைய காதலி பூஜா(மீனாக்ஷி).

கெளதம் ஒரு முக்கியமான உயிலை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். பாங்கில் இருக்கும் உயிலை எடுக்க மணியின் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. போலீசிடம் மணியை மாட்டிவிட்டு கெளதம் தப்பிக்கிறான். ஆனால் கௌதமின் உயில் இருக்கும் பேங்க் லாக்கர் சாவி இப்போது மணியிடம் சிக்கிக் கொள்கிறது. இருவருக்கும் ஒரு யுத்தம் தொடங்குகிறது.ஒருவரை ஒருவர் பழி வாங்க முயல்கிறார்கள். தான் செய்வது தப்பு என்பதை இருவருமே உணர மறுக்கிறார்கள். தன் கணவர் பொய் சொன்னதை அறிந்து மணியை விட்டு பிரிந்து போகிறார் அவனுடைய மனைவி. சொத்து கௌதமுக்கு இல்லை என்று தெரிந்தவுடன் நண்பர்களும் அவனுடைய காதலியும் அவனைப் பிரிகிறார்கள். கடைசியில் இருவரும் தங்களுடைய உண்மையான சந்தோஷத்தை கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.

ரகுவரனுக்கு அடுத்தபடியாக, இன்று தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் என்றாலும் பொருந்தக் கூடியது பசுபதிக்குத்தான் என்று நினைக்கிறேன். அருமையான உடல்மொழி. அஜ்மல்லை பார்க்கும்போதெல்லாம் கண்களில் விஷத்தைக் காண்பிக்கிறார். சிம்ரனிடம் கெஞ்சும் காட்சிகளிலும், மகனிடம் அழும் காட்சியிலும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். ஹிந்தியில் நானா படேகர் நடித்த பாத்திரம் பசுபதிக்கு ரொம்ப நன்றாக பொருந்தி வருகிறது. அஜ்மல் - செம ஸ்டைலாக இருக்கிறார். நடையே ஒரு பணக்கார தோரணைதான். அவருடைய ரோலை சரியாக செய்துள்ளார். சிம்ரனுக்கு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டுள்ளார். அஜ்மலின் காதலியாக மீனாக்ஷி. "கருப்பசாமி குத்தகைதாரர்" படத்தில் குடும்ப விளக்காக வந்தவரை குட்டி குட்டி உடைகள் குடுத்து ஒரு குத்துப்பாட்டுக்கு கும்மி எடுத்திருக்கிறார்கள்.(அடேங்கப்பா.. இந்த ஒரு வரியில எத்தன "கு" வருது.. சரி சரி..). ஆனால் அவருக்கு கவர்ச்சி எடுபடவில்லை. படத்தின் கடைசியில் ஒரே ஒரு சீனுக்கு பூஜா. அழகாக இருக்கிறார்.

படத்திற்கு தேவையே இல்லாமல் இரண்டு கதாநாயகர்களுக்கும் அறிமுகப் பாடலகள். இசை விஜய் அன்டோனி. "ஆத்திச்சூடி" பாடல் நன்றாக படமாக்கப் பட்டுள்ளது. பாடல்களை விட பின்னணி இசை அருமை. படத்தின் முக்கியமான இன்னொரு விஷயம் வசனம். "ரொம்ப தண்ணி அடிக்காம கிளம்பி வீட்டுக்குப் போ" எனும் அஜ்மலிடம் பசுபதி சொல்லுவார்.." வீட்டுக்கா.. என் வீடுதான் பஸ் ஏறி கோவைக்குப் போயிடுச்சே..". நிறைய இடங்களில் வசனம் ரொம்ப ஷார்ப். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கனக்கச்சிதம்.

படத்தில் அங்கங்கே சின்னக் குறைகளும் உண்டு. போலீஸ்காரர்களை கிறுக்கர்களாக காண்பிப்பது,, ஒரு சில காட்சிகளில் தெரியும் நாடகத்தன்மை.. விபத்து நடந்த கார் எப்படி பசுபதிக்கு உடனே கிடைத்தது.. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுப்பது.. இப்படி சில... ஆனால் எல்லாவற்றையும் அந்த கிளைமாக்ஸ் மறக்க செய்து விடுகிறது. அறிமுக இயக்குனர் லட்சுமிகாந்தனுக்கு இந்தப்படம் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும். ரொம்ப சின்னப் படம்தான். மொத்தமே நூறு நிமிடம் கூட இல்லை. ஆனால் ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த உணர்வு.

தநா 07 அல 4777 - நம்பி பயணிக்கலாம்.

(ஆஸ்கார் விருதை வென்று தமிழுக்கும் தமிழனுக்கும் பெயர் வாங்கி தந்து இருக்கும் இசைப்புயல் A.R. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.. இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இன்று விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் "slumdog millionaire" படத்துக்கும் மற்றொரு ஆவணப்படமான "smile pinkey" மற்றும் விருது பெற்ற எல்லாருக்குமே வாழ்த்துக்கள்.. )


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 22, 2009

கேட்கக்கூடாத கேள்விகள் பத்து...!!!

(எல்லாரும் பத்து கேள்வின்னு பதிவு போடும்போது நீ மட்டும் ஏண்டா சும்மா இருக்க பாண்டியான்னு நண்பர்கள் ஏத்தி விட்டதால.. இந்த பதிவு.. )
கலைஞர் மு. கருணாநிதியிடம்..
இன்னும் கலைஞர் தொலைக்காட்சியில செய்திக்கு முன்னாடி "தமிழர்களே தமிழர்களே" அப்படின்னு சீன் போடும்போது உங்களுக்கே மனசாட்சி உறுத்தலையா?
செல்வி ஜெ. ஜெயலலிதாவிடம்..
சிறுதாவூர், கொடநாடுன்னு போய் ரெஸ்ட் எடுக்குறீங்க.. ஆண்டிப்பட்டில ஆடு செத்ததுக்கும், மன்னார்குடியில மாடு செத்ததுக்கும் கருணாநிதிதான் காரணம்னு அறிக்கை விடுறீங்க.. கம்யூனிஸ்ட் மக்களை உள்ள வச்சுகிட்டே காங்கிரஸ் மக்களை கூட்டணிக்கு கூப்பிடுறீங்க.. கடைசியில நான் ஒரு சந்நியாசி மாதிரி வாழுறேன்னு சொல்றீங்க.. உங்களைப் பார்த்து உங்க கட்சிக்காரனே மண்டை காஞ்சு அலையுறது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
மருத்துவர் ராமதாசிடம்..
தமிழ் மக்களுக்காக இவ்வளவு போராடுற நீங்க.. மத்திய அமைச்சரவைல இருக்குற உங்க மகன் அன்புமணியும் மற்ற அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்ல மாட்டேங்குறீங்களே.. ஏன்?
விஜயகாந்த்திடம்...
கருப்பு எம். ஜி. ஆர்..? இன்னும் மக்களோட மட்டும்தான் என்னோட கூட்டணின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?
சரத்குமாரிடம்...
831..? திருமங்கலம்..? யாருங்க அந்த ஜோசியர் உங்களைத் தேர்தல்ல நிக்க சொன்னது? சுப்ரமணியசாமி விட்ட இடத்துக்கு அடுத்து நீங்கதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்கு தெரியுமா?
கமல்ஹாசனிடம்..
மர்மயோகி படம் மருதநாயகம் பார்ட் டூன்னு சொல்றாங்களே.. உண்மையா சார்?
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம்..
நான் கடவுள் பார்த்துட்டு அகோரி பாபாக்கள நான் இமயமலைல பார்த்தேன்னு எல்லாம் அடிச்சு விடுறீங்களே தலைவா.. சரி விடுங்க.. ரசிகர்கள் சந்திப்புல தந்திரன்.. ச்சீ.. எந்திரன் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் உக்கார்ந்து பேசுவோம்னு சொன்னீங்களே.. அது ச்சும்மா உல்லுலாயீ தான.?
சிம்பு - கௌதமிடம்..
கெட்டவன்..? போடா போடி..? சென்னையில் ஒரு மழைக்காலம்..? அல்லு அரவிந்தோட தெலுங்கு படம்? அட போங்கப்பா.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா?
பதிவர் கார்க்கியிடம்..
அஜித் படம்னா நீங்க உசிர விடுவீங்கலாமே? அப்படியா?
(பரிசலின் பதிவுக்கு எதிர்பதிவு போட்டு இந்த பத்து கேள்வி சீசன ஆரம்பிச்சதே கார்க்கிதான்னு நினைக்கிறேன்.. அதனால அவரையும் உள்ள இழுத்து விட்டாச்சு.. )
பதிவர் கார்த்திகைப்பாண்டியனிடம்..
எல்லாரும் எழுதுனாங்க.. நானும் எழுதுனேன்னு இப்படி ஒரு பத்து கேள்வி பதிவ எழுதி இருக்கியே.. உனக்கே வெக்கமா இல்லையா?
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 20, 2009

மாசில்லாத உலகம் தா...!!!


இயந்திரங்கள் சிந்தும் எச்சில்களாலும்
ஊர்திகள் ஊதும் கரும்புகையாலும் - மட்டுமா
இந்த பூலோகம் மாசுற்றுள்ளது?
மாசுற்ற இதயங்கள் கோடி..!!
கல்வியுலகம் காசுக்கு
சோரம் போனது..
இளைஞர் உலகமோ - ஆசையிலும்
போதையிலும் அல்லல்படுகிறது..
உழைக்கும் நெஞ்சங்கள்
பொறாமைகளால் நசுக்கப்படுகிறது..
அரசியல் உலகமோ
ஊழலில் உழல்கிறது..
மாசில்லாத உலகம் தாவென்று
கடவுளைத் தேடிச் சென்றால் -
கோயில்களை இன்று
சாதிக் குட்டிச்சாத்தான்கள் அழுக்காக்குகின்றன..
எங்கும் தேடிப் பார்த்தேன்..
தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!!
இயற்கையை இன்னும் நாம் மாசுபடுத்தினால்
அது இயற்கையாகவே...
தனது கரைகளை அகற்றிக் கொள்ளும்..!!
உண்மையில் மாசில்லாத உலகம் வேண்டின்..
மாசில்லா உள்ளங்கள் வேண்டுவோம்..!!
எண்ணங்களை உயர்த்தி
உலகை உன்னதமாக்குவோம்... !!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 18, 2009

நான் ஏன் எழுதுகிறேன்?!!


நாம் அனைவருமே நம் அன்றாட வாழ்கையில் இந்த ஒரு விஷயத்துக்காக ஆசைப்படுகிறோம்.. ஏங்குகிறோம்.. அது என்ன? (விடை.. பின்னாடி...)

நேற்று மாலை கல்லூரி முடிந்த பிறகு கணினியில் அமர்ந்து பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நாலேகால் மணிக்கெல்லாம் முடிந்து விடும். அதன் பின்னர் தான் மக்களுடைய பதிவுகளைப் பார்க்கும்... நம்முடைய பதிவுகளை எழுதும் நேரம். என் கூட வேலை செய்யும் மேடம் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் செல்பவர். நேற்று ஏதோ வேலை என்பதால் இருந்து விட்டார் போல. மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார்.

"ஏன் சார், இதுல என்ன கிடைக்குதுன்னு தினமும் சாயங்காலம் உக்கார்ந்து எழுதிக்கிட்டு இருக்கீங்க.. உருப்படியா ஏதாவது செய்யலாம்ல..."

நான் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன். அவருக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும்.

"நீங்க எதுக்காக மேடம் ஓவியம் வரையுறீங்க..?"

"என்னோட ஆத்மதிருப்திக்கு..."

"சரி.. அதை எதுக்கு மத்தவங்ககிட்ட காமிக்கிறீங்க.. ?"

"அவங்களுக்கும் பிடிச்சிருந்தா பாராட்டுவாங்கல்ல.. அதுக்குத்தான்.. "

"நீங்க ஓவியம் வரையறது வேஸ்ட்ன்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா?" அவருக்கு முகம் சுண்டிப் போனது. ஏதும் சொல்லாமல் எழுந்து போய் விட்டார்.

நான் ஏன் எழுதுகிறேன்?

நாம் எல்லாருமே சம்பளம் வாங்கிட்டுத்தான் வேலை பார்க்கிறோம். ஆனாலும், நமது அலுவலரோ.. முதலாளியோ.. இந்த வேலைய நீங்க நல்லா பண்ணி இருக்கீங்கன்னு பாராட்டும்போது சந்தோஷப்படுகிறோமா இல்லையா?

இந்த எல்லா கேள்விக்கும் ஒரே விடைதான். நாம் அனைவருமே அங்கீகாரத்திற்காக.. பாராட்டுக்காக ஏங்குகிறோம். சிறு குழந்தை ஒன்று தனது புத்தகத்தில் ஒரு படம் வரைந்து விட்டு நம்மிடம் கொண்டு வந்து நீட்டும்போது, நன்றாக இருக்கிறது என சொன்னால் அதன் முகத்தில் வரும் சந்தோஷத்திற்கு ஈடு கிடையாது. நம் அனைவருக்குள்ளும் அதே போல் ஒரு குழந்தை உண்டு. நாமும் அந்த ஆதரவைத் தேடுகிறோம்.

நேற்று மாலை ஆறு மணிபோல் ஒரு STD கால் வந்தது. நான் லண்டனில் இருந்து என் நண்பன் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டு "டேய் மகேஷ்.. சொல்றா மாப்ள.. " என்றேன். "நானும் நண்பர்தாங்க.. ஆனா மகேஷ் இல்ல" என்று வந்தது பதில். மலேஷியாவில் இருந்து பேசுவதாக சொன்னார். நண்பர் நிலாவன் என்னும் பெயரில் வலையில் எழுதி வருகிறார். பேச வேண்டும் எனத்தோன்றியதால் கூப்பிட்டதாக சொன்னார். என்னால் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் பேசினோம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டார். இதேபோல் போனவாரம் மதுராந்தகத்தில் இருந்து அகநாழிகை என்னும் பெயரில் எழுதி வரும் நண்பர் பொன்.வாசுதேவன் கூப்பிட்டு இருந்தார். அவருடனும் நிறைய பேச முடிந்தது.

இவ்வளவு ஏன்? திருப்பூரில் இருந்து எழுதி வருகிறார் நண்பர் ஆதவா. அவருடைய கவிதைகளைப் படித்தாலே எனக்கு கண்ணைக் கட்டும். அவ்வளவு அருமையாக எழுதுபவர். நாம் ஏதாவது ரெண்டு வரியை கிறுக்கி வைத்தால் கூட நம் தளத்துக்கு வந்து கவிதை நல்லா இருக்கு நண்பா என்று சொல்லி விட்டுப் போகிறார். முதலில் இருந்தே எனது எழுத்துக்களைப் படித்து ஊக்கப்படுத்தி வரும் பிரேம், நையாண்டி நைனா, கவின், ராம், சொல்லரசன்..(எல்லாருடைய பெயரையும் சொல்ல முடியவில்லை.. வருத்தம் கொள்ள வேண்டாம்..) இவர்களை எல்லாம் எனக்குத் தந்தது பதிவுலகம் தானே. இந்த அன்பும், புது நட்பும், உறவுகளை விட நமக்கு வேற என்ன வேண்டும்?

இந்த இரண்டு மாதங்களில் நம்முடைய எழுத்தை இத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம். என் அம்மாவிடம் இதை பகிர்ந்து கொண்டபோது அவர்களுக்கு உண்டான மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. என் எழுத்தைப் படிக்கும், எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்தப் பதிவு.

அதனால உனக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலைன்னு சொல்ற மக்களுக்கு நான் சொல்லிக்கிறது இதுதான்.. "போங்கப்பா.. போய் அவங்கவங்க வேலை வெட்டியப் பாருங்க..."

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 16, 2009

உக்கார்ந்து யோசிச்சது(16-02-09)...!!!

அப்படி இப்படின்னு காதலர் தினத்த கொண்டாடி முடிச்சு ரொம்ப களைச்சு போய் இருப்போம். இந்த நேரத்துல நான் படிச்ச ரெண்டு விஷயத்த உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு தோணுது. மொத விஷயம் இங்கிலாந்தில நடந்தது. பையனுக்கு பதிமூணு வயசு. பொண்ணுக்கு பதினஞ்சு வயசாம். ரெண்டு பேரும் ஒரு நட்புனர்வோட பழகிக்கிட்டு இருந்து இருக்காங்க. ஒரு நாள் கொஞ்சம் நட்பு அதிகமாகி.. வீட்டுல யாரும் இல்லாதப்போ.. அது ஆகிப் போச்சாம். இப்ப அந்த பொண்ணுக்கு கொழந்த பொறந்திருக்கு. இதுக்கு அந்த பையனோட அப்பா சொல்லி இருக்கிறதுதான் ஹைலைட். "என் பையன் என்ன செயரோம்னே தெரியாம இந்த சூழ்நிழைலே மாட்டிக்கிட்டான். பரவா இல்ல. அவனோட குழந்தைக்கு நல்ல தகப்பனா இருக்க நாங்க உதவி பண்ணுவோம். "
இன்னொரு விஷயம் நம்ம இந்தியாவுல நடந்திருக்கு. இந்த ராம்செனாக்காரங்க எங்க இருந்து வந்தாங்களோ.... எல்லாப்பயலும் ஆரம்பிச்சுட்டாங்க. ரோட்டுல போன காதலர்களை மறிச்சு, பொண்ண விட்டு பையனுக்கு ராக்கி கட்ட வச்சு இருக்காங்க. பார்த்த இடத்திலேயே கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்க. ஒரு சிலருக்கு அடி கூட விழுந்து இருக்கு. எல்லாத்துக்கும் மேல பெரிய கொடுமை, அண்ணன் தங்கச்சி ரெண்டு பேர காதலர்கள்னு நெனச்சு அடியப் போட்டிருக்காங்க. அட ராமா, இந்த கலாச்சார காவலர்கள் இம்சை தாங்க முடியலப்பா.. ஒரு பக்கம் காதல்ல ஓவராப் போறாங்க.. இன்னொரு பக்கம் யோசிச்சாலே அடி விழுகுது.. என்னத்த சொல்ல?
******************
ரெண்டு நாளைக்கு முன்னாடி, எஸ்ராவின் வலைப்பக்கத்துல காவல் கோட்டம் பத்தின விமர்சனத்த படிச்சேன். எனக்கு பயங்கர அதிர்ச்சி. எஸ்ரா கூட இப்படி கோவப்படுவாரான்னு ஒரே ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஆயரம் பக்கம் உள்ள புத்தகம். மதுரையை பத்தின வரலாறு. விகடன்ல கூட இந்த வருடத்துக்கான சிறந்த புத்தகம்னு போட்டு இருந்ததேன்னு வாங்கலாம்னு நினச்சேன். இப்போ அந்த எண்ணமே மாறி போச்சு. எஸ்ராவையே பாடாப் படுத்தி இருக்குன்னா அது எப்படிப்பட்ட புத்தகம்னு பயமா இருக்கு. தப்பிச்சேன்டா யப்பா..
********************
குமுதத்துல இந்த வாரம் லிங்குசாமியோட பேட்டியப் படிச்சீங்களா.. ஒரே காமெடி.. "ரன், சண்டக்கோழி.. இந்த படங்கள்ல இருந்த ஒரு பீல் இப்போ எனக்கு பையா படத்துல தோணுது" அப்படின்னு சொல்லி இருக்காரு.. அஜித்தோட ஜி, விக்ரமோட பீமான்னு நெறைய கத்துக்கிட்டு இருக்காராம்.. அதனால மறுபடி இவங்க ஒரு வாய்ப்பு கொடுத்தா பின்னி எடுப்பாராம்.. ஐயா சாமி.. உங்கள நம்பி நாங்க ஒரு தடவ பட்டது போதாதா.. நீங்க தொழில் பழக நாங்கதானா கிடைச்சோம்? ஜி படம் வந்தா எல்லாரும் இனி அஜித்தை ஜின்னு தான் கூப்பிடுவாங்கன்னு சொன்னிங்க.. கடைசில எல்லாரும் ச்சீன்னு சொன்னதுதான் மிச்சம்.. தயவு செஞ்சு தலைய விட்டுருங்க..
*********************
இப்போ படிச்சுக்கிட்டு இருக்கிற புத்தகம் - சாருவோட "காமரூப கதைகள்.." ஏற்கனவே இணையத்துல படிச்ச அனுபவம் இருந்தாலும் புத்தகமா படிக்கிறது தனிதான்.. ஜீரோ டிகிரி அளவுக்கு குழப்பாம கொஞ்சம் தெளிவாத்தான் போகுது.. புத்தகம் முழுக்க சின்ன சின்ன கிண்டலும் கேலியும் இருக்குறதுதான் இந்தப் புத்தகத்தோட விசேஷம்.. சாருவோட பத்து புத்தகங்களையும் வெளியிட்ட அன்னைக்கே வாங்குனதுல அடியேனும் ஒருத்தன்.. கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா புத்தக கண்காட்சியில அவர் கைஎழுத்தோட வாங்கி இருக்கலாம்.. பார்க்கலாம்.. அடுத்த கண்காட்சியிலாவது எஸ்ரா.. சாரு.. இருவரையும் பார்த்து விட வேண்டும்..
*********************
படித்ததில் ரசித்தது..ஒரு ஊரில் தச்சர் ஒருவர் இருந்தார். ஒரு மேஜையை சரி பார்க்கும்போது அதில் ஆணி ஒன்று இருந்தது. அதை எடுத்து ஓரமாக வைத்து விட்டு வேலையை தொடர்ந்தார். பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருந்த அவரது குட்டிப்பையன் ஆணியை மிதித்து காயமாகி விட்டது. பயங்கர ரத்தசேதம். டாக்டரிடம் கொண்டுபோனால் அவரோ ரொம்ப செலவாகும் என்று சொல்லி விட்டார். அக்கம்பக்கம் இருந்த மக்களிடம் கடன் வாங்கி பையனை காப்பாற்றி விட்டார். கொஞ்ச நாளைக்கு பிறகு கடன் கொடுத்த மக்கள் எல்லாம் திருப்பி கேட்கத் தொடைங்கினார்கள். இவரால் தர முடியவில்லை. அவமானத்தில் தூக்கு போட்டு செத்து போனார். அவர் இறந்த சோகத்தில் அந்த குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் "ஆணியே புடுங்க வேண்டாம்!!!"
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 14, 2009

சிவா மனசுல ஷக்தி...!!!


செம ராவடியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கி இருக்கிறார்கள். அதில் பாதி கிணறு மட்டும்தான் தாண்டி உள்ளார்கள். விகடனின் முதல் தயாரிப்பு. சமீப காலத்தில் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு வந்துள்ள ஒரே தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும். வெள்ளித்திரையில் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி ஷோ. இது தான் "சிவா மனசுல ஷக்தி". தலைப்பிலேயே "ஜீவா கலாய்க்கும்" என்றுதான் போட்டிருக்கிறார்கள். அது போலவே படம் முழுக்க செம ஜாலி, கிண்டல், நக்கல் என்று இருக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ் மட்டும் நன்றாக இருந்திருந்தால் படம் பட்டையை கிளப்பி இருக்கும். ஆனால் சொதப்பி விட்டார்கள். இந்த படத்திற்கு விகடன் என்ன மார்க் தருகிறது என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

ரயிலில் அனுயாவை சந்திக்கிறார் ஜீவா. முதல் சந்திப்பிலேயே பிடித்துப் போகிறது. தான் ஒரு மிலிடரிமேன் என்று சொல்கிறார். அனுயா தான் ஒரு விமான பணிப்பெண் என்கிறார். இருவருக்குள்ளும் ஒரு பழக்கம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் இவர்கள் சொன்னது பொய். ஜீவா கொரியரில் வேலை பார்க்கிறார். அனுயா ஹல்லோ fm இல் RJயாக உள்ளார். இருவருக்கும் உண்மை தெரிய வரும் போது எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். அனுயாவின் அண்ணன் கல்யாணத்திற்கு ஜீவா உதவுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குகிறார்கள். ஆனால் ஈகோ பிரச்சினையால் அடித்து கொள்கிறார்கள். கடைசியில் இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே SMS.

ஜீவாவுக்கு பொருத்தமான வேடம். செமையாக கலாய்க்கிறார். நகைச்சுவை ரொம்ப எளிதாக வருகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு அவருடைய செயல்களைப் பார்க்கும்போது நமக்கு எரிச்சல் வரக் காரணம் இயக்குனர் தான். சட்டையை கழட்டி விட்டி ரேடியோ ஆபிசில் அவர் செய்யும் அலம்பல் ரொம்ப ஓவர் ரகம். புதுமுகம் அனுயாவுக்கு நடிக்க மட்டும் வரவில்லை. மற்றபடி ஓகே. ஒரு சாயலில் மதுமிதா போலவும் இன்னொரு சாயலில் ராக்கி சாவந்த் மாதிரியும் தெரிகிறார். வசனங்களை ரொம்ப கஷ்டப்பட்டு ஒப்பிக்கிறார். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.. அவருடைய ரெண்டு நீளமான, அழகான கால்கள்தான்.

சந்தானம் கெட்டவார்த்தை காமெடி செய்வதை நிறுத்தவே மாட்டார் போல. அவருடைய போனை ஜீவா ஒவ்வொரு முறையும் உடைத்து போடும் காட்சிகள் நன்றாக உள்ளன. அனுயாவின் அண்ணனாக வரும் சத்யன் நன்றாக காமெடி செய்கிறார். படத்தில் பெரிய லூஸ் யாரென்றால், ஜீவாவின் அம்மாவாக வரும் ஊர்வசிதான். நகைச்சுவை செய்வதாக எண்ணி நம்மை மண்டை காய வைக்கிறார். படத்துக்கு தேவை இல்லாத இன்னொரு மனிதர் கு. ஞானசம்பந்தன். பாவம், அவர் சீரியஸ் அப்பாவா இல்லை காமெடி அப்பாவா என்று கடைசி வரை தெரியவே இல்லை.

ரொம்ப நாளைக்கு பிறகு யுவனின் இசையில் எல்லாப் பாடல்களுமே நன்றாக உள்ளன. "ஒரு சொல், ஒரு கண்ணாடி" பாடலில் முத்துக்குமார் தெரிகிறார். "எப்படி மாட்டிக்கிட்டேன், ஒரு அடங்காப்பிடாரி" ஆகிய பாடல்களை நன்றாக படமாக்கி உள்ளார்கள். டைட்டில் மியூசிக், இடைவேளையில் வரும் காதல் தீம், பின்னணி இசை என யுவன் சிறப்பாக செய்து இருக்கிறார். ஒளிப்பதிவு ஷக்தி சரவணன். பரவாயில்லை ரகம்தான். வசனம் யாரென்று தெரியவில்லை. நச்சென்று எழுதி இருக்கிறார். நகைச்சுவை படம் முழுவதும் வழிந்தோடுகிறது.

இயக்குனர் ராஜேஷுக்கு இது முதல் படம். இளைஞர்களுக்கான ஒரு படமாக இதை எடுக்க முனைந்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகி விட்டது. கிளைமாக்ஸ் பார்க்கையில் நமக்குத்தான் வாந்தி வருகிறது. ஜீவாவிடம் அனுயா காதலை சொல்வதுடன் படத்தை முடித்து இருக்கலாம். நன்றாக இருந்து இருக்கும். அதை விடுத்து, அனுயாவை அலைய விட்டு, ஜீவாவை உளர வைத்து, நம் பண்பாட்டையே கேவலப்படுத்தி.. நம்மை இந்தப் பாடு படுத்தி இருக்க வேண்டாம். ஒரு நல்ல படம் பார்க்கிறோம் என்று இடைவேளை வரை இருந்த உணர்வு.. படம் முடிந்து வெளியே வந்தபோது காணாமல் போய் விட்டது.

சிவா மனசுல ஷக்தி - முதல் பாதி சூப்பர்.. இரண்டாம் பாதி மசமொக்கை..

February 13, 2009

நீ வருவாய் என - காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!




















நீ யார்..
எங்கிருக்கிறாய்..
எதுவும் எனக்குத் தெரியாது..
உனக்காக நான்
காத்திருக்கப் போவதுமில்லை..
இருந்தும்..அன்பே..
எனக்காய் நீ வரும்வரை..
உன்னை நான்
காதலித்துக் கொண்டிருப்பேன்!!!
***********************************************
என்றேனும்...
நீ வந்து
பெற்றுக் கொள்வாய்
என்னும் நம்பிக்கையில்
சேமித்து வைக்கிறேன்
உனக்கான...
பரிசுப்பொருட்களையும்
என் காதலையும்!!
**********************************************
(நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!! நான் திருமணத்திற்குப் பின்னான காதலை நம்புபவன். எங்கோ இருந்து கொண்டு.. என் கண்ணில் தட்டுப்படாமல்.. என்னை அலைக்கழிக்கும் என் காதல் தேவதைக்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்!!!)





February 12, 2009

அப்பாவின் "ஆட்டோகிராப்"!!!


சிறு வயதிலிருந்தே, நானும் அப்பாவும் ஒன்றாக கழித்த பொழுதுகள் ரொம்ப கம்மிதான். உண்மையை சொல்வதானால், நான் ஒரு அம்மா பிள்ளையாகத்தான் வளர்ந்தேன். ஆங்கிலத் திரைப்படங்களுக்கு கூட்டி போவதற்கும், வேண்டியவற்றை வாங்கித் தர மட்டுமே நான் அப்பாவைத் தேடுவேன். நான் வளர்ந்து வெளியூருக்கு வேலைக்கு போன பின்பும் இதே நிலைமைதான் நீடித்தது. இருவரும் ஒன்றாக வீட்டில் இருப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. எப்போதாவது கிடைக்கும் வார விடுமுறைகளிலும், பண்டிகை காலங்களில் மட்டுமே நாங்கள் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருப்போம். இந்த வருடம் பொங்கலுக்கு எனக்கு ஐந்து நாட்கள் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது என்று முடிவு செய்து இருந்தேன்.

அன்றைக்கு மாட்டுப்பொங்கல். மதிய நேரம். சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தோம். பழைய காலத்து படம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி". அப்பா அதனை விரும்பி பார்த்துக் கொண்டு இருந்தார். நான் அருகில் அமர்ந்தவாறே அம்மாவிடம் படத்தை கிண்டல் செய்து கொண்டு இருந்தேன். கதாநாயகன் மாறுவேடத்தில் நாயகியின் அந்தப்புரத்திற்கு வருகிறான். அவனை பார்த்த முதல் பார்வையிலேயே ராணிக்கு காதல் வந்து விடுகிறது. எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ச்சே..கொடுத்த வச்ச மனுஷங்க.. ஒரு லுக்லையே பிள்ளைய மடிச்சுட்டான். நமக்குத்தான் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. அந்த காலத்துல எல்லாம் ரொம்ப ஈசியா மாட்டும் போல..என்னம்மா.." என்று அம்மாவை ஓட்டினேன்.

"கிறுக்கா.. உனக்கு விவஸ்தையே இருக்காது.. " என்னைத் திட்டிக்கொண்டே அம்மா எழுந்து உள்ளே போய் விட்டார்கள். நான் சிரித்துக் கொண்டே திரும்பினால் அப்பா என்னையே பார்த்து கொண்டிருந்தார்.

"நீ நினைக்குற மாதிரி இல்லடா தம்பி. காதல்ங்குறது வாழ்க்கைல எல்லாருக்கும் எளிதாக கிடைக்காது. அது ஒரு வரம். கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். " அப்பா இப்படி சொன்னதும் எனக்கு ஆச்சர்யம். இதில் எதோ சூது இருக்கிறது என்று நினைத்து கொண்டே அப்பாவிடம் கேட்டேன்.

"ஏம்பா... நீங்க யாரையும் லவ் பண்ணி இருக்கீங்களா.?"

அப்பா கண்களை மூடிக் கொண்டார். அவர் காலத்தில் பின்னோக்கி செல்வதை என்னால் உணர முடிந்தது. மெதுவாக சொல்லத் தொடங்கினார்.

"1972ஆம் வருஷம்னு நினைக்குறேன். வீடு ரயில்வே காலனிலதான் இருந்தது. எதிர் வீட்டுல அவுட்ஹவுஸ்ல ஒரு பொண்ணு குடியிருந்தா.. என்னன்னு தெரியல.. எப்படின்னும் புரியல.. எனக்கு அவங்கள ரொம்ப புடிச்சு இருந்தது. இந்தக் காலம் மாதிரி வெளிப்படையா பேசிக்க எல்லாம் முடியாது. போகைல வரைல.. ஒரு பார்வை.. ஒரு சின்ன சிரிப்பு.. அவ்வளவுதான். எனக்கு அவளைப் பிடிச்ச மாதிரி அவளுக்கு என்னை பிடிக்குமான்னு கூடத் தெரியல.. ஆனா கல்யாணம் பண்ணினா அவளைத்தான் பண்ணனும்னு நினச்சேன். அந்த வருஷம் பிள்ளையார் கோவில் திருவிழாவில அவகிட்ட சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன்.

அன்னைக்கு திருவிழாவோட கடைசி நாள். ராத்திரி எட்டு மணி. பாட்டு கச்சேரி நடந்துகிட்டு இருக்கு. அவ அவளோட குடும்பத்தோட முன்னாடி உக்காந்து இருந்தா. நான் பின்னாடி பசங்க கூட நின்னுகிட்டு இருந்தேன். அவ என்ன திரும்பி திரும்பி பார்க்குறான்னு எனக்கு நல்லா தெரியுது. போய் சொல்லுடான்னு பசங்க வேற ஏத்தி விடுறாங்க. எனக்கோ பயம். அவளைப் பார்த்துகிட்டே இருந்தேன். திடீர்னு அவ எந்திரிச்சு கோயிலுக்கு உள்ள போய்ட்டா. ஆனது ஆகட்டும்னு நானும் உள்ளே போனான். அங்க அவ அம்மன் சந்நிதி கிட்ட ஓரமா நின்னுக்கிட்டு இருந்தா.. . தைரியமா கிட்ட போய் என்ன கல்யாணம் பண்ண உங்களுக்கு சம்மதமான்னு கேட்டேன். அவ என்னை நிமிர்ந்து பார்த்தா.. இதை கேக்க ஏன் இவ்வளவு பயம்? நானும் உங்கள விரும்புறேன்னு சொல்லிட்டு போய்ட்டா.. எனக்கு சந்தோசம் தாங்கல.. "

"அப்புறம் என்னப்பா ஆச்சு? ஏன் அவங்கள.." நான் கேட்டேன்.

"எங்க அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அந்த பொண்ணு கீழ்ஜாதி.. அவள கட்டிகிட்டா நான் செத்துருவேன்னு சொல்லிட்டாங்க.. அம்மாவ மீறி என்னால ஒண்ணும் பண்ண முடியல.. வேலைய கொச்சினுக்கு மாத்திக்கிட்டு போயிட்டேன். நாலு வருஷம் கழிச்சு திரும்பி வந்தப்போ அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தது. ஒருநாள் அவள எதேச்சையா கடைத்தெருவுல பார்த்தேன். அந்த கண்கள்ல தெரிஞ்ச சோகமும், ஏமாற்றமும் என்னால மறக்கவே முடியாதுடா தம்பி" சொல்லி முடித்தபோது அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன.

"இதெல்லாம் இப்ப அவசியம் அவன்கிட்ட சொல்லனுமா.. " அம்மா உள்ளே இருந்து குரல் கொடுத்தார்கள். அப்போதுதான் கவனித்தேன். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அம்மா அங்கே வரவே இல்லை. அப்பா மௌனமாக இருந்தார்.

"அவங்க பேர் என்னப்பா?" நான் கேட்டேன்.

"பழனியம்மா.." தேய்ந்த குரலில் அப்பா சொன்னார். அப்பாவுக்கு அடிக்கடி போகும் அளவிற்கு பிடித்த ஊர் பழனிதான் என்பது ஏனோ எனக்கு அப்போது ஞாபகம் வந்தது. ஏதோ கேட்க தோன்றியது. ஆனால் நான் கேட்கவில்லை. வெகு நேரம் வரை யாரும் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு ஏனோ அப்பாவை எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழரைப் போல் உணர்ந்தேன்.

"நதியின் உள்ளே
மூழ்கிக் கிடக்கும்
கூழாங்கல்லைப் போல்
ஒவ்வொருவரின் மனதிலும்
மூழ்கி கிடக்கிறது - அவர்களின்
முதல் காதல்!!"



February 10, 2009

எல்லாப் புகழும் "வில்லு"க்கே..!!!

2002 - வசீகரா
2003 -புதிய கீதை
2004 - உதயா
2005 - சச்சின்
2006 - ஆதி
2007 - அழகிய தமிழ்மகன்
2008 - குருவி
(எவ்வளவோ தாங்கிட்டோம்.. இதை தாங்க மாட்டோமா?)
2009 - வில்லு .....

**********

கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..

கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..

விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"

கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

விஜய்:??!!!

**********

பிளாஷ் நியூஸ்: வில்லு தோல்வியை தொடர்ந்து "நாயகன்" படத்தை ரீமேக் செய்து நடிக்கிறார் விஜய்.. இயக்கம் - பிரபுதேவா.. இசை - மணிஷர்மா..

பொறுங்க.. இது கமலோட நாயகன் இல்லப்பா.. வீரத்தளபதி JK ரித்தீஷோட நாயகன்.. அந்த பயலுக்கு கமல் படம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி..

**********

வில்லு படத்தின் உண்மையான கிளைமாக்ஸ்..

ஒரு கிரிக்கெட் போட்டி.. ஒரு பாலில் பத்து ரன் அடிக்க வேண்டும்.. மட்டை பிடிப்பது விஜய்.. பந்தை ஓங்கி அடிக்கிறார்.. காற்றில் பறக்கும் பந்து இரண்டாக பிய்கிறது.. ஒரு பாதி சிக்ஸர்.. இன்னொரு பாதி போர்.. செத்தாண்டா எதிராளி எல்லாமே.. (என்ன கொடும சார் இது...?!!!)

(நண்பர் ஒருத்தரு கோவப்பட்டதால இத சேத்திருக்கேன்.. இதுல நம்ம கற்பனை கொஞ்சம் தாங்கோ.. எல்லாம் மாணவ நண்பர்கள் சொல்ல கேட்டது மற்றும் smsஇல் வந்ததுதாங்கோ..)

February 9, 2009

நான் கடவுள் - விமர்சனம்!!!



சமூகத்தில் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்ற, மனநிலை பிரண்ட நிலையில் பிச்சை எடுத்து வாழும் மக்களின் கதையையும் ஆன்மிகத்தையும் ஒன்றாக இணைத்து கதை சொல்ல ஆசைப்பட்டு இருக்கிறார் பாலா. படத்தை பார்த்தவுடன் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி.. இந்த படத்தையா மூன்று வருடமாக எடுத்து வந்தார் பாலா? சில கதைகள் ஒரு வரியில் சொல்லும்போது கேட்க நன்றாக இருக்கும். ஆனால் அதை படமாக எடுக்கும்போது விளங்காது. எனக்கு என்னமோ இந்த படத்தின் கிளைமாக்ஸை மட்டும் வைத்து கொண்டு பாலா அதன் பின்னர் கதை எழுதி இருப்பாரோ என்றுதான் தோன்றுகிறது. தானும் குழம்பி நம்மையும் நன்றாக குழப்பி உள்ளார்.


வீட்டுக்கு ஆகாது என்று ஜோஷியர் சொன்னதை நம்பி மகனைக் கொண்டு போய் காசியில் விட்டு விடுகிறார்கள். அவர்தான் ஆர்யா. அங்கே அவர் அகோரியாக வளர்கிறார். தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டு, செத்தவர்களுக்கு மோட்சம் தரும் சாமியாராக இருக்கிறார். அவருடைய அப்பா அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஊருக்கு கூட்டி வருகிறார். இங்கும் அவரால் மக்களோடு சேர்ந்து இருக்க முடியவில்லை. கண் தெரியாத பிச்சைக்காரி பூஜா. உடல் ஊனமுற்ற மக்களை பிடித்து வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கும்பலிடம் மாட்டி கொள்கிறார். முகம் கோரமான ஒருவருக்கு அவரை விற்க முயற்சி செய்கிறார் வில்லன். அவனால் பெரிது கொடுமை செய்யப்படும் பூஜா இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்கள் என்று ஆர்யாவிடம் கேட்க பூஜாவின் கழுத்தை அறுத்து கொன்று போட்டு விடுதலை(?!!) தருகிறார் ருத்ரனாக வரும் ஆர்யா. மீண்டும் காசிக்கு போய் சேர்கிறார். இது தான் "நான் கடவுள்".


ஆர்யா - வெறி கொண்ட மனிதனாய் திரிகிறார். கண்களும் உடல்மொழியும் அவரை ருத்ரனாகவே மாற்றி விட்டன. ஆனால்.. அதைத் தவிர படத்தில் அவருக்கு வேலையே இல்லை. தலைகீழாக ஆசனம் செய்கிறார். முகத்தில் சாம்பலை பூசிக் கொள்கிறார். சமஸ்கிருத ஸ்லோகங்களை அள்ளி விடுகிறார். தமிழில் பேசியது அதிகபட்சம் நாலைந்து வசனங்கள் இருக்கலாம்.அதில் பாதி அப்பனையும் ஆத்தாளையும் போடா போடி என்று திட்டுவதுதான். சண்டைக்காட்சிகளில் மெனக்கட்டு நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் கூட படத்தில் கம்மிதான். ஆகா மொத்தத்தில்.. தல தப்பிச்சுட்டாருடா யப்பா.


எனக்கு பிடித்து இருந்தது மூன்று பேரின் நடிப்புதான். முதலாவதாக பூஜா. கிளைமாக்ஸ் காட்சியில் மேக்கப்பும் நடிப்பும் சூப்பர். ஆனால் அவர் வெவ்வேறு குரல்களில் பழைய பாடல்களை பாடும்போது கடுப்புதான் வருகிறது. அடுத்தது முருகனாக வரும் கிருஷ்ணமூர்த்தி. இயல்பாக நடித்து இருக்கிறார். கடைசியாக கவிஞர் விக்ரமாதித்தன். குழந்தையை பிடுங்கி செல்லும் காட்சியில் கண்களை ஈரமாக்கி விடுகிறார். வில்லனாக வருபவரும், பிச்சைக்காரர்களாக வருபவர்களும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்கள். குறிப்பாக தனது கிண்டலால் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்கிறான் அந்த குள்ளமான சிறுவன்.


படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்து செல்கிறது இளையராஜாவின் இசை. ஓம் சிவோகம், பிச்சைபாத்திரம் என்னும் இரண்டு பாடல்களை மட்டுமே படத்தில் பயன்படுத்தி உள்ளார் பாலா. படமாக்கி இருக்கும் விதம் அருமை. குறிப்பாக பிச்சைபாத்திரம் பாடலை பார்க்கும்போது இதயம் கனத்து போகிறது. வசனம் - ஜெயமோகன். பிரித்து எடுக்கிறார். கேலியும் கிண்டலும் சர்வ சாதாரணமாக வருகிறது. தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் படத்தில் உலா வருகின்றன. சைக்கிள் கேப்பில் தனது இந்துத்வா முகத்தை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் கூத்தில் தெளிவாக எல்லா சினிமாக்காரர்களையும் ஓட்டித்தள்ளுகிறார். ஆர்த்தர் வில்சனின் ஒளிப்பதிவு அருமை. படம் இரண்டு மணி நேரம் ஓடியதே தெரியாத அளவுக்கு சுரேஷ் அர்சின் படத்தொகுப்பு அபாரம்.


இத்தனை இருந்தும் படத்தை பார்க்கும்போது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம்.. பாலாவின் திரைக்கதை. அவருடைய முந்தைய படங்கள் எல்லாமே நம்மை ஏதோ ஒரு வகையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு காட்சி கூட இல்லை. கடைசியில் ஆர்யா பூஜாவை கொன்று போடும்போது கூட எந்த ஒரு அதிர்வும் இல்லை. மாறாக எரிச்சல் தான் வருகிறது. இப்படி எல்லாருக்கும் விடுதலை கொடுக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். அருமையான கதைக்களம், நல்ல நடிகர்கள் என எல்லாமே இருந்தும் பாலா கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.


விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய சோகத்தை சொல்லாமல் சந்தோசம் நிறைந்த மறுபக்கத்தை காட்டியதுதான் இந்த படத்தில் எனக்கு பிடித்து இருந்த ஒரு முக்கியமான அம்சம். நம் தமிழ் சினிமாவில் இன்றுள்ள சிறந்த இயக்குனர்களில் பாலாவும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுகருத்தே கிடையாது. அவருடைய அடுத்த படத்தில் இதை கண்டிப்பாக நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.


நான் கடவுள் - பக்தர்கள் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்!!

February 5, 2009

எஸ். ராமகிருஷ்ணன் - உணர்வுகளின் உன்னதம்!!!


யாருடைய எழுத்தை படிக்கும் போதாவது....உங்களுக்கு மனதின் ஓரமாய் ஒரு சந்தோசம் அல்லது சின்ன சோகம் தோன்றி இருக்கிறதா? உங்கள் பால்ய நாட்கள் உங்கள் கண்முன்னே கடந்து போவதை உணர்ந்திருக்கிறீர்களா? நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை யாரோ ஒளிந்திருந்து பார்த்து விட்டார்களோ என பயந்து இருக்கிறீர்களா? நம்மை துரத்தும் அன்றாட நிகழ்வுகளை விலக்கி எங்கேனும் கண்காணாத இடத்தில் கவலை அற்றவராக சுத்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு உள்ளீர்களா? பிரிந்து சென்ற நண்பர்களை எல்லாம் தேடிப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளீர்களா? இந்த உணர்வுகளை எல்லாமே நான் அனுபவித்து உள்ளேன். அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்.. எஸ். ராமகிருஷ்ணன்.

"என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்." இதுதான் எஸ்ரா.. விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்னும் ஊரில் பிறந்தவர். இலக்கியம், திரைப்படங்கள், நாடகம், பத்திரிக்கை, இணையம் என்று எல்லா தளங்களிலும் இயங்கி வருபவர்.ஒரு தேசாந்தரியும் கூட..

சிறு வயதில் இருந்தே எனக்கு புத்தகங்களை விரும்பி வாசிக்கும் பழக்கம் இருந்தது. என் அம்மா மிகச் சிறந்த படிப்பாளி. அவர்களிடம் இருந்துதான் நான் இந்த பழக்கத்தை கற்றுக் கொண்டேன். படிப்பது என்றால்...குமுதம், விகடன், மர்ம நாவல்கள்.. இவைதான். என்னுடைய அன்றைய பொருளாதார சூழ்நிலையில் இவற்றை கூட பணம் கொடுத்து வாங்க முடியாது. நண்பர்கள் வீடு, ரயில்வே இன்ஸ்டிடுட் என கிடைக்கும் இடத்தில் தான் படிப்பேன். சிறு பத்திரிக்கைகாரர்கள் என்றாலே.. புரியாத தமிழில் எழுதுவார்கள் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்து வந்தது. எல்லாவற்றையும் மாற்றியவர்... நான் இன்று இருக்கும் நானாக என்னை உருவாக்கியவர்.. எஸ்ரா... அவரின் எழுத்துக்கள்.

கல்லூரியின் இறுதி ஆண்டில் இருக்கும்போதுதான் முதல் முறையாக எஸ்ராவின் எழுத்துக்களை வாசித்தேன். விகடனில் அவரது துணைஎழுத்து வந்து கொண்டிருந்த நேரம். நான் வாசித்த அந்த முதல் கட்டுரை இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. "அன்பின் விதைகள்". ஒரு பள்ளிக்கூட வாட்ச்மேன் பிறருக்கு செய்யும் உதவிகளை பற்றியது. படித்து முடித்தபோது என்னையும் அறியாமல் நெகிழ்ந்து போயிருந்தேன். அதன் பின்னர் வெளிவந்த மற்ற கட்டுரைகளையும் தொடர்ச்சியாக படிக்க தொடங்கினேன். இப்படியும் எழுத முடியுமா என என்னுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டே போனது.

படித்து முடித்து கொடைக்கானலில் வேலைக்கு சேர்ந்தபின் புத்தங்கள் உடனான என்னுடைய தொடர்பு மறைந்து போனது. என் வாழ்நாளில் நான் மிகவும் கஷ்டப்பட்ட காலங்கள் அவை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல்லில் ஒரு நல்ல வேலை கிடைத்து சேர்ந்தேன். என் வாழ்வில் ஓரளவு நான் சொல்லிக் கொள்ளும்படி நிமிர்ந்து நின்றபோது இன்னும் இரண்டு வருடங்கள் ஓடிப் போயிருந்தது. 2006 - மதுரையில் நடைபெற்ற முதல் புத்தக சந்தையில் நான் சம்பாதித்த காசில் என்னுடைய முதல் புத்தகத்தை வாங்கினேன். "கதாவிலாசம்". என்ன என்றெல்லாம் தெரியாது. என்னுடைய எழுத்தாளரின் புத்தகம். அவ்வளவுதான். அதன் பின்னர் அவருடைய பல புத்தகங்களை வாங்கி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எஸ்ராவின் எழுத்துக்கள் எனக்கு புதிதாகவே தோன்றுகின்றன.

வாழ்வின் புதிய அர்த்தங்களை எனக்கு அவருடைய எழுத்துக்கள் சொல்லிக் கொடுத்தன. எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்தபோய்து வேண்டாம் என்று மறுத்து விட்டேன். யாருக்காக நான் பணம் சம்பாதிக்கிறேன்? என் குடும்பத்திற்காக.. அவர்களோடு இருக்கும் மகிழ்ச்சியை விற்றுத்தான் பணம் சேர்க்க முடியும் என்றால் அது தேவை இல்லை என்று மறுத்து விட்டேன். என்னை சிந்திக்க தூண்டியது நான் படிக்கும் எழுத்துக்கள்தான் என்பதை தீவிரமாக நம்புகிறேன். வாழ்வை.. அதன் உன்னதத்தை.. உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கை.. எனக்கு கற்று கொடுத்தவர் எஸ்ரா.

அவர் எப்படி இருப்பார் என நான் எனக்குள்ளாக கட்டி வைத்திருந்த உருவம் முதல் முறையாக அவருடைய படத்தை பாத்தபோது தூள் தூளாய் சிதறிப் போனது. நம்முள் ஒருவரை போல, மிகக் சாதாரணமாக இருந்தது அவருடைய புகைப்படம். சாலை ஒன்றில் தன்னந்தனியனாக அவர் நடந்து வரும் "தேசாந்தரியின்" பின்னட்டை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சாதரண விஷயங்கள் கூட எஸ்ராவின் நடையில் எப்படி இலக்கியமாக மாறிப்போகின்றன என நான் வியக்காத நாளில்லை. நான் படித்த அவருடைய புத்தகங்களைப் பற்றி...

1. துணைஎழுத்து - நான் இதுவரை என் வாழ்நாளில் படித்த மிகச்சிறந்த புத்தகம் என்பேன். தன்னுடைய பயணத்தில் சந்தித்த மனிதர்களை பற்றியும் இடங்களையும் பற்றிய கட்டுரைத் தொகுதி. இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக படித்து முடித்தேன். ஒரு வாரம் வரை எனக்குள் ஏதோ ஒன்றை மீட்டு எடுத்த உணர்வு. அன்பின் வலிமையையும் உதாசீனத்தின் வலியையும் அருமையாக பதிவு செய்யும் புத்தகம். சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு செமினாரில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பெயர் - செல்வக்குமார். கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்காகத்தில் இருந்து வந்திருந்தார். என்னை போலவே படிக்கும் பழக்கம் கொண்டவர். பா. ராகவனின் தீவிர விசிறி என்றார். கோவையில் இருந்து கிளம்பும்போது அவருக்கு இந்த புத்தகத்தை வாங்கிக் கொடுத்தேன். பத்து நாட்களுக்கு பிறகு அவரிடம் இருந்து போன் வந்தது. பேச வார்த்தைகள் இல்லாமல் அமைதியாக இருந்து கடைசியாக நன்றி என்றார். அவருடைய வாழ்வின் ஏதோ ஒரு பக்கத்தை திறந்து பார்த்ததை போல் உணர்வதாக சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

2. கதாவிலாசம் - நான் முதல் முதலாக வாசித்த எஸ்ராவின் புத்தகம். தன்னை பாதித்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் தன்னுடைய சொந்த அனுபவங்களையும் இணைத்து எழுதியது. நான் புத்தக கண்காட்சிக்கு செல்லும்போது இந்த புத்தகம் தான் என்னுடைய வழிகாட்டி. பல தமிழ் எழுத்தாளர்களை நான் இப்படித்தான் தெரிந்து கொண்டேன். கதைகளை ஒத்த அனுபவங்கள் நம் கண்ணில் கண்ணீர் வரவழைக்கும். "திண்ணை பேச்சு" என்றொரு கட்டுரை என்னால் மறக்க முடியாதது. வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் நிலையை அழகாக சொல்லி இருப்பார். இதை படிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு என் பாட்டியின் ஞாபகம் வந்து போகும்.

3. தேசாந்தரி - நாம் எல்லோருமே பயணிக்கிறோம். ஆனால் பயணங்களை நாம் ரசித்து அனுபவிப்பது இல்லை. பயணங்கள் எத்தனை ருசியானவை என எஸ்ராவின் இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். மலைகள், பறவைகள், மலர்கள், மனிதர்கள், இடங்கள் என அத்தனையும் அவருடைய எழுத்தில் நம் கண்முன்னே உயிர்பெறும். இதை படித்துவிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள சமணப் படுகைகளை தேடி அலைந்தேன். எஸ்ராவைப்போல் நாமும் சுற்றி திரிந்தால் என்ன என்று இந்த புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும்.

4. எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் - வெளியில் ஒருவன், காட்டின் உருவம், தாவரங்களின் உரையாடல், வெயிலைக் கொண்டு வாருங்கள், பால்யநதி என்ற ஐந்து நூல்களின் தொகுப்பு. இன்னும் நான் முழுதாகப் படிக்கவில்லை. "பழைய தண்டவாளம்" கதையை படித்த பொது காலனியில் எங்கள் வீட்டின் முன்னே அடையாளமாக இருந்து வெட்டுப்பட்டுப்போன வாதமரத்தின் ஞாபகம் வந்தது. நம் எல்லோர் வாழ்விலும் நிகழும் நிகழ்ச்சிகளிலும் ஏதோ ஒரு கதை ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது என நான் உணர்ந்தது அப்போதுதான்.

5. யாமம் - கடைசியாக வாங்கிய புத்தகம். நான்கு கதைகளின் வாயிலாக சென்னைப்பட்டினத்தின் கதையை சொல்கிறது. அத்தர் தயாரிக்கும் சாயிபுவின் குடும்பம் "எப்படியோ" நாசமாகிப் போகிறது. "எப்படியோ" பத்ரகிரி தம்பியின் மனைவியை மோகம் கொண்டு தன் வாழ்வை தொலைக்கிறான். பணத்தை தொலைக்கவும் பெண்களை ஆளவும் லண்டன் செல்லும் சற்குணத்தின் வாழ்வு "எப்படியோ" மாறிப் போகிறது. நாயின் பின்னால் சுற்றும் பண்டாரத்தின் கதையும் "எப்படியோ" முடிந்து போகிறது. இந்த எப்படியோ தான் யாமத்தின் அடிப்படை.

6. உபபாண்டவம் - நம் எல்லோருக்குமே பரிச்சயமான மஹாபாரதக் கதையை அதனுடைய உபபாத்திரங்களின் வழியாக சொல்லும் நாவல். நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத உணர்வுகளை, சோகங்களை இந்த புத்தகம் சுமந்து நிற்கிறது. வாழ்வின் தத்துவங்களையும், விநோதங்களையும், ஆசையினால் ஏற்படும் துன்பங்களையும் தெளிவாக விளக்கும் புத்தகம்.

மிகச்சமீபத்தில்தான் உறுபசி என்னும் நாவலை வாங்கி உள்ளேன். இன்னும் வாசிக்கவில்லை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எஸ்ரா எனக்குள் ஏதாவது ஒரு புதிய கேள்வியை எழுப்பிக் கொண்டேதான் இருக்கிறார். வாசிப்பு என்பது மேம்போக்கானது அல்ல.. அது ஒரு வாழ்வியல் அனுபவம். நம்முடைய எண்ணங்களை, செயல்களை நாம் வாசிக்கும் புத்தகங்கள்தான் தீர்மானிக்கின்றன. எனக்கு தோன்றுவதை எல்லாம் எஸ்ராவுக்கு கடிதமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய வெகுநாள் ஆசை. ஆனால்.. எழுத அமர்ந்தால்... வரும் வெட்கமும் பயமும் எழுதாமல் தடுத்து விடும். எனக்கு இப்போது இருப்பதெல்லாம் ஒரு ஆசைதான். அவரைப் பார்த்து.. ஒரே ஒரு நன்றி சொல்ல வேண்டும். அவருடைய கைகளை எடுத்து என் கைகளுக்குள் வைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!!

( இது என்னுடைய இருபத்து ஐந்தாவது பதிவு. என்னுடைய எழுத்துக்களை வாசித்து ஊக்கமளித்து வரும் தோழர்கள், மாணவ நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....)