February 5, 2009

எஸ். ராமகிருஷ்ணன் - உணர்வுகளின் உன்னதம்!!!


யாருடைய எழுத்தை படிக்கும் போதாவது....உங்களுக்கு மனதின் ஓரமாய் ஒரு சந்தோசம் அல்லது சின்ன சோகம் தோன்றி இருக்கிறதா? உங்கள் பால்ய நாட்கள் உங்கள் கண்முன்னே கடந்து போவதை உணர்ந்திருக்கிறீர்களா? நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை யாரோ ஒளிந்திருந்து பார்த்து விட்டார்களோ என பயந்து இருக்கிறீர்களா? நம்மை துரத்தும் அன்றாட நிகழ்வுகளை விலக்கி எங்கேனும் கண்காணாத இடத்தில் கவலை அற்றவராக சுத்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு உள்ளீர்களா? பிரிந்து சென்ற நண்பர்களை எல்லாம் தேடிப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளீர்களா? இந்த உணர்வுகளை எல்லாமே நான் அனுபவித்து உள்ளேன். அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்.. எஸ். ராமகிருஷ்ணன்.

"என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்." இதுதான் எஸ்ரா.. விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்னும் ஊரில் பிறந்தவர். இலக்கியம், திரைப்படங்கள், நாடகம், பத்திரிக்கை, இணையம் என்று எல்லா தளங்களிலும் இயங்கி வருபவர்.ஒரு தேசாந்தரியும் கூட..

சிறு வயதில் இருந்தே எனக்கு புத்தகங்களை விரும்பி வாசிக்கும் பழக்கம் இருந்தது. என் அம்மா மிகச் சிறந்த படிப்பாளி. அவர்களிடம் இருந்துதான் நான் இந்த பழக்கத்தை கற்றுக் கொண்டேன். படிப்பது என்றால்...குமுதம், விகடன், மர்ம நாவல்கள்.. இவைதான். என்னுடைய அன்றைய பொருளாதார சூழ்நிலையில் இவற்றை கூட பணம் கொடுத்து வாங்க முடியாது. நண்பர்கள் வீடு, ரயில்வே இன்ஸ்டிடுட் என கிடைக்கும் இடத்தில் தான் படிப்பேன். சிறு பத்திரிக்கைகாரர்கள் என்றாலே.. புரியாத தமிழில் எழுதுவார்கள் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்து வந்தது. எல்லாவற்றையும் மாற்றியவர்... நான் இன்று இருக்கும் நானாக என்னை உருவாக்கியவர்.. எஸ்ரா... அவரின் எழுத்துக்கள்.

கல்லூரியின் இறுதி ஆண்டில் இருக்கும்போதுதான் முதல் முறையாக எஸ்ராவின் எழுத்துக்களை வாசித்தேன். விகடனில் அவரது துணைஎழுத்து வந்து கொண்டிருந்த நேரம். நான் வாசித்த அந்த முதல் கட்டுரை இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. "அன்பின் விதைகள்". ஒரு பள்ளிக்கூட வாட்ச்மேன் பிறருக்கு செய்யும் உதவிகளை பற்றியது. படித்து முடித்தபோது என்னையும் அறியாமல் நெகிழ்ந்து போயிருந்தேன். அதன் பின்னர் வெளிவந்த மற்ற கட்டுரைகளையும் தொடர்ச்சியாக படிக்க தொடங்கினேன். இப்படியும் எழுத முடியுமா என என்னுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டே போனது.

படித்து முடித்து கொடைக்கானலில் வேலைக்கு சேர்ந்தபின் புத்தங்கள் உடனான என்னுடைய தொடர்பு மறைந்து போனது. என் வாழ்நாளில் நான் மிகவும் கஷ்டப்பட்ட காலங்கள் அவை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல்லில் ஒரு நல்ல வேலை கிடைத்து சேர்ந்தேன். என் வாழ்வில் ஓரளவு நான் சொல்லிக் கொள்ளும்படி நிமிர்ந்து நின்றபோது இன்னும் இரண்டு வருடங்கள் ஓடிப் போயிருந்தது. 2006 - மதுரையில் நடைபெற்ற முதல் புத்தக சந்தையில் நான் சம்பாதித்த காசில் என்னுடைய முதல் புத்தகத்தை வாங்கினேன். "கதாவிலாசம்". என்ன என்றெல்லாம் தெரியாது. என்னுடைய எழுத்தாளரின் புத்தகம். அவ்வளவுதான். அதன் பின்னர் அவருடைய பல புத்தகங்களை வாங்கி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எஸ்ராவின் எழுத்துக்கள் எனக்கு புதிதாகவே தோன்றுகின்றன.

வாழ்வின் புதிய அர்த்தங்களை எனக்கு அவருடைய எழுத்துக்கள் சொல்லிக் கொடுத்தன. எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்தபோய்து வேண்டாம் என்று மறுத்து விட்டேன். யாருக்காக நான் பணம் சம்பாதிக்கிறேன்? என் குடும்பத்திற்காக.. அவர்களோடு இருக்கும் மகிழ்ச்சியை விற்றுத்தான் பணம் சேர்க்க முடியும் என்றால் அது தேவை இல்லை என்று மறுத்து விட்டேன். என்னை சிந்திக்க தூண்டியது நான் படிக்கும் எழுத்துக்கள்தான் என்பதை தீவிரமாக நம்புகிறேன். வாழ்வை.. அதன் உன்னதத்தை.. உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கை.. எனக்கு கற்று கொடுத்தவர் எஸ்ரா.

அவர் எப்படி இருப்பார் என நான் எனக்குள்ளாக கட்டி வைத்திருந்த உருவம் முதல் முறையாக அவருடைய படத்தை பாத்தபோது தூள் தூளாய் சிதறிப் போனது. நம்முள் ஒருவரை போல, மிகக் சாதாரணமாக இருந்தது அவருடைய புகைப்படம். சாலை ஒன்றில் தன்னந்தனியனாக அவர் நடந்து வரும் "தேசாந்தரியின்" பின்னட்டை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சாதரண விஷயங்கள் கூட எஸ்ராவின் நடையில் எப்படி இலக்கியமாக மாறிப்போகின்றன என நான் வியக்காத நாளில்லை. நான் படித்த அவருடைய புத்தகங்களைப் பற்றி...

1. துணைஎழுத்து - நான் இதுவரை என் வாழ்நாளில் படித்த மிகச்சிறந்த புத்தகம் என்பேன். தன்னுடைய பயணத்தில் சந்தித்த மனிதர்களை பற்றியும் இடங்களையும் பற்றிய கட்டுரைத் தொகுதி. இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக படித்து முடித்தேன். ஒரு வாரம் வரை எனக்குள் ஏதோ ஒன்றை மீட்டு எடுத்த உணர்வு. அன்பின் வலிமையையும் உதாசீனத்தின் வலியையும் அருமையாக பதிவு செய்யும் புத்தகம். சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு செமினாரில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பெயர் - செல்வக்குமார். கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்காகத்தில் இருந்து வந்திருந்தார். என்னை போலவே படிக்கும் பழக்கம் கொண்டவர். பா. ராகவனின் தீவிர விசிறி என்றார். கோவையில் இருந்து கிளம்பும்போது அவருக்கு இந்த புத்தகத்தை வாங்கிக் கொடுத்தேன். பத்து நாட்களுக்கு பிறகு அவரிடம் இருந்து போன் வந்தது. பேச வார்த்தைகள் இல்லாமல் அமைதியாக இருந்து கடைசியாக நன்றி என்றார். அவருடைய வாழ்வின் ஏதோ ஒரு பக்கத்தை திறந்து பார்த்ததை போல் உணர்வதாக சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

2. கதாவிலாசம் - நான் முதல் முதலாக வாசித்த எஸ்ராவின் புத்தகம். தன்னை பாதித்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் தன்னுடைய சொந்த அனுபவங்களையும் இணைத்து எழுதியது. நான் புத்தக கண்காட்சிக்கு செல்லும்போது இந்த புத்தகம் தான் என்னுடைய வழிகாட்டி. பல தமிழ் எழுத்தாளர்களை நான் இப்படித்தான் தெரிந்து கொண்டேன். கதைகளை ஒத்த அனுபவங்கள் நம் கண்ணில் கண்ணீர் வரவழைக்கும். "திண்ணை பேச்சு" என்றொரு கட்டுரை என்னால் மறக்க முடியாதது. வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் நிலையை அழகாக சொல்லி இருப்பார். இதை படிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு என் பாட்டியின் ஞாபகம் வந்து போகும்.

3. தேசாந்தரி - நாம் எல்லோருமே பயணிக்கிறோம். ஆனால் பயணங்களை நாம் ரசித்து அனுபவிப்பது இல்லை. பயணங்கள் எத்தனை ருசியானவை என எஸ்ராவின் இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். மலைகள், பறவைகள், மலர்கள், மனிதர்கள், இடங்கள் என அத்தனையும் அவருடைய எழுத்தில் நம் கண்முன்னே உயிர்பெறும். இதை படித்துவிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள சமணப் படுகைகளை தேடி அலைந்தேன். எஸ்ராவைப்போல் நாமும் சுற்றி திரிந்தால் என்ன என்று இந்த புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும்.

4. எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் - வெளியில் ஒருவன், காட்டின் உருவம், தாவரங்களின் உரையாடல், வெயிலைக் கொண்டு வாருங்கள், பால்யநதி என்ற ஐந்து நூல்களின் தொகுப்பு. இன்னும் நான் முழுதாகப் படிக்கவில்லை. "பழைய தண்டவாளம்" கதையை படித்த பொது காலனியில் எங்கள் வீட்டின் முன்னே அடையாளமாக இருந்து வெட்டுப்பட்டுப்போன வாதமரத்தின் ஞாபகம் வந்தது. நம் எல்லோர் வாழ்விலும் நிகழும் நிகழ்ச்சிகளிலும் ஏதோ ஒரு கதை ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது என நான் உணர்ந்தது அப்போதுதான்.

5. யாமம் - கடைசியாக வாங்கிய புத்தகம். நான்கு கதைகளின் வாயிலாக சென்னைப்பட்டினத்தின் கதையை சொல்கிறது. அத்தர் தயாரிக்கும் சாயிபுவின் குடும்பம் "எப்படியோ" நாசமாகிப் போகிறது. "எப்படியோ" பத்ரகிரி தம்பியின் மனைவியை மோகம் கொண்டு தன் வாழ்வை தொலைக்கிறான். பணத்தை தொலைக்கவும் பெண்களை ஆளவும் லண்டன் செல்லும் சற்குணத்தின் வாழ்வு "எப்படியோ" மாறிப் போகிறது. நாயின் பின்னால் சுற்றும் பண்டாரத்தின் கதையும் "எப்படியோ" முடிந்து போகிறது. இந்த எப்படியோ தான் யாமத்தின் அடிப்படை.

6. உபபாண்டவம் - நம் எல்லோருக்குமே பரிச்சயமான மஹாபாரதக் கதையை அதனுடைய உபபாத்திரங்களின் வழியாக சொல்லும் நாவல். நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத உணர்வுகளை, சோகங்களை இந்த புத்தகம் சுமந்து நிற்கிறது. வாழ்வின் தத்துவங்களையும், விநோதங்களையும், ஆசையினால் ஏற்படும் துன்பங்களையும் தெளிவாக விளக்கும் புத்தகம்.

மிகச்சமீபத்தில்தான் உறுபசி என்னும் நாவலை வாங்கி உள்ளேன். இன்னும் வாசிக்கவில்லை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எஸ்ரா எனக்குள் ஏதாவது ஒரு புதிய கேள்வியை எழுப்பிக் கொண்டேதான் இருக்கிறார். வாசிப்பு என்பது மேம்போக்கானது அல்ல.. அது ஒரு வாழ்வியல் அனுபவம். நம்முடைய எண்ணங்களை, செயல்களை நாம் வாசிக்கும் புத்தகங்கள்தான் தீர்மானிக்கின்றன. எனக்கு தோன்றுவதை எல்லாம் எஸ்ராவுக்கு கடிதமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய வெகுநாள் ஆசை. ஆனால்.. எழுத அமர்ந்தால்... வரும் வெட்கமும் பயமும் எழுதாமல் தடுத்து விடும். எனக்கு இப்போது இருப்பதெல்லாம் ஒரு ஆசைதான். அவரைப் பார்த்து.. ஒரே ஒரு நன்றி சொல்ல வேண்டும். அவருடைய கைகளை எடுத்து என் கைகளுக்குள் வைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!!

( இது என்னுடைய இருபத்து ஐந்தாவது பதிவு. என்னுடைய எழுத்துக்களை வாசித்து ஊக்கமளித்து வரும் தோழர்கள், மாணவ நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....)

34 comments:

Anonymous said...

Also read his latest collection of stories 'Pathinetram nootrandin mazhai' (written in the last 2 years). These shows a clear shift in S.Ra's writing approach which is now even more potent. A couple of stories in this collection represent a significant turning point in today's tamil short story history (especially the title story 'Pathinettam nootrandin mazhai')

கார்த்திகைப் பாண்டியன் said...

"பதினெட்டாம் நூற்றாண்டின் மழை" பற்றி கேள்விப்பட்டேன் நண்பா.. விரைவில் வாங்கி விடுவேன்.. தங்கள் பெயரை சொல்லாமல் விட்டு விட்டீர்களே.... எனினும் வருகைக்கு நன்றி.

சொல்லரசன் said...

//வாசிப்பு என்பது மேம்போக்கானது அல்ல.. அது ஒரு வாழ்வியல் அனுபவம்.//

மிகவும் சரியே
வாழ்த்துகள் தங்களின் இருபத்து ஐந்தாவது பதிப்பிற்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சொல்லரசன் அவர்களே..

சொல்லரசன் said...

//எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்தபோய்து வேண்டாம் என்று மறுத்து விட்டேன். யாருக்காக நான் பணம் சம்பாதிக்கிறேன்? என் குடும்பத்திற்காக.. அவர்களோடு இருக்கும் மகிழ்ச்சியை விற்றுத்தான் பணம் சேர்க்க முடியும் என்றால் அது தேவை இல்லை என்று மறுத்து விட்டேன். என்னை சிந்திக்க தூண்டியது நான் படிக்கும் எழுத்துக்கள்தான் என்பதை தீவிரமாக நம்புகிறேன். வாழ்வை.. அதன் உன்னதத்தை.. உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கை.. எனக்கு கற்று கொடுத்தவர் எஸ்ரா.//

இதை உங்கள் மாணவர்களுக்கும் சொல்லுங்கள்.இந்தியா விரைவில் வல்லரசாகும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
இதை உங்கள் மாணவர்களுக்கும் சொல்லுங்கள்.இந்தியா விரைவில் வல்லரசாகும்//

கண்டிப்பாக.. நான் என்னுடைய மாணவர்களுக்கு பாடங்களை மட்டும் சொல்வதில்லை.. அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கவே முயல்கிறேன்...

குகன் said...

// இப்படியும் எழுத முடியுமா என என்னுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டே போனது.//

எஸ்.ராவின் ஸ்பேஷால்ட்டியே அது தான்.

நெடுங்குருதி (நாவல்) , அரவான் (நாடகம்) படித்து பாருங்கள். கண்ணில் நீர் தழும்பும்.

குறிப்பாக 'அரவான்' நாடகம் பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு கதாபாத்திரம் வைத்து நாடகம் எழுத முடியும் என்று காட்டியவர் எஸ்.ரா மட்டும் தான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//குகன் said..
நெடுங்குருதி (நாவல்) , அரவான் (நாடகம்) படித்து பாருங்கள். கண்ணில் நீர் தழும்பும்.//
நான் அடுத்து வாங்கும் பட்டியலில் இவை கண்டிப்பாக இருக்கும் குகன்.. வருகைக்கு நன்றி..

ஆதவா said...

ஆவி வாங்குவதற்கு முழுமுதல் காரணம் எஸ்ராவின் எழுத்துக்கள்...

எஸ்ராவின் எழுத்துக்களில் இருக்கும் அடர்த்தி, ஆழம் அதன் நடை ஆகியவை சிலாகிப்பவை.. ஆனால் உங்களைப் போன்று பலதும் படிக்க எனக்கு அவகாசம் கிடைத்திரவில்லை..

அவரைப் பற்றிய உங்கள் பதிவு, அவரது எழுத்துக்களுக்கு பெருமை சேர்ப்பன...

ஆதவா said...

கதாவிலாசம்,
தேசாந்திரி
துணையெழுத்து

போன்று இன்னும் சில சிறுகதைகள்.... மட்டுமே நான் படித்தவை.... ஆனால்....

இன்னும் பல படிக்கவில்லையே என்று என்னை நான் அடிக்கடி கேட்டுக்கொள்ளவைக்கும் அவரது எழுத்துக்கள்....

உங்களுடைய 25 ஆவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

நல்லதொரு பதிவு !

Subha said...

அருமையான நடை..வாழ்த்துக்கள் !

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
அவரைப் பற்றிய உங்கள் பதிவு, அவரது எழுத்துக்களுக்கு பெருமை சேர்ப்பன...//
வாழ்த்துக்கு நன்றி ஆதவா.. அவரை பற்றி எழுதும் வாய்ப்பை நான் தான் பெருமையாக கருதுகிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//எம். ரிஷான் ஷெரிப் said..
நல்லதொரு பதிவு //

வருகைக்கு நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுபாஷினி said..
அருமையான நடை..வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபாஷினி!!

butterfly Surya said...

நல்ல பதிவு. அருமையான அலசல்.


பார்பதற்கு மட்டுமல்ல. அனைவருடனும் இயல்பாக பேசுவதும் தனிச்சிறப்பு.

நூல் வெளியிட்டு விழாவில் சில நூல்களை வாங்கி அவரது கையொப்பத்துடன் சேமித்துள்ளேன்.

உலக சினிமா பற்றிய நூலும் உள்ளது.

அவரை பற்றி அவரது நூல்கள் வெளியீட்டு விழாவில் ஒவ்வொருவரும் கூறிய தகவல்கள் ஆச்சரியமானவை.

ஒரு பதிவு போடலாம் என நினைப்பதற்குள் அன்பு தோழர் உண்மைதமிழன் பதிவிட்ட்டு விட்டார்.

பார்க்கவும்.

சினிமா பற்றிய எனது வலைப்பூ பார்கவும்.

வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

எஸ்ரா பற்றிய தங்களின் பார்வையில் எழுதியதை படித்தேன். நல்ல பதிவு. தாங்கள் மேலும் பல பதிவுகள் வெற்றிகரமாக வெளியிட வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகை தந்த வண்ணத்துபூச்சியாருக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அன்புமணி said..
எஸ்ரா பற்றிய தங்களின் பார்வையில் எழுதியதை படித்தேன். நல்ல பதிவு. தாங்கள் மேலும் பல பதிவுகள் வெற்றிகரமாக வெளியிட வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

பாபு said...

//எஸ்ராவைப்போல் நாமும் சுற்றி திரிந்தால் என்ன என்று இந்த புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும்//
நானும் இதே போல் உணர்ந்திருக்கிறேன்.மிக நன்றாக உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.சென்னையில் இருந்திருந்தால் கடந்த புத்தக கண்காட்சியில் சந்தித்திருக்கலாம்.நான் ஒரு புத்தகம் வாங்கி அதில் அவர் கையெழுத்தும் பெற்றேன்.பொதுவாக யாரிடமும் இதுவரை கையெழுத்து வாங்கியதில்லை

ராம்.CM said...

//பிரிந்து சென்ற நண்பர்களை எல்லாம் தேடிப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளீர்களா?// ஆம். தேடிக்கொண்டே இருக்கிறேன்.
நல்ல பதிவு.

25வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!.

நித்யன் said...

திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து ஒரு புதிய கோணம் காட்டிய கட்டுரைத்தொகுப்பு. கதாவிலாசமும் அப்படியே. இவ்விரண்டு புத்தகங்களும் சொல்லும் சேதிகள் பேரின்பம் தருபவை.

ஆர்வத்துடன் அமர்ந்துவிட்டீர்களென்றால் அவருடைய புத்தகம் ஒன்று போதும்.

நண்பருக்கு வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

அன்பு நித்யகுமாரன்

Anonymous said...

எப்படி சொல்வது என்று புரியவில்லை.... நானும் எஸ்ரா வின் தீவிரமான வாசகன்.... சுஜாதாவிற்கு அடித்து என்னை மிகவும் கவர்ந்தவர்... இவர்...

Anonymous said...

இப்போது வாங்க காத்திருப்பது உபாண்டவம்.... நேற்றுதான் கேள்விக்குரி புத்தகம் வாங்கி வந்தேன்... இன்னும் படிக்க தொடங்கவில்லை... தேசந்திரியும்... கதவிலாசமும் படித்து முடித்து விட்டேன்.... யதார்தமான ந்டையில் செல்லும் எழுத்தில் நாங்களும் அவர்கூட பயனிக்கும் அனுபவம் சுவார்சயமாகவும்... மனதின் ஒரத்தில் ஒரு பாரத்தினையும் ஏற்படுத்தும் எழுத்து அவருடையது...

Anonymous said...

கதவிலாசத்தில் பிரமிள் பற்றிய அவரின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.... எ
இந்த ப்த்தகம் தான் நான் த்திரும்ப திரும்ப படிக்கும் புத்தகம்...

Anonymous said...

\\நெடுங்குருதி (நாவல்) , அரவான் (நாடகம்) படித்து பாருங்கள். கண்ணில் நீர் தழும்பும்.\\ இன்னும் படிக்க வில்லை இங்கே... உள்ள புத்தக கடையிலை கண்னில் பட்டதாகவும் தெரியவில்லை பார்போம்..
விரைவில் செஞ்சரியடிக்க... வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//பாபு said..
சென்னையில் இருந்திருந்தால் கடந்த புத்தக கண்காட்சியில் சந்தித்திருக்கலாம்.//

வருகைக்கு நன்றி பாபு.. அடுத்து எங்கள் மதுரையில் அவரை எப்படியாவது சந்தித்து விட முடியும் என்று நம்புகிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
ஆம். தேடிக்கொண்டே இருக்கிறேன்.
நல்ல பதிவு.25வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராம்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//நித்யகுமாரன் said..
திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து ஒரு புதிய கோணம் காட்டிய கட்டுரைத்தொகுப்பு. கதாவிலாசமும் அப்படியே. இவ்விரண்டு புத்தகங்களும் சொல்லும் சேதிகள் பேரின்பம் தருபவை. ஆர்வத்துடன் ர்ந்துவிட்டீர்களென்றால் அவருடைய புத்தகம் ஒன்று போதும்.
நண்பருக்கு வாழ்த்துக்கள். மிக்க நன்றி.//
என்னைப் போலவே நீங்களும் எஸ்ராவை ஆராதிப்பது புரிகிறது.. வருகைக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
கதவிலாசத்தில் பிரமிள் பற்றிய அவரின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.... //

ரொம்ப சிலாகித்து எழுதி உள்ளீர்கள்.. துணைஎழுத்தில் கூட பிரமிள் பற்றியும் அவரது மறைவு பற்றியும் எஸ்ரா எழுதியுள்ளார்.. வாசித்து பாருங்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
இப்போது வாங்க காத்திருப்பது உபாண்டவம்.... நேற்றுதான் கேள்விக்குரி புத்தகம் வாங்கி வந்தேன்... இன்னும் படிக்க தொடங்கவில்லை... தேசந்திரியும்... கதவிலாசமும் படித்து முடித்து விட்டேன்.... யதார்தமான ந்டையில் செல்லும் எழுத்தில் நாங்களும் அவர்கூட பயனிக்கும் அனுபவம் சுவார்சயமாகவும்... மனதின் ஒரத்தில் ஒரு பாரத்தினையும் ஏற்படுத்தும் எழுத்து அவருடையது...\\நெடுங்குருதி (நாவல்) , அரவான் (நாடகம்) படித்து பாருங்கள். கண்ணில் நீர் தழும்பும்.\\ இன்னும் படிக்க வில்லை இங்கே... உள்ள புத்தக கடையிலை கண்னில் பட்டதாகவும் தெரியவில்லை பார்போம்..//
அற்புதமான புத்தகங்கள்.. படியுங்கள்.. உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்கள்.. இங்கிருந்து வாங்கி அனுப்ப முடியும் என்றால் கண்டிப்பாக செய்வேன்.. வாழ்த்துக்கு நன்றி கவின்..

பட்டாம்பூச்சி said...

நான் படித்த அவருடைய முதல் எழுத்து வடிவம் விகடனில் தொடராக வெளிவந்த துணை எழுத்துதான்.ஒவ்வொரு வாரமும் புத்தகம் கைக்கு வந்தவுடன் முதலில் தேடுவது அந்த பக்கத்தைதான்.நம் அருகிலேயே மிகவும் அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு அழுத்தமாய் சொன்ன எழுத்துக்கள் அவை.புத்தகத்தை வாங்கவேண்டும் என்று நினைத்தாலும் இது வரை வாங்கவில்லை.இனி நிச்சயம் எனது புத்தக தொகுப்பில் இருக்கும்.என் நினைவுகளை புடம் போட்டதற்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு தோன்றியதும் அதே உணர்வுதான்.. வருகைக்கு நன்றி..

rajasundararajan said...

இருபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துகிறேன்.

ஓர் எழுத்தாளரை, அவரது எழுத்து நம்மை ஈர்ப்புக்குள்ளாக்கியதை வைத்துப் பாராட்டுகிறோம்; நம் வாழ்வின் பழைய/ சற்றிப்போதைய நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வந்ததை வைத்துப் பாராட்டுகிறோம். உண்மையில் இது எழுத்தாளருக்கு உவப்பானதாகுமா?

//யாருடைய எழுத்தை படிக்கும் போதாவது....உங்களுக்கு மனதின் ஓரமாய் ஒரு சந்தோசம் அல்லது சின்ன சோகம் தோன்றி இருக்கிறதா? உங்கள் பால்ய நாட்கள் உங்கள் கண்முன்னே கடந்து போவதை உணர்ந்திருக்கிறீர்களா? நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை யாரோ ஒளிந்திருந்து பார்த்து விட்டார்களோ என பயந்து இருக்கிறீர்களா? நம்மை துரத்தும் அன்றாட நிகழ்வுகளை விலக்கி எங்கேனும் கண்காணாத இடத்தில் கவலை அற்றவராக சுத்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு உள்ளீர்களா? பிரிந்து சென்ற நண்பர்களை எல்லாம் தேடிப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளீர்களா? இந்த உணர்வுகளை எல்லாமே நான் அனுபவித்து உள்ளேன். அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்.. எஸ். ராமகிருஷ்ணன்.//

இவை எல்லாம் கலைவடிவத்தின் liveliness என்று சொல்லப்படும் ஒரு level இல்லையோ?

தனக்கு வயது 60 என்றாலும் தான் 20 வயது இளைஞர்களுக்காக எழுதுகிறேன் என்கிறார் ஒருவர். நல்லது, இளைஞர்களை ஆளாக்கினாலே உலகு நலம்பெறும்தானே? ஆனால், அம்மா,அப்பா, அத்தை, மாமா எல்லாரும் எங்கே போவார்கள் பாவம்? அவர்கள் நாட்டத்துக்கு இருக்கவே இருக்கின்றன "ராமாயணம்", "மகாபாரதம்". சிறுவர்களுக்குக் கூட அவை, "வீர ஹனுமான்", "ச்சோட்டா பீம்" என்றாகிக் கிடைக்கின்றன. அதாவது எல்லா வயதினருக்குமாக எழுதியிருக்கிறார்கள் அவற்றை எழுதியவர்கள்.

"உப பாண்டவம்" வாசித்திருக்கிறீர்கள். அது இந்தக் காலத்துக்கு உரிய விழுமியங்களோடும் எழுதப்பட்டதொரு நூலாக அர்த்தப்படவில்லையா?

இப்போதெல்லாம் நாம் ராமகிருஷ்ணனின் மொழிநடையைக் குறைசொல்லியும் காட்டுகிறோம். ஆனால் அது readability சம்பந்தப்பட்டது. வாசகச்சரளம் என்பது ஒருவர் இன்முகம் காட்டுவது போன்றது. அவ்வளவே.

சுஜாதா எந்த மட்டத்தில் நிற்கிறார் என்பதும் தெளிவாகிறது அல்லவா?

எஸ்.ரா. கூட, பிரமிளைப் பற்றி எழுதியதில் அவர்கள் காலோய நடந்ததைப் பற்றித்தான் எழுதி இருப்பார். அது concrete பிரமிள். "யாமம்" நாவலின் பண்டாரம் கூடத்தான் நடையாய் நடக்கிறார் (இந்த இடத்தில், ஒரு நாயோடு என்று சொன்னால் தப்பர்த்தம் வரும் என்பதால் தவிர்க்கிறேன்.) ஆனால் பண்டாரம் நடந்து கண்ட விழுமியம் வேறு. அப்படி, எழுத்தாளராக அறியக் கிடைப்பவரோ abstract பிரமிள்.

எஸ்.ரா.வைப் பற்றி அப்படி ஒன்று எழுத முடியுமா பாருங்களேன்.